பள்ளிக்கூட அனுபவமொன்று நினைவில் எழுகிறது. எங்கள் ஆசிரியர் ஒருமுறை எங்கள் ஊருக்கு அருகில் இருந்த வீடூர் அணைக்கட்டுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினார். கடல்போல தளும்பிய அந்தத் தண்ணீர்ப்பரப்பை அன்று ஆச்சரியத்தோடும் அச்சத்தோடும் மணிக்கணக்கில் வேடிக்கை பார்த்தோம். பொழுதுபோவது தெரியாமல் மாலை வரைக்கும் விளையாடிவிட்டு ஊருக்குத் திரும்பினோம்.
மறுநாள் காலையில் பள்ளிக்குச் சென்றதும் எங்கள் ஆசிரியர் அணைக்கட்டைப் பார்த்த அனுபவத்தை ஒரு பக்கத்தில் எழுதிக் கொடுக்கும்படி சொன்னார். நாங்கள் எல்லோருமே வேகவேகமாகவும் ஆர்வத்தோடும் எழுதிக் கொடுத்தோம். ஒவ்வொன்றையும் எங்கள் ஆசிரியர் வகுப்பிலேயே வாய்விட்டுப் படித்துக் காட்டிப் பாராட்டினார். ஒன்றுகூட இன்னொன்றைப்போல இல்லை. ஒரே அணைக்கட்டைப்பற்றி இத்தனை கோணங்களா என்று ஆச்சரியத்தில் மூழ்கினோம். அது அப்படித்தான் என்று சொன்னார் ஆசிரியர். ஒவ்வொருவருடைய கண்களும் ஒவ்வொன்றைக்
கவனிக்கின்றன என்று புன்னகையோடு சொன்னார். ஒவ்வொருவரிடமும் இருக்கும் தனிப்பட்ட
ஈடுபாடு, அழகுணர்ச்சி, கற்பனை, கவனிக்கும் திறம் சார்ந்து ஒருவருடைய பார்வை உருவாகி வளர்ந்து நிலைக்கிறது என்று விளக்கம் கொடுத்தார்.
காந்தியடிகள் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட கணத்திலிருந்து அவர் மறையும் கணம் வரைக்கும் அவர் மக்களுக்கு நடுவிலேயே வாழ்ந்தார். பலர் சூழ்ந்திருக்கும் நிலையிலேயே கட்டுரை எழுதுவது, கடிதம் எழுதுவது, நேர்காணல் அளிப்பது, நெருக்கமானவர்களின் ஐயங்களுக்கு விளக்கமளிப்பது, தொலைவிலிருந்து தேடி வரும் தொண்டர்களைச் சந்திப்பது, நடைப்பயிற்சி செல்வது என பல அலுவலகளில் அவர் ஈடுபட்டார். எண்ணற்ற பறவைகளுக்கும் மனிதர்களுக்கும்
இடையில் விழுதுவிட்டு நிற்கிற ஆலமரம்போல அவர் வாழ்ந்தார். காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு அத்தகு நேரடி அனுபவங்களை அவர்களில் சிலர் எழுதி வெளியிட்டனர். காகா காலேல்கர், விஷ்ணு பிரபாகர், சுசிலா நய்யார், நேரு,
மனு பென் போன்றோரை உள்ளிட்ட அந்த வரிசை மிக நீண்டது. குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட சாந்திகுமார் அவர்களில் ஒருவர். இளமைக்காலத்திலிருந்தே காந்தியடிகளுடன் பழகி வந்தவர் சாந்திகுமார். ஆங்கிலேயரின் காலத்தில்
கப்பல் தொழிலில் ஈடுபட்ட நாரோத்தம் மொரார்ஜி என்னும் தொழிலதிபரின் மகன்.
காந்தியடிகள் வலியுறுத்தும் நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை
பின்பற்ற முடியாதவராக இருந்தார் சாந்திகுமார். அதனாலேயே மற்றவர்கள் அனைவரும் தம் குறிப்புகள் சார்ந்து நூல்களை எழுதியபோதும் அவர் அமைதியாகவே ஒதுங்கியிருந்தார். ஆனால் காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு பலர் வலியுறுத்தியபோதும் அவர் நூலெழுதும் முயற்சியில் ஈடுபடவில்லை. காந்தியடிகளை ‘சத்திய சோதனை’
எழுதத் தூண்டிய குஜராத்தி எழுத்தாளரான ஸ்வாமி ஆனந்த் சாந்திகுமாரைச் சந்திக்கும் ஒவ்வொரு
முறையும் காந்தி நினைவுகளை எழுதும்படி சொல்லிக்கொண்டே இருந்தார். அப்போதும் அந்த முயற்சியில்
இறங்க நாட்டமில்லாதவராகவே இருந்தார் சாந்திகுமார். தற்செயலாக ஐம்பதுகளின் இறுதியில் ஒருமுறை சிறுநீர்ப்பாதைச் சுரப்பியில் ஏற்பட்ட ஒரு சிக்கலுக்கான சிகிச்சைக்காக ஸ்வாமி ஆனந்த் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பம்பாயில் தங்கியிருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அவரை நலம் விசாரிப்பதற்காகச்
சென்ற சாந்திகுமாரும் ஆனந்தும் தினந்தோறும் சந்தித்து இரண்டுமணி நேரம் பேசிக்கொண்டார்கள். அச்சமயத்தில் சாந்திகுமார் காந்தியடிகள் தொடர்பான பழைய அனுபவங்களை ஒவ்வொரு
நாளும் தம் நினைவிலிருந்து
பகிர்ந்துகொண்டார். சாந்திகுமார் புறப்பட்டுச் சென்றபிறகு ஆனந்த் அவற்றை எழுதி வந்தார். பிறகு அவரே அவற்றை காலவரிசையில் அடுக்கித் தொகுத்தார். குஜராத்தி இதழான சம்ஸ்கிருதியில் அது
நீண்ட காலம் தொடராக வெளிவந்து 02.10.1963 அன்று நூலாக வெளிவந்தது. அடுத்த மூன்றாண்டுகளுக்குள் அந்தப் புத்தகம் குஜராத்தி மொழியிலிருந்து நேரடியாகவே தமிழில் ஹரிஹர சர்மாவால் மொழிபெயர்க்கப்பட்டு காமராஜர் முன்னுரையோடு கலைமகள் காரியாலயம் வெளியிட்டது.
தனக்கு பதினேழு வயது நடக்கும்போது நடைபெற்ற நிகழ்ச்சியிலிருந்து தொடங்குகிறார் சாந்திகுமார். அது 1919ஆம் ஆண்டு. மேற்படிப்புக்காக அவர்
வெளிநாட்டுக்குப் புறப்படும் நாள். சாந்திகுமாரின் தந்தையார் நாரோத்தம்
மொரார்ஜி காந்தியடிகளின்
நண்பர். தன் நண்பரின் மகனை வாழ்த்தியனுப்பவேண்டும்
என்பது காந்தியடிகளின் விருப்பம். அதனால் அன்றைய வேலைகள்
அனைத்தையும் முடித்துவிட்டு நண்பரைச் சந்திப்பதற்காக வந்தார் காந்தியடிகள். சாந்திகுமார் அவருடைய காலில் விழுந்து வணங்கினார். “நல்லபடி படிப்பை முடித்து வெற்றிகரமான வழக்கறிஞராகத் திரும்பவேண்டும்” என்று ஆசி வழங்குகிறார் காந்தியடிகள். மறுநாள் ஏப்ரல் ஐந்தாம் தேதி. ரெளலட் சட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கவிருந்த நேரம். நெருக்கடியான அந்த நேரத்திலும் கூட,
தன் மகனை வாழ்த்துவதற்காக ஓடோடி வந்த காந்தியடிகளின் நேசத்தைக் கண்டு நெகிழ்ந்தார் சாந்திகுமாரின் தந்தை.
ஒருமுறை ரேவாசங்கர் என்னும் தொண்டரின் மகன் உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாக இருக்கிறான். அவருடைய வீடு போரீவ்லி என்னும் இடத்தில் உள்ளது. மாலைப் பிரார்த்தனை முடிந்த பிறகு போரீவ்லிக்குச் சென்று நலம்
விசாரித்துவிட்டுத் திரும்பலாம் என்று
நினைத்திருந்தார்
அவர். ஆனால் திட்டமிட்டபடி புறப்பட முடியவில்லை. தென்னாப்பிரிக்காவிலிருந்து எதிர்பாராமல் வந்துவிட்ட நண்பர் குழுவைச் சந்திக்கவேண்டியிருந்தது. அச்சந்திப்பு இரவு
பத்துமணி வரைக்கும் நீண்டுவிட்டது. ஆனாலும் திட்டமிட்ட செயல் திட்டமிட்டபடி நடக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த காந்தியடிகள் போரீவ்லிக்கு
புறப்படத் தயாராகிறார். தன் வாகனத்தில் சாந்திகுமார் அவரை
அழைத்துக்கொண்டு செல்கிறார். ஒருமணி நேரப் பயணத்துக்குப்
பிறகு அவர்கள் ரேவாசங்கர்
வீட்டை அடைந்தனர். உடநலம் இல்லாத மகனைச் சந்தித்து
விசாரித்த பிறகு, அவனிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். குடும்பத்தினரிடமும்
உரையாடிவிட்டு அங்கிருந்து
புறப்படும்போது நேரம்
நள்ளிரவைக் கடந்துவிட்டது. தங்குமிடத்தை நெருங்கும்போது இரண்டாகிவிட்டது. அன்று மாலை அவர்
நடைப்பயிற்சிக்குச் செல்லவில்லை என்பதால், அந்நேரத்தில் வர்லி கடற்கரை வந்ததுமே வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கிக்கொண்டார் காந்தியடிகள். அரைமணி நேரம் நடந்து நள்ளிரவுக்குப் பிறகு நடைப்பயிற்சியை முழுமை செய்தார். வீட்டுக்குச் சென்று படுக்கும்போது மூன்று மணி. ஒருமணி நேரம் மட்டுமே உறங்கி மறுநாள் நான்குமணிக்கு எழுந்து தினசரி வேலையைத் தொடங்கிவிட்டார்.
ஒருமுறை காந்தியடிகள் சிறையில் இருக்கும்போது தாம்ஸன் எழுதிய HOUND OF HEAVEN என்னும் புத்தகத்தைப் படிக்க விரும்புகிறார். சாந்திகுமாருக்கு அச்செய்தி
கிடைக்கிறது. ஆனால்
பம்பாயில் எந்தப் புத்தகக்கடையிலும் அந்தப் புத்தகம்
கிடைக்கவில்லை. எங்காவது நூலகத்திலோ அல்லது நண்பர்களிடமோ கிடைக்கலாம் என்று தேடத் தொடங்குகிறார் சாந்திகுமார். நீண்டகாலத் தேடலுக்குப் பிறகு ஒரு நண்பரிடம் இருப்பதை அறிந்து சந்தித்து பெற்றுக்கொள்கிறார். பிறகு அதை உடனடியாக சிறையிலிருக்கும் காந்தியடிகளுக்கு அனுப்பிவைக்கிறார். அது
ஒரு கவிதை நூல். பாவங்களிலேயே மூழ்கிக் கிடக்கும் ஒருவனுக்கு ஏற்படும் இறையனுபவத்தையும் அதனால் நிகழும் மாற்றங்களையும் மையமாகக் கொண்ட நீள்கவிதை அது. காந்தியடிகள் அதை மிகவும் விரும்பிப் படிக்கிறார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் அந்த நீள்கவிதைக்கு எளிய விளக்கங்களை ஆங்கிலத்தில் எழுதி ஒரு நூலாகக் கொண்டுவரும் பொறுப்பை ராஜாஜியிடம் ஒப்படைக்கிறார். அவர் விரும்பியபடியே கவிதைக்கு எளிய உரையும் முன்னுரையும் எழுதி நூலாக வெளியிடுகிறார் இராஜாஜி.
பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் காந்தியடிகளைச் சந்திக்க வந்த ஒரு தருணம் இந்நூலில் விவரிக்கப்படுகிறது. பம்பாயில் கிர்காம், தேத்வாடி, கிராண்ட்ரோடு பகுதிகள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மிகுந்த அளவில் வசிக்குமிடங்களாகும். பெரும்பாலானோர் கோவாவிலிருந்து குடியேறியவர்கள் என்பதால் பொதுவாக இவர்களை கோவாவாலிகள் என்று குறிப்பிடுவது வழக்கம். இவர்களில் ஒரு பகுதியினர் ஒருமுறை காந்தியடிகளைச் சந்திப்பதற்காக அவர் தங்கியிருக்கும் இடத்துக்கு வருகிறார்கள். எந்த வேறுபாடும் இல்லாது காந்தியடிகள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறார். அக்குழுவின் தலைவியாக இருப்பவரை தான் அமர்ந்திருக்கும் மெத்தையிலேயே தனக்கு எதிரில் அமரும்படி கேட்டுக்கொள்கிறார். நீண்ட நேரம் அவர்களோடு மதிப்புடன் உரையாடுகிறார். அவர்கள் ஈடுபட்டிருக்கும் தொழில் அறமற்ற ஒன்று என்பதால் அதை விட்டொழித்துவிடும்படி மன்றாடிக்
கேட்டுக்கொள்கிறார். நீண்ட நேர உரையாடலுக்குப் பிறகு அவர்கள் அவரை
வணங்கிவிட்டு கலைந்துசெல்கிறார்கள்.
இத்தொகுப்பில், ஆகாகான் மாளிகைச்
சிறைவளாகத்தில் கஸ்தூர்பா எரியூட்டப்பட்ட நிகழ்ச்சி சாந்திகுமாரின் நினைவலை வழியாக உயிர்த்துடிப்புடன் விவரிக்கப்பட்டிருக்கிறது. முதலில்,
ராம்தாஸின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள். அவருடைய வருகை தாமதமானதால் விறகுகள் அடுக்கப்பட்டு சிதை தயாராகிறது. மற்றொரு மகனான தேவதாஸ் கொள்ளி வைக்கிறார். சிதை மெல்ல எரியத் தொடங்குகிறது. புகை மட்டும் அதிக அளவில் எழுகிறதே தவிர, எரிவதில் ஏதோ சிக்கல். சாந்திகுமார் அச்சிக்கலை உணர்ந்து சிதையை நெருங்கி, அடுக்கப்பட்ட விறகுகளை பல இடங்களில் தொட்டுத்தொட்டு
குலுக்குகிறார். அக்கணமே சிதை பற்றி எரியத் தொடங்குகிறது. காந்தியடிகள் அவரை ஆச்சரியத்துடன் பார்க்கிறார். ’உனக்கு எப்படி இந்த
நுட்பங்கள் தெரியும்?’ என்று கேட்கிறார். இளமையிலிருந்தே மரணம் விழுந்த
வீடுகளுக்கும் சுடுகாடுகளுக்கும் சென்று தேவைப்படுகிறவர்களுக்கு உதவும் வகையில் தம் அம்மாவும் பாட்டியும் அனுப்பிவைப்பார்கள் என்றும் எரியூட்டுகிறவர்களுக்குத் துணையாக இருப்பது தன் பழக்கமென்றும் எடுத்துரைக்கிறார் சாந்திகுமார். அவர்களுடைய செயல்பாடுகளைக்
கவனித்துத் தெரிந்துகொண்டதாகச் சொல்கிறார் சாந்திகுமார். மாலை மூன்று மணியளவில் சிதை எரிந்து தணிகிறது. அத்தருணத்தில்தான் ராம்தாஸ் வந்து சேர்கிறார். இதே சாந்திகுமார்தான் காந்தியடிகளின் இறுதி ஊர்வலத்தின்போதும் சடங்குச் செயல்களில் உதவி செய்தவர்.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் நகரங்களான நாகசாகி, ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியதால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். இதைத் தொடர்ந்து ஜப்பான் சரணடைய, போர் முடிவுறுகிறது. நேச நாடுகள் அந்த வெற்றியைக் கொண்டாடுகின்றன. இந்த வெற்றியை ஒட்டி காந்தியடிகளின் மனப்போக்கை உலகம் அறிந்துகொள்ளவேண்டும் என்னும் விருப்பத்தால் பத்திரிகைகளில் வெளியிடும் வகையில் ஓர் அறிக்கையை எழுதிக் கொடுக்கும்படி கேட்கிறார் சாந்திகுமார். காந்தியடிகளும் மிகச்சுருக்கமாக நாலைந்து வரிகளில் தன் எண்ணத்தை எழுதிக் கொடுக்கிறார். ஆனால் அதைப் பத்திரிகைகளில் வெளியிடவேண்டாம் என்று தடுத்துவிடுகிறார் இராஜாஜி. அயல்நாட்டு மக்கள் காந்தியடிகளின் எண்ணத்தை அறிந்துகொள்ள அந்த அறிக்கை ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் உண்மையுண்டென்றாலும், இந்தியாவில்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்களை விடுதலை செய்ய அரசு முன்வந்திருக்கும் சமயத்தில் அந்த அறிக்கையால் ஆபத்து வரக்கூடும் என்று அச்சத்தைத் தெரிவிக்கிறார் அவர். முடிவில் அந்த அறிக்கை ஆசிரமத்திலேயே தங்கிவிடுகிறது. காந்தியடிகளின் அனுமதியைப் பெற்று, அந்த அறிக்கையைப் பார்த்து ஒரு குறிப்பாக எழுதிவைத்துக்கொள்கிறார் சாந்திகுமார்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள அக்குறிப்பு காந்தியடிகளின் மன ஒட்டத்தைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. ’நேச நாடுகள் தம் வெற்றியைக் கொண்டாடும் இத்தருணத்தில், ஆயுதம் ஆயுதத்தை வென்றதா, உண்மை பொய்யை வென்றதா, மக்களாட்சி சுயநல ஏகாதிபத்தியத்தை வென்றதா என்று
கேள்வி கேட்கவே நான் விரும்புகிறேன். உலகெங்கும் பழிக்குப்பழி வாங்கும் சக்திகளே உலவும் இன்றைய சூழலில் என் மனத்தில் இந்தக் கேள்விகளே எழுகின்றன. என்னைப்போலவே எல்லோருடைய இதயங்களிலும் இந்தக் கேள்வி எழுந்து உறுத்திக்கொண்டிருக்கிறதா என்று கேட்கவும்
விரும்புகிறேன்’ என்று நீள்கிறது இக்குறிப்பு.
மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காந்தியடிகளை சிறிதுகாலம் கடற்காற்று வீசும் இடத்தில் சிறிது காலம் கட்டாயமாக ஓய்வெடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
தங்குமிடத்தை ஏற்பாடு செய்து தரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் சாந்திகுமார் மருத்துவர் குழுவுடன் கடற்கரையில் பொருத்தமான இடம் தேடி அலைகிறார்கள். இறுதியாக ஜஹாங்கீர் பட்டேல் என்பவருக்குச் சொந்தமான ஒரு குடிசை தேர்ந்தெடுக்கப்படுகிறது.
11.05.1944 அன்று
அக்குடிசைக்கு வரும் காந்தியடிகள் ஏறத்தாழ இரு மாத காலம் அங்கு தங்கியிருக்கிறார். காந்தியடிகளோடு கருத்துமுரண்பாடு கொண்டவரெனினும் ஜஹாங்கீர் பட்டேல் தன் குடிசையை அவருக்காக காலி செய்துகொடுக்கிறார். அவர் தமக்குச் சொந்தமான இன்னொரு வீட்டில் தங்கிக்கொள்ள ஏற்பாடு
செய்கிறார் சாந்திகுமார். காந்தியடிகளின் தினசரிச் செயல்பாடுகள், உரைகள் அனைத்தையும் நேருக்கு நேர் பார்த்த ஜஹாங்கீர் மனம் மாறி கதருடுத்தி காந்தியடிகளின் சீடராகவே மாறி விடுகிறார்.
குடிசைக்கு வெளியே ஒரு கூடத்தில் தினசரிப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அங்கும் பலர் அவரைத் தேடி வருகிறார்கள். வருகிறவர்களிடம் அவர் ஹரிஜன நிதி திரட்டுகிறார். கையெழுத்து கேட்பவர்களிடம் உண்டியல் நீட்டி நிதி உதவி பெறுகிறார். பிரார்த்தனைக் கூடத்திலிருந்து குடிசைக்குத்
திரும்பும் வழியில் தினமும் ஒரு வீட்டுத் திண்ணையில் ஒதுங்கி நின்று அவரையே வேடிக்கை பார்த்துச் சிரிக்கிறாள் ஒரு சிறுமி. ஒருநாள் காந்தியடிகள் அவளை அழைத்து அவளுக்கு ஒரு பழத்தைப் பரிசாகக் கொடுக்கிறார். குழந்தை மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கிறது. ஒருநாள் அந்தச் சிறுமியை வழியில் காணவில்லை. காந்தியடிகளின் கண்கள் அங்குமிங்கும் தேடுகின்றன. சற்றே குழம்பி சில கணங்கள் அங்கேயே நின்றுவிடுகிறார். சாந்திகுமாரிடம் அச்சிறுமியைப்பற்றி விசாரித்துவிட்டு வருமாறு அந்த வீட்டுக்கு அனுப்பிவைக்கிறார். அந்த வீட்டுக்குள் சென்ற சாந்திகுமார் சிறிது நேரத்திலேயே சிறுமியுடன் திரும்பி வருகிறார். காந்தியடிகளின் அலுவலில் குறுக்கிடக்கூடாது என்று அச்சிறுமியின் தந்தையே தடுத்து நிறுத்திவைத்ததாகச் சொல்கிறார். காந்தியடிகள் அச்சிறுமியை நெருங்கி சில கணங்கள் உரையாடி மகிழ்கிறார். அன்றும் சிறுமிக்குப் பழம் கொடுத்து மகிழ்கிறார் காந்தியடிகள். தினமும் வரவேண்டுமெனச்
சொல்லி அனுப்பிவைக்கிறார். ஒருபோதும் குழந்தையைத் தடுக்கவேண்டாம் என தந்தைக்கும் அறிவுரை சொல்கிறார். காந்தியடிகள் அக்குழந்தையுடன் கொஞ்சி உரையாடும்போது சாந்திகுமார்
எடுத்த புகைப்படம் மிகச்சிறந்த ஒரு படம். சிக்கலான ஆயிரக்கணக்கான அலுவல்களைப்பற்றி இடைவிடாது யோசிக்கும் ஒரு மனத்தில் மிக இயல்பாக ஒரு குழந்தைக்கென உருவாகும் இடம் முக்கியமானது.
ஜூஹு குடிசையில் தங்கியிருக்கும்போதுதான் காந்தியடிகள் பார்ப்பதற்கு ஒரு திரைப்படக்காட்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. அன்று காந்தியடிகள் மெளனத்தைக் கடைபிடிக்கும் தினம். திரைப்படத்தைக் கொண்டுவந்தவருக்கு அனுமதி கொடுத்தவர் யார் என்னும் விவரம் தெரியாமலேயே அந்தப் படம் திரையிடப்படுகிறது. மாஸ்கோவுக்குத் தூது என்னும் அப்படம் அவருக்குப் பிடிக்கவே இல்லை. எதுவும் பேசாமலேயே பாதியில் எழுந்து போய்விடுகிறார். அதற்குப் பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்னும் எண்ணத்தில் மற்றொரு நாள் அவருக்காக ராமராஜ்ஜியம் என்னும்
திரைப்படத்தைத் திரையிடுகிறார்கள். காந்தியடிகள் அதைப் பார்க்கவேண்டும் என்று மிகவும் வற்புறுத்துகிறார் கனு. அவருடைய கட்டாயத்துக்காக காந்தியடிகள் அப்படத்தைப் பார்க்கிறார். ஆனால் அதுவும்
அவருக்குப் பிடிக்கவே இல்லை. கூச்சலும் கூக்குரலுமாகவே இருக்கிறது என்று சொல்லிவிடுகிறார்.
ஓய்வுக்குப்
பிறகு ஜுஹு குடிசையிலிருந்து கிளம்புகிற வேளை வருகிறது. இந்த இடைவெளியில் காந்தியடிகளுடன்
உரையாடி மகிழ்ந்து, நடைப்பயிற்சியில் துணையாக நடந்து, அவரைச் சந்திக்க வருபவர்களுடன்
உரையாடியதன் வழியாக அவருடைய மனத்தில் காந்தியடிகளைப்பற்றிய மதிப்பு அதிகரிக்கிறது.
இனி எப்போது வந்தாலும் தன் குடிசையிலேயே தங்கவேண்டும் என அவர் காந்தியடிகளை அன்புடன்
கேட்டுக்கொள்கிறார். காந்தியடிகளும் அத்திட்டத்துக்கு இசைவளிக்கிறார். அவர் நிச்சயம்
ஒருநாள் வருவார் என்னும் நம்பிக்கையில் ஜஹாங்கீர் தன் குடிசையில் காந்தியடிகளை மனத்தில்
வைத்து மேலும் சில வசதிகளுக்கான கட்டுமானச்செயல்களில் ஈடுபட்டு நிறைவேற்றுகிறார். புதிய
பொலிவுடன் காந்தியடிகளின் வருகைக்காக ஒவ்வொரு நாளும் அவருடைய குடிசை காத்திருக்கிறது.
ஆனால் அதற்குப் பிறகு காந்தியடிகள் ஜுஹு கடற்கரைக்கு வரவே இல்லை. ஒருபோதும் திரும்பி
வர முடியாதபடி 30.01.1948 அன்று சுதந்திர இந்தியாவில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டு விடுகிறார்.
சாந்திகுமாரின் நினைவுத்தொகுயில் உள்ள இப்பகுதி ஒரு காவிய முடிவுடன் அமைந்துவிட்டது.