புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் ஓடும் எல்லாப் பேருந்துகளும் எங்கள் கிராமமான வளவனூரில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டும் இறக்கிவிட்டும் செல்லும். ஆனால் அந்த நிறுத்தத்தின் பெயரை ஒருவரும் வளவனூர் என்று சொல்வதில்லை. வளவனூர் சத்திரம் என்று சொல்வதுதான் வழக்கம். அந்த அளவுக்கு சத்திரம் என்னும் பெயர் மக்களின் மனத்தில் இன்றளவும் ஆழமாக ஊடுருவி இருக்கிறது.
துரதிருஷ்டவசமாக,
பெயர் மட்டும்தான் நிலைத்திருக்கிறதே தவிர, அந்த இடத்தில் நிலைபெற்றிருந்த சத்திரம்
இப்போது இல்லை. கடந்த நூற்றாண்டில் தொண்ணூறுகளிலேயே அது மெல்ல மெல்ல மறைந்து கடைத்தொகுப்புகளின்
கட்டடமாக மாறிவிட்டது.
நான்
அறுபதுகளில் தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அந்தச் சத்திரம் அளித்த
பிரமாண்டமான தோற்றம் இன்னும் என் நெஞ்சில் அழியாத சித்திரமாக உள்ளது. அப்போதே அது பழைய
கட்டடம். சுண்ணாம்புக்காரையால் கட்டப்பட்டது. நடுக்கூடத்தில் மழையும் வெளிச்சமும் தாராளமாக
விழும் வகையில் திறந்தவெளியாக இருந்தது அதன் கட்டுமானம். ஒரு கல்யாணமண்டபத்தைப்போல
சுற்றியும் பல அறைகள். வாசலின் இரு புறங்களிலும் இருபது முப்பது பேர் தாராளமாகக் கால்நீட்டிப்
படுக்கும் அளவுக்கு கல்திண்ணை இருக்கும். எப்போது தொட்டாலும் அது குளுமையாக இருக்கும்.
இருபத்துநான்கு மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள இடம்.
சத்திரத்தின்
முன்பக்கத்தில் ஒருபுறம் பெரிய அரசமரமும் நாவல்மரமும் இருந்தன. மறுபுறத்தில் பெரிய
மகிழமரம். இடைப்பட்ட இடத்தில் வட்டமான பெரிய கிணறு. நானும் பிற சிறுவர்களும் சிறுமிகளும்
பள்ளிக்கூடம் போய்விட்டுத் திரும்பியதும் கூடி விளையாடுவதற்குச் செல்லும் இடங்களில்
சத்திரமும் ஒன்று. முதலில் நாவல் மரத்தடியில் உதிர்ந்திருக்கும் பழங்களையெல்லாம் ஓடிஓடிச்
சேகரிப்போம். பிறகு கிணற்றுத்தண்ணீரில் கழுவிவிட்டு நாக்கு நீலநிறத்தில் மாறும் அளவுக்குச்
சப்பிச்சப்பிச் சாப்பிடுவோம். பிறகு மணக்கமணக்க மகிழமரத்தடியில் உதிர்ந்துகிடக்கும்
பூக்களைச் சேகரித்துக்கொண்டு வீட்டுக்குச் செல்வோம்.
வளவனூருக்குக்
கிழக்கில் மதகடிப்பட்டிலும் மேற்கில் கோலியனூரிலும் ஒவ்வொரு வாரமும் மாட்டுச்சந்தை
கூடும். பிற ஊர்களில் வசிக்கும் குடியானவர்கள் மாடு வாங்கிக்கொண்டு நடந்தே தம் ஊர்களுக்குச்
செல்வார்கள். வளவனூரைக் கடக்கும்போது பொழுது சாய்ந்துவிடும். அவர்கள் தங்கிச் செல்வதற்கு
அந்தச் சத்திரம் பெரிதும் உதவியாக இருந்தது. பேருந்துப்பயணம் தொடங்குவதற்கு முன்பு
ஊர்ப்பயணம் என்றாலே நடைப்பயணமாக அல்லது மாட்டுவண்டிப்பயணமாக அமைந்திருந்த காலத்திலும்
அந்தச் சத்திரம் உதவியாக இருந்தது. குளிப்பதற்குக் கிணற்றடி, மாடுகள் ஓய்வெடுக்க மரத்தடி,
படுத்துறங்க சத்திரத்துத் திண்ணை என்பதே அந்தக் காலத்தில் போதுமான வசதிகளாக இருந்தன.
தொடக்க
காலத்தில் சத்திரத்தில் தங்க வந்தவர்கள் அனைவருக்கும் எளிமையான அளவில் ஒருவேளை சாப்பாடு
ஊர்ப்பொதுச்செலவில் வழங்கப்பட்டுவந்தது. வாய்க்கு ருசியாகச் சாப்பிட சத்திரத்துக்கு
அருகிலேயே கிராமணி ஓட்டலும் ரெட்டியார் ஓட்டலும் உடையார் ஓட்டலும் சத்திரத்துக்கு உள்ளேயே
பிராமணாள் காப்பிக்கடையும் இயங்கத் தொடங்கியதும் பொது உணவு விநியோகம் வழக்கொழிந்துவிட்டது.
வழிப்போக்கர்களுக்காக உருவான உணவகங்களில், ருசிக்கு மயங்கிய ஊர்க்காரர்களும் வேளை தவறாமல்
வந்து சாப்பிடத் தொடங்கியதும் சத்திரம் பகுதி மக்கள் நெரிசல் மிக்க இடமாக மாறியது.
’உனக்கென்னப்பா, ஓட்டல்ல சாப்பாடு, சத்திரத்தில தூக்கம்’ என்பது ஒருவரைக் கிண்டல் செய்யும் பழமொழியானது.
எங்கள்
வீட்டில் யாருக்கும் தேநீர் அருந்தும் பழக்கம் கிடையாது. ஆனால் ஏதேனும் ஒரு நேரத்தில்
விருந்தினர் வந்துவிட்டால், அவர்களுக்குத் தேநீர் கொடுத்து உபசரிக்கும் பழக்கம் மட்டுமுண்டு.
அப்போது ஒரு தேநீர் பத்து பைசா. ஒரு வெண்கலச் செம்பையும் சில்லறையையும் என்னிடம் கொடுத்து
”வேகமா போய் கிராமணிக்கடையில டீ வாங்கிட்டு வா” என்று சொல்லி அனுப்புவார் என் அம்மா.
ஏதோ மோட்டார் வண்டியே என் கைக்குக் கிடைத்துவிட்டது போன்ற கனவில் மிதந்தபடி ப்ரூம்
ப்ரூம் என வாயாலேயே ஹார்ன் சத்தம் எழுப்பிக்கொண்டே ஓடுவேன்.
கடைக்கு
முன்னால்தான் என் வண்டி நிற்கும். பாய்லர் முன்னால் நின்று டீ போடும் அண்ணனிடம் சில்லறையையும்
செம்பையும் கொடுப்பேன். வெந்நீர் விட்டு அவரே செம்பைக் கழுவி ஊற்றிவிட்டு சுடச்சுட
டீ நிரப்பிக் கொடுப்பார். ஒரு சின்ன மந்தாரை இலையால் அந்தச் செம்பை மூடி “பத்திரமா
புடிச்சிகிட்டு போடா. சூட்டுல கீழ விட்டுடாத” என்று சொல்லிக்கொண்டே என்னிடம் கொடுப்பார்.
சத்திரத்துக்கு
அருகில் திரெளபதி அம்மன் கோவில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நெருப்புத்
திருவிழா நடக்கும். கோவில் திடலில் அமர்ந்து ஒரு பெரியவர் பாரதம் படிப்பார். ஊர் மக்கள்
அனைவரும் கூடி அமர்ந்து கேட்பார்கள். திருவிழா இல்லாத நாட்களில் பொதுக்கூட்டங்கள் நடக்கும்.
திருவிழாவுக்கு அக்கம்பக்கத்தில் உள்ள பாளையங்களிலிருந்து வந்தவர்கள் அனைவரும் சத்திரத்தில்
தூங்குவார்கள்.
ஒருநாள்
காலையில் ஊரிலிருந்து வந்திருந்த எங்கள் தாத்தாவுக்காக நான் கிராமணி கடைக்கு டீ வாங்கிவரச்
சென்றிருந்தபோது சத்திரத்துக்கு முன்னால் கிணற்றைச் சுற்றி ஏராளமான கூட்டம் நின்றிருந்ததைப்
பார்த்தேன். அருகில் சென்று பார்க்க ஆவலாக இருந்தாலும், என்னால் அந்தக் கூட்டத்தை ஊடுருவிச்
செல்லமுடியவில்லை.
“யாரோ
நரையூருகாரப் பொண்ணு. ஏதோ புருஷன் பொண்டாட்டி சண்டையாம். ரோஷக்காரப்பொண்ணு நான் எங்க
அம்மா வீட்டுக்குப் போறேன்னு நடுராத்திரியிலயே வீட்டைவிட்டுக் கெளம்பிவந்து இந்தக்
கிணத்துல குதிச்சிட்டா”
கடையை
ஒட்டி நின்றிருந்தவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டேன். எனக்கு உடம்பே நடுங்கியது. டீ நிறைத்த
செம்போடு திரும்பும் சமயத்தில் கயிறு கட்டி மேலே தூக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உடலைப்
பார்த்தேன். என் நடுக்கம் கூடுதலாகிவிட்டது. திரும்பிக்கூடப் பார்க்காமல் வேகவேகமாக
வீட்டுக்கு வந்துவிட்டேன்.
அந்த
நிகழ்ச்சிக்குப் பிறகு மாலை வேளைகளில் சத்திரத்துக்குச் செல்ல வீட்டில் தடை விதித்துவிட்டார்
என் அம்மா. அதுவரை நீரெடுப்பதற்காகப் பயன்பட்டு வந்த கிணற்றை ஒரே நாளில் எல்லோரும்
ஒதுக்கிவிட்டனர். தற்கொலைக்காக இன்னொருவர் முயற்சி செய்துவிடாதபடி, இரும்புக்கம்பிகளால்
ஆன ஒரு பெரிய வட்டமான மூடியைச் செய்து உடனடியாகக் கிணற்றை மூடினர். இறந்துபோன பெண்
பேயாக கிணற்றைச் சுற்றி இரவெல்லாம் அலைகிறாள் என்று மீண்டும் மீண்டும் பரவிய செய்தி
அனைவரையும் கலவரத்தில் ஆழ்த்தியதால் சில மாத இடைவெளியில் கிணறு இடித்து மூடப்பட்டது.
சத்திரத்தில்
தங்குபவர்கள் எண்ணிக்கையும் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது. மாடுகள் வரத்து நின்றது.
ஒரு பெரிய புயல் வீசியபோது மரங்கள் விழுந்து அந்த இடமே வெட்டவெளியாகி சைக்கிள் ஸ்டான்டாக
மாறியது. கொஞ்சம்கொஞ்சமாக பகல் நேரங்களில்
மட்டும் இயங்கக்கூடிய இடமாக சத்திரம் சுருங்கியது.
பள்ளிப்
பருவத்தில் நான் பார்த்த சத்திரம் ஒரு பெரிய பூந்தோட்டம் மாதிரியான இடம். ஒரு பட்டதாரியாகி
வேலை கிடைத்து ஊரைவிட்டுப் புறப்படும்போது அது சிதைந்த கூடாக உருமாறியது. அடுத்து சில
ஆண்டுகளிலேயே தரைமட்டமாகிவிட்டது.
கடந்த
மாதம் ஒரு திருமணத்துக்காக ஊருக்குச் சென்றிருந்தேன். பேருந்து ஊரை நெருங்கியதும் “சத்திரம்லாம் எறங்குங்க” என்று நடத்துநர் அறிவித்தார்.
வண்டியைவிட்டு இறங்கியபோது, அங்கு இல்லாத சத்திரத்தின்
சித்திரம் ஒரு கணம் என் நினைவில் எழுந்து மறைந்தது.
(அமுதசுரபி
– தீபாவளி மலர் –அக்டோபர் 2025)