Home

Tuesday, 25 October 2016

ஒரு புதிய வழிமுறை - தமிழகக் கோட்டைகள் - ( நூல் அறிமுகம் )


மானுட வரலாற்றில் அங்கங்கே சிதறியிருந்த இனக்குழுக்களை ஒன்று திரட்டி, குடிமக்களாக்கி அவர்களை ஆட்சி செய்கிற அரசு என்கிற அமைப்பு உருவான தருணத்திலேயே கோட்டை என்னும் கருத்தாக்கம் உருவாகிவிட்டது. ஒருபுறத்தில் கோட்டை அரண்மனைக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குகிறது. இன்னொரு புறத்தில்  மற்ற அரசுகளின் மதிப்பில் கெளரவத்துக்குரிய தோற்றத்தைச் சம்பாதித்துக்கொள்கிறது. அரசகுல வரலாற்றில் கோட்டைகளைக் கட்டியெழுப்புவதும் ஒருவர் கோட்டையை இன்னொருவர் இடிப்பதும் மாறிமாறி நிகழ்ந்திருக்கிறது. சிலர் இயற்கையாகவே உள்ள மலையரண்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கோட்டைகளை எழுப்பினார்கள். சமவெளிப்பிரதேசத்தில் அரசாண்டவர்கள் புதிய கோட்டையை தமக்கு விருப்பமான வகையில் வடிவமைத்துக்கொண்டார்கள். எல்லாமே வெற்றியின் அடையாளங்கள்.

எழுத்தாளர் விட்டல்ராவ் அடிப்படையில் ஓவியர். நிலக்காட்சிகள்மீதும் கோட்டைக்காட்சிகள்மீதும் தீராக்காதல் உள்ளவர். அவற்றைக் காணும்பொருட்டு தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டவர். பயணம் மேற்கொள்வது என்பது கலைஞர்களின் பொதுவான இயல்பு. உலகின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு பயணம் செய்தபடியே இருக்கிறார்கள் கலைஞர்கள். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் வாழ்ந்த ஓவியர்களான டானியல் சகோதரர்கள் தென்னிந்தியாவில் பயணம் செய்தார்கள். அப்போது தாம் கண்டு களித்த பட்டணக்காட்சிகளையும் கோட்டைக்காட்சிகளையும் ஓவியங்களாக வரைந்து எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்குச் சென்றார்கள். அங்கே, எல்லாப் படங்களையும் செப்புத்தகடுகளுக்கு மாற்றி ஆக்வாடிண்ட் பதிப்புகளாக நூல் வடிவில் வெளியிட்டார்கள். 144 ஓவியங்கள் ஆறு தொகுதிகளாக வெளிவந்தன. கீழைநாட்டு இயற்கைக்காட்சிகள் (ஓரியண்டல் சீனரி ) என்னும் தலைப்பில் அமைந்த அத்தொகுதிகளை தற்செயலாகப் பார்த்து மனம் பறிகொடுத்த விட்டல்ராவ் தனக்குள் உருவான மன எழுச்சியின் காரணமாக அத்தொகுதிகளில் உள்ள கோட்டைகளை நேரில் சென்று பார்த்து எழுதும் திட்டத்தை தனக்குள் வகுத்துக்கொண்டார். பிறகு ஓய்விருக்கும் போதெல்லாம் அந்த இடங்களுக்குச் சென்று பார்த்து, தகவல்களைத் திரட்டி இந்த நூலை எழுதி முடித்துள்ளார். ஓசூரில் தொடங்கி சென்னை வரைக்குமான நிலப்பரப்பில் உள்ள கோட்டைகளையும் பெங்களூர், ஸ்ரீரங்கப்பட்டணம் ஆகிய கர்நாடகத்துக்கோட்டைகளையும் பார்த்துத் தெரிந்துகொண்ட அனுபவங்களை பதினொன்று கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார் விட்டல்ராவ். அவர் தன் பயணத்தில் பார்த்த கோட்டைகள் - ஒசூரில் உள்ள பாரமஹால் என்னும் கோட்டை, நாமக்கல் கோட்டை, அரூருக்கு அருகில் உள்ள தென்கரைக்கோட்டை, கிருஷ்ணகிரியில் உள்ள தங்கணிக்கோட்டை, மகாராஜாகடையில் உள்ள மலைக்கோட்டை, ராயக்கோட்டையில் உள்ள கீழ்க்கோட்டை, தர்மநாயக்கன்கோட்டை, ஜெகதேவியில் உள்ள கோட்டை, சங்ககிரி, ஆத்தூர், தியாகதுர்கம், செங்கல்பட்டு, வந்தவாசி, வேலூர், சந்திரகிரி, சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, செஞ்சி, திருமயம், திண்டுக்கல், பெங்களூர், ஸ்ரீரங்கப்பட்டனம் ஆகிய ஊர்களில் உள்ள கோட்டைகள் ஆகும். சில சமயங்களில் தொடர்ந்தும் சில சமயங்களில் சீரான கால இடைவெளிக்குப் பிறகும் இதற்காகவே அவர் பயணம் செய்திருக்கிறார். இளமைப்பருவத்தில் தன் தந்தையார் சுற்றிக்காட்டிய சில கோட்டைகளை மீண்டும் பார்க்கும்போது தன் தந்தையை மனநெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துகொள்கிறார். வரலாற்றுத்தகவல்கள் என்றாலும், அவற்றை வெறும் தகவல்களாக மட்டும் விட்டல்ராவ் தொகுக்கவில்லை. ஒரு சாகசப்பயணத்துக்குரிய சுவாரசியத்தையும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஆர்வத்தையும் ஒருங்கே கொண்டிருக்கும் வகையில் அவர் தொகுப்புமுறை அமைந்திருக்கிறது. புனைவெழுத்தாளனுக்குரிய கூர்மையான கவனிப்புத்திறனும் அங்கங்கே வெளிப்படுகின்றன. ஒவ்வொரு கோட்டைப் பயணத்திலும் ஒரு புதிய மனிதன் அவர் பார்வையில் தென்படுகிறான். கோட்டையைப்பற்றிய சித்திரத்துடன் அவனைப்பற்றிய சித்திரமும் சேர்ந்துகொள்கிறது. பதின்ம வயதில் பார்த்த சில இடங்கள் முப்பது நாற்பது ஆண்டு இடைவெளியிலேயே காணாமல் போய்விட்டதை வருத்தமுடன் பதிவு செய்கிறார். அவை இருந்தன என்பதற்கு இப்போது விட்டல்ராவின் கட்டுரையே சாட்சி. இன்று எஞ்சியிருக்கும் காட்சிகள் அடுத்த முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இருக்குமோ அல்லது இல்லாமல் போகுமோ, தெரியவில்லை. ஒருவேளை இல்லாமல் போகுமெனில், அவை எப்படியெல்லாம் இந்த மண்மீது இருந்தன என்பதற்கு  இந்தப் புத்தகமே சாட்சியாகவும் ஆவணமாகவும் இருக்கும்.
கோட்டைப்பயணத்துக்காக விட்டல்ராவ் தேர்ந்தெடுத்த பாதையில் அமைந்திருக்கும் ஊர்கள் பெரும்பாலும் திப்புசுல்தான் ஆட்சிக்கு உட்பட்டவையாக இருந்தவை. அதனால் எல்லாக் கோட்டைகளின் தகவல்களோடும் திப்பு சுல்தானின் வாழ்க்கைச்சம்பவங்கள் இரண்டறக் கலந்துள்ளதைப் பார்க்கமுடிகிறது. கோட்டைகளைப்பற்றிய தகவல்களோடு அரசியல் தகவல்களும் மோதல்களைப்பற்றிய தகவல்களும் இணைந்துவிடுகின்றன. ஒவ்வொருவருடைய வாழ்விலும் பாசமும் துரோகமும் சம அளவில் இணைந்து நீள்கின்றன. ஸ்ரீரங்கப்பட்டணத்தில் திப்பு சுல்தான் தன் கோட்டையை அமைத்திருந்தார். பவானி ஆற்றங்கரையை ஒட்டி தர்மநாயகன் கோட்டை இருந்தது. அது திப்புவின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். திப்புவுக்காக அரசாங்கத்தின் சார்பில் சுங்கம் வசூலிக்கும் இடமாக தர்மநாயகன் கோட்டை அமைந்திருந்தது. அரசியல் அடிப்படையில் திப்புவின் அதிகார வரம்புக்குள் உட்பட்ட அந்தக் கோட்டையில் இருந்தபடியே, திப்புவை வெல்வதற்காக செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆதரவை நாடிச் செல்லும் விஷயம் நடந்திருக்கிறது. அரசியல் துரோகங்கள் சர்வசாதாரண முறையில் நிகழ்ந்துள்ளன. திப்பு தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியிருக்கிறார். பட்டு நெசவை வெற்றிகரமான ஒரு தொழிலாக தன் பகுதியில் நிலைநாட்டியிருக்கிறார். பட்டுத்துணிகளுக்கான ஒரு பெரிய சந்தையை அவர் உருவாக்கியிருக்கிறார். இது திப்புவின் ஒரு முகம். இன்னொரு முகம் கொடுமையானது. ஆங்கிலேயர்களை அவரளவு வெறுத்தவர்கள் யாருமே இருக்கமுடியாது. ஆங்கிலேய அதிகாரிகளை கைது செய்து நிலவறைகளில் அடைத்திருக்கிறார்.
சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் பகுதிகளில் உள்ள பன்னிரண்டு சமஸ்தானப்பகுதிகள் பாரமஹால் என்று அழைக்கப்பட்டன. முதலில் அப்பகுதிகள் செஞ்சி அரசரின் கட்டுப்பாட்டில் இருந்தன. பிறகு கர்னாடக நவாப் தாவுத்கானிடம் கைமாறின. அப்புறம் அவை கடப்பை நவாப்பின் வசம் சென்றன. இறுதியாக ஹைதர் அலி அதை போரிட்டு வென்று வசப்படுத்தினார். ஆனால் தான் தரவேண்டிய கடன்பாக்கிக்காக அவற்றை மராத்திய அரசுக்கு எழுதிக்கொடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் மறுபடியும் அவற்றை கடப்பை நவாபிடம் கொடுக்க, மறுபடியும் ஹைதர் அலி அவற்றை போரில் வென்று திரும்பப் பெற்றார். திப்புவின் ஆட்சியில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் அவருக்கும் 1792-ல் ஒரு போர் நடந்தது. அதைத் தொடர்ந்து ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனடிப்படையில் திப்புவிடமிருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு பாரமஹால் மற்றும் சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட பார மஹால், பன்னிரண்டு சமஸ்தானங்களை தன்னுள் கொண்டிருந்தது. ஜெகதேவிராயனுக்கு பன்னிரண்டு பிள்ளைகள். இந்தப் பிள்ளைகளுக்கு அவர் இவ்விடங்களில் நிர்வாகப்பிரிவுகளை உருவாக்கிக் கொடுத்தார். ஒரு நூறு ஆண்டு கால இடைவெளியில் ஒரு கோட்டையைச் சுற்றி வரலாறு தலைகீழாகப் புரண்டு மாறிவிடுகிறது. இம்மாற்றங்களை ஒரு வரலாற்றாசிரியனைப்போல தரவுகளோடு சொல்லிச் செல்கிறார் விட்டல்ராவ்.
இன்று யாராலும் பார்க்கமுடியாத கெனில்வர்த் கேசிலை, அதன் சிதைந்த வடிவத்தில் பார்த்த சாட்சியாக விளங்குகிறார் விட்டல்ராவ். இன்று அந்தக் காலத்து ஓவியர்கள் தீட்டிவைத்த ஓவியங்களில் மட்டுமே அந்தக் கேசிலைப் பார்க்கமுடிகிறது. அந்தக் கேசிலைச் சுற்றி ஒரு மாபெரும் காதல் கதையே உள்ளது. கெனில்வர்த் என்னும் அதிகாரி தன் காதலிக்காக ஏரிக்கரையை ஒட்டி கட்டியெழுப்பிய கேசில் அது. லண்டனில் உள்ள ஒரு கேசிலைச் சுட்டிக்காட்டி, அதைப்போலவே ஒரு கேசில் கட்டிய பிறகு வந்து அழைத்துச் செல்லும்படி சொன்ன தன் இளம்மனைவிக்காக, அந்த அதிகாரி ஆசை ஆசையாக கேசிலைக் கட்டியெழுப்பினான். சொந்தப்பணம், அரசாங்கப்பணம் எல்லாவற்றையும் போட்டு கட்டி, அந்தக் கேசில் கட்டி முடிக்கப்பட்ட தருணத்தில் லண்டனில் அந்த இளம்மனைவி இன்னொருவனுடன் வாழத் தொடங்கிவிட்டாள் என்னும் செய்திதான் அவனுக்கு கிடைத்தது. மனமுடைந்த அவன் அந்தக் கேசிலுக்குள் சென்று தன் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொண்டு மரணமடைந்துவிட்டான். இன்பமுடன் வாழவேண்டிய இல்லறமாளிகை, மரணக்கூடமாக மாறிவிட்டது. அவன் மரணத்தைத் தொடர்ந்து அது அரசு அலுவலகமாக சில ஆண்டுகள் இயங்கி, சுதந்திரத்துக்குப் பிறகு, கொஞ்சம்கொஞ்சமாக  இடிந்து விழுந்து மறைந்துவிட்டது. இன்று அந்த கேசிலின் ஓவியம் மட்டுமே இணைய தளங்களில் காணக்கிடைக்கின்றது.
கோட்டையைப்பற்றிய தகவல்கள்கூட சரியாகத் தெரியாத மனிதர்கள் வாழக்கூடிய ஊரில் தளராத நம்பிக்கையோடு திரிந்தலைந்து எண்ணற்றோரைப் பார்த்து, ஆவணக்காப்பகங்களின் நூல்களில் தேடி, ஒரு குறிப்போடு இன்னொரு குறிப்பை ஒப்பிட்டுப் பார்த்து, கடைசியாகத்தான் அந்தத் தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார் விட்டல்ராவ். அதனால் அவர் குறிப்பிடும் ஒவ்வொரு தகவலும் வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. தென்கரைக் கோட்டையின் வரலாற்றுத் தகவலோடு இணைந்து விவரிக்கப்பட்டிருக்கும் பாளையக்காரச் சகோதர்களின் கதை மனத்தைக் கனக்கவைக்கும் வகையில் உள்ளது.
இந்தக் கோட்டை இருந்த இடம் நதிக்கரை. காட்டுப்பகுதி. அன்றைக்கு  அது விஜயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. சேலம் பாளையக்காரர் ஒருமுறை வேட்டையாடுவதற்காக வேட்டை நாய்களுடன் இந்தக் காட்டுப்பகுதிக்குள் வந்தார். இப்பகுதியைக் கடக்கவிருந்த சமயத்தில், ஓர் உடும்பு வேட்டைநாய்களை விரட்டியதைப் பார்த்து வியப்பு கொண்டார். அன்று அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார் அவர். தூங்கும்போது கனவில் தோன்றிய  இறைவன் அந்த இடத்தில் ஒரு புதையல் இருக்கிறதென்றும் அதை எடுத்துச் செலவு செய்து அங்கே ஒரு கோயில் எழுப்புமாறும் கேட்டுக்கொண்டார். அதைப்போலவே புதையலைக் கண்டெடுத்த அரசர் அங்கே கோயிலைக் கட்டியெழுப்பத் தொடங்கினார். அந்த வேலையை மேற்பார்வை பார்ப்பதற்காகவே தன் தம்பியை அங்கே நிறுத்தியிருந்தார். அவரிடம் வேலை பார்த்துவந்த அதிகாரியை ஏதோ காரணத்தை ஒட்டி கண்டிப்புடன் நடத்தியிருக்கிறார் அந்தத் தம்பி. அதனால் அவரைப் பழிவாங்க நினைத்த அந்த அதிகாரி அவரைப்பற்றிய பிழையான தகவல்களை அரசரிடம் தெரிவித்தார். அதை உண்மை என நம்பி விசாரிப்பதற்காக கோட்டையை நோக்கி வந்தார் அரசர். அண்னனை வரவேற்க ஒரு சிறு பரிவாரத்தோடு ஆற்றங்கரைக்குச் சென்றார் தம்பி. அரசரைக் கொல்வதற்காக படை திரட்டிக் கொண்டு வருவதாக பிழையான தகவலைச் சொல்லி அரசரின் மனத்தைக் கலைத்தார் அதிகாரி. கோபம் கொண்ட அரசர் எந்த விசாரணையும் இல்லாமல் தம்பியைக் கொன்று வீழ்த்திவிட்டார். கோயில் கட்டுமானத்தை சுற்றிப் பார்த்து உண்மையைத் தெரிந்துகொண்ட பிறகு, குற்ற உணர்ச்சியோடு வாழ விருப்பமில்லாமல் தற்கொலை செய்துகொண்டு உயிர் துறந்தார். ஒவ்வொரு கதையிலும் தன்னலமும் துரோகமும் கலந்துகிடக்கின்றன. இளம் வயதில் சுற்றுலாவுக்காக இந்தக் கோட்டையைப் பார்த்த நினைவையும் கட்டுரை எழுதுவதற்காக பயணம் செய்தபோது பார்த்த நினைவையும் ஒப்பிட்டு மனவருத்தத்துடன் விட்டல்ராவ் பதிவு செய்திருக்கும் சொற்களை வாசிக்கும்போது நமக்கும் வருத்தம் எழுகிறது. 
ராயக்கோட்டையில்  ’டவுட்டன் தோட்டம்’ என்கிற பெயரில் அழைக்கப்படும் ஒரு தோட்டத்தின் பின்னணியாக உள்ள கதை ஒரு புனைகதையைப்போல உள்ளது. கர்னல் டவுட்டன் கிழக்கிந்தியக் கம்பெனியின் ராணுவ அதிகாரி. மேஜர் ஜான் காம்பெல் க்ளோவர் என்னும் மூத்த அதிகாரியிடம் பணிபுரிந்தவர். க்ளோவர் ஒரு எளிய காலாட்படை வீரனாக பணியில் இணைந்து முப்பதாண்டு கால உழைப்புக்குப் பிறகு மூத்த அதிகாரியாக உயர்ந்தவர். ராயக்கோட்டையில் ஒரு இஸ்லாமியப்பெண்ணை விரும்பி மணம்புரிந்துகொண்டு வாழ்ந்தார். 1852 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பர்மிய யுத்தத்தில் அவர் தம் கை ஒன்றை இழந்துவிட்டார். அவருடைய தோள்பகுதியை பீரங்கிக் குண்டுவீச்சு கிழித்தெறிந்துவிட்டது. இக்காயத்தால் அவருடைய உருவம் மிகவும் உருக்குலைந்து போய்விடவே ஊரார் பார்வையிலிருந்து ஒதுங்கி ராயக்கோட்டையின் அடிவாரத்தில் வசித்துவந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தன் மனைவியை இழந்தார். மனைவியின் நினைவாக அழகான ஒரு கோரியை எழுப்பி நினைவிடமாக்கிவிட்டு, ராயக்கோட்டையிலிருந்து இடம்பெயர்ந்து பஞ்சப்பள்ளி என்னும் இடத்துக்குச் செனு துறவியைப்போல வாழ்ந்து உயிர்துறந்தார். அவரிடம் அதிகாரியாக பணிபுரிந்த டவுட்டன், க்ளோவர் தன் மனைவிக்காக கட்டியெழுப்பிய கோரிக்கு அருகில், க்ளோவரின் நினைவாக ஒரு கிணற்றைத் தோண்டினார். அதனருகில் ஒரு பெரிய தோட்டத்தையும் உருவாக்கினார். அந்தத் தோட்டம் அவருடைய பெயராலேயே டவுட்டன் தோட்டம் என்று அழைக்கப்பட்டது. 1972 –ல் நிகழ்ந்த போர்த்தோல்வியைத் தொடர்ந்து திப்புசுல்தானின் பிள்ளைகளை பிணைக்கைதிகளாக பிடித்துக்கொண்ட கிழக்கிந்தியக்கம்பெனியின் ராணுவ நிர்வாகத்தலைவர் காரன்வாலிஸ் அக்குழந்தைகளை டவுட்டனின் பொறுப்பில் வைத்திருந்தார். திப்புவுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்த டவுட்டன் தூதராக அனுப்பப்பட்டார். ஸ்ரீரங்கப்பட்டணத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, ராயக்கோட்டையின் பாதுகாப்புப்படையின் பொறுப்பை டவுட்டன் ஏற்றுக்கொண்டார். அவருடைய சேவையைப் பாராட்டி அவருக்கு நைட் என்னும் பட்டத்த்தைச் சூட்டியது அரசு. 1826-ல் அவர் ராணுவத்தளபதியாக உயர்ந்தார். 1847-ல் சென்னையில் அவர் காலமானார். கோட்டையைப்பற்றிய விவரங்களைப் படிக்கும்போது வரலாற்றுப்பாத்திரங்களின் வாழ்க்கைச்சம்பவங்களும் கலந்து வருகின்றன.
கோட்டைகளோடு இணைந்துள்ள வரலாற்றுத்தகவல்களை மட்டுமன்றி அப்பகுதிகளில் அக்கோட்டையைப்பற்றி வழங்கப்படும் வாய்வழிக்கதைகளையும் சேகரித்து பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார் விட்டல்ராவ். எல்லாமே கிட்டத்தட்ட பெண்மரணங்களை மையமாகக் கொண்ட கதைகள். ஆச்சரியப்படும் விதத்தில் எல்லாமே தற்கொலைமரணங்கள். செஞ்சிக்கோட்டையைப்பற்றிய தகவல்களோடு இணைத்து பகிர்ந்துகொள்ளப்படும் கர்ணபரம்பரைக் கதையிலும் அத்தகு மரணச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. செஞ்சியின் ஆதிப்பெயர் செங்கிரி. அதாவது சிவப்பு மலை. ஒரு காலத்தில் அங்கு வாழ்ந்த ஏழு கன்னிமார் சகோதரிகளில் ஒருத்தியின் பெயர் செஞ்சியம்மன். ஒரு சமயத்தில் அவர்களுடைய கற்புக்கு இழுக்கு நேரும்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்துவிடுகிறது. அந்த ஆபத்திலிருந்து அவர்களை தாடிக்கார வீரப்பன் என்பவன் காப்பாற்றிவிடுகிறான். ஆயினும் அப்பெண்கள்  ஏழு பேரும் அவமானத்தைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் தற்கொலை செய்துகொண்டு மாண்டுவிடுகின்றனர். ஏழு கன்னியருக்கும் சிறு கோயில்கள் எழுப்பப்படுகின்றன. அவர்களுக்குரிய வழிபாடு இன்றும் நடைபெறுகிறது. செஞ்சியம்மனின் நினைவாக அந்த ஊர் செஞ்சி என அழைக்கப்படுகிறது. கமலக்கண்ணி என்பவள் இன்னொரு சகோதரி. அவளுக்கும் கோவில் உள்ளது. கமலக்கண்ணியைக் குலதெய்வமாகக் கொண்ட பலர் இன்றும் அக்கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்துகின்றனர். டணாய்க்கன்கோட்டை எனப்படும் தர்மநாயக்கன் கோட்டையைப்பற்றியும் ஒரு பெண்மரணக்கதை சொல்லப்படுகிறது. ஒரு பெண் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் காரணமாக கோட்டையிலிருந்து பவானி நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டாள். மூழ்கி உயிர்விடும் முன்பாக, “நான் மூழ்குவதைப்போலவே இந்த தர்மநாயகன் கோட்டையும் சீக்கிரம் பவானிக்குள் மூழ்கி அழியும்” என்று சபித்தாள் என்பது கதை. ஒவ்வொரு கோட்டையையும் நினைக்கும்தோறும் அதை உருவாக்கி கட்டிக்காத்த வரலாற்று நாயகர்களையும் அங்கு துர்மரணங்களால் உயிர்துறந்த முகமற்ற பெண்களையும் இணைத்தே நினைத்துக்கொள்ளத் தோன்றுகிறது.
கோட்டையைப்பற்றிய செய்திகளை விட்டல்ராவ் முன்வைத்திருக்கும் விதம் ஒரு புனைகதைக்கு நிகராக உள்ளது. கோட்டையின் தோற்றம், அங்கு செல்லும் வழிமுறைகளைப்பற்றிய விளக்கம், கோட்டையைப்பற்றிய அந்த ஊர்மக்களின்  எண்ணங்கள் ஆகியவற்றை முதல் பகுதியாகவும் வரலாற்றின் வழியாக கிடைக்கக்கூடிய தகவல்களையும் கர்ணபரம்பரைக்கதைகள் வழியாகத் தெரியவரக்கூடிய தகவல்களையும் இணைத்து அடுத்த பகுதியாகவும் அக்கோட்டையைச்சுற்றி நிகழ்ந்த வரலாற்றுச்சம்பவங்களின் தொகுப்பை இன்னொரு பகுதியாகவும் அதன் இன்றைய நிலைபற்றிய குறிப்புகளை இறுதிப்பகுதியாகவும் விட்டல்ராவின் கட்டுரைகள் அமைந்துள்ளன. புனைகதைக்கே உரிய மொழியில் ஒவ்வொரு கட்டுரையும் நல்ல வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. அரசாட்சி மாறமாற கோட்டைகள் கைமாறிச் செல்லும் விதம் ஒரு வரலாறு எப்படி உருவாகிறது என்பதை நமக்குப் புரியவைக்கிறது. எடுத்துக்காட்டாக டெங்கணிக்கோட்டையைப்பற்றிய தகவலைச் சொல்லலாம். ஒசூருக்கு அருகில் அமைந்திருக்கும் இக்கோட்டை முதலில் விஜயநகரப் பேரரசின் அதிகார அமைப்பின் கீழ் உருவாகியது. பேரரசின் சார்பாக ஒரு பாளையக்காரன் அதை நிர்வகித்துவந்தான். எதிர்பாராத ஒரு தருணத்தில் விஜயநகரப் பேரரசு வீழ்ந்தபிறகு, தன் பகுதியை ஒரு சுதந்திர இடமாக அறிவித்துக்கொண்டான் அவன். ஆனால் அது நீண்ட காலம் நிலைக்கவில்லை. தருமபுரியைச் சேர்ந்த ஜெகதேவராயர் அப்பாளையக்காரனை வெற்றிகொண்டு, கோட்டையைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டார். அவருடைய காலத்துக்குப் பிறகு, அவருடைய வழித்தோன்றல்களை மைசூர் உடையார் அரசவம்சத்தைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றிக்கொண்டனர். இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் அக்கோட்டை சரணடைந்தது. இன்று தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் உள்ள அந்த ஊர் தேன்கனிக்கோட்டை என்று பெயர்மாற்றம் பெற்று விளங்குகிறது. கோட்டை என எதுவுமே இல்லை. அஸ்திவாரக்கற்கள்மட்டுமே அங்கங்கே தென்பட்டன என்று எழுதியுள்ளார் விட்டல்ராவ். அந்த ஊரில் வசிக்கும் வயது முதிர்ந்த பெரியவர்களுக்குக்கூட அக்கோட்டையைப்பற்றிய தகவல்கள் எதுவுமே தெரியவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
எல்லாக் கட்டுரைகளையும் படித்துமுடித்த பிறகு விசித்திரமான ஓர் எண்ணம் தோன்றியது. வரலாற்றுப்பின்னணியில் மாபெரும் நிகழ்ச்சி என எதுவுமே இல்லை. மனித வாழ்க்கையையே புரட்டிப்போடும் ஒரு நிகழ்ச்சிகூட சில ஆண்டுகளுக்குப் பிறகு சாதாரணமானதொரு விஷயமாக, எளிதில் மறந்து கடந்துபோகக்கூடிய ஒன்றாகவே மாறிவிடுகிறது. வரலாறு ஒவ்வொன்றையும் மிக எளிதாக இப்படி கடந்துபோய்க்கொண்டே இருக்கிறது. வரலாற்றைப் புரிந்துகொள்வது என்பது பெருமூச்சுவிடுவதற்காக அல்ல. கூர்ந்துநோக்கி மானுடவாழ்க்கையை மதிப்பிட்டுப் புரிந்துகொள்வதற்காக என்று சொல்லலாம். அவ்வகையில் சாதகபாதகமான எல்லாச் செய்திகளையும் ஒருசேரத் தொகுத்துப் புரிந்துகொள்ளும் ஒரு வழிமுறையை விட்டல்ராவின் ’தமிழகக்கோட்டைகள்’  நமக்குக் கற்றுத் தருகிறது.


(தமிழகக்கோட்டைகள். விட்டல்ராவ். அம்ருதா பதிப்பகம், சி.ஐ.டி.நகர் கிழக்கு, நந்தனம், சென்னை- 35. விலை. ரூ.150)