பிரதமரான நேருவிடம் ஒரு நேர்காணலில் “காந்தியிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?” என்றொரு கேள்வியை ஒரு நிரூபர் கேட்டார். அதற்கு நேரு ”அச்சமின்மையும் எளிமையும் நல்லிணக்கப்பார்வையும் உண்மையும் ஊக்கமும் கொண்ட செயல்திறமையும் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட முக்கியமான விஷயங்கள். நான் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அவர் இதைத்தான் கடைசி மூச்சு வரை கற்றுக்கொடுக்க முயற்சி செய்துகொண்டே இருந்தார்” என்று பதில் சொன்னார். காந்தியடிகளை இதைவிட ஒரு சிறந்த ஒரு பதிலால் ஒருவரும் வரையறுத்துவிட முடியாது.
பத்தொன்பதாம்
நூற்றாண்டு வரைக்கும் இந்தியச்சூழலில் நிலவிவந்த இறுக்கமான சாதியமைப்பு ஒவ்வொரு பிரிவினருக்கும்
ஒரு தொழிலை வரையறுத்து கட்டுப்படுத்தி வைத்திருந்தது. உத்தரவுகளுக்குப் பணிந்துபோவதும்
ஒதுங்கி வாழ்வதும் மட்டுமே வாழ்க்கை என்ற நம்பிக்கை ஒவ்வொருவரிடமும் இருந்தது. தன்
அரசியல் ஆசானான கோகலேயின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு இந்தியா முழுவதும் பயணம் செய்த காந்தியடிகள்
அச்சூழலை நேருக்கு நேர் கண்டுணர்ந்தார். ஆட்சியாளர்களை எதிர்ப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டிருந்தாலும்
மனிதர்களைச் சீர்திருத்தி செம்மைப்படுத்துவதையும் அதற்கு இணையான நோக்கமாக அவர் கருதினார்.
இரண்டும் வேறுவேறு என அவர் ஒருபோதும் நினைக்கவில்லை.
சீர்திருத்தம்
இல்லாத அரசியல் வீழ்ச்சியடைய வைக்கும் என்பதையும் அரசியல் இல்லாத சீர்திருத்தம் உரிமையில்லாத
வெறுமையை நோக்கித் தள்ளிவிடும் என்பதையும் காந்தியடிகள் எப்போதும் கருத்தில் கொண்டிருந்தார்.
அதனாலேயே காங்கிரஸ் இயக்கத்தில் அரசியல் விடுதலையை நோக்கி அடியெடுத்துவைத்த செயல்பாடுகள்
நிகழ்ந்த தருணத்திலேயே, வெவ்வேறு தேசிய நிர்மாணப்பணிகளை முன்னெடுக்கும் செயல்பாடுகளும்
நிகழ அவர் வழிவகுத்தார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
இதற்காகவே
பயிற்சி பெற்ற தொண்டர்கள் தம் குடும்பங்களிலிருந்து வெளியேறி தம் சொந்த வாழ்க்கையின்பங்களைக்
கருதாது தேசத்தின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று சிறுசிறு அமைப்புகள் வழியாக மக்களுக்குத்
தொண்டாற்றி அவர்களை இணைத்தனர். அரசியல் என்பது மோதல் அல்ல, அது அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக
நிற்கும் செயல்பாடு என்பதை அத்தொண்டர்கள் ஒவ்வொரு
இந்தியனின் நெஞ்சிலும் ஆழமாகப் பதியும் வண்ணம் செய்தனர். இப்படி அரசியல்படுத்தப்பட்ட
எளிய மக்களே பிற்காலத்தில் அரசியலில் ஈடுபட்டனர்.
சாதியமைப்பில்
கிட்டாத நீதியை வழங்கும் நிர்வாக அமைப்பை அன்றைய ஆங்கிலேய அரசு உருவாக்கியிருந்தது
என்பதை ஒருவரும் மறுக்கமுடியாது. கண்காணிப்புக்குப்
பெயர்போன அந்த அமைப்பு பொதுமக்களிடையே அமைதியான வாழ்க்கைச்சூழலை உறுதி செய்திருந்தது.
ஆங்கிலேய அரசியல் அமைப்பின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்க அதுவே முக்கிய
காரணம். இந்த நம்பிக்கையையும் ஆதரவையும் ஈட்டிய அரசு, இன்னொரு பக்கத்தில் அளவற்ற இந்தியச்
செல்வத்தை நாள்தோறும் சூறையாடியபடி இருந்தது.
பொதுமக்களுக்கு
அந்தச் சுரண்டலை காந்தியடிகளின் தொண்டர்களே முதன்முதலாக அம்பலப்படுத்தினர். ஆங்கிலேய
ஆட்சியை ஏன் அப்புறப்படுத்த வேண்டும் என்பதை விரிவான ஆதாரங்களோடு எழுதவும் பேசவும்
செய்தனர். ஆங்கிலேயர்கள் அணிந்திருக்கும் முகமூடியைப் புரிந்துகொள்ள வைத்தனர். பொதுமக்களின்
ஆதரவை தாம் இழந்துவிட்டோம் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக அரசே புரிந்துகொள்ளும் வகையில்
செயல்பட்டனர். 1921இல் காந்தியடிகள் திட்டமிட்ட ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றி அரசாங்கத்துக்கு
அந்த உண்மையை முதன்முதலாக உணர்த்தியது. அந்த வெற்றிதான் பொதுமக்களையும் முதன்முதலாக
அச்சமற்றவர்களாக ஆக்கியது.
தனக்கு
அருகில் வாழும் ஒருவனுடைய ஆடம்பரமான வாழ்க்கையைத் தாமும் வாழவேண்டும் என நினைப்பது
மனித இயல்பு. ஆடம்பரத்தையும் வசதிவாய்ப்புகளையும் நோக்கி முன்னேறுவதையே வாழ்க்கையின்
முன்னேற்றம் என்பது அத்தகையோரின் நம்பிக்கை. அந்த எண்ணத்தை வேரோடு களைவதற்கு காந்தியடிகள்
முயற்சி செய்தார். எளிமையான வாழ்க்கையையே அனைவருக்கும் அவர் பரிந்துரைத்தார். இந்தியாவில்
அவர் உருவாக்கிய கோச்ரப் ஆசிரமம், சபர்மதி ஆசிரமம், வார்தா ஆசிரமம் என அனைத்து இடங்களிலும்
அவர் எளிய வாழ்க்கைமுறையே இயல்பாக அமையும்படி பார்த்துக்கொண்டார். ஆசிரமத்தில் தங்கியிருந்த
அனைவரையும் அந்த எளிய முறைக்குப் பழக்கினார்.
எளிய
ஆடைகள், எளிய உணவு, எளிய வீடு என்பதே அவர் உருவாக்கிய இலக்கணம். சுற்றுப்புறத்தை தூய்மையாக
வைத்திருத்தல், தம் தேவைகளுக்காக பிறரைச் சார்ந்திராமல்
தானே திரட்டிக்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொள்தல், வேலை முறைகளில் வேறுபாடு கருதாமல்
எல்லாவிதமான வேலைகளையும் உவப்போடு முன்வந்து செய்யும் மனப்பக்குவத்தை அடைதல் உள்ளிட்ட
பல இலக்கணங்களை அவருடைய ஆசிரம வாழ்க்கை அனைவருக்கும் கற்பித்தது. தோட்டத்தொழில், சுற்றுப்புறத்தை
தூய்மை செய்தல், கிணற்றிலிருந்து நீர் இறைத்தல், கழிவறைகளைத் தூய்மை செய்தல், சமைத்தல்
உள்ளிட்ட அனைத்துவிதமான வேலைகளையும் ஆசிரமத்தில் தங்கியிருந்த அனைவரும் சுழற்சி முறையில்
செய்தனர். இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்குச் சென்றிருந்தபோது
கூட அவர் வழக்கமான அணியும் ஆடைகளைத்தான் அணிந்துகொண்டு சென்றார்.
ஒருமுறை
அவர் கிணற்றிலிருந்து நீரெடுத்து தனி வாளியில் நிரப்பிக்கொண்டு குளிக்கத் தொடங்கினார்.
அப்போது அங்கு வந்த சில தொண்டர்கள் அதே கிணற்றிலிருந்து
வாளிவாளியாக நீரெடுத்து தலைமேல் ஊற்றி ஆனந்தமாகக் குளிக்கத் தொடங்கினர். அதைப் பார்த்ததும்
“குளிப்பதற்கு ஒரு வாளி நீரே போதும் என்கிற நிலையில் இதற்கு இத்தனை வாளி நீரை வீணாக்குகிறீர்கள்?”
என்று கேட்டார் காந்தியடிகள். “இயற்கையாகக் கிடைக்கக் கூடிய தண்ணீர்தானே? குளிப்பதில்
தவறில்லை என நினைத்தோம்” என்று பதில் சொன்னார்கள் அவர்கள்.
காந்தியடிகள்
அதை ஏற்றுக்கொள்ளவில்லை. “இந்தக் கிணறு நமக்காக மட்டும் சுரக்கவில்லை. எதிர்காலத் தலைமுறைக்காகவும்
சுரக்கிறது என்பதை மறக்கக்கூடாது. இயற்கை வளங்களிலிருந்து நமக்குத் தேவைப்படும் அளவுக்கு
மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கூடுதலாக எடுத்துப் பயன்படுத்துதல் கூட ஒருவகையிலான
சுரண்டல்தான்” என்றார். இயற்கை வளத்தைச் சுரண்டாத எளிமைதான் காந்தியடிகள் வலியுறுத்தும்
எளிமை.
காந்தியடிகள்
முன்னெடுத்த போராட்டங்களும் இயக்கங்களும்தான் இந்திய மக்களுக்கு ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தியது. கதர் இயக்கம், ஹரிஜன இயக்கம், கிராமசபை இயக்கம்
போல உருவான எண்ணற்ற அமைப்புகள் அனைவரையும் ஒருங்கிணைத்தன. சாதி, மத வேறுபாடுகளை மறந்து
கோடிக்கணக்கான மக்களை ஒரே கோட்டில் நிற்கவைத்தன. வெவ்வேறு பாகுபாடுகள் காரணமாக சாத்தியமற்றதாக
இருந்த உரையாடல் நிகழ அத்தகு போராட்டங்கள் வழிவகுத்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, காந்தியடிகள்
வகுத்தளித்த போராட்டங்களில்தான் பெண்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். பெண்களில் ஆயிரத்தில்
ஒருவர் மட்டுமே கல்வி கற்கும் சூழல் நிலவிய அக்காலத்தில் கற்றவர்கள், கல்லாதவர்கள்
என எவ்விதமான வேறுபாட்டையும் கருதாமல் பல பெண்கள் அரசியலியக்கத்தில் பங்கேற்றனர்.
இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் இரு தரப்பினர் மட்டுமே ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து வெற்றிபெற
நினைத்தனர். பாராளுமன்ற நடைமுறையில் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் முதல் தரப்பு.
பொதுமக்களிடையில் வீர உணர்வைத் தூண்டி வலிமையான எதிர்ப்புணர்வை ஏற்படுத்தி வெற்றிபெற
முடியும் என நம்பிக்கை வைத்திருந்தவர்கள் இரண்டாவது
தரப்பு. இரு தரப்பினருமே இரண்டடி முன்னால் சென்று நான்கடி பின்னால் வந்துகொண்டிருந்தார்கள்.
அந்த
நேரத்தில்தான் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த காந்தியடிகள் எளிமை, உண்மை, நேர்மை,
நல்லிணக்கம், அகிம்சை ஆகியவற்றை வலியுறுத்தும் இன்னொரு தரப்பினரை உருவாக்கினார். சம்பாரண்
போராட்டம், கேடா போராட்டம் போன்ற தம் செயல்பாடுகள் வழியாக பொதுமக்களின் நம்பிக்கையை
மிகவிரைவில் பெற்றார். கொஞ்சம்கொஞ்சமாக தேசமே அவரை மகாத்மா எனக் கொண்டாடி அவருக்குப்
பின்னால் திரண்டு நின்றது. ஆயினும், அவருக்கு அரசு உருவாக்கிய நெருக்கடிகள் அதிகமா,
அல்லது மாற்றுத்தரப்பினர் உருவாக்கிய நெருக்கடிகள் அதிகமா என்பது மிகப்பெரிய புதிர்.
(அமுதசுரபி
– ஜனவரி 2025)