Home

Monday, 17 February 2025

கவிதை என்னும் கலை


நல்லாசிரியர்கள் எல்லாக் காலங்களிலும் தம் மாணவர்களை எவ்விதமான எதிர்பார்ப்பும் இன்றி தத்தம் துறைகளில் திறமை மிக்கவர்களாக மிளிர்வதற்குத் துணையாக இருக்கிறார்கள்.  அதே நல்லாசிரியர்கள் எல்லாக் காலங்களிலும் அந்த மாணவர்களால் நன்றியுடன் நினைக்கப்படுகிறார்கள்.

இது இக்கட்டுரைக்காக எழுதப்படும் புகழ்ச்சொல் அல்ல, கல்வி தொடங்கிய காலத்திலிருந்தே நிலவிவரும் பேருண்மை. துரோணர் காலத்திலிருந்து நம்மை இம்மண்ணில் ஆளாக்கி நிறுத்தியிருக்கும் ஆசிரியர்களை நினைத்துக்கொள்ளும் சீடர்கள் தொடர்பான எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக்கொண்டே செல்லலாம்.

உ.வே.சா. அவர்கள் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றார்.  மீனாட்சி சுந்தரம் பிள்ளையைத் தம் ஆசிரியர் என அவரே மீண்டும் மீண்டும் எழுதி நிறுவினார். அவரைப்பற்றி உ.வே.சா. எழுதிய வாழ்க்கை வரலாறு அந்த வகைமையில் ஒரு செவ்வியல் படைப்பு.

பாலமுருகன் என்கிற செந்தில்பாலா ஒரு பள்ளியாசிரியர். நீண்ட ஆசிரியர் மரபில் சமகாலத்து எடுத்துக்காட்டாக வாழ்கிறார். செஞ்சியில் உள்ள இராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் பணிபுரியும் அவர். தம்மிடம் படிக்கும் மாணவர்களை எழுதவைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இன்றைய தமிழகப் பள்ளிகளில் படைப்பூக்கமுள்ள மாணவமாணவிகளைக் கண்டறிவதற்கும் அவர்களுடைய திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் பல வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவ மாணவிகளுக்காக அரசு வெளியிடும் தேன்சிட்டு,, ஊஞ்சல் போன்ற இதழ்கள் அவர்களின் படைப்பூக்கத்தை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கின்றன. இத்தருணத்தைப் பயன்படுத்திக்கொண்ட செந்தில் பாலா தம்மிடம் கல்வி கற்கும் மாணவமாணவிகளிடம் கவிதை ஆர்வத்தை உருவாக்குகிறார். அவரே ஒரு கவிஞராக இருப்பதால் கவிதைகளில் தோயும் ஆர்வத்தை பிள்ளைகளிடம் முதலில் உருவாக்குகிறார். பிறகு கவிதைகளை வாசிக்கவைக்கிறார். அதன் கட்டுமானத்தைப் புரியவைக்கிறார். பிறகு அதன் ரகசியக்கதவுகளைத் திறந்து உலவும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளும் பயிற்சியையும் அளிக்கிறார்.

தண்ணீர் நிறைந்த ஏரிக்குள் இடுப்பளவு ஆழத்தில் நின்றுகொண்டு தம் இரு கைகளிலும் தன் மகனை ஏந்தி நீச்சல் பழக உதவியாக இருக்கும் ஒரு தந்தையைப்போல தம் மாணவர்கள் கவிதையை வாசிக்கவும் எழுதவும் தேவையான பயிற்சியை வழங்குகிறார் அவர். அப்பயிற்சியின் விளைவாக கவிதைகளை எழுதத் தொடங்கிய சில மாணவமாணவிகள் நல்ல கற்பனை வளத்தோடு எழுதும் பக்குவத்தை அடைகிறார்கள். தம் எண்ணங்களையும் கற்பனைகளையும் வெளிப்படுத்த அவர்களுக்கு ஹைக்கூ வடிவம் எளிய வடிகாலாக அமைந்துவிட்டது. விசைகொண்டு எழுந்த அவர்கள் ஏராளமாக எழுதிக் குவித்துவிடுகிறார்கள். 

அனைவருடைய பாராட்டுகளையும் பெற்ற அம்மாணவக்கவிஞர்களின் கவிதைகளிலிருந்து சிறந்த அனுபவத்தைத் தரும் கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு தொகைநூலாக சமீபத்தில் உருவாக்கியிருக்கிறார் செந்தில் பாலா. கவிஞர் முருகேஷ் ஊக்க உரையை எழுதி அவர்கள் மீது வெளிச்சம் விழச் செய்திருக்கிறார். அகநி பதிப்பகம் அந்தச் சின்னஞ்சிறு தொகுதியை அழகாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது.

எல்லாப் பணிகளும் பாராட்டுக்குரியவை. இந்த மாணவ அணியிலிருந்து ஒரு சிலரேனும் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக வளர்ந்தெழலாம். அப்போது அவர்கள் செந்தில் பாலாவின் பணியை நன்றியுடன் நினைத்துக்கொள்வார்கள்.

 

விழுந்தது காற்றில்

பறந்ததும் காற்றில்

இலை

 

ராகுல் என்னும் மாணவர் எழுதிய கவிதை இது. காற்று இலைக்குச் செய்தது தீமையா, நன்மையா என்பதை ஒருபோதும் பகுத்தறிய முடியாது. அது இயற்கையின் மாபெரும் புதிர். அப்புதிரை சின்னஞ்சிறு காட்சி வழியாக உணர்த்தும் கற்பனைக்கு அம்மாணவரின் மனம் இடம் கொடுத்திருக்கிறது. கிட்டத்தட்ட தேவதேவனின் கவிதைக்கு அருகில் வந்து நிற்கும் இச்சித்திரம் இத்தொகுதியின் மிகமுக்கியமான அடையாளம்.

 

மேகம் கருத்தது

பூக்கள் மகிழ்ந்தது

மழை பெய்யவில்லை

 

தமிழரசன் என்னும் மாணவர் எழுதிய கவிதை இது. மேகம் கருத்தால் மின்னலடித்து மழை பொழியும் என்பது ஒரு நம்பிக்கை. மழை பொழிந்தால் அதன் ஈரம் பட்டு மின்னும் இதழ்களோடு அசையும் பூக்களைப் பார்க்கும்போது நம்மையறியாமல் நம் முகம் மலரும். இவ்விரண்டு சித்திரங்களுமே காட்சிப்பொருளாகின்றன. ஆனால் இவ்விரண்டுக்கும் காரணமென நம்பப்படுகிற மழை மட்டும் பொழியவில்லை. மழை இல்லாமலேயே இவ்விரண்டும் நிகழ்ந்துவிடுகின்றன. இதுவும் இயற்கையின் மாபெரும் புதிர்களில் ஒன்று. சிறுவனின் கண்களுக்கு அப்புதிர் தென்பட்டிருப்பது பெரும்பேறு.

 

பிச்சைக்காரன் எதிர்காலத்தைச் சேமிப்பான்

பணக்காரன்

இறந்தகாலத்தைச் சேமிப்பான்

 

ஆசிப் என்னும் மாணவரின் கவிதை இது. ஒரு பொன்மொழியின் சாயலை இக்கவிதை கொண்டிருந்தாலும் அச்சொற்களின் நயம் இக்கவிதையை மீண்டும் மீண்டும் அசைபோட வைக்கிறது.

 

குருவி வந்தது

கீ கீ எனக் கத்தியது

நான் எழுந்தவுடன் பறந்தது

 

பாவேந்தன் என்னும் மாணவரின் கவிதை இது. குரல் கொடுத்துக்கொண்டே இருந்த குருவி, அக்குரலைக் கேட்டு ஒரு ஆள் வந்ததும் பறந்து போவது எதற்காக என்பதும் புரிந்துகொள்ள முடியாத புதிர்களில் ஒன்று. அப்படியென்றால் குருவியின் அழைப்புக்கு பொருள் என்ன, எதை நாடி அது குரல் கொடுத்தபடி இருக்கிறது என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடையே இல்லை. சரியான புள்ளியில் கவிதை மையம் கொண்டிருக்கிறது.

 

கவிதை எழுத

காகிதம் தேவையில்லை

கனவு போதும்

 

நவின்குமார் என்னும் மாணவர் எழுதிய கவிதை இது. மிகப்பெரிய விடையை மிக எளிதாக அவனுடைய இளம்மனம் கண்டறிந்துவிட்டது. ஒரு மாபெரும் புதையலைக் கண்டெடுப்பதைப்போல அனைவருக்கும் உரிய ஓர் ஆப்த வாக்கியத்தை அம்மாணவர் கண்டுபிடித்துவிட்டார்.

 

மாணவர்களை முதலில் கவனிப்பவர்களாக தகவமைத்து, வாசிப்புப்பயிற்சியின் வழியாக கவிதை என்னும் மாய உலகத்தை அறிமுகப்படுத்தி, பிறகு படிப்படியாக அந்த உலகத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி, மெல்ல மெல்ல அந்த உலகத்தில் உலா வருகிறவர்களாக மாற்றுவது என்பது மாபெரும் கலை. கவிதை எழுதுவதைவிட கவிதையைக் கற்பிப்பது மிகப்பெரிய கலை. சவால் நிறைந்த அந்த வேலையை மட்டற்ற மகிழ்ச்சியோடு செய்திருக்கிறார் நம் கவிஞர் செந்தில் பாலா. அவர் நம் பாராட்டுக்குரியவர். 

 

 

( மலைப்பிஞ்சு. அரசுப்பள்ளி மாணவர்களின் முதல் ஹைக்கூ தொகுப்பு. அகநி வெளியீடு, வந்தவாசி-604408. விலை. ரூ.80 )

 

(உங்கள் நூலகம் – பிப்ரவரி 2025)