Home

Saturday, 8 February 2025

கிருஷ்ண சுவாமி சர்மா : சமத்துவக்கனவின் சாட்சி

  

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த காந்தியடிகள் கோகலேயின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு இந்தியாவின் அரசியல் நிலவரங்களை அறிந்துகொள்ள நாடு தழுவிய நீண்டதொரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அப்பயணத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டுக்கு வந்து 14.04.1915 முதல் 29.04.1915 வரை சென்னையில் தங்கியிருந்தார். அப்போது 20.04.1915 அன்று இந்திய ஊழியர் சங்கக்கட்டிடத்தில் கோகலே கிளப் உறுப்பினர்களைச் சந்தித்து உரையாடும் விதத்தில் ஒரு நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அவர் 1904இல் தென்னாப்பிரிக்காவில் தான் அமைத்த பீனிக்ஸ் குடியிருப்பு பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இந்தியாவில் காந்தியடிகள் ஆசிரமம் எதையும் தொடங்கியிருக்காத நேரம் அது. வெகுவிரைவில் தென்னாப்பிரிக்காவிலிருந்து தம்மோடு வந்த சில தமிழர்களோடு இணையான எண்ணங்களோடிருக்கும் வேறு சிலரையும் இணைத்துக்கொண்டு ஓர் ஆசிரமத்தைத் தொடங்கும் திட்டம் மட்டும் இருந்தது.


22.04.1915 அன்று அவர் காஸ்மாலிட்டன் கிளப் நடத்திய மற்றொரு கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆடம்பர ஆடைகளை உடுத்திக்கொண்டு கிளப்களில் சந்தித்து விருந்துகள் நடத்தி சொற்பொழிவாற்றிவிட்டு கலைவதோடு தன் பொறுப்பு முடிவடைந்துவிட்டதாக நினைத்துக்கொள்ளும் தலைவர்களையொட்டி அவருக்குள் ஓர் ஒவ்வாமை இருந்தது. எளிய உடை உடுத்தி, கடைக்கோடி மனிதனுக்கு ஆறுதலுரைத்து கைதூக்கி விடுவதே சமுதாயத்தலைவர்களின் கடமையாக இருக்கவேண்டும் என்பதுதான் அவர் எண்ணம்.  அதை அக்கூட்டத்தில் அவர் வெளிப்படையாகவே குறிப்பிட்டார். அடுத்த நாளே அவர் ஆற்றிய உரை செய்தித்தாட்களில் வெளிவந்து எங்கெங்கும் பேசுபொருளானது. பல இளைஞர்களை அவருடைய உரை கவர்ந்திழுத்தது. அடுத்தடுத்த நாட்களில் சென்னையில் இருந்த துறவுமனம் கொண்ட சில இளைஞர்கள் காந்தியடிகளை நேரில் சந்தித்து அவர் தொடங்கவிருக்கும் ஆசிரமத்தில் தம்மையும் இணைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக கடுமையான சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு விடுதலை பெற்று சென்னையில் தங்கியிருந்த இளைஞரொருவரும் இருந்தார். அவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணசுவாமி சர்மா.

காந்தியடிகளை நோக்கி கிருஷ்ணசுவாமி சர்மா ஈர்க்கப்பட்டதைப்போலவே காந்தியடிகளும் கிருஷ்ணசாமி சர்மாவால் ஈர்க்கப்பட்டார். கிருஷ்ணசுவாமி சர்மாவின் தோற்றமும் அனுபவங்கள் சார்ந்த உரையாடல்களும் காந்தியடிகளைப் பெரிதும் கவர்ந்தன. அன்று இரவு தம் குறிப்பேட்டில் அச்சந்திப்பைப்பற்றி சிறப்புக்குறிப்பொன்றை எழுதி பதியவைத்துக்கொண்டார் காந்தியடிகள். “மெட்ரிகுலேஷன் வரை படித்திருக்கும் கிருஷ்ண சுவாமி சர்மாவுக்கு தமிழும் தெலுங்கும் நன்றாகத் தெரிந்திருக்கிறது. பகவத் கீதையை முழுதும் மனப்பாடமாகத் தெரிந்துவைத்திருக்கிறார். சிறையில் மூன்றாண்டுகள் கழித்திருக்கிறார். இந்து நேசன் என்னும் இதழில் உதவி ஆசிரியராக இருக்கிறார். வாழ்நாள் முழுதும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கவும் சத்தியம், அகிம்சை, பொருள் சேர்த்துவையாமை, திருடாமை போன்ற சபதங்களை மேற்கொண்டிருக்கிறார். தேசநலனுக்காக தன் வாழ்வையே அர்ப்பணிக்க முடிவெடுத்திருக்கிறார்” என்று அந்தக் குறிப்பு நீண்டுசெல்கிறது.

1908ஆம் ஆண்டில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகத்தைத் தொடங்கிய காலத்திலேயே, அவருடைய செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிப்பவராக இருந்தார் சர்மா. அப்போது அவர் இருபத்தொரு வயது நிறைந்த இளைஞர். தீவிரமான வாசிப்பின் வழியாகத் தெரிந்துகொண்ட பல்வேறு தகவல்களைத் தொகுத்து மேடைகளில் பேசும் ஆற்றல் அவருக்கு இருந்தது. பிபின் சந்திரபாலின் சொற்பொழிவுகளால் கவரப்பட்டு, சொற்பொழிவாற்றும் திறமையை வளர்த்துக்கொண்டவர் அவர். அவர் உரையாற்றும் ஒவ்வொரு முறையும் மேடைக்கருகில் இளைஞர்கள் வெள்ளமெனத் திரண்டு வந்து, அவருடைய உரையை உற்சாகத்துடன் கேட்டனர்.  ‘தென்னாப்பிரிக்கா டிரான்ஸ்வாலில் உள்ள இந்தியர்களின் நிலைமை’, ‘சுயராஜ்ஜியம்’. ’சுதேசியும் பகிஷ்கரிப்பும்’ என வெவ்வேறு தலைப்புகளில் கேட்பவர்களை ஈர்க்கும்வண்ணம் மேடைகளில் அவர் முழங்கி புகழ் பெற்றவராக விளங்கினார். ஒன்றிரண்டு மணி நேரங்கள் கூட தொடர்ச்சியாகப் பேசும் நாவன்மை கொண்டவராக அவர் இருந்தார்.

சர்மாவுடைய பேச்சாற்றலின் பெருமை சென்னையைக் கடந்து பல மாவட்டங்களிலும் வேகமாகப் பரவத் தொடங்கியது. சேலம், ஈரோடு, கோவை என பல பகுதிகளிலிருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்தன.  சர்மாவும் அந்த அழைப்பை ஏற்று உற்சாகமுடன் அந்தந்த ஊர்களுக்குச் சென்று மேடைகளில் முழங்கினார். சர்மாவைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட காவலர்களும் அவருடனேயே பயணம் செய்து, அவருடைய உரை தொடர்பான குறிப்புகளை எடுத்து மேலதிகாரிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். அதைப்பற்றிய எக்கவலையும் இல்லாமல் இளமைக்கே உரிய எழுச்சியுடன் ஒவ்வொரு மேடையிலும் சர்மா முழங்கிவந்தார்.

ஒருமுறை கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு சுதேசிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தம் உரையில் இந்தியாவின் செல்வத்தைச் சுரண்டி இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லும் அரசாங்கத் தந்திரங்களை ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தினார்.  தூத்துக்குடி போன்ற நகரங்களில் காணப்படக்கூடிய சுதேசி முயற்சி எதையும் தன்னால் கரூரில் பார்க்கமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டார். அந்த உரையாடலின் போக்கில் இராணுவத்தில் இருக்கும் இந்தியர்கள் வெள்ளைக்காரர்களைச் சுடுவதற்கு தம் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நம் தாய்நாட்டுக்கு ஏன் உதவக்கூடாது, அவர்கள் அவ்வாறு செய்தால் நாம் சுயராஜ்ஜியத்தைப் பெற்றுவிடமுடியாதா? என்று உணர்ச்சி பொங்க ஒரு கேள்வியை எழுப்பினார்.  தூத்துக்குடியில் சுதேசியத்தின் தன்னெழுச்சி வெள்ளை அதிகாரிகளின் அலுவலகங்களை இடித்துத் தகர்த்ததுபோல கரூர் மக்களும் ஏன் செய்யக்கூடாது என்றும் கேட்டார்.

அப்போது அந்தக் கூட்டத்தில் அவருடைய உரையைக் கேட்டபடி அமர்ந்திருந்த ஒருவர் திடுமென எழுந்து பேச்சுக்கிடையில் குறுக்கிட்டார். “நீங்கள் இப்படி அரசியல் பேசுவது ராஜநிந்தனைக் குற்றத்துக்குரியது. துரைமார்களுக்கு எதிராக இராணுவத்தினரையும் பொதுமக்களையும் தூண்டிவிடுவது தவறான செயல் தெரியுமா?” என்று கேள்வியை எழுப்பினார். அச்சமென்பதே சிறிதும் இல்லாத கிருஷ்ண சுவாமி சர்மா இப்படிப் பேசுவதற்காக சிறைக்குச் செல்லவும் தயாராகவே இருப்பதாகத் தெரிவித்துவிட்டு தன் பேச்சைத் தொடர்ந்தார்.

அந்த அலட்சியமான கூற்று அந்த ஒப்பந்தக்காரரின் எண்ணத்தைச் சீண்டிவிட்டது. அவர் பெயர் கிருஷ்ணசாமி ஐயர். காவல் நிலையங்களில் சிறுசிறு மராமத்து வேலைகளைப் பார்க்கும் ஒப்பந்தக்காரர். இராணுவத்துக்கு எதிராக யாரேனும் எழுததோ பேசவோ செய்தால் அத்தகவலை அருகிலிருக்கும் இராணுவ முகாமுக்கு உடனடியாகத் தெரிவிக்கவேண்டும் என்ற சுற்றறிக்கையை அரசாங்கம் அனுப்பியிருந்த சமயம் அது. அடுத்து சில நாட்களுக்குப் பிறகு மராமத்து வேலைக்காக ஏதோ ஒரு நிலையத்துக்குச் சென்றிருந்த அந்த ஒப்பந்தக்காரர் கரூரில் நிகழ்ந்த கூட்டத்தைப்பற்றியும் மேடையில் பேசிய பேச்சாளரை நோக்கி தான் கேள்வி கேட்ட சம்பவத்தைப்பற்றியும் பெருமையோடு எல்லாக் காவலர்களிடமும் பகிர்ந்துகொண்டார்.

அச்சிறு செய்தி பேருருவம் எடுக்கும் என அப்போது ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. தற்செயலாக அதைக் கேட்ட அந்த நிலையத்தின் அதிகாரி உடனடியாக அந்தச் சம்பவத்தைத் தீவிரமாக விசாரிக்கும்படி கரூர் நிலையத்துக்கு எழுதினார். அதையொட்டி அது ஒரு வழக்காக மாற்றப்பட்டு சென்னையில் தங்கியிருந்த சர்மா கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளானார். சாதாரணமான அவருடைய சொற்கள் சதிவழக்குக்குரியவையாக மாற்றப்பட்டு, அந்தக் கோணத்தில் விசாரணை தொடர்ந்தது. விசாரணையின் முடிவில் ஐந்து வருட காலம் நாடுகடத்தும் தண்டனை வழங்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் அனைத்தும் அத்தண்டனையைக் கண்டித்து கட்டுரைகள் வெளிவந்தன.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு மறுபரிசீலனைக்குச் சென்றது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்புகளைக் கூறியதால் முடிவை எட்டமுடியவில்லை.  அதனால் அவ்வழக்கு இறுதித்தீர்ப்புக்காக பிரிட்டனுக்குச் சென்றது. அங்கு வாத விவாதங்களுக்குப் பிறகு, நாடுகடத்தல் தண்டனையைக் குறைத்து மூன்றாண்டு காலம் சிறைத்தண்டனையே போதும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில் விசாரணைக்கைதியான சர்மா தண்டனைக்கைதியாக கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அந்தச் சிறையில் அப்போது வ.உ.சிதம்பரம் பிள்ளையும் அடைக்கப்பட்டிருந்தார். இருவரும் சிறையிலேயே நட்புகொண்டனர்.

சிறைத்தண்டனையும் துன்பங்களும் சர்மாவை தளர்வுறச் செய்யவில்லை. மாறாக, தேசவிடுதலையை ஒட்டி மேன்மேலும் உறுதி கொண்டவராகவே மாற்றியது. அதனால் விடுதலை பெற்ற பிறகு சோர்ந்துவிடாமல் சுறுசுறுப்பாக இயங்குபவராகவே சர்மா விளங்கினார்.  சென்னையில் தங்கி ஒரு பத்திரிகை அலுவலகத்தில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தபடி, தம் விருப்பத்துக்கேற்ற வகையில் சுதேசிப் பிரச்சாரத்திலும் ஈடுபடத் தொடங்கினார். அப்போதுதான் காஸ்மாபாலிடன் கிளப்பில் நடைபெற்ற  கூட்டத்தில் காந்தியடிகளைச் சந்தித்து உரையாட அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

விரைவில் ஆசிரமமொன்றை அமைக்கும் திட்டத்துடன் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்ற காந்தியடிகள் சிறிது கால இடைவெளிக்குப் பிறகு கோச்ரப் என்னும் கிராமத்தில்  25.05.1915 அன்று ஓர் ஆசிரமத்தை நிறுவினார் காந்தியடிகள். அதற்கு உதவும் வகையில் ஆமதாபாத்திலேயே வழக்குரைஞராக இருந்த அவருடைய நண்பர் ஜீவன்லால் தேசாய் தன் வீட்டையே ஒரு ரூபாய் வாடகைக்குக் கொடுத்தார்.  அப்போது அந்த ஆசிரமத்தில் இருபத்தைந்து பேர் இருந்தனர். அவர்களில் பதின்மூன்று பேர் தமிழர்கள். மற்ற பன்னிரண்டு பேர்களும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து வந்தவர்கள். ஆசிரமத்தில் இணைபவர்கள் சத்தியம், அகிம்சை, பிரம்மச்சரியம், நாவடக்கம், திருடாமை, சொத்துச் சேர்க்காமை, சுதேசி, உடலுழைப்பு, அஞ்சாமை, சர்வமதசமானத்துவம், தீண்டாமை ஒழிப்பு ஆகிய பதினோரு விரதங்களை ஏற்று, ஒரே சமையலறை உணவை உண்டு ஒரு குடும்பமாக வாழவேண்டும் என்று நிர்ணயித்திருந்தார் காந்தியடிகள். ஆசிரமம் தொடங்கப்பட்ட செய்தி கிடைத்ததும் பத்திரிகை வேலையைத் துறந்து நவம்பர் மாதத்தில் கோச்ரப் ஆசிரமத்தில் இணைந்துகொண்டார் சர்மா.

அடுத்த சில மாதங்களிலேயே தீவிரமாக கவனம் செலுத்தி ‘இந்திய மாதர்களில் நிலைமை’ என்னும் தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். மாதர்களின் இயக்கம், மாதர்களின் பூஷணம், மாதர்களில் சுயதர்மம், மாதர்களின் நிலைமை என நான்கு பகுதிகளாகப் பிரித்து இந்த நூலை எழுதினார் அவர். “மாதர்களே நாட்டில் ஏற்படும் சகல நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் காரணமாயிருந்தாலும், அம்மாதர்களைக் கொண்டே நம் பரதகண்டம் தானிழந்த ஐஸ்வர்யத்தையும் ஸ்தானத்தையும் சுதந்திரத்தையும் செல்வாக்கையும் மீட்டுக்கொள்ளமுடியும் என்பதால் இப்புத்தகத்தை எழுதினேன்” என்று தன் முன்னுரையில் குறிப்பிட்டார் சர்மா.

ஓராண்டுக்குப் பிறகு ஆசிரமத்தை கோச்ரப்பிலிருந்து சபர்மதிக்கு  இடமாற்றம் செய்யும் வேலை தொடங்கியது. அப்போது ஆசிரமத்திலிருந்து அவர் தமிழகத்துக்குத் திரும்பி வந்தார். சின்ன காஞ்சிபுரத்தில் தங்கி சுதந்திர வேட்கையைத் தூண்டும் வண்ணம் ஏராளமான துண்டறிக்கைகளை ஒவ்வொரு வாரமும் எழுதினார். அங்கிருந்த பெருந்தேவி விலாஸ் பிரஸ் என்னும் அச்சகம் அத்துண்டறிக்கைகளை அச்சிட்டு விநியோகம் செய்தது. ஒருமுறை 20.03.1916 அன்று அவர் ’ஸ்வதர்மம்’ என்னும் தலைப்பில் ஒரு துண்டறிக்கையை அச்சிட்டு வெளியிட்டார்.

இந்தியாவின் செல்வம் சுரண்டப்பட்டு இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்படும் விவரங்களை ஏராளமான புள்ளிவிவரங்களோடு அவர் அக்கட்டுரையை எழுதியிருந்தார். மேலும், இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் சகோதரத்துவ உணர்வுடன் சுதந்திரம் பெற உழைக்கவேண்டும் என்றும் சுதந்திரம் ஒன்றே நல்லதொரு தீர்வாகும் என்றும் அதுவே நம் நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஸ்வதர்மாகும் என்றும் வலியுறுத்தி எழுதியிருந்தார். அதை யாரோ ஒருவர்  காவல்துறையின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல, துண்டறிக்கையை அச்சிட்ட அச்சகத்தின் மீது இந்தியப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது. செங்கற்பட்டு மாவட்ட மாஜிஸ்டிரேட் ஜே.கே.பிரயண்ட் என்பவர் வழக்கை விசாரித்து அறிக்கையை எழுதிய சர்மாவையும் வெளியிட்ட அச்சக உரிமையாளரையும் அழைத்து எச்சரித்து அனுப்பிவைத்தார்.

1917இல் முதல் உலகப்போரைக் காரணமாகக் காட்டி, எதிர்ப்பு இயக்கங்களை ஒடுக்குவதற்காக இந்தியாவில் பாதுகாப்பு ஒழுங்குமுறைச்சட்டத்தை அறிவித்த ஆங்கிலேய அரசு, அரசியல் களத்தில் தீவிரமாக  இயங்கிவந்த இந்தியர்களை அச்சுறுத்தி ஒவ்வொருவராகக் கைது செய்யத் தொடங்கியது.  தத்தம் சிறைவாசத்தை முடித்துக்கொண்டு விடுதலை பெற்றிருந்த சுப்பிரமணிய சிவாவும் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் இணைந்து மீண்டும் பொதுவாழ்வில் ஈடுபடத் தொடங்கினர். அன்னிபெசன்ட் அம்மையாரின் அரசியல் நடவடிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிடினும் பூனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய திலகரின் ஆல் இந்தியா ஹோம் ரூல் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டனர். சென்னையில் நடைபெற்ற பல்வேறு கண்டனக்கூட்டங்களில் கலந்துகொண்டு இருவரும் உரையாற்றினர். அவர்களோடு சேர்ந்து சர்மாவும் அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

1917இல் இந்திய வைசிராயாக இருந்த செம்ஸ்ஃஃபோர்டும் அரசு செயலரான மாண்டேகுவும் இணைந்து இந்தியாவில் ஜனநாயக அடித்தளம் கொண்ட ஒரு நிர்வாகத்தை அறிமுகப்படுத்தப் போவதாக உரைத்துவிட்டு சில சீர்திருத்தங்களை அறிவித்தனர். சட்ட அமலாக்கம், வரிவிதிப்பு, பாதுகாப்பு போன்ற முக்கியத்துறைகள் அனைத்தும் வைசிராயின் கட்டுப்பாட்டிலேயே இருக்க, சுகாதாரம், கல்வி, பொதுப்பணி போன்ற துறைகளை மட்டும் தேர்தல் வழியாகத் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றங்களின் பொறுப்பில் ஒப்படைப்பதுதான் அச்சீர்திருத்தத்தின் உள்நோக்கம். அந்த அறிக்கையின் பின்னணியில் மறைந்திருக்கும் ஏமாற்றும் அம்சங்களை அம்பலப்படுத்தி பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதினார் சர்மா. அதே சமயத்தில் பாரதியார் எழுதி ’பாரத ஜனசபை’ என்னும் தலைப்பில் முதல் பாகமாக வெளிவந்த காங்கிரஸ் வரலாற்றைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்துக்கான கட்டுரைகளையும் தொடராக எழுதி வந்தார். இதற்காகவே ஆங்கிலத்திலிருந்து பல்வேறு கட்டுரைகளைத் தேடித் திரட்டி மொழிபெயர்க்கும் பணிகளிலும் ஈடுபட்டார்.

போர்க்காலத்தில் அளித்த வாக்குறுதிகளையெல்லாம் போர் முடிந்த பிறகு பிரிட்டன் மறந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் சுயாட்சிக்கான கோரிக்கையும் அதற்குரிய போராட்டமும் வலுக்கும் என்பதை உணர்ந்து, அதை எதிர்கொள்ளும் விதமாக முன்னெச்சரிக்கையாக புதிதாக கடுமையானதொரு சட்டத்தைக் கொண்டுவர திட்டமிட்டது. ரெளலட் என்பவர் அச்சட்டத்துக்கான வடிவத்தைக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். சபர்மதி ஆசிரமத்தில் உடலநலம் குன்றியிருந்த காந்தியடிகள், அதைக்கண்டு வாளாவிருக்கமுடியாமல் பம்பாய்க்கு வந்து ஒரு சத்தியாகிரக சபையை அமைத்தார். தொண்டர்களிடமிருந்து சத்தியாகிரக உறுதிமொழியில் கையெழுத்து வாங்கும் வேலையைத் தொடங்கினார். நாடு முழுதும் அச்சட்டத்தை எதிர்ப்பதற்கான தேவை குறித்து ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் அவர் சென்னைக்கு வந்தார். 18.03.1919 அன்று  சென்னையில் காலடி எடுத்துவைத்த நாளன்று ரெளலட் சட்டம் இயற்றப்பட்டுவிட்டது.

உடல்நலத்தைப் பொருட்படுத்தாது, காந்தியடிகளும் சென்னை, தஞ்சை, திருச்சி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி என பல இடங்களுக்குச் சென்று அதிகாரத்துக்கு எதிராக அகிம்சை வழியில் தம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் சத்தியாகிரகத்தின் வழிமுறைகளை எடுத்துரைத்துவிட்டு 30.04.1919 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டார். அப்போது டில்லியில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பொதுவேலை நிறுத்தம் செய்யவேண்டும் என்று காந்தியடிகள் சொன்னதைத் தவறாகப் புரிந்துகொண்ட தொண்டர்கள் ஏப்ரல் ஆறாம் தேதியே வேலை நிறுத்தத்தைத் தொடங்கிவிட்டனர்.

ஏற்கனவே எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளை மீறி தொண்டர்கள் வன்முறையில் இறங்கிவிட்டனர். அது காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டுக்கு வழிவகுத்துவிட்டது. அதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் அவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திவிட்டது. காவலர்களின் நடவடிக்கைகளைக் காட்டிலும் மக்கள் வன்முறையில் ஈடுபட்டதுதான் அவருக்கு அதிக கவலை அளித்தது. மக்கள் சரியாக ஆயத்தமாவதற்கு முன்பேயே தாம் போராட்டத்தைத் தொடங்கிவிட்டதாகக் கருதிய காந்தியடிகள் உடனடியாக போராட்டத்தை நிறுத்திவைத்தார்.  காந்தியடிகளின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் மன அமைப்பைக் கொண்டிருந்தபோதும் சர்மாவால் அன்று அவருடைய அறிவிப்பை ஏற்றுக்கொள்ள மனம் இடம் தரவில்லை. அதனால் காந்தியடிகளின் முடிவு போராட்டத்தின் வீச்சை வெகுவாகக் குறைத்துவிடும் என சுட்டிக்காட்டி மேடைகளில் பேசத் தொடங்கினார்.

13.04.1919 அன்று எதிர்பாராத விதமாக பஞ்சாபில் அறுவடைத்திருநாளான பைசாகியைக் கொண்டாட ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் குழுமியிருந்த பொதுமக்களை ரெளலட் சட்ட எதிர்ப்பாளர்கள் எனக் கருதிய காவல்துறையினர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்தத் துப்பாக்கிச்சூட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். ஏறத்தாழ 379 பேர் உயிரிழந்தனர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து போராட்டங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் தேர்தல் சீர்திருத்தச்சட்டம் தொடர்பாகவும் ஓர் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள பீதாநாத் பள்ளி வளாகத்தில் இந்து பத்திரிகை ஆசிரியரான கஸ்தூரி ரங்க ஐயங்கார் தலைமையில் நடைபெற்றது.  வ.உ.சி., சி.விஜயராகவாச்சாரி, சத்தியமூர்த்தி, ரங்கசாமி ஐயங்கார், பட்டாபி சீத்தாராமையா, இராஜாஜி போன்றோரோடு சர்மாயும் கலந்துகொண்டு உரையாற்றினார். மத்திய அளவில் இல்லாவிட்டாலும் மாகாண அரசாங்கத்தில் இந்தியர்களின் பங்கேற்பை தேர்தல் சீர்திருத்தம் உறுதிப்படுத்துவதால், தேர்தல் சீர்திருத்தச்சட்டத்துக்கு ஒத்துழைப்பை அளிக்கலாம் என சிலர் உரையாற்றினர். முழுமையான ஒத்துழையாமையே இப்போதைய வழி என அறிவித்த காந்தியடிகளின் கூற்றையொட்டி சர்மா உள்ளிட்ட சிலர் உரையாற்றினர்.  காந்தியடிகள் மீது சர்மா கொண்டிருந்த வருத்தம் சிறிது காலத்திலேயே பனியென மறைந்துபோனது.

தீவிரமான யோசனைகளுக்குப் பிறகு காந்தியடிகள் நாடு தழுவிய அளவில் ஒத்துழையாமை இயக்கத்தை 04.09.1920 அன்று தொடங்கினார். ஆங்கிலேய அரசு அளித்த கெளரவப்பட்டங்களைத் துறந்துவிட வேண்டும் என்றும் யாரும் வரி கட்டக்கூடாது என்றும் குடிமைப்பணி ஊழியர்கள் தம் பதவிகளைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் ஆங்கிலேய ஆட்சி இனிமேலும் தொடரமுடியாத நிலையை ஏற்படுத்தவேண்டும் என்றும் காந்தியடிகள் கருதினார். அவருடைய அழைப்பை ஏற்று நாடெங்கும் பல தலைவர்களும் தொண்டர்களும் தத்தம் பதவிகளைத் துறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சர்மாவும் அப்போராட்டத்தில் பங்கேற்று பல பொதுக்கூட்டங்களில் தொடர்ந்து உரையாற்றி, பலரையும் அப்போராட்டத்தின்பால் கவர்ந்திழுக்க முயற்சி செய்தார்.

சர்மாவுடைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனித்துவந்த காவல்துறை 1921இல் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கி சிறையில் அடைத்தது. தன் தண்டனைக்காலத்தை அவர் முதலில் வேலூர் சிறையிலும் பிறகு கடலூர் சிறையிலுமாக மாறி மாறி இருந்து கழித்தார். சிறைப்பட்டிருந்த காலத்தில் இந்தியா இழந்த தனம், இராஜரிக சாஸ்திரம் ஆகிய இரு நூல்களை அவர் எழுதி முடித்தார்.

இந்தியாவை ஆட்சி செய்துவந்த இங்கிலாந்து அரசாங்கம் ஆட்சி நிர்வாகச்செலவு என்ற கணக்கின் கீழ் ‘ஹோம் சார்ஜ்’ என்ற பெயரில் நடைபெற்ற சுரண்டலை ’இந்தியா இழந்த தனம்’ நூலில் ஆதாரங்களோடு வெளிப்படுத்தினார் சர்மா. இராணுவச்செலவு, சம்பளங்கள், ஓய்வூதியங்கள், ஆயுதச்செலவு என எல்லாச் செலவினங்களையும் இந்தியாவின் கடன் பற்றுக் கணக்கில் எழுதி இந்தியாவைச் சுரண்டியது ஆங்கிலேய அரசு. இந்திய வளங்களைச் சுருட்டிக் கொள்ளையடித்து இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று தம் நாட்டை வளப்படுத்திக்கொண்டது.

எல்லா வழிகளிலும் இந்தியாவிலிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதி பணமாகவே இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது. எஞ்சிய பகுதி பணத்தின் உதவியோடு இந்தியப்பண்டங்கள் வாங்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பப்பட்டது.  இந்தியாவின் செல்வத்தால் இங்கிலாந்து படிப்படியாக முன்னேறியது. அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் கொடுத்த சம்பளத்தொகையும் பணப்பயன்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே சென்றதாலும் இறக்குமதித்தொகையைவிட ஏற்றுமதித்தொகை அதிகரித்ததாலும் கிழக்கிந்தியக் கம்பெனி காலத்திலிருந்து உருவாகி நிலைத்த கடன்தொகையாலும் இந்தியா இழந்த தனம் பெருகிக்கொண்டே போனது.

பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரைக்கும் இந்தியா கடனற்ற நாடாகவே விளங்கியது கிழக்கிந்தியக் கம்பெனியின் வருகையின் காரணமாக இந்தியா கைப்பற்றப்பட்ட பிறகு, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவுக்கு பத்து கோடி ரூபாய் கடன்சுமை ஏற்பட்டுவிட்டது. முதன்முதலாக இந்தியா கடன்சுமை கொண்ட நாடாக மாறத் தொடங்கியது அப்போதுதான். இது மெல்ல மெல்ல வளர்ந்து 1920இல் 566 கோடி ரூபாயாகப் பெருகிவிட்டது. இப்படி எல்லாவிதமான ஆதாரங்களையும் திரட்டித் தொகுத்து, இந்தியாவின் மீது கடன்சுமை எப்படி அழுத்தத் தொடங்கியது என்னும் அருமையான வரலாற்றுச்சித்திரத்தைத் தன் நூலில் அளித்தார் சர்மா. சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் அப்பிரதி நூலாகவும் வெளிவந்தது. எனினும் அந்நூல் அதிக அளவில் பரவிவிடாதபடி வெகுவிரைவிலேயே ஆங்கிலேய அரசு அந்நூலைத் தடை செய்தது.  

காந்தியடிகளின் ஆசிரமத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்நாட்டில் ஓர் ஆசிரமத்தை அமைக்க சர்மா விரும்பினார். அதற்காகவே சென்னையை அடுத்து பொன்னேரியில் நிலம் வாங்கினார். ஆனால் ஆசிரமம் அமைக்கத் தேவையான பணிகளைச் செய்ய அவரால் நேரம் ஒதுக்க இயலவில்லை. நாட்டில் நிலவிய கொந்தளிப்பான சூழல் காரணமாக அவர் தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் அதிக அளவில் ஈடுபட வேண்டியிருந்தது. அதனால் அவருடைய கனவுத்திட்டம் கனவாகவே கரைந்துவிட்டது.

இனம், மதம், பாலினம், சாதி, நிறம் போன்ற வேறுபாடுகளைக் கடந்த மனிதநேயத்தின் உலகளாவிய சகோதரத்துவத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தோன்றிய பிரம்மஞான சபை சென்னையில் அடையாறைத் தலைமையிடமாகக் கொண்டு அக்காலத்தில் இயங்கிவந்தது. அன்னிபெசன்ட்டின் பிரும்மசமாஜ கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் பலர் அங்கிருந்தனர். சிலர் சபைக்கு வெளியே வீடு கட்டிக்கொண்டு வாழ்ந்தனர். சென்னையிலேயே தலைமைப்பொறியாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற நீலகண்ட சாஸ்திரி என்பவரும் அவர்களில் ஒருவர். 1920இல் வாராணசியில் உள்ள மத்திய இந்துக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய அருண்டேல் என்னும் ஆங்கிலேயர் அவ்வேலையைத் துறந்து சேவை செய்வதற்காக அடையாறுக்கு வந்து சேர்ந்தார். அங்கு சாஸ்திரியும் அருண்டேலும் சந்தித்து நண்பர்களானார்கள்.

அந்தப் பழக்கத்தின் விளைவாக நாற்பது வயதைக் கடந்த அருண்டேலுக்கும் பதினாறு வயது நிறைந்த சாஸ்திரியாரின் மகளான ருக்மணிக்கும் இடையில் காதல் அரும்பியது. காதலர் இருவருக்கும் மணம் முடித்துவைக்க சாஸ்திரியார் விரும்பினார். அவர்கள் மணம் செய்துகொள்வதை விரும்பாத சாஸ்திரியாரின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஹோம்ரூல் இயக்கத்தையும் அன்னி பெச்சன்ட்டையும் தனிப்பட்ட காரணங்களுக்காக வெறுத்தவர்கள் அனைவரும் இத்தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பத்திரிகை ஊடகங்களில் அதை ஒரு பெரிய பிரச்சினையாக எழுதி எதிர்ப்புக்கு ஆதரவைத் திரட்டினர். ஓர் ஆங்கிலேயன் ஒரு தமிழ்ப்பெண்ணை மணப்பதா என மேடைகளில் விவாதம் செய்தனர். காங்கிரஸைச் சேர்ந்த பெரிய தலைவர்கள் கூட அத்தருணத்தில் தம் எதிர்ப்பைத் தெரிவித்து அத்திருமணத்தைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். வயதில் இளையவராக இருந்தாலும், சர்மா எப்போதும் சாதி,மத சார்புகளுக்கு அப்பாற்பட்ட சிந்தனைகளை உடையவராகவே இருந்தார். அவர் அக்காதல் திருமணத்தை ஆதரித்து அறிக்கையை வெளியிட்டார். அத்துடன் திரு.வி.க.வுடன் இணைந்து நின்று அத்திருமணம் இனிதே நடைபெற துணையாகவும் இருந்தார்.

12.09.1921 அன்று இரவு ஒரு மணியளவில் சென்னையில் கவிஞர் பாரதியார் மறைந்தார். அவருடைய மறைவுச்செய்தி கிடைத்ததும் சர்மா பாரதியாருடைய வீட்டுக்கு ஓடோடிச் சென்றார். மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், திருமலாச்சாரியார், ஹரிஹரி சர்மா, சின்னசாமி, நெல்லையப்பர், நீலகண்டன் போன்றோரும் வந்து சேர்ந்தனர் ஹரிஹரி சர்மாவும் கிருஷ்ண சுவாமி சர்மாவும் பாரதியாரின் உடலை சுடுகாடு வரைக்கும் சுமந்துசென்றனர். தகனத்துக்கு முன்  சுடுகாட்டிலேயே நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில் கிருஷ்ண சுவாமி சர்மா உணர்ச்சி ததும்ப பாரதியாரைப்பற்றி உரையாற்றினார். பாரதியாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர் இயற்றிய கீதங்கள் பாடப்பட்ட பிறகு, தீ மூட்டப்பட்டது.

சிறைவாசத்தின் விளைவாக அவருக்கு சிங்காரவேலரின் நட்பு கிடைத்தது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகும் அந்நட்பு நீடித்தது. 13.04.1923 அன்று திருவல்லிக்கேணி கடற்கரையில் ஜாலியன் வாலாபாக் நினைவுநாள் கூட்டம் சிங்காரவேலர் தலைமையில் நடைபெற்ற போது , அக்கூட்டத்தில் கிருஷ்ணசுவாமி இந்தியா விடுதலை பெறவேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்தி உரையாற்றினார். இரு வாரங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து உரையாற்றும் வகையில் மற்றொரு கூட்டமும் நடைபெற்றது. இந்தியாவின் முதன்முறையாக மே தினத்தைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம்தான் அது. சிக்காகோவில் நடைபெற்ற மேதினப் போராட்டத்தின் நினைவாக 01.05.1890 முதல் மே தினத்தை உலகெங்கும் வாழும் உழைக்கும் தொழிலாளர்கள் கொண்டாட வேண்டும் என பாரிஸ் நகரில் நடைபெற்ற தொழிலாளர் அமைப்பு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்புக்கு இணங்கி, இந்தியாவில் முதன்முறையாக சிங்காரவேலர் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய சர்மா தன் உரையில் இந்தியாவில் மதவேற்றுமைகளும் சாதி வேற்றுமைகளும் முதன்மையாகக் களையப்படவேண்டும் என்றும் அம்முயற்சியில் ஏற்படக்கூடிய தடைகளைக் கடந்து சென்றால் மட்டுமே புதிய சமுதாயத்தை அமைக்கமுடியும் என்றும் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சிவா, எம்.பி.எஸ்.வேலாயுதம் போன்றோரும் உரையாற்றினார்.

இத்தாலி தேசத்தின் முதன்மைத்தலைவராக இருந்த மாஜினி, தன் நாட்டை எப்படியெல்லாம் பாடுபட்டு முன்னுக்குக் கொண்டுவந்தார் என்பதை விளக்கமாகக் கூறும் வகையில் மாஜினியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக எழுதி வெளியிட்டார் சர்மா. மாஜினியும் அவருடைய குழுவினரும் ஏராளமான துன்பங்களையும் இழப்புகளையும் எதிர்கொண்ட போதும், இத்தாலியின் விடுதலைக்காக அயராது பாடுபட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் அந்தப் புத்தகத்தில் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன. இப்புத்தகத்தின் கருத்துகள் வெகுவேகமாகப் பரவுவதைக் கவனித்த அரசு, அப்புத்தகத்தைத்  தடை செய்ததோடு, அப்புத்தகங்களை விற்கும் விற்பனை நிலையங்களிலெல்லாம் சோதனைகள் செய்து அப்புத்தகங்களைப் பறிமுதல் செய்து எரிக்கத் தொடங்கியது.

1924ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வ.வே.சு.ஐயர் நடத்திவந்த சேரன்மாதேவி குருகுலத்தில் சாதி வேறுபாடு பார்க்கப்படுகிறது என குற்றம் சுமத்தி ஒரு போராட்டம் எழுந்தபோது, கிருஷ்ண சுவாமி சர்மா அந்த நடவடிக்கையைக் கண்டித்து உடனடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அறத்தை மட்டுமே வாழ்க்கையின் அடிப்படை அளவுகோலாக தம் வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்தார் சர்மா.  சாதிமத உணர்வைக் கடந்து சிந்திக்கும் சமத்துவப் பார்வை அவர் நெஞ்சில் இயல்பாகவே குடிகொண்டிருந்தது.

1924ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் 15,16 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அச்சமயத்தில் சர்மா, 1925ஆம் ஆண்டுக்குரிய மாநாட்டை தம் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் நடத்தவேண்டும் என்றொரு கோரிக்கையை முன்வைத்தார். தலைவர்கள் அனைவரும் அவருடைய முடிவை ஏற்றுக்கொண்டனர். 1925ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் 21,22 ஆகிய தேதிகளில் மாநாட்டை நடத்தலாம் என நாளும் குறிக்கப்பட்டுவிட்டது. கெடுவாய்ப்பாக, மாநாடு நடைபெறுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே சர்மா மறைந்துவிட்டார்.

அவர் வாழ்ந்த தெருவில், அவருடைய உடலை சுடுகாடு வரைக்கும் எடுத்துச் செல்லக்கூட ஒருவரும் முன்வராமல் புறக்கணித்தனர். இறுதியில் கே.எஸ்.பார்த்தசாரதி என்பவர் ஒரு மாட்டுவண்டியைக் கொண்டுவந்து, சர்மாவின் உடலை ஏற்றிக்கொண்டு சுடுகாட்டுக்குச் சென்றார். அவருக்கு இறுதிச்சடங்கு செய்யவோ, கொள்ளி வைக்கவோ கூட ஒருவரும் இல்லை. சுடுகாடு வரைக்கும் வந்த அவருடைய மனைவியே சர்மாவுடைய உடலுக்கு எரியூட்டினார்.

 

 

 

கிருஷ்ணசுவாமி சர்மா காஞ்சிபுரத்தில் 22.03.1887 அன்று பிறந்தார். தந்தையார் பெயர் குடவாசல் சடகோபாச்சாரியார். தாயார் பெயர் பெருந்தேவி. அவ்விருவருமே காங்கிரஸ் மீது ஈடுபாடு கொண்டவர். கிருஷ்ண சுவாமி சர்மா கைக்குழந்தையாக இருந்தபோதே அலகாபாத், கல்கத்தா ஆகிய நகரங்களில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளுக்கு பெற்றோருடன் சென்றவர். அந்த அனுபவத்தின் விளைவாக பதினாறு வயதில் தேனாம்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில் தொண்டராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்.  பம்பாய் மாநாட்டுக்குத் தனியாகவே சென்றுவந்தார். 1905இல் வங்கப்பிரிவினையை எதிர்த்துத் தோன்றிய வந்தே மாதரம் இயக்கத்துடன் இணைந்து பணியாற்றினார். அதனால் ’வந்தே மாதம் கிருஷ்ண சுவாமி சர்மா’ என்றும் மயிலாப்பூரில் சில காலம் தங்கியிருந்ததால் ’மயிலாப்பூர் கிருஷ்ண சுவாமி சர்மா’ என்றும் தொடக்கக்காலத்தில் அனைவராலும் அழைக்கப்பட்டார். சிறைத்தண்டனைக்கு அஞ்சாமல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். முப்பத்தெட்டு வயதிலேயே 23.06.1925 அன்று மறைந்தார். அக்குறுகிய ஆயுளில் அவர் இருபத்தொரு நூல்களை எழுதி முடித்தார். ஸ்வராஜ்யம், உலகசிரேஷ்டர் யார்? மகாத்மா காந்தி, மகாத்மா காந்தியின் ஆன்ம சக்தியும் சாந்திநிலையும், இந்தியா இழந்த தனம், இந்திய மாதர்களின் நிலைமை, இந்தியாவில் கல்வி போன்ற சமூக அரசியல் நூல்களும் நெப்போலியன், ஜோசப் மாஜினி, மோதிலால் நேரு, அசோகர், சரோஜினி, திலகர்,, மகாத்மா காந்தியடிகள். லாலா லஜபதி ராய், சிவாஜி, டால்ஸ்டாய் போன்றோரைப்பற்றிய வாழ்க்கை வரலாறு நூல்களும் அந்த நீண்ட பட்டியலில் அடங்கும். தமது நூல்களை வெளியிடுவதற்காகவென்றே அரசியல் ஞான போதினி என்னும் பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார். அவர் எழுதிய ‘புத்த ஜாதககதைகள்’ என்னும் நூல் அவருடைய மறைவுக்குப் பிறகு திரு.வி.க.வின் முன்னுரையோடு வெளிவந்தது. அவருடைய சுருக்கமான வாழ்க்கைவரலாற்றை ’தேசிய மாவீரன் காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா’ என்னும் தலைப்பில் பெ.சு.மணி எழுதி வெளியிட்டார். கரூர் சதி வழக்கு தொடர்பான ஆவணங்களையெல்லாம் அலசி ஆய்வுசெய்து காலவரிசைப்படுத்தி ‘கரூர் சதி வழக்கு கிருஷ்ண சுவாமி சர்மா’ என்னும் தலைப்பில் முத்துக்குமார் என்னும் வழக்கறிஞர் எழுதிய புத்தகம் சந்தியா பதிப்பகம் வழியாக சமீபத்தில் வெளிவந்துள்ளது.

 

(சர்வோதயம் மலர்கிறது – ஜனவரி 2025)