Home

Saturday, 11 October 2025

பேராசையின் அழிவுப்பாதை

  

திருஞானசம்பந்தரின் திருவாலவாய்ப் பதிகத்தில் சமணர்களின் மூன்று நூல்களைப்பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. அவற்றின் பெயர்கள் எலிவிருத்தம், கிளிவிருத்தம், நரிவிருத்தம் ஆகும். கால ஓட்டத்தில் எலிவிருத்தமும் கிளிவிருத்தமும் காணாமல் போயின. எஞ்சியிருப்பது நரிவிருத்தம் மட்டுமே.

இது சீவக சிந்தாமணியை எழுதிய திருத்தக்கத் தேவரால் எழுதப்பட்டது. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அப்பாடல்களைப் பதம் பிரித்து தகுந்த உரையுடன் முதன்முதலாக மு.ராகவையங்கார் வெளியிட்டார். இப்போது விரிவான உரையுடன் எழுத்தாளர் வளவ.துரையன் வெளியிட்டிருக்கிறார்.

நரிவிருத்தம் எதற்காக எழுதப்பட்டது என்பதைப்பற்றி சுவாரசியமான ஒரு கதை இருக்கிறது. திருத்தக்கத் தேவர் தன் ஆசிரியருடன் மதுரையில் வாழ்ந்துவந்த காலத்தில் புலவர்களிடையில் ஒரு விவாதம் எழுந்தது. சமணர்களுக்குத் துறவைப்பற்றி மட்டுமே பாடமுடியுமே தவிர சிற்றின்பச்சுவையுடன் கூடிய பாடல்களைப் பாடமுடியாது என்று ஒருவகையான ஏளனக்குறிப்புடன் ஒரு புலவர் அவ்விதாதத்தைத் தொடங்கிவைத்தார். அப்போது அங்கிருந்த திருத்தக்கத் தேவர் சமணர்கள் சிற்றின்பத்தை ஒதுக்கி வெறுத்தனரே அன்றி, அதைப்பற்றிப் பாடத் தெரியாதவர்கள் அல்லர் என்று குறிப்பிட்டார். உடனே அந்தப் புலவர் ‘அப்படி என்றால் சிற்றின்பச் சுவை படர ஒரு காவியத்தை நீங்களே எழுதிக் காட்டுங்கள், பார்ப்போம்’ என்று குறிப்பிட்டு அவரைச் சவாலுக்கு இழுத்தார்.

திருத்தக்கத் தேவர் அன்றே தன் ஆசிரியரைச் சந்தித்து இத்தகவலைத் தெரிவித்தார். அந்த ஆசிரியர் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி தன் மாணவரின் திறமையை அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் செய்யவேண்டும் என்று நினைத்தார். அதனால் தமக்கு எதிரில் ஓடிக் கடந்துசென்ற ஒரு நரியைச் சுட்டிக் காட்டி ”இதைப்பற்றிப் பாடுக” என்று கூறினார். அவ்வாறே திருத்தக்கத்தேவர் நரிவிருத்தத்தில் அடங்கியுள்ள ஐம்பது பாடல்களைப் பாடினார். நரியைப்பற்றிய கதைகளுடன் பேராசைக்குப் பலியாகாமல் நிலையான தருமங்களைச் செய்து முக்தியடைவதற்குரிய வழிகளைத் தேடவேண்டும் என்பதுதான் அப்பாடல்களின் பொதுவான உள்ளடக்கம்.

வளவ.துரையன் ஒவ்வொரு பாட்டுக்கும் விரிவான வகையில் உரையெழுதியிருக்கிறார். தேவையான இடங்களில் பாட்டின் மறைபொருளையும் வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.  நரி நேரிடையாகவே ஒரு பாத்திரமாக இடம்பெற்றிருக்கும் பாடல்கள் சுவாரசியமாக இருக்கின்றன. 

தொடக்கப்பகுதியில் இடம்பெற்றிருக்கும் ஐந்து விருத்தங்களை ஒட்டுமொத்தமாகப் படித்து முடிக்கும்போது ஒரு சிறுகதையின் வெவ்வேறு பகுதிகளைப் படிப்பதுபோல உள்ளது. இறுதிப்பகுதியைப் படித்து முடித்ததும் முழுக்கதையும் புரிகிறது. ஒரு வேடன் வேட்டையாடுவதற்காகக் காட்டில் நடந்து செல்கிறான். வழியில் ஒரு பெரிய பாம்புப்புற்று இருக்கிறது. அவன் அதைக் கவனிக்கவில்லை. அதைக் கடக்கவிருந்த தருணத்தில் தொலைவில் தனித்திருக்கும் ஒரு யானையின் மீது அவன் கவனம் குவிந்திருக்கிறது. உடனே அந்த யானையை வீழ்த்தும் திட்டத்துடன் அதன் நெற்றியைக் குறிபார்த்து அம்பை எய்கிறான். அம்புபட்ட யானை சீற்றம் கொள்கிறது. அந்த வேடன் அடுத்த அம்பை எய்யாமல் தடுக்கும் நோக்கத்துடன் அவனை நோக்கி ஓடிவருகிறது. அவனுக்கருகில் இருந்த பாம்புப்புற்றின் மீது அதன் கால்கள் பதிகின்றன. ஆனால் ஏறிக் கடக்கமுடியவில்லை.  தடுமாறிச் சரிகிறது. அப்போது அம்பு பதிந்த யானையின் நெற்றி அப்புற்றின் மீது மோதுகிறது. புற்றுக்குள் பாய்ந்த அம்பின் காரணமாக புற்றிலிருந்து பாம்பு வெளியே வருகிறது. மறுகணமே புற்றுக்கு அருகில் நின்றிருந்த வேடனின் காலில் கொத்தி நஞ்சை இறக்கிவிடுகிறது. பாம்பின் மீது கோபம் கொண்ட வேடன் இறப்பதற்கு முன்பாக தன் இடுப்பிலிருந்த வாளை உருவி அந்தப் பாம்பை இரு துண்டாக வெட்டி வீழ்த்திவிட்டுச் சாய்கிறான்.

ஒரே நேரத்தில் யானை, பாம்பு, மனிதன் என மூன்று மரணங்கள். மூன்று உடல்களும் அருகருகில் விழுந்து கிடக்கின்றன. அப்போது தன் குகையில் பசியால் வாடிய நரியொன்று இரையைத் தேடி அந்தப் பக்கமாக வருகிறது. உயிரற்ற மூன்று உடல்களைப் பார்த்ததும் அதன் உள்ளத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டோடுகிறது. நாகத்தை ஒரே நாளில் சாப்பிட்டு முடிக்கலாம். மனிதனை மெல்ல மெல்ல ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம். யானையை ஆறு மாதங்கள் வரைக்கும் சாப்பிடலாம். இனி, ஆறு மாதங்களுக்கு உணவு தேடி அலையும் பிரச்சினையே இல்லை என மகிழ்ச்சியில் மிதக்கிறது.

அந்த மகிழ்ச்சியின் விளைவாக எந்த உணவை முதலில் சாப்பிடுவது என்பதை முடிவெடுக்க முடியாமல் நரி குழம்புகிறது. இறந்துபோன வேடன் வில்லில் பூட்டிய அம்பின் நுனி ஒரு உடலில் தைத்திருக்கிறது. அந்தப் புள்ளியிலிருந்து தொடங்கலாம் என நினைக்கு நரி அங்கு வாயை வைக்கிறது. அதே நேரத்தில் தெறித்து வெளிப்பட்ட அம்பு அதன் தொண்டையைக் கிழிக்க நரி மரணத்தைத் தழுவுகிறது. அளவு கடந்த பேராசைக்கு நரி தன் உயிரையே பலியாகக் கொடுத்துவிடுகிறது.

நரி தொடர்பான இன்னொரு சுவாரசியமான கதை வேறொரு விருத்தத்தில் இடம்பெற்றிருக்கிறது.

 

குடற்படும் முடையைக் கண்டு

குறுநரி தின்று மான்தேர்க்

கடற்படை இயக்கங் கண்டே

கள்ளத்தாற் கிடப்ப யாரும்

திடன்பகை யின்மை யாலே

செவிகொய்வான் வால்கொய் வானாய்

உடற்புறம் போர்த்த புன்தோல்

உரித்திட்டங் கொருவன் கொன்றான்

 

என்பதுதான் அப்பாடல். ஓரிடத்தில் ஒரு நரி தனக்கு இரையாகக் கிடைத்த குடல்மாமிசத்தைத் தின்றுகொண்டிருக்கிறது. அப்போது அந்தப் பாதையின் வழியாக ஒரு குதிரைப்படையோடும் தேர்ப்படையோடும் ஒரு சேனை செல்வதைப் பார்க்கிறது. எங்கோ அருகில் ஒரு போர் நிகழப் போகிறது, போர் முடிந்ததும் நமக்கு உண்பதற்கு ஏராளமாக உணவு கிடைக்கப்போகிறது என்று பகல்கனவு காண்கிறது. நாம் எங்கும் செல்லாமல் இங்கேயே இருந்தால் எல்லா உணவையும் நாமே தின்னலாம் என்று பேராசை கொள்கிறது. அங்குமிங்கும் அலைந்து திரிந்தால் நம்மைப் பார்ப்பவர்கள் இங்கிருந்து அடித்து விரட்டிவிடக் கூடும் என்பதால் இறந்துவிட்டதுபோல இங்கேயே எங்காவது விழுந்து கிடக்கலாம் என திட்டமிட்டு அங்கேயே ஒரு மரத்தடியில் படுத்துக் காத்திருக்கிறது.

ஆனால் அந்த நரி நினைத்தபடி அங்கே எந்தப் போரும் நிகழவில்லை. அந்தப் படை அப்படியே வேறொரு திசையில் சென்றுவிடுகிறது. அந்தச் சமயத்தில் அந்தப் பக்கமாக ஒரு வேடன் வருகிறான். விழுந்து கிடக்கும் நரியைப் பார்த்து வேட்டையாடப்பட்டு இறந்துகிடப்பதாக நினைத்துக்கொள்கிறான். எதற்காகவாவது பயன்படும் என நினைத்து அந்த நரியின் காதுகளையும் வாலையும் அறுத்துக்கொண்டு தோலையும் உரித்துக்கொண்டு சென்றுவிடுகிறான். மரணமடைந்ததுபோல நடித்த நரி உண்மையிலேயே மரணமடைந்துவிடுகிறது. இப்பாடலிலும் பேராசையால் ஏற்படும் இழப்பு முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இப்படி நரி ஒரு பாத்திரமாக நேரிடையாகவே இடம்பெற்றிருக்கும் பாடல்களோடு, நரியின் பேராசைக் குணத்தை மட்டுமே மையப்படுத்திய சில கதைகளின் விவரணைகளும் சில பாடல்களில் அமைந்துள்ளன.  எடுத்துக்காட்டாக, ’செல்லல் எய்திய செம்பொனின் இட்டிகை  புல்லிதாக் கொண்ட வாணிகன் போல்வரே’ என்கிற இரு வரிகள் ஒரு பெரிய கதையின் சாரத்தையே கொண்டிருக்கின்றன.

ஓர் ஊரில் ஒரு சிற்றரசன் ஒரு சமண ஆலயம் கட்டுகிறான். அந்தக் கட்டுமானத்தில் பொதுமக்களின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதற்காக, குடிமக்களிடமிருந்து செங்கற்களைத் தானமாகப் பெறுகிறான். பல ஊர்களிலிருந்து பலர் செங்கற்களைச் சுமந்து வந்து  அவனிடம் சேர்க்கிறார்கள். அவ்வகையில் செங்கற்களைச் சுமந்து வந்த ஒருவன் தன் பசியை ஆற்றிக்கொள்வதற்காக அந்த ஊரைச் சேர்ந்த ஒருவனிடம் உணவு கேட்கிறான்.

அவன் பெரிய கருமி. உணவுக்குப் பதிலாக என்ன கொடுப்பாய் என்று கேட்கிறான். அவன் தன்னிடம் இருக்கும் செங்கற்களில் சிலவற்றைக் கொடுப்பதாகக் கூறுகிறான். கருமி செங்கற்களைப் பெற்றுக்கொண்டு அவனுக்கு உணவளித்து அனுப்பிவைக்கிறான். அவன் புறப்பட்டுச் சென்றபிறகு செங்கற்களை வீட்டுக்குள் எடுத்துச் சென்று அடுக்குகிறான் கருமி. அப்போது ஒரு செங்கல் கீழே விழுந்து உடைந்த துண்டாகிறது. உடைந்த கல்லிலிருந்து ஒரு சிறு  தங்கத்துண்டு சிதறி விழுகிறது. தங்கத்தைக் கண்டு அவன் கண்கள் விரிகின்றன. அதனால் மேன்மேலும் செங்கற்களை வாங்கிக் குவிக்கவேண்டும் என்கிற ஆசை எழுகிறது.

இப்படியே தினந்தோறும் வாங்கிய செங்கற்களை வீட்டில் அடுக்கிவைக்கிறான். ஏராளமாக வாங்கிச் சேர்த்து, கடைசியாக எல்லாவற்றையும் உடைத்து தங்கத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று திட்டமிடுகிறான். ஒருநாள் அவனுக்கு வெளியூர் செல்லவேண்டிய ஒரு நெருக்கடி ஏற்படுகிறது. செங்கல் வாங்கும் வேலை நின்றுவிடக் கூடாது என்பதற்காக மகனிடம் அந்த வேலையை ஒப்படைத்துவிட்டுச் செல்கிறான். விளையாட்டுப் புத்தி கொண்ட அவன் மகன் அந்தச் செயலை மறந்துவிடுகிறான். இரண்டு நாள் கழித்து வீடு திரும்பிய கருமி தன் மகன் தான் சொன்னபடி செய்யவில்லை என்பதை அறிந்து சினம் கொண்டு அவனை அடித்து கைகளையும் கால்களையும் உடைத்துவிடுகிறான். மனித மனம் கொள்ளும் பேராசை அவனை இழுத்துச் செல்லும் எல்லை கலவரம் கொள்ள வைக்கிறது.

நிலையற்ற உலக வாழ்க்கையை நிலையானது என நம்பி, பேராசை கொள்வது எப்போதும் இழப்புக்கும் அழிவுக்கும் மட்டுமே வழிவகுக்கும்.  ஆகவே அந்த வழியில் செல்லாது தருமங்களைச் செய்து முக்தியடைவதற்குரிய வழியில் மனித வாழ்க்கை அமையவேண்டும் என்பதுதான் நரிவிருத்தத்தில் அடங்கியுள்ள எல்லாப் பாடல்களின் மையமான கருத்து. ஆயினும் ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு விதமாகவும் விதவிதமான கதைகளை எடுத்துக்காட்டாகக் காட்டியும் எழுதியுள்ள விதத்தில் நரிவிருத்தம் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்றும் வாசிப்பதற்கு நெருக்கமாக உள்ளன. எண்ணற்ற கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிப் பழகிய வளவ.துரையனின் படைப்பு மொழியின் ஆற்றல், பொது வாசகர்களின் வாசிப்புக்கு ஏற்றவண்ணம் நரிவிருத்தத்துக்கு எழுதிய உரையிலும் வெளிப்படுகிறது.

 

(நரிவிருத்தம். வளவ.துரையன். குவிகம் பதிப்பகம். 99, செளபாக்கிய காலனி, அண்ணா சாலை, கே.கே.நகர்., சென்னை -78. விலை. ரூ.50)

 

(புக் டே – இணைய தளம் – 05.10.2025)