Home

Sunday, 19 October 2025

கடல் கடந்த வாழ்வும் இலக்கிய ஆர்வமும்

 

தமிழின் தொன்மைநூலான தொல்காப்பியத்தை இலக்கணம் சார்ந்த நூலாக மட்டுமே சுருக்கிப் பார்க்கிற ஒரு பார்வை இன்றைய இளைஞர்களிடையில் வளர்ந்து நிற்கிறது. ஆனால் அது மிகமுக்கியமான வாழ்வியல் நூல் என்பதையும் அது எழுதப்பட்ட காலத்திலிருந்து பல தலைமுறையினரைக் கடந்து பலராலும் படிக்கப்பட்ட நூல் என்பதையும் பலர் மறந்துவிடுகின்றனர். ஆயினும் தமிழின் நல்லூழாக, தொல்காப்பியத்தை மறக்காதவர்களாகவும் அதை வாழ்வியல் நெறிநூலாக நினைப்பவர்களும் இன்றும் பலர் நம்மிடையில் வாழ்ந்துவருகின்றனர். அத்தகையோர் தொல்காப்பியத்தை ஆர்வத்தோடு மீண்டும் மீண்டும் விரும்பிப் படிப்பது மட்டுமன்றி, தேடி வருபவர்களுக்கு கற்பிக்கவும் செய்கின்றனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த ஆய்வாளரான மு.இளங்கோவன் தொல்காப்பியத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் பேராசிரியர். தற்செயலாகத் தமக்குப் பார்க்கக் கிடைத்த ‘தொல்காப்பியம்: மக்கள் வாழ்வின் இலக்கணம்’ என்னும் நூலின் வழியாக, அதன் ஆசிரியரான நெல்லை இரா.சண்முகம்  என்பவரைப்பற்றி அவர் தெரிந்துகொண்டார். அவரைப்பற்றிய விவரங்களைத் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டபோது அவர் நெல்லையைச் சேர்ந்தவர் என்பதும் வாழ்க்கைக்கான வழியைத் தேடி மலேசியாவுக்குச் சென்று சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அந்த வெளிச்சத்தைத் தொடர்ந்து மேலும் தேடுதலில் இறங்கிய போது, அவர் மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர் என்பதும் திரு.வி.க. அவர்களுடைய எழுத்துகளால் கவரப்பட்டு தமிழ்த்தொண்டுக்காக உழைக்க முன்வந்தவர் என்பதும் தொல்காப்பியத்தைத் தன் எழுத்தாலும் பேச்சாலும் பரப்பும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. இப்படி ஒவ்வொரு வாசலாகக் கடந்து சென்று தம் ஆய்வுக்குரிய தகவல்களைத் திரட்டி நூலாக்கியிருக்கிறார் இளங்கோவன்.

இரா.சண்முகம் அவர்களைப்பற்றிய தகவல்களைத் தொகுப்பதற்காக  மேற்கொண்ட பயணங்களைப்பற்றிய தகவல்களையும் சந்தித்த உறவினர்களைப்பற்றிய விவரணைகளையும் ஒரு புனைகதைக்கே உரிய விறுவிறுப்போடு எழுதியிருக்கிறார் இளங்கோவன். ஒவ்வொரு சந்திப்பும் அவருக்கு ஒரு புதிய தகவலை ஈட்டிக் கொடுக்கிறது.   இன்னொரு புதிய தகவலையொட்டித் தேடிச் செல்லும் பயணத்துக்கும் வழிவகுக்கிறது.

மு.இளங்கோவனின் ஆய்வுப்பயணத்தில் அவர் கண்டெடுத்த முக்கியமான புத்தகம், இரா.சண்முகம் எழுதி 1961ஆம் ஆண்டில் வெளிவந்த ‘தொல்காப்பியரின் தொன்மைத் தமிழ் நெறி’ என்னும் புத்தகம். இப்புத்தகத்துக்கு அவர் எழுதியிருக்கும் விரிவான முன்னுரைப்பகுதியின் தன்னுடைய வாழ்க்கைச்செய்திகளைச் சுருக்கமாகப் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார் இளங்கோவன். அந்நூலில் சண்முகம் அவர்களுடைய ஒவ்வொரு கட்டுரையும் தொல்காப்பியச் செய்திகளை விளக்குவதாகவும் தொல்காப்பியரின் காலம் குறித்த அறிஞர்களின் கருத்துகளைத் தொகுத்து முன்வைப்பதாகவும் பதிவு செய்திருக்கும் இளங்கோவன், அந்நூலில் படித்த முக்கியமானதொரு வரலாற்றுச் செய்தியை வாசகர்களுடன் பகிர்ந்திருக்கிறார்.

கடந்த நூற்றாண்டில் முப்பதுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மறைமலையடிகளார் எழுதிய ‘அறிவுரைக்கொத்து’ என்னும் புத்தகம் கல்வி நிறுவனங்களில்  பாடநூலாக இருந்தது. அந்நூலில் தொல்காப்பியம் பற்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரை இடம்பெற்றிருந்தது. அக்கட்டுரையில் தொல்காப்பியரின் நூற்பா ஒன்றை மறைமலையடிகள் மேற்கோளாக எடுத்துக் காட்டியிருந்தார்.

 

’பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப’

 

என்பதுதான் அந்த நூற்பா. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ’ஐயர்’ என்னும் சொல் தமிழ்நிலத்தில் குறிப்பிட்ட ஒரு சாதியினரைக் குறிப்பது என்றும் அதனால் இந்த நூலை பாடத்திட்டத்திலிருந்து விலக்கவேண்டும் என்று கோரி நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதி மன்றம் அவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்தச் சொல்லின் உண்மைப்பொருளை அறிந்துகொள்ளும் முயற்சியாக நீதியரசர் பல சான்றோர்களை அழைத்து அவர்களுடைய கூற்றைப் பதிவு செய்யத் தொடங்கினார். அவ்விதமாக நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் இராஜாஜி. அவர் நீதிமன்றத்துக்குச் சென்று, பழந்தமிழ் ஆராய்ச்சியில் தனக்கு ஈடுபாடு இல்லையென்றும் இத்துறையில் தன்னைவிட பல மடங்கு மொழியனுபவத்தில் வல்லவரான திரு.வி.க.வே இதையொட்டிக் கருத்துரைக்க வல்லவர் என்றும் தெரிவித்தார். அதனால் நீதிமன்றத்துக்கு திரு.வி.க. அழைக்கப்பட்டார்.

திரு.வி.க.வும் நீதிமன்றத்துக்கு வந்தார். நூற்பாவில் குறிப்பிடப்படும் ஐயர் என்னும் சொல்லுக்கும் ஒரு சாதிப்பிரிவைச் சுட்டும் சொல்லுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார் திருவி.க. . ஒரு சமூகத்தில் சிறப்புற்ற பெரியோர்களையும் ஒரு குடும்பத்தில் உள்ள மூத்தோரையும் ஐயர் என்று குறிப்பிடுவது அக்காலத் தமிழ்வழக்கு என்றும் தெளிவுபடுத்தினார். தலைவனும் தலைவியும் தத்தம் விருப்பப்படி செய்துகொண்ட திருமணமுறைகளில் எதிர்பாராத சிக்கல்கள் உருவாகத் தொடங்கிய காரணத்தால், சமூகத்தைச் சேர்ந்த பெரியோர்களின் முன்னிலையில் நிகழும் திருமண முறை தோன்றிய காலகட்டத்தை அந்த நூற்பா சுட்டிக்காட்டுகிறது என்றும் எடுத்துரைத்தார். திரு.வி.க.வின் கூற்றைப் பதிவு செய்துகொண்ட நீதியரசர் அவ்வழக்கை அத்துடன் நிறைவு செய்துவிட்டார். 

தொல்காப்பியரின் தொன்மைத்தமிழ்நெறி, தொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம், தொல்காப்பியர்: பொருளுக்கு இலக்கணம் வகுத்த தமிழ்ப்பெரியார் என தொல்காப்பியத்தின் சிறப்புகளை முன்வைக்கும் நூல்களை மட்டுமன்றி வேறு சில புத்தகங்களையும் இரா.சண்முகம் எழுதியிருக்கிறார். அவற்றில் ‘தாயின் திருவடியில் தலைசாய்ந்தார் பண்டிதர்’, ‘காந்தியடிகளும் நாகரிகமும் அல்லது உலக அமைதிக்கு வழி’ ஆகிய இரு நூல்களும் மிகமுக்கியமானவை.

கே.ஏ.பண்டிதர் முடிதிருத்தும் தொழிலாளி. முசிறியை அடுத்துள்ள கோணற்பாதை என்னும் கிராமத்தில் 1900ஆம் ஆண்டில் பிறந்தவர். இளமைக்காலத்தில் இலங்கையின் கண்டி நகருக்குச் சென்று கணபதி வைத்தியர் என்பவரின் ஆதரவில் சிறிது காலம் தங்கியிருந்தார். அப்போது அங்கு தேசபக்தன் என்னும் இதழ் அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்டு வந்தது. பண்டிதரும் அந்த இதழைப் படித்து தன் சிந்தனையை வளப்படுத்திக்கொண்டார். பிறகு அங்கிருந்து பினாங்குக்குச் சென்று சொக்கலிங்கம் என்பவர் நடத்திவந்த முடிதிருத்தகத்தில் வேலைக்குச் சேர்ந்து  தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

கே.ஏ.பண்டிதர் துணிவும் நெஞ்சுரமும் கொண்டவர். யாருக்கும் அஞ்சாதவர். தம்மைப்போல முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களை முதன்முதலாக ஒன்றிணத்து ‘மருத்துவர் சங்கம்’ என்னும் பெயரில் ஒரு சங்கத்தை நிறுவி அவர்களுக்குப் பாதுகாவலராக விளங்கினார். அவர் பெற்றிருந்த கல்வியறிவும் அநீதிக்கு எதிராகக் குரல்கொடுக்கும் மன உறுதியும் மலேசிய மண்ணில் அவரை ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமையாக மலரவைத்தது.

ஈ.வே.ரா. அவர்கள் 1929ஆம் ஆண்டில் முதல் முறையாகவும் 1954ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும் பினாங்குக்குச் சென்றார். அவருடைய இரு வருகைகளின்போதும் பண்டிதர் அவர்களே அவரை வரவேற்று அப்பயணம் முழுதும் உற்ற துணையாக விளங்கினார். அவரோடு நெருங்கிப் பழகியவர்களில் இரா.சண்முகம் அவர்களும் ஒருவர்.

சங்கச் செயல்பாடுகளுக்கு அப்பால், இரா.சண்முகம் போலவே எழுத்தாளராகவும் விளங்கினார் பண்டிதர். சுவர்க்கத்தில் மகாத்மா, மகாத்மாவின் மரணச்சித்திரம், ஒளி உலகம் அல்லது உலகநாதன் கனவின் பலன், உலக மிருக மகாயுத்தம் என பல நூல்களை எழுதி வெளியிட்டார் பண்டிதர். 1959ஆம் ஆண்டில் அவர் மறைந்த பிறகு  ’தாயின் திருவடியில் தலைசாய்ந்தார் பண்டிதர்’ என்னும் தலைப்பில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஏறத்தாழ 80 பக்க அளவில் இரா. சண்முகம் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்.

கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்நேசன் இதழுக்காக இரா.சண்முகம் ‘காந்தியடிகளும் நாகரிகமும் அல்லது உலக அமைதிக்கு வழி’ என்னும் தலைப்பில் முதலில் கட்டுரையாகவே 23.01.1948 அன்று எழுதிக் கொடுத்திருக்கிறார். எதிர்பாராத விதமாக காந்தியடிகள் 30.01.1948 அன்று கொல்லப்பட்டதும், அக்கட்டுரையை நூலாக விரித்தெழுத விரும்பி பத்திரிகையிலிருந்து திரும்பப் பெற்றுக்கொண்டார் சண்முகம். பிறகு நன்றாகத் திட்டமிட்டு விரிவான தகவல்களோடு நூலாக எழுதி வெளியிட்டார்.

அந்நூலில் நாகரிகம் என்னும் சொல்லுக்கான வரையறையை பல்வேறு எடுத்துக்காட்டுகளோடு தொகுத்து முதல் பகுதியாகவும் காந்தியடிகள் மானுட வாழ்க்கை குறித்து பல்வேறு காலகட்டங்களில் வெளிப்படுத்திய கருத்துகளைத் தொகுத்து இரண்டாம் பகுதியாகவும் அவரைப்பற்றி நம் நாட்டின் பிற தலைவர்களும் பிற நாட்டின் தலைவர்களும் உரைத்த சொற்களைத் தொகுத்து மூன்றாம் பகுதியாகவும் அமைத்து நூலை முழுமைப்படுத்தினார். சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் காந்தியடிகளின் 75வது பிறந்தநாள் குறித்து ஆஜாத் ஹிந்த் என்னும் பத்திரிகை நிரூபருக்கு அளித்த பேட்டியையும் இந்நூலுடன் சண்முகம் இணைத்துக்கொண்டார்.

இந்நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ள இரு பகுதிகள் மிகமுக்கியமானவை. இந்தப் புத்தகத்துக்குப் பெருமை சேர்ப்பவை என்றும் சொல்லலாம். மூன்று பக்க அளவில் ஆண்டுவாரியாக முக்கியமான வாழ்க்கைத் தருணங்களைப் பட்டியலிட்டு ’தொல்காப்பியத்தொண்டர் நெல்லை இரா.சண்முகம் வாழ்க்கைச்சுருக்கம்’ என்னும் தலைப்பில் அழகாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பகுதி. இரா.சண்முகம் அவர்களுடைய நிழற்படங்களையும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் படங்களையும் கொடிவழியினரின் படங்களையும் அவர் எழுதிய புத்தகங்களின் அட்டைப்படங்களையும் கையெழுத்துப் பிரதிகளின் ஒளிப்படங்களையும் ஆய்வாளரான இளங்கோவன் அரிதின் முயன்று தேடிக் கண்டடைந்து, அவற்றையெல்லாம் செறிவுறத் தொகுத்து ஏறத்தாழ முப்பத்தைந்து பக்க அளவில் இந்நூலின் பின்னிணைப்பாக அளித்துள்ளார். அது இரண்டாவது பகுதி.

இந்தப் புத்தகம் வழியாக, இரா.சண்முகம் அவர்களைக் கண்டுபிடித்து, மறந்துபோயிருந்த நம் தமிழ்ச்சமூகத்தின் முன் மீண்டும் நிறுத்தியிருக்கிறார் ஆய்வாளர் மு.இளங்கோவன். அவருடைய முயற்சிக்கு தமிழ்ச்சமூகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

 

(தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா.சண்முகம் (கோலாலம்பூர்) – முனைவர் மு.இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல், கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம்- 612901. விலை. ரூ.200)

(புக் டே – இணையதளம் – 01.10.2025)