எங்கள் பள்ளிக்கூட நாட்களை நினைக்கும்போதெல்லாம் என் நினைவுக்கு வரும் ஒரு பெயர் ராஜசேகர். என்னைவிட சற்றே உயரமானவன். நன்றாக மரம் ஏறுவான். அதைவிட நன்றாக கதைசொல்வான். நாங்கள் ஐந்தாறு பேர் எப்போதும் அவனையே சூழ்ந்திருப்போம். அவன் சொல்லும் கதைகளைக் கேட்கத் தொடங்கிவிட்டால் வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்பட்டதும் தெரியாது, வந்து சேர்ந்ததும் தெரியாது. நேரம் பறந்துவிடும். அவன் சொல்லும் கதைகள் அந்த அளவுக்கு சக்தி கொண்டவை.
”தூங்கும் நேரத்தில் மந்திரவாதியின் வாய் திறந்திருந்தது”
என்று அவன் சொல்லமாட்டான். மாறாக, கதையோடு கதையாக “சின்னதா ஒரு ஸ்டூல் போட்டு உக்காந்து
ரெண்டு கையாலயும் தினத்தந்தி பேப்பர விரிச்சி படிக்கலாம். அந்த அளவுக்கு அகலமா அவன்
வாய் திறந்திருந்தது” என்று அவன் சொல்வான். ”ஒருவர் செய்வதுபோல இன்னொருவருக்கு செய்ய
வராது” என்று சொல்லவேண்டிய இடத்தில் “மாடும் தவளையும் ஒரே கொளத்துல தண்ணி குடிச்சாலும்
மாடு கூட தவள போட்டி போடமுடியுமா?” என்று முழக்கி நீட்டுவான். கற்பனைக்காக ஒருகணமும் அவன் யோசித்ததே இல்லை. தானாகவே அருவி
மாதிரி இயற்கையாக அவனிடமிருந்து வெளிப்படும்.
ஒருநாள் வகுப்பறையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி எனக்கு நன்றாக
நினைவில் இருக்கிறது. அன்று திருத்தப்பட்ட கணக்குத்தேர்வுத் தாட்களை வகுப்பில் ஒவ்வொரு
மாணவரையும் பெயர்சொல்லி அழைத்து கொடுக்கத் தொடங்கினார் ஆசிரியர். ராஜசேகருடைய பெயர்
சொல்லப்பட்டதும் அவன் எழுந்து சென்று அவர் முன்னால் நின்றான். நூற்றுக்கு எழுபது என்று
சொன்னபடி அவனிடம் விடைத்தாளைக் கொடுத்தார் ஆசிரியர். என்னமோ நூறுமீட்டர் ஓட்டப்பந்தயத்தில்
முதலாவதாக வந்து வெற்றிக்கோப்பையைப் பெற்றுக்கொள்ளும் பெருமிதத்துடனும் புன்னகையுடனும்
அந்த விடைத்தாளைப் பெற்றுக்கொண்டான் ராஜசேகர்.
”இது என்னடா மார்க்கு, எப்ப பார்த்தாலும் எழுபது, அறுபது,
அறுபத்தஞ்சிதானா? எப்பதான்டா நூறு வாங்குவ?” என்று கேட்டார் ஆசிரியர். அதற்கு ராஜசேகர்
உற்சாகம் குன்றாத தன் குரலில் “முயற்சி செஞ்சிட்டேதான் இருக்கேன் சார். சீக்கிரமா வாங்கிக்காட்டறேன்
சார்” என்று பதில் சொன்னான். “அதான்டா எப்ப வாங்குவன்னு கேக்கறேன்?” என்று மீண்டும்
கேட்டார் ஆசிரியர். அக்கணமே அடக்கமாக மிக இயல்பான தொனியில் “நூறு லட்சியம் சார். எழுபது
நிச்சயம் சார்” என்றான். அதைக் கேட்டதும் ஒருகணம் ஆசிரியர் உறைந்து, பின் மீண்டு சிரிக்கத்
தொடங்கினார். சிரித்துச்சிரித்து அவர் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. கைக்குட்டையை
எடுத்து ஒருமுறை துடைத்துக்கொண்டார். அப்போதும் அவரால் சிரிப்பைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
புன்னகையுடன் அவன் தோளைத் தொட்டு தட்டிக்கொடுத்து “போடா போடா” என்று அனுப்பிவைத்தார்.
அன்று முழுக்க அவர் வன் சொற்களை நினைத்து நினைத்துப் புன்னகைத்துக்கொண்டே இருந்தார்.
அவன் பக்கமாகத் திரும்பும்போதெல்லாம் அவருக்கு சிரிப்பு வந்துகொண்டே இருந்தது. அவரால்
அடக்கவே முடியவில்லை. அந்தக் காலத்தில் ‘லட்சியம், நிச்சயம்’ மேடைப்பேச்சில் உலாவந்த பிரபலமான அடுக்குமொழிச்சொல். அதைத்தான் தனக்குப்
பொருத்தமான வழியில் ராஜசேகர் பயன்படுத்திக்கொண்டான். ஐம்பதாண்டுகளுக்குப் பிறகும் அந்தப்
புன்னகைத்தருணங்கள் என் நினைவில் இன்னும் மங்காமல் பதிந்துள்ளன.
புன்னகைக்கும்படி பேசுவது ஒரு கலை. இயற்கையாகவே கற்பனையூறும்
மனம் அதற்கு வேண்டும். புதிய கோணத்தில் சிந்திக்கும் ஆற்றல் வேண்டும். எல்லோருக்கும்
அது சாத்தியமாவதில்லை. நகைச்சுவை என்பதையே பிறரை இழித்தும் பழித்தும் ஏளனம் செய்தும்
மலினப்படுத்தியும் சொல்லும் உரையாடல் துணுக்காகவும் சுயகிண்டலாகவும் மாறிவிட்ட இன்றைய
சூழலில் புன்னகைக்கு ஒரு மறுவரையறை தேவைப்படுகிறது. புன்னகைக்க வைக்கும் கலையில் சொல்லும்
தொனியும் சொல்லும் கோணமும் மிகமுக்கியமானவை.
நண்பன் ராஜசேகர் பள்ளிப்படிப்பைத் தாண்டவில்லை. கிராமத்தில்
இருபது முப்பது கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ளேயே ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டான். இப்போதும் ஊருக்குச்
சென்றால் திரெளபதை அம்மன் கோவில் திடலோரம் அரசமரத்தடியில் அல்லது ஏரிக்கரையோரம் புளியமரத்தடியில்
அவனைப் பார்க்கிறேன். அவனைச் சுற்றி அவன் சொல்லும் கதைகளைக் கேட்பதற்காக ஆறேழு பேர்
அமர்ந்திருக்கிறார்கள். ஒருமுறை அவனை நெருங்கிப் பார்த்து பேசிவிட்டுத் திரும்பினேன்.
“அண்ணன் பேசறத இன்னைக்கு முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம். பசி, கவலை, துக்கம் எல்லாமே
பறந்து போயிடும். வீட்டுக்கு போயி பொண்டாட்டி புள்ளைங்ககிட்ட கூட சொல்லலாம். நெனச்சி
நெனச்சி சிரிச்சிகிட்டே இருக்கலாம்” என்று அவனுக்கு அருகில் இருந்தவர்கள் சொன்னார்கள்.
தன் தனித்தன்மையை பள்ளிக்காலத்திலிருந்தே அவன் பாதுகாத்துப்
பேணி வருவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அவனைச் சுற்றி இருந்த உலகம் எவ்வளவோ
மாறிவிட்டது. ஆனால் இந்த உலகத்தில் எதன் மீதும் அவனுக்கு வருத்தமில்லை. தவறிப்போன வாய்ப்புகளைப்பற்றியோ
வாழமுடியாத வாழ்க்கையைப்பற்றியோ ஏக்கமும் இல்லை. எந்தப் புகாரும் இல்லாமல் ஒவ்வொரு
தருணத்தையும் புன்னகையோடு கடந்துசெல்லும் ஆற்றல் அவனிடம் குடிகொண்டிருக்கிறது.
அவனைச் சந்தித்துவிட்டுத் திரும்பும்போதுதான் இலக்கியம் வழியாக
அறிந்துகொண்ட புன்னகை மிக்க தருணங்களை அசைபோடத் தொடங்கினேன். இளம்வயதில் படித்த பம்மல்
சம்பந்த முதலியாரின் ஹாஸ்யக்கதைகள் தொகுப்பு
நினைவுக்கு வந்தது. அதில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு கதையும் புன்னகைக்க வைப்பவை. வீடு,
மருத்துவமனை, நீதிமன்றம், கடைத்தெரு என எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் புன்னகைத்தருணங்களையெல்லாம்
அத்தொகுதியில் காணமுடியும். ஆயினும் அவையனைத்தும்
கதைத்தருணங்கள் வழியாக பெருகும் புன்னகையே தவிர, விவரணையால் உருவாகும் புன்னகையல்ல.
புதுமைப்பித்தன் எழுதிய கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
போன்ற சிற்சில சிறுகதைகளில் கூட புன்னகைக்க வைக்கும் பல வரிகளைக் காணமுடியும்.
ஆனால் பாத்திரங்களின் குணவிசேஷங்களுக்கும் கதைத்தருணங்களின் குணவிசேஷங்களுக்கும் அழுத்தம்
கொடுத்து எழுதும் சிற்சில கூடுதல் வரிகள் வழியாக புதுமைப்பித்தன் அப்புன்னகையைச் சாத்தியப்படுத்துகிறார்.
ஏனைய வரிகளில் படிந்திருக்கும் கசப்பும் விமர்சனமும் விரக்தியும் ஆவேசமும் அந்தப் புன்னகையின்
வெளிச்சத்தை சட்டென மங்கவைத்துவிடுகின்றன. அவரைத் தொடர்ந்து எழுத வந்த பெரும்பாலான
சிறுகதையாளுமைகளும் அதே வழியைத் தொடர்ந்தனர்.
அழகிரிசாமி, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், அசோகமித்திரன்,
சுந்தர ராமசாமி கதைத்தொகுதிகளை நூலகத்தில் தேடித்தேடி படித்துக்கொண்டிருந்த என் இளமைக்காலத்தில்
தற்செயலாக அக்கா என்னும் சிறுகதைத்தொகுதியை
எடுத்துச் சென்று படித்தேன். அதன் ஆசிரியர் அ.முத்துலிங்கம் என்பவர் யார் என்பதே அன்று
எனக்குத் தெரியாது. அந்தத் தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் எடுத்துவந்தேன்.
வீட்டுக்கு வந்ததும் அக்கதையைத்தான் தேடிப் படித்தேன். அது தொகுப்பின் கடைசிக்கதையாக
அமைந்திருந்தது. தொகுப்புக்கே தலைப்பாக அமைந்த சிறுகதையை தொகுப்பின் கடைசியாக ஏன் வைத்தார்கள்
என்பதைப் புரிந்துகொள்ள இயலாமல் கதையைப் படித்தேன்.
கதை என்னை திகைக்கவைத்துவிட்டது. ஒரு கல்யாண வீடு. எல்லோரும்
சிரித்து கொண்டாட்டமாக இருக்கிற சூழல் ஒரே கணத்தில் போர்க்களமாக மாறிவிடுகிறது. அந்த
அக்காவின் தம்பி அக்காவையே படமாக வரைந்திருக்கும் சொந்தக்கார இளைஞரைப் பார்க்கச் செல்கிறான்.
அக்காவுக்கு அந்தப் படம் மகிழ்ச்சியைக் கொடுக்கும் என நம்பி அதை எடுத்துவருகிறான்.
சிறுவனிடம் படத்தைக் கொடுக்கும் இளைஞன் ஒரு கடிதத்தையும் கொடுத்து அனுப்புகிறான். துரதிருஷ்டவசமாக
அந்த வீட்டு அப்பாவின் பார்வையில் எல்லாமே சிக்கிவிடுகின்றனர். எல்லாரையும் அடித்துத்
துவைத்துவிடுகிறார் அவர். இன்பமயமானதாகத் தொடங்கிய ஒருநாள் துன்பமயமானதாக முடிவடைந்துவிடுகிறது.
அந்தச் சிறுவனுக்கு தான் செய்தது என்ன என்றே புரியவில்லை. அப்பாவியான அவன் பார்வையிலிருந்துதான்
கதை விரிகிறது.
மனத்தைப் பாரமாக்கும் அக்கதையைப் படித்துக்கொண்டு போகும்போது
சட்டென ஒரு வரியைப் படித்துவிட்டு என்னையறியாமல் புன்னகைத்துவிட்டேன். மாபெரும் சோகத்துக்கு
நடுவில் அப்படி புன்னகைப்பது தப்பல்லவா என எனக்குள் கேட்டுக்கொண்டேன். ஆனால் தப்பில்லாத
வகையில்தான் அந்த வரிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவை இல்லாமல் போனாலும் கூட அந்தக் கதையின்
ஓட்டத்துக்குக் குறைவிருக்காது. ஆயினும் அந்தக் கூடுதல் வரிகளால் கதைக்கு ஒரு மெருகு
கூடி இருந்தது என்பதுதான் உண்மை. அந்தச் சிறுவனின் அப்பாவித்தனத்தைப் புரிந்துகொள்ள
அவ்வரிகள் துணைபுரிந்தன. “அம்மா வெங்காயம் வெங்காயமா உரிக்கிறாள். அவளுக்கு கண்ணீரே
வரவில்லை. நான் ஒண்டுகூட உரிச்சி முடியல்லை. அழுகை அழுகையா வந்தது” என்று சிறுவனின்
எண்ண ஓட்டமாக அமைந்திருந்தன அவ்வரிகள். புன்னகைக்காமல் அவ்வரிகளைப் படிக்கமுடியுமா,
என்ன? அதற்கு அடுத்த வரியில்தான் அவன் அப்பா அவனையும் அக்காவையும் அடித்து மிதிக்கும்
காட்சியைக் காட்டுகிறார் முத்துலிங்கம்.
அதற்கு அடுத்த நாள்தான் மற்ற கதைகளைப் படித்தேன். என் எதிர்பார்ப்பை
நிறைவேற்றுவதுபோல எல்லாக் கதைகளிலும் புன்னகைக்க வைக்கும் ஒன்றிரண்டு வரிகள் இருந்தன.
கோடைமழை என்கிற கதையில் தன் பிறந்த ஊரான
கொக்குவில் பற்றிய விவரணை இடம்பெற்றிருந்தது. அது சின்ன ஊருமல்ல, பெரிய ஊருமல்ல என்பதற்குப்
பதிலாக ஒரு பாத்திரம் வேறொரு வகையில் நீட்டி முழக்கி சொல்லியிருந்தது. அந்த நீட்டலிலும்
முழக்கத்திலும்தான் புன்னகை அடங்கியிருந்தது. “இலங்கையின் தேசப்படத்தை மேசையின் மீது
வைத்து, அதிலே யாழ்ப்பாணம் இருக்குமிடத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அதற்குள் சிகப்புப்பென்சிலால்
பெரிய புள்ளி போட்டு இதுதான் கொக்குவில் என்று பீற்றிக்கொள்ளும் அளவுக்கு பிரபலமானது
அல்ல. அதே நேரத்தில் தேசப்படத்தைப் பிரிக்காமலும் சிவப்புப்பென்சிலால் கோடு இழுக்காமலும்
இது கொக்குவில் என்று சொல்லாமலும் விடக்கூடிய அளவுக்குப் பிரபலமற்றது என்றும் கூற முடியாது”
. இந்த விவரணைகள் கதைமையத்துக்கு உதவியானதாக
இல்லாமல் இருக்கலாம். ஆனால் கதையை வாசிக்கத் தேவையான ஊக்கத்தையும் சுவாரசியத்தையும்
தாராளமாக வழங்கின.
அதே தொகுப்பில் அனுலா
என்றொரு கதையில் “காதல் என்பது எப்போது உதயமாகிறது என்று யாராலும் கூறமுடியாது. இரவிலிருந்து
பகல் பிறப்பதுபோல ஏதோ ஒரு கணத்தில் காதல் பிறந்துவிடுகிறது.” என்றொரு குறிப்பையும்
பார்த்தேன். ஒரு பொன்மொழியின் தோற்றத்தில் அமைந்துள்ள இந்த விவரணையைப் படித்து கடந்தபோது
உருவான புன்னகை நெஞ்சில் நிரந்தரமாகப் படிந்துவிட்டது.
அக்கா தொகுப்பில் அக்கா கதையைத் தவிர கோடைமழை, ஊர்வலம் என மேலும் இரு சிறுகதைகள்
எனக்கு மிகவும் பிடித்திருந்தன. கோடைமழை கதையில் முக்கியமான பாத்திரம் சின்னாச்சிக்கிழவி
கருமி. வட்டிக்கு ஆசைப்படுபவள். கடன் கேட்டு வருகிறவர்களிடம் தன்னிடம் இல்லை என்பதுபோல
பஞ்சப்பாட்டு பாடிவிட்டு யாரிடமோ வாங்கி வருவதுபோல போக்கு காட்டி பணம் கொடுப்பவள்.
அவளிடம் ஒருவன் ஒருநாள் அவசரமாக பணம் வேண்டும் என்று சொல்லி ஒரு நகையைக் கொடுத்து பணம்
பெற்றுச் செல்கிறான். சில மாதங்கள் கழித்து கிழவியின் மகள் பண உதவிக்காக வந்து நிற்கிறாள்.
எங்கிருந்தாவது வட்டிக்கு வாங்கிக் கொடுக்கும்படி சொல்கிறாள். ஏற்கனவே அடகு வாங்கியிருக்கும்
நகையை இன்னொருவரிடம் அடகு வைத்து பணம் பெற்று மகளிடம் கொடுத்து கூடுதல் வட்டி பெறலாம்
என்ற பேராசையோடு, அந்த நகையை எடுத்துக்கொண்டு வெளியே செல்கிறாள். அப்போதுதான் கோடை
மழை பிடித்துக்கொள்கிறது. மழையில் மடியில் வைத்த நகை நனைந்துபோகிறது. அதை எடுத்துப்
பார்க்கும் கிழவிக்கு அது தங்கமல்ல, பித்தளை என்பது உறைக்கிறது. மழை நகையில் பூசிய
சாயத்தை மட்டுமன்றி, மனத்தில் பூசியிருக்கும் சாயத்தையும் அம்பலப்படுத்துகிறது. வாழ்வின்
நெருக்கடித்தருணங்களை பணமீட்டும் தருணமாக ஒவ்வொருவரும் நினைக்கத் தொடங்கினால் வாழ்க்கையின்
சாரமாக எஞ்சுவதுதான் என்ன என்கிற கேள்வியை நோக்கி அழைத்துச் செல்கிறது கதை. இக்கதையி
படித்துப் புன்னகைக்கும் வகையில் தனிவரிகள் எதுவும் இல்லை. ஆனால் முழு கதையையும் வாசித்துமுடித்த
பின்னர் நமக்குள் எழும் புன்னகையை ஒருவராலும் மறைத்துக்கொள்ள முடியாது. ஏமாற்றுவதை வழக்கமாகக் கொண்ட ஒருவர் ஏமாந்து நிற்பதைப்
பார்க்கும்போது உருவாகும் புன்னகை அது.
ஊர்வலம் சிறுகதையும் வாழ்க்கையின் சாரத்தை முன்வைத்தே ஒரு
கேள்வியை எழுப்புகிறது. சாந்தினியும் மாணிக்கமும் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் ஒருவரையொருவர்
விரும்புகிறார்கள். ஊர்க்கோடியில் இருக்கும் அரசமரத்தடியில் பெயர்களை இணைத்துச் செதுக்கிப்
பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள். பள்ளிப்படிப்புக்குப் பிறகு படிக்க வாய்பில்லாத மாணிக்கம்
தபால்காரனாக வேலைக்குச் செல்கிறான். கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு படித்து முடிக்கும்
சாந்தினி அங்கேயே இன்னொருவனைக் காதலிக்கிறாள். பட்டப்படிப்பு தகுதியில் பழைய காதல் மூழ்கிவிடுகிறது. திருமண ஊர்வலம் அதே கிராமத்தில்
அதே அரசமரத்தடியில் உள்ள பிள்ளையாரைக் கும்பிடுவதற்காக வருகிறது. தபால்காரக் காதலனும்
தொலைவிலிருந்து பார்க்கிறான். இறந்தகாலக் காதலையும் மறக்கமுடியாமல் நிகழ்காலக்காதலையும்
விடமுடியாமல் உறைந்துபோகிறாள் சாந்தினி. சின்னாச்சிக்கிழவியைப்போலவே சாந்தினியும் இன்னொருவகையில்
பேராசைக்கு இரையானவள். பேராசை பிழை என தெரிந்தபோதிலும் மீண்டும் மீண்டும் பேராசை மானுடரை
ஏன் அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறது என்பது முக்கியமான கேள்வி. அக்கா தொகுதி முழுக்க
இப்படிப்பட்ட விசித்திர மனிதர்களைப்பற்றிய கதைகள் அடங்கியிருந்தன.
வாசிப்பு பெருகிய ஒரு புள்ளியில் மனம் வெடித்த ஒரு தருணத்தில்
நானும் சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன். ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய முதல்
தொகுதி வெளிவந்தது. கதைகளின் நுட்பங்களும் விதவிதமான சட்டகங்களும் பிடிபடத் தொடங்கின.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சென்னைப்பயணத்தில் வம்சவிருத்தி தொகுதியை வாங்கிவந்து படித்தேன். ஒருகணம் அக்கா தொகுதியை நினைத்துக்கொண்டேன். அதை
எழுதிய முத்துலிங்கம் வேறு, வம்சவிருத்தியை எழுதிய முத்துலிங்கம் வேறு என்று சொல்லும்
அளவுக்கு முற்றிலும் புதிதாக இருந்தது. புதிய களம், புதிய மொழி, புதிய மனிதர்கள் என
எல்லாமே புதிதாக அமைந்திருந்தது. கதையாக்கத்தில் முத்துலிங்கத்திடம் நிகழ்ந்திருக்கும்
பாய்ச்சலை என்னால் உணரமுடிந்தது. முத்துலிங்கம் புன்னகைக்க வைப்பவர் மட்டுமல்ல, பல
புதுமைகளையும் முன்வைப்பவர் என்பதைப் புரிந்துகொண்டேன். அப்போதுதான் அவர் வெளிநாட்டில் உயர்பதவி வகிப்பவர்
என்பதையும் உலகநாடுகளில் சுற்றிவரும் வாய்ப்புகள் நிறைந்தவர் என்பதையும் தெரிந்துகொண்டேன்.
கூர்மையான ஒரு பொறியியல் நுட்பம் அவருடைய எல்லாச் சிறுகதைகளிலும்
தொழிற்பட்டிருப்பதை வியப்போடு பார்த்தேன். அறிந்த கிராமம், அறிந்த நகரம், அறிந்த மனிதர்
என்னும் எல்லைகளைக் கடந்து உலகின் எந்தப் பகுதியிலும் நிகழ்வதற்குச் சாத்தியமான வகையில்
அவருடைய கதைகள் அமைக்கப்பட்டிருந்தன. பல நாடுகளில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு பலவிதமான
நிலப்பகுதிகளைப் பற்றிய தகவல்களைத் தொகுத்துக்கொள்ள அவருக்கு உதவியாக அமைந்திருந்தது.
பாகிஸ்தான், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கனடா என பல நாடுகள் அவருடைய கதைக்களங்களுக்காகத்
தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. புதிய நிலப்பின்னணி, புதிய கதைக்களம், புதிய மனிதர்கள்
என ஒவ்வொரு சிறுகதையும் வியப்பளித்தன.
ஒரு தருணம், ஒரு நிகழ்ச்சி, ஒரு முரண் என கதைக்கென வகுக்கப்பட்டிருந்த
கட்டுப்பாடுகளை மிக எளிதாகக் கடந்து சென்றன அவருடைய கதைகள். பின்னிப்பின்னி நீண்டு
செல்லும் ஒரு கோடு போல அவருடைய கதைகள் அமைந்திருந்தன. ஒவ்வொரு கதைக்கும் மிகப்பொருத்தமான
சட்டகத்தை அவர் தேர்ந்தெடுத்திருந்தார். கண்ணைக் கவரும் விதத்தில் வசீகரமான வகைகளில்
ஆயத்த ஆடைகளை உருவாக்கும் தொழில்நிபுணரைப்போல, படிக்கப்படிக்க ஆர்வத்தைப் பெருக்கவைக்கும்
பலவிதமான கதைச்சட்டகங்களை அவர் தனக்குத்தானே உருவாக்கிக்கொண்டார். அவர் எடுத்துக்கொள்ளும்
மையத்துக்கு அவர் வகுப்பதே கால எல்லை என்பது நியதியாக மாறிவிட்டது. இப்படி ஒவ்வொரு
கூறையும் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்ட கலைஞர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா என்று
தெரியவில்லை.
துரி என்னும் முதல் சிறுகதையைப் படித்தபோது எழுந்த பரவசம் இன்னும்
என் மனத்தில் அப்படியே நீடிக்கிறது. முதலில் அந்தத் தலைப்பு எனக்குப் புரியவில்லை.
பல கணங்கள் அதன் பொருள் என்னவாக இருக்கும் என நினைத்துநினைத்து, கதையைப் படிக்காமலேயே
குழம்பிக்கொண்டிருந்தேன். அந்தத் தலைப்புக்குக் கீழே நாயின் ஓவியத்தைப் பார்த்த பிறகே
என் குழப்பம் நீங்கியது. கதையின் முதல் பத்தியைப் படித்ததுமே என் ஐயம் முற்றிலும் விலகியது.
துரி என்பது ஒரு நாயின் பெயர். துரியோதனன் என்று முதலில் சூட்டி துரி என்று பிறகு அழைக்கிறார்கள்.
அதுவும் அமெரிக்காவில் வளர்க்கும் நாய். அந்த வீட்டின் பெற்றோரைவிட அவர்களுடைய மகன்தான்
அந்த நாயை மிகவும் செல்லமாக வளர்க்கிறான்.
அவன் பள்ளிக்கல்வியை முடித்து பல்கலைக்கழகத்துக்குச்
சென்றுவிடுகிறான். அவனைப் பிரிந்த துயரத்தில் நாய் முதலில் வாட்டம் கொள்கிறது. பிறகு மெல்ல மெல்ல வேறு விஷயங்களில் மனத்தைத் திசைதிருப்பி
இயல்பான நிலைக்குத் திரும்புகிறது.
நாய் வளர்க்கும்போது கிட்டும் சின்னச்சின்ன அனுபவங்களின்
பதிவாக கதை வளர்கிறது. ஒருநாள் அந்த நாய்க்கும்
ஒரு தேவாங்குக்கும் நடைபெற்ற மோதலை விவரிக்கிறது. வீட்டுக்குப் பின்னால் இருக்கும்
சுவரில் ஏற்படுத்தப்பட்ட ஓட்டை வழியாக பின்பக்கக் காட்டுக்குள் சென்று திரும்ப நாய்க்கு
வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை முன்வைக்கிறது. மெல்ல மெல்ல அது வீட்டுக்கும் காவலாகிறது.
காட்டுக்கும் காவலாகிறது. இறுதியாக அங்கே குருவிகளின் தாகம் தணிவதற்காக வைத்திருக்கும்
தண்ணீர்த்தொட்டியை இரவுதோறும் உள்ளே நுழைந்து பாழாக்கும் றக்கூன் என்னும் ஒருவகை நரியின்
அத்துமீறலைச் சித்தரிக்கிறது. தக்க தருணத்துக்காக் காத்திருக்கும் நாய் ஒருநாள் அந்த
றக்கூனுடன் மோதுகிறது. மரமேறத் தெரிந்த றக்கூன்
மரத்திலேறி நின்றுகொண்டு நாயின் மூர்க்கத்தைத் தூண்டுகிறது. ஒவ்வொரு நாளும் றக்கூனின்
வரவை மோப்பம் பிடித்து உணர்ந்துகொள்ளும் நாய் அக்கணமே ஓடி அதைத் தாக்கத் தொடங்குகிறது.
தண்ணீர்த்தொட்டியை நோக்கி வரும் நேரத்தை றக்கூன்
எப்படி மாற்றிக்கொண்டாலும் அது நாய்க்குத் தெரிந்துவிடுகிறது. ஒருநாள் அதிகாலை நேரத்தில்
றக்கூன் நுழைவதைப் பார்த்துவிட்டு நாய் துரத்திக்கொண்டு ஓடுகிறது. வழக்கமாக மரத்திலேறித்
தப்பிக்கும் றக்கூன் அன்று திசைமாறி வேலியைக் கடந்து தெருவை நோக்கி ஓடுகிறது. ஆத்திரம்
கொண்ட நாயும் தெருவில் அதைத் துரத்திக்கொண்டு பாய்கிறது. றக்கூன் சாலையைக் கடந்து தப்பித்துவிட,
எதிர்பாராத விதமாக அந்தப் பக்கமாக வந்த காரில் நாய் அகப்பட்டுக்கொள்கிறது. இடது தொடையில் அடிபட்டு விழுந்துவிடுகிறது. நாய்க்கும்
றக்கூனுக்கும் இடையில் நடைபெறும் மோதல், பீமனுக்கும் துரியோதனனுக்கும் நிகழும் மோதலைப்போலவே
இக்கதையில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தொடையில் அடிபட்டு இறப்பாய் என்று தெரிந்திருந்தால்
துரியோதனன் என்று பெயர்சூட்டாமல் இருந்திருப்பேன் என்று கலங்குகின்றனர் பெற்றோர். ஒரு
நாயைப்பற்றிய கதையை இந்த அளவுக்குப் பாசப்போராட்டம் நிறைந்த கதையாக முத்துலிங்கத்தால்
மட்டுமே எழுதமுடியும். வீடு, வீட்டையொட்டிய காடு என்னும் வாய்ப்புகளுக்காக அமெரிக்கப்பின்னணி
உதவுகிறது.
வம்சவிருத்தி என்னும் தலைப்புக்கதை பாகிஸ்தான் நிலப்பின்னணியில் அமைந்திருக்கிறது.
அங்கே வாழும் அஸ்காரி குடும்பத்தைப்பற்றிய கதை அது. அஸ்காரிக்கு முதல் மனைவி வழியாக
ஆறு குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆறும் பெண் குழந்தைகள். இரண்டாவதாக ஒரு திருமணம் செய்துகொள்கிறார்.
அவருக்கும் பெண் குழந்தையே பிறக்கிறது. அல்லாவின் கருணையை வேண்டி ஹஜ் யாத்திரை செல்கிறார்.
திரும்பி வந்த பிறகு அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. வம்சத்தை விருத்தி செய்ய வந்த
குழந்தை. ஆனால் ஊரும் உலகமும் அவன் ஆண்மகன் என்பதை ஏற்றுக்கொள்ள அவனுக்கு வேட்டைக்கலை
தெரிந்திருக்கவேண்டும். பன்னிரண்டு வயது முடிந்த பிறகு காட்டுக்குச் சென்று ஒரு விலங்கை
வேட்டையாடி எடுத்துவர வேண்டும். அது காலம்காலமாக அக்கிராமத்தில் கடைபிடிக்கப்பட்டு
வரும் நியதி. எந்த விலங்கை வேண்டுமானாலும் கொல்லலாம். ஆனால் அஸ்காரி தன் மகன் ஒரு வரையாட்டைக்
கொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். குறிப்பிட்ட நாளில் மகனிடம் துப்பாக்கியைக்
கொடுத்து காட்டுக்கு அழைத்துச் செல்கிறார். நீண்ட அலைச்சலுக்குப் பிறகு சிறுவன் ஒரு
வரையாட்டைக் கொன்று ஆண்மகன் என தன்னை நிறுவிக்கொள்கிறான். அந்த ஆடு, இந்த உலகத்தில்
பாகிஸ்தான் வடமலைப்பகுதியில் மட்டுமே வாழும் அபூர்வ இன வகையைச் சேர்ந்தது. தன் வம்சம்
தழைக்கவேண்டும் என்பதற்காகப் புறப்பட்ட ஒரு மனிதனின் வேட்டை, அபூர்வ ஆட்டின் வம்சத்தில்
ஓர் ஆடு இறப்பதற்குக் காரணமாகிவிடுகிறது.
சவாலான முரணைக் களமாகக் கொண்ட இச்சிறுகதையை, மிகவும் கச்சிதமாக
எழுதியிருந்தார் முத்துலிங்கம். ஆண் குழந்தைக்கு ஆசைப்படும் ஒரு தகப்பனைப்பற்றிய கதையைப்போல
எளிமையாகத் தொடங்கி மனிதனுக்குள் உறைந்திருக்கும் மனிதாபிமானமற்ற அப்பட்டமான சுயநலத்தையும்
கருணையின்மையையும் உணர்த்தும் புள்ளியில் முடிவடைகிறது.
அதற்குப் பிறகு வெளிவந்த முத்துலிங்கத்தின் சிறுகதைத்தொகுதிகள்
அனைத்தையும் வந்த வேகத்தில் வாங்கிப் படித்துவிடுவது வழக்கமாகிவிட்டது. திகடசக்கரம்,
வடக்குவீதி, மகாராஜாவின் ரயில்வண்டி, அமெரிக்காக்காரி, குதிரைக்காரன், பிள்ளைக்கடத்தல்காரன்,
ஆட்டுப்பால் புட்டு என எல்லாத் தொகுதிகளிலும் என் மனம் கவர்ந்த பல சிறுகதைகள் அடங்கியிருந்தன.
ஒவ்வொரு சிறுகதையிலும் அவர் பயன்படுத்திக்கொள்ளும் தகவல்கள் அனைத்தும் புதுமையானவை.
இன்னொருவர் வழியாக நாம் கேட்டறியாதவை. ஒவ்வொரு தகவலும் ஆப்கானிஸ்தான், தாய்லாந்து,
ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா என பல தேசங்களுடன் தொடர்புடையவை. அவற்றை சுவாரசியமான
கதைத்தருணங்களோடு இணைத்து வழங்குவதில்தான் முத்துலிங்கத்தின் கலை சுடர்விடுகிறது. அவருடைய
உலகப்பயணமும் மனிதர்களின் உறவும் நட்பும் எல்லா எல்லைகளையும் கடந்து சிந்திக்கவும்
கதைகளுக்குத் தோதாக விரிவுபடுத்திக்கொள்ளவும் அவருக்கு உதவியிருக்கின்றன.
ஒரு தகவலை முதன்மைப்படுத்துவதிலும் அதை கதையின் மையத்தோடு
இணைக்கும் புள்ளியை உருவாக்குவதிலும் முத்துலிங்கம் ஈடு இணையற்றவர். அவருடைய கலையுள்ளம்
அந்த இணைப்பை அழகாக உருவாக்குகிறது. ஒருமுறை கூட அவருடைய முயற்சி தோல்வியடைந்ததில்லை.
சரியான வேகத்தில் சென்று இலக்கை ஊடுருவி நிற்கிற அம்பைப்போல, அவருடைய கதைகளும் இலக்கைத்
தொட்டு நிற்கின்றன.
குதிரைக்காரன் சிறுகதையில் பிலிப்பினோ என்கிற மார்ட்டின் என்கிற ஒருவன்
நாடோடியாக சொந்த நாடான பிலிப்பைனைவிட்டு வெளியேறி வேலைக்கான வாய்ப்பைத் தேடி வரும்
தருணத்திலிருந்து தொடங்குகிறது. கடைசியாக அவன்
ஓகொன்னார் பண்ணையில் வேலைக்குச் சேர்ந்துகொள்கிறான். இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட
அந்தப் பண்ணையில் வேலியைச் செப்பனிடுபவனாகவும் குதிரைகளைப் பராமரிப்பவனுக்கு உதவியாளனாகவும்
வேலை செய்கிறான். பண்ணைக்காரரின் அனுமதியோடு அவன் தன்னோடு கொண்டு வந்த ஓர் அஸ்பென்
செடியை அந்தப் பண்ணையில் நடுகிறான். அஸ்பென் செடி மெல்ல மெல்ல மரமாக ஓங்கி வளர்கிறது.
தன்னைத்தானே இனப்பெருக்கம் செய்துகொள்ளும் செடிவகை என்பதால் ஒரு காடு போலவே அது வளர்ந்துவிடுகிறது.
அபூர்வமான அஸ்பென் செடி பற்றிய தகவல்தான் இக்கதையை எழுதத் தூண்டியிருக்கவேண்டும். அஸ்பென்
செடியையும் மார்ட்டினையும் ஒரு கோட்டில் கொண்டுவந்து இணைக்கிறார் முத்துலிங்கம். காற்று
வீசாதபோதும் நடுங்கி அசையும் அஸ்பென் செடியைப்போலவே அவன் தலையும் நடுங்கியபடியே இருக்கிறது.
ஏசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்ள தேர்வு செய்த மரம்
அஸ்பென் மரம். அந்தக் கணத்திலிருந்து அஸ்பென் மரம் நடுங்குகிறது என்பது பரம்பரைக்கதை.
குதிரைக்காரனின் கதையை இரு பகுதிகளாக எழுதியிருக்கிறார் முத்துலிங்கம்.
ஒரு பகுதி சித்தரிப்புத்தன்மையோடும் இன்னொரு பகுதி எழுத்தாளருக்கும் மார்ட்டினுக்கும்
பண்ணையாரின் மகளுக்கும் பிறந்த பெண்ணுடன் நிகழும் நேர்காணலாகவும் அமைந்துள்ளது.
துர்கா என்கிற போராளியைப்பற்றிய கதையான எல்லாம் வெல்லும் கதையில் கூட முத்துலிங்கம்
ஆறுமணிக்குருவி என்னும் அரிய வகைக் குருவியொன்றைப்பற்றிய தகவலைப் பகிர்ந்துகொள்கிறார்.
கதையின் அமைப்பில் அதற்கு ஒரு முக்கியத்துவத்தை அழகாக உருவாக்குகிறார். பிரிகேடியர்
துர்கா பறவைகள் மீது ஆர்வமுள்ளவர். காட்டில் பறக்கும் நூறு அரியவகைப் பறவைகளின் படங்களைத்
தொகுத்து தலைவருக்கு பிறந்தநாள் பரிசாக அளிக்கிறார். ஒவ்வொரு பறவையின் பெயரையும் சொல்லும் தலைவர் ஒரு
பறவையின் படத்தைப் பார்த்துவிட்டு உற்சாகமுடன் பேசுகிறார். அவர்தான் அது அதிகாலை ஆறுமணிக்குப்
பறந்துசெல்லும் பறவை என்று குறிப்பிடுகிறார். எல்லாம் வெல்லும் என்று முழக்கமிட்டபடி
போர்முனைக்குச் செல்லும் துர்கா ஒருநாள் அதிகாலையில் நடைபெறும் போரில் குண்டடி பட்டு
இறந்துவிடுகிறாள். அவள் வாழ்வின் இறுதிக்கணத்தில் பார்க்கும் தொலைவில் பறவைக்கூட்டமொன்று
பறந்துசெல்கிறது. அந்தக் கூட்டத்தில் ஆறுமணிப்பார்வை
இருக்கிறதா என தேடியலைந்து உறைகின்றன அவள் கண்கள்.
சுவருடன் பேசும்
மனிதர் சிறுகதையின் வழியாக நாம் தெரிந்துகொள்ளும்
தகவல் அராமிக் என்னும் மொழியைப்பற்றியதாக அமைந்திருக்கிறது. அராமிக் என்னும் மொழியில்தான்
அந்தக் காலத்தில் இயேசு பேசினார். அந்த மொழியைப் பேசுகிறவர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள்.
இந்த எளிய தகவலை உள்ளடக்கமாகக் கொண்டு இப்படி ஒரு சிறந்த சிறுகதையை எழுதுவது முத்துலிங்கத்துக்கு
மட்டுமே சாத்தியம். கனடாவுக்கு வந்த ஒருவர் தலைமுடியை வெட்டிக்கொள்ள முடிதிருத்துநரைப்
பார்க்கச் செல்லும் புள்ளியிலிருந்து கதை தொடங்குகிறது. வழக்கமான முடிதிருத்துநரிடம்
செல்வதில் அவருடைய மனம் விரும்பவில்லை. அதனால் புதிய இடத்தைத் தேடிச் செல்கிறார். அந்தப்
புதிய முடிதிருத்துநரிடம் உரையாடும் போக்கில் அவரைப்பற்றிய தகவல்களை பேசிப்பேசித் தெரிந்துகொள்கிறார்.
அவர் ஈராக்கிலிருந்து கனடாவுக்குக் குடியேறியவர். பாரசிக மொழியில் பொறியியல் பட்டம்
பெற்றவர். கனடாவில் அதற்கு மதிப்பில்லை என்பதால் முடிவெட்டும் தொழிலை உள்ளார்ந்த விருப்பத்தோடு
செய்கிறார். அவருடைய தாய்மொழியான அராமிக் மொழியை ‘ஆபத்தில் இருக்கும் மொழி’ என்று அறிவித்துவிட்டார்கள்.
அது அழியக்கூடாது என்பதற்காக அவர் தினந்தோறும் தனிமையில் சுவரோடு அராமிக் மொழியில்
உரையாடுகிறார். தான் பேசும் ஒவ்வொரு நிமிடமும் தன் மொழி வாழ்வதாக நம்புகிறார். அந்த
உரையாடல் கட்டமைப்பிலேயே எல்லாத் தகவல்களும் இடைச்செருகலாக வந்துவிடுகின்றன. புதுமைதான்.
ஆனாலும் புதுமையெனத் தோன்றாதபடி முன்வைக்கப்பட்டு விடுகின்றன.
இந்தச் சிறுகதையிலும் அவருடைய புன்னகை வரிகள் தவறாமல் இடம்பெறுகின்றன.
தொடர்ந்து உரையாட வழியில்லாமல் எரிச்சலுடன் வெளியேறும் பெண்ணைப்பற்றிக் குறிப்பிடும்போது
’ஒரு குதிரை பக்கவாட்டில் நகர்வதுபோல அவள் நகர்ந்து வெளியேறினாள்’ என்று எழுதியிருக்கும்
வரியைப் புன்னகையின்றி படிக்கமுடியாது. ’கோபத்தில் எரிச்சலுடன் கீழே விழுந்த முடியை
திரும்பவும் ஒட்டமுடியாது, மொழியும் அப்படித்தான். பூமியிலிருந்து ஒரேவடியாக மறைந்துவிடும்’
என்ற வரியைப் படித்ததுமே, கதையோடு ஒட்டிப்போகிற
மாதிரி எவ்வளவு அருமையாக முத்துலிங்கம் எழுதியிருக்கிறார் என்று தோன்றுகிறது.
மயானப்பராமரிப்பாளர், ஆதிப்பண்பு, பொற்கொடி பார்ப்பாள், வேட்டைநாய்,
புகைக்கண்ணர்களின் தேசம், கடவுச்சொல், அது நான்தான், இலையுதிர்காலம் எல்லாமே எனக்கு
மிகவும் பிடித்த சிறுகதைகள். அகதிகளைப்பற்றி
முத்துலிங்கம் எழுதிய கதைகள் என தனியாக ஒரு தொகுப்பையே உருவாக்கலாம். அனைத்துமே ஏதோ
ஒருவகையில் சிறப்பானவை. அகதிகளைப்பற்றிய கதைகளாக இருந்தாலும் சரி, அயல்நாட்டினரைப்பற்றிய
கதைகளாக இருந்தாலும் சரி, புதிய புதிய ஊர்களும் நாடுகளும்தான் அவருடைய கதைகளின் பின்புலக்காட்சிகளாக
அமைந்திருக்கின்றன. உலகத்தின் பல்வேறு நகரங்கள்
முத்துலிங்கத்தின் கதைகளில் நிறைந்திருக்கின்றன. அந்த நகரங்கள் சார்ந்து திரட்டியெடுக்கும்
தகவல்களில் கதையின் மையத்துக்கு இசைவான தகவலை மட்டுமே முத்துலிங்கம் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்,
அவற்றையே கதைகளின் அடித்தளமாக அமைக்கிறார். எல்லாச் சிறுகதைகளிலும் அவர் உருவாக்கிய
ஒருசில புதுவழக்குச்சொற்கள் நிறைந்திருக்கின்றன. ’முகம் சாத்திவைத்த கதவுபோல இருந்தது’,
‘ஒரு பறவை தலையைத் தூக்குவதுபோல தூக்கி சாய்வாக அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள்’, ‘சுருண்டுபோய்
இருக்கும் ஒரு பாம்பைப் பார்ப்பதுபோல எட்டத்தில் நின்று தொலைபேசியைப் பார்த்தாள்’,
‘இவள் வளரவளர குதிரைவால் போல இவளுடைய புத்தி கீழே போகிறதே, இவளை என்ன செய்வது’ என்று
அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றை வெறும் சொல்வழக்காக மட்டுமல்லாமல், கதைப்பாத்திரங்களின்
முகங்களை நினைவில் நிறுத்தும் வழியாகவும் அமைத்துக்கொள்கிறார் முத்துலிங்கம். அந்த
முகத்தை நினைத்துக்கொண்டால் போதும், முழு கதையையும் அந்த நினைவே இழுத்து வந்துவிடும்.
புதிய நாடு, புதிய மனிதர்கள், புதிய வாழ்க்கை, புதிய பின்னணி என்ற சட்டகத்தின்
வழியாக முத்துலிங்கம் தன் கதைகளை முன்வைத்தாலும் அவை ஏதோ ஒரு வகையில் மானுட துயரத்தை,
இழப்பை, வலியை, வேதனையை, சிக்கலை, பெருமூச்சுகளை, மகிழ்ச்சியைத்தான் அறிமுகப்படுத்துகின்றன.
அவற்றின் வழியாக நம்மால் முத்துலிங்கத்தை இன்னும் நெருக்கமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
முத்துலிங்கத்தின் கதைகளை நெருக்கமாக வாசிக்கும் ஒரு வாசகன் அவர் எழுத்தின் வழியாக
தீட்டியிருக்கும் மனிதர்களை நேசிக்கத் தொடங்குகிறான். நேசிப்பதன் வழியாக நேசத்தை வளர்த்துக்கொள்கிறான்.
முத்துலிங்கத்தின் கதைகளில் மனிதர்கள் தயக்கமின்றி உரையாடும் தருணங்கள்
ஏராளமாக உள்ளன. யாரும் யாரையும் தவிர்ப்பதில்லை. இயல்பாகவே ஒருவரிடம் இருக்கும் முன்முடிவுகளையும்
தயக்கங்களையும் இது தகர்த்துவிடுகிறது. ஒருவர் தன் எண்ணங்களையும் விருப்பங்களையும்
உரையாடல் வழியாகவே சிறப்பான வகையில் முன்வைக்கமுடியும். கதைகளில் அமைக்கப்பட்டிருக்கும்
உரையாடல்கள் வழியாக, பல்வேறு உலகக்காட்சிகளை, வாழ்வியல் முரண்களை, உணர்ச்சி மோதல்களை
நிறுவிக் காட்டுகிறார் முத்துலிங்கம். அப்படி ஒரு தருணத்தை, சொந்த வாழ்வில் தான் இதற்கு
முன்பு எங்கோ நிகழ்த்திய உரையாடல் வழியாக அறிந்துவைத்திருக்கும் வாசகர்கள் முத்துலிங்கத்தின்
கதைகளோடு உடனடியாக இணைந்துகொள்வார்கள். அவர்களே
முத்துலிங்கத்தின் முதன்மை வாசகர்கள்.
ஒரு கதையின் கலைமதிப்பு என்பது அதில் இடம்பெற்றிருக்கும் பாத்திரங்களும்
அவர்களுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளும் அவ்விரண்டு புள்ளிகளையும் இணைக்கும் கருத்தோட்டமும்
சரியான அளவில் சேர்வதால் உருவாகிறது. அது ஒரு
வெற்றிகரமான சட்டகம். அப்படி திரண்டு உருவாகும் மதிப்பின் வழியாகவே ஒரு படைப்பு சிறந்த படைப்பாக ஒரு சூழலில் நிலைத்து
நிற்கிறது. விண்ணைநோக்கி செயற்கைக்கோள்களைச்
செலுத்தும் அறிவியலாளர்களைப்போல தேர்ச்சியான தொழில்நுட்பத்துடன் ஒவ்வொரு படைப்பையும்
உருவாக்கி வாசகர்களுக்கு அளித்துக்கொண்டே இருக்கிறார் முத்துலிங்கம்.
(அ.முத்துலிங்கம்
அவர்களுடைய எழுபது ஆண்டுகால படைப்பு, எழுத்துப்பணி குறித்த மதிப்பீட்டிற்கும் ஆய்வுக்கும்
உதவும் வகையில் நண்பர்கள் பால.சபேசன், எம்.பெளசர் இணைந்து தொகுத்து வெளிவந்திருக்கும்
‘அ.முத்துலிங்கத்தின் எழுத்துலகு’ புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கட்டுரை)