இரண்டு ஊர்களுக்கிடையிலான கேபிள் பாதையை நாம் நினைத்த நேரத்தில் தொடங்கிவிட முடியாது. அதற்கு முன்பு செய்துமுடிக்க வேண்டிய சில வேலைகள் உண்டு. பெரும்பாலும் சாலையை ஒட்டியே கேபிள் பாதை அமைவதால், சாலைத்துறையினரை அணுகி வேலையைத் தொடங்குவதற்குரிய அனுமதியைப் பெறவேண்டும். தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை, கிராம பஞ்சாயத்து நிர்வாகம் என பல்வேறு வகையான நிர்வாகங்களின் கீழ் சாலை பிரிந்திருக்கும். ஒவ்வொரு நிர்வாகத்தின் எல்லைக்குள் அடங்கிய பாதையின் நீள விவரங்கள் அடங்கிய குறிப்புகளோடு அவர்களை அணுகினால் மட்டுமே அதைப் பெறமுடியும். அதற்குப் பிறகு வாகனங்களின் தினசரி இயக்கத்துக்கு இசைவாக எரிபொருளை கடனுக்கு வழங்கும் நிலையத்தை முடிவு செய்யவேண்டும். எல்லாவற்றையும் விட பள்ளம் தோண்டுவதற்குத் தேவையான ஊழியர்களைத் திரட்டுவது முக்கியமான வேலை.