Home

Sunday, 23 February 2025

நெஞ்சைக் கவர்ந்த கதைப்பாடல்கள்

  

கதைப்பாடல் என்றதும் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை எழுதிய ’பாட்டியின் வீட்டுப் பழம்பானை அந்தப் பானையின் ஒருபுறம் ஓட்டையடா’ என்னும் பாடல்தான் உடனடியாக நினைவுக்கு வருகிறது. ஆரம்ப வகுப்புகளில் நெற்பானையும் எலியும் என்ற தலைப்பில் படித்த பாடல் அது. அதேபோல ஊகமுள்ள காகம் என்னும் பாடலையும் மறக்கமுடியாது.

அவரைத் தொடர்ந்து எழுதிய சில கவிஞர்கள் நல்ல நல்ல நாடோடிக் கதைகளைப் பாடல்களாக விரித்தெழுதினர். சிலர் சிறார்கள் நெஞ்சில் நல்ல கருத்துகளை விதைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதப்பட்ட கதைகளைப் பாடல்களாகப் புனைந்தனர். இன்னும் சிலர்  இனிய வாழ்க்கைத்தருணங்களை மையமாகக் கொண்ட கதைகளைப் பாடல்களாக எழுதினர். புத்தரும் ஏழைச்சிறுவனும் என்னும் கதைப்பாடல் பிறப்பினால்  உயர்வு தாழ்வு இல்லை என்னும் புத்தரின் போதனையை உள்ளடக்கமாகக் கொண்டது. ஒளவையும் இடைச்சிறுவனும் என்னும் கதைப்பாடல் ஒளவைப்பாட்டியின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சுவையான நிகழ்ச்சியை விவரிக்கும் விதமாக அமைந்த ஒன்றாகும்.

ஒவ்வொரு தலைமுறையிலும் இத்தகு கதைப்பாடல்களை சில கவிஞர்கள் தோன்றி எழுதியிருக்கிறார்கள். இவ்வரிசையில் இப்போது புதிதாக இணைந்திருப்பவர் உமையவன். இதுவரை சிறார்களுக்கான கதைகளையும் வெவ்வேறு துறை சார்ந்து சிறார் நூல்களையும் எழுதி வந்த உமையவன் முதன்முதலாக கதைப்பாடல் வடிவத்தில் எழுதிய பாடல்களை இப்போது ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார்.  இத்தொகுதியில் 32 பாடல்கள் அமைந்துள்ளன.

வானுக்கு வந்த மழைத்துளி என்னும் முதல் பாடலே உமையவனுடைய கற்பனைக்கும் கதைகூறும் திறமைக்கும் நல்லதொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஒருநாள் வானத்திலிருந்து ஒரு மழைத்துளி பூமியை நோக்கி வருகிறது. முதலில் ஒரு மரத்தின் இலைமீது அத்துளி விழுகிறது. அப்போது காற்று வீசுகிறது. அதனால் இலையிலிருந்து நழுவி மரத்தடியில் ஓடிக்கொண்டிருந்த ஒரு வாய்க்காலில் விழுகிறது. வாய்க்கால்  தன்னை ஏந்திக்கொண்டு எங்கே போகிறது என்று தெரியாமல்  மழைத்துளி குழம்புகிறது. வழியில் தென்பட்ட தவளையிடம் கேட்கிறது. எங்கோ ஓரிடத்தில் இருக்கும் குட்டையை நோக்கிச் செல்வதாக பதில் சொல்கிறது தவளை. பயணம் செய்வது வரை மகிழ்ச்சியாக இருந்த மழைத்துளி குட்டையை வந்தடைந்து தேங்கியதும் துயரத்தில் மூழ்கிவிடுகிறது.

மீண்டும் வானத்தை அடைய ஆசை கொள்கிறது மழைத்துளி. அதற்கு வழியில்லை என்று தெரிந்ததும் வருத்தத்தில் மூழ்கிவிடுகிறது. என்றாவது ஒரு நாள் தனக்கு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறது. சிறிது காலத்துக்குப் பிறகு கோடைக்காலம் வருகிறது. கோடை வெப்பத்தின் காரணமாக, குட்டையின் நீர் கொஞ்சம் கொஞ்சமாக ஆவியாகத் தொடங்குகிறது.  அப்போது மழைத்துளியும் ஆவியாகிறது. வானத்தை நோக்கிச் சென்ற நீராவி மேகத்தோடு இரண்டறக் கலந்துகொள்கிறது. புறப்பட்டுச் சென்ற வானத்துக்குத் திரும்பி வந்ததை நினைத்து மழைத்துளி மிகுந்த மகிழ்ச்சியடைகிறது. அந்தக் கதையை தாளக்கட்டோடு கூடிய பாடலாக எழுதியிருக்கிறார் உமையவன்.

விதையிலிருந்து மரம் உருவாகும் வாழ்க்கைவரலாற்றை கேள்வி பதில் வடிவத்தில் ஒரு கதையைச் சொல்வதுபோல சொல்லியிருக்கும் பாடல் இத்தொகுதியின் முக்கியமான பாடல்களில் ஒன்றாகும்.

 

விதையே விதையே எங்கிருந்தாய்?

பழத்திற்குள்தானே நான் இருந்தேன்.

 

பழமே பழமே எங்கிருந்தாய்?

காய்க்குள்தானே நான் இருந்தேன்.

 

காயே காயே எங்கிருந்தாய்?

பிஞ்சில்தானே நான் இருந்தேன்

 

பிஞ்சே பிஞ்சே எங்கிருந்தாய்?

பூவில்தானே நான் இருந்தேன்

 

பூவே பூவே எங்கிருந்தாய்?

மரத்தில்தானே நான் இருந்தேன்

 

மரமே மரமே எங்கிருந்தாய்?

விதைக்குள்தானே நான் இருந்தேன்

 

விதையிலிருந்து தொடங்கி விதையிலேயே முடிவடைகிறது பாடல். விதையின் பயணத்தை ஒரு கோணத்தில் வாழ்க்கைப்பயணமாக மாற்றிப் புரிந்துகொள்ளும்போது, இப்பாடலை இன்னும் நெருக்கமாக உணரலாம்.

தொட்டிலில் தூங்கிய யானைக்குட்டி நல்ல கற்பனை நிறைந்த பாடல். ஒரு காட்டில் ஒரு யானைக்குட்டிக்கு தொட்டிலில் தூங்கவேண்டும் என்ற ஆசை வருகிறது. உடனே தன் ஆசையை அம்மா யானையிடம் தெரிவிக்கிறது. குட்டி யானையின் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பிய அம்மா யானை காட்டிலிருக்கும் பிற யானைகளிடம் உதவி கேட்கிறது. எல்லா யானைகளும் சேர்ந்து திட்டம் போட்டு குட்டி யானைக்கு ஒரு தொட்டிலைக் கட்டித் தருகின்றன. அடுத்த நாளிலிருந்து அந்தக் குட்டி யானை அந்தக் கட்டிலில் ஆனந்தமாகத் தூங்கி பொழுதைக் கழிக்கிறது.

கோழியும் வாத்தும் பாடலும் நல்ல கதையம்சம் உள்ள பாடலாகும். கோழியும் வாத்தும் நல்ல நண்பர்கள். ஒருநாள் கோழிக்கு மீனைத் தின்னும் ஆசை வருகிறது. வாத்து குளத்திலிருந்து மீனைக் கொண்டு வந்து கொடுத்து அந்த ஆசையைத் தீர்த்துவைக்கிறது. வாத்துக்கு அரிசியைத் தின்னும் ஆசை வருகிறது. கோழி எங்கிருந்தோ அரிசி கொண்டுவந்து கொடுத்து அந்த ஆசையைத் தீர்த்துவைக்கிறது. நட்புடன் இருந்த கோழிக்கும் வாத்துக்கும் இடையில் ஒருநாள் இருவரில் யார் பெரியவர் என்னும் போட்டி வருகிறது. கோழி தானே பெரியவன் என்று கொக்கரிக்கிறது. வாத்தும் தானே பெரியவன் என்று முழங்குகிறது. கடைசியில் அதைத் தீர்மானித்துச் சொல்வதற்காக அந்தப் பஞ்சாயத்து அந்த வட்டாரத்தில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு நாயிடம் செல்கிறது. நாய் நன்றாக யோசித்துவிட்டு எதையும் தின்று சுவை பார்த்துவிட்ட பிறகே தன்னால் தீர்மானமான ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று தெரிவிக்கிறது. நாயின் தந்திரமான திட்டத்தைப் புரிந்துகொண்ட கோழியும் வாத்தும் அந்த இடத்திலிருந்து தப்பித்து ஓடிவிடுகின்றன. 

எருமையின் மகிழ்ச்சி மற்றுமொரு சிறந்த கதைப்பாடல். ஓர் எருமை தனக்கு கரிய நிறம் வாய்த்ததை நினைத்து மிகுந்த வருத்தத்தில் மூழ்கியிருக்கிறது. கருமையாகப் பிறந்ததை நினைத்து சிறுமையாக உணர்கிறது.  தன் நிறத்தை மாற்றிக்கொள்ள ஏதேனும் செய்யவேண்டும் என்று திட்டமிடுகிறது. அதனால் செம்மண் சேற்றில் ஆடி உடலெங்கும் செந்நிறம் படரும் வகையில் புரண்டுபுரண்டு எழுகிறது. தன் நிறம் மாறிவிட்டதாக நினைத்து மகிழ்கிறது. ஒருநாள் திடீரென மழை பொழிகிறது. எருமையின் உடலில் ஒட்டியிருந்த செவ்வண்ணப் புழுதி எல்லாம் கரைந்துவிடுகிறது. மீண்டும் அதன் கரிய நிறம் பளிச்சென தெரிகிறது. எருமை மீண்டும் கவலையில் மூழ்கிவிடுகிறது.

அப்போது ஒரு காகம் பறந்து வந்து எருமையின் முதுகில் அமர்கிறது. காகத்தின் கரிய நிறத்தைப் பார்த்த எருமை உன் நிறத்தை ஒட்டி உனக்கு எந்தக் கவலையும் இல்லையா என்று கேட்கிறது. காகமோ ’கருமையே என் அடையாளம் கவலை எனக்கில்லை’ என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியோடு தாவிப் பறக்கிறது. காகத்தின் பதிலைக் கேட்டு முதலில் திகைத்து நின்ற எருமை மெல்ல மெல்ல உண்மையைப் புரிந்துகொள்கிறது. தன் கருமையே தன் அடையாளம் என்னும் தெளிவை அடைந்து, கவலைகளையெல்லாம் உதறிவிட்டு மகிழ்ச்சியாக இருக்கத் தொடங்கியது.

இரண்டு சக்கர வண்டி என்னும் பாடல் விடுகதையின் அமைப்பில் அமைந்திருக்கிறது. எல்லோரிடமும் இருக்கும் இரண்டு சக்கர வண்டி எது என்பதுதான் கேள்வி. ஒருவன் சைக்கிள் என்கிறான். இன்னொருவன் மோட்டார் சைக்கிள் என்கிறான். அவை எதுவுமே இல்லை, நம்மிடம் இருக்கும் கால்களே உன்னதமான இரண்டு சக்கரவண்டி என்று பாடல் முடிவடைகிறது.

கதையம்சம் கொண்ட பாடல்கள் மிக எளிதாக சிறார்களைச் சென்று சேர்ந்துவிடுகின்றன. அதன் எளிமை ஒரு முக்கியக் காரணம். மேலும் ஒரு பாட்டில் இயல்பாகவும் கச்சிதமாகவும் அமைகிற தாளக்கட்டும் சந்தமும் மிகமிக முக்கியமான காரணமாகும். அத்தகு பாடல்கள் படிக்கும் மாணவர்களின் நெஞ்சில் வெகுவிரைவில் இடம் பிடித்துவிடுகின்றன. நெஞ்சில் இடம் பிடிக்கத்தக்க பாடல்களை இத்தொகுதியில் உமையவன் எழுதியிருக்கிறார்

 

 

(மாயம் செய்த விதைக்குருவி – உமையவன். ஊருணி வாசகர் வட்டம், 2, இளாட் எண் எஃப்3, முதல் தளம், தத்தாத்ரேயா பிளாட், விருகம்பாக்கம், சென்னை – 600092. விலை. ரூ.90)

 

(புக் டே – இணையதளம் – 24.01.2025)