புத்தகக்கடைகளுக்குச் சென்று
திரும்பும் ஒவ்வொருமுறையும் ஒருசில கவிதைத்தொகுதிகளை விருப்பத்தோடு வாங்குவது என் வழக்கம்.
கவிதைகள் எப்போதும் என் விருப்பத்துக்குரிய உலகம். அசைபோட்டபடி நடப்பதற்கு கவிதைவரிபோன்ற
உற்ற துணை உலகத்திலேயே இல்லை என்று நினைப்பவன் நான். புதியவர்களின் கவிதைத்தொகுதிகளை
விருப்பத்துடன் படிப்பதுமட்டுமன்றி, அவற்றைப்பற்றி ஒருசில வரிகளையாவது என் குறிப்பேட்டில்
குறித்துக்கொள்வதையும் ஒரு பழக்கமாகக் கடைபிடித்து வருகிறேன். நாற்பது, ஐம்பது கவிதைகள்
கொண்ட ஒரு தொகுதியில் பத்து கவிதைகள் சிறப்பானவையாக இருந்தால் போதும், அதை ஒரு நல்ல
தொகுதி என்று சொல்வதில் எனக்கு எந்தத் தடையும் இல்லை. ஐந்து கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பு
கிடைத்தால், அதை ஒரு நல்ல முயற்சி என்றும் சொல்வேன். அதைக்கூட என் வாசிப்பில் கண்டுபிடிக்க
முடியாமல் போகிற நிலையில்தான் என் மனம் ஏமாற்றமடைகிறது. கவிதை பற்றிய ஒரு தெளிவு கவிஞர்களிடம்
இல்லை என்பதை அவர்களுடைய வரிகள் உணர்த்திவிடுகின்றன.
ஒரு கவிதை எப்போது நல்ல கவிதையாக
அமையும் என்னும் கேள்விக்கு ஒவ்வொரு சங்கப்பாடலும் சான்றாக உள்ளது. அதுவே நமக்கு அளவுகோல்.
அதன் சுருக்கம், நுட்பம், எளிமை, அழகு, ஆழம் ஒவ்வொன்றையும் மீண்டும்மீண்டும் படித்தறிய
வேண்டிய ஒன்று. சங்கப்பாடல்களின் நுட்பத்தையும் அழகையும் விவரிக்கும் மிகச்சிறந்த கட்டுரைத்தொகுதிகள்
இன்று படிக்கக் கிடைக்கின்றன. அவற்றைப் படிப்பதை ஒரு நல்ல வாய்ப்பு என்றே சொல்வேன்.
தன்னிச்சையான ஒரு தொடக்கம், சுதந்திரமான ஒரு பயணம், பிறகு எங்கோ ஒரு புள்ளியில் ஏதோ
ஒன்றைக் கண்டடைந்து நிற்கும் துல்லியம் என்னும் கவிதையின் வடிவம் ஒவ்வொரு கவிதையிலும்
விதம்விதமாக சாத்தியப்பட்டிருக்கும் பலநூறு எடுத்துக்காட்டுகளை அந்நூல்கள் வழியாக நாம்
அறிந்துகொள்ளமுடியும். ஒருவேளை, சங்கப்பாடலை அணுகுவதற்கு அதன் மொழி தடையாக இருக்குமெனில்
இளம்கவிஞர்கள் பாரதியாரின் பாடல்களை நெருக்கமுடன் வாசித்துப் பார்க்கலாம். நம் நூற்றாண்டின்
மகத்தான ஆளுமை அவர். எந்தப் பொருளைப்பற்றியும் எழுதலாம் என்னும் எண்ணம் உள்ள அவர், ‘மனைத்தலைவிக்கு வாழ்த்து’ என்னும் கவிதையில்
கவிதைக்குரிய இலக்கணம் என்னும் தோற்றம் தரக்கூடிய ஓர் எளிய வரையறையை வகுத்திருக்கிறார்.
‘உயிரிலாச் செய்திகட்கு உயிர்மிகக் கொடுத்து ஒளியிலாச் செய்திக்கு ஒளியருள் புரிந்து’
என்னும் வரிகளில் மண்மீது உள்ள எதைப்பற்றியும் எழுதலாம் என்கிற உத்வேகத்தை அவர் ஊட்டுவதைக்
கவனிக்கலாம். தொடர்ந்து எழுதிச் செல்லும் பாரதியார் ‘அனைத்தையும் ஆங்கே அழகுறச் செய்து
இலெளகிக வாழ்க்கையின் பொருளினை இணைக்கும்’ சக்தி கவிதைக்குள் சுடர்விட வேண்டும் என்னும்
விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறார். இந்த இணைப்பு உருவாகும்போதே அது கவிதையாக எழுச்சியுறும்.
அது இல்லாத வரிகள் வெறுமையாகவே எஞ்சிவிடும். அந்த இணைப்பை உருவாக்குவதுதான் ஒவ்வொரு
கவிஞனும் சந்திக்கவேண்டிய முக்கிய சவால்.
தமிழின் மிகச்சிறந்த கவிஞர்கள்
அனைவரும் இந்த இணைப்பை வலிமையுடன் உருவாக்கியவர்கள். பிரமிள், நகுலன், வைத்தீஸ்வரன்,
ஞானக்கூத்தன், பசுவையா, கல்யாண்ஜி, கலாப்ரியா, தேவதேவன், தேவதச்சன், சுகுமாரன், விக்கிரமாதித்யன்,
இரா.மீனாட்சி, மனுஷ்யபுத்திரன், மாலதி மைத்ரி ஆகிய அனைவருடைய கவிதைப்பட்டியல்களிலும் இந்த இணைப்பைச்
சாதித்த கவிதைகள் இருப்பதை வாசித்துணர முடியும். இந்த இணைப்பு என்பது ஒரு கலை. இது
பழக்கத்தால் வரக்கூடிய தொழில்நுட்பக்கலை அல்ல. நெஞ்சில் மூண்டெரியும் சுடர்.
கவிதைகளில் என்னைக் கவரும் அம்சம்
இந்தச் சுடர். இதை எழுதும் இக்கணத்தில் என் மனத்தில் ‘நண்பா, அவள் எந்தச் சுவரில் எந்தச்
சித்திரத்தைத் தேடுகிறாள்’ என்னும் நகுலனின்
கவிதை வரியொன்று மிதந்தலைகிறது. கண் தெரியாத ஒரு மூதாட்டி தன்னைப் பார்க்க வரும் மகனை
அருகில் வந்து அமரும்படி அழைத்து, அவன் முகத்தையும் கையையும் கழுத்தையும் தொட்டுத்
தடவி அவன் உருவத்தை உணர்ந்து உவகையுறுவதை அருகிலிருந்து கவனிக்கும் நண்பன் அந்த வரிகளை
நினைக்கிறான். அந்த மூதாட்டியைப்போலவே ஒவ்வொரு கவிதையையும் என் விழிகள் அந்தச் சுடருக்காக
தொட்டுத்தொட்டுப் படர்கின்றன.
சமீப காலத்தில் நான் படித்த
புதிய கவிஞர்களின் தொகுப்புவரிசையில் திலகனின் ’புலனுதிர் காலம்’ முக்கியமானது. மொழியை கச்சிதமாகவும் லாவகமாகவும் ஆற்றலோடும்
பயன்படுத்துவதில் திலகன் பெற்றிருக்கும் தேர்ச்சி குறிப்பிடத்தக்கது. ’சிரிப்பூட்டும்
மிருகம்’ இத்தொகுதியில் உள்ள முக்கியமான கவிதைகளில் ஒன்று.
குரங்கொன்று
திடுக்கிட்டு பார்ப்பதுபோல
நடிக்கிறேன் நான்
கலகலவென்று சிரிக்கிறாள்
அந்தச் சின்னஞ்சிறுமி
பட்டாம்பூச்சி போல
உயரே உயரே பறக்கும் அவள் மனதை
குரங்கைப்போல தாவித்தாவி
துரத்துகிறேன் நான்
அதற்கும் அவள்
கெக்கலித்துக் கொண்டிருக்கிறாள்
பரிணாமத்தில் மேலும் மேலும்
என்னைப் பின்னோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கிறது
அவளது சிரிப்பொலி
மனித உருவுக்குள்
நான் மீண்டும் நுழைய
வெகுநேரம் என்னை அவள்
அனுமதிக்கவில்லை
சலிப்பூட்டும் மனிதனாக இருப்பதைவிட
சிரிப்பூட்டும் மிருகமாக
இருந்துவிடவே
விரும்புகிறேன் நானும்
ஒரு சிறுமியையும் அவளுக்கு விளையாட்டு
காட்டும் ஓர் இளைஞனையும் பாத்திரங்களாகக் கொண்டிருக்கும் இக்கவிதை ஒரு விளையாட்டுபோலத்
தொடங்குகிறது. குழந்தையைச் சிரிக்க வைக்க,
இளைஞன் குரங்குபோல நடிக்கத் தொடங்குகிறான். அவள் சிரிக்கச்சிரிக்க அவன் தன் நடிப்பில்
கூர்மையை ஏற்றிக்கொண்டே போகிறான். ஒரு தருணத்தில் அசலான குரங்குபோலவே அவன் மாறிவிடுகிறான்.
அவள் சிரிப்பு நீடித்திருக்க, அவன் குரங்காகவே நீடித்திருக்கிறான். அக்கணத்தில் மெல்லமெல்ல
அவன் மனநிலையும் மாறுகிறது. சலிப்பூட்டும் மனிதனாக இருப்பதைவிட சிரிப்பூட்டும் குரங்காக
இருக்கும் விழைவு உருவாகிறது. தற்செயலான ஒரு வாழ்க்கைச்சித்திரம் இது. நாம் அனைவருமே
நம் வீட்டில் இப்படி குரங்காக நடித்து வீட்டில் உள்ளவர்களைச் சிரிக்கவைத்திருப்போம்.
வாழ்க்கையிலிருந்து அச்சித்திரத்தைத் தனியாக துண்டித்து ஒரு கவிதையாக தீட்டிவைத்திருப்பதைப்
படிக்கும்போது, அது மானுட வாழ்க்கையை ஏதோ ஒரு கோணத்தில் மதிப்பிட முயற்சி செய்வதைக்
கண்டுபிடித்துவிட முடிகிறது. யார்யாரையெல்லாம்
நாம் சிரிக்கவைக்க முயற்சி செய்கிறோம் என்று கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினால், கவிதையின்
உலகம் விரிவுகொள்வதை உணர்ந்துகொள்ளமுடியும். அம்மாவை, அப்பாவை, காதலியை, நண்பனை, உறவினர்களை,
அதிகாரியை என ஏராளமானவர்களை நாம் நம் மனம்மட்டுமே அறியக்கூடிய காரணங்களுக்காக சிரிக்கவைக்க
விரும்புகிறோம். அதற்காக நாம் போடும் புனைவுகள் கணக்கிலடங்காது. குரங்குவேடம் ஒரு சின்ன
எடுத்துக்காட்டுதான். நரியாக, நாயாக, பூனையாக, காக்கையாக, பன்றியாக நாம் போடும் வேடங்களுக்கு
கணக்கே இல்லை. இறுதியில் ஒரு கேள்வி எஞ்சுவதைப் பார்க்கலாம். நம் வேடங்கள் நமக்கு முன்னால்
இருப்பவர்களுக்காகவா, அல்லது உண்மையிலேயே நமக்காகவா? ஒவ்வொருவரும் தன் நெஞ்சைத் தொட்டுச்
சொல்லும் பதிலில் எழுதமுடியாத ஆயிரம் கவிதைகள் துயில்கொண்டிருப்பதை உணரமுடியும்.
ந.பெரியசாமி எழுதிய ’தோட்டாக்கள் பாயும் வெளி’யும் முக்கியமானதொரு
தொகுதி. இத்தொகுதியில் ’நிலையானது’ நல்ல வாசிப்பனுவத்தை வழங்கிய கவிதை.
இதுவும் ஒரு விளையாட்டுச் சித்திரம். மனத்தின் விசித்திரத்தைக் காட்டும் சித்திரம்.
அந்தி வேளையில்
விளையாடிக்
கொண்டிருந்தனர் சிறார்கள்
தன்னிடமிருந்த
சாக்பீசால் ஒருவன்
நிறைய கட்டங்களை
வரைந்தான்
சிறுமி ஒரு
கட்டத்துள்
தாமரை வரைந்தாள்
மற்றவள் வேறொன்றில்
சூரியகாந்திப்
பூ
அடுத்தடுத்து வந்தவர்கள்
மாதுளை கொய்யா
மாங்காயென
கட்டங்களை நிரப்பினர்
திடுமென கோடுகள்
மறைந்து
வரைந்தவைகளை
கட்டங்கள்
உயிர்ப்பிக்கச்
செய்தன
தெருவில் மின்சாரம்
பூக்கச் சிரித்து
அவரவர்களுக்கானதை
எடுத்துக் கலைந்தனர்
எனக்கானதை நிரப்ப
கட்டங்களற்று
வெறிச்சோடிப்
போனேன்
குழந்தைமனம் ஆசைப்பட்டதெல்லாம்
நடக்கிறது. பெரியவர்களுக்கு எதன்மீது ஆசைப்படுவது என்றே தெரியவில்லை. அல்லது எந்த ஆசையை
முதலில் முன்வைப்பது என்றும் புரியவில்லை. குழப்பம் கொள்கிறார்கள். தடுமாறுகிறார்கள்.
தெளிவு பிறக்கும் சமயம், நிறைவேற்றிக்கொள்வதற்கான வழிகள் என எதுவுமே இல்லை. கவிதையில் ஒரு விஷயம் தெளிவாக
இருப்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது கட்டங்களில் தமக்குப் பிடித்ததை வரையும்போது,
குழந்தைகள் மனத்தில் ஆசை மட்டுமே உள்ளதே தவிர, இது நடக்கும் அல்லது நடக்கவேண்டும் என்கிற
விழைவோ எதிர்பார்ப்போ எதுவுமே இல்லை. ஆசை ஒரு தூய உணர்வாக மட்டுமே உள்ளது. ஆனந்தமாக
இருப்பதற்காகவே ஆசைப்படுகிறார்கள். தற்செயலாக அந்த ஆசைகள் நிஜமாகின்றன. அது அவர்கள்
ஆனந்தத்தை இன்னும் பலமடங்காக்குகிறது. வேடிக்கை பார்க்கும் பெரியவர் குழந்தையோடு குழந்தையாகச்
சென்று தனது ஆசையையும் வரைந்து வைத்திருக்கலாம். அதற்கு எந்தக் குழந்தையும் தடை சொல்லப்
போவதில்லை. மாறாக, அவர் அக்குழந்தைகளோடு சேர்ந்துகொள்வதைத் தவிர்க்கிறார். ஏதோ கூச்சம்
அல்லது இது விளையாட்டுதானே என்கிற எண்ணம் அவரைத் தடுத்துவிட்டது. குழந்தைகளின் ஆசைகள்
நிறைவேறிவிட்டதை கண்ணாரப் பார்க்கும் கணத்தில், அவருக்கு அது உறுத்தலாக இருக்கிறது.
ஏமாந்துவிட்டோமோ என எண்ண வைக்கிறது. ஆனால் அப்போது அவர் வரைந்துவைக்க ஒரு கட்டமும்
இல்லை. காலமும் இல்லை. ஆசைக்குரியதை கற்பனை செய்துகொண்டாலும், அது தற்செயலாக நிலையான
பொருளாகிவிடுகிறது. கற்பனை என்பது குழந்தைமைக்கே உரிய குணமென்பதால், அப்படி விளையாட்டாக
ஆசைப்படுவதும் சாத்தியமாகிறது. குழந்தைமையைத் துறந்த மனம் நிலையானதின்மீது ஆசை கொள்கிறது.
ஆனால், விளையாட்டு ஆசைகளை அது விழைவதில்லை. விளையாட்டு ஆசை நிலையானதாக மாறிவிடும்போது,
ஒரு சின்ன துணுக்குறலுடன் வெறுமையில் உறைந்துபோவதை அதனால் தவிர்க்கமுடிவதில்லை. வாழ்க்கையில்
ஒருபோதும் பொருள் நிலையானதல்ல, குழந்தைமையே நிலையானது.
கவிஞர் வெ.மாதவன் அதிகன் வெளியிட்டிருக்கும்
முதல் தொகுதி ‘சர்க்கரைக்கடல்’. தேர்ந்தெடுத்த
காட்சிகளை சரியான சொற்கள்வழியாக தீட்டுக்காட்டும் ஆற்றலும் கவித்துவமும் மாதவனுக்கு
இருப்பதை, அவருடைய கவிதைகளை வாசிக்கும்போது உணரமுடிகிறது. தொகுப்பில் மிகச்சிறந்த கவிதைகளில்
ஒன்று ‘குறையொன்றுமில்லை’
நவீன ஓவியமாய் குழம்பிக்கிடக்கும்
நகரில்
அரிதாரம் பூசிக்கொண்டு
அவதரித்த குரங்குமனிதன்
தன் மார்பைப் பிளந்து
அண்ணலையும் அவளையும் சாட்சியாய்க்
காட்டியவாறு
நகரின் மைய வீதிகளில் சுற்றி
வருகிறான்
அவன் கிண்ணத்தில் விழும் சில்லறை
ஒலி
கிஷ்கிந்தையின் கனவைத் தூண்டிவிடுகிறது
நாள்முழுக்க சுற்றிச் சோர்ந்து
போனவன்
அந்தியின் அண்ணலின் கோவிலில்
நுழைகையில்
அன்றும் பாத்திரத்தை வழித்தெடுத்த
கடைசிப் பிரசாதமே கிட்டியது
பசிப்பிணி தாங்காது
அவனுக்குள்ளிருந்து குதித்து
ஓடிய
குரங்கினை உள்ளிழுக்க முடியாது
பிரகாரத்தின் நடைபாதையில்
கண்மங்கச் சுழன்று சாய்கிறான்
காற்றில் இதமாய்ப் பரவுகிறது
குறையொன்றுமில்லை மறைமூர்த்திக்
கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
மயங்கிச் சரிவது கலைஞனல்ல. வற்றிப்போன
மானுடக்கருணையின் வீழ்ச்சி. மானுடகுலம் கலையின் முக்கியத்துவத்தை உணராத நிலையில்கூட,
கலை மீண்டும்மீண்டும் ஆற்றலோடு முளைத்தெழுந்து
தன்னை நிறுவி நிலைநிறுத்தியபடியே இருக்கிறது. செத்த பின்பு சிலைவைத்துப் பாராட்டும்
உலகம் உயிருடன் உலவும் கலையை உதாசீனத்தால் அழித்தபடியே இருக்கிறது. அழித்தலும் நிலைத்தலும்
ஓர் அலகிலா விளையாட்டாக காலம்தோறும் தொடர்கிறது.
‘குட்டி
ராட்டாந்தூரி’ என்னும்
தொகுதியை எழுதியிருக்கும் பொன்.இளவேனிலின் எழுத்தாற்றல் நிறைவளிக்கிறது. அவர் எழுதிய
கவிதைகளில் முக்கியமானதொரு கவிதை ‘இலைகள்’
இலைகள் துளிகூட அசையவில்லை
இந்த மாலை நேரம்
காற்றையே கூட காணோம்
எத்தனையோ சொற்களை
குரல்களை
அழுகைகளை
தேம்பல்களை
மிரட்டல்களை
கேட்டுக்கொண்டிருந்த பகல்களைத்
தொலைத்துவிட்டு
சிறுமரத்தின் இலைகள்
மெர்குரி விளக்கின் மஞ்சள் கறைகளோடு
தனித்துக் கிடக்கிறது மெளனத்துக்குள்
அதன் உடலை அசைக்க கொஞ்சம் காற்றேனும்
வரக்கூடாதா?
கொஞ்சம் ஆசுவாசமடையட்டும்
அதற்கு
இந்த அந்திப் பொழுதாவது துணைபுரிந்தால்
தேவலாம்தான்
அசையமுடியாமல் இறுகி காற்றின்
தீண்டலுக்காக ஏங்கி நிற்பது இலைகள் மட்டுமா? அன்புக்காக ஏங்கும் மனம், ஆதரவுக்காக ஏங்கும்
உலகம், ஒரு புன்னகையின் தீண்டலுக்காக காத்திருக்கும் மனம், ஒரு சின்ன அங்கீகாரத்துக்காக
காத்திருக்கும் மனம் எல்லாமே அந்த இலைகளின் வேறுவேறு வடிவங்கள் அல்லவா?
சுஜாதா செல்வராஜ் எழுதிய ‘காலங்களைக் கடந்து வருபவன்’ தொகுதியில் நினைத்துநினைத்து
அசைபோடத்தக்க சில கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. ’அதுவே’ ஒரு முக்கியமான கவிதை.
அத்தனை அசிரத்தையுடன்
நீ விட்டெறிந்து கடக்கும்
எச்சில் சிகரெட்டின்
துளி கங்கு
இவ்வனத்தையே பற்றி எரியவிடுகிறது
நீ நடந்துகொண்டிருக்கிறாய்
சடசடத்து எரியும்
பச்சையத்தின் கருகல்நெடி
உன் நாசி எட்டும்
தொலைவைத் தாண்டி
அழிவுக்குக் காரணமாக இருப்பவர்கள்
குற்ற உணர்ச்சியற்று இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய காலத்தின் மாபெரும் துயரம்.
இன்றைய உலகம் மெல்லமெல்ல குற்ற உணர்ச்சியற்றவர்களின் ஆதிக்கப் பிடியில் அகப்பட்டு அழிந்து
சாம்பலாவது ஒரு துயரம். குற்ற உணர்ச்சியுள்ளவர்கள் நாகரிகத்தின் பெயரால் ஒருவித இயலாமையோடு
அதைப் பார்த்தபடி பொருமிப்பொருமி ஒதுங்கிச் செல்வது, அதைவிட பெருந்துயரம். எளிய மக்களின்
துயரத்துக்கு பொருமலாக வெடிப்பதைத் தவிர வேறென்ன வடிகால் இருக்கமுடியும்.
ஏராளமான தொகுதிகள். எண்ணற்ற
கவிதைகள். அவற்றைச் சலித்துச்சலித்து, நெஞ்சில் மூண்டெரியும் சுடரினை அடையாளம் காட்டுகிற
புதிய கவிதைகளைக் கண்டடைவது என்பது சவாலும் சற்றே சலிப்பும் கலந்த வேலை. அந்தச் சலிப்பனைத்தும்
சுடர்மிக்க ஒரு வரியை, அழகான ஒரு சொல்லிணைவைக் கண்டதும் புகைபோலக் கரைந்து மறைந்துவிடுகிறது.