Home

Sunday 16 October 2016

அவலமும் அபத்தமும் – ஸ்ரீதரனின் சிறுகதைகள் - (புத்தக அறிமுகம்)



தமிழகத்தில் பிறந்திருந்தாலும் இலங்கையில் படித்துப் பட்டம் பெற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஸ்ரீதரன். அலை என்னும் இலக்கிய இதழில் 1974 ஆம் ஆண்டில் அவருடைய சிறுகதை பிரசுரமாகி, இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆய்வின் நிமித்தமாக   கொலராடோ பல்கலைக்கழகத்தில் இணைந்து, அங்கேயே சில ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அதைத் தொடர்ந்து ஒஹையா பல்கலைக்கழகத்தில் பதினான்கு ஆண்டுகளாக நீரியல் வள மேலாண்மைத்துறையின் தலைவராகச் செயல்படும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. இதற்கிடையில் சிறுகதைகளையும் அவர் தொடர்ந்து எழுதி வந்தார். அவருடைய சிறுகதைத்தொகுதிக்கு, இவ்வாண்டுக்குரிய இயல் விருது கிடைத்துள்ளது.

சிறுகதைக் கட்டமைப்பில் ஸ்ரீதரன் பின்பற்றும் எழுத்துமுறை சற்றே  வித்தியாசமாக இருக்கிறது. எஸ்.பொன்னுத்துரை, டொமினிக் ஜீவா, தெளிவத்தை ஜோசப் போன்ற இலங்கை எழுத்தாளர்களின் பாணியாகவும் இல்லாமல் புலம்பெயர்ந்த இடங்களிலிருந்து எழுதக்கூடிய அ.முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி, இளைய அப்துல்லா போன்றவர்களின் பாணியாகவும் இல்லாமல் வேறொரு போக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மிகவும் விரிவான வகையில், துண்டுதுண்டாக பல காட்சிகளை இணைத்துக்கொண்டு தன் இலக்கைநோக்கி மெதுவாக நகரும் தன்மையை, தன் அழகியலாகக் கொண்டுள்ளது இவர் படைப்புலகம். இதனாலேயே, ஸ்ரீதரனின் ஒவ்வொரு சிறுகதையும் அளவில் நீண்டிருக்கிறது. ஆனால், வாசிப்பதற்கு நீளம் எவ்விடத்திலும் தடையாகவே இல்லாத அளவுக்கு, கதையின் கட்டமைப்பு நேர்த்தியாக இருக்கிறது.
இவருடைய ஆரம்பகாலச் சிறுகதையான ’ராமசாமி காவியம்’ 1974 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. ’அம்பலத்துடன் ஆறு நாட்கள்’ என்னும் சிறுகதை 2001 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. இரண்டு சிறுகதைகளுக்குமான கால இடைவெளி கால்நூற்றாண்டுக்கும் மேலானது என்றபோதும், கட்டமைப்பின் அடிப்படையில் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.
’ராமசாமி காவியம்’ கதையில் இடம்பெற்றிருக்கும் ராமசாமி மிக எளிய மனிதன். வாழ்ந்த ஊரில் பஞ்சம் தலைவிரித்தாடியதால், உயிர்பிழைப்பதற்காக மனைவியோடும் பிள்ளைகளோடும் ஊரைவிட்டு வெளியேறிய ஏழை. இராம காவியம் என்று அழைக்கப்படுவது இராமாயணம். அக்காவியம் அயோத்தி அரசனான தசரதனுக்கு மகனாகப் பிறந்த அவதார புருஷனான இராமபெருமானின் வாழ்க்கையை எடுத்துரைக்கிறது. ராம காவியத்தை நினைவூட்டும்வண்ணம் ராமசாமி காவியம் என ஒரு தலைப்பைச் சூட்ட, ஸ்ரீதரனுக்கு எது உந்துதலாக இருந்திருக்கும் என்று யோசிக்கத் தோன்றுகிறது. புராண காலத்து ராமனுக்கும் பிழைக்க வழிதேடிச் செல்லும் மாங்குளம் ராமசாமிக்கும்  சில ஒற்றுமைகள் உள்ளன. தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, புராண ராமன் தன் மனைவியோடும் சகோதரனோடும் அயோத்தி நகரைவிட்டு, காட்டைநோக்கிச் செல்கிறான். நவீன ராமசாமி, பிறந்துவளர்ந்த ஊரில் வாழ வழியில்லாததால் தன் மனைவியோடும் பிள்ளைகளோடும் தேயிலைக்காட்டை நோக்கிச் செல்கிறான். புராண ராமனுக்குத் துணையாக குகனும் வீடணனும் அனுமனும் அமைந்ததுபோல, நவீன ராமசாமிக்குத் துணையாக கறுப்பையா அமைந்துள்ளார்.
மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவை நோக்கிச் செல்லும் ராமசாமியின் பயணத்திலிருந்து கதை தொடங்குகிறது. அவர்களுக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை கறுப்பையா. அவன் ஏற்கனவே அந்த இடத்தை அடைந்து பிழைத்துக்கொண்டிருப்பவன். அவனிடம் போய்ச் சேர்ந்துவிட்டால் தனக்கும் ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் மூட்டை முடிச்சுகளோடு கிளம்பி விடுகிறார்கள். படாத பாடுபட்டு, அலைந்து திரிந்து  அவனுடைய குடிசையைக் கண்டுபிடிக்கிறார்கள். தனக்கான இரவு உணவை அவன் சமைத்து முடித்த தருணம் அது. சொந்த ஊரிலிருந்து வந்தவர்கள் என்பதால், அந்த உணவை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அந்த நள்ளிரவில் மீன் பிடித்து வருவதற்காக தூண்டிலோடு ஓடுகிறான் கறுப்பையா. பகல்முழுக்க நடந்த களைப்பில் இருப்பதை உண்டுவிட்டு உறங்கிவிடுகிறது அக்குடும்பம். காலையில் ராமசாமியை ஒரு தோட்டத்தில் வேலைக்குச் சேர்த்துவிடுகிறான். தினக்கூலி ஆறு ரூபாய் என்று பேசி, நாள்முழுதும் வேலை வாங்கிவிட்டு மூன்று ரூபாய்மட்டும் கொடுத்தனுப்புகிறான் தோட்டத்துக்காரன். எதிர்த்துப் பேசி, மறுநாள் வேலைவாய்ப்பைக் கெடுத்துக்கொள்ள விரும்பாமல் கொடுத்ததை வாங்கிக்கொண்டு திரும்பிவிடுகிறான் ராமசாமி. அன்றும் மீன்பிடித்து வருவதற்காக, தூண்டிலை எடுத்துக்கொண்டு ஓடுகிறான் கறுப்பையா. அருகில் இல்லாத தன் மனைவியை அவன் மனம் நினைத்துக்கொண்டே ஓடுகிறது. அந்த விவரிப்போடு கதை முடிந்துவிடுகிறது. பெரிய திருப்பங்கள் எதுவுமில்லாமல், ஒரு வாழ்க்கைச் சித்திரத்தை தீட்டிக் காட்டுகிறது கதை. அந்தச் சித்திரமே கதையின் தரிசனமாகிறது. வறுமையின் சித்திரம். நட்பின் சித்திரம். அன்பின் சித்திரம். கனவின் சித்திரம். ஏக்கத்தின் சித்திரம். சுரண்டலின் சித்திரம். உயிர்வாழ்வதற்காக எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும் சித்திரம். அயோத்திக்குத் திரும்பிச் செல்ல, புராண ராமனுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. நவீன ராமசாமிகளுக்கு அந்த வாய்ப்பே இல்லை. அவர்களுக்கு இருக்குமிடமே அயோத்தி. எவ்வளவு அவலம்.
வாழ்வின் அவலத்தை ’ராமசாமியின் காவியம்’ முன்வைத்திருக்க, ’அம்பலத்துடன் ஆறு நாட்கள்’ வாழ்வின் அபத்தத்தை முன்வைக்கும் சிறுகதை. அம்பலம் ஏற்கனவே சிறையில் காலத்தைக் கழிப்பவன். அந்தச் சிறைக்கொட்டடியில் புதிதாக வந்து சேர்கிறான் சிவம் என்னும் கைதி. ஆறு நாட்கள் இருவரும் சேர்ந்திருக்கிறார்கள். இன்னும் இரண்டு புதிய கைதிகளும் அந்த அறைக்கு வந்து சேர்கிறார்கள். அவர்கள் நான்கு நாட்கள்மட்டுமே இருக்கிறார்கள். இப்படி சிறையில் அடைபடும் அளவுக்கு தன் வாழ்வு நிலைகுலைந்துவிட்டதே என்கிற சுயபச்சாதபத்தோடு, சிறைச்சாலைக்கு வரும் சிவனுடைய வருகையோடு கதை தொடங்குகிறது. அவனுக்கு தன் கதையை, யாரிடமாவது சொல்லி மனபாரத்தை இறக்கிவைக்கவேண்டும் போல இருக்கிறது. தாடிவைத்திருக்கும் அம்பலத்தைப் பார்த்த கணத்தில், அவன்மீது உருவான மதிப்பின் காரணமாகவும் பிடிப்பின் காரணமாகவும் அவனிடம் தன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்குகிறான். அம்பலம்  ஒரு வேடிக்கையான மனிதன். நடைபெறுகிற எல்லாச் சம்பவங்களுக்கும் ஒரு காரணகாரியத் தொடர்பு உள்ளது என்று நினைப்பவன். வானியல் சிந்தனை நிறைந்தவன். நடந்ததைப்பற்றியும் நடக்கப் போவதைப்பற்றியும் தனக்கே உரிய ஒரு கணக்குமுறையில் கணித்துச் சொல்கிறவன். அவனிடம் சிறுகச்சிறுக தன் வாழ்க்கைக்கதையைச் சொல்கிறான் சிவன். தம்பிகளுக்காகவும் தங்கைகளுக்காகவும் தன் கல்வியைத் தியாகம் செய்து உழைத்ததை, எல்லோரையும் ஆளாக்கி வளர்த்ததை, ஆளானவர்கள் அவனை அவமதித்ததை, ஒதுக்கியதை எல்லாவற்றையும் விரிவாகச் சொல்கிறான். தனக்கு நேர்ந்த சோகங்களிலிருந்து மீட்சி எப்போது கிடைக்கும் என்று கேட்டறிவதற்காக, ஊருக்கு வெளியே இருந்த ஒரு சாமியாரைப் பார்க்கச் சென்று, அவர் வாழ்ந்த வீட்டைக் கொளுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறைக்கு வந்துவிட்டதைச் சொல்லிமுடிக்கிறான். ராசிக்கட்டம்போல, பன்னிரண்டு அறை கொண்ட வீட்டை அமைத்துக்கொண்ட சாமியார், தன்னைத் தேடி வந்தவர்களையே கிரகங்களாக உருவகித்து, அந்த அறைகளில் உட்காரவைத்து, ஒரு பரிசோதனையில் இறங்கியிருக்கும் சமயத்தில் தீவிபத்து நடைபெற்றுவிடுகிறது. அம்பலத்தின் சககைதிகளாக வந்துசேர்ந்த இருவர் தம் பணச்செல்வாக்கால் சிறையிலிருந்து தப்பித்துச் செல்ல எடுத்த முயற்சி, அம்பலத்துக்கும் சிவத்துக்கும் சாதகமாக முடிந்துவிடுகிறது. ஒத்துழைக்க வந்த அதிகாரிகள் அம்பலத்தையும் சிவத்தையும் தப்பிக்கவைத்து விடுகிறார்கள். சிவத்தை அவனுடைய கிராமத்தில் விட்டுவிட்டு, அம்பலம் அங்கிருந்தும் வெளியேறிவிடுகிறான். ஒரு பகடையாட்டம்போல வாழ்க்கை, வெற்றியா தோல்வியா என தீர்மானிக்கமுடியாதபடி பல புதிர்களோடு நகர்ந்து நகர்ந்து செல்கிறது. தாயக்கட்டங்களுக்கு இரண்டு பக்கங்களிலும் உட்கார்ந்திருக்கும் மனிதர்கள் தம் விதியை நினைத்து பகடைகளை உருட்டியபடியே இருக்கிறார்கள். சிவம் கைதாவது எந்த அளவுக்கு அபத்தமோ, அதே அளவுக்கு சிவன் விடுதலையும் அபத்தமானது. வாழ்வின் கோலங்களில் அபத்தங்களுக்குக் குறைவே இல்லை.
உறவின் பின்னல்களில் உள்ள அபத்தங்களை முன்வைத்திருக்கும் ‘தொடர்புகள்’ என்னும் சிறுகதையும் ஒரு முக்கியமான கதை. ஈழத்தில் வாழும் தன் சகோதரிகளையும் தாயையும் பற்றிய நினைவுகளில் மூழ்கி, அவர்களுடைய வாழ்வுக்குத் துணைநிற்க முடியாத தன் நிலையை எண்ணி எண்ணி மனம் நொந்து வாழ்கிறான் ஒருவன். போராட்டத்தில் ஏற்கனவே தன்னுடைய இரண்டு சகோதரர்களைப் பலியாகிவிட்டதைத் தடுக்க இயலாத வலியோடு தாங்கிக்கொண்டவன். சகோதரிகளின் குடும்பங்களையாவது  எப்படியாவது காப்பாற்றி வெளிநாட்டுக்கு அழைத்து வந்துவிடவேண்டும் என நினைக்கிறான். ஆனால், அவன் நினைப்பதை அவன் மனைவி ஏற்பதில்லை. புகலிடத்தில் அவன் ஒரு பெரிய பொறியியல் அறிஞன்.  அந்த அந்தஸ்திலும் அது தரக்கூடிய சமூகமதிப்புகளிலும் திளைத்திருக்க எண்ணுபவள் அவள். பள்ளி செல்லும் வயதில் இரண்டு பிள்ளைகள் இருந்தபோதும், அவர்களிடையே உள்ள மாற்றுக்கருத்துகளுக்குக் குறைவே இல்லை. ஓயாமல் வார்த்தையாடிக் கொண்டே இருக்கிறார்கள். அன்பைக்கூட அவர்கள் மோதல்வழியாகவே காட்டிக்கொள்ள முடிகிறது. வேலையிடத்திலும் அவனுக்கு நிம்மதி இல்லை. எக்கணத்திலும், அவன் நீக்கப்பட்டுவிடலாம் என்கிற கத்தி அவன் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டே இருக்கிறது. முதலில் அவனுடைய நண்பன் வெளியேற்றப்படுகிறான். இறுதியாக அவனும் வெளியேற்றப்படுகிறான். ஊர்சார்ந்த செய்திகளும் அவனுக்கு நிம்மதி அளிக்கவில்லை. வீடு சார்ந்த அனுபவங்களும் அவனுக்கு நிம்மதி அளிக்கவில்லை. அலுவலகம் சார்ந்த அனுபவங்களும் அவனுக்கு நிம்மதி அளிக்கவில்லை. எல்லாத் தளங்களிலும் உருவாகும் பிணக்குகள் அனைத்துமே அபத்தமானவை. ஆனால் தவிர்க்கப்படமுடியாதவையாக, அவை பாறைகளைப்போல வழியை அடைத்துக்கொண்டு கிடக்கின்றன. மகிழ்ச்சி என்பது வெளியே இல்லை, உனக்குள்ளேயே இருக்கிறது, அதைத் தேடி அடையவேண்டும் என்று தியான வகுப்பில் ஒரு துறவி சொல்லிவிட்டுச் செல்கிறார். ஆனால், உள்ளே இருக்கிற மகிழ்ச்சியின் ஊற்றைத் தொடமுடியாதபடி, பிணக்குகளின் பாறைகள் நெருங்கிக் கிடக்கின்றன. இதை மானுடத் தொடர்புகளில் படிந்துள்ள அவலம் என்று சொல்வதா, அபத்தம் என்று சொல்வதா?
‘சொர்க்கம்’ என்னும் சிறுகதையும் ஸ்ரீதரன் பின்பற்றும் அழகியலுக்குப் பொருந்திவரக்கூடிய படைப்பு. அதன் களம் ஒரு கள்ளுக்கடை. அந்தக் கொடடாஞ்சேனை கள்ளுக்கடை, அங்கே வருகிறவர்களுக்கு ஒரு பெரிய சொர்க்கம். சாலையோரக் கழிவுகளை அகற்றும் நகரசுத்தித் தொழிலாளர்களே அக்கள்ளுக்கடையின் வாடிக்கையாளர்கள். இந்தியாவிலிருந்து சென்று கொழும்பை உருமாற்றிய தொழிலாளர்களின் வாரிசுகள் அவர்கள். கள்ளுக்கடை அவர்களுடைய சந்திப்பு நிகழும் இடம். தம்மிடையே உள்ள பிரச்சினைகளை அவர்கள் மனம்விட்டு பேசித் தீர்த்துக்கொள்ளும் இடம். எதிர்காலத்தில் என்னென்ன செய்யலாம் என திட்டமிட்டு வகுத்துக்கொள்ளும் களம். தனிமையையும் துயரங்களையும் போக்கிக்கொள்ள உதவும் இடம்.
தொகுப்பின் மிகமுக்கியமான சிறுகதை ‘இராமாயண கலகம்”. புராணக்கருவின் பின்னணியில் உண்மைபற்றிய தேடலாக இக்கதை அமைந்துள்ளது. உண்மையையும் நேர்மையையும் ஒருபோதும் யாரும் அறிவதில்லை என்கிற ஆதங்கத்துடன் பூமிக்குள் மறைந்துபோகும் சீதையின் குறிப்பு, இன்றுவரையிலும் பொருத்தமான குறிப்பாகவே உள்ளது என்பதைக் கவனிக்கவேண்டும். இராமாயணக் காலத்தில் நிகழ்வதாக அல்லாமல், சில தலைமுறைகள் தள்ளி நிகழ்வதாக கதை கட்டமைக்கப்பட்டுள்ளது. குகன் வழியில் தோன்றிய பரதன் என்னும் படகோட்டி, இராமாயண காலத்து முழுநிகழ்ச்சிகளையும் அறிந்துகொள்ளும் ஆவலுடன் மேற்கொள்ளும் பயணங்களும் அவற்றில் அவன் அடையும் அனுபவங்களும் கதையாக விரிவடைந்திருக்கிறது. அதிகாரத்தின் ஆதிக்கத்தில் உண்மை புதையுண்டுபோகிறது. அதிகாரம் என்பது உண்மையை உலகறிய வெளிச்சம்போட்டு காட்டுவதற்கல்ல, உண்மையை உலகின் கண்களில் படாமல் சாமர்த்தியமாக மறைத்துவைக்கவே பயன்படுகிறது. இராமாயண கலகம் சிறுகதை புராணப்பின்னணியில் அமைக்கப்பட்டதென்றாலும், இந்த வெளிச்சத்தின் பின்னணியில் அதை நிகழ்காலத்துக்கதையாக வாசிக்கமுடிகிற ஒரு வாய்ப்பு உருவாகிறது. சீதை சிறைவைக்கப்பட்ட இடம் என்கிற அம்சத்தை, ஆயிரக்கணக்கில் தமிழ்ஆண்களையும் தமிழ்ப்பெண்களையும் சிறைவைத்திருக்கும் அல்லது கொன்று மறைத்திருக்கும் இடம் என எளிதாக விரிவாக்கிக்கொள்ளமுடியும். ஆனால் அதிகாரம் அந்த உண்மையை எவ்வளவு எளிதாக உலகத்தின் கண்களிலிருந்து மறைத்துவிளையாடுகிறது என்கிற கசப்பான செய்தியை நம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. புராணத்தின் வழியாக, சமகாலத்தைநோக்கிப் பயணம் செய்யவைத்திருக்கும் விதத்தால், இச்சிறுகதை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
நாற்பதாண்டு காலத்தில் பதினைந்து கதைகளைமட்டுமே ஸ்ரீதரன் எழுதியுள்ளபோதும், தமிழிலக்கியப் பரப்பில் இவருடைய இடம் மிகமுக்கியமானது. மாங்குளம், கேகாலை, கொட்டாஞ்சேனை, அமெரிக்கா என பல இடங்களின் பின்னணிகளில் கதைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், ஸ்ரீதரனின் கதைகள் அனைத்தும் மனித வாழ்வின் அவலத்தையும் அபத்தத்தையும் நம்முடன் பகிர்ந்துகொள்கின்றன.
தொகுப்பு முழுதும் ஓவியர் கிருஷ்ணராஜாவின் ஓவியங்கள் நிறைந்துள்ளன. வசீகரமான கோடுகளாலும் நிழல் உருவங்களாலும் ஆன முன்னூறுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் இத்தொகுப்பின் சிறப்பைப் பல மடங்காக பெருக்கியிருப்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.


( ஸ்ரீதரன் கதைகள். தமிழியல், லண்டன் மற்றும் காலச்சுவடு, நாகர்கோவில் இணைந்து வெளியிட்டிருக்கும் தொகுப்பு. 669, கே.பி.சாலை. நாகர்கோவில். விலை.ரூ.750 )