நம் தமிழ்சூழலில் இதுவரை தோன்றிய மொழிபெயர்ப்பாளர்கள் இருவகைகளில் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றியிருக்கிறார்கள். ஒருபுறம், பாரதியாரின் கனவையொட்டி பிறமொழிகளில் முதன்மையாகக் கருதப்படுகிற படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். இன்னொருபுறம், தமிழ்ச்சூழலில் சிறந்தவையாக விளங்கும் படைப்புகளை பிற மொழிகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒரு பணி, நம் மொழிச்சூழலுக்கு உரமாக விளங்குகிறது. இன்னொரு பணி நம் மொழியின் பெருமையை வெளியுலகத்துக்கு உணர்த்துகிறது. இத்தகு இருவித பணிகளிலும் ஈடுபட்டுவரும் ஆளுமைகள் பாராட்டுக்குரியவர்கள். என்றென்றும் நினைக்கப்பட வேண்டியவர்கள்.
கனடா
நாட்டில் வாழ்ந்துவரும் அ.முத்துலிங்கம் மூத்த படைப்பாளி. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும்
மேலாக தொடர்ச்சியாக படைப்பிலக்கியத்தில் ஈடுபட்டு வருபவர். சமீப காலத்தில் பிறமொழிகளில்
சிறந்துவிளங்கும் சிறுகதைகளை தொடர்ச்சியாக தமிழில் மொழிபெயர்த்து வருபவர். தமிழ் மொழிக்கென
ஓர் இருக்கை ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் அமைவதற்காக அவர் ஆற்றிய பங்கினை உலகமே அறியும்.
தமிழின் பெருமையை உலகோர் அறியவேண்டும் என்ற எண்ணமே அவரை இச்செயலில் ஈடுபடவைத்து வெற்றி
காணவைத்தது. தமிழ்ப்படைப்புகளின் பெருமையை உலகோர் அறிந்து தமிழை நாடி வரும்வண்ணம்,
தமிழிலிருந்து ஆங்கிலமொழியில் மொழிபெயர்க்கும் பணிகளில் ஈடுபட்டுவரும் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து
விருதளித்து கெளரவித்துவரும் விஜயா வாசகர் வட்டம், அவ்விருதுக்கு அ.முத்துலிங்கம் அவர்களின்
பெயரைச் சூட்டியிருப்பது மிகவும் பொருத்தமாகும். இவ்வாண்டுக்குரிய மொழிபெயர்ப்பாளர்
விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கல்யாண்ராமன் அவர்களுக்கு என் மனமார்ந்த
வாழ்த்துகள்.
தமிழிலிருந்து
ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பணிகளில் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக
ஈடுபட்டு வருபவர் கல்யாண்ராமன். அவர் ஒரு நல்ல வாசகர். வாசிப்பின் வழியாக தன் ரசனையை
மேம்படுத்திக்கொண்டவர். இளமைக்காலத்தில் கணையாழி போன்ற இதழ்களில் படைப்புமுயற்சிகளில்
ஈடுபட்டவர். படைப்பின் நுட்பத்தை உய்த்துணரும் நுண்ணுணர்வு கொண்டவர். தன் ரசனையின் அடிப்படையின் வாசித்ததில் பிடித்ததை
ஆங்கிலமொழியில் மொழிபெயர்த்து, ஆங்கிலம் அறிந்தோர் நடுவில் முன்வைப்பதைத் தொடர்ச்சியாக
செய்துவருபவர். ஒருவர் தன் விருப்பத்தையொட்டி வாழ்நாள் முழுதும் ஒரு செயலைத் தொடர்ந்து
செய்துவரும்போது, அது அவருடைய வாழ்நாள் அடையாளமாகவே அமைந்துவிடுகிறது. ஆங்கில மொழிபெயர்ப்பாளர்
என்னும் அடையாளம் கல்யாண்ராமனுக்குப் பொருத்தமாக அமைந்துவிட்டது.
ஆரம்ப
காலத்திலிருந்தே கல்யாண்ராமன் புத்தக அறிமுகக்கட்டுரைகளை இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா,
இந்தியன் எக்ஸ்பிரஸ், காரவன், அவுட்லுக், ஜென்ட்டில்மேன், புக் ரிவ்யூ போன்ற பல்வேறு
ஆங்கில இதழ்களிலும் பிற இணைய இதழ்களிலும் தொடர்ந்து
எழுதிவருகிறார். ரசித்துப் படித்த ஒரு புத்தகத்தை ஒட்டி எழும் எண்ணங்களை தன் ஆழ்நெஞ்சில்
தொகுத்துப் பார்க்கும் திறமையை வளர்த்துக்கொள்ளும் ஒருவரே, அப்புத்தகம் சார்ந்த மதிப்பீடுகளையும்
முன்வைக்கக்கூடிய தகுதியைப் பெற்றவராகிறார்.
கல்யாண்ராமன் தன் சொந்த முயற்சியால் தன் தகுதியை வளர்த்துக்கொண்டவர். தன் மொழியை
கொஞ்சம்கொஞ்சமாக மெருகேற்றிக்கொண்டவர். அம்மதிப்பீடின் வழியாக ஆங்கிலம் புழங்கும் சூழலில்
கவனத்தைப் பெறத்தக்க தமிழ்ப்படைப்புகளை அவரால் எளிதாகத் தேர்ந்தெடுக்கமுடிந்திருக்கிறது.
அவற்றையே அவசரமில்லாமல் காலம் தனக்கிட்ட கட்டளையாகக் கருதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்.
அவர் இதுவரை மொழிபெயர்த்த எல்லாப் படைப்புகளுக்கும் அந்த இலக்கணம் பொருந்தும்.
தொடக்கத்தில்
அவர் தனித்தன்மை கொண்ட தமிழ்ச்சிறுகதைகளைத்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவந்தார்.
பிறகு தனக்குப் பிடித்த தமிழ்க்கவிதைகளையும் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தார். அதையடுத்து
நாவல்களையும் மொழிபெயர்க்கத் தொடங்கினார். இந்த சீரான வளர்ச்சியின் வழியாக அவர் தன்
மொழியைத் தானே மெருகேற்றிக்கொண்டார். தமிழின் சிறந்த படைப்பாளிகளான அசோகமித்திரன்,
சி.சு.செல்லப்பா, பூமணி, வாசந்தி, தேவிபாரதி, பெருமாள்முருகன் போன்றோரின் சிறந்த நாவல்களை
ஆங்கிலமறிந்த வாசகர்களுக்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்த எல்லா
ஆளுமைகளும் தமிழ்ச்சூழலுக்கு அப்பால் அயல்நாட்டில் படிக்கத்தக்க படைப்பாளிகளாக விளங்குவதற்கு
கல்யாண்ராமனுடைய மொழிபெயர்ப்புகள் உதவியிருக்கின்றன. கல்யாண்ராமன் தன்னையே ஓர் ஊடகமாக
இடைநிறுத்திக்கொண்டு ஆங்கிலத்தில் வாசிக்கும் உலக இலக்கிய வாசகர்களுக்கும் தமிழ்ப்படைப்பாளிகளுக்கும்
இடையில் ஒரு நல்லுறவை உருவாக்குகிறார். இதுவரை, எந்தப் புள்ளியிலும் தேங்கிவிடாமல்
தொடர்ச்சியாக புதுமைத்தேடலில் இருக்கும் கல்யாண்ராமன் அனைவருடைய பாராட்டுக்கும் உரியவர்.
ஒரு சிறந்த
மொழிபெயர்ப்புப்படைப்பைப்பற்றிப் புகழ்ந்து பேசும் தருணங்களில் பலரும் “மொழிபெயர்ப்பு
மாதிரியே தெரியவில்லை. நம் மொழியிலேயே எழுதப்பட்ட படைப்பு போலவே இருக்கிறது. அந்த அளவுக்கு
சிரத்தையோடு செய்திருக்கிறார்” என்று குறிப்பிடுவதை நாம் கேட்டிருப்போம். ஒரு மொழிபெயர்ப்பு
அவ்விதமாக அமைவதற்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் அர்ப்பணிப்புணர்வோடு ஆற்றும் உழைப்புதான்
காரணம்.
ஒரு படைப்பை
ஆழ்ந்து கற்பது முதன்மையான பணி. அந்த வாசிப்பின் வழியாக படைப்பின் சாரத்தையும் செல்திசையையும்
எதிர்கால விளைவுகளையும் உய்த்துணர்வது இரண்டாவது பணி. விவரணைகளிலும் உரையாடல்களிலும்
உட்சரடாக மறைந்திருக்கும் குரலையும் நோக்கத்தையும் இடம்சார்ந்தும் பொருள்சார்ந்தும்
ஏற்படும் பரிமாணங்களையும் உள்வாங்கிக்கொள்வது மூன்றாவது பணி. தொடர்ச்சியான பயிற்சியின் விளைவாக இம்மூன்று பணிகளிலும் தேர்ச்சி அடையும் ஒருவர் மட்டுமே
மொழிபெயர்ப்புக்காக தன்னைத்தானே அர்ப்பணித்துக்கொள்ளும் தகுதியை அடைகிறார். கல்யாண்ராமனின்
அர்ப்பணிப்புணர்வை அவருடைய எல்லா மொழிபெயர்ப்புப் படைப்புகளிலும் நாம் கண்டுணரமுடியும்.
அ.முத்துலிங்கம் பெயரால் விஜயா பதிப்பக வாசகர் வட்டம் வழங்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளர்
விருதைப் பெற்றிருக்கும் கல்யாண்ராமனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
( விஜயா வாசகர் வட்டம் ஆண்டுதோறும் வழங்கும்
சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது இவ்வாண்டில் கல்யாண்ராமன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
09.02.2025 அன்று கோவையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. )