முத்துக்கண்ணு விழுப்புரம் போகத் தொடங்கிவிட்டான். தரகுக்காரன் வீட்டுக்கும், வியாபாரி ரங்கசாமி வீட்டுக்கும் நடையாய் நடந்து மண்டியில் சேர்த்து விட்டாள் அம்மா.
முத்துக்கண்ணு
கிளம்பும்போது குட்டிப்பாப்பா -தூங்கிக் கொண்டிருந்தாள். எழுந்தபிறகு ஆடுவதற்குத் துணை
இல்லாமல் அழுது ரகளை செய்தாள். ‘‘பெரியண்ணா எங்கம்மா, பெரியண்ணா எங்கம்மா’’ என்று
அம்மாவைத் துளைத்தெடுத்தாள்.
குட்டிப்பாப்பாவுக்கு
விளையாட்டுக் காட்ட முத்துக்கண்ணுவால்தான் முடியும். குட்டிப்பாப்பாவைச் சந்தோஷப்படுத்த
புதுசுபுதுசாக விளையாட்டுகளைக் கண்டுபிடிப்பான் முத்துக்கண்ணு. சிரிக்கும்போது குட்டிப்பாப்பாவின்
முகம் பூரித்துவிடும். பூ மாதிரியான அவள் கையை எடுத்து வைத்துக்கொண்டு ‘‘நண்டூறுது
நரியூறுது’’ என்று
விரல்களால் மெல்லமெல்லக் கையைத் தொடுவான். உடம்பெங்கும் கூச்சம் உண்டாகிஅவள் சிரிக்கிற
சிரிப்பில் வீடு குலுங்கும். கையைப் பிடுங்கிக்கொண்டு தப்பித்து ஓடுவாள் பாப்பா. பிடிப்பதற்காக
பாசாங்கோடு துரத்துவான் முத்துக்கண்ணு. அகப்படாமல் சாமர்த்தியமாக வளைந்து வளைந்து சிரித்துக்கொண்டே
ஓடுவாள் பாப்பா.
பாப்பாவுக்கு
உப்பு மூட்டை ஆடவேண்டும் என்று தோன்றியதும் முத்துக்கண்ணுவின் முதுகில் ஏறிக் கொள்வாள்.
கைகள் கழுத்தைக் கட்டிக்கொள்ள கால்கள் இடுப்பைச் சுற்றிக் கொள்ளும். சிரமப்பட்டு -தூக்குகிறவன்போல்
-தூக்கிக் கொண்டு நடக்கும் முத்துக்கண்ணு மூட்டையோடு பிள்ளையார் கோயில் வாசல் வரைக்கும்
செல்வான். வாசலில் உட்கார்ந்திருக்கும் இன்னொரு பாப்பாவிடம் ‘‘உப்பு வேணுமா?” என்பான்.
‘‘எட்டணாவுக்குக் குடு” என்று அந்தப் பாப்பா சொன்னதும் குட்டிப்பாப்பாவை இறக்கிவிடுவான்.
”என்ன
மாப்பள வந்தாச்சா?” என்று சிரித்தபடி வருகிற ஆண்டாள் அத்தை தன் இரண்டு பிள்ள்களையும்
அழைத்து வந்து ‘‘களைக்குப் போறன், மத்யானம் வந்துடுவன். கொஞ்சம் பார்த்துக்க” என்று
சொல்லிவிட்டுச் செல்வாள். ‘‘நானும் வந்துட்டாங்கா” என்று இறவாணத்தைப் பிடித்துச் சொல்லிவிட்டு
நொடியில் உள்ளே போய் களைக்கொத்தியோடு திரும்பும் சிறுவந்தாட்டு குள்ளக்காவும் பிள்ளைகளைக்
கொண்டு வந்து விடுவாள். சிவகாமி அண்ணி ‘‘சாப்பாட்டு வேல முடிஞ்சாச்சா?” என்று சிரித்துக்கொண்டே
தன் பிள்ளைகளையும் அவன் பொறுப்பில் விட்டுச் செல்வாள்.
களைவெட்டுக்கும்,
செத்தை பொறுக்கவும் போகிறவர்கள் தூக்கி வருகிற பிள்ளைகளை வைத்துக்கொண்டு ஆடினான் முத்துக்கண்ணு.
எல்லோருக்கும் உற்ற துணை முத்துக்கண்ணு. அண்ணிமார்களும், அத்தைமார்களும் கொடுத்த அவித்த
கிழங்கையும், அடையையும் ஆசையோடு தின்றான் முத்துக்கண்ணு. ‘‘எல்லா பொண்ணுங்களையும் நீயே
வளத்து நீயே கட்டிக்கடா” என்று மேஸ்திரி பெண்டாட்டி கிண்டல் செய்தபடி கன்னத்தில் இடித்தாள்.
‘‘ச்சி. இந்த அத்தைக்கு வேற வேலயே இல்ல” என்று முகத்தைச் சுளித்து குழந்தைகள் பக்கம்
திரும்பினான். சின்னஞ்சிறு குழந்தைகள் எல்லாம் பூங்கொத்துக்களாய் அவன் தோளில் தொங்கினார்கள்.
ஒரு அதிசயத்தைக் கண்டதுபோல் எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள்.
கோயில்
வாசலில் இருந்து ‘‘உப்பு வாங்கலியோ, உப்பு வாங்கலியோ” என்று கூவிக்கொண்டே குழந்தைகளோடு
நடக்கிற நடை மேஸ்திரி வீட்டுத் திண்ணையில் நிற்கும். ‘‘எனக்கு உப்பு, எனக்கு உப்பு”
என்று நாலைந்து பிள்ள்கள் கூவும். ‘‘எனக்கு எட்டணாவுக்கு” என்று கேட்கும் ஒரு பிள்ளை.
‘‘எனக்கும் எட்டணாவுக்கு” என்று இன்னொரு பிள்ளையும் கேட்கும். மூட்டையை முதுகில் வைத்தபடியே
பேரம் நடக்கும். பணமாக வத்திப்பெட்டி அட்டைகள் கைமாறியதும் மூட்டைகள் இறக்கப்படும்.
உடனே இன்னொரு பிள்ளை ‘‘நானு மாமா, நானு மாமா’ என்று முகத்தோடு ஒட்டிக்கொண்டு கொஞ்சும்.
‘‘ஏறிக்கோ. தோ கௌம்பிடும் வண்டி’’ என்று கையைத் தட்டிக்கொண்டு எழுந்திருப்பான் முத்துக்கண்ணு.
உப்பு
வாங்கும் பணமாக உதவும் பொருட்டு நிறைய வத்திப்பெட்டிகள் வேண்டும். தெருவில் நடக்கும்போதெல்லாம்
பருந்துமாதிரி பார்த்துக்கொண்டே நடந்தான். சிகரெட் கடைகள் முன்பு கூட்டி வைத்த குப்பைகளில்
கிளறிக்கிளறி நிறைய பெட்டிகளைக் கண்டெடுத்தான். அளவாய் கத்தரித்து ரூபாய் நோட்டுக்களாக்கி
விட்டான். ஆட்டம் தொடங்கும் முன்பு எல்லாருடைய கைகளிலும் நோட்டுகள் இருக்கும். முடியும்போது
திருப்பித் தந்துவிடுவார்கள்.
மெல்ல
மெல்ல நிறையப் பிள்ளைகள் சேர்ந்து விடுவார்கள். எல்லோருக்கும் உப்பு மூட்டை ஆடும் ஆசை
வரும். எல்லாப் பிள்ளைகளையும் ஒன்றாய்ச் சேர்த்து இரண்டாய் பிரித்து விடுவான். ஒரு
கூட்டம் மேஸ்திரி வீட்டுத் திண்ணைக்கு ஓடிவிடும். இன்னொரு கூட்டம் கோயில் படிக்கட்டில்.
முதலில்
படிக்கட்டில் இருந்து ஒரு மூட்டை போகும். வளைந்துவளைந்து செல்லும். மூடி இருக்கிற வீட்டு
வாசல்கள் முன்னால் நின்று கூச்சல் போடும். வைக்கோல் போர் வேலிப் படல்கள் முன்புகூட
நின்று கூவும். யாரும் வாங்கமாட்டார்கள். ஒவ்வொரு வீடாய்ப் பார்த்துப்பார்த்து நகர்ந்து
கடைசியாக மூட்டை திண்ணையில் இறக்கப்படும். பணம் கைமாறும். முத்துக்கண்ணுவின் தோளில்
ஏறி அடுத்த உப்பு யாரென்று போட்டி நடக்கும். போட்டியில் ஜெயிக்க அவன் கன்னத்தில் மாறிமாறி
முத்தம் தந்து கொஞ்சுவார்கள். இரண்டு விரல்கள் நீட்டி ஏதாவது ஒன்றைப் பிடிக்கச் சொல்வான்
முத்துக்கண்ணு. ஒரு விரல் பிடிக்கப்பட்டதும் விரலுக்குரிய உப்பு மூட்டையைத் -தூக்கிக்கொண்டு
அடுத்த நடையை ஆரம்பிப்பான். எல்லாப் பிள்ள்களுக்கும் அவன் ‘உப்பு மாமா’ ஆனான்.
‘உப்பு
மாமா’வின்
வயசொத்தவர்கள் அவனை வேண்டுமென்றே கேலி செய்தார்கள். ‘‘-தூக்குத் -தூக்கி’’ ‘‘சோத்து
வண்டி’’, ‘‘அர
லு£ஸ்’’ என்று
நிறையப் பெயர்கள் வைத்தார்கள். யார் எது சொன்னாலும் ‘‘சீ போடா’’ என்று
முகத்தைச் சுளித்து திட்டிவிட்டு நகர்ந்தான் முத்துக்கண்ணு.
ஆத்திரமான
சமயங்களில் அம்மாவும் திட்டினாள். ‘‘புத்தியில்லாத முண்டமா பொறந்ததவிட ஆடு மாடா பொறந்திருந்தாலாச்சும்
நிம்மதியா இருப்பண்டா. பாவி ஒன்னப் பெத்ததுக்கு என்னத்தடா கண்டன்” என்று முதுகு வீங்க
முறத்தாலேயே அடித்தாள். முடியைப் பிடித்துத் தலையைக் குலுக்கி சுவரிலேயே முட்டினாள்.
அடி விழும்போதெல்லாம்
எப்படியாவது அம்மாவின் கையில் இருந்து திமிறிக்கொண்டு ‘ஐயையோ’ என்று
அலறியபடியே ஓடுவான் முத்துக்கண்ணு. பெட்டிக் கடைக்குப் பக்கத்தில் உள்ள கரண்ட் கம்பத்தைப்
பிடித்துக்கொண்டு தேம்பித்தேம்பி அழுவான். ‘‘எதுக்குடா அழுவற, வாடா இங்க” என்று செல்லாம்பா அத்தை கூப்பிட்டு சுட்ட கருவாடு
வைத்து சோறு பிழிந்து வைத்தாள்.
நிலா
வெளிச்சத்தில் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து சுந்தராம்பா அத்தை வீட்டு மாட்டுத்
தொட்டியில் நிரப்புவான். வெற்றிலைப் பாக்கு மென்றபடி பக்கத்தில் இருக்கும் அத்தையோடு
வாய்க்கு வந்த கதை எல்லாம் சொல்வான்.
ரெண்டாம்
ஆட்டம் சினிமா தொடங்கிய பின்னாலும் திரும்பி வராத முத்துக் கண்ணுவைத் தேடித் தேடி வீடு
வீடாக ஏறி இறங்குவாள் அம்மா. ‘‘எங்க முத்துக்கண்ணு வந்தானா, பாத்திங்களா?” என்று ஒவ்வொரு
திண்ணையிலும் அவள் குரல் ஒலிக்கும். ஆண்டாள் அத்தை வீட்டுத் திண்ணையில் -தூங்குபவனைக்
கண்டுபிடித்து எழுப்பி, கெஞ்சிக் கூத்தாடி கைப்பிடித்து அழைத்து வருவாள். வீட்டுக்
கட்டிலில் அவன் -தூங்கியதும் அவனை நினைத்து அவள் பாடும் ஒப்பாரிப்பாட்டு இரவைக் கரைக்கும்.
நிலா உச்சிக்குப் போகும் நேரம் நொந்த மனசோடு -தூங்கப் போவாள் அம்மா.
எப்போதோ
ஒரு முறை வந்துபோகும் முத்துக்கண்ணுவின் அப்பாவுக்குக் கள்ளக்குறிச்சியில் இன்னொரு
சம்சாரம் இருந்தது. அப்பா வரும்போது முத்துக்கண்ணுவுக்கு உப்புக்கடலை, ஜிலேபி, முறுக்கு எல்லாம் வாங்கி வந்து
கொடுத்தார். முத்துக்கண்ணுவையும், குட்டிப்பாப்பாவையும் மட்டும் நிறுத்திக் கொண்டு
ராசப்பாவைக் கண்டமங்கலத்தில் தன் அண்ணன் வீட்டில் விட்டு விட்டாள் அம்மா. கூலிவேலைக்
காசை வைத்துக்கொண்டு குடும்பத்தை இழுக்க முடியவில்லை.
பிள்ளைகள்
உப்பு மூட்டை -தூக்கிக்கொண்டு நடக்கும் முத்துக்கண்ணுவைப் பார்க்கும்போதெல்லாம் அம்மா
கண்ணீர் வடித்தாள். ‘‘நாளக்கி கல்யாணம் பண்ற வயசுல இந்தப் புள்ள்ய இப்படி ஆட வச்சி
வேடிக்கைப் பாக்கறியே, இது நல்லா இருக்குதா” என்று தெய்வத்தை நிந்தித்தாள். அவள் வார்த்தைகள்
துண்டுதுண்டாய் நெஞ்சிலிருந்து வெடித்து விழுந்தன.
முத்துக்கண்ணுவின்
எல்லாக் காரியங்கள்யும் அம்மா மன்னித்துவிடுவாள். தன் காதுபட யாராவது அவனை ‘‘அர லூசு”
என்று கூப்பிடுவதைக் கேட்ட மாத்திரத்தில் காளியாய் சத்தமிட ஆரம்பித்து விடுவாள். வாயில்
எந்த வார்த்தை வருகிறது என்-று தெரியாது. எதிரில் நிற்பவன் முகமும் தெரியாது. ஆத்திரத்தைக்
கொட்டிய பிறகுதான் அடங்குவாள்.
முத்துக்கண்ணுவுக்கு
தினந்தோறும் வெந்நீர் வைத்து குளிப்பாட்டி முதுகு தேய்த்து விட்டாள் அம்மா. அப்போதும்
குட்டிப்பாப்பா ஓடிவந்து அவனோடு ஒட்டிக் கொண்டு நீரில் நனைந்தாள்.
முத்துக்கண்ணு
விழுப்புரம் போன பிற்பாடு வீட்டுத் திண்ணைகளில் உப்பு மூட்டைகள் இறக்கப்படுவதில்லை.
துணையில்லாமல் தவித்த பிள்ளைகள் ஆடத் தெரியாமல். வேப்ப மரத்தடியிலும், பூவரச மரத்தடியிலும்
மயங்கி மயங்கி நின்றார்கள். கழனி வேலைகளுக்குப் போன அம்மாக்களின் வரவை எதிர்பார்த்தபடி
கரண்ட் கம்பத்தைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். பிள்ளைகள் முகத்தில் சந்தோஷக்களையே
இல்லை. குட்டிப் பாப்பா தினமும் அழுதாள்.
குட்டிப்பாப்பாவுக்கு
ஞாயிற்றுக்கிழமையைச் சொல்லி ஆரம்பத்தில் சமாதானப்படுத்தினாள் அம்மா. ‘எப்ப வரும்? எப்ப
வரும்?’ என்று
காத்திருந்தாள் பாப்பா. அது என்ன கிழமை என்று யாருக்கும் தெரியவில்லை. உப்பு மாமாவைக்
காணாமல் பிள்ளைகளுக்குப் பொழுது போகவில்லை.
ஞாயிற்றுக்கிழமையில்
வீட்டில் இருந்த முத்துக்கண்ணு பாப்பாவோடும். மற்ற பிள்ள்களோடும் உப்பு மூட்டை ஆடினான்.
சொந்த அண்ணன் என்கிற சலுகையில் நிறைய தடவை மூட்டை ஏறினாள் பாப்பா.
உப்பு
மண்டியில் முத்துக்கண்ணு -தூக்கும் மூட்டைகள் பிள்ளைகளைப் போல லேசாக இல்லை. அவற்றின்
எடையால் நடுஎலும்பு முறிந்துவிடுகிறமாதிரி வலித்தது. சாக்குப்பை உராய்ந்து முதுகுத்தோல்
எரிந்தது. லாரிகளில் இருந்து குடோனுக்கும், குடோனில் இருந்து லாரிகளுக்கும் மூட்டைகள்
ஏற்றி இறக்கி உடம்பு முழுக்க வலி எடுத்தது. பல்லைக் கடித்து, மூச்சுக் கட்டி மூட்டைகள்
இறக்கிவிட்டு ஆசுவாசமடைந்தான்.
ஞாயிற்றுக்கிழமையில்
விடிந்து நெடுநேரம் -தூங்குகிற முத்துக்கண்ணு எழுந்ததும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க
வைத்தாள் அம்மா. அவனுக்குப் பிடித்தமான நெத்திலி மீன் குழம்பு வைத்துச் சோறாக்கிப்
போட்டாள்.
சாப்பிட்டதும்
முன்புபோல ஆடப் போகாமல் திண்ணையிலேயே சுருண்டு படுத்தான் முத்துக்கண்ணு. வலியின் அசதியில்
படுத்ததும் -தூங்கிவிட்டான். குறட்டைச் சத்தம் சுவரில் மோதியது. எல்லாப் பிள்ளைகளையும் உப்பு மூட்டை ஆட்டம் ஆடுவதற்காகத்
திரட்டிக்கொண்டு வந்த குட்டிப்பாப்பா முத்துக்கண்ணுவை எழுப்ப மிகவும் முயற்சி செய்தாள்.
ம்...ம்... என்ற குரல் எழுப்பியவன் கண்ணைத் திறக்காமலேயே -தூங்கினான். பிள்ளைகள் சத்தம்
கேட்டு அம்மா வந்து எல்லாரையும் விரட்டினாள். அழுகிற குட்டிப்பாப்பாவைத் --தூக்கிக்கொண்டு
உள்ளே போனாள்.
மீண்டும்
பிள்ளைகள் கூடி உப்பு மாமாவைச் சுற்றி நின்றன. ‘‘மாமா, மாமா, எட்டணாவுக்கு உப்பு குடு
மாமா’’ என்ற
குரல் தொண்டையை விட்டுப் புறப்பட முனைவதும், அடங்குவதுமாய் இருந்தது. நடப்பது எதையும்
அறியாத களைப்பில் -தூங்கிக் கொண்டிருந்தான் முத்துக்கண்ணு.
(இந்தியா டுடே - ஏப்ரல் 1993)