Home

Showing posts with label மு.இளங்கோவன். Show all posts
Showing posts with label மு.இளங்கோவன். Show all posts

Monday, 12 January 2026

நன்றிக்கடன்

 

தமிழ் மொழியில் வற்றாத படைப்பூக்கத்துடன் எழுதப்பட்டிருக்கும் சங்க இலக்கியம், இலக்கண நூல்கள், காப்பியங்கள், நவீன கவிதை, உரைநடை, ஆய்வு என விரிந்துகிடக்கும் பல்வேறு துறைகளைக் கற்றுத் தேர்ந்து,  அவற்றில் தனக்குகந்த களத்தைத் தேர்ந்தெடுத்து அதன் வழியாக தன் முழு ஆற்றலை வெளிப்படுத்தும் படைப்பாளர்கள் பலர் நம் சூழலில் அன்றும் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அது ஒரு வகையான தமிழ்த்தொண்டு. சங்ககாலம் முதல் எழுதப்பட்ட படைப்புகளையெல்லாம் தன் சமகாலத்தில் வாழும் மக்களிடையில் அறிமுகப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக அறிமுகக்கட்டுரைகள் எழுதியும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியும் பரப்பிவந்த ஆளுமைகளும் அன்றும் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அது இன்னொரு வகையான தமிழ்த்தொண்டு.

Sunday, 19 October 2025

கடல் கடந்த வாழ்வும் இலக்கிய ஆர்வமும்

 

தமிழின் தொன்மைநூலான தொல்காப்பியத்தை இலக்கணம் சார்ந்த நூலாக மட்டுமே சுருக்கிப் பார்க்கிற ஒரு பார்வை இன்றைய இளைஞர்களிடையில் வளர்ந்து நிற்கிறது. ஆனால் அது மிகமுக்கியமான வாழ்வியல் நூல் என்பதையும் அது எழுதப்பட்ட காலத்திலிருந்து பல தலைமுறையினரைக் கடந்து பலராலும் படிக்கப்பட்ட நூல் என்பதையும் பலர் மறந்துவிடுகின்றனர். ஆயினும் தமிழின் நல்லூழாக, தொல்காப்பியத்தை மறக்காதவர்களாகவும் அதை வாழ்வியல் நெறிநூலாக நினைப்பவர்களும் இன்றும் பலர் நம்மிடையில் வாழ்ந்துவருகின்றனர். அத்தகையோர் தொல்காப்பியத்தை ஆர்வத்தோடு மீண்டும் மீண்டும் விரும்பிப் படிப்பது மட்டுமன்றி, தேடி வருபவர்களுக்கு கற்பிக்கவும் செய்கின்றனர்.

Sunday, 18 August 2024

அறிவுப்பெட்டகத்தின் வரலாறு

  

ஆற்றுப்படை இலக்கியம் என்பது தமிழ் இலக்கிய வகைகளுள் ஒன்று. ஆற்றுப்படை என்ற சொல்லுக்கு வழிகாட்டுதல் அல்லது வழிப்படுத்துதல் என்று பொருள். ஓர் அரசனையோ அல்லது வள்ளலையோ சந்தித்து தன் வறுமையைப் போக்கிக்கொள்ளும் விதமாக போதுமான செல்வத்தைப் பெற்றுவந்த ஒருவர் திரும்பி வரும் வழியில் சந்திக்க நேரும் கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலியோரிடம் அவருடைய சிறப்புகளையெல்லாம் எடுத்துரைத்து அவரிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை. பத்துப்பாட்டுத் தொகுப்பில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் உள்ளன. கால ஓட்டத்தில் மரபுவழிப்பாடல்கள் குறையக்குறைய, இந்த வகைமையிலான பாடல்களை எழுதுவதும் நின்றுவிட்டது.