ஒரு ஊரில் ஒரு பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டில் ஒரு அம்மாவும் அவளுடைய மகனும் மருமகளும் வசித்துவந்தார்கள். அந்த அம்மா ஒரு கொடுமைக்காரி. அவள் தன் மருமகளை ஒரு சர்வாதிகாரியைப்போல ஒவ்வொரு நாளும் ஆட்டிப் படைத்துவந்தாள். உட்கார் என்றால் உட்கார வேண்டும். எழுந்திரு என்றால் எழுந்திருக்கவேண்டும். சொன்ன வேலையைச் செய்யவேண்டும். அந்த வீட்டில் அவள் வைத்ததுதான் சட்டம். அதை மீறி ஒருவர் கூட ஒரு வார்த்தை சொல்லிவிட முடியாது.
அவள் மகன் பெரிய கோழை. சின்ன வயதிலிருந்து அம்மா பிள்ளையாகவே
வளர்ந்ததால் அவன் தைரியமில்லாதவனாக இருந்தான். அம்மாவை எதிர்த்து அவன் ஒருநாளும்
ஒரு வார்த்தை கூட சொன்னது கிடையாது. தன் கண்ணுக்கு முன்னாலேயே தன் மனைவியை அவள்
திட்டினாலும் சரி, அடித்தாலும் சரி அதை எதிர்த்து ஒரு வார்த்தை கூட அவன்
சொல்லமாட்டான். எதையும் பார்க்காதவன் போலவும் எதையும் கேட்காதவன் போலவும்
நடந்துகொள்வான்.
காலையில் தூங்கி எழுந்ததில் இருந்து இரவில் தூங்கச் செல்வது
வரைக்கும் எல்லா வேலைகளையும் அந்த மருமகள்தான் செய்யவேண்டும். வீட்டைப் பெருக்கி
சுத்தம் செய்வது, வாசலைப் பெருக்கி சாணம் தெளித்து கோலம் போடுவது, தொழுவத்தில்
இருக்கும் மாடுகளைக் குளிப்பாட்டி பராமரிப்பது, தொழுவத்தைச் சுத்தம் செய்வது,
வேளாவேளைக்கு பால் கறப்பது என நிற்க நேரமில்லாமல் ஒவ்வொரு நிமிடமும் வேலை
செய்துகொண்டே இருந்தாள் அவள். எல்லா வேலைகளுக்கும் நடுவில் மாமியார் குறிப்பிடுகிற குழம்பு, பொரியல்
எல்லாவற்றையும் சமைத்துவைத்தாள்.
அந்த வீட்டில் பின்கட்டில் ஒரு அறை இருந்தது. அந்த அறையைத்தான்
மாமியார் தன் மருமகளுக்கு ஒதுக்கியிருந்தாள். எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு
அவள் அந்த அறைக்குள் சென்றுவிட வேண்டும். சாதாரண நேரங்களில் அங்கிருந்து வெளியே
வரக்கூடாது. சாப்பாட்டு நேரத்தில் அம்மாவும் மகனும் சமையல் அறைக்குள் சென்று
சமைத்துவைத்த எல்லாவற்றையும் மூச்சு முட்ட சாப்பிடுவார்கள். இருவரும் வெளியேறிய பிறகு
மருமகள் தன் அறையிலிருந்து வந்து பாத்திரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் மிச்சம்
மீதி உணவை வழித்து சாப்பிட்டு அரைகுறையாகப் பசியைத் தணித்துக்கொள்வாள்.
ஒவ்வொரு நாளும் தான் சமைத்துவைக்கும் உணவில் தனக்கு ஒரு சிறிய பங்கு
கூட கிடைப்பதில்லையே என நினைத்து அவள் மனம் ஏக்கத்தில் மூழ்கும். அதைப்பற்றி
பேச்சு எடுத்தாலே, அவளுடைய மாமியார் கடுமையான கோபத்துடன் பொங்கி எழுந்து வசைபாடத்
தொடங்குவாள்.
“மூதேவி. மூதேவி. தின்னு தின்னு இந்த ஊட்டு சொத்தை அழிக்கலாம்னு
பார்க்கறியா? என்ன கொடுக்கறனோ, அத தின்னுட்டு அடங்கி இருக்கணும். ஏதாவது எதிர்த்து
பேச ஆரம்பிச்சா, அதுக்கப்புறம் நான் இப்படி பேசிட்டு நிக்கமாட்டேன். என் கை பேச
ஆரம்பிச்சிடும். ஊட்டுல இருக்கற துடைப்பம், முறம், விறகுக்கட்டை, தடி எல்லாம் பேச
ஆரம்பிச்சிடும். புரியுதா?”
அவள் கர்ஜிக்கும் குரல் அந்த வீட்டையே நடுங்கவைக்கும். ஒரு வார்த்தை கூட பதில் சொல்ல சத்தில்லாதவளாக மருமகள்
ஒதுங்கி உட்கார்ந்துவிடுவாள்.
பசியில் அவள் வயிற்றில் ஒரு நெருப்பு எப்போதும் எரிந்துகொண்டே
இருக்கும். அந்த நெருப்பு தணியும் வகையில் சாப்பிடும் வாய்ப்பு தன் வாழ்க்கையில்
எப்போது அமையுமோ என நினைத்து ஏங்கி
பெருமூச்சு விடுவாள் அவள். தூக்கத்தில் அவளுக்கு வரும் கனவுகள் கூட சாப்பாடு
தொடர்பானதாகவே இருக்கும். தன்னைச் சுற்றி பெரிய பெரிய பாத்திரங்களில் விதவிதமான
உணவு வகைகளைக் குவித்துவைத்துக்கொண்டு ஆசை தீர அள்ளி அள்ளிச் சாப்பிடுவதுபோல கனவு
வரும்.
அந்த வீட்டுத் தோட்டத்தில் பூசணி, பீர்க்கங்காய், பாகற்காய், புடலங்காய்
எல்லாமே கிடைக்கும். ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு காயை வெட்டிச் சமைத்து அவள் பொரியல்
செய்வதுண்டு. ஆனால் அந்தப் பொரியலில் அவளுக்கு ஒரு கைப்பிடி அளவு கூட கிடைக்காது.
ஒருநாள் மருமகள் சமையலறையில் கூட்டு செய்வதற்காக புடலங்காயை
துண்டுதுண்டாக நறுக்கி சுத்தப்படுத்திக்கொண்டிருந்தாள். அப்போது யாரோ வாசலில்
நின்று “வீட்டுல யாரும்மா இருக்கீங்க? நான் பக்கத்தூருலேருந்து வந்திருக்கேன்”
என்று கூவும் குரல் கேட்டது.
சமையலறையில் காய்களை வெட்டும் வேலையை பாதியில் நிறுத்திவிட்டு
வாசலுக்கு ஓடினாள் மருமகள். வாசலில் நின்றிருப்பவரை அவளுக்கு அடையாளம்
தெரியவில்லை. புதிய முகமாக இருந்தது. “யாரைப் பார்க்கணும் நீங்க? என்ன விஷயம்,
சொல்லுங்க” என்று கேட்டாள்.
“பெரியம்மா இல்லீங்களா? நான் பக்கத்தூருலேர்ந்து அவுங்களுக்கு சேதி
கொண்டாந்திருக்கேன்” என்றார் அவர்.
“வீட்டுக்குள்ளதான் இருக்காங்க. இங்கயே ஒரு நிமிஷம் இருங்க. வரச்
சொல்றேன்” என்று சொல்லிவிட்டு மருமகள் உள்ளே சென்றாள். மாமியார் ஓய்வெடுக்கும் அறை
வாசலுக்கு அருகில் நின்று “யாரோ உங்களைத்தான் தேடி பக்கத்தூருலேர்ந்து
வந்திருக்காங்க. உங்ககிட்ட ஒரு சேதி சொல்லணுமாம்” என்று சொன்னாள்.
சாய்வுநாற்காலியில் உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த மாமியார்
அதைக் கேட்டு மெல்ல எழுந்தாள். உடையைச் சரிப்படுத்திக்கொண்டு வாசலுக்குச்
சென்றாள். அவளைப் பார்த்ததும் வெளியூர் ஆள் குனிந்து வணக்கம் சொன்னான்.
“என்னப்பா, என்ன விஷயம்?” என்று கேட்டாள் மாமியார்.
“பக்கத்தூருல உங்க அக்கா கிருஷ்ணம்மாவுக்கு உடம்பு சரியில்லை. எந்த
நேரமும் எதுவும் நடக்கலாம். உங்களுக்கு தகவல் சொல்லிட்டு வரச் சொன்னாங்கம்மா”
என்றார் அவர்.
“ஐயோ, அக்கா” என்று அலறினாள் மாமியார். பிறகு இன்னும் சில கேள்விகளை
வந்தவரிடம் கேட்டு அவர் தன் அக்காவைப்பற்றித்தான் குறிப்பிடுகிறாரா என்பதை
உறுதிப்படுத்திக் கொண்டாள். ”எனக்கு மூனு அக்கா இருந்தாங்க. பெரிய அக்கா மூனு
வருஷத்துக்கு முன்னால போயிட்டா. ரெண்டாவது அக்கா போன வருஷம் போய் சேர்ந்துட்டா. இவளும்
போயிட்டா, அதுக்கப்புறம் இந்த உலகத்துல நான் தனிக்கட்டையா இருக்கணுமே, கடவுளே, இது
என்ன சோதனை” என்று வாய்விட்டுப் புலம்பினாள். பிறகு வந்தவரிடம் “கொஞ்சம் இருப்பா.
இதோ வரேன்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றாள்.
சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்த மருமகளிடம் ”அடியே, பழைய சோறு
மிச்சமிருந்தா கொஞ்சம் மோர் ஊத்தி கொண்டுபோய் அவனுக்குக் கொடுடி” என்றாள்.
“ஐயோ, எதுவுமே மிச்சமில்லையே அத்தை”
“ஏன், காலையில இருந்ததே. அதெல்லாம் எங்க போச்சி?”
“அதைத்தானே அத்தை நான் காலையில சாப்ட்டுட்டு பாத்திரங்களையெல்லாம்
கழுவி வச்சேன்”
மருமகளை எரித்துவிடுவதுபோல பார்த்தாள் மாமியார். “உனக்கு இருக்கறது
வயிறா, கிணறா? தின்னு தின்னே இந்த ஊட்ட அழிக்கணும்னு நெனச்சிட்டிருக்கியா?”
மருமகள் எந்தப் பதிலும் சொல்லாமல் காய் நறுக்கும் வேலையில்
மூழ்கியிருந்தாள்.
“அந்தக் கூடையில தேங்காயும் வாழைப்பழமும் இருக்கும். அதுல ஒரு தேங்காயும் நாலு பழமும்
எடுத்தும் போய் வாசல்ல நிக்கறவருகிட்ட கொடு. மசமசன்னு நின்ன இடத்துலயே நின்னுட்டிருக்காத.
பாவம், சேதி சொல்றதுக்காக எங்க அக்கா வீட்டிலேர்ந்து வந்திருக்காரு”
மருமகள் கூடைக்கு அருகில் சென்றாள். அக்கணம் அவளை மறுபடியும்
அழைத்தாள் மாமியார். ”அப்படியே வண்டிக்காரனைப்
பார்த்து உடனே வண்டி கட்டணும்னு சொல்லு. ஒரு நடை பக்கத்தூரு வரைக்கும் போய் எங்க அக்காவை
பார்த்துட்டு வரணும்னு சொல்லு” என்றாள்.
மாமியார் சொன்ன வேலைகளை அடுத்த நிமிடமே மருமகள் செய்தாள். வாசலில்
வண்டி வந்து நின்றது. உடை மாற்றிக்கொண்டு வந்த மாமியார் மீண்டும் சமையலறை பக்கமாக
வந்தாள். “எதுக்கு இவ்வளவு காயை வெட்டி வைக்கிற? உன் வீட்டுக்காரன் மட்டும்தான
சாப்பிடப்போறான்? அவன் ஒரு ஆளுக்கு எவ்வளவு தேவையோ, அந்த அளவுக்கு மட்டும் செஞ்சா
போதும். மிச்சத்தை எடுத்து உள்ள வை. நாளைக்கு பயன்படுத்திக்கலாம்” என்று சொல்லிவிட்டுப்
புறப்பட்டாள்.
வண்டி புறப்பட்டுச் சென்று வெகுநேரத்துக்குப் பிறகுதான் மாமியார்
வீட்டில் இல்லை என்பது அவள் மனத்தில் உறைத்தது. தான் மட்டும் தனியாக இருக்கிறோம்
என்ற எண்ணமும் கூடவே எழுந்தது. அந்த சுதந்திரத்தை நினைத்து நினைத்து
மகிழ்ச்சியடைந்தாள். அவளுக்குப் புடலங்காய் கூட்டு என்றால் மிகவும் பிடிக்கும். மகனுக்குத்
தேவையான அளவுக்கு மட்டும் சமைக்கச் சொன்ன மாமியார் மிச்சத்தை உள்ளே எடுத்துவைக்கச்
சொன்ன விஷயம் அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது.
உடனே நேராக தோட்டத்துக்குச் சென்று புதிதாக இரண்டு புடலங்காய்களைப்
பறித்துவந்து கழுவி நறுக்கி தாராளமாக சமைக்கத் தொடங்கினாள். புடலங்காய் கூட்டு.
புடலங்காய் குழம்பு. மணக்க மணக்க எல்லாம் தயாரானது. எல்லாவற்றையும்
இறக்கிவைத்துவிட்டு கணவனுக்காகக் காத்திருந்தாள்.
சரியாக சாப்பாட்டு நேரத்துக்கு அவள் கணவன் ”அம்மா அம்மா” என்று
கூப்பிட்டுக்கொண்டே வந்தான். அவள்
சுவரோரமாக ஒதுங்கி நின்று மாமியார் வெளியூர் சென்றிருக்கும் செய்தியைச் சொன்னான்.
அவன் ஒரு வார்த்தை கூட அவளிடம் பதில் பேசவில்லை. கைகால் கழுவிக்கொண்டு
சாப்பாட்டுத்தட்டு முன்னால் உட்கார்ந்தான். அவன் வழக்கமாகச் சாப்பிடும் அளவுக்கு
சோறு, குழம்பு, பொரியல், கூட்டு எல்லாவற்றையும் பரிமாறினாள். அவன் அவசரமில்லாமல்
பொறுமையாக எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டபடி எழுந்தான். அவன் கை
கழுவிக்கொள்வதற்காக தண்ணீர்ச்செம்பை அவனிடம் கொடுத்தாள் அவள். அதை வாங்கி கைகளைக்
கழுவிக்கொண்டு அவன் வீட்டைவிட்டு வெளியேறினான்.
சமையல் பாத்திரங்களில் நிறைந்திருக்கும் உணவுவகைகளை ஆசை தீர ஒருமுறை
பார்த்தாள் அவள். அவள் கண்கள் கலங்கின. அந்த வீட்டுக்கு வந்த பிறகு அவள் ஒருநாள்
கூட நல்ல சாப்பாடு சாப்பிடவில்லை. எல்லா நாளும் எல்லோரும் சாப்பிட்ட பிறகு
எஞ்சியிருக்கும் சாப்பாடுதான். பாத்திரங்களில் இருப்பதை வழித்தெடுத்து
வைத்துக்கொண்டு சாப்பிடுவது பழகிவிட்டது. அதனால் பாத்திரங்களில் நிறைந்திருக்கும்
உணவுவகையைப் பார்த்ததும் அவள் மனம் சற்றே உணர்ச்சிவசப்பட்டது.
எல்லாப் பாத்திரங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து ஒரு பெரிய கூடைக்குள்
வைத்தாள் மருமகள். பிறகு கூடையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு வீட்டைப்
பூட்டிக்கொண்டு ஏதோ வேலைக்குச் செல்வதுபோல தெருவில் நடந்தாள்.
மனிதநடமாட்டம் இல்லாத இடத்தை அவள் கண்கள் தேடிக்கொண்டே இருந்தன. ஊர்
எல்லையில் ஒரு காளி கோவில் இருந்தது. அந்தப்
பகுதி வெறிச்சோடிக் கிடந்தது. அந்தக் கோவிலைப் பார்த்ததும் அதுதான்
பொருத்தமான இடம் என அவள் மனம் முடிவெடுத்தது. கோவில் கதவுகளைத் திறந்து சட்டென உள்ளே
சென்றாள்.
கருவறையில் இருள் சூழ்ந்திருந்தது. கண்கள் பழகியதும் பீடத்தில்
அமர்ந்திருந்த காளியின் தோற்றம் தெரிந்தது. சில நொடிகளுக்குப் பிறகு கூரையில்
ஆங்காங்கே தெரிந்த ஒன்றிரண்டு ஓட்டைகள் வழியாக வெளிச்சம் படர்ந்திருப்பது
தெரிந்தது. காளியின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கமுடிந்தது. காளிக்கு எதிரில்
ஒரு படிக்கட்டில் இடுப்பில் வைத்திருந்த கூடையை இறக்கிவைத்தாள். அவசரம் அவசரமாக
எல்லாப் பாத்திரங்களையும் திறந்தாள். சோற்றில் புடலங்காய் குழம்பை ஊற்றி அள்ளி
அள்ளிச் சாப்பிட்டாள். ஒருவாய் சோறு, ஒருவாய் கூட்டு என மாறி மாறி எல்லாவற்றையும்
ரசித்துச் சாப்பிட்டாள்.
தனக்கு முன்னால் உட்கார்ந்து சாப்பாட்டு ரசனையில் மூழ்கியிருந்த
பெண்ணை ஆச்சரியத்தோடு பார்த்தாள் காளி. அவளுடைய வேகம் நம்பமுடியாதபடி இருந்தது.
அவள் சாப்பிட்ட சாப்பாட்டின் அளவும் நம்பமுடியாதபடி இருந்தது. ஐயோ என்றபடி திறந்த
தன் வாயை தன் வலது கைவிரல்களை உயர்த்தி அழுத்தி சத்தமெழாதபடி மூடிக்கொண்டு
கண்ணிமைக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள் காளி.
தனக்கு மிகவும் பிடித்தமான புடலங்காய் கூட்டைச் சாப்பிடும்
மும்முரத்தில் மருமகள் காளியின் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஒரு
பருக்கை கூட மிச்சம் வைக்காமல் எல்லாப் பாத்திரங்களையும் வழித்து சாப்பிட்டு
முடித்ததும் திருப்தியாக ஏப்பம் விட்டாள். பிறகு எல்லாப் பாத்திரங்களையும் எடுத்து
கூடைக்குள் வைத்துக்கொண்டாள். கோவில்
கதவுகளை மெதுவாகத் திறந்து வெளியே வந்தாள்.
ஒருமுறை அக்கம்பக்கம் இரு புறங்களிலும் பார்வையைப் படரவிட்டு,
எங்காவது நடமாட்டம் தெரிகிறதா எனப் பார்த்தாள். யாரும் இல்லை என்பதை
உறுதிப்படுத்திக்கொண்டதும் கூடையை இடுப்பில் வைத்துக்கொண்டு வீட்டை நோக்கி
நடந்தாள். வழியில் ஆற்றங்கரை ஓரமாக நின்று எல்லாப் பாத்திரங்களையும் கழுவி
சுத்தப்படுத்திக்கொண்டாள். பிறகு, ஒவ்வொரு பாத்திரத்திலும் ஆற்றுத்தண்ணீரை நிரப்பி
கூடைக்குள் வைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள்.
வீட்டு வாசலை அடைந்தபோது கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருப்பதைப்
பார்த்ததும் அவள் அச்சத்தில் திகைத்து
நின்றுவிட்டாள். வெளியூருக்குச் சென்றிருந்த மாமியார் திரும்பி வந்துவிட்டதை அவள்
புரிந்துகொண்டாள். வெளியே மரத்தடியில்
வண்டி நின்றிருப்பதை அப்போதுதான் அவள் பார்த்தாள். மாடுகள் நிழலோரமாகக் கட்டிப் போடப்பட்டிருந்தன.
என்ன மாதிரியான பூகம்பம் வெடிப்பதற்குக் காத்திருக்கிறதோ என எண்ணி
அஞ்சியபடி “அத்தை, கதவைத் திறங்க” என்று சத்தமாகச் சொல்லிக்கொண்டே கதவைத்
தட்டினாள். ஒரு பதிலும் வரவில்லை. கதவும் திறக்கப்படவில்லை. இடுப்பில் கூடையோடு
நீண்ட நேரம் நின்றுகொண்டே இருப்பது சிரமமாக இருந்தது. கூடையை இறக்கி கீழே
படிக்கட்டில் வைத்துவிட்டு மீண்டும் “அத்தை, அத்தை, கதவைத் திறங்க” என்று சத்தமாக
அழைத்தாள். அப்போதும் பதில் இல்லை.
தெருவில் போகிறவர்களும் வருகிறவர்களும் அவள் வாசலில் நின்றிருப்பதை வேடிக்கை
பார்த்துக்கொண்டே நடந்தார்கள். அதைப் பார்க்கப்பார்க்க அவளுக்கு மிகவும் சங்கடமாக
இருந்தது. அதே சங்கடத்துடன் “அத்தை, அத்தை, கதவைத் திறங்க” என்று மறுபடியும்
சத்தமாக அழைத்தாள்.
அடுத்து சில நொடிகளில் தாள் விலக்கி கதவைத் திறந்துகொண்டு வந்து
நின்றாள் மாமியார். “எதுக்குடி இப்ப பிச்சைக்காரி மாதிரி சத்தம் போட்டுகிட்டே
இருக்க? என்னை என்ன செவிடின்னு நெனைச்சிட்டியா?” என்று கேட்டுக்கொண்டே மருமகளின்
கன்னத்தில் அறைந்தாள். “இல்லை அத்தை, ஆத்துலேர்ந்து தண்ணி எடுத்தாந்தேன். ரொம்ப
நேரம் இடுப்புலயே வச்சிருந்ததால வலிக்க ஆரம்பிச்சிட்டுது. கதவை சீக்கிரம் தெறந்தா
நல்லா இருக்கும்னுதான் சத்தம் போட்டு கூப்பிட்டேன்” என்று பொறுமையாகப் பதில்
சொன்னாள். பிறகு தண்ணீர் நிறைந்த பாத்திரங்கள் வைக்கப்பட்டிருந்த கூடையைத்
தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்றாள்.
மருமகள் வெளியே வருவதற்காகக் காத்திருந்த மாமியார் அவள் வெளியே
வந்ததும் அழுக்குத்துணிகளைச் சுருட்டி வைத்திருந்த மூட்டையை எடுத்துவந்து அவளுக்கு
முன்னால் வைத்தாள். “அழுக்கு போக துவைச்சி காய வை” என்று கட்டளையிட்டாள்.
மறுபேச்சில்லாமல் மருமகள் அந்தத் துணிமூட்டையை பின்கட்டுக்கு எடுத்துச் சென்று
தண்ணீரில் நனைத்து அழுக்கு போக துவைத்து கொடியில் உலரவைத்தாள்.
மருமகள் கூடத்துக்கு வரும் நேரத்துக்காகக் காத்திருந்த மாமியார்
“அந்த முறத்துல கேழ்வரகு வச்சிருக்கேன் பாரு. ஏந்திரத்துல போட்டு நல்லா மழமழன்னு
மாவா அரைச்சி எடு. அடுத்த வாரம் கோயில் திருவிழா வருது. திருவிழாவுல கூழு
பொங்கறதுக்கு மாவு வேணும்” என்று கேழ்வரகு நிரம்பிய முறத்தை அவளுக்கு முன்னால்
கொண்டுவந்து வைத்தாள். மருமகள் எந்த முணுமுணுப்பையும் காட்டாமல் கேழ்வரகை வாங்கிச்
சென்று மாவாக அரைத்துவந்து கொடுத்தாள்.
காலையிலிருந்து ஓய்வில்லாமல் வேலை செய்துகொண்டே இருந்த காரணத்தால்
அவளுக்கு உடலெல்லாம் வலித்தது. ஆனால் அத்தையிடம் அவளிட முறையிட முடியவில்லை. பயம்
அவனைத் தடுத்தது.
மாவரைத்து முடித்து பெருமூச்சு விட்டபடி முகத்திலும் கழுத்திலும்
ஒட்டிக்கொண்டிருந்த மாவுத்துகள்களைத் துடைத்து உதறியபடி மெதுவாக நடந்து வந்தாள்.
அவள் வருகைக்காகவே காத்திருந்த மாமியார் சுவரோரமாக வைக்கப்பட்டிருந்த விறகுகளை
சின்னச்சின்ன துண்டுகளாக உடைத்து அடுக்கச் சொன்னாள். “சும்மா இருக்கும்போது இப்படி
உடைச்சி வச்சாதான் நாளைக்கு அடுப்புல வைக்க சுலபமா இருக்கும்” என்றாள்.
மருமகளுக்கு உடலெல்லாம் வலித்தது. களைப்பின் காரணமாக அடியெடுத்து வைக்கக்கூட
முடியவில்லை. ஆனாலும் அத்தையிடம் எதிர்வாதம் செய்ய அவளுக்கு விருப்பமில்லை. “ஐயோ, சிவனே” என சிவனை நினைத்தபடி ஒவ்வொரு
விறகாக எடுத்து துண்டாக்கி அடுக்கினாள்.
அப்போது தெருவில் ஆரவாரத்துடன் ஆண்களும் பெண்களும் ஓடும் சத்தம்
கேட்டது. ஏதோ அதிசயத்தைப் பார்க்கப்
புறப்பட்டவர்களைப்போல ஊர் எல்லையை நோக்கி எல்லோரும்
செல்வதை வீட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தாள் மாமியார். என்ன விஷயம் என்று
தெரிந்துகொள்வதற்காக மெதுவாக வாசல் பக்கம் வந்தாள். அந்தக் கூட்டத்தில் அவளுடைய
நெருக்கமான தோழி ஒருத்தியும் நடந்துசெல்வதை அவள் கவனித்தன. உடனே கைத்தட்டி அவளை
வீட்டுக்கு அருகில் வருமாறு அழைத்தாள்.
“என்னடி விஷயம்? ஊரே திரண்டு ஒன்னா எங்க போறீங்க?” என்று அவளிடம்
கேட்டாள் மாமியார்.
அந்தக் கேள்விக்கு நேரிடையாகப் பதில் சொல்லாமல் “நம்ம காளி கோயில்ல
காளி சிலை கையில என்னென்ன இருக்கும், ஞாபகம் இருக்குதா? என்று மாமியாரிடம் பதில் கேள்வி கேட்டாள் அவள்.
“ஒரு கையில சூலம், இன்னொரு கையில அசுரனுடைய தலை. நல்லா ஞாபகம்
இருக்குதே? ஏன், அதுக்கு என்ன இப்ப?”
“நான் அந்தக் கையைப்பத்தி சொல்லலை. முதுக்குக்குப் பின்னால இருக்கற
கைகள்ல என்னென்ன இருக்கும்னு கேட்டேன்”
“விதவிதமான ஆயுதங்கள், மண்டை ஓடு, நெருப்புச்சட்டி எல்லாமே
இருக்கும்”
“நேத்துவரைக்கும் அப்படித்தான் இருந்திச்சாம். ஆனா இன்னைக்கு அப்படி
இல்லை. ஒரு கை முன்பக்கமா நீண்டு எதையோ பார்த்து ஐயோன்னு வாயைப் பொத்திகிட்ட
மாதிரி இருக்குதாம்.”
“யாரு சொன்னாங்க?”
“சாயங்காலம் கோயில்ல விளக்கேத்தி பூஜை செய்யறதுக்காக பூசாரி
வந்திருக்கார். அப்ப, அவருதான் காளியுடைய கை வாயைப் பொத்திகிட்டு எதையோ பார்த்து
அதிர்ச்சியில உறைஞ்சி நிக்கிறமாதிரி இருக்கறத முதன்முதலா கவனிச்சிருக்காரு. அவரு
தகவல் சொல்லித்தான் நாங்க எல்லோரும் அதைப் பார்க்கறதுக்கு ஓடறோம். வேணும்ன்னா
நீயும் வா”
“என்னடி சொல்ற நீ? காளி அதிர்ச்சியில வாயை மூடிகிட்டு நிக்குதா?
நம்பவே முடியலையே”
“வா. வா. நீயும் வா. சீக்கிரமா பார்த்துட்டு திரும்பிடலாம்”
மாமியாருக்கு எல்லோரையும் போல காளி கோயிலுக்குச் சென்று மாற்றத்தைப்
பார்க்கவேண்டும் என ஆசையாகவும் இருந்தது. அதே சமயத்தில் மருமகளைத் தனியே
விட்டுவிட்டுச் செல்ல அச்சமாகவும் இருந்தது. யாரும் இல்லாத சமயத்தில் எதையாவது
செய்து சாப்பிட்டுவிட்டால் என்ன ஆவது என நினைத்து தயக்கமாகவும் இருந்தது. இறுதியில்
அவளுடைய இச்சையே வென்றது. வீட்டில் இருக்கிற எல்லாக் கதவுகளையும் பெட்டிகளையும்
பூட்டி வைத்துவிட்டு “அடியே, வெளியே போயிட்டு வரேன். ராத்திரி சமையலுக்கு
சீக்கிரமா ஏற்பாடு செய்” என்று சொல்லிவிட்டு அந்தத் தோழியோடு புறப்பட்டுச் சென்றாள்.
கோவில் வாசலில் ஏராளமான கூட்டம் நின்றிருந்தது. உள்ளே சென்று காளி
சிலையைப் பார்த்துவிட்டு வெளியே வந்த ஒவ்வொருவரும் ”இது என்னடி அதிசயமா இருக்குது?
இந்தப் பூமியில எதைப் பார்த்து சாமி இப்படி கையைத் தூக்கி வாயடைச்சி நிக்குது?”
என்று பேசிக்கொண்டனர்.
“இந்தக் கலிகாலத்துல இதுவும் நடக்கும். இதவிட மோசமாவும் நடக்கும்”
“காளிக்கு என்னமோ கோபம். இனிமே இந்த ஊருல மழை பொழியாது. குழந்தைகள்
பிறக்காது. பிறந்தாலும் குறையில்லாமல் இருக்காது”
“இதைப் பார்த்தா நல்ல சகுனமா தெரியலை. ஏதோ கெட்ட சகுனமா தெரியுது.
ஊருக்கு ஏதாவது கெட்டது நடக்கப் போவுதோ என்னமோ, ஒன்னுமே புரியலை”
”நாம பேசி என்ன புண்ணியம்? ஊருல இருக்கற நாலு பெரிய மனுஷங்க பார்த்து
கலந்து பேசி ஒரு நல்ல முடிவை எடுக்கணும்”
“ஊரைக் காப்பாத்த வேண்டியது, ஊரு பெரிய மனுஷங்க பொறுப்பு”
மூலைக்கு மூலை ஆட்கள் நின்று பேசிக்கொண்டே இருந்தார்கள். மாமியாரும் அவள் தோழியும் உள்ளே
சென்று பார்த்துவிட்டு “நேத்து வரைக்கும் கீழ இருந்த கை, திடீர்னு எப்படி
வாய்ப்பக்கம் போயிருக்கும்?” என்று விவாதித்துக்கொண்டனர்.
“இருட்டறதுக்குள்ள வீட்டுக்கு போய் சேரணும். வேகமா நட” என்று
மாமியார் திரும்பி நடக்கத் தொடங்கினாள்.
“ஏன் இப்படி அவசரப்படற? கொஞ்ச நேரம் கழிச்சி போனா என்ன?” என்று கேட்டாள்
அவள் தோழி.
”இந்த நேரத்துக்குள்ள என் மருமவ வீட்ட என்னென்ன கோலம் செஞ்சி
வச்சிருக்காளோ. உனக்கு சொன்னா புரியாது. அவளைக் கண்காணிச்சிகிட்டே இருக்கணும்.
இல்லைன்னா நம்ம கண்ணுல மொளகாத்தூள தூவிடுவா. பெரிய கைகாரி.” என்று சொல்லிக்கொண்டே
வீட்டை நோக்கி நடந்தாள்.
அடுத்தநாள் விடியும் நேரத்தில் அந்தக் கிராமத்தைச் சுற்றியிருக்கும்
பிற கிராமங்களிலும் காளி சிலை பற்றிய செய்தி வெகுவேகமாகப் பரவிவிட்டது. எல்லோரும் திருவிழாவுக்கு
வருவதுபோல வண்டி கட்டிக்கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துவிட்டுத்
திரும்பினர்.
வெளியூரைச் சேர்ந்த ஒரு பெரியவர் “சாமிக்கு என்னமோ தோஷம்
ஏற்பட்டிருக்குது. ஒரு பரிகார பூஜை செஞ்சா சரியாயிடும்” என்று சொன்னார். அவர்
சொல்லுக்குக் கட்டுப்பட்டு கிராமத்தினர் அனைவரும் சேர்ந்து ஒரு பரிகார பூஜைக்கு
ஏற்பாடு செய்தனர். ஆனாலும் காளியின் கை கீழே இறங்கவில்லை.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தினர் வந்து ஏதேனும் ஒரு பரிகாரபூஜை
செய்துவிட்டுச் சென்றனர். ஆனால் எதிர்பார்த்த பலன்தான் கிடைக்கவில்லை. ஒவ்வொரு
நாளும் காளிக்கு எண்ணற்ற ஆடுகளும் கோழிகளும் பலியாகக் கொடுக்கப்பட்டன. அதுவும்
எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
உடனே ஊர்க்கூட்டம் போட்டு அந்தப் பிரச்சினையைப்பற்றி நீண்ட நேரம்
விவாதித்தார்கள். கடைசியாக ஊரில் வசிக்கிற பரிகார முறை தெரிந்த யாரேனும் ஒருவர்
முன்வந்து காளி கோவிலுக்கு உதவி செய்யலாம்
என்றும் காளியின் தோற்றத்தை பழைய நிலைக்குக் கொண்டு வருகிறவருக்கு ஒரு
வெள்ளிக்குடம் பரிசாகக் கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார்கள். அந்தச் செய்தியை
அந்தக் கிராமத்திலும் அக்கம்பக்கமுள்ள கிராமங்களிலும் தண்டோராக்காரர் ஒரே நாளில்
பரப்பினார்.
ஒருநாள் தெருவில் தண்டோராச்சத்தத்தைக் கேட்டு என்ன என்று
அறிந்துகொள்வதற்காக மருமகள் வீட்டுக்கு வெளியே வந்து கதவருகில் நின்று கேட்டாள்.
உடனே வீட்டுக்குள் சென்று மாமியாரிடம் “அத்தை, காளியின் கையை பழைய நிலைக்குத்
திரும்பவைக்க என்னால முடியும். எனக்கு
நீங்க அனுமதி கொடுங்க. நா போய் வரேன்” என்று கேட்டாள்.
“சும்மா இருடி முந்திரிக்கொட்டை. ஊருல இருக்கற பெரிய மனுஷங்களுக்குத்
தெரியாத பரிகாரம் வீட்டுக்குள்ள இருக்கற உனக்குத் தெரிஞ்சிடுச்சா? வெளியே
அலையறதுக்கு திட்டம் போடறியா? ஒழுங்கா
மூலையில கிட. இல்லைன்னா, கைகாலை முரிச்சி மூலையில நான் உக்கார வச்சிடுவேன்” என்று
கையை ஓங்கினாள் மாமியார்.
“நான் சொல்றதை கேளுங்க அத்தை. யாராலயும் முடியாதத நான்
செஞ்சிக்காட்டி அந்த வெள்ளிக்குடத்தை வாங்கிவந்து உங்ககிட்ட கொடுக்கறேன்” என்றாள்
மருமகள்.
வெள்ளிக்குடம் என்ற சொல்லைக் கேட்டதும் அவள் மனம் அடங்கியது. “சரி
போய் வா. வெள்ளிக்குடம் மட்டும் வரலைன்னா, உன் கைகாலை உடைச்சி உக்காரவைச்சிடுவேன்.
ஞாபகத்துல வச்சிக்கோ” என்று எச்சரித்தாள்.
“கண்டிப்பா வெள்ளிக்குடம் கிடைக்கும் அத்தை. முதல்ல நீங்க ஊரு
மணியக்காரருக்கு செய்தி சொல்லி அனுப்புங்க” என்று உறுதியான குரலில் சொன்னாள்.
(தொடரும்.......)