Home

Sunday, 26 January 2025

மலேசியப்பயணம் : அழகான நிலமும் அன்பான மனிதர்களும் - 1

 

இலக்கியத்தின் ஆர்வமுள்ள மலேசிய இளைஞர்கள் அதன் கலைநுட்பத்தை கூர்மையாக அறிந்துகொள்ளும் விதத்தில் பல்வேறு பயிற்சி முகாம்களையும் இலக்கியத்திருவிழாக்களையும் எழுத்தாளர் நவீன் ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவில் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். இந்த ஆண்டுக்குரிய வல்லினம் இலக்கியத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து நானும் நண்பர் ஜா.ராஜகோபாலும் விமானம் வழியாக கோலாலம்பூர் வந்து சேர்ந்தோம். என்னோடு என் மனைவி அமுதாவும் வந்திருந்தார். இந்திய நேரத்துக்கும் மலேசிய நேரத்துக்கும் இரண்டரை மணி நேர வித்தியாசம். இந்திய நேரப்படி 28.11.2024 அன்று  நண்பகல் 11.45க்குப் புறப்பட்ட விமானம் மலேசிய நேரப்படி மாலை 6.45க்கு கோலாம்பூருக்கு வந்து சேர்ந்தது. முறைப்படியான சோதனைகள் முடிந்து நாங்கள் வெளியே வரும்போது ஏழரை ஆகிவிட்டது. அப்போதே வானில் இருள் சூழந்துவிட்டது. 

மழை இல்லையென்றாலும் எப்போது வேண்டுமானாலும் தொடங்கிவிடலாம் என தோற்றமளித்தது வானம். எங்கெங்கும் கருமேகங்கள். தெருவிளக்குகள் பாய்ச்சிய வெளிச்சத்தில் சற்றுமுன் பொழிந்து ஓய்ந்த மழையின் தடத்தை தரையெங்கும் பார்க்கமுடிந்தது.

விமான நிலையத்துக்கு எழுத்தாளர் அரவின்குமார் வந்திருந்தார். விழாவில் விருது பெறப்போகும் நாயகன் அவர். அவருடைய முதல் சிறுகதைத்தொகுதி சிண்டாய் இலக்கியத்திருவிழாவில் வெளியிடப்பட இருக்கிறது. விமான நிலைய வாசலிலேயே அவருடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு நாங்கள் புறப்பட்டோம். அங்கிருந்து நாங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒய்.எம்.சி.ஏ. வளாகம் ஒரு மணி நேரப் பயண தொலைவில் இருந்தது. பயணம் நெடுக பேசிக்கொண்டே வந்தோம்.

அரவின்குமார் மலாய் மொழி கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரிகிறார். பள்ளிக்கல்வித்திட்டத்தில் தமிழ், மலாய், ஆங்கிலம் என மூன்று மொழிகளைக் கற்றுள்ளார். வேறு துறையில் பட்டதாரி என்றாலும் அவருடைய மலாய் மொழி தேர்ச்சியை கருத்தில் கொண்டு அவருக்கு அரசு மலாய்மொழி ஆசிரியராக பணி வழங்கியுள்ளது. அவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் எழுந்தது எப்படி என்று கேட்டதற்கு கல்லூரியில் தனக்கு தமிழ்ப்பாடம் நடத்திய தமிழ்மாறன் என்னும் ஆசிரியரே முக்கியமான காரணம் என்றார். இருபத்தைந்து மாணவர்கள் அமர்ந்திருக்கும் வகுப்பறையில் பாடம் எடுக்கும்போது, அவர் மானசிகமாக ஆயிரம் பேர் முன்னால் நின்று விளக்கம் கொடுத்து உரையாற்றுவதுபோலவே இருக்கும் என்றும் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடே தனக்கும் ஈடுபாடு பிறக்கக் காரணமாக இருந்தது என்றும் தெரிவித்தார். அவருடைய பேச்சின் ஈர்ப்பில் மாணவர்கள் மதிமயங்கிக் கிடக்கும் நேரத்தில் அவர் திடீரென பாடத்திலிருந்து கேள்வி ஒன்றைக் கேட்பார் என்றும் அப்போது சட்டென எழுந்து பதில் சொல்ல இயலாதபடி பேச்சுச்சுவையிலேயே ஆழ்ந்திருக்கும் மாணவர்களைப் பார்த்து “கருவாட்டுக் கடையில் வைரம் விற்க வந்துவிட்டேனடா” என்று செல்லமாக அலுத்துக்கொள்வர் என்றும் சொன்னதை தன்னால் ஒருபோதும் மறக்கமுடியாது என்றும் சொன்னார். அந்த ஆசிரியர் அவர் மீது செலுத்தியிருக்கும் செல்வாக்கைப் புரிந்துகொள்ள முடிந்தது.

மலேசியாவைப்பற்றி நினைக்கும் அனைவருக்கும் பத்துமலை முருகன் கோவிலின் நினைவும் வந்துபோகும். தொடக்க காலத்தில் அது ஒரு குகைக்கோவில். இரண்டாயிரத்துக்குப் பிறகுதான் நெடிதுயர்ந்த முருகன் சிலை நிறுவப்பட்டு கோவில் முகப்பு அலங்கரிக்கப்பட்டுள்ளது. குகையில் ஒரு சிறிய கோவிலாக தொடக்கத்தில் எழுப்பி நிறுத்தியவர் தம்புசாமி பிள்ளை என்னும் தமிழ்ச்செல்வந்தர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அந்தக் கட்டுமானத்தைக் கட்டினார். அப்போது தொழிலாளர்களாக இங்கு வாழ்ந்த தமிழர்கள் வணங்கிச் செல்ல அது ஒரு நல்ல ஏற்பாடாக இருந்தது. தன் சொந்தச் செலவிலேயே அந்தக் கோவிலை அவர் எழுப்பினார்.

அரவின்குமாருடன் உரையாடிக்கொண்டிருந்த போது திடீரென அவரை நினைத்துக்கொண்டேன். அவரைப்பற்றிய தகவலைப் படித்த முதல் கணத்திலேயே அவர் பெயர் என் மனத்தில் பதிந்திருந்தது. காரணம் அந்தப் பெயர்தான். அதே பெயரில் பெங்களூரில் ஒரு நீண்ட தெரு இருக்கிறது. டி.சி.பாள்யா எனப்படு தம்புசாமி செட்டித் தெரு. அந்தத் தெருவில் உள்ள ராகவேந்திர நகரில்தான் நண்பர் விட்டல்ராவ் வசிக்கிறார்.

தம்புசாமி பிள்ளை பற்றி அரவின்குமார் கூடுதலாக சில தகவல்கள் சொன்னார். என்றென்றும் நிலைத்திருக்கும் வண்ணம் கோவிலை எழுப்பிய அந்த மனிதர் நீண்ட காலம் உயிர்வாழவில்லை. நாற்பதுகளை ஒட்டிய நடுவயதிலேயே மறைந்துவிட்டதாகச் சொன்னார். எப்படி என்று கேட்டேன்.  அவருக்கு குதிரைப்பந்தயம் மீது ஈர்ப்பு உண்டு. அந்தக் காலத்தில் அது சிங்கப்பூரில் மட்டுமே நடக்கும். அதில் கலந்துகொண்டு திரும்புவது அவர் வழக்கம். தன் வழக்கப்படி ஒருமுறை அவர் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றிருக்கிறார். பந்தயம் முடிந்து அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக நெஞ்சுவலியால் அவர் உயிர் பிரிந்துவிட்டது. அந்தக் காலத்தில் இறந்தவரை இறந்த இடத்திலேயே அடக்கம் செய்வதுதான் வழக்கம். ஆனால் அவருக்கு இருந்த செல்வாக்கின் காரணமாக சிங்கப்பூர் அரசு அவருடைய உடலை சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு கப்பல் வழியாக கொண்டுவர அனுமதி கொடுத்தது. அவருடைய உடல் பாதுகாப்பாக மலேசியாவுக்குக் கொண்டுவரப்ப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது என்றார். நான் அவருடைய வாரிசுகள் பற்றிக் கேட்டேன். கெடுவாய்ப்பாக, அவரளவுக்கு அவருடைய பிள்ளைகள் மேலெழுந்து வாழவில்லை. அந்த அடையாளம் அவரோடு மறைந்து போய்விட்டது என்று சொன்னார்.

ப்ரிக்ஃபீல்ட் என்னும் பகுதியில் அமைந்திருக்கும் ஒய்.எம்.சி.ஏ.வில் எங்களுக்கு அறைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.  அறையில் எங்கள் உடைமைகளை வைத்துவிட்டு இரவுச்சிற்றுண்டிக்கு உடனடியாகப் புறப்பட்டோம். கடைத்தெரு கிட்டத்தட்ட ஒரு சென்னை வீதியைப்போலவே இருந்தது. தலைப்பாக்கட்டி பிரியாணி, குமரன் பட்டுமாளிகை, வசந்தபவன், ஆனந்தபவன் என தமிழிலேயே பெயர்ப்பலகை வைக்கப்பட்ட கடைகள் வரிசையாக இருந்தன. அஞ்சப்பர், எம்டி.ஆர் என பெயர் தெரிந்த கடைகளும் இருந்தன. ஒரு கடையில் தமிழ்த்திரைப்படப்பாடல் ஒலித்தபடி இருந்தது.  

ஒருகணம் சென்னை அல்லது பெங்களூர் தெருவில் நடந்துகொண்டிருப்பதுபோலவே இருந்தது. அந்த அளவுக்கு அத்தெருவின் அமைப்பு தமிழ்நாட்டின் சாயலைக் கொண்டிருந்தது. நான் என்னுடைய வியப்பை அரவின்குமாருடன் பகிர்ந்துகொண்டேன். அவர் புன்னகையுடன் “அது உண்மைதான். அப்படித்தான் காலம்காலமாக இந்த இடம் இருக்கிறது. பழங்காலத்திலும் சரி, இப்போதும் சரி, இந்த இடத்தை அனைவரும் ’லிட்டில் இந்தியா’ என்று பட்டப்பெயர் சூட்டி அழைப்பது வழக்கம்” என்றார். அதற்குப் பின்னணியில் ஒரு வரலாறு பொதிந்திருக்கிறது என்று சொல்லிவிட்டு அந்தக் கதையையும் சொன்னார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் அந்த இடத்தில் ஆங்கிலேயர்களே வசித்துவந்தனர். அவர்களுடைய வீடுகள் பெரும்பாலும் மரப்பலகைகளை நிறுத்தி கூரை வேயப்பட்டதாக இருந்தன. ஒருமுறை எதிர்பாராமல் ஏற்பட்ட தீவிபத்தில் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டன. செலாங்கூர் மாவட்டத்தின் மூத்த அதிகாரி அந்தப் பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப விரும்பினார். தீவிரமான கள ஆய்வுக்கும் பொறியாளர்களின் ஆலோசனைக்கும் பிறகு, செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களோடு ஓடு வேயப்பட்ட கூரைகளை நிறுத்தி வீடுகளைக் கட்டும் திட்டம் உருவானது. அத்தகு வீடுகளைக் கட்டியெழுப்ப ஏராளமான செங்கற்கள் தேவைப்பட்டன. விலைகொடுத்து வாங்குவதற்குப் பதிலாக, ஒரு தொழிலாளர் கூட்டத்தை செங்கல் சூளை வேலையில் இறக்கினார்கள். களிமண்ணைக் குழைத்து செங்கல் தயாரிக்கும் கலையில் தேர்ச்சி கொண்ட இந்தியர்கள் அந்த வேலையில் ஆர்வத்துடன் இறங்கினார்கள். சூளைகளைச் சுற்றி தம் குடியிருப்புகளை உருவாக்கிக்கொண்டு செங்கற்களைத் தயார் செய்தார்கள். அவற்றைக் கொண்டு புதிய ஆங்கிலேயக் குடியிருப்புகள் உருவாகின.  அந்த வட்டாரத்தை அனைவருமே ப்ரிக்ஃபீல்ட் என அழைக்கத் தொடங்கி, நாளடைவில் அதுவே பெயராக அமைந்துவிட்டது. விடுதலைக்குப் பிறகும் அந்தப் பெயர் நிலைத்துவிட்டது. செங்கற்களுக்கான தேவை குறைந்ததும் வெவ்வேறு வேலைகளைத் தேடிக்கொண்ட இந்தியர்கள் அந்த இடத்தையே தம் வசிப்பிடமாக மாற்றிக்கொண்டனர். லிட்டில் இந்தியா என்னும் பெயர் நிலைத்துவிட்டது.

ஒவ்வொரு தெருவும் தொடங்கும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெயர்ப்பலகை ஜாலான் என்னும் முன்னொட்டோடு தொடங்குவதைப் பார்த்தேன். அதற்கான காரணத்தை அரவின்குமாரிடம் கேட்டபோது ஜாலான் என்னும் சொல்லுக்கே தெரு என்பதுதான் பொருளென்றும், மலேசியா முழுதும் அது முன்னொட்டாக பயன்படுத்தப்படுகிறது என்றும் சொன்னார். தலைவர்களின் பெயர்கள் தெருக்களுக்குச் சூட்டும் வழக்கம் உள்ளதா என்று கேட்டேன். உண்டு என்ற அரவின்குமார் பல தெருக்களின் பெயர்களைச் சொன்னார். ஒரு பெயரில் அவர் குறிப்பிட்ட சம்பந்தன் என்னும் சொல் ஆர்வத்தைத் தூண்டியதால் அவரைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்பினேன். அவருடைய முழுமையான பெயர் திருஞானசம்பந்தன் என்றும் மலேசிய விடுதலைப்போரில் ஈடுபட்ட தமிழர் என்றும் விடுதலை பெற்ற மலேசிய அரசில் அமைச்சராகவும் பணியாற்றியவர் என்றும் சொன்னார்.

எம்.டி.ஆர். சிற்றுண்டியகத்தில் உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டே சாப்பிட்டோம். நேரம் போனதே தெரியவில்லை. ஓப்பன்கிட்சன் என்னும் நடைமுறை சமீப காலமாக புகழ்பெற்று வருவதை அரவின்குமார் சொன்னார். சாப்பிட வருகிறவர்கள் கண்முன்னாலேயே சமைத்து அளிக்கும் முறை. காத்திருந்து சாப்பிட அவர்கள் தயாராக இருப்பதால் கடைக்காரரும் பொறுமையாகச் சமைத்துக்கொடுக்கிறார். கோலாலம்பூரில் ‘சட்டிசோறு’ என்ற பெயரில் பல இடங்களில் இத்தகு கடைகள் தோன்றியிருக்கின்றன என்றும் ஏற்கனவே வேகவைத்து தயாராக இருக்கும் காய்கறிகளையும் உணவையும் ஒரு சேரக் கலக்கி கொதிக்கவைத்து சமைத்துக் கொடுப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.  

நாங்கள் சிற்றுண்டி முடித்து வெளியே வந்தபோது மழை தொடங்கிவிட்டது. சிறுசிறு ஊசித்தூறல். தெருவிளக்கின் வெளிச்சத்தில் ஊசித்தூறலிடையில் வானத்தைப் பார்க்க அழகாக இருந்தது. இருண்ட கருநீலம் கவர்ச்சியாக இருந்தது. எந்த நேரத்திலும் கதவைத் திறந்துகொண்டு யாராவது ஒருவர் வெளிப்படக்கூடும் என நினைக்கவைக்கும் இருள்சூழ்ந்த வீட்டைப்போல இருந்தது வானம். அந்தச் சாரலில் நனைந்தபடியே பேசிக்கொண்டு அறைக்கு வந்தோம். அடுத்த நாள் திட்டத்தைப்பற்றித் தெரிவித்துவிட்டு அரவின்குமார் புறப்பட்டார். அவருடைய வீடு எங்கே இருக்கிறது என அவரிடம் கேட்டேன். மெட்ரோவில் இருபது நிமிட பயணத்தொலைவில் இருப்பதாக அவர் சொன்னார். கிட்டத்தட்ட பதினைந்து கிலோமீட்டர் என நினைத்துக்கொண்டேன். பயணக்களைப்பில் உறக்கம் வந்தது. அறைக்கு வந்ததுமே உடைமாற்றிக்கொண்டு உறங்கத் தொடங்கிவிட்டேன்.

29.11.2024 அன்று காலையில் இளம் வாசகர்களான லாவண்யாவும் அவருடைய தோழி பிரியதர்ஷினியும் வந்து அறிமுகப்படுத்திக்கொண்டனர். அவர்களுடைய வாகனத்தில் நானும் அமுதாவும் ராஜகோபாலும்  அமர்ந்தோம். அனைவரும் விடுதிக்கு அருகிலேயே இருந்த ஒரு சிற்றுண்டி விடுதியில் சாப்பிட்டோம். பிறகு அங்காளம்மன் கோவில், முருகன் கோவில், இரட்டைக் கோபுரங்கள், சைனா டவுன் என அன்றைய முழுநாளுக்குமான திட்டங்களைத் தெரிவித்தார்.  எதையும் மாற்றவேண்டாம் என்றும் அவர் விருப்பப்படி எங்களை அழைத்துச் செல்லலாம் என்றும் நாங்கள் ஒருமித்த குரலில் சொல்லிவிட்டோம்.  “முதலில் அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன் கோவிலுக்குச் செல்வோம்” என்று சொன்னார் லாவண்யா. செலாங்கூர் மாவட்டத்தில் உள்ள அந்தக் கோவில் சற்று தொலைவில் உள்ள இடம். முற்பகலிலேயே பார்த்துவிடுவது நல்லது என்பது அவர் எண்ணமாக இருந்தது. அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டோம்.

நீண்ட பயணம். நான் எங்கள் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலைப்பற்றி அவருக்குச் சொன்னேன். கடலூர், விழுப்புரம் மாவட்டப்பகுதிகளில் அனைவராலும் வணங்கப்படும் முக்கியமான நாட்டார் தெய்வம் அங்காளம்மன். அப்பகுதிகளில் அங்காளம்மன் கோவில் இல்லாத ஊரே இல்லை. அங்காளம்மனைப் பற்றிய தொன்மக்கதையையும் அதை மையப்பொருளாக வைத்து நான் பல ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய ஒரு நெடுங்கதையைப்பற்றியும் லாவண்யாவுக்குச் சொன்னேன். அவர் அந்தக் கதையைப் படித்திருக்கவில்லை. அதனால் ஆர்வமுடன் கேட்டுக்கொண்டார்.

விரிந்த நிலப்பரப்பில் அந்த ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக எங்கெங்கும் குங்குமம் கரைந்தோடி செவ்வண்ணம் படிந்திருந்தது. ஒரு சிறிய மண்மேட்டில் பெண்முகம் வடிவமைக்கப்பட்டு  குங்குமம் பூசப்பட்டிருந்தது. கருவறைக்குள் அம்மன் தனியாக வீற்றிருந்தார். கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் குடியிருப்புகள் எதுவும் இல்லை. பிரதான சாலையை அக்கோவிலோடு இணைக்கும் வாகனப்பாதை மட்டுமே நீண்டிருந்தது. திருவிழாக் காலத்தில் நிற்க இடமில்லாத வகையில் ஆயிரக்கணக்கான வண்டிகள் வந்து கோவிலைச் சுற்றி நின்றுவிடும் என்றார். நான் அப்படி ஒரு காட்சியை நினைத்துப் பார்த்துக்கொண்டேன். அந்த நிலப்பரப்பில் அது சாத்தியம் என்றே தோன்றியது.

கோவிலை வலம் வந்த பிறகு  பத்துமலையை நோக்கி வந்தோம். ஒரு விடுதியில் மதிய உணவை முடித்துக்கொண்டு பத்துமலைக்குச் சென்றோம். மலாய் மொழியில் பத்து என்றால் கல் என்று பொருள். மலைமேலிருக்கும் குகையில் முருகன் கோவில் அமைந்திருக்கிறது. ஒருவகையில் ஈயச்சுரங்கத்துக்காக எல்லா மலைகளும் வெட்டிச் சாய்க்கப்பட்ட நேரத்தில் இந்தக் குகைக்கோவிலின் காரணமாக இந்த மலை தப்பித்துவிட்டது. பத்துகுகையில் இருக்கும் சுண்ணாம்புக்கற்கள் மிகமிகப் பழமையானவை. உயரமான ஆலம் விழுதுகளைப்போல தொங்கும் சுண்ணாம்புப் படிவங்கள் இந்தக் குகையை நான்கு திசைகளிலும் அரணாக நின்று காக்கிறது. மழையில் உருகி வழிந்து ஒவ்வொரு சுண்ணாம்பு விழுதும் ஒரு வடிவத்தில் அமைந்திருக்கிறது. உச்சியில் தெரியும் இடைவெளியில் வானம் வட்டமான நீலப்புள்ளியாகத் தெரிகிறது. வெளிச்சம், மழை எல்லாமே அதன் வழியாக குகைக்குள் வருகிறது.

தரையிலிருந்து 272 படிகளை ஏறிச் சென்றுதான் இந்தக் குகையை அடையவேண்டும். படிகளின் இரு புறங்களிலும் உயரமான மரங்கள் அடர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு மரக்கிளையிலும் ஏராளமான குரங்குகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன. தரையிலிருந்து குகைவாசல் வரையிலான உயரத்துக்கு விஸ்வரூபம் எடுத்ததுபோல நீண்டதொரு முருகன் சிலை நிற்கிறது. தங்கமுலாம் பூசப்பட்ட அதன் நிறம் வெளிச்சம் பட்டு மின்னிக்கொண்டே இருக்கிறது. நாங்கள் சென்ற நேரத்தில் கருவறை திறக்கவில்லை. அதனால் குகைக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வந்தோம். ஒரு மூலையில் முருகனை தோளோடு தூக்கிவைத்திருக்கும் சிவனின் உருவச்சிலை நிறுவப்பட்டிருந்தது. இன்னொரு மூலையில் விநாயரின் சிலை நிறுவப்பட்டிருந்தது. குகைக்குள் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருந்த சுண்ணாம்பு விழுதுகள் ஒருவகையில் எனக்கு அந்தமான் தீவில் நான் பார்த்த ஒரு சுண்ணாம்புக்குகையை நினைத்துக்கொள்ள வைத்தன. அதைப்பற்றி நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்குள் கருவறை திறக்கும் நேரம் வந்துவிட்டது. மணியடிக்கும் ஓசை கேட்டது. நடந்து சென்று முருகனை வணங்கிவிட்டு மெதுவாகப் படியிறங்கி தரைக்கு வந்தோம்.

ஒரு காப்பியை அருந்திவிட்டு எங்கள் பயணத்தை மீண்டும் தொடங்கினோம். சூரியன் மறையத் தொடங்கும் நேரத்தில் நாங்கள் பெட்ரோனாஸ் இரட்டைக்கோபுரங்களை அடைந்தோம். பெட்ரோனாஸ் என்பது மலேசியாவை மையமாகக் கொண்ட தேசிய எண்ணெய் நிறுவனம். சியர்ஸ் கோபுரத்தைப்போல கோலாலம்பூரில் ஒரு கோபுரத்தை எழுப்பவேண்டும் என்ற கனவின் விளைவாக இந்நிறுவனம் இக்கோபுரத்தைக் கட்டியது. கோலாலம்பூரில் அமைந்திருக்கும் இந்தக் கோபுரங்கள் உலகிலேயே ஐந்தாவது உயரமான கட்டடமாகும். பின்நவீனத்துவ கட்டடக்கலையும் இஸ்லாமியக் கட்டடக்கலையும் இணைந்த கலவையில் இக்கோபுரங்கள் உருவாக்கப்பட்டன.

1992ஆம் ஆண்டு கோபுரங்கள் கட்டும் வேலை தொடங்கி ஏழாண்டு காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது. இதன் உயரம் ஏறத்தாழ நானூற்றைம்பது மீட்டர். இதில் எண்பத்தெட்டு தளங்கள் உள்ளன. இன்று கோலாலம்பூரின் அடையாளச்சின்னமாக இக்கோபுரங்கள் விளங்குகின்றன. இந்த இரட்டைக்கோபுரங்களை வடிவமைத்தவர் சீசர் பெல்லி என்னும் அமெரிக்கக் கட்டடக்கலைஞர்.  ஏராளமான இளைஞர்களும் இளம்பெண்களும் அந்தக் கோபுரங்களின் முன்னால் நின்று படம் எடுத்துக்கொண்டனர்.

இரட்டைக்கோபுரங்களை ஒட்டி வட்டவடிவிலான ஒரு பெரிய மால் இருந்தது. கிறிஸ்துமஸை ஒட்டி அப்போதே அலங்காரங்கள் தொடங்கிவிட்டன. வாசலில் பெரிய பெரிய கிறிஸ்துமஸ் மரங்கள் பச்சைவண்ணத்தில் ஒப்பனை செய்யப்பட்டி நின்றிருந்தன. சின்னச்சின்ன வண்ணவிளக்குகள் எங்கெங்கும் மின்னியபடி இருந்தன. எந்த நோக்கமும் இல்லாமல் கடைகளை வேடிக்கை பார்த்தபடி அந்த வளாகத்தைச் சுற்றி வந்தோம். சாப்பாட்டுக்கடை தவிர்த்து வேறு எந்தக் கடையிலும் பெரிய அளவில் கூட்டம் இல்லை. ஆனால் வளாகமெங்கும் ஜேஜே என்று ஆட்களின் கூட்டம் நிறைந்திருந்தது. மின்சாரம் மூலம் நகரும் ஏறுபாதையிலும் இறங்குபாதையிலும் ஆட்கள் நடந்துகொண்டே இருந்தனர்.

முற்றிலுமாக இரவு கவிந்த பிறகு நாங்கள் சைனாடவுன் பக்கம் சென்றோம். அதே போன்றதொரு சைனா டவுன் பற்றிய விவரணையை ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவலில் படித்த நினைவு வந்தது. பாண்டியன் அந்த வீதிகளில் நடமாடுவதாக அவர் எழுதியிருப்பார். அந்த நினைவை அசைபோட்டபடி ஒரு வரிசைக்குள் நுழைந்துவிட்டோம். ஐந்தடி நீளமும் ஐந்தடி அகலமும் மட்டுமே கொண்ட சின்னச்சின்னக் கடைகள்.   பல இடங்களில் திரும்பித்திரும்பி அந்தப் பாதை நீண்டுகொண்டே இருந்தது. அங்கு தாங்கிகளிலும் மேசைகளிலும் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பொருட்களை நின்றுகொண்டே ஒருவர் விற்பனை செய்துகொண்டிருந்தார். எங்களுக்கு எதையும் வாங்கும் ஆர்வம் எதுவும் இல்லை. சும்மா வேடிக்கை பார்த்தபடி சுற்றிச்சுற்றி வந்தோம்.

ஏறத்தாழ ஒரு மணி நேரம் சுற்றி அலைந்துவிட்டு வெளியேறுவதற்கு முன்னால் ஒரு பழச்சாறு கடைக்கு முன்னால் வந்து நின்றோம். ஒரு கடையில் கூடை நிறைய பூண்டு அளவிலும் சப்போட்டா பழத்தின் நிறத்திலும் சின்னச்சின்ன பழங்களை ஒருவர் விற்பனை செய்துகொண்டிருந்தார். நான் அவற்றை சின்ன சப்போட்டா என நினைத்துக்கொண்டேன். மலாயில் அதற்கு ஏதோ ஒரு பெயர் சொன்னார்கள். ஆளுக்கு நான்கு பழங்கள் வாங்கி உரித்துச் சாப்பிட்டோம். இனிப்பாகவே இருந்தது. பழம் வெண்ணிறத்திலும் விதை கருநிறத்திலும் அமைந்திருந்தது.    அந்தப் பழத்தைச் சுவைத்தபடியே வாகனத்தில் ஏறி கதை பேசிக்கொண்டே விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

30.11.2024 காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை நாங்கள் தங்கியிருந்த வளாகத்திலேயே இலக்கியமுகாம் நடைபெற்றது. முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பதிவுசெய்து வந்திருந்தனர். நண்பர் ராஜகோபால் அவர்களுக்கு முற்பகலில் சங்கப்பாடல்களையும் பிற்பகலில் நவீன கவிதைகளையும் அறிமுகப்படுத்தி வகுப்பெடுத்தார். ஒரு படைப்பை அணுகும் வழிமுறைகளை அனைவருக்கும் பொறுமையாக விளக்கினார். ஒரு சொல்லின் வழியாக ஆழத்தை நோக்கி இறங்குவதும் ஒரு சொல்லையே சிறகாகக்கொண்டு வானத்தை நோக்கி பறப்பதும் சாத்தியமாகும் அற்புதத்தை அவர்களுக்கு அவர் நிகழ்த்திக் காட்டினார். இரவு எட்டு மணிக்கு மேல் ’படைப்புகளில் நேர்நிலை’ என்னும் தலைப்பில் பல சிறுகதைகளையும் வாழ்க்கைச்சம்பவங்களையும் முன்வைத்து நான் உரையாற்றினேன். இறுதியில் நிகழ்ச்சியில் பங்குகொண்டவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கும் பதில் சொன்னேன்.

01.12.2024 அன்று காலை ஏழரை மணிக்கே வகுப்பு தொடங்கிவிட்டது. தேநீர் இடைவேளைக்கு முன்பு பக்தி இலக்கியப்பாடல்களைப்பற்றிய அமர்வும் அதற்குப் பின்பு சிறுகதைகளைப்பற்றிய அமர்வும் நிகழ்ந்தன.  காளிப்பிரசாத், விஷால்ராஜா, சுனில்கிருஷ்ணன், குணா கந்தசாமி, தோப்பில் முகம்மது மீரான் ஆகியோரின் சிறுகதைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. உணவு இடைவேளைக்குப் பிறகு நாவல் குறித்த விவாதம் நிகழ்ந்தது. என்னுடைய பாய்மரக்கப்பல் நாவல் குறித்தும் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் குறித்தும் இளம் வாசகர்கள் தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர். அந்நாவல்களை இன்னும் மேம்பட்ட விதத்தில் புரிந்துகொள்ள உதவும் வகையில் ராஜகோபால் கூடுதலான சில வழிமுறைகளை அவர்களுக்குக் கற்பித்தார்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு அனைவருமே முகாம் நடைபெற்ற அறையிலிருந்து வெளியேறி எதிர்ப்புறத்தில் ஒப்பனை செய்யப்பட்டிருந்த மண்டபத்துக்கு வந்தோம். இளம் எழுத்தாளருக்கான விருது வழங்கும் விழா அங்குதான் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.  விழா தொடங்குவதற்கு இன்னும் நேரமிருந்த காரணத்தால் ஒவ்வொருவராக வந்துகொண்டே இருந்தனர். வந்தவர்கள் அனைவருக்கும் இனிப்பும் காப்பியும் வழங்கப்பட்டன.

எனக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த முகமான எழுத்தாளர் சண்முகசிவா வந்திருந்தார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ’வீடும் விழுதுகளும்’ சிறுகதைத்தொகுதியைப் படித்த நினைவிருக்கிறது. நான் அவருடைய புதிய தொகுதிகளைப்பற்றி விசாரித்தேன். ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பாக புதிய தொகுதியொன்று வந்ததாகத் தெரிவித்தார். எண்பது வயதைக் கடந்த ஆய்வாளர் ஜானகிராமன் அவர்களையும் அக்கூடத்தில்  சந்தித்தேன். தொடக்க கால மலேசிய இலக்கிய வரலாற்றை முறையாக எழுதி ஆவணமாக்கிய பெருமைக்குரியவர். இரு தொகுதிகளை எழுதி முடித்துவிட்டதாகவும் மூன்றாவது தொகுதியை எழுதிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். கூலிம் ஆசிரமத்தைச் சேர்ந்த சுவாமிஜி பினாங்கிலிருந்து வந்திருந்தார். எல்லோரிடமும் சிறிது நேரம் உரையாடினேன்.

நிகழ்ச்சியின் முதல் அமர்வு,  சமகாலத்திய சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த பார்வையை முன்வைக்கும் விதமாக கட்டமைக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் அந்த அரங்கத்திலேயே பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர். முதலில் முனைவர் இளம்பூரணன் சணல்மூட்டை(காந்தி முருகன்), தீக்‌ஷா (ஏ.கே.ரமேஷ்) ஆகிய இரு தொகுதிகளை முன்வைத்து உரையாற்றினார். இரண்டாவதாக நூலகர் விஜயலட்சுமி அப்பாவின் அம்மா (சுபத்ரா அபிமன்னன்), கரு (யோகாம்பிகை) ஆகிய சிறுகதைத்தொகுதிகளை முன்வைத்து உரையாற்றினார். மூன்றாவதாக மொழிபெயர்ப்பாளரான ஸ்ரீதர் ரங்கராஜ் ஏழு சிறுகதையாசிரியர்களின் தேர்ந்தெடுத்த 24 சிறுகதைகளை முன்வைத்து உரையாற்றினார். ஒரு கதையை வாசித்து முடித்ததும் மனத்திலெழும் கேள்விகளும் அதிர்வுகளுமே அக்கதையின் ஆற்றலை அளவிட உதவும் கருவிகளாக விளங்கும் என்பதை வெவ்வேறு கதைகளின் செல்திசையை முன்வைத்து விளக்கினார்.

அடுத்த அமர்வு இளம் எழுத்தாளருக்கான விருது வழங்கும் விழா. ‘சிண்டாய்’ என்னும் தொகுதிக்காக எழுத்தாளர் அரவின்குமார் விருதாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். கல்லூரியில் அவருக்குத் தமிழாசிரியராக இருந்த தமிழ்மாறன், சண்முகம் சிவா, நவீன், சுவாமிஜி மூவரும் அவரை வாழ்த்திப் பேசினர். சிண்டாய் தொகுதியின் கதைகளின் முக்கியத்துவம் குறித்து நான் உரையாற்றினேன். சமீபகாலத்தில் அஜிதனின் மருபூமி, செந்தில் ஜெகந்நாதனின் மழைக்கண், திருச்செந்தாழையின் விலாஸம், விஷால்ராஜாவின் திருவருட்செல்வி ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளர்களின் முதல் சிறுகதைத்தொகுதியின் வரிசையில் சிண்டாய் தொகுதியை இணைத்துப் பார்க்கத்தக்க வகையில் அவருடைய கதைகள் அமைந்திருக்கும் விதத்தை நான் விரிவாகவே எடுத்துரைத்தேன். சிண்டாய், அணைத்தல், தைலம் ஆகிய கதைகள் எதிர்காலத்தில் அவருடைய பெயர் சொல்லும் கதைகளாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நிகழ்ச்சி இனிதே நிறைவுற்ற பின்னரும் நீண்ட நேரம் அந்த வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நின்று அனைவரும் பேசிக்கொண்டே இருந்தனர். அரவின்குமாரின் தந்தையும் பாட்டியும் வந்திருந்தனர். அவருடைய அம்மா மறைந்துவிட்டிருந்தார். அவ்விருவரோடும் நான் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தேன்.

02.12.2024 அன்று நவீனின் துணைவியாரான பவித்ராவும் அரவின்குமாரும் எங்களை கோலாலம்பூரின் மையத்தில் உள்ள அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்த அருங்காட்சியகக் கட்டடத்தின் தோற்றம் அழகாக இருந்தது. மூன்று அடுக்குகளாக அக்கட்டடம் இருந்தது. ஒரு கோணத்தில் நெடிதுயர்ந்த மூன்று பெரிய பறவைகள் அருகருகே அமர்ந்திருப்பதுபோல தோன்றியது. பறவைகளின் இறகுகள் போல இரு புறமும் சுவர்கள் நீண்டிருந்தன. அவற்றில் மலேசிய சுதந்திரப்போராட்ட வரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருந்தன. கண்ணை உறுத்தாத வண்ணச்சேர்க்கையையும் விதவிதமான உருவங்களையும் பார்த்தபடி நான் வெகுநேரம் நின்றுவிட்டேன். ஒவ்வொருவரின் தோற்றத்தைப்பற்றியும் பங்களிப்பைப்பற்றியும் அரவின்குமார் எனக்கு விவரித்தார்.

இந்தியாவைப்போலவே மலேசியாவும் மூன்று பக்கங்களிலும் கடல்களால் சூழப்பட்ட நாடு. தொடக்கத்தில் மலாயா என அழைக்கப்பட்டு, விடுதலைக்குப் பிறகு மலேசியா என மாற்றி அழைக்கப்பட்டது. உலகின் முக்கியமான கடல் போக்குவரத்துப் பாதையில் அந்த நாடு அமைந்துள்ளது. அந்த அமைப்பே அந்நியர்களின் ஆதிக்கத்துக்கு மலேசியா உட்படுவதற்கு வழிவகுத்துவிட்டது. பதினான்காம் நூற்றாண்டு வரைக்கும் மலைவாழ் மக்களே இந்நிலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு இஸ்லாம் மதம் இங்கு பரவத்தொடங்கியது. முதன்முதலாக மலாக்கா சுல்தானகம் உருவானது.

(பேசும் புதிய சக்தி - ஜனவரி 2025)

(தொடரும் .....)