எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நம்மிடையே வாழ்ந்து மறைந்த பன்முக ஆளுமை. கரிசல் காட்டு வாழ்க்கைக்கு ஓர் இலக்கிய முகத்தை அளித்தவர் அவர். கரிசல் மண்ணையும் அங்கு வாழ்ந்த மனிதர்களின் நம்பிக்கைகளையும் வாழ்க்கைப்போக்குகளையும் முன்வைத்து எண்ணற்ற சிறுகதைகளைப் படைத்தவர். முன்னொரு காலத்தில் தெலுங்கு பேசும் பிரதேசத்திலிருந்து வெளியேறி கரிசல் காட்டில் குடியேறி, நிலம் திருத்தி ஒரு சமூகமாக நிலைகொண்டு வாழத்தொடங்கிய ஒரு காலட்டத்தை கோபல்ல கிராமம் என்னும் நாவலாக எழுதி ஒரு முக்கியமான வகைமைக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தவர்.
கரிசல்
வட்டாரத்தில் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் எண்ணற்ற சொற்களைத் தொகுத்து கரிசல்
வட்டார வழக்கு அகராதியை முதன்முதலாக அவரே உருவாக்கினார். அந்த அகராதி, தமிழகத்தின்
பிற பகுதிகளில் வழங்கப்படும் வட்டாரவழக்குச் சொற்கள் தொகுக்கப்படுவதற்கு ஒரு தூண்டுதலாக
அமைந்தது. மேலும் குடியானவர்கள் தமக்குள் பேசிப்பேசி வாய்வழக்காகவே வழங்கிவந்த எண்ணற்ற கதைகளைச் சேகரித்து அற்புதமானதொரு நாட்டுப்புறக்கதைக்களஞ்சியத்தை
அவர் உருவாக்கினார். தன்னுடைய காலத்தில் வாழ்ந்த
எல்லா முக்கியமான ஆளுமைகளோடும் அவர் நெருங்கிப் பழகியவர். அவர்கள் அனைவரோடும் கடிதத்
தொடர்பிலும் அவர் இருந்திருக்கிறார். அவர்கள் ஒருவருக்கொருவர் எழுதிக்கொண்ட கடிதங்களில்
கூட இலக்கியச்சுவை மிளிர்கிறது. ’அன்புள்ள கி.ரா.வுக்கு’ என்ற தலைப்பில் அவருக்கு வந்த
கடிதங்கள் தொகுக்கப்பட்டு நூல்வடிவம் பெற்றுள்ளது.
புதுச்சேரி
பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் புதுவை வட்டாரத்தை
ஒட்டிய பகுதிகளில் நிலவும் நாட்டுப்புறக்கதைகளையும் பாடல்களையும் தொகுப்பதற்கு கி.ரா.
ஒரு முக்கியமான தூண்டுகோலாக இருந்தார். 17.05.2021 அன்று அவர் இம்மண்ணுலகைவிட்டு மறைந்தார்.
அவருடைய
நினைவைப் போற்றும் விதமாக அவரைப் போலவே தமிழிலக்கியத்துக்கு பல தளங்களில் தொடர்ச்சியாக
பங்காற்றிவரும் எழுத்தாளர்களில் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து கி.ராஜநாராயணன்
பெயரில் ஒரு விருது வழங்கும் விதமாக கோவையைச் சேர்ந்த விஜயா வாசகர் வட்டம் ஒரு முயற்சியை
முன்னெடுத்தது. விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்படும் எழுத்தாளருக்கு சக்தி மசாலா
நிறுவனத்தின் உதவியோடு ஐந்து லட்ச ரூபாய் விருது வழங்கி கெளரவித்தது. இதுவரை எழுத்தாளர்கள்
கண்மணி குணசேகரன், கோணங்கி, அ.முத்துலிங்கம்,
எஸ்.வி.ராஜதுரை, நாஞ்சில் நாடன் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களைத்
தொடர்ந்து இந்த ஆண்டுக்குரிய விருதாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் சு.வேணுகோபால்.
எழுத்தாளர்
சுஜாதா, குமுதம் இதழோடு தொடர்புகொண்டிருந்த 1994-95 காலகட்டத்தில் ஒரு நாவல் போட்டியின்
அறிவிப்பு வெளியானது. அப்போட்டியில் ‘நுண்வெளி கிரகணங்கள்’ என்னும் நாவல் முதல் பரிசைப்
பெற்றது. விருதாளருக்கு ஏர் இந்தியா நிறுவனத்தோடு இணைந்து குமுதம் ஓர் அமெரிக்கப்பயணத்துக்கான
பயணச்சீட்டை அளித்தது. தன் முதல் எழுத்தாக்கம் வழியாக வாசகர்களின் கவனத்தை ஈர்த்து
வெற்றி பெற்ற அந்த எழுத்தாளர் சு.வேணுகோபால்.
அந்த நாவல் முயற்சியைத் தொடர்ந்து கடந்த முப்பதாண்டுகளில் பல்வேறு சிறப்பான படைப்புகளை
அவர் நம் தமிழுலகத்துக்குத் தொடர்ந்து அளித்து வருகிறார். எண்ணற்ற சிறுகதைகளும் விமர்சனக்கட்டுரைகளும்
குறுநாவல்களும் அவருடைய முக்கியமான பங்களிப்பாகத் திகழ்கின்றன.
வேணுகோபாலின்
தொடக்கம் நாவல் களத்தில் நிகழ்ந்தபோதும் அவருடைய ஆர்வம் சிறுகதை, நெடுங்கதை, குறுநாவல்,
விமர்சனம் என பல கிளைகளாக விரிந்து சென்றன. ஒரு விவசாயியாகவும் ஆசிரியராகவும் மாறி
மாறி வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் அவருடைய படைப்புகளுக்கு வற்றாத ஊற்றுக்கண்களாக அமைந்துள்ளன.
அவருடைய சிறுகதைகள் மேல்தோற்றத்துக்கு ஒருவருடைய வாழ்வின் அன்றாடக் காட்சியைப்போலக்
காட்சியளித்தாலும் அவையனைத்தும் ‘மனிதன் ஏன் இப்படி புரிந்துகொள்ளமுடியாத புதிராக இருக்கிறான்’
என்று நினைத்துத் திகைக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. மண்ணை நோக்கி இறங்கும் ஒவ்வொரு
கடப்பாறைக் குத்தும் கொஞ்சம் கொஞ்சமாக ஆழத்தை நோக்கிச் செல்வதுபோல, வேணுகோபால் காட்சிப்படுத்தும்
ஒவ்வொரு புதிர்த்தருணமும் மானுட ஆழத்தை நோக்கியே செல்கின்றன. அந்த ஆழத்தில் அடங்கியிருக்கும்
இருளையும் ஒளியையும் வாசகர்களாகிய நாமும் பார்க்கவும் உணரவும் துணைசெய்கின்றன.
’பூமிக்குள்
ஓடுகிறது நதி’ என்பது அவருடைய தொடக்கக்காலக் கதைகளில் ஒன்று. அவருடைய செல்திசையை அடையாளப்படுத்தும்
விதமாக அக்கதை அமைந்திருப்பதை இப்போது உணரமுடிகிறது. இக்கதையில் இரு வெவ்வேறு காட்சிகள்
அழகாக இணைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சாதி சங்கத்தின் கட்டிடத்திலிருந்து கதை தொடங்குகிறது.
ஏதோ ஓர் அயலூரில் நடைபெற்ற சாதிக்கலவரத்தை அமைதியாக இருக்கும் அந்த ஊர் வரைக்கும் இழுத்துக்கொண்டு
வந்து பற்றவைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். எதிர்விளைவுகளைப்பற்றி எண்ணிப் பார்க்க
மனமில்லாத துடுக்கான இளைஞர்கள் தம்மால் முடிந்த அளவுக்குப் பதிலடி கொடுக்கவேண்டும்
என்று துடிக்கின்றனர். சமரசத்தை நாடும் மனம் கொண்ட விருமாண்டி என்னும் நடுவயதுக்காரரை
ஏளனம் செய்து சிரிக்கின்றனர். அதனால் தொடர்ந்து அக்கூட்டத்தில் இருக்க விரும்பாத அவர்
சங்கடத்துடன் வெளியேறிவிடுகிறார். மனிதர்கள் ஏன் இப்படி மாறிவிட்டார்கள் என அசைபோட்டபடி
நடக்கிறார். இது ஒரு தளம்.
விருமாண்டியின்
பேரக்குழந்தைக்கு தொட்டில் சடங்கு செய்யவேண்டும். அதற்காக மகள் பிறந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்தான் அந்தச் சடங்கைச் செய்யவேண்டும். சாதிக்கலவரம்
எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என ஊரே நடுங்கிக்கொண்டிருக்கிற தருணம் அது. ஒருவர்
புழங்கும் தெருவிலோ வீட்டிலோ, இன்னொருவர் எளிதாக வந்து படியேறிவிட முடியாதபடி சூழல்
மோசமாகிவிட்ட நேரம். எல்லா எதிர்ப்புகளையும் மீறி தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பிலிருந்து
சுப்பம்மா இருளடர்ந்த நேரத்தில் அவருடைய வீட்டுக்கு வருகிறாள். குழந்தைக்குச் செய்யவேண்டிய
தொட்டில் சடங்கைச் செய்துமுடிக்கிறாள். அதற்குரிய பணத்தைக் கூட அவள் வாங்கிக்கொள்வதில்லை.
“நல்ல பொழுதா விடிஞ்சா ஒரு பாலாடை பாலூத்த காலையில வரேன்” என்று சொல்லிவிட்டு பின்வாசல்
வழியாகவே வெளியேறிவிடுகிறாள்.
ஒரு புறம்
அர்த்தமற்ற மூர்க்கம். இன்னொருபுறம் கட்டற்ற அன்பு. எவ்விதமான மனச்சாய்வும் இல்லாமல்
இருட்டையும் வெளிச்சத்தையும் ஒருசேரக் காட்சிப்படுத்திவிட்டு நிறைவடைகிறது வேணுகோபாலின்
சிறுகதை. அதுதான் அவருடைய வலிமை.
‘ஒரு
துளி துயரம்’ என்றொரு சிறுகதை. இக்கதையிலும் இரு வெவ்வேறு தளங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் அவை வேறுவேறானவை என உணரமுடியாதபடி அழகாக இணைக்கப்பட்டிருக்கின்றன. சூம்பிப் போன
ஒரு காலுடன் ஓர் இளம்பெண். ஆசிரியைக்கான பயிற்சியை முடித்துவிட்டு வேலைக்காகக் காத்திருப்பவள்.
பலர் பல இடங்களிலிருந்து வந்து பெண் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். ஆனால் அவளுடைய
கால் ஊனம் அவளுடைய திருமணத்துக்குப் பெருந்தடையாக உள்ளது. அந்த நேரத்தில் அவளைப் பெண்
பார்க்க வந்த ஒருவன் அவளைத் திருமணம் செய்துகொள்கிறான். ஊனத்தைப் பார்த்ததும் பிறர்
போல முகம் சுருங்கிக் கசப்பைக் காட்டாமல் மலர்ந்த முகத்துடன் புன்னகை செய்கிறான். வாழ்நாளிலேயே
அவளைப் பார்த்து நிகழ்ந்த முதல் புன்னகை அது. அதுவே அவன் மீது அவளுக்கும் ஈர்ப்பு உருவாகக்
காரணமாக அமைந்துவிடுகிறது. அவனும் அவளை விரும்பித் திருமணம் செய்துகொள்கிறான்.
வட்டிக்குக்
கடன் கொடுத்து வாங்கும் தொழில் புரிபவன் அவனுக்கு உயிர்நண்பனாக இருக்கிறான். திருமண
வேலைகளில் அவனுக்குப் பல வேலைகளில் ஒத்தாசையாக இருக்கிறான். மேடையில் மணமக்களுக்கு
அருகிலேயே நின்று, அன்பளிப்பு உறைகளை அவன்தான் சேகரிக்கிறான். அடுத்தநாள் வந்து கணக்கு
சொல்வதாகத் தெரிவித்துவிட்டு தன் வீட்டுக்குச் சென்றுவிடுகிறான்.
முதல்
இரவின்போது சூம்பிப் போன கால் மீது அவன் முத்தமிட்டு அவள் மீது தான் கொண்ட காதலை உணர்த்துகிறான்.
அந்த முத்தம் அவன் மீது ஒரு நம்பிக்கையை அவளிடம் உருவாக்குகிறது.
அடுத்தநாள்
பொழுது அவனுக்கு நல்ல பொழுதாக விடியவில்லை. அவன் தரவேண்டிய எண்பதாயிரம் ரூபாய் கடன்
பாக்கிக்காக, வரிசைப்பணமாக வந்த எழுபதாயிரத்தை எடுத்துக்கொண்டதாக அவனுடைய வட்டிக்கடை
நண்பன் அனுப்பிய தகவல் மட்டுமே அவனைத் தேடி வருகிறது. முதல் இரவு முடிந்த மகிழ்ச்சியோடு
எழுந்து வந்தவன் அத்தகவலைப் பார்த்து மனம்
உடைந்துவிடுகிறான். உயிருக்குயிரான நண்பன் இப்படிச் செய்துவிட்டானே என தவிக்கிறான்.
அவனைச் சந்திப்பதற்காக நேரில் செல்கிறான்.
அந்தச்
சந்திப்பினால் பெரிய பயனெதுவும் விளையவில்லை. அவர்களுக்கிடையில் நிகழ்ந்த உரையாடல்
அவனை மேன்மேலும் வேதனையில் மூழ்கவைக்கிறது. கல்யாணத்துக்கென வாங்கிய பிற கடன்களை எப்படி
அடைப்பது என்று புரியாமல் தவிக்கிறான். முதலிரவின் போது நகை வாங்கிக் கொடுப்பதாக புதுமனைவிக்கு
அளித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்று புரியாமல் மனத்துக்குள் குமைகிறான்.
சூழலை எதிர்கொள்ளத் தேவையான துணிச்சலின்றி தற்கொலை செய்துகொள்கிறான்.
ஆனந்தமாகத்
தொடங்கிய மணவாழ்க்கை இப்படி குலைந்துபோனதை நினைத்து துயரத்தில் மூழ்குகிறாள் அவன் மனைவி.
இறந்துபோன கணவன் தரவேண்டிய பாக்கிப்பணம் பத்தாயிரம் ரூபாயை ஆறுமாத இடைவெளியில் எப்படியோ
திரட்டி எடுத்துச் சென்று நண்பன் வேடத்தில்
இருந்த வட்டிக்காரனிடம் கொடுக்கிறாள். அவள் மனம் அப்போதுதான் அடங்கி அமைதி கொள்கிறது.
ஆனால் பணத்தைப் பெற்றதும் அவன் உயிர்துறந்த நண்பனை நினைத்துக் கண்ணீர் சிந்துவான் என
அவள் நினைத்துவைத்திருந்த காட்சியைப்போல எதுவும் நிகழவில்லை. அது அவளைச் சற்றே ஏமாற்றத்துக்கு
ஆளாக்குகிறது.
அமைதியும்
ஏமாற்றமும் ஒருங்கே படிந்த மனத்துடன் அவள் வீடு திரும்புகிறாள். ஆனால் அதைப் புரிந்துகொள்ள முடியாத அவளுடைய அப்பா
அவள் உயிரோடு இருப்பதே வீண் என நினைத்து செத்துப்போ என வசைமழையைப் பொழிகிறார். இந்தக் கதையிலும் ஒரு புறம்
தந்திரமும் துரோகமும். இன்னொருபுறம் கட்டற்ற அன்பும் காதலும். இரண்டில் எது சரி, எது
தவறு என்ற எவ்விதமான விவாதத்திலும் வேணுகோபால் இறங்கவில்லை. அக்காட்சிகளை நம் முன்
சித்தரிப்பதை மட்டுமே தன் பணியெனக் கொண்டவர் போல, அப்புள்ளியிலேயே நின்றுவிடுகிறார்.
’களவு
போகும் புரவிகள்’ தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ‘சப்பைக்கட்டு’ ஒரு முக்கியமான சிறுகதை.
உலக வாழ்க்கையில் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பவனாக வலம் வருகிறான் ஒருவன். ஆனால்
தன் மனைவியிடமும் நெருக்கமான தோழியிடமும் மிகவும் மோசமான வகையில் நடந்துகொள்கிறான்.
இப்படி எது நடிப்பு என்பதே தெரியாமல் வாழ்ந்து வாழ்ந்து சொந்தமான முகமோ, குரலோ அற்றவர்களாக
மறைபவர்களே இவ்வுலகில் நிறைந்திருக்கின்றனர். ‘வட்டத்திற்குள்ளே’ இன்னொரு முக்கியமான
சிறுகதை. இல்லறவாழ்க்கையைப்பற்றிய விவரிப்பில் ‘காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவுப்பட்டதே
இன்பம்’ என்பது ஒளவையின் பாடல் வரி. ஆனால்
எதார்த்த வாழ்வில் பலருடைய குடும்ப வாழ்க்கை அப்படி அமைவதில்லை. பெரும்பாலும் எதிர்பார்ப்பில்
தொடங்கி ஏமாற்றத்தில் முடிவடைவதாகவும் அல்லது ஒருவரை ஒருவர் வஞ்சிப்பதாகவும் அல்லது
ஒருவரை இன்னொருவர் அடிமைப்படுத்தி ஆட்சி செய்ய நினைப்பதாகவும் அமைந்துவிடுகின்றன. இவ்விதமாக நிலைகுலைந்துபோன ஒரு தம்பதியினரின் வாழ்க்கையை
’வட்டத்திற்குள்ளே’ கதையில் சித்தரித்துக் காட்டுகிறார் வேணுகோபால்.
ஒரு கணவன் குடும்பப்பொறுப்பைக் காரணமாகக் காட்டி முதலில்
தன் மனைவியின் கனவுகளைக் கலைக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் உள்ள படைப்பாற்றலையே
அழிக்கிறான். ஒவ்வொரு நாளையும் அமைதியற்றதாக நிலைகுலைய வைக்கிறான். கடைசியில் தன் விருப்பம்
வெல்லவேண்டும் என்கிற மூர்க்கத்துடன் அவள் வயிற்றில் வளரும் கருவையே கலைக்கவைக்கிறான்.
மனிதன் ஏன் இத்தனை வன்மம் நிறைந்தவனாக இருக்கிறான் என்பது புரியாத புதிர்.
’திசையெல்லாம்
நெருஞ்சி’ கதையில் மனிதர்களிடம் வெளிப்படும் இருவித அணுகுமுறைகளை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்
வேணுகோபால். எதிர்பாராமல் நடைபெற்ற நிகழ்ச்சியின் காரணமாக சகஜமான ஒன்றாக இருந்த அணுகுமுறை
திடீரென மாறிவிடுகிறது. கிராமத்தில் அனைவருக்கும் முடி திருத்தும் தொழிலைச் செய்பவன்
பழநி. அதற்கும் அப்பால், கிராமத்தில் வசிக்கும் அனைவரும் சொல்லும் குற்றேவல்களையும்
அவன் எவ்விதமான தயக்கமும் இன்றி செய்கிறான். அவர்களும் அவ்வப்போது பதிலுக்கு காய்கறிகளென்றும் அரிசி, பருப்பு, புளி
என்றும் கொடுத்திருக்கிறார்கள்.
எல்லாம்
நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஒருநாள் அவனுக்கும் கிராமத்தைச் சேர்ந்த இன்னொருவனுக்கும்
மோதல் வலுத்துவிடுகிறது. ஒரு வேகத்தில் அவன் கிராமத்தானை அடித்துவிடுகிறான். உடனே ஊரில்
வசிக்கும் பலரும் அவனுக்கு எதிராகத் திரண்டு, சாதியைக் காரணமாகக் காட்டி, ‘ஒரு சம்சாரியை
இவன் எப்படி கைநீட்டி அடிக்கமுடியும்?’ என்று வசைபாடி பழநியின் குடும்பத்தை ஒதுக்கி
வைக்கிறது.
அந்த
நேரத்தில் எதிர்பாராத விதமாக அவனுடைய மகனுக்கு அம்மை போட்டுவிடுகிறது. வைத்தியர் அவனை
வாழை இலை மீது படுக்கவைக்கும்படி சொல்லிவிட்டுச் செல்கிறான். ஆனால் ஊரில் வசிப்பவர்கள் ஒருவரும் அவனுக்கு வாழை
இலை கொடுப்பதில்லை. எல்லோருடைய வீடுகளிலும் வாழை மரங்கள் இருந்தபோதும், அவனுக்கு ஓர்
இலையை அறுத்துக் கொடுக்க யாரும் தயாராக இல்லை. அந்த அளவுக்கு சாதிப்பற்று அவர்கள் விழிகளை
மூடிவிடுகிறது. முதலில் திகைக்கிறான் அவன். பிறகு தவிக்கிறான். கழிவிரக்கத்தால் வேதனை
கொள்கிறான். இறுதியில் அவனுடைய விழியும் மூடிவிடுகிறது. ஊரைவிட்டு வெளியேற முடிவெடுக்கும்
அவன் புறப்படும் முன்பு ஊரைச் சுற்றியிருக்கும் நெருஞ்சிக்காட்டுக்குத் தீமூட்டிவிட்டுச்
செல்கிறான். நெஞ்சம் ஈரம் அற்று உலர்ந்து போகும்போது நெருப்பு எளிதாகப் பற்றிக்கொள்கிறது.
வேணுகோபாலின்
மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று ’புத்துயிர்ப்பு’. மழையின்மையின் காரணமாக ஊரே வறண்டுபோய்
இருக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் கூட எங்குமில்லை. பிள்ளைத்தாய்ச்சியான மனைவியையும்
கன்றீனும் நிலையில் உள்ள பசுவையும் வைத்துக்கொண்டு பிழைத்திருக்க வழியில்லாமல் தடுமாறுகிறான்
ஒரு விவசாயி. மாடு வளர்த்த விவசாயிகள் அனைவரும் மாடுகளுக்குத் தீவனம் கொடுக்கமுடியாத
நிலையில் வந்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள். ஆனால் கன்று போட்ட பிறகு பசு பால் கொடுக்கத்
தொடங்கிவிடும், அந்தப் பாலை விற்பனை செய்து வருமானத்துக்கு வழி பார்க்கலாம் என நினைக்கிறான்
அவன். அதனால் ஊர்க்காரர்கள் போல பசுவை விற்காமல் படாத பாடு பட்டு அதற்கு எங்கெங்கோ
அலைந்து திரிந்து தீவனம் கொண்டுவந்து போடுகிறான். குறிப்பிட்ட ஒரு நாளில் அவனுக்கு
பசுவுக்குக் கொடுக்க புல்லோ வைக்கோலோ எங்கும் கிடைக்கவில்லை. வெறும் கையோடு திரும்ப
மனமில்லாமல் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு கவுண்டர் வீட்டுத் தோட்டத்தில்
இருந்த வைக்கோல் போரில் திருடச் செல்கிறான். துரதிருஷ்டவசமாக பிடிபட்டு உதைபடுகிறான்.
அந்த அவமானத்தில் அவன் தற்கொலை செய்துகொள்கிறான்.
அதே நேரத்தில்
அவன் மனைவி ஒரு பெண்குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். பிறந்த குழந்தையின் மீது வெயில்
படும்படி காட்டுகிறாள் ஒருத்தி. அது ஒரு சடங்கு. மனக்கசப்போடு சூரியனின் திசையில் பார்த்து
“கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் மேலே போகிற சூரியனே, இந்தா இந்தக் குழந்தையைப் பாரு”
என்று சொல்கிறாள். கையையும் காலையும் அசைக்கும்
குழந்தையின் முகத்தில் சிரிப்பு படர்கிறது. கடவுளைப் பார்த்து கேலியுடன் சிரிக்கும்
குழந்தையின் சிரிப்பு என்று அச்சிரிப்பைக் குறிப்பிடுகிறார் வேணுகோபால்.
வறட்சியின்
சித்திரத்தை வேணுகோபாலின் ’உயிர்ச்சுனை’ என்னும் சிறுகதையிலும் நாம் பார்க்கமுடியும்.
வயலையொட்டிய பாசனக்கிணற்றின் நீர்மட்டம் மிகமிகக் கிழே இறங்கிவிட்டது. கொஞ்சம் செலவு
செய்து கிணற்றை ஆழப்படுத்திவிட்டால் தண்ணீர் கிடைக்கும் என நம்புகிறான் விவசாயி. ஆனால்
அவனிடம் பணம் இல்லை. புகுந்த வீட்டுக்குச் சென்றுவிட்ட மகளிடம் கடன் வாங்கிவந்து வேலையைத்
தொடங்குகிறான். துரதிருஷ்டவசமாக அந்த முயற்சி ஏமாற்றத்தில் முடிந்துவிடுகிறது. பணம்
கொடுத்த மகள் வாய்க்கு வந்தபடி பேசுகிறாள். அவனால் தன் மனச்சுமையை யாரிடமும் பகிர்ந்துகொள்ள
முடியவில்லை.
அந்த
வயற்காட்டில் வேடிக்கை பார்க்கவந்த சிறுவயது பேரன் கதையின் ஆரம்பத்திலிருந்து இடம்பெறுகிறான்.
கிணற்று வேலை ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும்போது, இன்னொரு பக்கம் அவன் விளையாடுகிறான்.
அந்த விளையாட்டில் அவனுக்குக் காயம் ஏற்பட்டுவிடுகிறது. அவனுக்கு வலிக்கிறது. அழுகை
வருகிறது. தன் வேதனையைச் சொல்லிப் பகிர்ந்துகொள்ள அவன் ஒவ்வொருவராக நாடிச் செல்கிறான்.
இனிமேல் கிணற்றில் தண்ணீர் வர வாய்ப்பில்லை என்பது திட்டவட்டமாகத் தெரிந்த கணம் அது.
ஒவ்வொருவரும் அவரவர் துயரத்தில் மூழ்கியிருக்கும்போது அச்சிறுவனின் துயரக்கதையைச் செவிமடுக்க
ஒருவரும் இல்லாமல் போகிறார்கள். ஒருபுறம் மனச்சுமையைப் பகிர்ந்துகொள்ள ஒருவருமில்லை
என்பதை உணர்ந்து நாய்க்குட்டியிடம் பேசிவிட்டு வெளியேறும் சிறுவன். இன்னொருபுறம் தன்
மனச்சுமையைப் பகிர்ந்துகொள்ள ஒருவருமில்லை என்பதை உணர்ந்து சூரியனிடம் பேசிவிட்டுத்
திரும்பும் பெரியவர். மனிதர்கள் மீது இயற்கை பரிவு காட்டாத சூழலில் மனிதர்களும் பரிவற்றவர்களாக
மாறிவிடுகிறார்கள்.
வேணுகோபாலின்
சிறுகதைகளில் தொடர்ச்சியாக பலவகையான மனிதர்கள் வெளிப்படுவதை நாம் பார்க்கமுடிகிறது.
ஒரு கோணத்தில் ஏராளமான வகைமாதிரிகளை அவர் இச்சமூகத்திலிருந்து கண்டெடுத்து தம் கதைகளில்
பாத்திரங்களாக அமைத்திருக்கிறார் என்று சொல்லலாம். ஒரு கதையில் அண்ணன் என வாய்நிறைய
அழைத்து உரையாடுகிற பக்கத்துவீட்டு இளம்பெண்ணை, தம் வேட்கைக்கு உணவாக அழைக்க ஒவ்வொரு
கணமும் திட்டமிட்டு, மனத்துக்குள்ளேயே அதற்கு ஒத்திகை பார்க்கிறான் ஒருவன். இன்னொரு கதையில் தங்கைகளை ஒவ்வொருவராக கரையேற்றுவதை
தன் கடமையெனக் கொண்டு செயல்படும் ஒருவன், இரவு நேரத்தில் தன் பாலுணர்வுக்கு வடிகாலாக
தன் சகோதரியைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறான். மற்றொரு சிறுகதையில் தன் இயலாமையை
மதுவின் வழியாக மறைத்துக்கொண்டு வேலையற்றவனாகவும் யாருக்கும் பிடிக்காதவனாகவும் கணவன்
திரிந்தலையும் சூழலில் தன் மீது சுமத்தப்பட்ட மலட்டுப்பட்டத்தைப் பொய்யாக்குவதற்கு
மாமனாரை நெருங்கிச் செல்கிறாள் ஒருத்தி. மனப்பிறழ்வின் காரணமாக யாரோலோ கருவுற்று, குழந்தையையும்
பெற்றுவிட்டு, அக்குழந்தையை யாரையும் தொடவிடாமலும் குழந்தையின் பசியைத் தீர்க்கத் தெரியாமலும்
குழந்தை இறந்துவிட்டது என்னும் உண்மையைக் கூட உணரமுடியாமல் இறந்த குழந்தையுடன் திரிந்தலைகிறாள்
இன்னொருத்தி. இப்படி நாம் அடுக்கிக்கொண்டே
செல்லலாம்.
சுடர்விட்டபடி
இருக்கும் வானத்துச் சந்திரனை திடீரென எங்கிருந்தோ வந்த இருள் மெல்ல மெல்ல ஆக்கிரமித்து
தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த ஆக்கிரமிப்பிலிருந்து
எப்படியோ சந்திரன் தன்னை விடுவித்துக்கொண்டு மீண்டும் வானத்தில் காட்சியளிக்கத் தொடங்குகிறது.
அதைத்தான் நாம் சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம். சந்திரனுக்கு ஏற்பட்ட நிலை சூரியனுக்கு
ஏற்படும் போது அது சூரிய கிரகணமாகிறது. நம் புறக்கண்களால் இவற்றை நம்மால் நேரிடையாகப்
பார்க்கவும் முடிகிறது.
இதைப்போன்ற
கிரகணங்கள் நம் அகத்திலும் சிற்சில நேரங்களில் நிகழக்கூடும். எங்கிருந்தோ வரும் ஒரு
பேரிருள் நம் அகத்தை எதிர்பாராத விதமாக ஆக்கிரமித்து நம்மைச் செயலிழக்கவைத்துவிடும்.
சிற்சில நேரங்களில் எவ்விதமான திட்டமும் இல்லாமல் எதைஎதையோ செய்யவைக்கவும் கூடும்.
கண்ணுக்குப் புலப்படாத அல்லது உணரவே முடியாத அத்தகு கரிய தருணங்களே உண்மையில் ‘நுண்வெளிக்
கிரகணங்கள்’ குடும்ப வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் இத்தகு கிரகணத்தருணங்களால்
ஏற்படக்கூடிய விளைவுகளை ஒரு சமூகத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறையினரின் வாழ்க்கையை முன்வைத்து
நாவலாக எழுதியிருக்கிறார் வேணுகோபால். அதன் தனித்தன்மையின் காரணமாகவே, தமிழின் சிறந்த
நாவல்கள் வரிசையில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.
இஸ்லாமியரின்
தாக்குதலிலிருந்து தம் பெண்களைக் காப்பாற்றுதற்காக இரவோடு இரவாக இடம்பெயரும் ஒரு சமூகத்தின்
கதையை கோபல்லபுரம் என்னும் தலைப்பில் கி.ராஜநாராயணன் ஒரு நாவலாக எழுதியிருக்கிறார்.
இதற்கு நிகரான ஒரு தாக்குதலிலிருந்து தம் பெண்களைக் காப்பாற்றுவதற்காகவே வேணுகோபால்
சுட்டிக் காட்டும் சமூகமும் குடிபெயர்ந்து முற்றிலும் புதியதொரு இடத்தில் வேரூன்றி
வளர்கிறது.
அயலார்
தாக்குதல் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அரும்பாடுபட்டு காப்பாற்றி அழைத்து
வந்தவர்கள் தத்தம் மனைவிமார்கள் மீது செலுத்தும் வன்முறையின் சித்திரம், அந்த அயலாரின்
கொடுமையைவிட மோசமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு அயலான் அமர்ந்திருக்கிறான்.
பெண்கள் மீது அதிகாரம் செய்கிறான். அவர்களிடம் வன்முறையாக நடந்துகொள்கிறான். அவர்களுடைய
அமைதியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவர்களைக் கொடுமைப்படுத்துகிறான்.
தன் ஆண்மையைப்பற்றி ஏதோ ஒரு சொல்லை கிண்டலாகச் சொன்ன காரணத்துக்காக, கர்ப்பிணியாக இருக்கும் மனைவியின் பிறப்புறுப்பில்
களைக்கொத்தைச் செருகி துன்புறுத்தி பிறந்த வீட்டுக்கு அனுப்பிவைக்கிறான் கணவன். மற்றொரு
குடும்பத்தைச் சேர்ந்த கணவன் அவனைவிடக் கொடுமைக்காரனாக இருக்கிறான். தன் தொழில் வளர்ச்சிக்காக
பிறந்த வீட்டிலிருந்து பண உதவியைக் கேட்டு வாங்கிக் கொடுக்க தன் மனைவி மறுத்துவிட்டாள்
என்பதை மனத்தில் வைத்துக்கொண்டு, ஒருநாள் அவளுடன் உடலுறவு கொள்ளும் சமயத்தில் அவளுடைய
பிறப்புறுப்பில் மிளகாய்த்தூளை வன்மத்தோடு தூவிவிடுகிறான் அவன்.
ஆண்கள்
மட்டுமல்ல, பெண்களும் பல இடங்களில் வன்மத்தோடு நடந்துகொள்கிறார்கள். குடும்பங்களில்
அவர்கள் திட்டமிட்டு நிகழ்த்தும் குழப்பங்களுக்கு அளவே இல்லை. சக்களத்தியிடமிருந்து கணவனை மீட்பதற்காகச் செய்கிற
சடங்கில் தன் மகனையே நரபலியாகக் கொடுக்கத் தயாராக நிற்கிறாள் ஒரு பெண். ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த மருமகள்களுக்கு இடையிலும் மருமகளுக்கும் மாமியாருக்கும் இடையிலும் நிலவும்
உறவுகளில் பல நேரங்களில் வஞ்சமும் எரிச்சலும் வெளிப்பட்டபடியே இருக்கின்றன. கனிவும்
அன்பும் வெளிப்படும் தருணங்களைவிட, எரிச்சலும் சீற்றமும் வெளிப்படும் தருணங்களே இவர்களுடைய
வாழ்வில் அதிகமாக இடம்பிடித்திருக்கின்றன. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் மனிதர்கள்
நெஞ்சில் இப்படி திடீரென வந்து கவியும் நுண்மையான கிரகணத்தைத்தான் வேணுகோபாலின் நாவல்
பேசுபொருளாக கொண்டுள்ளது.
நாவல்
வளர்ந்து செல்லும் போக்கில், ஒக்கலிகர் சமூகத்தில் நிலவும் சடங்குமுறைகளையும் நம்பிக்கைகளையும்
முன்வைத்திருக்கிறார் வேணுகோபால். அவை அனைத்தும் பண்பாட்டுக்குறிப்புகள் என்ற போதும் எந்த இடத்திலும் நாவலின் பாதையைவிட்டு விலகாமல் கதைப்போக்கோடு இணைத்திருக்கும்
விதம் அவர் பின்பற்றும் கலை அமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.
பெரும்பாலான
ஒக்கலிகர்கள் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள். ஒவ்வொருவரும் தம் வீட்டில் மாடு வளர்க்கிறார்கள்.
பெற்ற குழந்தைகளை நேசிப்பதுபோல தம் மாடுகளையும் அவர்கள் நேசிக்கிறார்கள். மாட்டுப்பொங்கல்
அன்று பிறந்து வளரும் மாட்டை ஒரு குடும்பம் ஒருபோதும் விற்பனை செய்யக்கூடாது என்பது
ஒரு நம்பிக்கை. மாட்டைப்போலவே அவர்கள் வாழ்க்கையோடு இணைந்திருக்கும் இன்னொன்று கம்பளி.
எல்லாக் கட்டங்களிலும் அவர்கள் வாழ்வில் கம்பளி மிகவும் முக்கியமானது. வீடாக இருந்தாலும்
சரி, மேடையாக இருந்தாலும் சரி, விசேஷ தினங்களில் அவர்கள் கம்பளி விரித்து அதன் மீதுதான்
உட்கார்ந்து பேசவேண்டும். ஆனால் அந்தக் கம்பளியின் மீது பெண்கள் அமரக்கூடாது. ஒரு விதவையை
மணந்த ஆண்களும் அமரக்கூடாது. இப்படி ஒரு நம்பிக்கையும் இருக்கிறது.
திருமணங்களில்
பெண்களுக்குத் தாலி கட்டும் பழக்கம் கிடையாது. ஆண்கள் தம் கால்களில் மெட்டி அணிந்துகொள்ள
வேண்டும். பெண்கள் பூப்படைவதை ஒட்டி நிகழும்
சடங்குமுறை இன்னும் விரிவானது. அவர்கள் பதினேழு நாட்கள் தனிக்குடிசையில் வசிக்கவேண்டும்.
அதற்குப் பிறகுதான் அவர்களை வீட்டுக்கு அழைத்துக்கொள்ளும் சடங்கு நடைபெறும். அப்போது
துணிவெளுக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர் வெளுத்த உடைகளைக் கொண்டுவந்து கொடுப்பார். அதைத்தான்
அந்தப் பெண் அணியவேண்டும். வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் நாய்க்குச்
சோறு வைக்கவேண்டும். நாய் சோறு தின்னும் முறையை வைத்தே அந்தப் பெண்ணின் எதிர்காலத்தைக்
கணித்துச் சொல்லும் முறையும் உண்டு. பெண்கள் மட்டுமே ஆடையின்றி நின்று சாமியை வணங்கும்
ஒரு பண்டிகையும் அவர்களிடையில் உண்டு. மழை பொய்த்துவிடும் காலங்களில் மழை வேண்டி கழுதைகளுக்குத்
திருமணம் செய்துவைக்கும் சடங்கும் உண்டு. எல்லாத் தகவல்களையும் கதைப்போக்கிலேயே பதிவு
செய்திருக்கிறார் வேணுகோபால்.
வேணுகோபாலின்
மற்றொரு முக்கியமான நாவலான ’வலசை’ மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் நிகழும்
மோதலைக் களமாகக் கொண்டிருக்கிறது. இந்த உலகம் இங்கு தோன்றிய எல்லா உயிரினங்களும் வாழ்வதற்காகவே
அமைந்திருக்கிறது. இந்த உலகில் ஓர் எறும்புக்கு உள்ள வாழும் உரிமையும் ஒரு யானைக்கு
உள்ள வாழும் உரிமையும் ஒன்றே. எல்லா விலங்குகளுக்கிடையிலும் அந்தப் புரிதலும் ஓர் ஒத்திசைவும்
உண்டு. எல்லா ஜீவராசிகளையும் போல மனித இனமும் இங்கு வாழக்கூடிய ஒரு ஜீவராசி. மனிதர்களுக்கென
தனி சட்டமென எதுவும் இயற்கையில் இல்லை. ஆனால் மனிதர்கள் அப்படி நினைப்பதில்லை. இயற்கையையும்
இந்த பூமியையும் தன்னுடைய சொத்து போல சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள். இந்த உலகத்தில்
வாழும் உரிமை மனிதர்களுக்கு மட்டுமே இருப்பதாக நினைக்கிறார்கள்.
அந்த
எண்ணம் உருவானதும், தம்மைச் சுற்றி வாழ்கிற விலங்குகளை விரட்டவும் கொல்லவும் முனைகிறார்கள்.
காடுகளின் நிலப்பரப்பு கொஞ்சம்கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஓடைகளும் ஏரிகளும் மறைந்து
வருகின்றன. ஆற்றில் நீர்வரத்து குறைந்துவருகிறது. நீரில்லாத ஆறுகள் மணல்மேடாகக் காட்சியளிக்கின்றன.
மீன்கள் அழிகின்றன. சுற்றுப்புறச்சூழல் மாசடைகிறது. ஆயினும் மனம் திருந்தா மனிதர்கள்
உலகத்தைத் தம் வசமாக்கும் முயற்சியில் சற்றும் பின்வாங்காதவர்களாக இருக்கிறார்கள்.
அவர்களால் வாழ்விடங்களை இழந்த வனவிலங்குகள் பல நேரங்களில் ஊருக்குள் நுழைந்துவிடுவதும்
தம் குடியிருப்புப்பகுதிகளில் அவை நுழைந்துவிடாதபடி தடுக்க மின்வேலிகளை ஏற்படுத்தி
மனிதர்கள் அவற்றைக் கொல்வதும் தினந்தோறும் நடைபெற்றுவருகின்றன. வலசை வந்த மனிதர்களுக்கும் காடு சுருங்கிவருவதன் காரணமாக வலசை போகமுடியாத யானைகளுக்கும்
இடையில் நிகழும் மோதலை ஒரு களமாகக் கொண்டு இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் மாறிமாறிக்
காட்டி அழகானதொரு நாவலாக எழுதியிருக்கிறார் வேணுகோபால்.
வேணுகோபாலின்
‘நிலமென்னும் நல்லாள்’ இன்னொரு முக்கியமான நாவல். இன்றைய நவீன சமூகத்தின் சிக்கலை அது
அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. இடப்பெயர்ச்சி இல்லாமல் இன்றைய வாழ்க்கை இல்லை
என்கிற நிலைக்கு நாம் வந்து நிற்கிறோம். பிறந்த இடத்திலேயே நமக்கு எல்லாம் கிடைத்துவிடுவதில்லை.
கல்வி, திருமணம், வேலை என ஏதோ ஒரு காரணம் தொடர்பாக
நகர்ந்துகொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. தன் சொந்தக் காரணங்களுக்காக நகர மறுப்பவன்
வாய்ப்புகளை இழக்கவேண்டியிருக்கிறது.
வேலை
காரணமாகவும் இல்வாழ்க்கை காரணமாகவும் இடம்பெயர்ந்த ஒருவனுடைய வாழ்க்கையைக் களமாகக்
கொண்டு ’நிலமென்னும் நல்லாள்’ நாவலை எழுதியிருக்கிறார் வேணுகோபால். கிராமத்தில் வாழ்ந்த
நிலத்தைவிட்டு வந்துவிட்டோமே என்னும் எண்ணம் தொடக்கத்தில் ஒரு துன்பமாக அவனை அலைக்கழிக்கிறது. காலம் மெல்லமெல்ல அவனை அந்த அலைக்கழிப்பிலிருந்து
மீட்டெடுத்து வெளிச்சத்தைக் காட்டுகிறது. வந்து சேர்ந்திருக்கும் இடமும் ஒரு நிலமே
என்பதையும் நகரம் என்பது நிலத்தின் இன்னொரு வடிவமே என்பதையும் அவன் போகப்போகப் புரிந்துகொள்கிறான்.
நிலம் மனிதனை ஒருபோதும் கைவிடுவதில்லை என்னும் உண்மையை அவன் கண்டறிந்துகொள்கிறான்.
அவன் கண்டறிந்த உண்மை, அவனுக்கானது மட்டுமல்ல, கிராமங்களைவிட்டு நகரத்துக்கு வந்து
குடியேறிய லட்சக்கணக்கான மனிதர்களுக்கான உண்மை.
அது ஒரு தரிசனமாக இந்த நாவலில் வெளிப்படுகிறது.
வேணுகோபாலின்
நேரடிப் படைப்புகளைப்போலவே, தமிழின் பல முன்னோடிப் படைப்பாளிகளின் சிறுகதைகளை முன்வைத்து
ஆய்வு செய்து அவர் எழுதிய கட்டுரைகளும் மிகமுக்கியமானவை. அக்கட்டுரைகள் ‘தமிழ்ச்சிறுகதையின்
பெருவெளி’, ‘தமிழ்ச்சிறுகதை ஒரு காலத்தின் செழுமை’ என இரு பெருந்தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு
நூல்களாக வெளிவந்துள்ளன. புதுமைப்பித்தன், கு.ப.ரா., மெளனி, ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா,
கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்ற மூத்த
தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளிகளின் சிறுகதைகள் முதல் அறுபதுகளிலும் எழுபதுகளிலும்
எழுதிய சூடாமணி, கந்தர்வன், பா.செயப்பிரகாசம் போன்ற படைப்பாளிகளின் சிறுகதைகள் வரை
அனைவருடைய கதைகளையும் அவர் பொருட்படுத்தி வாசித்து மதிப்பிட்டிருக்கிறார். சிறுகதையின்
வெவ்வேறு காலகட்டத்தைப் புரிந்துகொள்ளவும் படைப்பாக்கத்தில் ஏற்பட்ட நுட்பமான மாற்றங்களை
உள்வாங்கிக்கொள்ளவும் இவருடைய ஆய்வு உதவியாக இருக்கின்றன.
ஒரு படைப்பாளியைப்
பொருட்படுத்தி வாசிக்காமலேயே கடந்து செல்லும் வாசகர்கள் நிறைந்த இன்றைய சூழலில், இப்படிப்பட்ட
முன்னோடிகளின் படைப்புகளைத் தேடித்தேடிப் படித்து, மதிப்பிட்டு கட்டுரைகளாக ஆவணப்படுத்தியிருக்கும்
வேணுகோபாலின் முயற்சி பெரிதும் பாராட்டுக்குரியது.
வேணுகோபால்
ஒரு பட்டதாரி என்றபோதும் அடிப்படையில் விவசாயத்தோடு இன்னும் தொடர்பில் இருப்பவர். விவசாயத்தின்
நுட்பங்களைப்போலவே விவசாய மனிதர்களின் மன ஓட்டங்களையும் நுட்பமாகத் தெரிந்துவைத்திருப்பவர்.
அவற்றையே கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகளாகவும் குறுநாவல்களாகவும் நாவல்களாகவும்
எழுதிவந்திருக்கிறார். சிறந்ததைப் பார்த்து பாராட்டும் மனம் இருப்பதாலேயே அவரால் ஓர்
ஆய்வாளராகவும் உயர்ந்து நிற்கமுடிகிறது. வேணுகோபாலுடைய எழுத்தின் மகத்துவத்தை நன்கு
அறிந்த விஜயா பதிப்பகம் கி.ரா.விருதுக்கு முற்றிலும் தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.
எழுத்தாளர் சு.வேணுகோபாலுக்கு என் மனமார்ந்த
வாழ்த்துகள்.
(பேசும் புதிய சக்தி – நவம்பர் 2025)