தொடர்ச்சி.....
பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கீசியர்கள் மலேசியாவைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அவர்கள் வந்த வழியிலேயே வந்த டச்சுக்காரர்கள் அவர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அதற்கு அடுத்த நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் காட்டுப்பாதைகள் வழியாக மலேசியாவுக்குள் நுழைந்தார்கள். ஆயிரக்கணக்கான மிதிவண்டிகள் வழியாக காட்டை ஊடுருவிப் பயணம் செய்து டச்சுக்காரர்களுடன் மோதினர். அதிக அளவிலான உயிரிழப்பைத் தவிர்ப்பதற்காக டச்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டனர். இந்தோனோசியாவையும் அதற்கு அடுத்த பகுதிகளையும் டச்சுக்காரர்கள் வைத்துக்கொள்ள, ஆங்கிலேயர்கள் மலேசியாவைக் கைப்பற்றிக்கொண்டனர்.
அதன் பிறகு ஏராளமான குடியேற்றப்பகுதிகள் உருவாக்கப்பட்டன. ஒருபுறம் ரப்பர்த் தோட்டங்கள் உருவாகின. அவற்றில் பணிபுரிய இந்தியர்கள் குடியேறினர். இன்னொருபுறம் ஈயச்சுரங்கங்கள் உருவாகின. அவற்றில் பணிபுரிய சீனர்கள் குடியேறினர். இரண்டாம் உலகப்போரில் தொடக்கத்தில் மலேசியாவை ஜப்பான் கைப்பற்றியது. ஆயினும் சிறிது காலத்திலேயே ஜப்பான் உலகப்போரில் தோல்வியுற்றதன் விளைவாக ஆங்கிலேயர்கள் வசமே அந்நாடு திரும்பக் கிடைத்தது. போர் நிகழ்ந்த இடைவெளிக் காலத்தில் கம்யூனிசக் கொள்கை வலிமையடைந்து, ஆயுதம் ஏந்திய போராட்டம் ஆங்காங்கே நிகழ்ந்தது. கடுமையான இராணுவ நடவடிக்கையின் காரணமாக பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் சுதந்திரத்துக்காக பல குழுக்கள் உருவாகி போரிடத் தொடங்கின. வேறு வழியில்லாத ஆங்கிலேய அரசாங்கம் 31.08.1957 அன்று வெளியேற, மலேசியா விடுதலை பெற்றது.
இம்மூன்று
காலகட்டங்களையும் விரிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
பூர்வகுடிகளைப்பற்றிய வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட கட்டடத்தின்
வாசல் வழியே நுழைபவர்கள் வெவ்வேறு கட்டடங்களையும் வரிசைகளையும் கடந்து சென்று தேசவிடுதலையைச்
சித்தரிக்கும் மாளிகையின் வாசல் வழியே வெளியேற வேண்டும். ஒரு சுற்று அருங்காட்சியகத்தைச்
சுற்றி வந்தால் போதும், அங்குள்ள மக்களின் தூய்மையுணர்ச்சியையும் அழகுணர்ச்சியையும்
புரிந்துகொள்ள முடியும்.
அருங்காட்சியகத்துக்கு
வெளியே ஒரு சிறு புல்வெளிக்கிடையில் இரு உயரமான தூண்களுக்கிடையில் வடிவமைக்கப்பட்ட
மூங்கில் படுக்கையைப் பார்க்க நேர்ந்தது. அதற்கு அருகில் இன்னும் இரு தூண்கள். அவற்றுக்கு
அருகில் நிறுத்தப்பட்டிருந்த கல்லில் பொறிக்கப்பட்டிருந்த வாசகங்களைப் படித்தபோது வியப்பாக
இருந்தது. ஒரு காலத்தில் அங்கு வசித்த பழங்குடிகளிடம் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கமோ,
எரிக்கும் வழக்கமோ இருந்ததில்லை. அதற்கு மாறாக அவர்களை வானத்தை நோக்கும் விதத்தில்
அமைக்கப்பட்ட மூங்கில் படுக்கையில் கிடத்திவிடுவார்கள். வெட்டவெளியில் கிடக்கும் உடல்
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவாகும். எஞ்சிய பகுதிகள் மெல்லமெல்ல அழிந்து உதிர்ந்துவிடும்.
காலப்போக்கில் வெறும் எலும்புக்கூடு மட்டுமே எஞ்சும். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு
அங்கு மீண்டும் வரும் பழங்குடியினர் அந்த எலும்புகளைச் சேகரித்து தூணின் உட்பகுதியில்
வைத்து மூடிவிடுவார்கள். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மறைந்த மனிதர்களின் எலும்புகள்
அத்தகு தூண்களிலிருந்து சேகரிக்கப்பட்டு காட்சியகத்துக்குள் வைத்திருந்தார்கள். எலும்புத்துண்டுகளை
வரிசைப்படுத்தி அங்கே படுக்கவைக்கப்பட்டிருந்த விதத்தைப் பார்த்தபோது, பத்தாயிரம் ஆண்டு
இடைவெளி மாயமாக மறைந்துவிட்டது.
அருங்காட்சியகத்தைப்
பார்த்து முடித்ததும் சிறிது தொலைவு பயணம் செய்து, பத்துமலை முருகர் ஆலயத்தை அடைந்தோம்.
கோவில் வளாகத்திலேயே ஒரு விடுதியில் மதிய உணவு அருந்தினோம். மழைத்தூறலுக்கிடையில் இரு
நாட்களுக்கு முன்பாக நாங்கள் அந்த ஆலயத்துக்கு வந்திருந்தபோது, பார்ப்பதற்கு விடுபட்டுப்போன
மெளனகுரு சித்தரின் சமாதியை அன்று பார்த்தோம். முதலில் அது கோவிலை ஒட்டி சற்றே விலகியிருந்ததாகவும், சில ஆண்டுகளுக்கு
முன்பாக கோவில் வளாகம் பெரிதாக்கப்பட்டபோது, அந்தச் சமாதி வளாகத்தின் வளையத்துக்குள்
வந்துவிட்டது என்றும் சொன்னார் அரவின்குமார்.
அந்த
வளாகத்தில் சனீஸ்வரருக்கு என தனி கருவறை இருந்தது. அந்த நேரத்தில் கருவறை அடைக்கப்பட்டிருந்தது.
தூண்களில் காகத்தை அழகான சிற்பமாக வடித்திருந்தனர். சிறிது நேரம் அந்த வளாகத்தில் அமர்ந்திருந்தோம்.
வழிபாட்டுக்கு வந்திருந்த ஒருசிலர் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தனர்.. யாரோ ஒரு
பெரியவர் அங்கிருந்த பெண்களிடம் உரையாடிக்கொண்டிருந்தார். கணீரென்ற அவருடைய தமிழ்க்குரலால்
வசீகரிக்கப்பட்டு, நானும் அந்த உரையாடலைக் கவனிக்கத் தொடங்கினேன். எதிர்பாராத விதமாக
அவர் நான் அறிய நினைத்த சித்தரைப்பற்றித்தான் சொல்லிக்கொண்டிருந்தார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பகுதியில் அந்தச் சித்தர் பத்துமலைக்கு வந்து சேர்ந்தார். அப்போதே முருகன் ஆலயம் மலை உச்சியில் குகையில் இருந்தது. யோகசாதனையில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தன் தங்குமிடமாக அதையே தேர்ந்தெடுத்துக்கொண்டார். ஆலயத்துக்கு எதிர்ப்புறத்தில் ஒரு குடிசையை எழுப்பி, அதையே தன் வாழிடமாகக் கொண்டார். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் முருகன் சந்நிதானத்தைச் சுத்தம் செய்து வழிபாடு செய்தார். பிற நேரங்களில் யோக சாதனைகளில் மூழ்கியிருந்தார். உணவைத் தேடி எங்கும் செல்லாமல், எப்போதாவது வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் வழங்கும் உணவை மட்டுமே உட்கொண்டு உயிர்வாழ்ந்தார். யாரிடமும் உரையாடாமல் எப்போதும் மெளனத்திலேயே மூழ்கியிருந்ததால், பிறரால் அவர் மெளன சாமி சித்தர் என அழைக்கப்பட்டார். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் அங்கே உயிர்வாழ்ந்து மறைந்தார்.
கோவிலுக்கு
வந்த பக்தர்கள் கோவில் குகையிலிருந்து அவருடைய உடலை கீழே கொண்டுவந்து அடிவாரத்தில்
நல்லடக்கம் செய்தனர். பிறகு அந்த இடத்தில் சிறிய அளவில் ஒரு சமாதியை எழுப்பி தினந்தோறும்
தீபம் ஏற்றி வழிபட்டு வந்தனர். மெளனசாமி சித்தரைப்பற்றி அறிந்த தலைமுறையினர் மறைந்ததும்,
அங்கு சென்று வழிபடுகிறவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, நாளடைவில் ஒருவரும்
செல்லாத இடமாகிவிட்டது. சமாதியின் மீது மண் படிந்து மேடானது.
பல ஆண்டுகளுக்குப்
பிறகு சித்தரைப்பற்றிய விவரம் தெரிந்த சிலர் அதைத் தேடி அங்கு வந்தனர். புற்றுகளால்
சூழப்பட்ட அந்த மண்மேட்டை அகற்றி சமாதியைப் புதுப்பித்து, அதன் பாதுகாப்புக்காக சிறிய
அளவில் ஒரு குடிலையும் எழுப்பி மீண்டும் வழிபாட்டைத் தொடங்கினர். பல ஆண்டுகளுக்குப்
பிறகு அந்த இடம் மீண்டும் புறக்கணிப்புக்கு உள்ளானது. அதன் அருமை தெரியாதவர்கள் பொருட்களைச்
சேமிக்கும் கிடங்காக அந்தக் குடிலைப் பயன்படுத்தத் தொடங்கினர். புதிய பக்தர்கள் தோன்றி
மீண்டும் அதைப் புதுப்பித்தனர். எதிர்காலத்தில்
இன்னொருமுறை அது புறக்கணிப்புக்கு உள்ளாகிவிடக்கூடாது என்னும் நோக்கத்தில் அந்தச் சமாதிக்கு
அருகிலேயே சிறிய அளவில் ஒரு கருவறையை எழுப்பி சிவலிங்கத்தை நிறுவினர். சிவலிங்கத்துக்கு
விளக்கேற்ற வருபவர்கள் மெளன சித்தருக்கும் விளக்கேற்றி வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அந்தப்
பெரியவர் விவரித்த தகவல் ஒரு தொன்மக்கதையைக் கேட்டதுபோல இருந்தது. ஒரு கண நேரத்துக்கு,
மலையுச்சியில் தனித்த குகையில் மெளனமாக தியானத்தில் ஆழ்ந்திருக்கும் ஓர் இளைஞரின் உருவம்
என் கற்பனையில் எழுந்து மறைந்தது. எல்லாச் சித்தர்களின் பின்னணியிலும் இப்படி ஒரு வரலாறு
மறைந்திருக்கிறது என நினைத்துக்கொண்டேன்.
வெளியே
வந்ததும் அரவின்குமார் தனக்குத் தெரிந்த இன்னொரு துறவியைப்பற்றிய கதையைச் சொன்னார்.
அவரும் மெளனகுரு சித்தரைப் போலவே மலேசியாவில் வாழ்ந்து மறைந்தவர். அவர் பெயர் ஜெகந்நாத
சுவாமிகள். மலேசிய நாட்டில் ஜீவசமாதி அடைந்த ஒரே சித்தர் அவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்கத்தாவில்
பிறந்தவர். யோக சாதனைகளில் பயிற்சி பெற்ற அவர் பதினெட்டு வயதுக்குப் பிறகு சொந்த ஊரைவிட்டு
வெளியேறினார். கிடைத்த வேலைகளைச் செய்தபடி பர்மா வழியாக மலாயாவுக்குள் வந்து கடாரம்
பகுதியில் தங்கினார். தன் தேவைக்குப் போக எஞ்சிய பணத்தைக் கொண்டு சுற்றுப்புறத்தில்
தங்கியிருக்கும் ஏழைகளுக்கு வெவ்வேறு விதங்களில் உதவி செய்தார். சில ஆண்டுகளுக்குப்
பிறகு அங்கிருந்து வெளியேறி நடந்து செல்லும்போது எதிரிகளின் உளவாளி என ஐயப்பட்டு காவல்துறையினர்
அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் அவர் சாதாரணமான மனிதர் என அறிந்து
விடுதலை செய்துவிட்டனர். இப்படியே பயணமும் பொருளீட்டலும் உதவி செய்தலுமாக அவர் வாழ்க்கை
தொடர்ந்தது.
பேராக்
மாநிலத்தைச் சேர்ந்த தாப்பா நகரத்தை அடைந்து சீனர்களும் தமிழர்களும் வாழும் பகுதியில்
உள்ள மயானத்துக்கு அருகில் ஒரு குடிசையைக் கட்டிக்கொண்டு குடியிருக்கத் தொடங்கினார்
அவர். உழைத்து ஈட்டிய வருமானத்தை ஏழைகளுக்கு வழங்கி மனநிறைவடைந்தார். ரப்பர்த் தோட்டங்களில்
குடியிருக்க இடமின்றித் தவிக்கும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அவரை வாட்டியது.
அதற்காக கடுமையாக உழைத்து பொருளீட்டினார். அவர் எண்ணத்தை அறிந்த இஸ்லாமியர் ஒருவர்
அவருக்குத் தேவையான பண உதவியைச் செய்தார். நல்லதொரு தொகையைச் சேமித்து முடித்ததும்
அதைக் கொண்டு விரிவான நிலப்பரப்பை விலைகொடுத்து வாங்கி, சிறுசிறு வீடுகளைக் கட்டினார்.
ஏழைத் தொழிலாளர்கள் மிகக்குறைவான வாடகையில் அந்த வீடுகளில் குடியேறினர்.
இன்று
வரை அக்குடியிருப்புகளில் தலைமுறை தலைமுறையாக தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். வெறும்
கோவணத்தை மட்டுமே அணிந்த அத்துறவி ஒருபுறம் யோகசாதனை மறுபுறம் பொதுநலச்செயல்கள் என
இறுதிமூச்சு வரைக்கும் வாழ்ந்தார். தன் உள்ளுணர்வால் தன் இறுதி நெருங்கிவிட்டதை அறிந்துகொண்ட
சுவாமிகள் தன் முடிவைப்பற்றி அனைவரிடமும் தெரிவித்துவிட்டு, எல்லாப் பொறுப்புகளையும்
தம் சீடர்களிடம் ஒப்படைத்துவிட்டு தியானத்தில் மூழ்கினார். செய்தியைக் கேள்விப்பட்ட
மலேசியக் காவல் அதிகாரிகள் அந்த இடத்துக்கு விரைந்துவந்து அது சட்டத்துக்குப் புறம்பான
ஒன்று எனக் கூறி அவரைத் தியானம் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர். அன்று தைப்பூச நாள்.
வேறு வழியின்றி, சுவாமிகள் அக்கணமே பரகாய பிரவேசம் செய்து தன் உடலைத் துறந்தார். அந்த
உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மரணத்தை உறுதி செய்தார். அவர் காலமெல்லாம் வழிபட்ட
சிவாலயத்தின் வளாகத்திலேயே அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டு, அதன் மீது சமாதி எழுப்பப்பட்டது.
அரவின்குமார் சொன்ன கதையைக் கேட்டபடி கோவில் வளாகத்துக்கு வெளியே இருந்த பத்துமலைத் தமிழ்ப்பள்ளியை அடைந்தோம். அங்கு முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடக்கக்கல்வி அளிக்கப்படுகிறது. அனைத்துப் பாடங்களும் தமிழ்வழியில் கற்பிக்கப்படுகின்றன. சரஸ்வதி என்பவர் அப்பள்ளியின் தலைமையாசிரியராக இருந்தார். அவர் உதவியோடு நவீன் அங்கு ஓர் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தார். கோம்பாக் மாவட்டத்தைச் சேர்ந்த வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஐம்பது தமிழாசிரியர்கள் அந்நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர். ’சிறார் உளவியலும் சிறுகதைகளும்’ என்னும் தலைப்பில் நான் அங்கு உரை நிகழ்த்தினேன். ஏறத்தாழ முக்கால் மணி நேரம் நீண்ட என் உரையை அனைவரும் விரும்பிக் கேட்டனர்.
நிகழ்ச்சி
முடிவடைந்ததும் சில ஆசிரியைகள் என்னிடம் சில கேள்விகள் கேட்டனர். நான் சொன்ன விடைகளையும்
பொறுமையாகக் கேட்டுக்கொண்டனர். ஐந்தாம் வகுப்புக்குரிய தமிழ்ப்புத்தகத்தை ஓர் ஆசிரியையிடமிருந்து
வாங்கி, பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். சிறப்பான வகையில் அப்புத்தகம் தொகுக்கப்பட்டிருந்தது.
பாடத்திட்டக் குழுவினர் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர்கள். அப்போதுதான் நான் ஒரு
செய்தியைக் கவனித்தேன். என்னோடு உரையாடியவர்கள் அனைவரும்
ஆங்கிலச்சொல் கலப்பில்லாமல் இயல்பாக தமிழிலேயே உரையாடினார். ஒருவர் கூட யூஸ்
என்னும் சொல்லை ஒருமுறை கூட பயன்படுத்தவில்லை. யூஸ் என்னும் சொல்லைத் தவிர்க்கும்போது
இயல்பாகவே புதிய சொற்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடுகின்றன. பயன்படுத்துவது, உபயோகப்படுத்துவது,
பாவிப்பது என ஒவ்வொரு தருணத்துக்கும் ஏற்ற வகையிலான சொல் தானாகவே உரையாடலில் அமைந்துவிடுகின்றன.
ஆறு மணியளவில்
நிகழ்ச்சி முடியும் நேரத்தில் மழை தொடங்கிவிட்டது. அடித்துப் பொழிந்தது மழை. சூடான
காப்பியை அருந்தியபடி மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டே சிறிது நேரம் பள்ளி வளாகத்திலேயே
இருந்தோம். அரை மணி நேரத்துக்குப் பிறகும் மழை விடவில்லை. பள்ளியைச் சாத்தவேண்டிய நேரம்
நெருங்கிவிட்டதால் மழையிலேயே அங்கிருந்து வெளியேறி நவீனின் மகிழுந்திலேயே அவருடைய வீட்டுக்குச்
சென்றோம். வீட்டில் அவருடைய பெற்றோரும் மனைவியும்
மூன்று வயது மகளும் இருந்தனர். நீண்ட நேரம் பேசிப் பொழுதைக் கழித்துவிட்டு, அங்கிருந்து
வெளியேறினோம்.
03.12.2024
அன்று காலையில் பதினோரு மணியளவில் நவீன் விடுதிக்கு வந்துவிட்டார். நாங்கள் பொருட்களையெல்லாம்
அடுக்கி பெட்டிகளோடு தயார்நிலையில் காத்திருந்தோம். அவர் வந்து சேர்ந்ததும், விடுதியைக்
காலி செய்துவிட்டு வெளியேறினோம். அன்று இரவுதான் நாங்கள் விமானத்தைப் பிடிக்கவேண்டும்.
அதற்கிடையில் மை ஸ்கில்ஸ் என்னும் மாணவர் பயிற்சிப்பள்ளிக்குச் சென்று சிறிது நேரம்
செலவழிக்கலாம் என்று நண்பர் நவீன் ஏற்கனவே என்னிடம் கூறியிருந்தார். எனக்கும் அந்த
ஏற்பாடு பிடித்திருந்தது.
நாங்கள்
தங்கியிருந்த விடுதியிலிருந்து ஏறத்தாழ இரண்டரை மணி நேரப் பயணத்தில் அம்மையம் அமைந்திருந்தது.
வழிநெடுக இலக்கியம் பற்றி உரையாடிக்கொண்டே சென்றோம். மலேசியத் தமிழ் நாவல்கள் உருவாக்கத்தைப்பற்றியும்
தொடர்ச்சியைப்பற்றியும் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் ஒரு சித்திரத்தை எனக்கு அளித்தார்
நவீன். மலேசியாவின் முதல் நாவல் கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி. அதை எழுதியவர்
க.வெங்கடரத்தினம். அதை நான் ஒரு தகவலாக மட்டுமே தெரிந்துவைத்திருந்தேன். நவீன் அங்கிருந்து
தொடங்கி சமீபத்தில் எழுதப்பட்ட நாவல்களில் முக்கியமான படைப்புகளான நினைவுச்சின்னங்கள்,
அக்கினி வளையங்கள், கரிப்புத்துளிகள் வரைக்கும் குறிப்பிட்டார்.
உரையாடலில்
அவர் குறிப்பிட்ட ’தோட்டத்துண்டாடல்’ என்னும் சொல் எனக்குப் புதுமையாகத் தோன்றியது.
அதன் பொருளைப்பற்றிக் கேட்டேன். விடுதலைக்கு முன்பாக ஆங்கிலேயர்கள் வசமே எல்லாத் தோட்டங்களும்
இருந்தன. விடுதலையை ஒட்டி, அவற்றை விற்பதற்குத் தோதாக சிறுசிறு துண்டுகளாகப் பிரித்தனர்.
அப்போது அவற்றை விலைகொடுத்து வாங்கும் வசதி சீனர்களிடம் மட்டுமே இருந்ததால் சீனர்கள்
சிறுசிறு தோட்ட முதலாளிகளாக மாறினர். சிறுசிறு தோட்டங்களுக்குக் குறைவான எண்ணிக்கையுள்ள
தொழிலாளர்களே போதுமென அவர்கள் நினைத்தனர் சீனர்கள்.
அந்த முடிவு அதுவரை தோட்டத்தொழிலாளர்களாகப் பணிபுரிந்த இந்தியர்களைப் பாதித்தது. வேலையற்ற தொழிலாளர்கள்
தோட்டத்தைவிட்டு வெளியேறவேண்டிய நெருக்கடிக்கு உள்ளானார்கள். தோட்டத்தில் இல்லாததால்
அவர்களுக்குக் குடியுரிமையும் இல்லாமல் போனது. இந்தத் துயரார்ந்த வரலாற்றை ஆரம்பக்கட்ட
தமிழ் நாவல்கள் பதிவு செய்துள்ளன என்று சொன்னார் நவீன். அவற்றையெல்லாம் எப்படியாவது
தேடிப் படிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
இப்படி நாவல், வரலாறு என மாறி மாறி உரையாடிக்கொண்டே சென்றதில் பயண நேரத்தை நாங்கள்
உணரவே இல்லை.
நவீன்
ஏற்கனவே தகவல் அனுப்பியிருந்ததால் மையத்தில் பணியாற்றும் சர்வேஸ்வரி என்னும் ஆசிரியை எங்களுக்காகக்
காத்திருந்தார். எங்களை வரவேற்று, அருந்துவதற்கு சுடச்சுட காப்பியை வழங்கினார். பிறகு
அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைப்பற்றி விரிவாக
விவரித்தார்.
2011ஆம்
ஆண்டில் தொடங்கப்பட்ட அந்த அறவாரியம் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட மாணவர்களுக்கும்
மாணவிகளுக்கும் கல்வியையும் தன்னம்பிக்கையையும் அவரவர்களுக்கு ஆர்வமுள்ள தொழிலில் பயிற்சியையும்
அளித்து அவர்களை ஆளுமை மிக்க மனிதர்களாக வார்த்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது.
எழுத்தாளரும் மருத்துவருமான சண்முக சிவா அவர்கள் அந்த நிறுவனத்தை நிர்வகிக்கிறார்.
அதைத் தோற்றுவித்தவர்கள் வழக்கறிஞரான பசுபதி சிதம்பரம், செல்வமலர், தேவசர்மா, சண்முக
சிவா. பசுபதி சுந்தரம் தொடக்கத்தில் இரசாயனத்துறையில்
பட்டம் பெற்று ஆய்வகத்தொழில் நுட்ப வல்லுநராக சில ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு லண்டனுக்குச்
சென்று சட்டக்கல்வி கற்று மலேசியாவுக்குத் திரும்பி வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.
சட்டச்சிக்கல்களில் மாட்டித் தவிக்கும் ஏழை இந்தியர்கள் பலருக்கும் இலவசமாக சட்டச்சேவையை
வழங்குகிறார்.
அழகான
மலைத்தொடருக்கு எதிரில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது. விவசாய நிலங்களையும் பயிற்சிக்கூடங்களையும்
இப்பள்ளியில் பார்க்கமுடிந்தது. சின்னச்சின்ன தோட்டங்களாகப் பிரித்து, கீரைவகைகளையும்
காய்கறிகளையும் வளர்க்கிறார்கள். பழமரங்கள் கொண்ட ஒரு சிறுதோப்பும் உள்ளது. முருங்கை
மட்டுமே வளரும் ஒரு பெரிய தோட்டமும் இருக்கிறது. சாமந்தித்தோட்டம் போல அது முருங்கைத்தோட்டம்.
எங்கெங்கும் இளமுருங்கை மரங்கள். சீரான இடைவெளியில் அவற்றிலிருந்து இலைகளை உருவியெடுத்து
வெயிலில் உலரவைத்த்திருக்கிறார்கள். பக்குவமடைந்த நிலையில் அவற்றைப் பொடியாக்கி மாத்திரைகளாக்கிறார்கள்.
அம்மாத்திரைகள் நகருக்கு விற்பனைக்குச் செல்கின்றன. அதேபோல சின்னச்சின்ன தொட்டிகளில் வெவ்வேறு விதமான பூச்செடிகளின்
கன்றுகளை வளர்த்து, அவையும் பொதுமக்களிடம் விற்பனைக்குச் செல்கின்றன.
பள்ளியில்
பயிலும் மாணவமாணவிகளே இந்த வேலைகளைச் செய்கிறார்கள். பத்து வயது முதல் இருபது வயது
வரைக்குமான அந்த மாணவமாணவிகளைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உணர்ந்தேன். இந்த விற்பனை
வழியாகக் கிடைக்கிற தொகை இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
மலேசியாவைச் சேர்ந்த நல்லுள்ளங்கள் பள்ளிக்கான செலவை நன்கொடைகளாக வழங்குகின்றன. பள்ளி வளாகத்தில் ஓர் இடத்தில் நன்றிச்சுவர் எழுப்பப்பட்டு
அந்நிறுவனங்களின் பெயர்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
முதல்
பார்வையில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி நடத்திய டால்ஸ்டாய் பண்ணையையும்
சபர்மதி ஆசிரமத்தையும் நினைவூட்டின. வேலியும் இல்லாமல், சுற்றுச்சுவர்களும் இல்லாமல்
காவல்காரர்களும் இல்லாமல் இயற்கைக்கு நடுவில் இப்பள்ளி அமைந்திருக்கிறது.
அதிகாலை
ஆறுமணிக்கே அந்தப் பள்ளியின் வேலை நேரம் தொடங்கிவிடுகிறது. தோட்டவேலையிலும் தூய்மைப்படுத்தும்
வேலையிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள். பிறகு உடற்பயிற்சி, குளியல், சிற்றுண்டி, வகுப்புகள்,
மாலையில் விளையாட்டு என அவர்கள் பொழுதுகள் நிறைவடைகின்றன. ஒவ்வொருவரும் தம் ஆர்வத்துக்கு
ஏற்ற வகுப்புகளுக்குச் சென்று கல்வி கற்கமுடியும். அடிப்படை எழுத்தறிவு பெற ஒருசிறிதும்
விருப்பமில்லாமல் வந்து சேர்ந்த பிள்ளைகள் கூட ஒவ்வொன்றையும் விரும்பித் தெரிந்துகொள்ளும்வகையில்
அந்தப் பள்ளியின் ஆசிரியைகளும் ஆசிரியர்களும் அமைந்திருக்கின்றார்கள். தச்சுவேலை, மின்சார
வேலைகள், மின்னியல் கருவிகளின் பழுது நீக்கவேலைகள், வழக்கறிஞர்களிடமும் நிறுவனங்களிலும்
எழுத்தராகப் பணிபுரிவதற்கு ஏற்ற வகையிலான பயிற்சி அனைத்தும் வழங்கப்படுகின்றன.
பள்ளியின்
சூழல் அவர்களுடைய மனத்தை மெல்ல மெல்லப் பண்படுத்துகிறது. நல்ல பாதையை நோக்கி அவர்கள்
கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்புகிறார்கள். அரசு நடத்துகிற பொதுத்தேர்வில் அவர்களும் கலந்துகொண்டு
வெற்றி பெறுகிறார்கள். படிப்பை முடித்ததும் சிங்கப்பூருக்கும் பிற நாடுகளுக்கும் சென்று
அவர்கள் வேலைகளில் அமர்ந்து பொருளீட்டுகிறார்கள். பெரும்பாலும் மலேசியச் சூழலை அவர்கள்
தவிர்த்துவிடுகிறார்கள். என்னதான் அவர்கள் மனம்திருந்தி புதியவர்களாக வாழப் பழகியிருந்தாலும்
பழகிய சூழல் அவர்கள் மீது பழைய பார்வையையே செலுத்த விரும்பும் என்பதாலும் எங்கிருந்தாவது
பழைய கூட்டாளிகள் அவர்களைத் தேடிவந்து கண்டுபிடித்து பாதையை மாற்ற முயற்சிசெய்வார்கள்
என்பதாலும் அவர்கள் வெளிநாட்டு வேலைகளையே விரும்புகிறார்கள். அப்படி வேலை கிடைத்து
சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு, ஆண்டுக்கு ஒருமுறையோ இரு முறையோ பள்ளிக்குத் திரும்பி
வந்து புதிதாக சேர்ந்திருக்கும் மாணமமாணவிகளிடம் உரையாடி தன்னம்பிக்கையை விதைக்கிறார்கள்.
தாம் ஈட்டிய பொருளில் ஒரு சிறு பக்தியை நன்கொடையகாவும் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள்.
நாங்கள்
சென்றிருந்த சமயத்தில் ஓர் இளம்பெண்ணை எனக்கு மருத்துவர் அறிமுகப்படுத்தினார். அவர்
அந்தப் பள்ளியில் வந்து சேர்ந்து பயிற்சி பெற்ற மனைவி. அங்கேயே ஆசிரியையாக வேலை செய்கிறார்.
திருமணம் ஆகிவிட்டது. வாரத்தில் ஐந்து நாட்களில் பயிற்சி நிலையத்திலேயே தங்கி விடுகிறார்.
எஞ்சிய இரு நாட்களை குடும்பத்தோடு கழிப்பதற்காக சென்றுவிடுகிறார். இளம் மாணவிகளுக்கு
அவர் பயிற்சி அளிப்பதை நேரில் பார்த்தேன். அவரிடம் சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்தேன்.
பயிற்சி
நிலையத்தின் நுழைவாயிலை ஒட்டி ஒரு சதுரமான புல்வெளிக்கு நடுவில் காந்தியடிகளின் சிலை
வைக்கப்பட்டிருக்கிறது. அவருடைய சிலைக்குப் பின்னால்தான் கீரைப்பண்ணையும் முருங்கைப்பண்ணையும்
உள்ளன. பலவிதமான காய்கறிகள் விளையும் தோட்டங்களும் உள்ளன. ஒவ்வொரு நாளும் எஞ்சும் உணவுக்கழிவுகளையும்
காய்கறிக்கழிவுகளையும் திரட்டி பண்ணையில் ஓர் ஓரமாக குழிக்குள் சேகரித்து, பக்குவப்படுத்திய
பிறகு அதையே அனைத்துப் பண்ணைகளிலும் இயற்கை உரமாகப் பயன்படுத்துகிறார்கள். முழுக்க
முழுக்க காந்திய வழியில் செயல்படும் அப்பண்ணையின் முகப்பில் அவர் சிலையை நிறுவியிருப்பது
பொருத்தமாக இருந்தது.
பயிற்சிக்கூடத்தின்
முகப்பில் இராம சுப்பையா, மலேசியத் தேசிய கவிஞரான அப்துல் சமத் பின் முகம்மது சயித்
இருவருடைய புகைப்படங்களைத் தாங்கிய தகவல் தட்டிகள் சுவரோடு பொருத்தப்பட்டிருந்தன. இருவருமே
ஏதோ ஒரு வகையில் பசுபதி சிதம்பரம் அவர்களுக்கு முன்னோடிகளாக வாழ்ந்தவர்கள்.
இராம
சுப்பையா மலேசியத் தமிழர். கடந்த நூற்றாண்டில் கல்வி என்பது தமிழர்களுக்கு எட்டாக்கனியாக
இருந்தது. வறுமையே மிகமுக்கியமான காரணம். படிக்க ஆர்வமிருந்தாலும் தம் பிள்ளைகளைப்
பள்ளிகளில் சேர்க்க வசதியின்றி பெற்றோர்கள் தவித்தனர். அத்தகையோரைத் தேடிக் கண்டுபிடித்து
அவர்கள் விரும்பும் கல்வியை, விரும்பும் பள்ளியில் படிக்கும் வகையில் உதவித்தொகையை
அளித்து ஊக்கப்படுத்தியவர் இராம. சுப்பையா.
உபகாரச் சம்பளத் திட்டம் என மலேசியாவில் அது அழைக்கப்பட்டது. அந்த உபகாரச் சம்பளத்
திட்டத்தின் உதவியால் ஒரு காலத்தில் கல்வி கற்றவர் பசுபதி சிதம்பரம். ஆறாம் படிவத்தில்
முதல் நிலையில் தேர்ச்சி பெற்றதால் அவரால் தேசிய பல்கலைக்கழகத்தில் இரசாயனத்துறையில்
படித்து பட்டம் பெற முடிந்தது. ஆறாண்டு காலம் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு லண்டனில்
சட்டம் படித்துவிட்டுத் திரும்பி வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார்.
அம்துல்
சமத் பின் முகம்மது சயித் தொண்ணூறு வயதைக் கடந்தவர். மலேசியத் தேசியக் கவிஞராகக் கருதப்படுபவர்.
அவருடைய ‘இறந்த காகம்’ என்னும் பாடல் மிகவும் புகழ்பெற்றது. மொழி வேறுபாடின்றி அனைவராலும்
விரும்பப்படும் அக்கவிஞருக்குத் துணையாக இருப்பதை அறவாரியம் தன் கடமையெனக் கருதுகிறது.
கட்டிடத்தின்
முதல் மாடியில் பெரிய நூலகம் அமைந்திருக்கிறது. நூல்களை அடுக்கி வைக்கும் தாங்கிகளை
அங்கே பயிற்சி பெறும் மாணவமாணவிகளே ஒருங்கிணைந்து செய்ததாக சர்வேஸ்வரி கூறினார். இரும்புத்தண்டுகளை
மரத்தட்டுகளை இணைத்து ஒவ்வொரு தாங்கியையும் செய்நேர்த்தியோடு மாணவர்கள் செய்திருந்தார்கள்.
அங்கிருந்த மேசைகள் கூட அவர்களுடைய கைவண்ணமாகவே இருந்தது.
பத்து
பதினைந்து மாணவ மாணவிகளோடு உரையாடுவதற்கு சண்முக சிவா உதவினார். அனைவருமே பத்து முதல்
பதினைந்து வயதுக்குட்பட்டவர்கள். ஆனால் ஒவ்வொருவரும் கடந்து வந்திருக்கும் பாதையைக்
கேட்கக்கேட்க என் மனபாரம் பெருகிக்கொண்டே இருந்தது. அந்த அளவுக்கு துயரத்தையும் வன்முறையையும்
அநீதிகளையும் இந்தச் சமூகம் அவர்களைச் சந்திக்கவைத்திருக்கிறது. தம் சொந்த வாழ்வியல்
அனுபவங்களை அவர்கள் சொல்லச்சொல்ல என் ஆழ்மனம் நடுங்கியபடி இருந்தது. அவர்கள் முன்னிலையில்
நான் கண்ணீர் சிந்திவிடக்கூடாது என்பதற்காக என் இதயத்தையும் செவிகளையும் அவர்கள் முன்னால்
திறந்துவைத்துவிட்டு அமைதியாக இருந்தேன். கதைகளிலும் செய்திகளிலும் கூட நாம் படித்திராத
அளவுக்கு அவர்கள் துன்பத்தை அனுப்பவித்திருக்கிறார்கள். உண்மையிலேயே நெருப்பாற்றில்
நீந்தி வந்தவர்கள் அவர்கள். அத்தகையோரை பல இடங்களிலிருந்து கண்டெடுத்துவந்து கரையேற்றி,
அமைதிப்படுத்தி, கல்வியின் வழியாக பண்படுத்தி மனிதர்களாக இச்சமூகத்தின் முன் நிற்கவைக்கும்
பணி மகத்தானது. அந்த மையத்தின் முகப்பில் நின்று சில படங்கள் எடுத்துக்கொண்டேன்.
அங்கிருந்து
நேராக நாங்கள் விமான நிலையத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. இரண்டரை மணி நேரப் பயணம்.
வழியெங்கும் மை ஸ்கில்ஸ் மையத்தின் செயல்பாடுகளை விரிவாகவே சொல்லிக்கொண்டு வந்தார்
நவீன். அவர் சொல்லச்சொல்ல பசுபதி சிதம்பரம் அவர்களைச் சந்திக்க இயலாமல் போவதை நினைத்து
வருத்தம் ஏற்பட்டது. அவருடைய கைகளை அழுத்தமாகப் பற்றி ஒருமுறை குலுக்கியிருந்தால் என்
மனம் நிறைவடைந்திருக்கும். ஆனால் அவர் அப்போது ஊரில் இல்லை. வேலை தொடர்பாக எங்கோ வெளியூருக்குச்
சென்றுவிட்டார். அவரைச் சந்தித்து உரையாடுவதற்காகவாவது இன்னொருமுறை மலேசியாவுக்கு வரவேண்டும்
என நினைத்துக்கொண்டேன்.
விமான
நிலையத்தில் இறங்கியபோது ஆறு நாள் அனுபவங்களும் வேகக்காட்சிகளாக நினைவில் நகர்ந்தன.
ஆறு நாட்களும் ஒவ்வொரு நிமிடமும் நான் இளைஞர்களுக்கு நடுவில் இருந்தேன் என்பது உற்சாகம்
தரும் நினைவாக இருந்தது. காலையிலிருந்து உறங்கச் செல்வதுவரை நவீன், அரவின்குமார், லாவண்யா,
பிரியதர்ஷினி என்கிற ப்ரியா, பயிற்சிமுகாமில் கலந்துகொண்ட முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்
என யாரோ ஓரிருவர் எப்போதும் எங்களுக்குத் துணையாகவே இருந்தனர். ஒவ்வொரு நிமிடமும் அவர்களிடம்
பிரியமுடன் பேசிக்கொண்டே இருந்தேன். அவர்களிடம் பகிர்ந்துகொள்ள ஏராளமான பழைய நிகழ்ச்சிகள்
தொடர்பான நினைவுகள் பெருக்கெடுத்தோடி வந்துகொண்டே இருந்தன.
லாவண்யா என்னும் இளம் எழுத்தாளர் என்னை அப்பா என்றும்
என் மனைவி அமுதாவை அம்மா என்றும் அழைத்ததை மறக்கவே முடியாது. என்னிடம் தன் அப்பாவின்
சாயலைப் பார்ப்பதாக அவர் தெரிவித்தார். அவசரமாக தன் கைப்பேசியில் சேமித்துவைத்திருந்த
அவருடைய புகைப்படத்தை என்னிடம் காட்டினார். ஒருகணம் எனக்கும் திகைப்பாகவே இருந்தது.
எங்கள் முகங்களில் ஒரு ஒற்றுமை இருப்பதை நான் உணர்ந்தேன். நான் காப்பி விரும்பி அருந்துவதைக்
கவனித்துவிட்ட அந்த மானசிகமான மகள் எனக்கு ஒரு காப்பிக்கோப்பையை அன்பளிப்பாக அளித்தாள்.
அந்த அன்புப் பரிசை வாங்கி பைக்குள் வைத்தபடி அனைவரிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டு
பரிசோதனைக்கூடத்துக்குள் சென்றோம். மூன்று கட்ட பரிசோதனைகளையும் முடிக்கும் வரை நவீனும்
லாவண்யாவும் தடுப்பு வேலிக்கு அப்பால் நின்று எங்களைக் கவனித்துக்கொண்டே இருந்தனர்.
எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு தடுப்புச்சுவரைத் தாண்டி உள்ளே நுழையும் முன்பாக ஒருமுறை
நண்பர்கள் பக்கம் பார்த்து புன்னகையுடன் கையசைத்து விடைபெற்றுக்கொண்டு விமானம் நிற்கும்
தளத்தை நோக்கி நடக்கத் தொடங்கினோம். மலேசிய நேரப்படி 9.40க்குப் புறப்பட்ட விமானம்
இந்திய நேரப்படி நள்ளிரவு பன்னிரண்டரைக்கு சென்னையை அடைந்தது.
(பேசும்
புதிய சக்தி – ஜனவரி 2025)