Home

Showing posts with label பேசும் புதிய சக்தி. Show all posts
Showing posts with label பேசும் புதிய சக்தி. Show all posts

Sunday, 15 February 2026

விளக்கு விருது விழா - 2026

  

சென்ற நூற்றாண்டில் தொண்ணூறுகளில் தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற இலக்கிய நண்பர்கள் இணைந்து ’விளக்கு’ என்னும் அமைப்பை உருவாக்கினார்கள். அந்த அமைப்பின் வழியாக 1995ஆம் ஆண்டு முதல் புதுமைப்பித்தன் நினைவாக இலக்கியத்தில் மிகச்சிறப்பாகப் பங்காற்றியவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக விளக்கு விருதை வழங்கிவருகிறார்கள்.

Sunday, 23 November 2025

சு.வேணுகோபால் : ஒளியும் இருளும்

 

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நம்மிடையே வாழ்ந்து மறைந்த பன்முக ஆளுமை. கரிசல் காட்டு வாழ்க்கைக்கு ஓர் இலக்கிய முகத்தை அளித்தவர் அவர். கரிசல் மண்ணையும் அங்கு வாழ்ந்த மனிதர்களின் நம்பிக்கைகளையும் வாழ்க்கைப்போக்குகளையும் முன்வைத்து எண்ணற்ற சிறுகதைகளைப் படைத்தவர். முன்னொரு காலத்தில் தெலுங்கு பேசும் பிரதேசத்திலிருந்து வெளியேறி கரிசல் காட்டில் குடியேறி, நிலம் திருத்தி ஒரு சமூகமாக நிலைகொண்டு வாழத்தொடங்கிய ஒரு காலட்டத்தை கோபல்ல கிராமம் என்னும் நாவலாக எழுதி ஒரு முக்கியமான வகைமைக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தவர்.

Sunday, 16 March 2025

புதிர்த்தருணங்களின் காட்சி

 

சங்க காலக் கவிஞர்கள் தம் பாடல்களை எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே வாழ்க்கையின் புரியாத புதிர்களை எழுதத் தொடங்கிவிட்டனர் என்றே சொல்லவேண்டும். நற்றிணையில் பாலைத்திணைப் பாடலொன்று ‘முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார் வாழ்நாள் வகை அளவு அறிஞரும் இல்லை’ என்னும் புதிரோடுதான் தொடங்குகிறது. தலைவியின் குரலில் அமைந்த அப்பாடல் இளமை அழிந்த முதுவயதில் இளமையை மீண்டும் திரும்பப்பெற முடியாது என்பதும் குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்திருப்போம் என ஒருவராலும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது என்பதும் ஏன் இந்தத் தலைவனுக்குத் தெரியவில்லை, இன்பம் துய்க்கவேண்டிய தருணத்தில் இவன் ஏன் பிரிந்துசெல்கிறான். இது புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறதே என புலம்பும் தலைவியின் மனக்குறையைத்தான் அப்பாடல் எதிரொலிக்கிறது. புரிந்துகொள்ள முடியாத புதிர்த்தருணங்கள் ஆதிகாலத்திலிருந்தே படைப்புக்களமாக விளங்கி வந்திருக்கின்றன.

Sunday, 26 January 2025

மலேசியப்பயணம் : அழகான நிலமும் அன்பான மனிதர்களும் - 1

 

இலக்கியத்தின் ஆர்வமுள்ள மலேசிய இளைஞர்கள் அதன் கலைநுட்பத்தை கூர்மையாக அறிந்துகொள்ளும் விதத்தில் பல்வேறு பயிற்சி முகாம்களையும் இலக்கியத்திருவிழாக்களையும் எழுத்தாளர் நவீன் ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவில் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். இந்த ஆண்டுக்குரிய வல்லினம் இலக்கியத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து நானும் நண்பர் ஜா.ராஜகோபாலும் விமானம் வழியாக கோலாலம்பூர் வந்து சேர்ந்தோம். என்னோடு என் மனைவி அமுதாவும் வந்திருந்தார். இந்திய நேரத்துக்கும் மலேசிய நேரத்துக்கும் இரண்டரை மணி நேர வித்தியாசம். இந்திய நேரப்படி 28.11.2024 அன்று  நண்பகல் 11.45க்குப் புறப்பட்ட விமானம் மலேசிய நேரப்படி மாலை 6.45க்கு கோலாம்பூருக்கு வந்து சேர்ந்தது. முறைப்படியான சோதனைகள் முடிந்து நாங்கள் வெளியே வரும்போது ஏழரை ஆகிவிட்டது. அப்போதே வானில் இருள் சூழந்துவிட்டது. 

மலேசியப்பயணம் : அழகான நிலமும் அன்பான மனிதர்களும் - 2

 தொடர்ச்சி.....

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கீசியர்கள் மலேசியாவைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அவர்கள் வந்த வழியிலேயே வந்த டச்சுக்காரர்கள் அவர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அதற்கு அடுத்த நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் காட்டுப்பாதைகள் வழியாக மலேசியாவுக்குள் நுழைந்தார்கள். ஆயிரக்கணக்கான மிதிவண்டிகள் வழியாக காட்டை ஊடுருவிப் பயணம் செய்து டச்சுக்காரர்களுடன் மோதினர்.  அதிக அளவிலான உயிரிழப்பைத் தவிர்ப்பதற்காக  டச்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டனர். இந்தோனோசியாவையும் அதற்கு அடுத்த பகுதிகளையும் டச்சுக்காரர்கள் வைத்துக்கொள்ள, ஆங்கிலேயர்கள் மலேசியாவைக் கைப்பற்றிக்கொண்டனர்.

Sunday, 12 November 2023

கருணையினால் - கட்டுரை

 

மணிப்பால் மருத்துவமனையில் நண்பரொருவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. மூன்று நாட்கள் ஆழ்கவன சிகிச்சைப் பிரிவு அறையிலேயே வைத்திருந்தார்கள். பிறகுதான் வேறொரு சாதாரண தனி அறைக்கு மாற்றினார்கள். அதற்குப் பிறகுதான் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைத்தது. செய்தி கிடைத்ததும் நானும் இன்னொரு நண்பரும் அவரைச் சென்று பார்க்கத் திட்டமிட்டோம். ஆனால் நாங்கள் வசிப்பதோ வேறுவேறு திசையில் என்பதால் ஒன்றாகச் சேர்ந்து புறப்பட வழியில்லை. அதனால் நண்பர் “நான் முதலில் வந்தால் நீங்கள் வரும்வரை வெளியே விடுதிக்கு அருகில் காத்திருக்கிறேன். ஒருவேளை நீங்கள் முதலில் சேர்ந்துவிட்டால் நான் வரும்வரைக்கும் காத்திருங்கள்” என்று தெரிவித்துவிட்டார்.

Sunday, 22 October 2023

மழைக்கதைகளும் மழைப்பாடல்களும் - கட்டுரை

 

 பத்து நாட்களுக்கு முன்னால் தொடங்கிய மழை பெங்களூரு முழுக்க விட்டுவிட்டு பொழிந்தபடியே இருந்தது. தொலைபேசியில் அழைத்து உரையாடுகிறவர்கள் அனைவரும் மழையைப்பற்றிய கேள்வி பதிலோடுதான் தொடங்கினார்கள். பலர் உற்சாகமாக உணர்வதாகச் சொன்னார்கள். சிலர் சலிப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்கள்.

Sunday, 5 February 2023

அகத்தூண்டுதலும் அற்புதத்தருணங்களும்

  

அசையும்போது தோணி

அசையாதபோதே தீவு

தோணிக்கும் தீவுக்குமிடையே

மின்னற்பொழுதே தூரம்

 

இது தேவதேவனின் கவிதை. விட்டல்ராவ் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் கட்டுரைத்தொகுதியின் பெயர் மின்னற்பொழுதுகள். அந்தத் தலைப்பை வாசித்ததுமே மனத்தில் தேவதேவனின் கவிதை வரிகள் எழுந்தன. தோணி, புறக்கண்ணால் பார்க்கமுடிகிற ஓர் உருவம். தீவு, அகக்கண்ணுக்கு மட்டுமே தென்படும் உருவம். பார்க்கும் மனவார்ப்பு உள்ளவருக்கே தென்படக்கூடிய அபூர்வமான உருவம் அது. அப்படிப் பார்க்கக்கூடியவர்களுக்கு அக்காட்சி மின்னலடிக்கும் நேரத்தில் தெரிந்து மறைந்துவிடுகிறது. பிறகு அந்தக் காட்சியை நினைவிலிருந்து மீட்டிமீட்டித்தான் பார்க்கவேண்டும்.

Sunday, 30 January 2022

குழந்தை - சிறுகதை

      ”இந்த கொழந்தைய வச்சிகினு யாராச்சும் ஆம்பளையோ பொம்பளையோ இங்க கடைப்பக்கம் வந்தாங்களா? கொஞ்சம் பாத்து சொல்றீங்களா?” என்று கேட்டபடி கைபேசியைக் காட்டினான் தயாளன். அந்தப் படத்தை  ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு தலையசைத்தபடி உதட்டைப் பிதுக்கினார் கடைக்காரர்.

     பொம்பளங்ககிட்ட கேட்டுப் பாருங்க சார். கொழந்த மூஞ்சிலாம் அவுங்களுக்குத்தான் நல்லா ஞாபகம் இருக்கும்

சுப்பராய பிள்ளை தோட்டத்தில் தொடங்கி  ஜப்பர்பாய்தோட்டம், அய்யனார் நகர், அருந்ததிபுரம் வரைக்கும் படத்தைக் காட்டி விசாரித்துவிட்டான் தயாளன். அதுவரை ஒரு துப்பு கூட கிடைக்கவில்லை.