( தொடர்ச்சி....)
மாமியார் அரைமனத்தோடு மருமகள் சொன்ன செய்தியை மணியக்காரருக்குச் சொல்லி அனுப்பினாள். மணியக்காரரும் அப்போதே சம்மதம் தெரிவித்துவிட்டார். கோவில் ஆள் மாமியாரின் வீட்டுக்கு வந்து செய்தியைத் தெரிவித்துவிட்டுச் சென்றான்.
அடுத்தநாள் அதிகாலையில் மருமகள் சீக்கிரமாகவே எழுந்து
குளித்துமுடித்தாள். முதல் வேலையாக, வீட்டு வாசலைப் பெருக்கி தண்ணீர் தெளித்து
கோலம் போட்டாள். பிறகு, ஒரு குப்பைக்கூடையையும் ஒரு துடைப்பத்தையும்
எடுத்துக்கொண்டு காளி கோவிலுக்குப் புறப்பட்டாள். அவளுக்குப் பின்னால்
ஊர்க்காரர்கள் அனைவரும் ஊர்வலம்போல நடந்துசென்றார்கள்.
கோவிலை அடைந்ததும் மருமகள் தன்னை யாரும் தொடர்ந்து வரக்கூடாது என
அறிவித்துவிட்டு கோவிலுக்குச் சிறிது தொலைவிலேயே அனைவரையும் நிற்கவைத்துவிட்டாள்.
தன்னந்தனியாக கோவிலை நோக்கி நடந்து சென்றாள். கோவில் வாசலைத் திறந்து உள்ளே சென்றாள்.
அடுத்த கணமே கதவை இழுத்து மூடி உட்புறமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டாள்.
குப்பைக்கூடையையும் துடைப்பத்தையும் காளியின் முன்னால் வைத்துவிட்டு
தொண்டையைச் செருமியபடி காளியை நிமிர்ந்து பார்த்தாள். திகைப்பு உறைந்திருக்கும் காளியுடைய
பார்வையையும் வாயை மூடியிருக்கும் கையையும் உற்றுப் பார்த்தாள்.
“உனக்கு பசின்னா என்னன்னு தெரியுமா? காலம் பூரா ஒரு வீட்டுல
மிச்சம்மீதியை மட்டுமே சாப்ட்டுகிட்டே இருந்தா மனசு என்ன பாடுபடும் தெரியுமா?
வயித்துக்குள்ள பசி ஒரு நெருப்பு மாதிரி எரியும், அது எப்படி அனலடிக்கும், தெரியுமா?
என்னைக்காவது ஒரு நல்ல சாப்பாடு சாப்புடமாட்டமான்னு உனக்கு ஏக்கம் வந்திருக்குதா?
ஒவ்வொரு நாளும் சாப்புடற நேரத்துல ஒரு மாமியார்காரி மூஞ்சியில அடிச்ச மாதிரி
பேசினாலும் முறத்தால அடிக்கிறமாதிரி
பேசினாலும் சகிச்சிகிட்டே தாழ்ந்துபோறதுன்னா என்னன்னு தெரியுமா உனக்கு?”
காளியை நோக்கி வேகவேகமாக அவள் நெஞ்சிலிருந்து சொற்கள் விழுந்தன.
அவளால் தொடர்ந்து பேசமுடியவில்லை. மூச்சு வாங்கியது. ஒருகணம் பேசுவதை
நிறுத்திவிட்டு படபடப்பு நிற்கும்வரை காளியின் முகத்தையே வெறித்துப் பார்த்தபடி
நின்றாள். திடீரென அவளுக்கு அழுகை முட்டியது.
“நீயும் ஒரு பொண்ணுதான? ஒரு பொண்ணோட வேதனை இன்னொரு பொண்ணுக்கு
புரியவேணாமா? ஊரு உலகத்துக்குத் தெரியாம உன் சந்நிதிக்குள்ள வந்து ஒருத்தி
திருட்டுத்தனமா சாப்புடறாள்னா, அவ எந்த மாதிரியான நிலையில இருப்பான்னு
யோசிக்கமாட்டியா? அந்த சோறு இன்னொரு நாள் எனக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ
தெரியாது. அபூர்வமா கிடைச்ச சாப்பாட்ட அள்ளி அள்ளி சாப்ட்டது ஒரு தப்பா? அது உன்
கண்ணுக்குப் பொறுக்கலையா? என்னமோ பேயைப் பார்த்து பயத்துல வாய மூடிகிட்ட மாதிரி
திகைச்சி போய் வாயை மூடிகிட்டு நிக்கறியே, உனக்கு வெக்கமா இல்லையா? இவ்ளோ பசியோடு
இருக்கிறாளே, இவளுக்கு அடுத்த வேளை சோத்த எப்படி கொடுக்கலாம்ன்னு ஒரு நிமிஷமாவது
யோசிச்சி பார்த்தியா? அதை விட்டுட்டு இப்படி அள்ளி அள்ளி சாப்புடறாளேன்னு என்னமோ
அதிசயத்தை கண்டுட்ட மாதிரி கையைத் தூக்கி நின்னுட்டா எல்லாம் சரியாயிடுமா?”
மருமகளின் அழுகை கட்டுக்கடங்காமல் பெருகிக்கொண்டே போனது. சில
நிமிடங்களுக்குப் பிறகு காளியை நோக்கி எச்சரிப்பதுபோல விரலை உயர்த்தினாள். “இங்க
பாரு, ஒழுங்கு மரியாதையா வாயை மூடிகிட்டு கையை கீழ எறக்கு. இல்லைன்னா, என் கையில
என்ன கொண்டுவந்திருக்கேன் பாரு. சாமின்னு கூட பார்க்கமாட்டேன். இதனாலயே அபிஷேகம்
செஞ்சிடுவேன்” என்று அடங்கிய குரலில் கடுமையாகச் சொன்னாள்.
அடுத்த கணமே காளியின் கை சட்டென கீழே இறங்கியது. வாய் மூடிக்கொண்டது.
அவள் கண்களில் தெரிந்த திகைப்பும் நீங்கியது. வழக்கமான காளியின் தோற்றம்
தெரிந்தது.
காளியின் முகத்தைப் பார்த்ததும் மருமகள் ஒரு கணம் புன்னகை
புரிந்தாள். “இதுதான் நல்ல பொம்பளைக்கு அழகு” என்றாள். கூடையையும் துடைப்பத்தையும்
ஓரமாக வைத்துவிட்டு காளியின் முன்னால் விழுந்து வணங்கியெழுந்தாள். அவள் பாதத்தின்
முன்னால் இருந்த தட்டில் நிரப்பிவைக்கப்பட்டிருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில்
வைத்துக்கொண்டாள். பிறகு மெதுவாக கதவை நோக்கி வந்து தாழ்ப்பாளை விலக்கி கதவுகளைத்
திறந்துகொண்டு மலர்ந்த முகத்தோடு வெளியே வந்தாள்.
கோவில் வாசலில் அவளுடைய வருகைக்காகக் காத்திருந்த மக்கள் கூட்டம்
“காளியின் கை பழைய நிலைக்குத் திரும்பிடுச்சா?” என்று அவளிடம் கேட்டார். அவள் “ம்”
என்றபடி தலையை மட்டும் அசைத்துவிட்டு அங்கிருந்து நடக்கத் தொடங்கினாள். அதற்குள்
கோவிலுக்குள்ளே சென்று காளியின் தோற்றத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய மக்கள்
“காளியுடைய கை மறுபடியும் கீழ எறங்கிடுச்சி” என்று கூவிக்கொண்டு ஓடினார்கள்.
”எப்பேர்ப்பட்ட கற்புக்கரசி பார்த்தீங்களா? காளியுடைய கையையே சரியாக்கிட்டாளே”
என்று புகழ்ந்தார்கள். வாழ்த்து முழக்கத்தோடு அவளை அவளுடைய வீடு வரைக்கும்
பின்தொடர்ந்து வந்தனர்.
சத்தம் கேட்டு வீட்டைவிட்டு வெளியே வந்த மாமியார், தன்னுடைய மருமகள்
முன்னால் நடந்துவர, அவளுக்குப் பின்னால் ஊரே திரண்டு ஊர்வலமாக தன் வீட்டை நோக்கி
வருவதைப் பார்த்து திகைத்தாள். அவர்களுடைய சிரித்த முகங்களைப் பார்த்த பிறகே அவள்
மனம் ஆறுதல் அடைந்தது. மருமகள் மாமியாரைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே
வீட்டுக்குள் சென்றாள். அன்று மாலையில் கோவில் தர்மகர்த்தாவும் மணியக்காரரும்
ஒன்றாக வீட்டுக்கு வந்து ஏற்கனவே அறிவித்ததுபோல ஒரு வெள்ளிக்குடத்தைப் பரிசாகக்
கொடுத்துவிட்டுச் சென்றனர்.
நடந்ததையெல்லாம் பார்த்த மாமியாரின் மனத்தில் தொடக்கத்தில்
மகிழ்ச்சியுணர்வு ஏற்பட்டாலும், அது கொஞ்சம்கொஞ்சமாக கலவர உணர்வாக மாற்றம் கண்டது.
தன் மருமகளிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது என அவள் நம்பினாள். அந்தச்
சக்தியால் தனக்கு ஏதேனும் ஆபத்து விளைவித்துவிடுவாளே என்றும் அஞ்சினாள். இத்தனை
ஆண்டுகளாக, தான் செய்த கொடுமைகளுக்கு பழிவாங்கும் விதமாக தனக்கு எதிராக ஏதேனும்
அவள் செய்வாளோ என நினைத்துக் குழம்பினாள்.
நாளுக்கு நாள் அவளுடைய அச்சம் பெருகிக்கொண்டே போனது. அதை அவளால்
தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவள் பார்க்கிற பார்வையில் ஏதோ ஒரு புதிய உள்நோக்கம்
இருப்பதாக கற்பனை செய்துகொண்டு தடுமாறினாள்.
அடுத்து சில நாட்களில் அமாவாசை வந்தது. அவளுக்கு உறக்கம் வரவில்லை.
புரண்டு புரண்டு படுத்தாள். அதைப் பார்த்த அவளுடைய மகன் “என்னாச்சிம்மா? ஏன்
இப்படி புரண்டு புரண்டு படுக்கிற? தூக்கம் வரலையா?” என்று கேட்டான்.
”இல்லைடா. பத்து நாளே சரியான தூக்கமே இல்லைடா. சரியா சொல்லணும்ன்னா,
என்னைக்கு உன் வீட்டுக்காரி அந்தக் காளிகோயிலுக்கு உள்ள போய் காளியுடைய கையையே
சரிபண்ணிட்டு வந்தாளோ, அன்னைக்கே என் தூக்கம் போயிடுச்சி” என்று பெருமூச்சு
விட்டாள்.
“என்னம்மா சொல்ற நீ? புரியறமாதிரி சொல்லும்மா” என்று கேட்டான் மகன்.
“இங்க பாரு மகனே. அவ சாதாரண பொண்ணு கிடையாது. அவகிட்ட ஏதோ ஒரு பெரிய சக்தி
இருக்குது. இத்தனை நாள் நம்மகிட்ட அதைக் காட்டாம இருந்திருக்கறா. காளி கோவில்
விஷயத்தால இப்ப அது வெட்டவெளிச்சமாயிடுச்சி. இத்தனை காலமா நாம அவள தொடர்ந்து ஏதேதோ
காரணங்களுக்காக அடிச்சிருக்கோம். கன்னாபின்னான்னு பேசியிருக்கோம். சோறு போடாம
பட்டினி போட்டிருக்கோம். எல்லாத்துக்கும் சேர்த்து இப்ப அவ நம்மை பழி
வாங்குவாளோன்னு பயமா இருக்குது”
”அப்படியெல்லாம்
அவ செய்யமாட்டாம்மா. அந்த அளவுக்கு அவளுக்கு தைரியம் கிடையாது. நீயா சும்மா
எதையும் கற்பனை செஞ்சிக்காதம்மா”
“பார்க்கறதுக்கு சாதுவா இருக்கற பொண்ணுங்கதான் புலி மாதிரி பாய்ஞ்சி
வருவாங்கன்னு ஊருல சொல்வாங்க, உனக்குத் தெரியாதா?”
“சரி, இப்ப என்ன அதுக்கு?”
“அவ நம்ம கதையை முடிக்கறதுக்கு முன்னால, நாம அவ கதையை முடிச்சிடணும்.
புரியுதா?”
“என்னம்மா நீ சொல்ற? தெளிவா சொல்லு”
”இப்ப
அவ நல்லா தூங்கிட்டு இருக்கறா. அவளை அப்படியே பாயோடு சுருட்டி எடுத்துட்டுப் போய்
எங்கயாவது காட்டுப்பக்கமா வச்சி எரிச்சிடலாம். அப்பதான் நாம நிம்மதியா இருக்கலாம்.
வேற ஒரு அழகான பொண்ணா பார்த்து உனக்கு இன்னொரு
கல்யாணம் செஞ்சிவைக்கறேன்”
அம்மாவின் யோசனையை மகன் உடனே ஏற்றுக்கொண்டான். ”சரி, கெளம்பு. இப்பவே
காரியத்தை முடிச்சிடலாம்” என்றான்.
இருவரும் மருமகள் உறங்கும் அறைக்குள் சென்றார்கள். அவள் ஒரு பாயில்
போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள். இருவரும் சேர்ந்து அவளை அந்தப்
போர்வையாலே மூட்டையைப்போல சுருட்டிக் கட்டினார்கள். அவர்களுடைய காலடிச்சத்தத்தைக்
கேட்டதுமே அவள் விழித்துக்கொண்டாள். அவர்கள் பேசுவதையெல்லாம் காதுகொடுத்துக்
கேட்டபடி தூங்குவதுபோல கண்களை மூடிக்கொண்டு இருந்தாள்.
இருவரும் அந்த மூட்டையை ஆளுக்கொரு பக்கம் பிடித்து தூக்கிக்கொண்டு
வீட்டைவிட்டு வெளியே வந்தனர். அமாவாசை என்பதால் எங்கெங்கும் ஒரே இருட்டாக இருந்தது.
மெல்ல மெல்ல தெருவைக் கடந்து காடு இருக்கும் திசையை நோக்கி அவளைச் சுமந்துகொண்டு
சென்றார்கள்.
நீண்ட தொலைவு நடந்த பிறகு அவர்கள் ஒரு பள்ளத்தை அடைந்தார்கள். அந்த இடம் அவளை
எரிப்பதற்குப் பொருத்தமான இடம் என்று மாமியாருக்குத் தோன்றியது. அதனால் அதுவரை
சுமந்துவந்த மூட்டையை இறக்கி, அந்தப் பள்ளத்துக்குள் உருட்டிவிட்டனர். அது உருண்டு
உருண்டு சென்று பள்ளத்துக்கு அடியில் தொப்பென்று விழுந்தது.
எரிப்பதற்கு விறகு இல்லை என்பது அப்போதுதான் அவர்களுக்கு உறைத்தது.
அக்கம்பக்கத்தில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றின் தாழ்வான கிளைகளை உடைத்துவந்து
அந்த மூட்டையின் மீது அடுக்கி எரித்துவிடலாம் என அவர்கள் முடிவுகட்டினார்கள்.
அதனால் இருவரும் அந்தப் பள்ளத்திலேயே மூட்டையை விட்டுவிட்டு, கிளைகளைச்
சேகரிப்பதற்காக மரங்களைத் தேடிக்கொண்டு சென்றனர்.
அவர்கள் பேச்சுச்சத்தம் குறைந்ததை வைத்து, அவர்கள் அருகில் இல்லை
என்பதை மூட்டைக்குள் இருந்த மருமகள் தெரிந்துகொண்டாள். பிறகு மெதுவாக தன்னைச்
சுருட்டியிருந்த மூட்டையின் முடிச்சுகளை அவிழ்த்துக்கொண்டு தன்னைத்தானே
விடுவித்துக்கொண்டு உருண்டு வெளியே வந்தாள்.
பிறகு பள்ளத்திலேயே விழுந்து கிடந்த நாலைந்து கற்களை அந்தப்
போர்வைக்குள் வைத்து மீண்டும் சுருட்டிக் கட்டினாள். பார்ப்பதற்கு ஒரு ஆள்
போர்த்திக்கொண்டு படுப்பதுபோன்ற தோற்றத்தோடு இருந்தது. அடுத்த கணமே சத்தம்
காட்டாமல் மெதுவாக பள்ளத்திலிருந்து வெளியே வந்தாள். இருட்டிலேயே சிறிது தொலைவு
நடந்து சென்று, அங்கிருந்த ஓர் ஆலமரத்தில் ஏறி அதன் கிளையில் உட்கார்ந்துகொண்டு
அந்தப் பள்ளத்தில் என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.
அவளுடைய கணவனும் மாமியாரும் ஆளுக்கு இரண்டுமூன்று கிளைகளை
இழுத்துக்கொண்டு வந்தனர். பிறகு அவற்றை சின்னச்சின்ன துண்டுகளாக உடைத்து பள்ளத்தில்
கிடக்கும் மூட்டையின் மீது வீசினர். போதுமான அளவுக்கு கட்டைகளைக் குவித்ததும்,
நெருப்பு மூட்டி அதன் மீது வீசினர். மெல்ல மெல்ல நெருப்பு படர்ந்து எரியத்
தொடங்கியது.
சில கிளைகள் நெருப்பின் சூடு தாங்காமல் பட்பட்டென்று வெடித்த
சத்தத்தைக் கேட்டு “அம்மா, அந்த சத்தத்தைக் கேட்டாயா? அவளுடைய எலும்பு வெடிக்குது”
என்று சொன்னான். சற்று அருகிலேயே காய்ந்த சுள்ளிகள் கிடைத்தன. அவற்றையெல்லாம் சேகரித்து வந்து
அந்தப் பள்ளத்தில் வீசினாள் மாமியார். விறகு வெடிக்கும் சத்தம் கேட்டது. ஸ்
என்னும் சத்தத்தோடு பொறி பறந்தது. உடனே “பார்த்தியா, மண்டையோடு வெடிக்கிற சத்தம்”
என்றான் அவன். அதற்குப் பிறகுதான் அவர்கள் மனம் அமைதியடைந்தது. அவள் உயிர்
பிரிந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு நிம்மதியாக வீட்டுக்குச் சென்று
படுத்து உறங்கினர்.
ஆலமரத்தின் மீது உட்கார்ந்திருந்த மருமகள் எல்லாவற்றையும் அமைதியாக
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். எதிர்பாராதவிதமாக, அந்த நேரத்தில் யாரோ ஒரு
பணக்காரனின் வீட்டில் நகைகளைக் கொள்ளையடித்துக்கொண்டு வந்த நான்கு திருடர்கள்
பங்கு பிரித்துக்கொள்வதற்காக அந்த ஆலமரத்தடியில் உட்கார்ந்தனர். பேசிக்கொண்டே
மூட்டையைப் பிரிக்கத் தொடங்கிய சமயத்தில் ஒருவன் தொலைவில் ஏதோ வெளிச்சம் தெரிவதை
மற்றவர்களுக்குச் சுட்டிக்காட்டினான்.
“அங்க என்னமோ எரியுது பாரு”
“யாராவது குளிர் காயறாங்களோ என்னமோ”
“ஊரைவிட்டு இவ்ளோ தூரம் வந்து யாராவது குளிர் காய்வாங்களா?”
“ஏதாவது பிணமா இருக்கும்”
“அதை ஏன் இந்த அர்த்தராத்திரி நேரத்துல கொண்டுவந்து எரிக்கணும். பகல்
நேரத்துலயே எரிக்கலாமில்ல”
“இரு. இரு. என்ன விஷயம்னு மரத்துமேல ஏறி பார்த்தா தெரியும்”
“சரி, நீ மரத்துமேல ஏறி என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு வா. நாங்க
எல்லாத்தயும் பங்கு பிரிச்சி வைக்கறோம்”
அவர்கள் உரையாடுவதை மரத்தில் அமர்ந்தபடி கேட்டுக்கொண்டிருந்தாள்
மருமகள். அதைத் தொடர்ந்து ஒரு திருடன் மரத்தில் ஏறி வருவதையும் பார்த்தாள். அவன்
பார்வையில் பட்டுவிடாதபடி கிளையில் இலைகள் அடர்ந்திருந்த திசையில் சற்றே நகர்ந்து ஒடுங்கி
உட்கார்ந்தாள்.
மரத்தில் ஏறி வந்த திருடன் ஒவ்வொரு கிளையாக மாறிமாறி தாவிவந்து,
மருமகள் உட்கார்ந்திருந்த கிளைக்கு வந்து உட்கார்ந்தான். தொலைவில் தெரியும் வெளிச்சத்தை சிறிது நேரம்
உற்றுப் பார்த்தான். பிறகு “யாரோ எதையோ எரிக்கறாங்க” என்று தனக்குள்ளே முனகினான்.
அந்த நேரத்தில் தனக்கு அருகில் யாரோ உட்கார்ந்திருப்பதுபோல
அவனுக்குத் தோன்றியது. ஏதோ ஒரு சந்தேகத்தில் “யாரு அது?” என்று மெல்லிய குரலில்
அச்சத்தோடு கேட்டான். பதில் சத்தம் வராததால் கிளையிலேயே இன்னும் கொஞ்சம் நகர்ந்து
கையை நீட்டி அந்த உருவத்தைத் தொடுவதற்கு முயற்சி செய்தான்.
அதைக் கண்டு மருமகளுக்கு உள்ளூர அச்சமிருந்தாலும் அதைக்
காட்டிக்கொள்ளாமல் தைரியமாக அவனுடைய கையைத் தடுத்துத் திருப்பி அவன் கையைக் கொண்டே
அவனுடைய வாயை மூடினாள்.
“ஸ். சத்தமா பேசாதே. நான் தேவகன்னி. தேவ லோகத்திலிருந்து
வந்திருக்கேன். பூமியில யாராவது அழகானவனாவும் தைரியமானவனாவும் ஒருத்தன பார்த்து
கல்யாணம் செஞ்சிகிட்டு போவலாம்ன்னு வந்திருக்கேன். உன்னப் பார்த்தா ரொம்ப அழகானவனா
தெரியற. மர உச்சிக்கு இருட்டுல ஏறி வர அளவுக்கு தைரியமானவனாவும் இருக்க. நான்
உன்னையே கல்யாணம் பண்ணிக்கறேன். தேவலோகத்துக்கு உன்ன அழச்சிட்டு போய் நீ நினைச்சே
பார்க்கமுடியாத அளவுக்கு பணக்காரனா ஆக்கிவைக்கறேன். சத்தம் போடாம இரு.”
திருடனுக்கு நடப்பதெல்லாம் கனவா நனவா என்றே புரியவில்லை. குழப்பமாக
இருந்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது. அப்போதே அவனுக்கு தான் தேவலோகத்துக்கு
வந்துவிட்டதுபோலவும் வெள்ளை யானை மீது செல்லும் இந்திரனைப் பார்த்துவிட்டதுபோலவும்
அழகழகான கன்னிப்பெண்கள் நடனமாடுவதைப் பார்த்ததுபோலவும் இருந்தது. தன் வாயை
மூடியிருக்கும் அவளுடைய கையைத் தொட்டு மெதுவான குரலில் “நீ சொல்றதெல்லாம்
உண்மையா?” என்று கேட்டான்.
அவள் “ம்” என்று சொன்னாள்.
“உன்னை நான் எப்படி நம்பறது?”
“இரு. உனக்கு நம்பிக்கை வரமாதிரி நான் ஒரு வேலை செய்றேன்”
மருமகள் தன் முந்தானையில் முடிந்துவைத்திருந்த வெற்றிலை பாக்குகளை
எடுத்தாள். ஒரு வெற்றிலைக்குள் பாக்கை வைத்து மடித்து அவனிடம் கொடுத்தாள். அவன் அதை வாங்கிக்கொண்டே
அவளை முத்தமிடுவதற்காக இன்னும் கொஞ்சம் நெருங்கிவந்தான். மருமகள் அவனை அவசரமாகத்
தடுத்தாள்.
“இரு. இரு. அவசரப்படாதே. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமா
வச்சிக்கலாம்.”
”எனக்கு இப்பவே முத்தம் கொடுக்கணும்போல இருக்குது”
”அப்படின்னா, ஒரு வேலை செய். இந்த வெத்திலை பாக்கை நல்லா மென்னு
சாந்து மாதிரி ஆக்கினா, உன் நாக்கு நல்லா செவசெவன்னு செவந்துடும். அந்த சாந்தை உன்
நாக்கிலேர்ந்து நான் என் நாக்காலயே இழுத்து எடுத்து நானும் மெல்லுவேன்.
அதுக்கப்புறம் அதை நீ இழுத்து மெல்லலாம். நாக்காலயே வெத்திலைபாக்கை மாத்திக்கறது
எங்க தேவலோகத்துல கல்யாணம் செஞ்சிக்கிற மாதிரியான சடங்கு. அப்படி செய்யலாமா?”
மருமகள் சொன்னதைக் கேட்டு திருடன் உற்சாகமடைந்தான். அவள் கொடுத்த
வெற்றிலையை ஆசையாக வாங்கி வேகமாக மெல்லத் தொடங்கினான். வெற்றிலைபாக்குக் கலவை நல்ல
சாந்தாக மாறியதும் நாக்காலேயே ஒரு உருண்டையைப்போல ஆக்கினான். அதை நுனிநாக்கு
வரைக்கும் கொண்டுவந்து நிறுத்தி ஆசையோடு அவளுக்கு முன்னால் நீட்டினான். அதைத் தன்
நாக்கை நீட்டித் தொடுவதுபோல நெருங்கிவந்த மருமகள் அவன் நாக்கை அழுத்தமாகப்
பிடித்துக் கடித்துத் துண்டாக்கினாள். பாதி நாக்கை இழந்த திருடன் வலியில் அலறியபடி
பிடி நழுவ மரத்திலிருந்து கீழே விழுந்தான்.
தங்க நகைகளை பங்கு பிரித்தபடி கீழே உட்கார்ந்திருந்த பிற திருடர்கள்
அச்சத்தில் எழுந்து ஓடத் தொடங்கினர். அவர்களைத் தடுக்கவும் முடியாமல் வாய்திறந்து
அவர்களை அழைக்கவும் முடியாமல் ஆ ஆ ஆ என்று அலறியபடியே கீழே விழுந்த திருடனும்
அவர்கள் பின்னால் ஓடினான். அலறலோடு பின்தொடர்ந்து ஓடி வருபவனைப் பார்த்து
முன்னால் ஓடிக்கொண்டிருந்த திருடர்கள் இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடத் தொடங்கினர்.
மரத்திலிருந்து கீழே இறங்கிவந்த மருமகள் விரிப்பின்மீது
பரப்பிவைக்கப்பட்டிருந்த நகைகளையும் பணத்தையும் பார்த்தாள். எல்லாவற்றையும்
குவியலாக்கி அந்த விரிப்பிலேயே வைத்து மூட்டைகட்டி எடுத்துக்கொண்டு குறுக்கு
வழியில் வேகவேகமாக நடந்து தன் வீட்டுக்கு வந்தாள். “அத்தை, அத்தை, சீக்கிரமா
கதவைத் திறங்க” என்று அடங்கிய குரலில் அழைத்தாள்.
மருமகளை எரித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவந்த அம்மாவும் மகனும் அப்போது
நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தனர். திடீரென மருமகளின் குரலைக் கேட்டு
திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தனர். ஒருவரை ஒருவர் குழப்பத்தோடு
பார்த்துக்கொண்டனர். மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
“போடா. போய் கதவைத் திற” என்று மகனிடம் சொன்னாள் அம்மா.
“ம்ஹூம். எனக்குப் பயமா இருக்குது. நீயே போய் திறந்து யாருன்னு பாரு”
என்று நடுங்கினான் மகன்.
நடுங்கியபடியே படுக்கையிலிருந்து எழுந்துசென்ற மாமியார் மெதுவாக
கதவைத் திறந்தாள். சட்டென ஒரு புயலைப்போல உள்ளே நுழைந்து கதவை மீண்டும்
சாத்திக்கொண்டாள் மருமகள்.
‘யாரு, யாரு நீ?” என்று நாக்கு குழற கேட்டாள் மாமியார்.
“பயப்படாதே அத்தை. நான்தான் உங்க மருமகள். நீங்க ரெண்டுபேரும்
சேர்த்து எரிச்சிட்டு வந்தீங்களே, அதே மருமகள்”
அதைக் கேட்டதும் மாமியார் அச்சத்தில் மயங்கி கீழே விழுந்துவிட்டாள்.
மருமகள் வேகமாக நகர்ந்து அவளைத் தாங்கிப் பிடித்து படுக்கையில் படுக்க வைத்து
முகத்தில் தண்ணீர் தெளித்து தெளிவு வரச்செய்தாள்.
கண் விழித்துப் பார்த்த மாமியார் “நீ…. நீ…. நீ….இன்னும்….இங்க…...எப்படி?”
என்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் ஏதேதோ உளறினாள்.
“நானேதான் அத்தை. பயப்படாதீங்க” என்றாள் மருமகள்.
“நீங்க ரெண்டுபேரும் என்னை பள்ளத்துல தள்ளி எரிச்சதுமே, எமனுடைய
ஆட்கள் வந்து என்னை எமலோகத்துக்கு அழைச்சிகிட்டு போனாங்க. ஒரு பெரிய வரிசையே அங்க
நின்னுட்டிருந்தது. என்னையும் அந்த வரிசையில நிக்க வைச்சாங்க. ஒவ்வொரு ஆளா
விசாரிச்சி விசாரிச்சி உள்ள அனுப்பிகிட்டிருந்தாரு எமதர்மராஜா. அவருடைய கண்ணுங்க
நம்ம ஊரு கோயில் காளியுடைய கண்ணுங்க மாதிரி உருண்டையா இருந்திச்சி. நான் போய்
நின்னதும் அவரு கையில இருந்த ஓலையையும் என்னையும் மாறிமாறிப் பார்த்தாரு. இந்தப்
பொண்ணு கணக்கு இன்னும் முடியலைடா, அதுக்குள்ள எதுக்குடா இவளைத் தூக்கி வந்தீங்க.
பூமிக்கு திருப்பி அனுப்புங்கடா இந்தப் பொண்ணன்னு ஆட்களைப் பார்த்து சத்தம்
போட்டாரு.”
“அப்புறம்?”
“உடனே எமனுடைய ஆளுங்க வந்து என்னைப் பார்த்து வாம்மான்னு
கூப்புட்டாங்க. அப்ப எமதர்மராஜா அந்த ஆளுங்களை நிறுத்தி அந்தப் பொண்ணுடைய
மாமியார்காரி ஒருத்தி இருக்கா. அவளுக்குத்தான் காலம் முடிஞ்சிடுச்சி. இவள
விட்டுட்டு அவளை அழைச்சிட்டு வாங்கடான்னு சொன்னாரு.”
“என்னம்மா சொல்ற நீ? கேக்கும்போதே என் அடிவயிறு கலங்குதே”
“எமதர்மராஜா சொன்னதைக் கேட்டதும் எனக்கும் பயமாதான் இருந்திச்சி
அத்தை. நான் உடனே அவருடைய கால்ல உழுந்து
எங்க அத்தை ரொம்ப நல்லவங்க ஐயா. நான் சொன்னா கேப்பாங்க. பூமியிலயே அவுங்க இன்னும்
கொஞ்ச காலம் இருக்கட்டும் ராஜான்னு கெஞ்சிகெஞ்சி கேட்டேன். அவரு ரொம்ப யோசிச்சாரு.
அதுக்கப்புறம் அவ ஒழுங்கா நியாயமானவளா இருந்தா இன்னும் கொஞ்ச காலம் இருக்கலாம்.
ஏதாவது ஏடாகூடமா செய்றான்னு என் காதுக்கு செய்தி வந்திச்சின்னு வை, அடுத்த நிமிஷமே
எங்க ஆளுங்க அவ கணக்கை முடிச்சி தூக்கிகிட்டு வந்துடுவாங்க, புரியுதான்னு
சொன்னாரு. எல்லாம் புரியுது ராஜா, நான் அவுங்களுக்கு நல்லவிதமா எடுத்துச் சொல்றேன்
ராஜான்னு சொல்லி ஒரு நம்பிக்கையைக் கொடுத்தேன். அதுக்கப்புறம்தான் சரி போன்னு
என்னை விட்டாரு.”
உடல் நடுக்கத்துடன் கண்களில் நீர் வழிய மாமியார் தன் மருமகளையே
பார்த்தாள்.
“உனக்கு பெரிய மனசு தாயே. நான் உனக்கு செஞ்ச அநியாயத்தையெல்லாம்
மறந்து எனக்காக கடவுள்கிட்டயே வாதாடி என் உயிரத் திருப்பிக் கொடுத்தியே, அந்த நன்றியை
நான் மறக்கமாட்டேன்” என்றபடி கைகுவித்து கும்பிட்டாள்.
“எல்லாருமே எமதர்மராஜா இரக்கமில்லாதவர், அப்படி இப்படின்னு சொல்றாங்களே.
அதெல்லாம் உண்மையில்லை அத்தை. அவரு ரொம்ப நல்லவரு. நான் சொன்னதையெல்லாம் பொறுமையா
கேட்டுக்கிட்டாரு”
“நல்லவங்களுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்மா” என்றாள் மாமியார்.
”இங்க பாருங்க” என்று தான் எடுத்துவந்த மூட்டையைப் பிரித்து
நகைகளையும் பணத்தையும் காட்டினாள்.
“எல்லாம் எமதர்மராஜா கொடுத்தது. நல்லா இரும்மான்னு என்னை ஆசீர்வாதம்
பண்ணி கொடுத்தாரு. எங்க ஆளுங்க உங்க வீட்டுல நடக்கறத கண்காணிச்சிட்டே இருப்பாங்க.
உன் மாமியார்க்காரி ஏதாவது ஏறுமாறா நடக்கறத பார்த்தாங்கன்னா, அப்பவே அவ கணக்க
முடிச்சிடுவாங்கன்னு சொல்லி அனுப்பிவைச்சாரு”
நகைமூட்டையையும் மருமகளையும் மாறிமாறிப் பார்த்தாள் மாமியார். அவள்
மனம் மாறிவிட்டது. “இனிமே நான் எதுக்கும்மா தப்பா யோசிக்கப் போறேன். நீங்க
ரெண்டுபேரும் சந்தோஷமா வாழறதப் பார்க்கற சந்தோஷமே எனக்குப் போதும்மா” என்றாள்.
நகைமூட்டையை அங்கேயே வைத்துவிட்டு ”சரி, தூங்குங்க. நானும் தூங்கப்
போறேன்” என்றாடி தன்னுடைய அறைக்குச் செல்லத் திரும்பினாள் மருமகள்.
உடனே அவளைத் தடுத்தாள் மாமியார்.
“நீ எதுக்கும்மா தனியா போய் தூங்கப் போற? நீ இந்த வீட்டு மகாலட்சுமி. நீங்க
ரெண்டு பேரும் இங்க படுத்துக்குங்கம்மா. நானே அந்த அறைக்குப் போறேன்” என்று
சொல்லிவிட்டு தனி அறையை நோக்கி நடந்தாள்.
அதற்குப் பிறகு அந்த வீட்டு நிர்வாகத்தையெல்லாம் பார்த்துக்கொள்பவளாக
மாறிவிட்டாள் மருமகள். அவளுடைய கணவனும் மாமியாரும் அவள் ஆலோசனையைக் கேட்டு
நடப்பவர்களாக மாறிவிட்டார்கள்.
( கிழக்கு
டுடே – இணைய இதழ் – 16.06.2025)