புறநானூற்றில் மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியை முன்வைத்து ஒளவையார் எழுதிய பத்து பாடல்கள் உள்ளன. எல்லாமே அதியமானின் புகழ், வீரம், வள்ளல் குணம் ஆகியவற்றை முன்வைத்து அவர் பாடியவை. அவற்றில் அதியமானுடைய வீரத்தை முன்வைத்து ஒளவையார் எழுதிய பாடல் மிகமுக்கியமானது.
அதியமானின்
வீரத்தை எதிரிகளுக்கு உணர்த்தும் நோக்கத்தோடு எழுதப்பட்ட பாடல் என்றபோதும், அதில் எந்த
இடத்திலும் அதியமானுடைய வாள்திறமையைப்பற்றியோ போரிடும் ஆற்றல் பற்றியோ ஒரு சொல் கூட
இல்லை. அதற்கு மாறாக, அதியமானுடைய தேரைப்பற்றிய ஓர் எளிமையான சித்திரத்தை மட்டுமே ஒளவையார்
குறிப்பிடுகிறார். அதுவும் ஒரே ஒரு குறிப்பு.
ஒரு நாளைக்கு
எட்டுத் தேர்களைச் செய்யும் ஆற்றலுடைய தச்சனொருவன் ஒரு மாத காலம் ஓய்வின்றி பாடுபட்டு
ஒரே ஒரு தேர்க்காலை மட்டுமே செய்து பூட்டிய
தேரை அதியமான் வைத்திருக்கிறான் என்பதுதான் அப்பாடல் வரிகளின் நேரடிப்பொருள்.
ஒரு தேரை உருவாக்குவதில் இந்த அளவுக்குக் கவனம் கொண்ட அரசன் உருவாக்கிய படையின் வலிமை
எப்படி இருக்கும் என்பதை நீயே கற்பனை செய்து பார்த்துக்கொள் என்பது அதன் மறைபொருள்.
நேரடிப்பொருள்
ஒன்றாகவும் மறைபொருள் வேறொன்றாகவும் அமையும்படி ஒரு படைப்பை எழுதுவது இலக்கியத்தில்
ஒரு வகைமையாக தொன்றுதொட்டு இருந்து வருகிறது. தோற்றத்தில் ஒன்றாகவும் ஆழத்தில் வேறொன்றாகவும்
இருப்பது இலக்கியத்தின் அழகுகளில் ஒன்று. தமிழில் மட்டுமல்ல, உலக மொழிகளில் உள்ள பேரிலக்கியங்கள்
அனைத்திலும் இந்த அழகைக் காணமுடியும்.
1945ஆம்
ஆண்டில் ஜார்ஜ் ஆர்வெல் என்னும் பிரிட்டானிய எழுத்தாளர் எழுதி வெளிவந்த விலங்குப்பண்ணை
என்னும் நாவல் உருவகத்தின் அடையாளமாக அமைந்த படைப்பு. சமகால அரசியல் சமூக விமர்சனங்களை
நேரிடையாக எந்த இடத்திலும் வெளிப்படுத்தாமல் படிப்பவர்கள் தாமாகவே உணர்ந்துகொள்ளும்
வண்ணம் ஆர்வெல் அதை எழுதினார். அந்த நாவல் தமிழில் க.நா.சு. அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு
வெளிவந்தது.
ஒரு விலங்குப்பண்ணையின்
முதலாளி ஒருநாள் மதுபோதையில் விலங்குகளுக்கு உணவு கொடுக்காமலேயே உறங்கிவிடுகிறார்.
அதனால் எல்லா விலங்குகளும் பன்றிகள் தலைமையில் எதிர்ப்புக்குரல் எழுப்புகின்றன. கோபம்
கொண்ட முதலாளி விலங்குகளைத் தாக்குகிறார். ஸ்னோபால், நெப்போலியன் என இரு பன்றிகள் தம்
வீரத்தால் அவரை வீழ்த்தி பண்ணையைக் கைப்பற்றிக்கொள்கின்றன. தொடக்கத்தில் எல்லாமே நன்றாகவே
இருக்கிறது. மெல்ல மெல்ல இரு தலைமைப்பன்றிகளுக்கிடையில் கருத்து வேறுபாடு எழுகிறது.
ஒரு பன்றியைத் திட்டமிட்டுக் கொல்லும் இரண்டாவது பன்றில் பண்ணையைத் தன் கட்டுப்பாட்டில்
வைத்துக்கொள்கிறது. எல்லாரும் சமம் என்று சொல்லி தொடங்கப்பட்ட அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக
ஒற்றைப்பன்றியின் சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறது. விடுதலைக்கனவோடு தொடங்கிய
ஒரு கலகம் இறுதியில் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராக மாறி நிறைவடைகிறது. எந்த இடத்திலும்
அரசியல் சூழலைப்பற்றிய சித்தரிப்புக்கே இடம்தராமல் எல்லாவற்றையும் வாசகர்கள் தாமாகவே
ஊகித்து அறிந்துகொள்ளும் வண்ணம் எழுதப்பட்ட இந்நாவல் இலக்கிய உலகில் முக்கியமான இடத்தைப்
பெற்றது.
ஓர் அணிந்துரையில்
இந்த அளவுக்கு விரிவான அறிமுகக்குறிப்பை எழுதுவதற்குக் காரணம் சோம.வள்ளியப்பனின் ’திட்டம்
எண் 6’ நாவலை வாசிக்கும் வாசகர்கள் அதன் உருவகத்தன்மையை உணராமல் போய்விடக் கூடாது என்பதுதான்.
இன்றைய நவீன சமூகத்தின் முக்கியமானதொரு பிரச்சினையை நேரிடையாக முன்வைக்காமல் வேறொரு
வடிவத்தில் முன்வைக்கிறது இந்த நாவல். அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட வடிவப்புதுமையே அந்த
நாவலுக்கு ஒரு வசீகரத்தை அளித்திருக்கிறது.
ஒரு பெரிய
நிறுவனத்தில் முக்கியப்பொறுப்புகளை வகிக்கும் நிர்வாகிகள் கூடி ஒரு ‘ப்ராஜெக்ட்’ பற்றி
விவாதிக்கும் மேலாண்மைக்கூட்டத்தின் தன்மையை பெரும்பாலானோர் அறிந்திருக்கக்கூடும்.
அந்தக் கட்டமைப்பில் நாவலை எழுதியிருக்கிறார்
வள்ளியப்பன். கூட்டம் தொடங்கியதும் நோக்கவுரை, சாதனைகள், தோல்விகள், சூழலில் அமைந்திருக்கும்
சாதகங்கள், பாதகங்கள், எதிர்விளைவுகள், சறுக்கல்கள், தோல்விகள் என அனைத்தையும் அந்தந்தத்
துறையின் பொறுப்பாளர்கள் விரிவான அறிக்கையை
முன்வைக்கிறார்கள். பிறகு பங்கேற்பாளர்கள் தரப்பிலிருந்து முக்கியமான சிலர் அவற்றைச்
சார்ந்து தம் கருத்துகளை முன்வைக்கிறார்கள். விரிவான முன்னுரையைப்போலவே விரிவான விவாதங்களும்
நிகழ்கின்றன. இறுதியில் நிறுவனத்தின் தலைவர்
தொடக்கத்தில் தாம் கொண்டிருந்த கனவுகளையும் இறுதியில் தாம் அடைந்திருக்கும்
கவலைகளையும் இணைத்துத் தொகுப்புரையை வழங்குகிறார். அத்துடன் கூட்டம் முடிவடைகிறது.
கூட்டத்தின் வெவ்வேறு கட்டங்கள் பத்து அத்தியாயங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
உயிர்களைப்
படைத்து உலகை உருவாக்கிய இறைவன் புல், பூண்டு,
செடி, கொடி, மரம், மலை, ஆறு, காடு, விலங்குகளைத் தொடர்ந்து ஆறறிவு கொண்ட மனித உயிர்களையும்
படைத்தார். ஆறாம் அறிவைச் சிறப்பறிவாகக் கொண்ட மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முதிர்ச்சியடைந்து
தன் தேவைகளைத் தானே நிறைவு செய்துகொள்கிறார்கள்.
அறிவு
அவர்களை ஆக்கவழியிலேயே செலுத்த முனைகிறது.
மனிதர்கள் தம்மைவிட குறைவான அறிவுள்ள இனங்களோடு இணைந்து ஒற்றுமையாக வாழ்வதைக்
கண்குளிரப் பார்க்கவேண்டும் என்பதுதான் இறைவனின் திட்டம். அத்திட்டத்தை எல்லா விதங்களிலும்
வெற்றிகரமாக நிறைவேற்றும் பொறுப்பை அவர் பல பிரிவினருக்குப் பிரித்தளித்திருக்கிறார்.
அவர்கள் அனைவரோடும் கூடி விவாதிக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு கூட்டத்தை நடத்தி
விவரங்களைச் சேகரித்துக்கொள்கிறார். தன் திட்டத்தைப்பற்றி சுயமதிப்பீடு செய்துகொள்ள இந்த விவரங்கள் அவருக்குத் தேவையாக இருக்கின்றன.
ஆறாம் அறிவின் விளைவாக பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியாக பல பயன்களைப் பெற்று வாழ்கிற
மனிதகுலம் செயற்கை நுண்ணறிவு தொடர்பான மோகம் பெருகிவரும் சூழலை எப்படி எதிர்கொள்கிறது
என்பதைத் தெரிந்துகொள்ள ஆவல் கொள்கிறார் இறைவன்.
அதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மாதாந்திரக்கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.
அக்காட்சிகளையும் உரையாடல்களையும் இந்த நாவலின் உள்ளடக்கமாக அமைத்திருக்கிறார் வள்ளியப்பன்.
மனித
அறிவு பல முன்னேற்றங்களைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. அதே சமயத்தில் மனிதனின் உணர்வுகள்
பல நேரங்களில் முன்னேற்றத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. அறிவுவசப்பட்டவர்களாக
இருந்தாலும் உணர்வுவசப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களுடைய தன்னலம் மானுட குலத்தை அழிவுப்பாதைக்கே
அழைத்துச் செல்கிறது. தன் சுகம், தன் முன்னேற்றம், தன் உயர்வு போன்ற எண்ணங்கள் மானுட
குலத்தை ஆட்டிப் படைக்கிறது. அப்பெருங்கூட்டத்திலிருந்து பொதுநலம் சார்ந்த மனிதர்களைப்
பிரித்தெடுப்பது எளிய செயலில்லை. ஆறாம் அறிவின் வழியாக மானுடகுலம் அடைந்ததென்ன, அவர்களின்
செல்திசை என்ன என்பதையெல்லாம் விரிவான விவாதங்கள் வழியாக ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பானவர்கள்
சான்றுகளோடு உரையாற்றுகிறார்கள்.
ஒரு முக்கியமான
மேலாண்மைக்கூட்டத்தின் நிகழ்ச்சிக்குறிப்புகளின் (மினிட்ஸ்) சாயலில் இந்த நாவலை எழுதியிருக்கிறார்
வள்ளியப்பன். முப்பெரும் தொழில்களைச் செய்யும் கடவுளரை ஒரு மாபெரும் நிறுவனத்தின் உற்பத்திப்பிரிவு,
பராமரிப்புப்பிரிவு, மறுசீரமைப்புப்பிரிவு என வெவ்வேறு பிரிவுகளின் தலைமைப்பொறுப்பில்
இருப்பவர்களாக உருவகித்திருக்கிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, இலட்சுமி, எமன்
அனைவருமே பிரம், சிவ், மகா, சரஸ், லகஷ், காலன் என சுவாரசியமான நவீன பெயர்களோடு நாவலில்
இடம்பெற்றிருக்கிறார்கள்.
செயற்கை
நுண்ணறிவை பெரும் வெற்றி என எண்ணுகிறவர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியை அடிக்கிறது இந்த
நாவல். செயற்கை நுண்ணறிவின் வழியாக தன் தேவைகளை நிறைவு செய்துகொள்ளத் தொடங்கும் மனிதகுலம்
மெல்ல மெல்ல எதையுமே செய்யும் திறனற்றவர்களாக மாறும் ஆபத்து உருவாகும். செய்வதற்கு
ஏதுமில்லாதவர்கள் சுயத்தை இழப்பார்கள். ஒரு கட்டத்தில் செயலின்மையின் விளைவாக செயலே
மறந்து போகும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எப்படிச் செய்வது என்பதே தெரியாமல் போகும்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கற்றுத் தேர்ந்து அடைந்த தெளிவும் ஞானமும் அப்படியே தடமின்றி
உதிர்ந்துபோகும். காய்கறிகளுக்கும் மனிதர்களுக்கும் வேறுபாடு இல்லாத சூழல் ஏற்பட்டுவிடும்.
ஆறாம்
அறிவு இன்று மனிதகுலத்தைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிற இடம் மிகமிக ஆபத்தான புள்ளி.
இங்கிருந்து நாம் எப்படித் திரும்பிச் செல்லப் போகிறோம் அல்லது எப்படித் தப்பிக்கப்
போகிறோம் என்பது பற்றி இனிமேலும் யோசிக்காமல் நாம் வாழமுடியாது. நாவல் அதைப்பற்றிய
கவலையைத்தான் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது.
ஓர் அங்கத
நாடகத்தின் வேடிக்கையான காட்சியைப்போல நாவல் தொடங்கினாலும், அடுத்தடுத்த அத்தியாயத்தில்
மனிதகுலம் எதிர்கொண்டிருக்கும் ஒரு முக்கியமானதொரு நெருக்கடி சார்ந்த சிந்தனைகளை வெவ்வேறு
கோணங்களிலிருந்து முன்வைத்தபடி நகர்கிறது நாவல். ஒற்றைக்குரலாக இல்லாமல் பல குரல்களின்
தொகுப்பாக இந்நாவல் அமைந்திருப்பது ஒரு முக்கியமான சிறப்பு. ஓர் எச்சரிக்கைக்குரலாக
அமைந்திருக்கும் இந்நாவலை எழுதியிருக்கும் சோம.வள்ளியப்பனுக்கு வாழ்த்துகள்.
(2026 புத்தகக்கண்காட்சியை ஒட்டி சிநேகா பதிப்பகம்
வழியாக வெளிவந்திருக்கும் சோம.வள்ளியப்பனின் ‘திட்டம் – 6’ என்னும் நாவலுக்கு எழுதிய
அணிந்துரை)