Home

Monday, 3 February 2025

விலைமதிப்பில்லாத வைரங்கள்

 

ஒருநாள் மாலை வழக்கம்போல எங்கள் குடியிருப்புப் பகுதியை ஒட்டிய  ஏரிக்கரையில் வேடிக்கை பார்த்தபடி நடந்துகொண்டிருந்தேன். எனக்கு முன்னால் பத்து பதினைந்தடி தொலைவில் நாற்பது வயதையொட்டிய ஒருவர் ஏழெட்டு வயதுள்ள ஒரு சிறுவனின் விரல்களைப் பற்றிக்கொண்டு நடந்துகொண்டிருந்தார். அவர் அச்சிறுவனிடம் மெல்லிய குரலில் எதையோ சொல்லிக்கொண்டிருந்தார். தொலைவு காரணமாகவும் காற்றுவீச்சு காரணமாகவும் எதுவும் காதில் விழவில்லை.  நடை சுவாரசியத்துக்காக ஏதேனும் ஒரு கதையை அச்சிறுவனுக்கு அவர் சொல்லிக்கொண்டிருக்கக்கூடும் என நானாகவே நினைத்துக்கொண்டேன்.  சிறுவயதில் என் தாத்தாவின் கையையும் அப்பாவின் கையையும் பற்றிக்கொண்டு நடந்த பழைய காலத்து நினைவுகள் ஓரிரு கணங்கள் மனத்தின் மூலையில் மின்னி மறைந்தன. 

சில நிமிடங்களுக்குப் பிறகு அவர்களுடைய உரையாடலைக் காது கொடுத்துக் கேட்கும் அளவுக்கு அருகில் சென்றுவிட்டேன். என்ன கதையாக இருக்கக்கூடும் என அறிந்துகொள்வதற்கு எழுந்த என் ஆர்வத்தால் அந்த உரையாடலைச் செவிமடுக்கத் தொடங்கினேன். ஆனால்  இரண்டு மூன்று நொடிகளிலேயே என் ஆர்வம் கரைந்து சப்பென்று போய்விட்டது.  

தரையில் இருக்கும் புழுதியை கையால் தொட்டு விளையாடக்கூடாது, தெருவில் விழுந்து கிடக்கும் புளியம்பழத்தையோ கொடுக்காப்புளியையோ ஒருபோதும் எடுத்து சாப்பிடக்கூடாது, வெட்டவெளியில் உட்காரக்கூடாது. பாதையோரமாக நடந்து செல்லும் ஆடுகளையும் மாடுகளையும் தொடக்கூடாது, ஏரிக்குள் இறங்கி தண்ணீரில் கால் நனைய நிற்கக்கூடாது. யாரையும் தொட்டுப் பிடித்து ஆடும் ஆட்டம் கூடவே கூடாது தெருவோரத்தில் முளைத்து நிற்கும் செடிகொடி புதர்களுக்கு அருகில் செல்லவே கூடாது. இப்படி ஏராளமான கூடாதுகளை ஒழுக்க விதிகளாக அவர் சலிப்பில்லாமல் அடுக்கிக்கொண்டே போனார். அச்சிறுவனும் அவர் சொல்வதற்கெல்லாம் ம் கொட்டிக்கொண்டிருந்தான். அந்த உரையாடலின்போது எவ்விதமான மாற்றுச் சிந்தனைக்கான விருப்பத்தையும் அவன் தெரிவிக்கவில்லை.

ஒரு காலத்தில் பாரதியார் தம் பாடலில் ‘கூடி விளையாடு பாப்பா – ஒரு குழந்தையை வையாதே பாப்பா’ என்று பதிவு செய்திருந்ததை நினைத்துக்கொண்டேன். இன்றோ அந்த நிலைமாறி ஒவ்வொருவரும் தம் பிள்ளைகளிடம் ’யாரோடும் சேராதே பாப்பா, யாரோடும் ஆடாதே பாப்பா,  யாரோடும் பேசாதே பாப்பா’ என்று மட்டுறுத்தி வளர்க்கும் துரதிருஷ்டமான சூழல் பிறந்துவிட்டது

இந்த ஒரு காட்சியை மட்டும் எடுத்துக்காட்டாக முன்வைத்து இன்றைய இளம்பெற்றோர்கள் இப்படி இருக்கிறார்கள் என தடாலடியாக வகுத்துக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. அந்தக் குறிப்பிட்ட இளைஞருக்கு நேர்மாறாக, எல்லாவற்றையும் தொடவும் ஆடவும் பேசவும் அனுமதிக்கும் பெற்றோர்களும் உலகத்தில் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

விளையாடிக் களிக்கும் பிள்ளைகளிடம் சொற்களின் ஊற்றுக்கண்கள் மிகவிரைவாகத் திறந்துகொள்கின்றன. அவர்களிடமிருந்து தன்னெழுச்சியாக கதைகளும் பாட்டுகளும் மலர்கின்றன. ஒரு சிறுவனும் சிறுமியும் இட்டுக் கட்டிப் பாடும் பாட்டும் கதையும் விலைமதிப்பில்லாத வைரங்கள். கல்லில் பொறிக்கப்படும் எழுத்துகளைப்போல அவை காலத்தில்  நிலைத்துவிடுகின்றன. அடுத்தடுத்த தலைமுறைகளும் அப்பாடல்களை மெருகேற்றி மெருகேற்றிப் பாடி மகிழ்கின்றன.

விவேகானந்தன் என்கிற செஞ்சி தமிழினியன் இரு குழந்தைகளின் தந்தை. ஓய்வுள்ள பொழுதுகளிலெல்லாம் தம் பிள்ளைகளுக்குக் கதை சொல்லி, பாட்டு பாடி, பூங்காக்களிலும் மைதானங்களிலும் திரிந்து, குழந்தைகளோடு குழந்தையாக வளர்ந்தவர். கதை, பாட்டு ஆகியவற்றின் அடுத்த கட்டத்தை நோக்கி அப்பிள்ளைகள் நகர்ந்துவிட்டனர். தம் பிள்ளைகளுக்காக பாடல்களையும் கதைகளையும் இட்டுக்கட்டி சொல்லி மகிழ்ந்த அப்பாவோ தந்தைமையின் தாராளாமனம் மாறாமல் அப்படியே இருக்கிறார்.  அதனால்தான் தம் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக பாடிக் காட்டிய பாடல்களுக்கு எழுத்துவடிவம் கொடுத்து இப்போது ஒரு நூலாக்கியிருக்கிறார். இப்போது இத்தொகுதி ஓர் ஆவணம். விவேகானந்தன் – சுமதி இணையர் இருவரும் இணைந்து தன் பிள்ளைகளை உற்சாகமூட்டி, உள்ளத்துக்குத் தெம்பூட்டி வளர்த்த காலகட்டத்தின் மாபெரும் ஆவணம்.

சிறார் பாடல்களில் தாளக்கட்டு மிகவும் முக்கியம். எழுதும் ஒவ்வொரு வரியும் சிறுவன் நெஞ்சிலிருந்து எழும் வரியை நிகர்த்ததாகவே இருக்கவேண்டும்.  அவர்களுடைய சொற்களஞ்சியத்துக்கே உரிய சொற்களாகவும் இருக்கவேண்டும். இத்தொகுதியில் உள்ள பெரும்பாலான பாடல்களை தமிழினியன் தம் பிள்ளைகளுக்காக கட்டிப் பாடப்பட்டவை என்பதால் அவை இயல்பான துள்ளலோடும் ரசனைக்குரிய சொற்களோடும் இருக்கின்றன. ராகம் போட்டு பாடவும் ஆடவும் இசைவாக இருக்கின்றன.

தொடக்கப்பகுதியில் இடம்பெற்றிருக்கும் ’யாரு அவன் பேரு?’ என்னும் பாட்டைப் படிக்கும்போது தோன்றும் புன்னகையும் மகிழ்ச்சியும் இறுதிப்பாடலைப் படித்து முடிக்கும் வரை குறையவே இல்லை.

 

குரங்கு போல தாவிக்குதித்து

குறும்பு செய்ய வருவான்

குழந்தைகளைக் கிள்ளிவிட்டு

குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பான்

 

யாரு அவன் பேரு?

நீ தெரிஞ்சா கூறு.

 

பென்சில் எடுத்து மறைக்கிறான்

பேனா முள்ளை உடைக்கிறான்

கிழிக்கும் நோட்டைப் பிடுங்கையிலே

கேவிக் கேவி அழுகிறான்

 

யாரு அவன் பேரு?

நீ தெரிஞ்சா கூறு.

 

ஒரு விடுகதையைப்போல நீளும் இப்பாடல் இத்தொகுதியின் சிறப்பான பகுதி. கடைசிவரையில் அவன் யார் என்பது தெரியாமலே இருப்பதுதான் இப்பாடலில் வெற்றி.

’எங்க பாப்பா’ என்னும் பாடலும் புன்னகைக்கவைக்கும் பாடல். நினைத்து நினைத்து மகிழ்ச்சிகொள்ள வைக்கும் பாடல். மெல்ல மெல்ல எழுந்து நின்று கால் நடுங்க தத்தித்தத்தி நடக்கும் குறும்புக்காரப் பாப்பாவை பாடல் வரிகளிலிருந்து உருவாக்கிக்கொள்ள முடிகிறது

 

பாப்பா எங்க பாப்பா

பல்லைக் காட்டும் பாப்பா

எழுந்து அடி வைக்கிறா

இப்போதுதான் நடக்கிறா

 

பென்சில் கூரை உடைக்கிறா

பேப்பர் நோட்டைக் கிழிக்கிறா

பையைப் பிடுங்கி மொறைக்கிறா

பந்து தந்தா சிரிக்கிறா

 

தம்பியைப்பற்றிய ஒரு பாடலும் இதே வகைமையில் அழகாக எழுதப்பட்டுள்ளது. சொந்த அனுபவத்திலிருந்து உருவாகியிருப்பதை ஒவ்வொரு சொல்லும் உணர்த்துகிறது.

 

எங்க தம்பி நல்ல தம்பி

எப்போதுமே தங்கக் கம்பி

 

பையைப் பைய வருவான்

பார்த்துப் பார்த்து சிரிப்பான்

பையை வந்து எடுப்பான்

பைக்குள்ளே கையை விட்டு

பலப்பம் தேடி கடிப்பான்

 

படிப்பது போல் புத்தகத்தில்

படம் புரட்டிப் பார்ப்பான்

பார்த்துக்கொண்டே இருக்கையிலே

பாதி பாதியாய் கிழிப்பான்

புத்தகத்தை வாங்கப் போனால்

புரண்டு புரண்டு அழுவான்

 

ஒரு காளைமாட்டின் கொம்பில் அமர்ந்து விளையாடும் சிட்டுக்குருவி பற்றிய பாடல் அழகான காட்சி விவரணையாக அமைந்துள்ளது.

 

செவலக்காளை கொம்புல

சிட்டுக்குருவி அமருது

விட்டு ஓடு என்று சொல்லி மாடு

விரசாய் தலையை ஆட்டுது

 

பறந்து பறந்து வந்தமர்ந்து

பரிகாசம் செய்யுது

கொம்பிருந்தும் பயனில்லைன்னு கோபத்தில்

குப்பை மேட்டைக் கிளருது

 

சின்னஞ்சிறு சிட்டுக்குருவி

சிறகடித்துப் பறக்குது

சினத்தை மறந்த செவலக்காளை

சிரித்து தலையை ஆட்டுது

 

கார்த்திகை தீபத்தன்று இரவு கவிந்ததும் கார்த்தி அல்லது மாவளி சுற்றுவது கிராமத்துப் பிள்ளைகளின் வழக்கம். மாவளி தயாரிப்பது என்பதை ஒவ்வொரு தெருவிலும் சிறுவர்கள் ஒரு வாரத்துக்கு முன்பே தொடங்கிவிடுவார்கள். ஏரிக்கரையிலும் குளக்கரையிலும் விழுந்து கிடக்கும் பனப்பூக்களைச் சேகரிப்பதுதான் முதல் வேலை. பிறகு அவற்றை ஒரு பள்ளத்தில் குவித்து எரிக்கவேண்டும். நன்றாக எரிந்து கனிந்த பிறகு அவற்றின் கரியை எடுத்து மாவாக அரைக்கவேண்டும். பிறகு ஒரு நீண்ட துணியில் அந்த மாவைப் பரப்பிவைத்து அழகாக மடிக்கவேண்டும். பூப்பந்துபோல மடிக்கப்பட்ட அந்தத் துணிமூட்டையை கவைகளுக்கிடையில் அடக்கிவைத்து, கவைகளின் மேல்முனையையும் கீழ்முனையையும் இறுக்கமாகக் கட்டிவிடவேண்டும். நீளமானதொரு கயிற்றை எடுத்து, அதன் ஒரு முனையை கவையோடு கட்டிவிடவேண்டும். தீபத்தன்று முன்னிரவில் அந்தத் துணிமூட்டையில்  தீமூட்டி கனிந்த பிறகு, கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக்கொண்டு தலைக்கு மேலே சுற்றவேண்டும். அப்போது வட்டவட்டமாக சிதறும் நெருப்புத்துளிகள் பூக்கள் சிதறுவதைப்போல இருக்கும். அந்த விளையாட்டை விளையாடும் விதம் பற்றிய ஒரு பாட்டும் இத்தொகுதியில் அடங்கியிருக்கிறது.

’காக்கா கடி’ என்றொரு பாட்டு ஒரு கதை சொல்லும் போக்கில் தன்னிச்சையாக வளர்ந்து செல்கிறது. படிக்கப் படிக்க இனிய அனுபவத்தைத் தரும் பாடல் அது.

 

காக்கா கடி கடிச்சிக்கோ

கையில் திருகல் போட்டுக்கோ

காயா பழமா கேட்டுக்கோ

கனக்கும் பையைத் தூக்கிக்கோ

 

எச்சிலை எல்லாம் மறைஞ்சிடும்

என் மாங்கா கூட இனிச்சிடும்

கணக்கு நோட்டு காட்டிடு

கை அடியிலிருந்து தப்புறேன்

 

சந்தைக்குப் போன எங்க அப்பா

ஜாங்கிரி வாங்கி வருவாரு

உனக்கு ஒன்னும் கொடுக்கறேன்

ஊட்டுப் பாடம் காட்டிடு

 

     ’மணி அடிக்கிறது யாரு?’ அருமையான ஒரு கதையைப்போல விரிவுகொள்ளும் பாடல். எங்கோ, யாரோ மணி அடிக்கும் சத்தம் கேட்கிறது. அடிப்பவர் யார் என்பது மட்டும் தெரியவில்லை. அதையொட்டி இரு சிறுவர்களுக்கு நடுவில் நிகழும் உரையாடல்தான் பாடல். மணி அடிப்பது யாரு என்று சந்தேகம் வருகிறது ஒரு சிறுவனுக்கு. உடனே அடுத்த சிறுவனுக்கு பால்காரர் முகம்தான் நினைவுக்கு வருகிறது. அதனால் பால்காரரா என்று கேட்கிறான். இல்லை என்று பதில் சொல்கிறான் முதல் சிறுவன். இப்படியாக சோன்பப்படிகாரர், ஐஸ்கிரீம்காரர் என்று நீண்டுகொண்டே சென்று இறுதியில் கிறிஸ்துமஸ் தாத்தா என்ற பதிலோடு பாடல் முடிவடைகிறது. இனிய உரையாடல் பாடல்.

இப்படி சொல்லி மகிழ 63 பாடல்கள் இத்தொகுதியில் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் சிறார்களுக்கு மட்டுமன்றி, இவற்றை வாசிக்கும் பெரியவர்களுக்கும் நல்விருந்தாக அமைந்திருக்கிறது.

தமிழினியன் தன் முன்னுரையில் ‘உங்களுக்கு ஊதத் தெரியும் என்பதற்காக ஒரு சிறிய பலூனில் எவ்வளவு காற்றை அடைப்பீர்கள்?’ என்றொரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். பாடல்களின் சுவையில் தோய்ந்து மகிழ்வதோடு, இக்கேள்வியை ஒட்டியும் வாசகர்கள் சிந்திப்பது அவசியம். இன்றைய நவீன பெற்றோர்கள் ஒவ்வொருவரும் அக்கேள்வியைத் தனக்குள் எழுப்பிக்கொண்டு விடையைத் தேடவேண்டும். அவர்கள் தேடிக் கண்டடையும் பதிலில்தான் குழந்தைகளின் மகிழ்ச்சியும் பெற்றோர்களின் மகிழ்ச்சியும் அடங்கியுள்ளன.

 

(அஞ்சாங்கல்லு. சிறார் பாடல்கள். செஞ்சி தமிழினியன். விதைநெல் பதிப்பகம், 1, பாரதிதாசன் தெரு, பெரிய அகரம், செஞ்சி -604202. விலை. ரூ.100)

(புக் டே – இணைய தளம் – 13.01.2025)