நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் வளவனூர் அரசு நூலகத்தில் ஒருமுறை புத்தகத்தாங்கிகளில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்த சமயத்தில் தண்ணீரும் கண்ணீரும் என்னும் புத்தகத்தைப் பார்த்தேன். அதன் அட்டையில் தண்ணீருக்கு அடையாளமாக ஒரு கிணறும் கண்ணீருக்கு அடையாளமாக அழுதுகொண்டிருக்கும் ஒரு பெண்ணும் கொண்ட சித்திரம் வரையப்பட்டிருந்தது. எதுகைமோனையோடு அமைந்திருந்த புத்தகத்தலைப்பும் வசீகரமான அட்டைப்பட சித்திரமும் அப்புத்தகத்தைப் படிக்கத் தூண்டின. உடனே அப்புத்தகத்தை எடுத்துச் சென்று இரண்டு நாட்களிலேயே படித்தேன்.
அந்தச் சிறுகதைத்தொகுதியை எழுதியவர்
பெயர் டொமினிக் ஜீவா. அந்தப் பெயரை அப்போதுதான் முதலில் பார்த்தேன். அவர் கதைகளும்
அந்தப் பெயரும் அக்கணமே என் நெஞ்சில் பதிந்துவிட்டன. மேலும் சில ஆண்டுகள் கழித்து,
நானும் ஓர் எழுத்தாளனாகி பத்திரிகைகளில் என் சிறுகதைகளும் வெளிவரத் தொடங்கிய சமயத்தில்
அவருடைய பாதுகை என்னும் சிறுகதைத்தொகுதியையும் மல்லிகை பத்திரிகைப்பிரதிகளையும் படித்தேன்.
அந்த வாசிப்பின் வழியாக அவர் பெயர் என் மனத்தில் நிலைத்துவிட்டது.
பிறகுதான்
அவரைப்பற்றிய விவரங்களை கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொண்டேன். யாழ்ப்பாணத்தில் மிக
எளிய குடும்பத்தில் பிறந்தவர் அவர். ஐந்தாம் வகுப்பு வரையில் மட்டுமே படித்திருந்தாலும்
சொந்த முயற்சியால் தேடித்தேடிப் படித்து தன் ஞானத்தை வளர்த்துக்கொண்டார். கடந்த நூற்றாண்டின் நாற்பதுகளின் இறுதியில் இலங்கைக்குச்
சென்ற தமிழ்நாட்டு ஜீவாவின் கொள்கைகளாலும் பேச்சாலும் ஈர்க்கப்பட்டு பொதுவுடைமைக் கட்சியின்பால்
ஈர்க்கப்பட்டார். டொமினிக் என்னும் தன் பெயரை டொமினிக் ஜீவா என மாற்றியமைத்துக்கொண்டு
எழுத்துமுயற்சியில் இறங்கினார்.
எழுத்தார்வம்
கொண்ட இளைஞர்கள் எழுதுவதற்கு ஏதுவாக மல்லிகை என்னும் பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்கி
நடத்தினார். பிற்பாடு, அவர் நடத்திய இதழின் பெயரே அவருடைய அடையாளமாக பெயருக்கு முன்னொட்டாக
அமைந்துவிட்டது. மல்லிகை ஜீவா என்பது இலக்கிய உலகம் அறிந்த பெயராகிவிட்டது. மல்லிகையில்
எழுதத் தொடங்கி, இலங்கைத்தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்கஆளுமைகளாக உயர்ந்தவர்கள்
பலர். இலங்கையில் நடைபெற்ற போரின் விளைவாக பலரும் சொந்த ஊர்களைவிட்டு வெளியேறி வெவ்வேறு
நாடுகளில் தஞ்சமடைந்த தருணத்தில் பிறந்த ஊரைவிட்டு வெளியேற மனமின்றி, யாழ்ப்பாணத்திலேயே
93 ஆண்டு காலம் வரைக்கும் உயிர்வாழ்ந்து 2021இல் மறைந்தார்.
டொமினிக்
ஜீவாவோடு இளமைக்காலம் முதலாக நீண்ட காலம் பழகிய எழுத்தாளர்களில் ஒருவர் முருகபூபதி.
தற்சமயம் அவர் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். ஜீவாவின் மறைவுக்குப் பிறகு அவரோடு பழகிய
அனுபவங்களின் நினைவுகளைத் தொகுத்தெழுதி ‘வாழும்
வரலாறு மல்லிகை ஜீவா’ என்னும் தலைப்பில்
2022இல் புத்தகமாக வெளியிட்டார். ஒரே அமர்வில் படிக்கத்தக்க அளவில் பல சுவாரசியமான
தகவல்களோடு அப்புத்தகம் அமைந்திருக்கிறது. ஜீவா
ஜீவாவும்
சைக்கிளும் என்னும் தலைப்பில் அமைந்த முதல் கட்டுரை புன்முறுவல் பூக்கவைக்கும் வரிகளோடு
தொடங்கி நெஞ்சைக் கனக்கவைக்கும் வரிகளோடு முடிவடைகிறது. வாழ்நாள் முழுவதும் ஜீவா சைக்கிளிலேயே
ஊரைச் சுற்றிவந்தவர். அவரைப் பார்த்தவர்கள் அனைவருமே சைக்கிள் ஜீவா என்று குறிப்பிடும்
அளவுக்கு சைக்கிள் பயணத்தின் மீது ஆர்வம் கொண்டவராக அவர் இருந்தார். அவருடைய தந்தையார்
நடத்திவந்த முடி திருத்தகத்தின் பின்பக்கத்திலேயே ஓர் அறையை ஒதுக்கி மல்லிகை இதழுக்காக
வந்த படைப்புகளை அச்சுக்கோர்க்கும் வேலையைக் கவனித்துவந்தார். அச்சு கோர்த்த பலகைகளை
தன் சைக்கிள் கேரியரில் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிவைத்துக்கொண்டு காங்கேசன் துறை வீதியிலிருந்த
ஸ்ரீலங்கா அச்சகத்துக்கு எடுத்துச் சென்று கொடுப்பது அவர் வழக்கம். அந்த அச்சகத்தில்தான்
மல்லிகை இதழ் அச்சாகிவந்தது.
ஒருநாள்
வழக்கம்போல பலகைகளோடு சைக்கிளில் சென்றபோது அந்தப் பக்கமாக வேகமாக நடந்துவந்த ஒருவர்
மோதிவிட்டார். அந்த வேகத்தில் கேரியரில் இருந்த பலகைகள் எல்லாம் சரிந்து விழுந்துவிட்டன.
அச்சுக் கோர்க்கப்பட்ட ஈய எழுத்துகள் எல்லாம் சிதறி உருண்டோடிவிட்டன. எல்லாமே ஒரு கணத்தில்
நடந்துமுடிந்துவிட்டது. பதற்றம் கொள்ளாத ஜீவா தரையில் விழுந்து சிதறியிருந்த எல்லா
ஈய எழுத்துகளையும் சேகரித்து அறைக்குத் திரும்பி புதிதாக அச்சு கோர்க்கும் வேலையைத்
தொடங்கினார். அவரிடம் அச்சு கோர்ப்பாளராக சந்திரசேகரம் என்னும் பணியாளர் இருந்தார்.
தன் சொந்த ஊரான நீர்வேலி மதுவனிலிருந்து அவரும் சைக்கிளிலேயே தினமும் வந்து செல்வார்.
அவருக்குத் தரவேண்டிய தினக்கூலியைத் திரட்டுவதற்கு ஒவ்வொருநாளும் படாத பாடு படுவார்
ஜீவா.
இந்த
தினசரிப்பாடுகளுக்கு நடுவே யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்னும்
கோரிக்கையோடு குரல் கொடுத்தவர்களில் ஒருவராக இருந்தார் ஜீவா. அதற்காக தன் மல்லிகை பத்திரிகையில்
பல தலையங்கக்கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதிவந்தார். 1974இல் அவருடைய கனவு நிறைவேறியது.
அப்போது பல்கலைக்கழகத்தில் பணி புரிவதற்காக பல பேராசிரியர்களும் சிந்தனையாளர்களும்
வந்தனர். ஒவ்வொரு மாதமும் மல்லிகை இதழ் தயாரானதும், ஜீவா அவ்விதழ்களை சைக்கிளில் எடுத்துச்
சென்று எல்லா ஆசிரியர்களுக்கும் கொடுத்துவிட்டு வருவார். அதை ஒரு வழக்கமாகவே அவர் கைக்கொண்டிருந்தார்.
எதிர்பாராத விதமாக, ஒருமுறை அவருடைய சைக்கிள் அந்த வளாகத்தில் திருடு போய்விட்டது.
எந்தப் பல்கலைக்கழகம் அமையவேண்டும் என பேசியும் எழுதியும் வந்தாரோ, அதே பல்கலைக்கழகத்திலேயே
அவர் தன் சைக்கிளைப் பறிகொடுத்துவிட்டார்.
வீடுவாசல்
இன்றி, தெருவோரங்களிலும் மரநிழல்களிலும் பிச்சைக்காரர்கள் படுத்துறங்கும் காட்சிகளை
அடிக்கடி பார்த்த ஜீவா, அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணரவேண்டும்
என்பதற்காக, பிச்சை எடுத்துப் பார்க்கவேண்டும் என்றொரு விசித்திர எண்ணம் எழுந்ததாக
முருகபூபதி குறிப்பிட்டிருக்கிறார்.
ஜீவாவின்
வசிப்பிடத்தில் அவர் அனைவர்க்கும் முகமறிந்த மனிதராக இருந்தார். ஆதலால், அவரை அறியாத
ஒரு பிரதேசத்துக்குச் சென்று பிச்சை எடுக்கவேண்டும் என அவர் மனம் திட்டமிட்டது. ஆனால்
அவருடைய வாழ்க்கைச்சூழல் நினைத்த இடத்துக்கு நினைத்த நேரத்துக்குப் புறப்பட்டுச் செல்லும்படியாக
அமையவில்லை. அதனால் தன் கனவுத்திட்டத்தை தள்ளித்தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தார்.
ஒருமுறை
கொழும்பில் புறக்கோட்டை ஸ்ரீகதிரேசன் வீதியில் அவர் நடந்து செல்லும்போது, தெருவோரத்தில்
ஒரு தீப்பெட்டி விழுந்திருப்பதைப் பார்த்தார், அருகில் சென்று அப்பெட்டியை எடுத்துத்
திறந்தார். அதற்குள் ஐந்நூறு ரூபாய் நோட்டு. அதை அப்படியே விட்டுச் செல்ல அவர் மனம்
விரும்பவில்லை. அதை எடுத்து தன் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளவும் மனம் வரவில்லை.
உடனே அந்த ஐநூறு ரூபாயை நூறு ஐந்துரூபாய் நாணயங்களாக மாற்றி தன் பைக்குள் வைத்துக்கொண்டார்.
அன்று முழுதும் அந்தத் தெருவிலும் அதற்கடுத்த தெருக்களில் வசிக்கும் பிச்சைக்காரர்களைத்
தேடித்தேடிக் கண்டுபிடித்து ஒவ்வொரு ஆளுக்கும் ஓர் ஐந்து ரூபாய் நாணயத்தைக் கொடுத்து
முடித்த பிறகே வீட்டுக்குச் சென்றார். பிச்சை எடுக்கும் கனவு பலிக்காவிட்டாலும் எடுத்துக்
கொடுத்து மனம் நிறையும் தருணம் தானாகவே அவரை வந்தடைந்துவிட்டது.
புறாக்கள்
வளர்க்கும் ஆர்வம் ஜீவாவிடம் இருந்தது என்பதை நேரில் கண்ட அனுபவத்தின் அடிப்படையில்
முருகபூபதி குறிப்பிட்டிருக்கிறார். தன் வீட்டுக்குப் பின்புறத்தில் புறாக்களுக்கென்றே
தனியாக கூடுகளைக் கட்டி வைத்திருந்தார் ஜீவா. அவை எப்போது வேண்டுமானாலும் சுதந்திரமாக
வந்து செல்லவும் ஏற்பாடு செய்திருந்தார். வேளை தவறாமல் அவற்றுக்குப் பிடித்த தானியவகைகளை
எடுத்துவைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். வீட்டில் வசிப்பவர்களுக்கு உண்ண உணவில்லாத
சூழல் நேரினும் புறாக்களுக்கு அளிக்கும் உணவை அவர் ஒருபோதும் நிறுத்தியதில்லை. புறாக்கள்
மீது அந்த அளவுக்குப் பாசமாக இருந்தார் ஜீவா.
ஒரு சமயம்
புறாக்கள் உண்ணும் பொருட்டு கூட்டைத் திறந்து
தானியங்களை வைக்கச் சென்றார். அச்சமயத்தில் அவரே எதிர்பாராத வகையில் உள்ளேயிருந்து
ஒரு பெரிய பாம்பு வந்ததைக் கண்டார். நல்ல வேளையாக ஜீவா உடனடியாக கையை பின்னால் இழுத்துக்கொண்டு
எழுந்து வந்துவிட்டார். பாம்பு தானாகவே போய்விட்டது. நல்ல வேளையாக அத்தருணத்தில் கூட்டில்
புறாக்களும் இல்லாததால் அவையும் பாம்பின் வாயில் அகப்படவில்லை.
திவயின
என்னும் சிங்கள இதழ் ஜீவாவைக் கண்டு நேர்காணல் எடுப்பதற்காக வந்த அனுபவக்குறிப்பை ஓரிடத்தில்
எழுதியிருக்கிறார் முருகபூபதி. அந்த நேர்காணலுக்கு ஒழுங்கு செய்தவர் கலாச்சாரத் திணைக்களத்தில்
செயலராகப் பணியாற்றிய தமிழ் ஆர்வலரான கே.ஜி.அமரதாஸ என்பவர். குட்டிமணி, தங்கத்துரை
போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரம் அது. சிங்கள வாசகர்களுக்கு தமிழ் இலக்கியம்
போதிய அளவுக்கு அறிமுகமற்றதாக இருந்த நேரம் அது. ஆனால் மார்ட்டின் விக்கிரமசிங்கா,
குணதாச அமரசேகர, டி.பி.இலங்கரத்னா போன்ற பல இலக்கியவாதிகளின் படைப்புகள் சிங்கள மொழியிலிருந்து
தமிழில் ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டு தமிழர்களுக்கு அறிமுகமான ஆளுமைகளாக இருந்தனர்.
ஜீவா
தன் நேர்காணலில் மேற்கண்ட ஆளுமைகளின் பெயர்களை எல்லாம் குறிப்பிட்டு அவர்கள் அனைவரையும்
தமிழ் வாசகர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள் என்றும் கெடுவாய்ப்பாக சிங்கள வாசகர்கள்
தமிழ் என்று வரும்போது அமிர்தலிங்கம், குட்டிமணி போன்ற அரசியல்வாதிகளைத்தான் தெரிந்துவைத்திருக்கிறார்கள்,
எழுத்தாளர்களைத் தெரிந்துவைத்திருப்பதில்லை என்று குறிப்பிட்டார். நேர்காணல் எடுக்க
வந்தவர்களுக்கு இப்பதிலில் பொதிந்திருந்த உண்மை திகைப்பை அளித்தாலும் அதையொட்டி விவாதமாக
வளர்த்தெடுக்காமல் கடந்துவிட்டனர்.
இலக்கிய
ஆர்வம் கொண்டவர்கள் இனம், மொழி, தேசம் என எவ்விதமான வேறுபாட்டையும் பாராமல் இலக்கிய
ஆளுமைகளைக் கொண்டாடுகிறவர்களாக இருக்க, எவ்விதமான இலக்கிய ஆர்வமும் இல்லாதவர்கள் வேறுபாடுகளைத்
தேடித்தேடி உருப்பெருக்கி வெறுப்பை மாறிவிடுகிறார்கள் என்பது இன்றளவும் எல்லா நிலங்களிலும்
நிலவும் கசப்பான உண்மை.
ஜீவாவுக்கு
மது அருந்தும் பழக்கமில்லை. ஆனால் மது அருந்தும் பழக்கமுள்ளவர்கள் மீது வெறுப்புணர்வு
கொண்டவருமல்ல. அத்தகையோரோடு அருகமர்ந்து உரையாடும் தருணங்களை அவர் தவிர்ப்பவருமல்ல.
ஆனால் நட்பு சார்ந்து அவர் காட்டிய தாராள மனப்பான்மை அவருக்கு கசப்பான அனுபவமாக முடிவடைந்த
ஒரு தருணத்தை முருகபூபதி ஓர் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒருமுறை
ஜீவாவும் சில நண்பர்களும் கீரிமலைக்கு சைக்கிளில் உல்லாசப்பயணம் சென்றனர். அவர்களில்
சில எழுத்தாளர்களும் இருந்தனர். நீண்ட நேரம் உரையாடலிலேயே கழித்த நண்பர்கள் இரவு கவிந்ததும்
கையோடு கொண்டுவந்திருந்த மதுப்புட்டிகளைத் திறந்து அருந்த ஆரம்பித்தனர். இதை ஜீவா எதிர்பார்க்கவில்லை
என்றபோதும் எவரையும் அவர் எதிர்க்கவில்லை. இரவுவரை மது அருந்திய நண்பர்கள் போதையில்
ஆங்காங்கே மரத்தடியிலேயே புல்வெளியில் படுத்து உறங்கத் தொடங்கிவிட்டனர். நண்பர்களை
அந்நிலையில் அப்படியே விட்டுவிட்டுச் செல்ல மனமில்லாத ஜீவா வேறொரு மரத்தடியில் துண்டை
விரித்து படுத்துவிட்டார்.
நள்ளிரவுக்குப்
பிறகு போதை தெளிந்து எழுந்த நண்பர்கள் குறும்பு செய்வதாக நினைத்துக்கொண்டு உறக்கத்தில்
ஆழ்ந்திருந்த ஜீவாவை குண்டுகட்டாகத் தூக்கி வந்து பக்கத்திலிருந்த ஒரு நீர்நிலைக்குள்
வீசிவிட்டனர். விழித்தெழுந்த ஜீவா எப்படியோ கரைக்கு நீந்தி வந்து அங்கிருந்த அனைவரையும்
கடிந்துகொண்டார். மது அவர்களுடைய நிதானத்தை எந்த அளவுக்குச் சிதைத்திருக்கிறது என்பதையும்
புரிந்துகொண்டார். ”இனி, உங்கள் தொடர்பே வேண்டாம்” என கசப்போடு அறிவித்துவிட்டு அங்கிருந்து
புறப்பட்டார். அப்போது, இன்னும் போதை தெளியாமல் ஒரு மரத்தடியில் ஒரு நாயைக் கட்டிப்
பிடித்துக்கொண்டு உறக்கத்தில் மூழ்கியிருக்கும் ஒருவரைப் பார்த்துவிட்டு, அவரைச் சுட்டிக்
காட்டி “நீங்கள் அருந்துகிற மது செய்கிற வேலைகளையெல்லாம் பாருங்கள்” என்று விடைபெற்றுக்கொண்டு
ஈர உடையோடு யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்.
தமிழக
எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் ஜீவாவுக்கும் இருந்த தொடர்பைப்பற்றியும் மிகவிரிவான பதிவுகளை
எழுதியிருக்கிறார் முருகபூபதி. ஜெயகாந்தனின் பிற்காலக்கதைகளையொட்டி ஜீவாவுக்கு மாறுபட்ட
கருத்து இருந்தது என்றபோதும், ஜெயகாந்தன் மீது கொண்டிருந்த மதிப்பை அவர் ஒருநாளும்
குறைத்துக்கொண்டதில்லை தன்னுடைய மல்லிகை இதழில்
தொடர்ந்து ஜெயகாந்தனை முன்னிலைப்படுத்தி கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதியபடியே இருந்தார்.
அவரைப்பற்றி பிற எழுத்தாளர்களையும் எழுத வைத்து அவற்றையும் வெளியிட்டார். ஒருமுறை சென்னைக்கு
வந்திருந்த ஜீவாவை ஜெயகாந்தன் மாலை போட்டு
பொன்னாடை போர்த்தி பாராட்டிப் பேசியதையும் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்ததையும் முருகபூபதி
குறிப்பிட்டிருக்கிறார்.
ஜீவாவின்
மன உறுதி அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஒன்றைச் செய்யவேண்டும் என முடிவெடுத்தால் எக்காரணத்தை
முன்னிட்டும் செய்துமுடிக்கும் பழக்கமுள்ளவர் அவர். அதே நேரத்தில் வேண்டாம் என ஒன்றை
ஒதுக்கிவைத்தால் அதை முற்றிலுமாக உதறி அதிலிருந்து வெளியேறும் பழக்கமும் உள்ளவர் என்பதை
அவரோடு பழகியவர்கள் அனைவரும் அறிவார்கள். அவரே பல இடங்களில் அதைப்பற்றி எழுதியிருக்கிறார்.
அதை வெளிப்படுத்தும் வகையில் தான் நேரில் கண்ட ஒரு அனுபவத்தை தன் நூலில் ஓரிடத்தில்
குறிப்பிட்டிருக்கிறார் முருகபூபதி.
ஜீவாவுக்கு
வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. அவரைப்போலவே அவருடைய இன்னொரு நண்பருக்கும் வெற்றிலை
போடும் பழக்கம் இருந்தது. ஒருநாள் ஜீவாவைச் சந்திக்க வந்தார் அந்த நண்பர். அன்று அவர்
வெற்றிலையைத் தொடவில்லை. தம் குடியிருப்புக்கு அருகில் வந்து தங்கியிருக்கும் துறவி ஒருவரைச் சந்தித்ததாகவும் அவருடைய அருளால் வெற்றிலைப்
பழக்கத்தை கைவிட்டுவிட்டதாகவும் எடுத்துரைத்தார். பிறகு அந்தத் துறவியைச் சந்தித்து
அருள் பெற்று அந்தப் பழக்கத்தைவிட்டு வெளியேற வருமாறு ஜீவாவை அழைத்தார் அவர். அதில்
தனக்கு விருப்பமில்லை என எவ்வளவோ மறுத்துப் பார்த்தார் ஜீவா. ஆனால் நண்பரோ தொடர்ந்து
அவரை வலியுறுத்திக்கொண்டே இருந்தார்.
நண்பரின்
சொற்களால் சலிப்படைந்த ஜீவா “யாரோ ஒரு துறவி சொல்லி நான் இப்பழக்கத்திலிருந்து வெளியேற
வேண்டும் என நினைக்கவில்லை. என்னாலேயே அப்பழக்கத்தை உதறமுடியும். இதோ இன்றுமுதல் இப்பழக்கத்தை
விட்டுவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு வெற்றிலைப்பையை எடுத்து வீசிவிட்டார். அச்சொல்லை
ஜீவா இறுதிவரை காப்பாற்றினார். அத்தகு மன உறுதி அவரிடம் இருந்தது. ஆனால் துறவியின்
அருள் பெற்றவர் என தன்னைச் சொல்லிக்கொண்ட நண்பரோ ஒருசில நாட்களிலேயே அப்பழக்கத்துக்கு
மீண்டும் அடிமையாகிவிட்டார்.
பொதுவாகவே
ஜீவா அமைதியாக உரையாடும் குணமுள்ளவராகவே வாழ்ந்தார். சிற்சில பொழுதுகளில் அவர் தன்
அமைதியை உதறி ஆவேசத்தோடு பேசியதும் உண்டு என்பதற்கு முருகபூபதி விவரித்திருக்கும் ஒரு
நிகழ்ச்சி எடுத்துக்காட்டாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் ஜீவா ஒவ்வொரு
நாளும் மல்லிகை அலுவலகத்துக்குச் செல்வதற்கு முன்பாக பூபாளசிங்கம் நடத்தி வந்த புத்தகக்கடைக்குச்
செல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அங்கேயே நின்று தினசரி செய்தித்தாட்களை வாசித்துமுடித்துவிடுவார்.
இந்தத் தினசரிப் பழக்கம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அவரைச் சந்திக்க விரும்பும்
பலர் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு வந்து காத்திருந்து ஓரிரு நிமிடங்கள் உரையாடிவிட்டுச்
செல்வார்கள்.
ஒருமுறை
ஜீவா புத்தகக்கடைக்கு அருகில் நின்று செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார். அப்போது
சாலையின் மறுபக்கத்திலிருந்து யாரோ விசிலடிக்கும் சத்தம் கேட்டதால், படிப்பில் கவனம்
அறுந்து என்னவென்று தெரிந்துகொள்வதற்காக அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தார் ஜீவா.
அவருக்கு எதிரில் ஒரு கார் நின்றிருந்தது. விசில் சத்தம் எங்கிருந்து வந்தது என்பதை
அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. தொடர்ந்துவந்த விசில் சத்தம், அச்சத்தம் காரிலிருப்பவர்
எழுப்பிய சத்தம் என்பதைப் புரிந்துகொண்டார். ஆனால் அவர் எதற்காக விசிலடிக்கிறார் என்பதைப்
புரிந்துகொள்ளமுடியாமல் குழப்பத்தோடு அவரையே பார்த்திருந்த வேளையில் மீண்டும் அவர்
விசிலடித்து தன்னை நோக்கி வருமாறு கைச்சைகை செய்தார். அதைப் பார்த்ததும் ஜீவா அமைதியிழந்து
எரிச்சலுற்றார். விசிலடித்தவரைப் பார்த்து இங்கே வா என்பதுபோல கையை அசைத்து சைகை செய்தார்.
காரில்
அமர்ந்திருந்தவர் மெல்ல இறங்கி சாலையைக் கடந்து அவரிடம் வந்து நின்றார். ”எதற்காக விசிலடித்தீர்?”
என்று கேட்டார் ஜீவா. உடனே அவர் மிடுக்கோடு ”என் மகள் பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள். நீங்கள் நடத்திய
மல்லிகை இதழ்களை அவள் தன் ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு உங்கள்
இதழ்கள் தேவைப்படுகின்றன. மகள் காரில் அமர்ந்திருக்கிறாள். நீங்கள் வந்தால் பார்த்துப்
பேசலாம்” என்று சொன்னார். ”இது தெரு. மல்லிகைக்கு என தனியாக ஒரு அலுவலகம் உள்ளது. நீங்கள்
அங்கே வந்து பாருங்கள். இப்படி விசிலடித்துக் கூப்பிட நான் ஒன்றும் நீங்கள் வளர்க்கும்
செல்லப்பிராணி அல்ல” என்று சொல்லி அனுப்பிவைத்துவிட்டார்.
ஜீவாவின்
நோக்கையும் போக்கையும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் விதமாக இருவேறு நிகழ்ச்சிகளை ஒரு
கட்டுரையில் விவரித்திருக்கிறார் முருகபூபதி. ஒரு நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெற்றதாகும்.
கவிஞர் மேத்தாவின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு தன் புனைபெயராக மேத்தாதாசன் என சூட்டிக்கொண்ட
இளைஞர் ஜீவாவின் படைப்புகளுக்கும் நல்ல வாசகராக இருந்தார். ஜீவா சென்னைக்கு வந்த சமயத்தில்
அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று உபசரித்தார். சைவ உணவைச் சாப்பிடும் பழக்கமுள்ள
குடும்பம் என்பதால் அவர் தன் வீட்டில் சைவ உணவுகளையே பரிமாறி உபசரித்தார். ஜீவா அசைவ
உணவுகளை உண்ண ஆர்வம் கொண்டவர் என்பதைத் தெரிந்துகொண்ட அவர் அடுத்தநாள் சென்னையிலேயே
உள்ள ஓர் உயர்தர அசைவ உணவகத்துக்கு அழைத்துச் சென்று அவரை உண்ண வைத்திருக்கிறார். சாதி
அடிப்படையில் அவர் பிராமணர் என்றபோதும் ஜீவாவுடனான உறவை வளர்த்துக்கொள்வதிலோ மேத்தாவின்
படைப்புகளைச் சுவைப்பதிலோ அவர் சாதி பார்க்கவில்லை. இலக்கிய ஆர்வமும் அன்பும் மட்டுமே
அளவுகோல்களாக இருந்தன.
அடுத்ததாக
முருகபூபதி குறிப்பிடும் நிகழ்ச்சி, இலங்கை நண்பரோடு தொடர்புடையது. ஓர் இலக்கியப்பத்திரிகையில்
தொடர் எழுதிய முருகபூபதி, ஓர் அத்தியாயத்தில் ஜீவாவைப்பற்றிய குறிப்பை எழுதும்போது
காகிதத்தட்டுப்பாடு நிலவிவந்த காலத்தில் கூட இலக்கியப்பணிகள் நின்றுவிடக்கூடாது என்கிற
எண்ணத்தில் நோட்டுப்புத்தகத்தாளில் மல்லிகை இதழ்களை அச்சிட்டு தொடர்ந்து வெளியிட்டு
இலக்கியச்சேவையாற்றியவர் என பெருமைப்படுத்தும் விதமாக குறிப்பிட்டு எழுதியிருந்தார்.
ஆனால் அதைப் படித்துவிட்டு ஐரோப்பாவில் வாழும் இலங்கை நண்பர் அதற்கு எதிர்வினையாக ஜீவாவை
சாதிப்பெயர் குறிப்பிட்டு கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி ஒரு வாசகர் எதிர்வினையாக கடிதம்
எழுதியிருந்தார்.
தன் கட்டுரையில்
இருவேறு தருணங்களையும் கவனப்படுத்திய முருகபூபதி, ஜீவா மீது பிறர் கொண்டிருந்த இருவேறு
பார்வைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும்
நினைக்கப்படும் என எழுதிய திருவள்ளுவரைப்போல இவ்விரு பார்வைகளும் கணக்கில் எடுத்துக்கொண்டு
தெளிவுபெற வேண்டியது மிகமிக அவசியம் என சொல்லிச் செல்கிறார்.
2001இல்
வெளிவந்த உயிர்நிழல் என்னும் பத்திரிகையின் நேர்காணலில் ஜீவா ஒரு கேள்விக்குப் பதில்
சொல்லும்போது ஒரு படைப்பைப் படித்ததுமே இவையெல்லாம் தனக்கும் தெரியும், இவற்றைவிடவும்
அதிகமாகத் தெரியும் என்ற எண்ணத்தை அடைபவன் தன் அகம்பாவத்தைப் பெருக்கிக்கொள்லலாமே தவிர
ஒருபோதும் நல்ல வாசகனாக வளரமுடியாது என்றும் மனிதனை மனிதனாக வைத்திருக்கத் தேவையான
எல்லா வெளிச்சங்களையும் இலக்கியத்திலிருந்து தேடித்தேடி பெறுபவனே நல்ல வாசகன் என்றும்
ஒரு குறிப்பை அளித்திருப்பதை நூலின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறார் ஜீவா. ஒவ்வொரு
வாசகனையும் நல்ல வாசகனாக வார்த்தெடுக்கும் ஆவலோடு 46 ஆண்டுகளாக தொடர்ந்து நானூறு இதழ்களை
வெளியிட்ட ஜீவாவின் ஆழ்நெஞ்சில் உறைந்திருந்த மகத்தான கனவின் சாரமாக அந்தப் பதில் அமைந்திருக்கிறது.
அந்தக் கனவின் சாரத்தை இன்றைய வாசகர்களுக்கும் உணர்த்தும் விதமாக தம் அனுபவக்குறிப்புகளைத்
தொகுத்து எழுதியிருக்கிறார் முருகபூபதி.
(வாழும் வரலாறு மல்லிகை ஜீவா. முருகபூபதி.
அனுபவத்தொகை நூல். முகுந்தன் பதிப்பகம். ஆஸ்திரேலியா)
(புக் டே – இணைய தளம் – 31.01.2025)