Home

Saturday, 8 February 2025

நோயற்ற வாழ்க்கைக்கு ஒரு கையேடு

 

இன்று நம் நாடெங்கும் குறிப்பிட்ட பரிசோதனைகள் வழியாக உடலைத் தாக்கியிருக்கும் நோய் எத்தகையது என்பதைக் கண்டறிந்து, அதைத் தீர்க்கும் மருந்துகளை வழங்கும் முறை ஓங்கி வளர்ந்து வருகிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்துவரும் இம்மருத்துவ முறைக்கு பொதுமக்களின் பேச்சுவழக்கில் ஆங்கில மருத்துவம் என்ற பெயர் உருவாகி, அதுவே நிலைத்துவிட்டது.

ஆங்கிலப்படிப்பின் வழியாக சில ஆண்டுகள் தொடர்ச்சியாக கல்லூரிகளில் படித்து பட்டமும்  பயிற்சியும் பெற்ற மருத்துவம்  என்பதுதான் அதன் பொருள். அதற்கு முன்பும் நம்மிடையே மருத்துவமுறை நிலவியிருந்தது. ஆங்கில மருத்துவர்களின் வரிசை உருவாவதற்கு முன்பாக நம் மண்ணில் வாழ்ந்த மருத்துவர்கள் ஓலைச்சுவடிகள் வழியாகவும் குருகுலம் வழியாகவும் மருத்துவம் அறிந்தவர்கள். அவர்கள் நோயாளிகளின் நேர்க்கூற்றைச் செவிகொடுத்துக் கேட்டாலும் கூட, நோயாளிகளுடைய நாடியைப் பிடித்துப் பார்த்து, அவர்களைத் தாக்கியிருக்கும் நோயின் தன்மையைக் கண்டறிந்து மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தும் ஆற்றல் நிறைந்தவர்களாக இருந்தனர். அவர்கள் சித்த மருத்துவர்கள் என்று அழைக்கப்பட்டனர். அந்த மருத்துவமுறை சித்த மருத்துவம் என்று அழைக்கப்பட்டது.

சாதாரணமாக நம் உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்திருக்கின்றன. அவற்றின் சமன்பாடு சமநிலையில் இருக்கும்வரை உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. ஏதேனும் ஒன்றில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும் ஆரோக்கியம் குறைந்துவிடுகிறது. அந்த ஏற்ற இறக்கத்தின் மாறுபாடுகளுக்கேற்ப நோயின் தன்மையும் மாறுதலடைகின்றது. அனுபவ அறிவாலும் பட்டறிவாலும் அந்த நோயைக் கண்டறிந்து அதைத் தீர்க்கும் மருந்துகளை மருத்துவர்கள் வழங்குகிறார்கள். இதுவே சித்த மருத்துவத்தின் வழிமுறை. விகித வேறுபாடுகளைத் துல்லியமாக அறிவதுதான் சித்தமருத்துவத்தின் அடிப்படை ஞானம்.

புதிதாக நமக்கு அறிமுகமான ஆங்கில மருத்துவமுறை வழியாக சில உடனடிப்பலன்கள் கிடைக்கின்றன என்கிற காரணத்தால் காலம்காலமாக இம்மண்ணில் நோய் தீர்த்துவந்த பழைமையான சித்த மருத்துவமுறையை நாம் புறக்கணிக்கத் தேவையில்லை. அந்த முறையும் நம்மிடையே நீடித்திருக்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக நம்மைக் காத்து வந்த ஒரு மருத்துவமுறையை, ஒரே நாளில் ஒதுக்கிவிட்டுச் செல்வது நல்ல அணுகுமுறை கிடையாது. அதன் முக்கியத்துவம் கருதி, குருகுலங்கள் வழியாக மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்த சித்த மருத்துவமுறை, இன்று கல்லூரியில்  கற்பிக்கப்படும் பாடமாக விளங்குகிறது.

வேலூரை அடுத்திருக்கும் சத்துவாச்சாரியில் புற்று மகரிஷி என்ற சித்தர் பரம்பரையில் வந்த குருகுலத்தில் ஆரம்ப அனுபவக்கல்வியை அடைந்த பாஸ்கரன் என்னும் பெயருடைய இந்நூலாசிரியர் கல்லூரியில் சித்த மருத்துவத்தையே பாடமாகப் படித்துத் தேறி பட்டம் பெற்றவர். வேலூர் மாவட்டத்தில் மட்டுமன்றி, சென்னை உட்பட அக்கம்பக்கத்து மாவட்டங்களிலும் மருத்துவச்சேவை ஆற்றிவருகிறார்.

கொரானா தொற்று காலத்தில் அவர் உருவாக்கி அளித்த மூலிகைக்கவசம் ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு உதவியாக அமைந்திருக்கிறது. பல ஊர்களில் அவர் நடத்திய இலவச மருத்துவமுகாம்கள் வழியாக பலர் பயனடைந்திருக்கிறார்கள். அவர் ஆற்றிய சேவைக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரும் அவரைக் கெளரவித்திருக்கிறார்.

மருத்துவம் சார்ந்த நல்ல ஆழமான ஞானமும் பட்டறிவும் கொண்ட பாஸ்கரன் நோயின்றி வாழும் வழிமுறைகளையும் நோய்களைப் புரிந்துகொண்டு அவற்றின் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் வழிமுறைகளையும் நோய் வருமுன் காத்துக்கொள்ளும் விதமாக வீட்டில் கடைபிடிக்க வேண்டிய உணவு, உறக்கம், உடற்பயிற்சி சார்ந்த சில முக்கியமான பழக்கவழக்கங்களையும் முன்வைத்து அவ்வப்போது நாளேடுகளிலும் வார இதழ்களிலும் அவர் தொடர்ச்சியாக எழுதிய இருபது கட்டுரைகளைத் தொகுத்து இப்போது சித்தாவரம் என்னும் தலைப்பில் நூலாக்கியிருக்கிறார். வாசகர்களுக்கு இந்நூல் அரியதொரு வழிகாட்டி என்றே சொல்லவேண்டும். ஒரு புனைவுநூலைப் படிக்கும் சுவாரசியத்தோடு அவர் எழுதியிருக்கும் ஒவ்வொரு கட்டுரையையும் நம்மால் படிக்கமுடிகிறது. தேநீர் பதிப்பகமும் அந்நூலை அழகாகவும் தரமாகவும் வெளியிட்டிருக்கிறது.

நோயற்ற வாழ்வுக்கு அடிப்படைத்தேவை நம் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்கவேண்டும் என்பதுதான். சீரான ரத்த ஓட்டத்துக்கு முக்கியமான தேவை இடைவிடாத நடைப்பயிற்சி. தன் முதல் கட்டுரையை பாஸ்கரன் இந்தக் கருத்தோடுதான் தொடங்கியிருக்கிறார். பழக்கவழக்கத்தை சீராக வைத்துக்கொண்டாலேயே நாம் பெரும்பாலான நோய்களிடமிருந்து விலகி வாழமுடியும். நடக்க வாய்ப்பிருக்கும் சமயங்களில் அருகம்புல் விளைந்திருக்கும் புல்வெளியைப் பார்க்க நேர்ந்தால் அதன் மீது நடக்கும்படி பகிர்ந்துரைக்கிறார் பாஸ்கரன். அருகம்புல்லின் மருத்துவகுணங்களை ஆங்காங்கே விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

நல்ல ஆரோக்கியத்துக்கு நடைப்பயிற்சி அடிப்படையாக விளங்குவதுபோலவே நல்ல ஆழ்ந்த உறக்கமும் இன்னொரு அடிப்படை என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாஸ்கரன். உறக்கம் மட்டுமே உடலுக்கும் உள்ளத்துக்கும்  நல்ல ஓய்வைக் கொடுக்கும். தூக்கம் தொடர்பாக மனிதர்களிடம் காணப்படும் அலட்சியப்போக்கின் விளைவாகவே தூக்கமின்மை என்னும் ஆபத்தாக உருவெடுத்து நிற்கிறது. சூரியன் மறைந்து இருள் சூழத் தொடங்கியதுமே, அச்செய்தியை சூப்ராக்யாஸ்மேட்டிக் நியூக்லியஸ் என்னும் அமைப்பு மூளைக்கு அனுப்பிவைக்கிறது. அடுத்து சில மணி நேரங்களில் உறக்கத்தை வரவழைக்கக்கூடிய மெலடோன் என்னும் ஹார்மோனைச் சுரக்கவைக்கிறது. உண்டு களைத்து உறங்கி ஓய்வெடுக்கத் தொடங்கியதும், மெலடோன் இன்னும் விசையோடும் உற்சாகத்தோடும் சுரக்கிறது. உறக்கம், செரிமானம் அனைத்தையும் அந்த மெலடோன் பொறுப்போடு நிகழ்த்தி வைக்கிறது.

இன்றைய நவீன தொழில்நுட்பம் மனிதகுலத்துக்கு எண்ணற்ற நன்மைகளைச் செய்தபோதும் இரவைப் பகலாக்கி, பகலை இரவென்றாக்கி அதே அளவுக்கு சீரழிவுகளுக்கும் காரணமாகிவிட்டது. உறங்காத நிலையில் உடல் ஓய்வுகொள்ள வழியில்லாமல் போய்விடுகிறது. ஓய்வே எடுக்காத நிலையில் மெலடோனும் சுரக்க வழியில்லாமல் போய்விடுகிறது. ஓய்வுக்குறைபாடும் உறக்கக்குறைபாடும் சேர்ந்து எல்லா நோய்களையும் வருக வருக என வரவேற்று உபசரிக்கத் தொடங்கிவிடுகிறது. நம் தூக்கத்தின் அளவை நாமாகவே ஒருபோதும் குறைக்கவோ, அதிகரிக்கவோ கூடாது. தூங்கச் செல்லும் நேரத்தையும் ஒருபோதும் நாமாகவே மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடாது.

தூக்கத்தைப்போலவே இன்னொரு முக்கியத்தேவை சீரான சத்துணவு. நம் உணவில் சத்துப்பொருட்கள் குறைந்ததெனில் சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் ஆகிய ஏழும் குறைந்துவிடும். அவை பாதிக்கப்படுமெனில் உடலில் சீராக இருக்கவேண்டிய வாத, பித்த, கப விகிதாச்சாரங்களும் உடனடியாகப் பாதிக்கப்படும். வாதம் அதிகரித்தால் மூட்டுவலி அதிகரிக்கும். பித்தம் அதிகரித்தால் ஒவ்வாமை ஏற்படும்.  கபம் கெட்டால் மூக்கடைப்பு, அளி, இருமல் போன்றவை ஏற்படும். இப்படி ஒவ்வொரு பாதிப்புக்கும் ஒவ்வொரு எதிர்விளைவு ஏற்படும்.

எல்லோரும் எல்லா உணவு வகைகளையும் சாப்பிடவேண்டிய தேவையில்லை. உண்ணும் உணவில் நம் உடலுக்கேற்றது எது என்பதை அறிந்து உண்ணுவது முக்கியம். இதயநோய் உள்ளவர் உண்ணும் உணவையோ, சர்க்கரைக்குறைபாடு உள்ளவர்கள் உண்ணும் உணவையோ பிறரும் பின்பற்றி உண்ணவேண்டிய அவசியமில்லை. உண்ணும் உணவைப்போலவே உண்ணும் அளவும் முக்கியம். ஒருபோதும் வயிறு கொள்ளுமளவுக்குச் சாப்பிடவே கூடாது.

இப்படி நம் அடிப்படைப் பழக்கவழக்கங்களுக்கும் நோய்களுக்கும் உள்ள தொடர்புபற்றி பல முக்கியமான தகவல்களை ஒரு நண்பரைப்போல நூல்முழுதும் எடுத்துரைத்தபடி இருக்கிறார் பாஸ்கரன். ஒவ்வொரு கருத்தும் ஒரு முத்து போன்றது. நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது.

உணவு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு உண்ட பிறகு நாம் அருந்தும் தண்ணீரும் மிகமுக்கியம். தண்ணீரில் சீரகத்தின் பயன்பாடு பற்றியும் நீண்டதொரு கட்டுரையை எழுதியிருக்கிறார் பாஸ்கரன். குளிர்ந்த நீரை அருந்துவதற்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, காய்ச்சிய நீரைப் பயன்படுத்துவது நல்லது. சீரகத்தோடு காய்ச்சினால் இன்னும் நல்லது என்று கூறும் பாஸ்கரன் சீரகத்தோடு தண்ணீரை எப்படிக் காய்ச்சுவது என்னும் தகவலையும் சொல்கிறார்.

வெற்று வாணலியை அடுப்பிலேற்றி அது நன்றாகச் சூடேறிய பிறகு, மெதுவாக கீழே இறக்கிவைத்து, அதில் ஒரு கரண்டி சீரகத்தைப் போட்டு இளம்வறுவலாக வறுத்துக்கொள்ள வேண்டும். சீரகம் ஒருபோதும் கருகக்கூடாது. அந்தப் பாத்திரத்தில் அதன் கொள்ளளவுக்கு தண்ணீரை நிரப்பி அது பாதியாகச் சுண்டும்வரைக்கும் காய்ச்சி ஆறவிட வேண்டும். தங்கநிறத்தில் மாறும் அத்தண்ணீரையே வடிகட்டிக் குடிக்கவேண்டும். சீரகத்தண்ணீர் போலவே சீரகரசம், சீரகக்குழம்பு போன்றவற்றை வைக்கும் முறையையும் அவர் விரிவாகச் சொல்லியிருக்கிறார். இறுதியாக, சீரகத்தின் பயன்பாட்டினால் கிட்டும் மருத்துவப்பயன்களையும் ஒவ்வொன்றாக விவரித்திருக்கிறார்.

ஒரு நோய் எப்படி, எதனால் உருவாகிறது, அதை எப்படித் தவிர்க்கமுடியும் என்னும் வழிமுறைகளை குறைந்த படிப்பறிவு உள்ளவர்களும் எளிதாகப் படித்துத் தெரிந்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு கட்டுரையையும் பாஸ்கரன் எழுதியிருக்கிறார். நோயற்ற வாழ்க்கையை வாழ நினைக்கிற ஒவ்வொருவரும் இப்புத்தகத்தை ஆர்வத்துடன் படிக்கமுடியும்.

ஆங்கில மருத்துவமுறை , பரம்பரை மருத்துவமுறை ஆகிய இரண்டும் தனித்தனி வழிமுறைகளைக் கொண்டவை என்றபோதும் இரண்டும் மனிதர்களை நோயிலிருந்து மீட்க உதவுவதையே இலக்காகக் கொண்டவை. ஒரு வழிமுறையின் போதாமையை இன்னொரு வழிமுறை நிரப்பிவைக்கிறது. ஒன்றுக்கெதிராக இன்னொன்றை நிறுத்தி விவாதித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை. அது வீண்கசப்பையே வளர்க்கும்.

தாராசங்கர் பானர்ஜி என்னும் வங்க எழுத்தாளர் கடந்த நூற்றாண்டில் ஆரோக்கிய நிகேதனம் என்னும் தலைப்பில் மிகமுக்கியமானதொரு நாவலை எழுதியிருக்கிறார். ஒரு பரம்பரை வைத்தியரின் வாழ்க்கையை ஒரு பக்கமாகவும் புதிதாகக் குடியேறும் ஆங்கில வைத்தியரின் வாழ்க்கையை இன்னொரு பக்கமாகவும் நிறுத்தி ஏராளமான சம்பவங்களோடு அந்நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கும்.

கிராமத்தில் ஆங்கில வைத்தியம் பிரபலமடையத் தொடங்கியதும் பரம்பரை வைத்தியமுறையின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கும் நேரத்தில் நாவல் தொடங்குகிறது. கிராமத்துமக்களுக்கும் ஆங்கில மருத்துவ முறையின் மீது ஒருவித நம்பிக்கையும் நாட்டமும் பெருகத் தொடங்கிவிடுகிறது. அந்த ஆங்கில மருத்துவருக்கே தன் மருத்துவமுறை மேலானது என்னும் நம்பிக்கை ஏற்பட்டுவிடுகிறது.

அத்தருணத்தில் ஆங்கில மருத்துவரின் மனைவி மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீளமுடியாமல் துன்பத்தில் ஆழ்ந்துவிடுகிறாள்.  ஆன்ட்டிபயாடிக் என்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நேரம் அது. அப்போது பரம்பரை வைத்தியர் மருந்துகொடுத்து அந்நோயிலிருந்து அவரை மீட்டெடுப்பார். தன் மருத்துவமுறையில் இல்லாத ஒன்று பரம்பரை மருத்துவமுறையில் இருப்பதை அக்கணத்தில் அந்த ஆங்கில மருத்துவர் உணர்ந்துகொள்கிறார். இந்த உலகில் உருவாகி வளர்ந்து நிலைத்திருக்கும் எதுவும் எதற்கும் எதிரானதல்ல, எல்லாமே ஒன்று விட்டுச்சென்ற இடத்தை அல்லது தொடமுடியாத இடத்தை இன்னொன்று தன் பணிகளால் நிரப்பும் தன்மையைக் கொண்டது என்னும் தெளிவு அவருக்குப் பிறக்கிறது.

சித்தாவரம் கட்டுரைகளை எழுதியிருக்கும் பாஸ்கரன் அத்தகு தெளிவோடு இருக்கிறார் என்பதற்கு அவருடைய கட்டுரைகளில் பல்வேறு இடங்களில் இடம்பெற்றிருக்கும் வரிகளே சான்று. எந்த இடத்திலும் அவர் ஆங்கில மருத்துவமுறையைக் குறையோடு சுட்டிக்காட்டவில்லை. தேவைப்படும் தருணங்களில் ஆங்கில மருத்துவமுறையின் உதவியை நாடிச் செல்லலாம் என்பதே அவருடைய எண்ணமாகவும் இருக்கிறது. இந்த நேர்நிலை அணுகுமுறை மிகமுக்கியமானது.  மிக இளைய வயதில் இத்தகு தெளிவோடும் அர்ப்பணிப்புணர்வோடும் மருத்துவப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் அவர் இன்னும் பல உயரங்களை அடைவார்.

 

(சித்தாவரம். டி.பாஸ்கரன். தேநீர் பதிப்பகம், 24/1, மசூதி பின் தெரு, சந்தைக்கோடியூர், ஜோலார்ப்பேட்டை -635851. விலை. ரூ.150)

 

(புக் டே – இணைய தளம் – .28.01.2025)