Home

Monday 27 July 2015

நினைவில் வாழும் கதைகள் - எஸ்.செந்தில்குமாரின் ‘அலெக்ஸாண்டர் என்கிற கிளி’

புத்தாயிரத்தாண்டிலிருந்து எழுதத் தொடங்கிய சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர் எஸ்.செந்தில்குமார். வலிமையான சித்தரிப்பு மொழியும் மிகக்குறைந்த நுட்பமான வரிகள் வழியாகவே பாத்திரங்களை அறிமுகப்படுத்தி நடமாடவைத்துவிடும் ஆற்றலும் செந்தில்குமாருக்கு கைவந்த கலைகள். தற்செயலாக எங்கோ ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி தன்னிச்சையாக பயணப்படுவதுபோல அவருடைய சிறுகதைகள் தோற்றமளித்தாலும், கதையைப் படித்து முடித்ததும் ஓர் அம்பின் பயணத்தைப்போல மிகச்சீரானதாகவும் துல்லியமானதாகவும் அமைந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். கடைத்தெரு, ரயில்வே ஸ்டேஷன், பூங்கா, அலுவலகம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை, மண்டி என நடமாட்டம் மிகுந்த இடங்களில் கண்ணில் தென்படும் எந்த ஆண் பாத்திரத்தையும் பெண் பாத்திரத்தையும் மிகுந்த உயிர்த்துடிப்போடு தன் கதைக்குள் கச்சிதமாக கொண்டு வந்துவிடும் பேராற்றல் அவருக்கு இருக்கிறது. இது செந்தில்குமாருடைய மிகப்பெரிய பலம்.

அலெக்ஸாண்டர் என்கிற கிளிஅவருடைய ஆறாவது சிறுகதைத்தொகுதி. இதில் பதினேழு சிறுகதைகள் உள்ளன. வடிவமைப்பிலும் சொல்லும் விதத்திலும் ஒவ்வொன்றும் தனித்தன்மையோடு உள்ளது. தொகுப்பின் மிகச்சிறந்த சிறுகதைபோஜனகலா’. உணவை சமைப்பதையும் உண்பதையும் ஒரு கலையாக நினைத்து நடக்கவேண்டும் என நினைத்த கடந்த நூற்றாண்டு மனிதரொருவரைப்பற்றிய வாழ்க்கை இது. சிறுகதை நிகழும் காலமும் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய காலம். சமையல் கலையைப்பற்றி பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்கிற ஆவலில் அப்பா தொடங்கிய சமையல் தகவல் பத்திரிகையை தொடர்ந்து நடத்த குடும்பத்தைவிட்டு சென்னைக்குச் செல்கிறார் ஒருவர். பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தும்பொருட்டு கைப்பணத்தையெல்லாம் செலவழிக்கிறார். கிராமத்தில் தனித்திருக்கும் மனைவியையும் பிள்ளைகளையும் பற்றிய யோசனையே இல்லாமல் சென்னையில் பத்திரிகையே கதி என்று கிடக்கிறார். இது கதையின் ஒரு பகுதி. இன்னொரு பகுதி, அந்தப் பத்திரிகையாசிரியருக்கு அவருடைய அன்பு மனைவி எழுதிய மூன்று கடிதங்களால் நிறைந்திருக்கிறது. ஆதரவின்மையையும் துயரத்தையும் பிரிவின் வேதனையையும் தெரிவிக்கும் மிகக்குறைந்த சொற்களால் ஆன கடிதங்கள். ஒருபுறம் கணவனின் இலட்சிய வாழ்வு. இன்னொருபுறம் மனைவியின் எதார்த்த வாழ்வு. உணவின் ருசியைத் தெரிந்து பரப்பத் தெரிந்தவனுக்கு, வாழ்க்கையின் ருசி என்றால் என்ன என தெரியாமல் போனது துரதிருஷ்ட வசமானது. முதுகுவலிக்கு வண்டி மசியை வழித்தெடுத்து தடவிக்கொள்ளூம் சூழலில் உணவையும் கனிவான ஒரு சொல்லையும் தவிர வேறெதையும் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு  வறுமையில் மனைவி மூழ்கியிருப்பது இன்னும் பெரிய துரதிருஷ்டம். இலட்சியத்தையும் எதார்த்தத்தையும் தராசின் இரு தட்டுகளிலும் வைத்துவிட்டு முடிவடைகிறது சிறுகதை. ஒரு வாசகனாக நம்முடைய தேர்வு என்ன என்கிற கேள்வியுடன் நமக்குள் இன்னொரு கதையை நினைத்துப் பார்க்கத் தூண்டுகிற முடிவு.
சோறு தண்ணீர்இன்னொரு நல்ல சிறுகதை. பட்டறையில் கூலிக்கு வேலை செய்யும் கனகவேல் ஆசாரியின் தீராத பசியைப்பற்றிய கதை. மதியச் சாப்பாட்டுக்காக முதலாளி தன் வீட்டுக்கு எழுந்து சென்றுவிடும் வேளையில் தன் வீட்டிலிருந்து வரும் சாப்பாட்டுக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறார் கனகவேல் ஆசாரி. தொலைவில் இருக்கும் வீட்டுக்கு நடந்து சென்று சாப்பிட்டு விட்டு திரும்பினால், திரும்பி வந்து உட்கார்ந்த கையோடு மறுபடியும் பசியெடுத்துவிடும் துன்பத்தைத் தவிர்க்க கடைக்கு சாப்பாட்டைக் கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்லிவைத்திருக்கிறார் அவர். விடுப்பு நாட்களில் மகன் எடுத்து வருவான். மற்ற நாட்களில் வேறு யாராவது எடுத்து வருவார்கள். ஆனால் ஒருநாளும் அந்தச் சாப்பாட்டை பசிக்கும் நேரத்தில் அவர் சாப்பிட முடிந்ததில்லை. சில சமயங்களில் மதிய உணவை முடித்துக்கொண்டு முதலாளி கடைக்கு வந்த பிறகு சாப்பாடு வருவதால் சாப்பிடுவது தள்ளிப் போகிறது. சில சமயங்களில் சரியான நேரத்துக்கு சாப்பாடு வந்தாலும்கூட உடனடியாக சாப்பிடமுடியாதபடி வேலைச்சூழல் அமைந்துவிடுகிறது.  தீவிபத்தில் இறந்துபோன ஒருத்தியின் உடல்தோலோடு ஒட்டிவிட்ட கம்மலையும் மூக்குத்தியையும் கொறடும் கத்தரிக்கோலும் கொண்டு எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கையோடு கடைவாசலில் வந்து நிற்கிறான் ஒருவன். அவனோடு செல்லவேண்டிய அவசரத்தால் அன்றும் சாப்பாட்டு வேளை பிந்திப் போய்விடுகிறது.  வேலைச்சூழலால் பசிக்குச் சாப்பிடமுடியாத ஒரு நாளின் சித்திரத்தை இந்தக் கதை வழங்குகிறது.
ஊஞ்சல் விதிமனம் கனக்கவைக்கும் சிறுகதை. ஓர் இளம்பெண்ணுக்கும் இளைஞனுக்கும் இடையிலான உறவைச் சித்தரிக்கும் கதை. பாழும் கிணறும் அதனருகில் தொங்கும் விழுதுகளைக்கொண்ட ஆலமரமும் உள்ள ஓர் ஒதுக்குப்புறத்தில் வழக்கம்போல அவ்விருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். அதுதான் கதைக்களம். நல்ல வெட்டவெளியில் தொங்கும் விழுதுகள்மட்டுமே பற்றிக்கொண்டு ஊஞ்சலாட பொருத்தமானவை. கிணற்றுக்கு மேல் தொங்கும் விழுதுகளைப் பற்றிக்கொண்டு ஆடும் ஊஞ்சலாட்டம் ஆபத்து நிறைந்தது. கரணம் தப்பினால் மரணம் நிகழ்வதை யாராலும் தடுக்கமுடியாது. ஆறேழு வரிகளில் சித்தரிக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிச்சித்திரம் கதையின் உத்தேச முன்வடிவைக் கொடுத்துவிடுகிறது. விழப்போவது யார் என்பதை அறியத் தருகிறது எஞ்சிய கதைப்பகுதி. கொஞ்சம் தங்கமும் நிறைய பித்தளையையும் சேர்த்து உருவாக்கிய மோதிரங்களையும் வளையல்களையும் கொண்டுவருகிறான் இளைஞன். அவற்றை போலிப் பெயர்களில் வங்கிகளில் அடகுவைத்துவிட்டு பணம் வாங்கி வந்து தருகிறாள் ஓர் இளம்பெண். அப்பெண்ணுக்கு அவன்மீது ஓர் ஈர்ப்பு இருக்கிறது. அந்த ஈர்ப்புக்காகவே ஆபத்தான அந்த வேலையைச் செய்கிறாள். ஆனால், போலிப் பொருட்களை விற்றுக்கொடுக்கும் ஒரு கருவியாக மட்டுமே அவளைப் பார்க்கிறான் அவன். அவள் முன்வைத்த காதலை அவன் மறைமுகமாகவும் நேராகவும் காரணம் சொல்லாமலேயே பலமுறை மறுத்துவிடுகிறான். அவன் மறுக்கமறுக்க அவன்மீதான ஈர்ப்பு அவள் நெஞ்சில் ஊறிப் பெருக்கெடுக்கிறது. தன் காதலை அவன் ஏற்றுக்கொள்ளும்படி செய்யவேண்டும் அல்லது கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்னும் தீர்மானத்தோடு அன்றைய தினம் அவள் வந்திருக்கிறாள். புதிய நகைகளைப்பற்றியும் வங்கிகளை அணுகவேண்டிய முறைகளைப்பற்றியும் கிடைக்கவிருக்கும் தொகையில் அவளுக்குத் தரவிருக்கிற கமிஷன் தொகையைப்பற்றியும் மாறிமாறிப் பேசுகிற அவன், வழக்கம்போலவே அவளுடைய கோரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. அவளிடம் சொல்லிவிட்டு கிளம்புவதற்கு முன்பாக வழக்கம்போல விழுதுகளைப் பிடித்து ஊஞ்சலாடத் தொடங்குகிறான். அவன் இறங்கிச் சென்ற பிறகு, அந்தக் கிணற்றில் விழுந்து உயிர்துறக்க முடிவெடுத்தபடி நிற்கிறாள் அவள். எதிர்பாராத கணத்தில் விழுதின் கிளை முரிந்துவிட அவன் கிணற்றில் விழுந்து இறந்துபோகிறான்.
ராமநாதன், வயது 44’ உருக்கமான காதல் சித்திரம். 44 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத பள்ளி ஆசிரியர் ராமனாதன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வத்சலா என்னும் ஒரு பெண்ணைப் பார்த்து மனத்தைப் பறிகொடுத்திருந்தான் அவன். ஒருநாள் அவளைப் பார்த்தபடி சாலையைக் கடக்க முயற்சி செய்யும்போது ஒரு விபத்து ஏற்படுகிறது. அதில் அவன் தன் இடதுகையை இழந்துவிடுகிறான். அதற்குப் பிறகு அவளை அவன் பார்க்கவே இல்லை. ஆனாலும் அவளையே நினைத்தபடி காலத்தைக் கடத்துகிறான். பத்து ஆண்டுகள் உருண்டுவிடுகின்றன. மக்கள் கணக்கெடுப்புக்காக ஒருநாள் அவன் ஒரு வீட்டை அணுகுகிறான். அங்கே வத்சலாவை ஒரு குடும்பத்தலைவியாகப் பார்க்கிறான். அது அவனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அவளைப் பார்த்த நிறைவிலேயே மனம் குளிர்ந்துவிட்ட அவன் எதையும் வெளிப்படுத்தாமல் விவரங்களைச் சேகரித்துக்கொண்டு வெளியேறுகிறான். ஊனமுற்ற கையைப்பற்றி கேட்ட அவள் கணவனிடம்அது ஒரு விபத்துஎன்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறான். அவனை அறியாதவள்போல அவ்விடத்தில் நடந்துகொண்டாலும் அவனைப் பார்த்த கணமே அவள் மனம் அவனை அறிந்துகொள்கிறது. ஏன் தன் மனத்தில் இருந்த காதலைச் சொல்லாமல் தவிர்த்தோம், ஏன் அவனை நிராகரித்தோம், தன்னால்தானே அவன் கையை இழந்து ஊனமுடன் இருக்கிறான் என்றெல்லாம் நினைத்து அவள் நெஞ்சில் குற்ற உணர்வு ஊறிப் பெருகுகிறது. இறுதியில் அவன் உயிருடன் இருப்பதையொட்டி ஒரு நிம்மதியுணர்வு உருவாகிறது. பத்தாண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒருவரையொருவர் அறிந்துகொள்கிறார்கள். விசித்திரமாக இருவருமே காதலைக் கடந்து  ஒருவித விசித்திர நிறைவை உணர்கிறார்கள். காவியங்கள் மட்டுமே காட்டக்கூடிய அந்த நிறைவு எளிய மனிதர்களுக்கும் வசப்படும் அற்புதமான தருணத்தை செந்தில்குமார் அழகாகப் படம்பிடித்துள்ளார்.
ஒவ்வொரு சிறுகதையையும் விதவிதமான பின்னணியில் விதவிதமான மாந்தர்கள் இடம்பெற்றிருக்கும் வகையில் தீட்டியிருக்கிறார் செந்தில்குமார். எல்லாக் கதைகளும் ஒன்றையொன்று விஞ்சும்வண்ணம் உள்ளன. இப்புதிய தொகுப்பு செந்தில்குமாரின் எழுத்தாளுமைக்கு ஓர் அடையாளம்.

(அலெக்ஸாண்டர் என்கிற கிளி. எஸ்.செந்தில்குமார். உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை- 18. விலை. ரூ.140.)
(ஜூன் மாத தீராநதி இதழில் வெளிவந்தது)