Home

Sunday, 16 March 2025

புதிர்த்தருணங்களின் காட்சி

 

சங்க காலக் கவிஞர்கள் தம் பாடல்களை எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே வாழ்க்கையின் புரியாத புதிர்களை எழுதத் தொடங்கிவிட்டனர் என்றே சொல்லவேண்டும். நற்றிணையில் பாலைத்திணைப் பாடலொன்று ‘முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார் வாழ்நாள் வகை அளவு அறிஞரும் இல்லை’ என்னும் புதிரோடுதான் தொடங்குகிறது. தலைவியின் குரலில் அமைந்த அப்பாடல் இளமை அழிந்த முதுவயதில் இளமையை மீண்டும் திரும்பப்பெற முடியாது என்பதும் குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்திருப்போம் என ஒருவராலும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது என்பதும் ஏன் இந்தத் தலைவனுக்குத் தெரியவில்லை, இன்பம் துய்க்கவேண்டிய தருணத்தில் இவன் ஏன் பிரிந்துசெல்கிறான். இது புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறதே என புலம்பும் தலைவியின் மனக்குறையைத்தான் அப்பாடல் எதிரொலிக்கிறது. புரிந்துகொள்ள முடியாத புதிர்த்தருணங்கள் ஆதிகாலத்திலிருந்தே படைப்புக்களமாக விளங்கி வந்திருக்கின்றன.

காற்றில் அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள் காலில் காட்டைத் தூக்கிக்கொண்டு அலைகின்றன என்பது தேவதச்சனின் கவிதை வரி. வண்ணத்துப்பூச்சிகளைப்போல இந்த வாழ்க்கையும் தன் கால்களில் மட்டுமன்றி தோள்களிலும் தலைகளிலும் புதிர்களைச் சுமந்துகொண்டு அலைகின்றன. காலம்தோறும் படைப்பாளர்கள் அப்புதிர்களைக் காட்சிப்படுத்தியபடி இருக்கிறார்கள். ஏறத்தாழ அறுபதாண்டுகளாக படைப்புலகில் இயங்கிவரும் மூத்த எழுத்தாளர் விட்டல்ராவின் சிறுகதைகளில் அத்தகு தருணங்கள் ஆழ்கடலில் முத்தென அமைந்திருக்கின்றன.

விட்டல்ராவின் சிறுகதைகளில் ’அவளுக்கும் அவனுக்கும் இடையே’ என்ற சிறுகதை மிகவும் முக்கியமான ஒன்று. மேல்தோற்றத்துக்கு அதன் அமைப்பு மிக எளிதான ஒன்றாகக் காட்சியளித்தாலும், ஆழமும் செறிவும் பொருந்திய கதை அது. அங்கம்மா என்றொரு இளம்பெண் தன் குழந்தையோடு கிராமத்தில் தனியாக வசித்துவருகிறாள். தச்சுத்தொழில் தெரிந்த அவளுடைய கணவன் அபுதாபியில் வேலை செய்கிறான். அவ்வப்போது பணம் வந்தாலும் அவனிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை. மாதக்கணக்கில் தொடரும் அந்த மெளனம் அவளுக்கு வருத்தத்தை அளிக்கிறது. அவளுடைய ஆற்றாமையோடுதான் அந்தக் கதை தொடங்குகிறது.

அடுத்த தெருவில் வசிக்கிற படிப்பறிவு கொண்ட இளைஞனொருவன் உதவியோடு அவள் கடிதம் எழுதி அனுப்புகிறாள். அக்கடிதம் கிணற்றில் போட்ட கல்லாக அமைந்துவிடுகிறது. ஒரு பதிலும் இல்லை. சில நாட்கள் இடைவெளியில் இன்னொரு கடிதத்தை எழுதி அனுப்புகிறாள். அதற்கும் பதில் வரவில்லை. தனிமையில் வசிக்கும் அவளுடைய வீட்டுக்கு அவன் கடிதம் எழுதுவதற்கு அடிக்கடி செல்வதைப் பார்த்து சிலர் அவனைக் கேலி செய்கிறார்கள். வம்புக்கு இழுக்கிறார்கள். கடிதம் எழுதும் சமயங்களில்  அவள் பரிவோடும் உரிமையோடும் அவனிடம் உரையாடும் போக்கும் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் அந்த வட்டாரத்தில் படிப்பறிவு கொண்டவன் அவன் ஒருவனே என்பதால், அவளுக்குக் கடிதம் எழுதிக் கொடுப்பதை அவனால் மறுக்கவும் முடியவில்லை.

இச்சூழலில்தான் அங்கம்மாவிடமிருந்து கடிதம் எழுதுவதற்கான அழைப்பு மறுபடியும் வருகிறது.  வேண்டாவெறுப்பாக அங்கம்மாவின் வீட்டுக்குச் செல்கிறான். சில கடுமையான சொற்களைப் பயன்படுத்தி கடிதத்தில் இடம்பெற வேண்டிய செய்திகளைச் சொல்லிச் செல்கிறாள் அங்கம்மா. அவள் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்டபடி காத்திருந்துவிட்டு, தன் போக்கில் தன் மனத்தில் உதித்த சில வரிகளையும் சேர்த்து எழுதி கடிதத்தை முடிக்கிறான். அந்தக் கடிதத்தை அனுப்பிய சில நாட்களிலேயே அங்கம்மாவின் கணவன் ஊருக்குத் திரும்பி விடுகிறான். தன் கணவன் ஊரிலிருந்து வந்துவிட்டதாகவும் கடிதம் எழுதிய அவனுக்கு அன்புப்பரிசாக ஒரு சட்டைத்துணியைக் கொண்டுவந்ததாகவும் சொல்லிவிட்டு துணியைக் கொடுத்துவிட்டுச் செல்கிறாள். கணவனுக்குக் கடிதம் எழுதவேண்டும் என்னும் கோரிக்கையோடு தொடங்கும் சிறுகதை கணவன் திரும்பிவிட்டான் என்னும் மகிழ்ச்சிக்குறிப்போடு முடிவடைகிறது. அது கதையின் மேல்தளம் மட்டுமே. ஓர் ஒப்பனை. அவ்வளவுதான். அடித்தளத்தில் வேறொரு அச்சு அக்கதையைத் தாங்கிக்கொண்டிருக்கிறது. அங்கம்மாளின் கடிதவரிகளோ, வேண்டுகோளோ மட்டும் அவன்  ஊருக்குத் திரும்பி வருவதற்கான காரணமல்ல. அங்கம்மாளின் சொற்களுக்கு அப்பால் அவன் எழுதிய கூடுதல் சொற்களே முக்கியக்காரணம். அதன் கூர்மையும் அழுத்தமும் தாங்காமல்தான் அவன் வெளிநாட்டிலிருந்து வேகவேகமாகத் திரும்பிவிட்டான். அது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அவனை வரவழைக்கும் வகையில் என்ன எழுதியிருப்பான் என்பது புதிராகவே இருக்கிறது. அது புதிராகவே விடப்பட்டுள்ளது என்பதுதான் கதையின் வெற்றி.  அந்த மெளனமே விட்டல்ராவின் கலைவெற்றி.

’நேதாஜி இருக்கிறார்’ என்பது இன்னொரு சிறுகதை. வாடகைக்கு வீடு கேட்டு தேடிவந்த ஒருவருக்கு புதிதாகக் கட்டிய தன் வீட்டில்  காலியாக உள்ள ஒரு பகுதியை வாடகைக்குக் கொடுக்கிறார் ஒருவர். மாத வாடகை பற்றிய தகவலையெல்லாம் இரு தரப்பினரும் தெளிவாகப் பேசிக்கொள்கிறார்கள். புதிய குடும்பமும் குடியேறிவிடுகிறது. அவர் பர்மாவில் நீண்ட காலம் இருந்ததாக அறிமுகப்படுத்திக்கொள்கிறார். வாய்ப்பேச்சில் வல்லவராக இருக்கிறார். அடிக்கடி நேதாஜி பற்றி உரையாடுகிறார். நேதாஜி உயிரோடு இருக்கிறார் என்னும் தலைப்பில் ஒரு பத்திரிகையைத் தொடங்கப் போவதாகவும் அதற்குச் சந்தா வசூலிக்கும் வேலையில் இருப்பதாகவும் தெரிவிக்கிறார். பத்திரிகை படிப்பதில் ஆர்வம் கொண்ட வீட்டுக்காரர் சந்தா கட்டுகிறார். ஆனால் அவர் சொன்ன நேரத்தில் பத்திரிகை வரவில்லை. பத்திரிகை பற்றிக் கேட்கும்போதெல்லாம் அவர் எவ்விதமான தொடர்பும் இல்லாமல் எதைஎதையோ சொல்லி சாமர்த்தியமாகச் சமாளிக்கிறார். அவள் மகள் திடீரென ஒருநாள் காணாமல் போய்விடுகிறாள். ஆனால் அதைப்பற்றிக் கேட்கும்போது மகள் நேதாஜியின் கையெழுத்துப் பிரதிகளைச் சேகரிப்பதற்காக கல்கத்தா சென்றிருப்பதாக கூசாமல் பொய் சொல்கிறார். இதற்கிடையில் நான்கு மாதங்கள் ஓடிவிடுகின்றன. வாடகை பாக்கி பெருகிக்கொண்டே போகிறது. மேலும் இரு மாதங்கள் கடந்துவிடுகின்றன. அப்போதும் ஏதேதோ காரணங்கள் சொல்கிறாரே தவிர, பணத்துக்கு வழி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஓர் எல்லைக்கு அப்பால் கடன்சுமையைத் தாங்கமுடியாத வீட்டுக்காரர் அவரை காலிசெய்துவிட்டுச் செல்லுமாறு தெரிவிக்கிறார். அதைப்பற்றிய வருத்தமெதுவும் இல்லாமலேயே அவர் வீட்டைவிட்டு வெளியேறுகிறார். சென்னையிலேயே வேறொரு பகுதிக்குச் செல்ல இருப்பதாக முகவரி எழுதிய ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்துவிட்டுச் செல்கிறார். வாடகை பாக்கிக்கு ஈடாக தன்னுடைய ரெஃப்ரிஜிரேட்டரை வைத்துக்கொள்ளும்படியும் பணத்தைக் கொடுத்து மீட்டுக்கொள்வதாகவும் வீராப்பாகச் சொல்லிவிட்டுச் செல்கிறார். மேலும் ஆறு மாதங்கள் கழிகின்றன. அவர் கொடுக்கவேண்டிய கடன் தொகை வரவில்லை. ஒருநாள் அவர் குறிப்பிட்ட முகவரிக்குச் சென்று பார்க்கிறார். அங்கிருந்து அவர் பாண்டிச்சேரிக்குச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கிறார்கள் ஏமாற்றத்தோடு வீட்டுக்குத் திரும்பிவரும் வீட்டுக்காரர் அவர் கொடுத்துவிட்டுச் சென்ற ரெஃப்ரிஜிரேட்டரை முதன்முறையாகத் திறந்து பார்க்கிறார். .ரெஃப்ரிஜிரேட்டருக்கு இதயம் போன்ற கம்ப்ரெஸ்ஸர் கழற்றப்பட்டு வெற்றிடமாக இருக்கிறது. வீட்டுக்காரரின் கோணத்தில் இந்தக் எழுதப்பட்டிருக்கும் இக்கதையில் அடுத்தடுத்து அவர் ஏமாற்றமடையும் சித்திரங்கள் அழுத்தமாகத் தீட்டப்பட்டிருக்கின்றன. ஒருவர் தொடர்ந்து ஏமாந்துகொண்டே இருக்க, இன்னொருவர் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார். இவர் ஏன் இப்படி இருக்கிறார், அவர் ஏன் அப்படி இருக்கிறார் என்னும் கேள்விக்கு விடை இல்லை. அது இயற்கையின் புதிர். விட்டல்ராவின் கதைகளில் மீண்டுமொரு புதிர்த்தருணம்.

’மரிசுவாமிகள்’ இன்னொரு சிறந்த சிறுகதை. கர்நாடகப்பின்னணியில் நடப்பதுபோல அமைக்கப்பட்ட கதை. ஒரு பேருந்துப்பயணத்தில், பேருந்து கெட்டுப்போனதால் பழுது பார்க்க நீண்ட நேரம் தேவைப்படுகிறது. அப்போது அந்த வழியாக வெளியூர்க்காரர்கள் சிலர் அருகில் உள்ள மலைக்கோவிலில் நடைபெறும் திருவிழாவைக் காண்பதற்காக வரிசையாகச் செல்கிறார்கள். வண்டிக்கு அருகில் நின்றிருப்பதற்குப் பதிலாக திருவிழாவுக்குச் சென்று பார்த்துவிட்டுத் திரும்பலாம் என நினைத்த பயணிகள் ஒவ்வொருவராக திருவிழாவுக்குச் செல்கிறார்கள். அந்தத் திருவிழாவில் ஆறுவயதுள்ள ஒரு சிறுவனைத் தேர்ந்தெடுத்து பாலசந்நியாசி பட்டம் சூட்டவிருக்கிறார்கள். அதுதான் திருவிழாவின் முக்கிய அம்சம்.

எல்லோரும் வேடிக்கை பார்த்தபடி இருக்க சீடர்கள் சுமந்துவரும் பல்லக்கில் மரிசுவாமிகள்  இருக்கிறார். வழியெங்கும் நின்றிருக்கும் பக்தர்கள் மரிசுவாமியை வணங்குகிறார்கள். மரிசுவாமியின் கண்கள் அக்கம்பக்கம் வேடிக்கை பார்த்தபடி இருக்கின்றன. ஒரு மரத்தடியில் சிறுவர்கள் கூடி கோலி விளையாடும் காட்சியை அவர் பார்க்கிறார். உடனே பல்லக்கு சுமப்பவர்களை தன்னை அங்கே இறக்கிவிடும்படி கேட்கிறார். வேறு வழியில்லாமல் பல்லக்கு இறக்கப்படுகிறது. கீழே இறங்கிய சுவாமிகள் முதலில் ஆர்வத்தோடு வேடிக்கை பார்க்கிறார். பிறகு ஆசையோடு கோலியை வாங்கி அவரும் விளையாடத் தொடங்குகிறார். அவரால் ஒருமுறை கூட வெற்றி பெறமுடியவில்லை. தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருக்கிறார். கால தாமதத்தைக் காரணமாகச் சொல்லி பல்லக்குத்தூக்கிகள் அவரை பல்வந்தமாக பல்லக்கில் ஏற்றிச் சுமந்துசென்றுவிடுகிறார்கள். விளையாட்டில் விருப்பம் கொண்ட ஒரு சிறுவன் மீது மிகப்பெரிய பொறுப்பை நம் மரபு ஏன் சுமத்துகிறது என்பதும், அந்தச் சுமையின் காரணமாக, பால்யத்துக்கே உரிய விளையாட்டுக்குணங்களை எல்லாம் அச்சிறுவன் துறந்துசெல்வதை ஏன் நம் மரபு பொருட்படுத்தவில்லை என்பதும் ஒருவருக்கும் விடை தெரியாத மாபெரும் புதிர்கள்.

’பன்றி’ இன்னொரு சிறப்பான கதை. கதைசொல்லி வாடகைக்கு வசிக்கும் வீட்டையொட்டி ஒரு பெரிய சாக்கடை தேங்கி நிற்கிறது. அதையொட்டி பெரிய பெரிய புதர்கள். அந்தச் சாக்கடையும் மறைவிடமும் பன்றிகள் வந்து விளையாடுவதற்கு வசதியாக அமைந்துவிடுகின்றன. ஓயாத பன்றி உறுமல்களுக்கு நடுவில்தான் அவர்கள் அவ்வீட்டில் வசிக்கிறார்கள். பன்றி வளர்ப்பவர்கள் அனைவரும் எங்கோ தொலைவில் வசிக்கிறார்கள். அவ்வப்போது வந்து பன்றிகளை மேற்பார்வை பார்த்துவிட்டுச் செல்வதைத் தவிர வேறொன்றும் அவர்கள் செய்வதில்லை.

ஒருமுறை ஒரு தாய்ப்பன்றி எட்டுக் குட்டிகளை அந்தச் சாக்கடைக்கரையில் ஈன்றெடுக்கிறது. எட்டுக் குட்டிகளும் தாய்ப்பன்றியின் மடியில் பாலருந்திவிட்டு படுத்துறங்குகின்றன. அல்லும் பகலும் விழித்திருந்து குட்டிகளைக் காப்பாற்றுகிறது தாய்ப்பன்றி. குட்டிகளின் வாசனைக்கு நெருங்கிவரும் நாய்களை விரட்டியடிக்கிறது. அப்படியும் மூன்று குட்டிகள் தொலைந்துபோகின்றன. ஐந்து மட்டுமே எஞ்சுகின்றன. ஐந்தில் நான்கு பன்றிகள் பாலருந்தி உடலைப் பெருக்கிக்கொள்ள, ஒரு குட்டி மட்டும் பாலருந்தாமல் மெலிந்திருக்கிறது. பலமற்ற அக்குட்டியை தாய்ப்பன்றியே கடித்துக் கொன்றுவிடுகிறது. எங்கிருந்தோ வந்த புதியதொரு பன்றிக்குட்டி பிற குட்டிகளோடு சேர்ந்து ஆர்வத்துடன் பாலருந்தி மகிழ்கிறது. திருட்டுப்பால் குடித்து வளரும் அக்குட்டியை தாய்ப்பன்றி தடுப்பதில்லை. ஆனால் சொந்த குட்டிகளுக்குக் கிடைக்கவேண்டிய பாலை அந்தக் குட்டி அருந்திவிட்டு ஆட்டம் போடுவதை பன்றிக்காரனால் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கமுடியவில்லை. ஒருநாள் அதன் காதை அறுத்து விரட்டிவிடுகிறான். தாய்ப்பன்றியின் சொந்தக் குட்டிகள் மட்டும் பால் குடித்துவிட்டு சாக்கடையில் திளைக்கத்திளைக்க விளையாடி மகிழ்கின்றன.

தாய்ப்பன்றியின் நடவடிக்கைதான் இக்கதையின் மையம். சொந்தக் குட்டியாக இருந்தாலும் பாலே அருந்தாமல் பலமில்லாமல் இருப்பதை அது விரும்பவில்லை. கொல்வதற்குக் கூட அது தயாராகவே இருக்கிறது. அதே சமயத்தில் எங்கிருந்தோ வந்த ஏதோ ஒரு குட்டி பசிக்கு பாலருந்த வரும்போது, தயக்கமே இல்லாமல் பாலருந்த அனுமதிக்கிறது. தாய்ப்பன்றிக்கு இருக்கும் கருணையும் நீதியுணர்ச்சியும் பல நேரங்களில் மனிதனிடம் இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தி. இலக்கணத்துக்குள் அடங்காத தாய்மையின் குணம் புரிந்துகொள்ள முடியாத புதிர் என்றுதான் சொல்லவேண்டும்.

’மாசு’ என்னும் சிறுகதையில் மூன்று தலைமுறைக்குச் சொத்து வைத்துள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், பெரிய பெரிய இடங்களிலிருந்தெல்லாம் வருகிற மாப்பிள்ளைகளை நிராகரித்துவிட்டு,ஒன்றுக்கும் உதவாத ஓர் இளைஞனோடு வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறாள். பத்தாண்டு காலம் எங்கெங்கோ அலைந்து திரிந்து வாழ்ந்து ஒரு ரூபாய்க்கு சாம்பார் வாங்கிச் சென்று எங்கோ குடிசைப்பகுதியில் வாழும் நிலைக்கு வந்து சேர்கிறாள். அந்த முடிவை அவள் ஏன் எடுத்தாள் என்னும் கேள்விக்கு விடையே இல்லை. 

’பந்துபொறுக்கி’ என்னும் சிறுகதையில் டென்னிஸ் மைதானத்தில் வேடிக்கை பார்க்கச் சென்ற சிறுவனொருவன் எல்லைக்கு வெளியே விழும் பந்துகளை எடுத்துக் கொடுக்கத் தொடங்குகிறான்.  அவனுடைய பணிவும் பழகும் விதமும் அனைவரையும் கவர்ந்துவிடுகிறது. அப்போது நடைபெற்ற தேர்வுகளில் அவன் பெற்ற குறைவான மதிப்பெண்கள் அவனைக் கவலையில் ஆழ்த்திவிடுகின்றன. பொதுத்தேர்விலாவது நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவேண்டும் என்ற விருப்பதால் மைதானத்துக்குச் செல்வதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்துகிறான். அந்த க்ளப்பைச் சேர்ந்தவர்களே நேரில் வந்து அழைத்தபோதும் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்பதில் அவன் மனம் உறுதியாக இருக்கிறது. கெடுவாய்ப்பாக, அவன் நினைத்தபடி தேர்வு அமையவில்லை. தோல்வி அடைவது உறுதி என்பது அவனுக்குத் தெரிந்துவிடுகிறது. சூழல் அவனை மீண்டும் பந்து பொறுக்கிப் போடும் ஆளாகவே அவனை மைதானத்தை நோக்கித் தள்ளிவிடுகிறது. தேர்வில் வெல்லவேண்டும் என்று உள்ளூர அவன் நினைத்தபோதும் அவனால் ஏன் வெற்றி பெறமுடியாமல் போனது என்னும் கேள்விக்கு விடை இல்லை.

நூற்றுக்கும் மேற்பட்ட அவருடைய சிறுகதைகளில் தமிழிலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் வகையில் முப்பதுக்கும் மேற்பட்ட சிறந்த சிறுகதைகளைக் குறிப்பிடமுடியும். வாழ்வின் ஏராளமான புதிர்த்தருணங்களின் சித்திரங்கள் அவருடைய படைப்புலகத்தில் உள்ளன. ஓர் ஓவியக்கூடத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சித்திரங்களைப்போல புதிர்த்தருணங்களின் சித்திரங்கள் உள்ளன. விட்டல்ராவ் தம் கதைகளில் புதிர்களைக் காட்சிப்படுத்துவது என்பது புதிருக்கான விடைகளைக் கண்டடைய வேண்டும் என்பதற்காக அல்ல. இந்த வாழ்க்கை புதிர்களால்   தொகுக்கப்பட்டிருக்கிறது என்னும் உண்மையைப் புரிந்துகொள்வதற்காக. அதுவே அவருடைய கதைகளின் மையத் தரிசனம்.

அவருடைய ’தேடல்’ என்னும் சிறுகதை பொற்கொல்லர் தெருவிலிருந்து வரும் கழிவுநீரில் கலந்திருக்கும் தங்கத்துகள்களைச் சேகரிப்பதற்காக நாள்முழுதும் அந்நீரில் தன் மனைவியோடு நின்று வாயகன்ற பாத்திரத்தில் நீரை மொண்டு அலசி அலசிப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவனைப் பற்றிய சித்திரத்தை அக்கதையில் எழுதியிருக்கிறார் விட்டல்ராவ். நாள் முழுக்க அவனும் அவன் மனைவியும் அந்த நீரை அலசிய பிறகும் அவர்களுக்கு ஒரு துகள் கூட கிடைப்பதில்லை. ஆயினும் அந்தத் தோல்வியைக் கண்டு சோர்ந்துவிடாமல் அடுத்தநாள் வந்து மீண்டும் அலசிப் பார்க்கலாம் என்ற முடிவோடு வீட்டுக்குச் செல்கிறார்கள். ஒரு கோணத்தில் தங்கத்துகளுக்காகப் பாடுபடும் அந்த மனிதன், புதிர்த்தருணங்களைத் தேடித் தேடி எழுதும் விட்டல்ராவின் இன்னொரு வடிவம் என்றே சொல்லவேண்டும்.

 

(பேசும் புதிய சக்தி – மார்ச் 2025)