அத்தையை அவசரமாக அழைத்துவரச் சொன்னாள் அம்மா. “நாளைக்கு பரீட்ச இருக்குது. கணக்கு போட்டு பாக்கற நேரத்துல வேல வச்சா எப்படிம்மா? மார்க் கொறஞ்சா திட்டறதுக்கு மட்டும் தெரியுதே, இது தெரிய வேணாமா?” என்ற என் சிணுங்கல்கள் எதுவும் அவளிடம் எடுபடவில்லை. “அவசரத்துக்கு ஒரு வேல சொன்னா ஆயிரம் தரம் மொணங்கு. பெரிசா மார்க் வாங்கி கிழிச்சிட்ட போ. சீக்கிரமா கூட்டிட்டு வாடா போ” என்று அதட்டி விரட்டினாள் புத்தகங்களை மூடி வைத்துவிட்டு எழுந்தேன். “போனமா, வந்தமான்று சீக்கிரமா வந்து சேரு. அந்த ஊரு காலேஜ் வண்டி வந்துது. இந்த ஊரு காலேஜ் வண்டி வந்ததுன்னு பெராக்கு பாத்துக்கினு நின்னுடாத’ என்று பேசிக்கொண்டே இருந்தாள் அம்மா.
வாசலில் இறங்கி தென்னந்தோப்பை நோக்கி ஓடினேன் நான். அங்கே இருக்கிற பம்ப் செட்டில் துணி துவைப்பதற்காகத் தான் அத்தை சென்றிருந்தாள். தெருமுனையில் திரும்பி கோயில் பக்கமாகப் பிரியும் ஒற்றையபடிப் பாதையில் ஓட்டமாய் ஓடி மதிலைக் கடந்து தோப்புக்குள் சென்றேன். நிழலும் குளிர்ச்சியான காற்றும் உடலில் பட்டபோது இதமாக இருந்தது. அத்தை துவைத்துப் பிழிந்த ஒரு புடவையை உதறி உலர்த்திக் கொண்டிருந்தாள். இரண்டு தென்னைகளுக்கிடையே கட்டப்பட்டிருந்த கொடியில் துணிகள் தொங்கின. பச்சைப் பாவாடையின் விளிம்பிலிருந்து தண்ணீர்த் துளிகள் சொட்டுச் சொட்டாக முத்துப்போல உதிர்ந்தன. தண்ணீர்த் தொட்டிக்குள் இன்னும் பிழியப்படவேண்டிய சில
துணிகள் சுழன்றன. புடவைமடிப்பைச் சரிப்படுத்தியபடி அத்தை என்னை ஆச்சரியத்தோடு ஏறிட்டுப் பார்த்தாள். “என்னடா, எத்தன கணக்குப் போட்டே? அதுக்குள்ள ஆட்டமா?” என்று சிரித்தாள். “வா, இந்தப் பெட்ஷீட்ட புடி. எப்பிடிடா ஒத்தையில் பிழியறதுன்னு நெனச்சிட்டிருந்தேன். சொல்லிவச்சமாரி சரிய வந்து நிக்கற” என்று தண்ணீரிலிருந்து அலசி எடுத்த படுக்கைவிரிப்பின் ஒரு முனையை என்னிடம் நீட்டினாள். “அம்மா உன்ன அவசரமா கூட்டிட்டு வரச்சொன்னாங்க அத்த.....” என்றேன். அத்தையின் முறுக்கலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் துணியை உறுதியாகப் பற்றினேன். “எதுக்குடா?” என்று சாதாரணமாகக் கேட்டாள் அத்தை. பிழிந்த துணியை உதறி கொடியில் விரித்துப் போட்டாள். “தெரியலை அத்த, ரொம்ப அவசரமாம்” என்றேன். அத்தை தொட்டியிலிருந்த துணிகளையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துப் பிழிந்து உலர்த்திய பிறகுதான் கிளம்பினாள். பாத்திரங்களை என்னிடம் எடுத்துக்கொள்ளச் சொன்னாள். பம்ப்பிலிருந்து பீச்சியடிக்கும் தண்ணீரைப் பிடித்து முகத்தில் அடித்துக் கழுவினான். ஸ்டிக்கர் பொட்டு எப்படியோ நழுவியோட, நனைந்த புருவங்களோடும் இமைகளோடும் கால்வாய்க்குள் இறங்கி பாதங்களை ஒன்றோடு ஒன்று தேய்த்துக் கழுவியபோது கொலுசுவின் வெண்மை பளீரென அசைந்தது. முந்தானையால் முகத்தை ஒற்றியபடி “வாடா போவலாம்” என்றாள்.
“இன்னைக்கு ஒன்னும் வண்டி வரலையா அத்த?-” என்று பேச்சுக்கொடுத்தேன். “இதுவரைக்கும் ஒன்னயும் காணம், இனிமே வருமோ என்னமோ” என்றாள் அத்தை. பாண்டிச்சேரி பக்கமும் சாத்த-னூர் பக்கமும் போகிற பல சுற்றுலா வண்டிகள் சாப்பிட்டு இளைப்பாறுவதற்கு வழக்கமாக எங்கள் தோப்புக்குள் வந்து செல்லும். சாலையோரம் விசாரிக்கும்போதே அங்கே இருப்பவர்கள் தோப்புக்கு வழிசொல்லி அனுப்பி வைத்துவிடுவார்கள். புதியவர்களோடு மிகவும் சீக்கிரமாகப் பழகி நட்புகொண்டாட ஆரம்பித்துவிடுவாள் அத்தை. அவர்களுக்குத் தேவையான சின்னச்சின்ன உதவிகளைத் தயக்கமே இல்லாமல் செய்வாள். போகும்போது அவர்கள் கொடுக்கும் முகவரிச்சீட்டை வாங்கிக் கொள்வாள். ஒரு வளையல் டப்பி நிறைய அத்தையிடம் முகவரிச்சீட்டுகள் இருக்கின்றன. நான் பெரியவனானதும் அவளை அழைத்துக் கொண்டு அந்த முகவரிகளுக்கெல்லாம் சென்றுவர வேண்டும். என்பது அவளுடைய ஆசை. “கண்டிப்பா கூட்டிட்டு போவேன் அத்த” என்று சொல்லும் போதெல்லாம் என்னை இழுத்து நெற்றியில் ஒரு முத்தம் கொடுப்பாள் அத்தை
அப்போதெல்லாம் அவள் முகம் அப்படியே பூவைப்போல மலர்ந்துவிடும்.
“இன்னும் அரமணிநேரம் கழிச்சி வந்திருந்தா குளியலயும் முடிச்சிருக்கலாம். குளிக்கறதுக்காக இன்னொரு தரம் வரணும், சரி வா. என்ன விஷயமாம்?” புருவத்தைச் சுருக்கியவாறு கேட்டாள் அத்தை.
“தெரியலை அத்தை, யாரோ ஒருத்தரு வாசல்ல புதுசா நின்னுட்டிருந்தாரு. இதுக்கும் முன்னால் நம்ம வீட்டுப்பக்கமா பார்த்தே இல்ல. அவர் கிட்டதான் அம்மா பேசிட்டிருந்தாங்க.....”
அத்தை பேசாமல் நடந்தாள். கோயில் முகப்பைக் கடந்து தெருவில் இறங்கியபோது வீட்டுக்கு முன்னால் அப்பா டி.வி.எஸ்.ஸில் வந்து இறங்குவது தெரிந்தது. சித்தப்பாவும் பெரியப்பாவும் தாத்தாவும்கூட வந்து திண்ணையில் உட்கார்ந்திருந்தார்கள். வீட்டை நெருங்க நெருங்க அத்தையின் முகத்தில் ஒருவித கலவரம் படியத் தொடங்கியது. அம்மாவுடன் வாசலில் பேசிக்கொண்டிருந்த ஆள் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அவர்மீது ஒரு கணம் படியவிட்ட பார்வையை விலக்கி தலையைத் தாழ்த்தியபடி வாசலைக் கடந்து உள்ளே சென்றாள் அத்தை. வாளிகளை நடையிலேயே வைத்துவிட்டு ஓரமாய்ப் போய் நின்றேன் நான்.
வாசலில் அம்மாவும் சித்தப்பாவும் ஏதோ செய்தியைப் பார்வையாலேயே பரிமாறிக்கொண்டார்கள். அப்பா அம்மாவின் பக்கமாகத் திரும்பி பார்வையாலேயே சைகை செய்தார். அம்மா மெதுவாக உள்ளே நடந்து அத்தை நின்றிருந்த இடத்துக்குச் சென்றாள்.
“அம்பிகா இப்படி வா” என்று அத்தையின் தோளைப் பிடித்து அழைத்துச் சென்றாள். அருகில் இருந்த நாற்காலியில் உட்காரவைத்தாள்.
“எது நடக்கவேணாம்ன்னு நெனைக்கறமோ அதுதான் சீக்கிரமா நடக்குது. பதினாறு பதினேழு வருஷமா ஒட்டும் இல்ல ஒறவும் இல்லன்னு இருத்துட்டம். இப்படி ஒன்னு நடக்கும்ன்னு யாரும் நெனைச்சி பாக்கலையே” அம்மா சுற்றி வளைத்து பேச்சைத் தொடங்கினாள்.
“என்ன விஷயம் அண்ணி? புதுசா என்னென்னமோ சொல்றிங்க” அத்தை விழித்தாள்.
“புதுசாத்தானே நடக்குது ஒன்னொன்னும். நாம என்ன செய்ய முடியும் சொல்லு? விதி வந்தா நம்ம கதயும் இப்படித்தான் ஒரு நாள் முடியும் போல. அதுவரைக்கும்தான் இந்த ஆட்டம், பாட்டம், ஆத்தரம், அடிதடி எல்லாம்.”
“என்ன சொல்றிங்க அண்ணி-?”
“இத்தினி வருஷமா நீ இருக்கியா இல்லையான்னு கூட ஒரு பூனைக்குட்டி கூட வந்து எட்டிப் பாக்கலை. இன்னிக்கு திடீர்னு அவன் செத்துட்டான்னு ஆள் வந்து நிக்குது. என்ன சொல்றதுன்னே தெரியலை. எல்லாம் விதி.”
“அண்ணி?” அத்தை மெதுவாக எழுந்து நின்றாள்.
“அவன்தான்டி. ஒனத்குத் தாலிய கட்டிட்டு இன்னொருத்தி கூட வாழறன்னு போனானே அந்தக் கடங்காரன்தான். காலையில் செத்துப்போயிட்டானாம். ஹார்ட் அட்டாக்காம். அதான் சேதி வந்திருக்குது.”
அத்தை ஒரு கணம் நீளமாக மூச்சை இழுத்துவிட்டாள். அவள் உடலில் லேசான ஒரு பதற்றம் பரவி அடங்கியது. அவள் பார்வை அம்மாவை ஒரு கணம் ஏறிட்டது. பிறகு மெதுவாக தரையின் பக்கமாகப் படிந்தது. மீண்டும் மெதுவாக நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். அம்மா சில கணங்கள் அங்கேயே நின்று அவள் தலையைக் கோதிக் கொடுத்த பிறகு நடந்து வெளியே சென்றாள்.
நான் மெதுவாகக் குறுக்கில் நகர்ந்து அம்மாவின் கவனத்தைத் திருப்பி “என்னம்மா? என்ன விஷயம்மா?” என்று கேட்டேன். “ஒன் தல. போடா அந்தப் பக்கம். கணக்கு போட்டுப் பாக்கணும்ன்னு சொன்னியே. போ. போய் போட்டுப் பாரு......” என்று அதட்டினாள். எனக்கு அவமானமாக இருந்தது. வேகமாகச் சென்ற அம்மா அப்பாவிடமும் சித்தப்பாவிடமும் அடங்கிய குரலில் பேசுவதை ஓரக்கண்ணால் பார்த்தபடி சுவரோரமாக நகர்ந்து நின்றேன்.
சில நிமிடங்களுக்குப் பிறகு அம்மா மீண்டும் உள்ளே வந்தாள். “ஆம்பளைங்கள்ளாம் தயராயிட்டாங்க அம்பிகா. எழுந்து போய்க் கௌம்பும்மா. இப்ப கௌம்பனாத்தான் வண்டிபுடிச்சிப் போக சரியா இருக்கும்.”
அத்தை அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள்.
“இங்க பாருங்க அண்ணி. அந்த ஆளு மூஞ்சியிலேயே முழிக்கக் கூடாதுன்னு எல்லாத்தயும் உட்டுவந்து இத்தனை வருஷம் ஓடிப்போச்சி. இப்ப போயி அந்த மூஞ்சி முன்னால எப்படிண்ணி நிக்க முடியும்-? செத்துட்டதும் திருட்டு மூஞ்சியில தெய்வக்கள வந்துருமா?” அத்தை நிதானமாகக் கேட்டாள்.
“செத்துட்டவங்களபத்தி அப்படியெல்லாம் சொல்லக் கூடாது அம்பிகா. யாரு வச்ச கண்ணோ. அவன்கூட வாழ்ந்த வாழ்க்கைக்குத்தான் அர்த்தமே இல்லாம போயிடுச்சி. அதுக்காக செத்துட்டவன கடைசியா ஒரு தரம் போய் பார்க்கக்கூடாதுன்னு இல்லயேம்மா. போகலைன்னா வீண்பழிதான் வந்து சேரும். ஆளாளுக்கு நாக்குல நரம்பில்லாம பேசுவாங்க அம்பிகா” அம்மா பொறுமையாக எடுத்துச் சொன்னாள்.
“என்ன பழி வந்தாலும் அத நான் ஏத்துக்கறேன் அண்ணி. எனக்கு அந்த ஆள பார்க்கணும்ன்னு அவசியமே இல்லை.”
“ஆயிரமே இருந்தாலும் அவன் உனக்கு புருஷனே இல்லைன்னு ஆயிடுமா அம்பிகா?”
“அந்த ஆள மறந்து தாலிய கழட்டிக் குடுத்துட்டு வந்து பதினேழு வருஷம் ஓடிப்போச்சி. ஒரு நாளும் அந்த ஆள புருஷனா நெனைச்சதே இல்லை. இப்பமட்டும் திடீர்னு எங்கேருந்து மொளைச்சிடுவான் அண்ணி? விட்டுத் தள்ளுங்க. சேதி சொல்ல வந்த ஆள போய்ட்டு வாப்பான்னு சொல்லி அனுப்பிவைங்க.”
அம்மாவுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. குழப்பத்தோடு வெளியே சென்று “இங்க ஒரு நிமிஷம் வந்துட்டு போங்க” என்று அப்பாவைக் கூப்பிட்டு அடங்கிய குரலில் எல்லாவற்றையும் சொன்னாள். அப்பா முகவாயைச் சொறிந்து கொண்டார். மெதுவாக அத்தையின் பக்கம் சென்றார். அவரைத் தொடர்ந்து உள்ளே வந்த சித்தப்பாவும் பெரியப்பாவும் சென்றார்கள்.
“அந்த ஆள் யாரோ நாம யாரோன்னு இத்தன வருஷம் இருந்தமாதிரியே இனிமேலும் இருந்துடலாம்ண்ணே. தயவு செஞ்சி அந்த இடத்துக்கு மட்டும் வான்னு சொல்லிடாதிங்கண்ணே” அப்பா தொடங்கும் முன்பேயே அத்தை மெதுவாகச் சொன்னாள்.
“இங்க பாரு அம்பிகா. நீ சொல்தெல்லாம் சத்தியம்தான். இல்லைன்னு சொல்லலை. ஆனா ஊரு மரியாதைன்னு ஒன்னு இருக்குதேம்மா. நாளைக்கு நம்ம குடும்பத்தபத்தி நாலுபேரு நாக்கு மேல பல்ல போட நாலுவிதமான பேசிடக் கூடாதில்லயா?”
“நம்மளபத்தி பேசறதுக்கு யாருக்கும் மூஞ்சி கெடையாதுண்ணே. அன்னிக்கு ஆட்டயும் மாட்டயும் அடிச்சி தெருத்தற மாதிரி தெருத்தனானே. எந்த நாலாவது மனுஷனாவது ஏன் எதுக்குன்னு ஒரு வார்த்த நியாயம் கேட்டாங்களா? அதே நாலு பேருதானே இன்னைக்கு உக்காந்திருப்பாங்க. அவுங்க பேச்சுக்கெல்லாம் ஏண்ணே மரியாத கொடுக்கணும்?”
“நான் சொல்றத கேளு அம்பிகா.”
“யார் சொல்றதும் எனக்கு வேணாம்ண்ணே. ஆத்தாகாரி அக்காகாரி பேச்ச கேட்டுகிட்டு நாய அடிக்கற மாதிரி அடிச்சாண்ணே அந்த ஆளு. அடியக்கூட தாங்கில்லாம்ண்ணே. அந்த முழுக்குருடு, முக்காக்குருடுங்க பேச்ச பெரிசா எடுத்துகிட்டு எனக்கு தேவடியா பட்டம் கட்டனானே அத எப்படிண்ணே மறக்க முடியும்? இன்னைக்கு நான் அவன் முன்னால போயி நின்னா அவன் சொன்னதெல்லாம் உண்மைன்னு ஆயிடாதா? நீயே சொல்லுண்ணே. ஒரு தேவிடியாவா போயி அவன் பொணத்துக்கு நான் மாலை போடணுமா?” அத்தை குரல் நடுங்கியது.
“ஆத்தரத்துல ஆம்பளை ஆயிரம் பேசியிருக்கலாம். அதுக்கெல்லாம் பொம்பளை தனித்தனியா அர்த்தம் குடுத்து நெனைக்கறது தப்பும்மா. இத்தனை வருஷமா அவன விட்டுட்டு இங்கதானே இருந்தே. ஒருநாளாவது ஒன்ன அங்க போயி பாரு. பேசுன்னு எப்பவாவது ஒரு வார்த்த சொல்லியிருக்கமா? இப்படி சாவுன்னு சேதி வந்ததால வான்னு சொல்லறோம்.”
“வாழ்வே வேணாமின்னு ஒதுங்கி வந்தப்புறம் சாவுமட்டும் எதுக்குண்ணே? அவன் வாழ்வும் வேணாம். சாவும் வேணாம்ண்ணே....” அத்தை கோடு கிழித்ததுபோல உறுதியாகச் சொன்னாள்.
அதற்குள் விஷயம் அக்கம்பக்கத்து வீடுகளுக்கெல்லாம் கசிந்துவிட்டது. உரிமையோடு ஒவ்வொருவராக உள்ளே வந்து சேரத் தொடங்கினார்கள். வயதில் மூத்த பெண்கள் அத்தைக்கு அருகில் சென்று இறுதிச் சடங்குக்குச் செல்லுமாறு வற்புறுத்தினார்கள்.
“பொம்பளைக்கு எதுக்கு இவ்ளோ ஆங்காரம்? என்னைக்கா இருந்தாலும் ஊட்டுக்குள்ள மொடங்கிக் கெடக்கற ஜனங்க நாம. நாளை பின்ன தெருவுல போவற ஆம்பளைக்குத்தானே எல்லா அசிங்கமும் கஷ்டமும்?”
“அவுங்க போய்க்கட்டுமே. நான் வேணாம்ன்னு சொல்லலையே. என்ன கட்டாயப்படுத்தாதிங்க. என்ன என் வழியில இருக்கவிடுங்கன்னுதானே சொன்னன்” அத்தை பொறுமையாகச் சொன்னாள்.
“அதெல்லாம் நடக்கக்கூடிய விஷயமா அம்பிகா? சம்பந்தப்பட்ட நீயே இல்லாம அவுங்க எப்படி போயி அங்க கால எடுத்து வைக்கமுடியும்?”
ஆளாளுக்கு உரத்த குரலில் பேசினார்கள். பெரியப்பா அப்பாவைப் பார்த்து கோபமாக ஏதோ சொன்னார். “என்னமோ, நான் தான் அவளை கட்டிபோட்டு வச்சிருக்கறமாரி பேசறியே. நீயும் உரிமையுள்ளவன்தானே, வந்து இழுத்தும்போ, யாரு வேணாம்ன்னு மறிச்சாங்க?” என்று பதிலுக்கு அவரும் சத்தம் போட்டார். அந்த சமயத்தில் அவரை அடக்கும் விதமாக “எதுங்குங்க இப்ப கோபப்படறிங்க?” என்று அம்மா அப்பாவைப் பார்த்துச் சொல்ல, “வாய மூடிட்டும் போடி நீ. எல்லாருக்கும் நான்தான் எளைச்சவன் பாரு. பெரிசா எனக்கே புத்தி சொல்ல வரிங்க” என்று வெளியே சென்றுவிட்டார். உட்கார்ந்த இடத்திலிருந்தே தாத்தா, “டேய் சிவராமா. போதும் பேசனதெல்லாம். சும்மா இரு. இப்ப என்ன நடந்து போச்சின்னு ஆளாளுக்கு எண்ணயில போட்ட மாதிரி கொதிக்கறிங்க? அந்தக் காலம் மாதிரி இல்லை இப்ப. அவளுக்குப் புடிக்கலைன்னா விட்டுட்டு போங்களேன்டா....” என்றார்.
சிறிது நேரத்தில் ஒவ்வொருவராகக் கலைந்து போனார்கள். அக்கம் பக்கத்துப் பெண்களும் அமைதியாக வெளியேறினார்கள். சின்னம்மாவும் பெரியம்மாவும் அம்மாவிடம் கண்களாலேயே ஏதோ ஜாடைக் காட்டியபடி நடந்து போனார்கள். அம்மா மெதுவாக சமையலறைக்குள் போய்விட்டாள். நான் கணக்கு நோட்டை வைத்துக்கொண்டு பிதாகரஸ் சூத்திரத்தை மனப்பாடம் செய்ய முயற்சி செய்தேன். எதுவும் பதியவில்லை. அத்தையின் மௌனத்தை நோக்கியே மனம் குவிந்து கிடந்தது.
அன்று முதல் அத்தையிடம் பேசும்போது எல்லாருமே ஏதோ ஒருவித விலகல் தன்மையைக் கடைப்பிடித்ததைப்போல தோன்றியது. நாலு வார்த்தைகள் பேச வேண்டிய இடத்தில் ஒரே ஒரு வார்த்தை. சிரிக்க வேண்டிய இடத்தில் கௌரவமாக ஒரு சின்னப் புன்னகை. ஒட்டியும் ஒட்டாதவிதமாகவும் உரையாடல்கள் இருந்தன. “மனசு இரும்புடி இவளுக்கு. புருஷன்காரன் சாவுக்கே கலங்காதவ நாளைக்கு நமக்கு ஒன்னுன்னா ஓடியா வந்துரப்போறா?
விட்டுத் தள்ளுவியா” என்று பெரியம்மா ஒருமுறை அம்மாவிடம் வந்து முணுமுணுத்ததைக் காதால் கேட்டேன். “இவ வந்து நிக்கலைன்னா நடக்கறதெல்லாம் நின்னா போயிடும். நீ ஒருத்திக்கா” என்று அம்மாவும் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். நான் அங்கே கவனிப்பதைப் பார்த்துவிட்டு “உன்ன சுந்தரம் வீட்டுக்குப் போயி படி வாங்கியான்னுதானே சொன்னேன்? இங்க நின்னுட்டு என்னடா பண்ணறே?- அப்படியே போட்டன்னா பாரு தலையிலேயே” என்று அருகிலிருந்த விறகுக்கட்டையை எடுத்தாள். நான் உடனே வெளியே ஓடிவந்து விட்டேன்.
அந்த மாதத்திலேயே வேறொரு நாள் அத்தை துணி மூட்டையோடு தோப்புக்குச் சென்றிருந்த நேரத்தில் ஸ்கூட்டரில் வேகமாக வந்து இறங்கிய சித்தப்பா தடதடவென்று உள்ளே வந்து அம்மாவிடம் “அண்ணன் இல்லயா அண்ணி?” என்று கேட்டார். “பின்னால் குளிக்கறாரு. உக்காருங்க. இப்ப வந்துருவாரு. இட்லி இருக்குது. வெங்காயச் சட்னிதான். சாப்பிடறிங்களா?” என்றாள். “வேணாம்ண்ணி, நான் சாப்ட்டுட்டுதான் கௌம்பனேன்” என்றார் சித்தப்பா. “ஏதாவது லீவ் நாள்ல பசங்களயெல்லாம் கூப்புட்டுகிட்டு சாத்தனூருக்கு போய்வரலாம்னு சொன்னீங்களே? என்னாச்சி? ஒவ்வொரு ஞாயித்துக்கெழமையிலயும் கேட்டுக்கேட்டு அரிக்குதுங்களே” என்று பேச்சைத் தொடர்ந்தாள் அம்மா. சித்தப்பா ஏதேதோ பதில் சொன்னார்.
“வாடா, எப்ப வந்த?” என்றபடி துண்டால் மார்பைத் துடைத்தபடி பின்கட்டிலிருந்து வந்தார் அப்பா. “முக்கியமான விஷயம் ஒன்னு காதுல விழுந்திச்சி. அதான் சொல்லிட்டு போலாம்ன்னு வந்தேன்” சித்தப்பா படபடத்தார். நின்று அவர் முகத்தை ஏறிட்டு நோக்கினார் அப்பா. அணிந்துகொள்ள புதிய வேட்டியை பீரோவிலிருந்து பச்சைக் கற்பூர வாசனையோடு எடுத்து வந்து அப்பாவிடம் தந்தாள் அம்மா.
“அம்பிகா புருஷன் பங்குக்கு அவன் ஜி.பி.எஃப்., கிராஜிட்டி, அது இதுன்னு மொத்தமா ஏழெட்டு லடசத்துக்குப் பக்கமா வருதாம். தரகு முனுசாமிதான் சொன்னான். நேத்திக்கு அந்த பக்கமா மாடு பாக்க போனபோது பேசிகிட்டாங்களாம். இன்னொருத்திகூட வாழ்ந்து புள்ளைகுட்டிங்க பொறந்திருந்தாலும் அம்பிகாவுக்குத்தான் முழு உரிமை இருக்குதாம். அந்த ரெண்டாவது பொண்டாட்டிய சட்டப்படி பொண்டாட்டின்னு சொல்லவே முடியாதாம். அவளுக்கு நம்ம அம்பிகாவே பாத்து ஏதாச்சிம் குடுத்ததான் உண்டாம். மத்தபடி எந்த உரிமையும்
இல்லையாம். அதனால நல்ல வக்கீல வச்சி ஒரு நோட்டீஸ் குடுத்தா எல்லாப் பணமும் நம்ம அம்பிகாவுக்குத்தான் வந்து சேருமாம். அதுமட்டுமில்ல, குடும்பப் பெனஷன்னு ஒன்னு இருக்குதில்லையா, அதுவும் கூட மாசாமாசம் கெடைக்குமாம். அங்க யாரோ பேசிகிட்டாங்கன்னு வந்து சொன்னான்.....”
சித்தப்பாவுக்கு இருந்த ஆர்வத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அப்பா காட்டிக் கொள்ளவில்லை. “செத்தவன் மூஞ்சியிலயே முழிக்கமாட்டன்னு ஒட்டாரமா இருக்கற பொண்ணு அது. அவனயே மதிக்காதது அவன் பணத்தயா மதிக்கப் போவுது? போடா, போயி ஏதாவது ஆகற வேலைய யோசிச்சிப் பாருடா” என்றார் அப்பா. ஆணியில் மாட்டப்பட்டிருந்த சந்தன நிற சட்டையை எடுத்துக் கொடுத்தாள் அம்மா.
“அவரு என்னதான் சொல்ல வராருன்னு முழுசாதான் கேளுங்களேன். பேசி முடிக்கறதுள்குள்ள எதுக்கு ஒதறி விடறிங்க?” அம்மா பொறுமையாக அப்பாவைப் பார்த்துச் சொன்னாள். அப்பா அம்மாவைப் பார்த்து முறைத்தார்.
“அது மதிக்க வேணாம்ண்ணே. வாங்கி ஒங்ககிட்ட தந்துரட்டுமே. இன்னம் எவ்ளோ காலத்துக்குத்தான் தென்னந்தோப்ப குத்தக எடுத்து ஓட்டப் போறீங்க? கண்ண மூடி கண்ண தெறக்கறதுக்குள்ள மூணு பொம்பளைப் புள்ளைங்களும் வயசுக்கு வந்து நிக்குதுங்க. இதுங்களுக்கெல்லாம் நாளை பின்ன ஒரு வழி செய்ய வேணாமா? பதினேழு வருஷமா ஒரு புள்ள மாதிரி பாத்துக்கறிங்களே. ஒரு நன்றிக்கடனா இதக்கூட அது உங்களுக்கு செய்யாதா?’’ சித்தப்பா தூண்டிக்கொண்டே இருந்தார்.
”இப்ப என்னடா முடிவா சொல்லற?’’
”ஒரு வக்கீல வச்சி எஜூகேஷன் போர்டுக்கு ஒரு நோட்டீஸ் கொடுத்துப் பார்ப்போம். அதுல ஒரே ஒரு கையெழுத்து போட்டா போதும். கோர்ட்ல என்னைக்காவது கூப்படற அன்னிக்கு வந்து நின்னா போதும். மத்ததெல்லாம் தானா நடக்கும்.
”எனக்கு அதெல்லாம் தெரியாதுப்பா. வந்தா நீயே கேட்டுக்கோ. போடலைன்னா சும்மா அத வம்புக்கெல்லாம் இழுக்காத.’’
”ஆமா, இவரு எப்பவும் இப்படித்தாம்பா. பெத்த புள்ளைங்களுக்கு ஒன்னு நல்லது செய்யணும்ன்னு தானாவும் யோசனை வராது. யாராச்சிம் யோசன சொன்னாலும் எடுத்துக்கவும் தெரியாது. அவ நல்ல பொண்ணுப்பா. ஒரு கையெழுத்து என்ன? நான் சொன்னா நூறு கையெழுத்துகூட போடுவா.
நீங்க போயி ஆகவேண்டிய வேலைய பாருங்க” அம்மாவின் கண்களில் ஆசை மின்னியது.
பெரியப்பாவும் தாத்தாவும் வாசலைத் தாண்டி வருவது தெரிந்தது. அவர்கள் பின்னாலேயே பெரியம்மாவும் சித்தியும் சற்று தள்ளி நடந்து வந்தார்கள். ஏற்கனவே தகவல் சொல்லி விட்டு வந்திருப்பார் போல, வந்ததும் வராததுமாக ‘‘என்னடா அவன் சொல்றதையெல்லாம் கேட்டியா? அவன் நல்லதுக்குத் தான் சொல்றான். அவன் சொல்படி கேளு” என்றார் தாத்தா.
”எனக்கு இதுல துளிக்கூட விருப்பமில்லப்பா. கையெழுத்து போட்டுக்குடுன்னு நான் கேக்கவும் மாட்டேன். நீங்க கேட்டு முடிவு செஞ்சிக்கறதுல தலையிடவும் மாட்டேன்” அப்பா பட்டும்படாமலும் சொன்னார்.
”தானா வர்ற சீதேவிய எதுக்கு வேணாம் வேணாம்னு கழுத்த புடிச்சி தள்ளணும்? கையில கொஞ்சம் பணம் பொரண்டா ஒனக்கும் ஏந்தலா இருக்குமில்லியா?’’ பெரியப்பா நயமாகச் சொன்னார்.
”மூணு பொண்ணுங்களும் இப்படி வரிசையா சமைஞ்சி கெடக்குதுங்களே. எப்படி கரையேத்தப் போறோம்ன்னு வெசனப்பட்டு தவியா தவிச்சேன். அந்த திரோபதை அம்மன்தான் கண்ணத் தெறந்து வழிகாட்டியிருக்கா’’ அம்மாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
”தங்கச்சி தங்கச்சின்னு அளவுக்கு மீறி செல்லம் குடுத்து நீங்கதான் கெடுத்து வச்சிருக்கிங்க. சாவுக்கு வரலையேன்னு சொன்னாளே. அன்னைக்கே செவுட்டுல நாலு சாத்து சாத்தி இழுத்தும் போயிருக்கணும். அவ பேச்ச கேட்டு நாமளும் போகாம விட்டது ரொம்ப தப்பா போயிடுச்சி. இன்னிக்கு பணத்துல பங்கு வேணும்ன்னு போய் நின்னா கேவலமா நெனைக்க மாட்டாங்களா?’’ பெரியம்மா இடையில் புகுந்து சொன்னார்.
”அந்தப் பேச்செல்லாம் இப்ப எதுக்கு? அதயெல்லாம் நாம வக்கீல வச்சி பாத்துக்கலாம். ஒரு டாக்டரு சர்டிபிகேட்டு இருந்தா கத முடிஞ்சிது. கோர்ட்ல எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்குது பாத்துக்கோ’’ சித்தப்பா அடுக்கிக்கொண்டே போனார்.
அத்தை வாளிகளோடு வீட்டுக்குள் வந்தாள். குளியலறைக்குப் பக்கத்தில் வாளிகளை வைத்துவிட்டு சுவர் மாடத்தில் சோப்புப் பெட்டியை வைக்கப் போனாள். வீடு நிறைய ஆட்கள்
சூழ்ந்திருப்பதைப் பார்த்ததும் அவள் கண்களில் மிரட்சி வெளிப்பட்டது. தோளில் கிடந்த நாலைந்து துணிகளை கொடியில் உலர்த்துவதற்காக பின் கட்டின்பக்கம் சென்றாள்.
”இங்க பாரு. பத்து நாளா பேயடிச்ச மாதிரி கெடந்துட்டு இப்பதான் அது கொஞ்சம் தெம்பா நடமாடற மாதிரி இருக்குது. கண்டதயும் சொல்லி அத காயப்படுத்திடாதே. புடிக்கலைன்னு சொன்னா விட்டுட்டு போயிட்டே இருக்கணும் தெரியுதா?’’ என்று சித்தப்பாவை எச்சரித்தபடி வாசலைக் கடந்து போய்விட்டார் அப்பா.
”நீங்க போய் வாங்கண்ணே. நாங்க பேசி முடிவெடுத்து வச்சிருக்கம்”
என்றார் சித்தப்பா.
காற்றில் பறக்கும் காதோர முடிக்கற்றைகளை அழுத்தி ஒதுக்கியபடி அத்தை உள்ளே வந்தாள். ‘‘அம்பிகா இங்க கொஞ்சம் வாம்மா”
என்று அழைத்தார் சித்தப்பா.
அம்மாவையும் என்னையும் பக்கவாட்டில் பார்த்தபடி சித்தப்பாவின் அருகில் வந்தாள் அத்தை. ‘‘என்னண்ணே?’’
என்று அமைதியான குரலில் கேட்டாள்.
”ஒரு சின்ன வேலைம்மா, எங்களுக்காக செய்யணும்.’’
”வேலையா? என்ன வேலைண்ணா?’’ அத்தை குழப்பத்தோடு ஏறிட்டாள்.
”வேலைன்னுகூட சொல்ல முடியாதும்மா. ஒரே ஒரு கையெழுத்து போடணும். அது போதும்.’’
”என்ன கையெழுத்துண்ணா?’’ அத்தை தடுமாறினாள்.
”செத்துட்டாரே திண்டிவனத்தாரு. அவருக்கு ஆபீஸ் பணம் ஏழெட்டு லட்சம் வருதாம். முறைப்படி அது உனக்குச் சேரவேண்டிய தொகை. அதுக்காக ஒரு சின்ன நோட்டீஸ் அனுப்பணும். அதுக்காகத்தான் கையெழுத்து’’ சித்தப்பா பள்ளிப்பாடம் நடத்துவதைப்போல எடுத்துச்சொன்னார்.
”அவரயே வேணாமின்னு ஒதுக்கி வச்சிட்டு வந்தப்பறம் அந்தப் பணத்த தொடுவதே பாவம்ண்ணே’’ அத்தை பொறுமையாக பதில் சொன்னாள்.
”பாவ புண்ணியம் கணக்கெல்லாம் பாக்கற நேரமில்ல இது அம்பிகா. எட்டு லட்சம். நெனச்சிப் பாரு. ஒன்னு இல்ல. ரெண்டு இல்லை. எட்டு லட்சம். கெடைச்சா எல்லாருக்கும் நல்லது”
என்றார் சித்தப்பா. ‘‘ஒரே ஒரு கையெழுத்துல எல்லாமே ஒனக்குச் சொந்தமாயிடும்.’’
”அந்த அளவு மனசாட்சியில்லாதவளா நான் மாற மாட்டேண்ணே” என்றாள் அத்தை. அவள் குரலில் வெளிப்பட்ட உறுதி எல்லாருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
”சத்தம் போடாத அம்பிகா. நம்ப அண்ணன பாரு. பதினேழு வருஷமா ஒன்ன புள்ளயா வளத்தாரு. இந்தப் பணத்தால அவுங்களுக்கு எவ்வளவு வசதி? யோசிச்சி பாரு. அண்ணி, எடுத்துச் சொல்லுங்கண்ணி...’’ சித்தப்பா அம்மாவின் பக்கமாய் பார்வையைத் திருப்பினார்.
”சித்தப்பா சொல்றதயும் யோசிச்சிப் பாரேம்மா. எங்கயோ சம்பந்தமே இல்லாதவங்களுக்குப் போவற பணம் உனக்கு வந்தா நல்லதுதானேம்மா. மூணு புள்ளைங்களுக்கும் உன்னால ஒரு வழி பொறந்தமாதிரி ஆவாதா?’’ அம்மா தயங்கிய குரலில் ஏதோ முறையிடுவதுபோல கேட்டாள்.
”அந்த பணம் வேணாம்ண்ணி. தயவு செஞ்சி என்ன கட்டாயப்படுத்தாதிங்க”
அத்தை திடீரென அம்மாவைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள். அவளை மீறி அவளுடைய கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது. ஓரமாக நகர்ந்து சுவரோரமாக தரையில் உட்கார்ந்து குமுறிக்குமுறி அழுதாள்.
பெரியம்மா திடீரென குரலை உயர்த்தி ‘‘சாது சாதுன்னு தங்கச்சிய ஆளாளுக்கு தாங்கனிங்களே, இப்ப வந்து பாருங்க ஒங்க தங்கச்சி ஒட்டாரத்த. ஒரு கையெழுத்து போட என்னமா ராங்கி காட்டறா பாருங்க” என்றாள்.
”அசிங்கம் புடிச்சவங்க பணத்த நாம தொடவே கூடாதுங்கண்ணி” என்று அழுதுகொண்டே சொன்னாள் அத்தை, ‘‘ஒன்ன யாருடி எடுத்துக்க சொன்னா? ஒன்ன இத்தன வருஷம் கவனிச்சிகிட்டாங்களே, அவுங்ககிட்ட குடு. அவுங்க நல்லதுக்காகவாவது இந்தக் கையெழுத்த நீ போடக்கூடாதா?’’ கிட்டத்தட்ட அதட்டும் குரலில் கேட்டாள் பெரியம்மா.
”தயவுசெஞ்சி என்ன வற்புறுத்தாதிங்க. என் மனசாட்சிக்கு விரோதமா நான் எப்படி நடக்கமுடியும்ண்ணி?’’ அத்தை தேம்பினாள்.
”இங்க பாரு அம்பிகா. பண விஷயத்துல மனசும் இல்லை. மாங்காயும் இல்லை. உன் புண்ணியத்துல இந்த பொட்டைப் புள்ளைங்களுக்கு ஒரு நல்லது நடந்தா ஒன் மனசு குளுராதா? சொல்லு...’’ சித்தப்பா மறுபடியும் இடையில் புகுந்தார்.
”அது தப்பு வழியிலே வர பணம்ண்ணே. வேற யாருக்குமே அது வேணாம்” அத்தை கிட்டத்தட்ட பைத்தியத்தைப்போல அலறினாள்.
”ஒரு ஆம்பளை முடிவுக்கு கட்டுப்படாத அளவுக்கு என்ன திமிரு பாருங்க கழுதைக்கு. செல்லம்கொடுத்து செல்லம் கொடுத்து நாமதாம் கெடுத்து வச்சிருக்கம். ஒன் பணத்துல நாங்கள்ளாம் வாழ்ந்துரக்கூடாதுங்கற கெட்ட எண்ணம்தானே ஒனக்கு?’’ பெரியம்மா எரிச்சலோடு அத்தையை முறைத்தாள்.
‘‘அப்படிலாம் ஒன்னுமில்லைண்ணி, என்ன நம்புங்க” அத்தையின் உடம்பு நடுங்கியது.
”அம்பிகா. ஒரே ஒரு கையெழுத்து போட இப்படி அடம் புடிச்சா எப்படிம்மா? ஒன்னப்பத்தி இருக்கறவங்களாம் என்ன நெனைப்பாங்க சொல்லு?’’
”வேணாம்ண்ணே. மனசாட்சிக்கு எதிரா எப்படிண்ணே நடக்க முடியும்?’’
”மத்தவங்க எல்லாரயும்விட இவளுக்கு மட்டும் மனசாட்சி பெரிசா போயிடுச்சி. காந்தித்தாத்தா பேத்தி மாதிரி பேசறா பாரு”
பெரியம்மா முகத்தை முறுக்கிக்காட்டினாள்.
”கடவுள்மேல சத்தியமா சொல்றேன். நீங்க எல்லோரும் நல்லா இருக்கணும்ன்னுதான் நான் ஆசப்படறேன். இத்தன வருஷம் புள்ளைமாதிரி வளத்துட்டு இப்ப எதஎதயோ சொல்லி சித்ரவத பண்ணாதிங்கண்ணி. என் மனசுக்கு புடிக்காதத செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தாதிங்க.’’
”அண்ணிக்காரி குடும்பத்துக்கு இதுதான் நீ காட்ற மரியாதையா?’’ விரலைநீட்டி குத்துவதைப்போல கேட்டாள் சித்தி.
”இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் அண்ணி? சம்பந்தமே இல்லாத ரெண்டு விஷயத்த எதுக்குண்ணி சம்பந்தப்படுத்திப் பேசறிங்க?’’
சித்தி ஆத்திரத்துடன் நெருங்கிச் சென்றாள். ‘‘என்ன பேசறோம்ன்னு தெரிஞ்சிதான் பேசறியா நீ? சம்பந்தமே இல்லாம பேசறதுக்கு நாங்க என்ன பைத்தியக்காரங்களா?’”
”எந்தக் கையெழுத்தும் நான் போடமாட்டேண்ணி. எனக்குப் புடிக்கல” என்று தேம்பினாள் அத்தை.
பெரியப்பா அத்தையின் முகத்தை உற்றுப் பார்த்தார். அவர் முகம் கோபத்தில் சிவக்கத் தொடங்கியது. ‘‘அவள எதுக்குடா கெஞ்சறிங்க? நன்றி மறந்த நாயி. அவ கையெழுத்த நம்ம சீனிவாசன் போடுவான்டா போடா. மார்க்கு கார்டுல என் கையெழுத்த அவன்தான ஒவ்வொரு மாசமும் போட்டுகினு போவறான். அதுமாதிரி இதயும் அவனே போடுவான்” என்றார். பிறகு அதே வேகத்தில் அத்தையின் பக்கம் திரும்பி ‘‘எங்களுக்காக ஒரு கீரையைக்கூட நீ கிள்ளிப் போடாதேம்மா தாயே. மகராசியா இரு” என்று சொல்லிவிட்டு வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து குழுமியிருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வெளியேறினார்கள். திடீரென வீடு அமைதியில் மூழ்கியது. அத்தை குமுறிக்குமுறி அழுதாள். கண்ணீர் அவள் கன்னங்களில் வழிந்தபடி இருந்தது. தொண்டை அடைத்துக் கொள்ள அவளிடமிருந்து எழுந்த கேவல் ஒலியைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அமைதியாக நின்றிருந்த அம்மாவைப் பார்த்து ‘‘அண்ணி, நான் எந்த நன்றியையும் மறக்கலைண்ணி. நீங்க என்ன பெத்தவளுக்குச் சமானம். தயவு செஞ்சி என்ன நம்புங்க. நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை. அந்த ஆளு மூச்சுக்காத்துகூட படக்கூடாதுன்னு ஒதுங்கி வந்தவ நானு. அவன் பணத்த தொடறதுக்கு எப்படிண்ணி மனசு வரும்? என் மனசுல வேறு எந்த எண்ணமும் இல்லைண்ணி. என்ன நம்புங்க”
அத்தையின் குரல் தடுமாறியது. மூச்சு இடறியது. இடைவிடாமல் இருமத் தொடங்கினாள். இருமலுக்கு நடுவேயும் அம்மாவைப் பார்த்து வணங்கினாள்.
அம்மா பதில் எதுவும் பேசவில்லை. பேசாமல் முந்தானையால் முகத்தைத் துடைத்தபடி அடுப்படிப்பக்கமாகச் சென்றுவிட்டாள். வெகுநேரம் சின்னச்சின்னக் கேவல்களாக அவள் அழுகைமட்டும் அந்தக் கூடத்தில் தொடர்ந்தது. அவள் அருகில் சென்று அவள் தலையைத் தடவித்தரவேண்டுமென்று மனம் துடித்தது. ஏதோ அச்சத்தில் உறைந்துபோய் நின்றுவிட்டேன்.
ஒரு வாரம் கழித்து ஒரு விடுமுறை நாளில் துணி துவைப்பதற்காக தோப்புக்கு செல்லும்போது அத்தையோடு நானும் சென்றேன். இறைத்துக்கொண்டிருந்த பம்ப்புக்கருகில் கல்மேடைமீது வெகுநேரம் பேசாமல் உட்கார்ந்திருந்தாள் அத்தை. பிறகு எதையோ யோசித்தவளாக துணிமூட்டைக்குள் வைத்து எடுத்துவந்திருந்த
ஒரு சின்ன துணிப்பையை எடுத்தாள். அதற்குள் இருந்த வளையல் டப்பியை ஒருமுறை திறந்து முகவரி அட்டைகளைப் புரட்டிப் பார்த்தாள். எல்லாவற்றையும் உள்ளே வைத்து மூடிவிட்டு ‘‘பஸ் ஸ்டான்ட் வரைக்கும் என்கூட வரியாடா?’’ என்று கேட்டாள். ‘‘அத்தை’’ என்று நான் வாய்விட்டுப் பதறினேன். ‘‘நன்றி கெட்டவள்னு பேரெடுத்தப்பறம் நான் எப்படிடா இவுங்க நடுவுல நடமாடறது? ஒவ்வொருத்தவங்களும் பாக்கற பார்வையில உடம்பே கூசி குன்னிப் போவுது. எங்கயாவது போயி பொழைச்சிக்கறன்டா நானு. யாருக்காவது பத்து பேருக்கு துணிதொவச்சி சோறாக்கி போட்டு பொழைச்சிக்குவன்டா’ என்றாள். நான் ஓடிச் சென்று அவள் கைகளைப் பற்றினேன். ‘‘வேணாம் அத்த, எங்கயும் போவாதே அத்த’’ என்று கெஞ்சினேன். ‘‘இங்க பாரு. நீ நல்ல புள்ளைதானே? அழக்கூடாது. தைரியமா வா. என்ன பாண்டிச்சேரி போவற பஸ்ல ஏத்தி உடு. யார்கிட்டயும் இதப்பத்தி சொல்லாதே, தெரியுதா?’’ என்றாள் அத்தை.
குறுக்கு வழியாக பேருந்து நிற்கிற நூக்கமரத்தைநோக்கி நடந்தோம். அத்தை ஒரு வார்த்தைகூட பேசாமல் வந்தாள். வெயிலில் சிறிது நேரம் நிற்கவேண்டியிருந்தது. அவள் முகம் பெரிதும் வாடியிருந்தது.
பாண்டிச்சேரி பஸ் வந்து நின்று ஆட்களை இறக்கியது. அத்தை என் பக்கமாகத் திரும்பினாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன. குனிந்து என் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு நடந்துசென்று வண்டியில் ஏறிக்கொண்டாள். அதற்குப் பிறகு அத்தையைப் பார்க்கவே முடியவில்லை. ஒரு மாதகாலம் அப்பா, பெரியப்பா, சித்தப்பா மூன்று பேரும் திசைக்கொருவராக மாறிமாறித் தேடினார்கள். அவளைப்பற்றிய சின்னத் தகவல்கூட கிடைக்கவில்லை. கடுமையாக உதைபட்டதாலும் உடல்நலம் குன்றிப்போய்விட்டதாலும் மனச்சோர்வினாலும் அந்த ஆண்டில் என்னால் பள்ளித் தேர்வை எழுத இயலாமல் போய்விட்டது. அதே வகுப்பில் மறுபடியும் படிக்கும்படி ஆனது. வீட்டில் பெண்கள் சேர்ந்து அத்தையைப்பற்றிய பேச்சை எடுக்கும்போதெல்லாம் ‘‘அந்த நன்றி கெட்டவளபத்தி எதுக்கு பேசறிங்க விடுங்க’’ என்று இளக்காரமாகச் சொல்லத் தொடங்கினாள் அம்மா. மன அளவில் கடுமையான குற்ற உணர்ச்சிக்கு ஆளான அப்பா மற்றவர்களிடம் பேசுவதை முடிந்தமட்டும் குறைத்துக் கொண்டார்.
பத்து வருஷங்களுக்குப் பிறகு பெரியவனாகி பட்டப் படிப்புக்காக பாண்டிச்சேரிக்குத் தனியே செல்லத் தொடங்கியதைத் தொடர்ந்து
அந்தப் பெரிய நகரத்தில் என்றாவது ஒரு நாள் என் அத்தையின் முகத்தை எதிர்பாராத கணத்தில் காலம் என் முன் கொண்டுவந்து நிறுத்தும் என்னும் நம்பிக்கையில் நெற்றியில் அவள் கொடுத்த முத்தத்தின் ஈரத்தை நினைத்தபடி அலையத்தொடங்கினேன். படிப்புக்காலமான மூன்று ஆண்டுகள் முடிவுறும்வரை அந்தக் கணம் என் வாழ்வில் நிகழாமலேயே போய்விட்டது.
(அம்ருதா - 2007)