எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் திபெத்தில் நிகழ்ந்த சீனாவின் அத்துமீறலைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வந்தவர் தலாய்லாமா. அன்றுமுதல் வடமாநிலமான இமாசலப்பிரதேசத்தில் தர்மசாலா என்னும் இடத்தில் வசித்துவருகிறார். திபெத்தின் மீதான சீனாவின் மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர அவர் முன்னெடுத்த அகிம்சை வழி செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில் 1989ஆம் ஆண்டில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. புத்தாயிரத்தாண்டு தொடக்கத்தில் அவர் தனது அரசியலதிகாரத்தைத் துறந்துவிட்டு ஜனநாயக முறையிலான தலைமைக்கு வழிவகுத்தார்.
மனிதகுலத்தின் கடமைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பே மிகமுக்கியமானது என்பது அவருடைய முதன்மையான கருத்து. அவர் குறிப்பிடும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நம் வாழிடங்களைச் சுற்றியுள்ள இயற்கையைப் பாதுகாப்பதை மட்டும் குறிப்பதாக நாம் சுருக்கிப் பார்த்துவிடக் கூடாது. நம்மைச் சுற்றி வாழும் விலங்குகள், பறவையினங்கள், பூச்சியினங்கள் என பிற உயிர்களைப் பாதுகாப்பது கூட நம் கடமை என்பதே அக்கூற்றின் உண்மைப்பொருள்.
‘உள்ளங்களின்
உரையாடல்’ என்னும் நூலில் தலாய்லாமா இக்கருத்தைத் தெளிவாக குறிப்பிடுகிறார். நீளமான
கட்டுரைகளோ அல்லது உரைகளோ அந்த நூலில் இல்லை. தன் மனத்தில் அவ்வப்போது தோன்றும் எண்ணச்
சிதறல்களின் தொகுப்பாகவே அந்த நூலின் அமைப்பு உள்ளது. கவித்துவம் நிறைந்த அந்தச் சின்னச்சின்ன
வாக்கியங்கள் படித்த கணத்திலேயே நெஞ்சில் பதிந்துவிடுபவையாக உள்ளன. அந்த வாக்கியத்துக்கு
இசைவாக ஒவ்வொரு பக்கத்திலும் வண்ணவண்ண கோட்டோவியங்கள் இடம்பெற்று வாசிப்பின் ஆர்வத்தை
அதிகரிக்கின்றன.
நூலின்
தொடக்கப்பகுதியில் இடம்பெற்றிருக்கும் ஓவியங்களில் ஆஸ்திரேலியாவின் டெய்ன்ட்ரீ மழைக்காடு,
அமெரிக்காவின் சியெர்ரா தேசியக்காடு, பிரேசிலின் அமேசான் மழைக்காடு, திபெத்தின் மூங்கில்
காடு என பல காடுகளின் காட்சிகள் தொடர்ச்சியாகத் தீட்டப்பட்டுள்ளன. அக்காடுகளின் ஊடே
விளையாடிக் களித்தபடி ஒரு நாய்க்குட்டியின் உடலமைப்பைக் கொண்ட ஒரு விலங்கு தாவிக் குதித்தபடி
வருகிறது. பிறகு பனிபடர்ந்த மலைகளைத் தாண்டி இமாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த தர்மசாலா
காட்டையொட்டி அமைந்திருக்கும் ஒரு கட்டடத்தின் முன்னால் வந்து நிற்கிறது. சாத்தப்பட்டிருக்கும்
வீட்டுக்குள் தலாய்லாமா அமர்ந்திருக்கிறார். தட்தட் என கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது.
அவர் வெளியே சென்று கதவைத் திறந்து பார்க்கிறார். அங்கே அவரிடம் எதையோ முறையிடுவதற்கு
வந்ததுபோல அந்தக் குட்டி நின்றுகொண்டிருக்கிறது. அவர் அதை வரவேற்று அழைத்துச் செல்கிறார்.
அடுத்தடுத்த ஓவியங்களில் இருவரும் உரையாடியபடி நடப்பதுபோன்ற ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
அந்த நாய்க்குட்டியை மனிதகுலத்தின் படிமமாக அல்லது பாதுகாப்பு கோரும் பிற இனங்களின்
படிமமாக விரித்தெடுத்துக்கொண்டால், ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு வாக்கியமும் பொருள்பொதிந்ததாக
மாறுகிறது.
களைப்பைப்
போக்கிக்கொள்ள ஒரு மரத்தோடு ஆதரவாகச் சாய்ந்திருக்கும் வேளையில்தான் புத்தரின் தாய்
புத்தரை ஈன்றெடுத்தார். பிறகு புத்தர் வளர்ந்து பெரியவராகி வீட்டைத் துறந்து வெளியேறி
அலைந்து திரிந்து தன் அம்மாவைப்போலவே ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த வேளையில்தான் அவர்
ஞானத்தை அடைந்தார். இறுதியாக, தன் தலைக்கு மேலே நின்றிருக்கும் மரங்கள் பார்த்திருக்க,
இவ்வுலகைவிட்டு நீங்கினார். அச்சொற்சித்திரத்தை புத்தருக்கும் மரத்துக்கும் இடையிலான
நெருக்கமாக மட்டும் நாம் பார்த்துவிடக் கூடாது. அது மானுடகுலத்துக்கும் மரங்களுக்கும்
இடையிலான பிரிக்கமுடியாத உறவின் சித்திரமாகப் பார்க்கவேண்டும். அந்த எண்ணத்தில்தான்
அவர் ‘நமக்கும் தாவரங்கள் மற்றும் இயற்கைக்கும் இடையிலான உறவு ஆய்ந்தறிய முடியாத அளவுக்குப்
பழமையும் ஆழமும் கொண்டதாகும்’ என்று மற்றொரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
நம் வாழ்க்கையைக்
கட்டமைத்துக்கொள்ளும் வேகத்தில் தெரிந்தும் தெரியாமலும் ஒவ்வொரு நாளும் நாம் பிற உயிரனங்களுக்குத்
துன்பத்தை அளித்துக்கொண்டே இருக்கிறோம். அவற்றுக்கும் இம்மண்ணில் வாழும் உரிமை உள்ளது
என்னும் எளிய உண்மையை மனிதர்கள் மறந்துவிடுகிறார்கள். இந்த உலகத்தை ஆளப் பிறந்தவர்களாக
தம்மை நினைத்துக்கொள்கிறார்கள். ஆதலால் தம் வாழிடத்தைப் பெருக்கிக்கொள்வதற்காக, அவற்றின்
வாழிடத்தை ஆக்கிரமிக்கத் தொடங்குகிறார்கள். பிற உயிரினங்களைவிட, மனிதர்களுக்கே உலகத்தை
அழிக்கும் ஆற்றல் அமைந்துள்ளது. அந்த வேதனையின் வெளிப்பாடாகவே அவர் ஓரிடத்தில் ‘ஒருநாள்
விலங்கினங்கள் முன் மனிதர்கள் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கவேண்டிய தருணம் வரும்’ என்று
பதிவு செய்திருக்கிறார். அனைவரோடும் அனைத்து உயிரினங்களோடும் இணைந்திருக்கும் ஒரு புரிந்துணர்வோடு
வாழ்வதே மனிதகுலத்தின் லட்சியமாக இருக்கவேண்டும். இதையொட்டி சிந்திக்கும் போக்கில்,
‘இந்த உலகத்தில் பிறர் அனைவரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்னும் பெருங்கனவுதான் எல்லா
வகையான மகிழ்ச்சிக்கும் ஊற்றுக்கண்ணாகும். அதே சமயத்தில் தான் மட்டுமே மகிழ்ச்சியாக
இருக்கவேண்டும் என்னும் விழைவுதான் இவ்வுலகின் எல்லா வகையான துன்பத்துக்கும் ஊற்றுக்கண்ணாகும்’
என்னும் சாந்திதேவரின் கூற்று பொருத்தமான விதத்தில் எடுத்தாளப்பட்டிருக்கிறது.
இந்தப்
பிரபஞ்சத்தில் நாம் அனைவருமே ஒருவரோடொருவர் இணைந்துள்ளோம். அதிலிருந்து நம் அனைவருக்கும்
ஒரு பிரபஞ்சக்கடமை உருவாகிறது. இந்த உலகிலுள்ள மனித இனமும் பிற உயிரினங்களும் தமக்கே
உரிய தனித்துவமான வழியில் இந்த உலகத்தின் செழுமைக்கும் மேன்மைக்கும் பங்களிப்பைச் செலுத்துகின்றன.
மகிழ்ச்சியான உலகத்தை உருவாக்கும் பணியில் நம் நலனில் நாம் அக்கறை கொள்வதோடு மட்டுமன்றி
பிறர் நலனிலும் நாம் அக்கறை செலுத்துவது மிகமுக்கியமான பங்கை வகிக்கிறது. அந்தக் கருணையும்
பரிவும் மிகமிக முக்கியம். துரதிருஷ்டவசமாக அனைவரும் அக்குணங்களை இழந்து நிற்கிறார்கள்.
அந்தக் குறிப்பைப் படிக்கும்போது மனிதகுலத்தின் தன்னலத்தை அவர் சுட்டிக்காட்டுவதைப்
புரிந்துகொள்ள முடிந்தது.
‘சாத்தியப்படும்பொழுதெல்லாம்
கனிவுடன் இரு. அது எப்போதும் சாத்தியமானதே’ என்பதை அவருடைய ஆப்தவாக்கியமாக எடுத்துக்கொள்ளலாம்.
அன்பும் பற்றும் கருணையும் பரிவும் நிறைந்திருக்கும் உள்ளம் இயல்பாகவே முழுமைச்செயல்பாட்டில்
ஈடுபாடு கொண்டு இயங்கிக்கொண்டே இருக்கிறது. நம் செயல்பாடுகள் விரிவும் ஆழமும் கொண்டதாக
மாறமாற, வளமான எதிர்காலமும் உருவாகும் என நாம்
நம்பிக்கை கொள்ளலாம். இப்படி நூல்முழுதும் ஏராளமான சிந்தனைத்துளிகள் மிக அழகாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இந்நூலில்
இடம்பெற்றிருக்கும் வண்ணக் கோட்டோவியங்களைப்போலவே, வாக்கியங்களின் மொழிபெயர்ப்பும்
நன்றாக அமைந்துள்ளது. செவ்வலகுக் காக்கை, கருங்கழுத்துக் கொக்கு, காட்டுக்கழுதை, தாடிக்கழுகு,
நீள்செவி ஆந்தை, மலைநரி என இதுவரை நாம் அறியாத பல விலங்குகளின் பெயர்களும் சித்திரங்களும்
மீண்டும் மீண்டும் இந்நூலில் இடம்பெற்று நம்மிடையே வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
நாம் வாழும் சமநிலப்பகுதிகளில் இல்லாதவை இவ்விலங்குகள். அதனாலேயே அவற்றின் தோற்றமும்
அசைவுகளும் வசீகரமாக உள்ளன.
இந்நூலை
மிகச்சிறந்த தரத்தோடு வெளியிட்டுள்ள தன்னறம் பதிப்பகத்துக்கு தமிழ் வாசகர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போது அந்தக் காலத்து ரஷ்யப்புத்தகத்தைப் புரட்டுவதுபோல
இருக்கிறது. அந்த அளவுக்கு புத்தகத்தின் வண்ணப்படங்கள் கண்ணுக்குக் குளிர்ச்சியாக வசீகரமாக
அமைந்துள்ளன. மூலநூலில் இருந்த பாட்ரிக் மெக்டோனெல்
ஓவியங்களே இப்புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளன. அருண்குமார் ஆண்டவன் மிகச்சிறப்பான மொழிபெயர்த்திருக்கிறார்.
புத்தகத்தை
வாசித்து முடித்ததும் ஒவ்வொரு வாசகரின் நெஞ்சிலும் ஓரிரு நொடிகளாவது ‘நாம் இந்த உலகத்தில்
வசிக்கும் பிற இனங்களின் மீது எந்த அளவுக்குப் பரிவோடும் கருணையோடும் இருக்கிறோம்’
என்றொரு கேள்வியும் அதையொட்டிய சிந்தனையும் உருவாவது உறுதி.
(உள்ளங்களின் உரையாடல். புனித தலாய்லாமா. தமிழாக்கம்:
அருண்குமார் ஆண்டவன். தன்னறம் நூல்வெளி, குக்கூ காட்டுப்பள்ளி, புளியானூர் கிராமம்,
சிங்காரப்பேட்டை-635307)
(புக் டே – இணையதளம் – 24.12.2025)
