நான் பிறந்த ஊர் வளவனூர். என்னுடைய அப்பாவின் பெயர் பலராமன். கடைத்தெருவில் வாடகைக்கட்டடத்தில் தையல்கடை வைத்திருந்தார். என் அம்மாவின் பெயர் சகுந்தலா. புதுச்சேரியில் பிறந்தவர். அப்பாவைத் திருமணம் செய்துகொண்ட பிறகு வளவனூருக்கு வந்தவர்.
எனக்கு ஐந்து வயதான போது என் பெற்றோர்கள்
என்னை ஊராட்சி ஒன்றியப்பள்ளியில் முதல் வகுப்பில்
சேர்த்தார்கள். அது 1963ஆம் ஆண்டில் நடந்தது. எங்கள் வீடு இருந்த பஞ்சாயத்து போர்டு
தெருவைக் கடந்து பள்ளிக்கூடம் இருந்த குயவன் பிள்ளையார்கோவில் தெருவையும் அதன் மனிதர்களையும்
ஒவ்வொரு நாளும் பார்க்கும் வாய்ப்பு அப்போதுதான் கிடைத்தது. முதல் வகுப்பும் இரண்டாவது
வகுப்பும் மட்டும்தான் நான் அந்தப் பள்ளியில் படித்தேன். மூன்றாம் வகுப்புக்கு வந்த
பிறகு கோவிந்தையர் பள்ளிக்கு மாற்றிவிட்டார்கள். அப்போது கடைத்தெரு, பட்டாணிக்கடை, செங்காடு ரோடு,
போலீஸ் ஸ்டேஷன், அக்கிரகாரம், ஈஸ்வரன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, மேட்டுத்தெரு,
ஏரிக்கரை, ரயில்வே ஸ்டேஷன் என பல இடங்கள் வழியாகச் சுற்றியலையும் வாய்ப்பு கிடைத்தது.
பெருமாள் கோவில் மதிலையொட்டிய அரசமரத்தடியில் சிறுவர்கள் கூட்டமொன்று பந்து விளையாடிக்கொண்டிருக்கும்.
ரயில்வே ஸ்டேஷனையொட்டி ஆலமரங்களுக்கும் அரசமரங்களுக்கும் சூழ்ந்த திடலில் இன்னொரு சிறுவர்
கூட்டம் விளையாடும். நானும் என் நண்பர்களும்
எப்போதும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்திருப்போம்.
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே நான் அந்தப்
பள்ளியில் படித்தேன். அதற்குப் பிறகு அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன்.
1974ஆம் ஆண்டில் பள்ளியிறுதித் தேர்வை எழுதும் வரைக்கும் அந்தப் பள்ளியில் படித்தேன்.
அது கிழக்குத் திசையில் ஊருக்கு வெளியே வெகுதொலைவில்
இருந்தது. வீட்டிலிருந்து பள்ளிக்கு நடப்பது என்பது ஒரு பெரும்பயணம். எங்கள் தெருவிலும்
பிற தெருக்களிலும் எனக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள். பள்ளியிலும் எனக்கு நிறைய
நண்பர்கள் உண்டு. எங்கே சென்றாலும் நாலைந்து பேராக ஒன்றாகத்தான் செல்வோம். கடைத்தெரு,
மசூதி, மீன் மார்க்கெட், நடராஜ சுவாமிகளின் ஜீவசமாதி, புளியந்தோப்பு, பிரபாத் டாக்கீஸ்
எல்லாவவற்றையும் கடந்துதான் பள்ளிக்கூடத்துக்குச் செல்லவேண்டும்.
பள்ளிப்படிப்பை முடித்த பிறகு கல்லூரிப்படிப்புக்காக
புதுச்சேரிக்கு வந்துவிட்டேன். பட்டப்படிப்பை முடித்த பிறகு ஓராண்டு விழுப்புரத்தில்
அஞ்சல் நிலையத்திலும் அடுத்த ஓராண்டு புதுச்சேரியில் தொலைபேசி நிலையத்திலும் வேலை செய்தேன்.
அதற்குப் பிறகு அதே தொலைபேசித்துறையில் இளநிலை பொறியாளர் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு
கர்நாடகத்துக்கு வந்துவிட்டேன்.
பள்ளி மாணவனாக 1963 முதல் 1974 வரைக்கும்
வளவனூரில் நான் வாழ்ந்த காலத்தை ஒரு பொற்காலம் என்றே சொல்லவேண்டும். நடை வழியாகவே நான்
ஒவ்வொரு தெருவையும் அறிந்துகொண்டேன். நூலகத்துக்கும் தமிழாசிரியரான கண்ணன் ஐயா வீட்டுக்கும்
நண்பர்கள் வீட்டுக்கும் நடந்துதான் செல்வேன். ஆறாம் வகுப்பில் படிக்கும்போதே என் அம்மா
என்னை வீட்டு வேலைகளில் பழக்கிவிட்டார். கடைத்தெருவுக்குச் சென்று அரிசி, மளிகைச்சாமான்கள்,
காய்கறிகள் வாங்கி வருவது, அடுப்பெரிக்க விறகு, சவுக்கை மிளார், எருமுட்டை வாங்கி வருவது,
கேழ்வரகு அரைக்க மில்லுக்குச் செல்வது என எல்லா வேலைகளும் என் பொறுப்பில் இருந்தன.
அந்த இடங்களுக்குச் செல்லக்கூடிய நேர்வழிகளையும் குறுக்குவழிகளையும் நடந்து நடந்து
நானே தெரிந்துகொண்டேன். தனியாக நடப்பது ஒரு அனுபவம். கூட்டமாக நடப்பது இன்னொரு அனுபவம்.
வேடிக்கை பார்த்தபடி நடக்கும்போது பாதையோரத்துச்
சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் அல்லது எழுதப்பட்டிருக்கும் வாசகங்களைப் படிப்பதும்,
அவற்றிலிருக்கும் ஏதேனும் ஒரு சொல்லிலிருந்து புதிதாக கதைகளை உருவாக்கி அதில் திளைப்பதும்
எனக்கு எப்போதும் பிடிக்கும். நண்பர்களைச் சந்திக்க புதிய புதிய தெருக்கள் வழியாக நடந்துபோவதும் வேடிக்கை பார்ப்பதும்
வழங்கும் பரவசத்துக்கு ஈடு இணையே இல்லை.
கட்டுக்கதை பேசுவதில் நாங்கள் எல்லோருமே
கில்லாடிகள். கற்பனையில் பின்னிப்பின்னி மணிக்கணக்கில் சொல்லிக்கொண்டே இருப்போம். பள்ளிக்கூட
நாளாக இருந்தால், வகுப்பு தொடங்குவதற்கான மணி அடிக்கும் வரைக்கும் கதை பேசுவோம். விடுமுறை
நாளாக இருந்தால், பசி நேரம் வரும்வரை எங்கள் கதைகள் வளர்ந்துகொண்டே இருக்கும். சினிமா
பார்த்தது, பாட்டு கேட்டது, விருந்தினர் வீட்டுக்குப் போனது, வீட்டுக்கு விருந்தினர்
வந்தது, காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்குச் சென்று ஊசி போட்டுக்கொண்டது எல்லாமே எங்களுக்குக்
கதைகளே. சொல்லும்போது சுவாரசியத்துக்காக சற்றே கற்பனையையும் சேர்த்துவிடுவோம். நாங்கள்
எல்லோருமே வறுமையின் நிழல் படிந்த வீட்டில் வாழ்ந்தவர்கள்தான். ஆனால், அந்த நெருப்புக்கு
நடுவில் எங்கள் கற்பனை எங்களை ஆனந்தமாக வாழவைத்தது.
விழுப்புரத்தையும் புதுச்சேரியையும்
இணைக்கும் நெடுஞ்சாலை எங்கள் வளவனூரை இரண்டு துண்டுகளாக மாற்றியிருந்தன. தோராயமாக ஒவ்வொரு
பக்கத்திலும் இருபது முதல் முப்பது தெருக்கள் இருக்கும். ஒரு பகுதி மட்டும் குமாரகுப்பம் என்றொரு தனிப்பெயரைச்
சூட்டிக்கொண்டிருந்தது. யாரோ ஒரு அரசனின் காலத்தில் குமாரகுப்பமும் வளவனூரும் தனித்தனி
சிற்றூர்களாக இருந்ததாகவும் வேறொரு அரசனின் காலத்தில் இரு ஊர்களும் வளவனூர் என்னும்
ஒரே பெயரில் இணைக்கப்பட்டுவிட்டதாகவும் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன்.
அவற்றையெல்லாம் கற்பனை என்றே வெகுகாலம்
நம்பிக்கொண்டிருந்தேன். ஒருநாள் எங்கள் அப்பாவின் நண்பரொருவர் வீட்டுக்கு வந்திருந்தார்.
அவர் பெரிய முருகபக்தர். விழுப்புரத்தைச் சேர்ந்தவர். ஒரு நேர்த்திக்கடனை செலுத்திவிட்டு
வருவதற்காக பழனியில் இருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்றுவந்திருந்தார். அங்கிருந்து வாங்கிவந்த பஞ்சாமிர்தத்தைக் கொடுப்பதற்காகத்தான்
வீட்டுக்கு வந்திருந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு புறப்படுவதற்காக விடைபெறும்போது
“சரி, நான் கெளம்பறேன். குமாரகுப்பம் சுப்பிரமணியர் கோவில் வரைக்கும் போய் சாமியைப்
பார்த்துட்டு பஸ் பிடிக்க சரியா இருக்கும்” என்று சொன்னார்.
குமாரகுப்பம் என்னும் சொல் காதில் விழுந்ததும்
எப்படியோ அதைப்பற்றிய உரையாடலும் சந்தேகமும் விளக்கமும் தொடங்கிவிட்டன. தாமதத்தைப்
பொருட்படுத்தாமல் அவர் விரிவாக எங்கள் சந்தேகங்களுக்கு விளக்கங்களை அடுக்கினார். ”எல்லாமே
உண்மைதான். கதை கிடையாது. இன்னைய தேதியில நமக்கு ஒரு விஷயம் தெரியலைங்கறதுக்காக அப்படி
ஒரு விஷயமே நடக்கலைன்னு நினைக்கறது பெரிய தப்பு” என்று நிதானமாகச் சொன்னார். அவர் சொன்னதையெல்லாம்
குறுக்குக்கேள்வி கேட்காமல் நாங்கள் அமைதியாகக் கேட்டோம்.
அவர் சொன்ன செய்திகளின் சாரம் இதுதான்.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் மிகப்பெரிய முருகபக்தர். பத்தொன்பதாம் நூற்றாண்டின்
நடுப்பகுதியில் வாழ்ந்தவர். எல்லா நேரங்களிலும் முருகனின் திருப்புகழைப் பாடிக்கொண்டே
இருந்ததால் அவருக்குத் திருப்புகழ்ச் சுவாமிகள் என்றொரு பட்டப் பெயரும் உண்டு. முருகன்
மீது ஏராளமான துதிப்பாடல்களை எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் அவர் காலடி படாத முருகன்
கோவிலே இல்லை. எல்லாக் கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்து, முருகன் மீது பாடல்களைப்
பாடியிருக்கிறார். அவர் வளவனூரில் உள்ள சுப்பிரமணியர் கோவிலுக்கும் வந்து, ’கந்த நாயக
மாலை’ என்ற பெயரில் முருகன் பாடல்களை எழுதியிருக்கிறார்.
கொந்தலர்ச் சோலை மலியத் திகழும் குமாரபுரிக்
கந்தனுக்குச் சொன்ன செந்தமிழ் மாலைக்
கவிதையென
வந்தவை முப்பதிற்றாறும் கருது மனத்தினருக்கு
அந்தமிலானந்த வாரியிற்றேறியும் அமுதெய்துமே
என்பது அவருடைய பாடல்களில் ஒன்று. அந்தப் பாடலில் குமாரபுரி
என்று குறிப்பிடுவதுதான் இன்றைய குமாரகுப்பம்.
ஒரு காலத்தில்
தென்தமிழகத்தில் பாஞ்சாலம் என்கிற ஊர் இருந்தது. எதிர்பாராமல் தாக்கிய பஞ்சத்தால் அந்த
ஊர் சிக்கித் தவித்தது. மக்கள் உணவுக்கு வழியின்றி தவித்தார்கள். அவர்கள் எல்லோருமே
முருகனை தெய்வமாக வழிபடக்கூடியவர்கள். முருகனை நினைத்து வாழ்வதற்கு வழி தேடி அந்த ஊரைவிட்டு
வெளியேற முடிவெடுத்தார்கள். ஆனால் அதுவரை நாள்தோறும் வணங்கிய முருகனை அங்கேயே விட்டுவிட்டு
அவர்களால் அங்கிருந்து வெளியேற அவர்களுக்கு மனம் வரவில்லை. அதனால் மூலவரை மட்டும் தம்மோடு
எடுத்துக்கொண்டு வடக்கு நோக்கிப் புறப்பட்டார்கள்.
பகலெல்லாம் நடப்பது, இரவில் பாதுகாப்பான
இடத்தில் தங்கி ஓய்வெடுப்பது என நடந்துகொண்டே இருந்தனர். அவ்வாறாக, அவர்கள் இந்த ஊருக்கு
ஒருநாள் வந்து சேர்ந்தனர். இரவாகிவிட்டதால் இங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்கள். காலையில் புறப்படுவதற்குத் தயாரானார்கள். ஆனால்
மூலவரைச் சுற்றிவைத்திருந்த துணிமூட்டையை அவர்களால் எடுக்கமுடியவில்லை. மண்ணில் வேரூன்றியதுபோல
அசைக்கமுடியாமல் உறுதியாக இருந்தது. அந்த ஊரில் தங்குவதற்கு முருகன் வழங்கும் ஆலோசனையாக
அதை அவர்கள் நினைத்தார்கள். ஊரும் செழிப்பாகவும் வாய்ப்பு வசதிகளோடும் இருந்தது. அதனால்
முருகனின் விருப்பப்படி அங்கேயே வாழத் தொடங்கினர்.
செஞ்சியில் தேசிங்கு ராஜா ஆண்டுகொண்டிருந்த
காலம் அது. வளவனூரை அடுத்த சிற்றூரான நறையூர் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்த இடம்.
நடைபெற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் தெரிந்துகொண்ட அவர் தம் ஆட்கள் வழியாக அந்தக் குடிமக்களுக்கு
தேவையான உதவிகளைச் செய்யும்படி கட்டளையிட்டார். அதை ஒரு தொடக்கமாகக் கொண்டு அவர்கள்
அனைவரும் அங்கேயே மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். பாடுபட்டு உழைத்து தம் வாழ்க்கையை வளமாக்கிக்கொண்டனர்.
தமக்கு வழிகாட்டிய முருகனுக்கு அங்கேயே ஓர் ஆலயத்தை எழுப்பி நிற்கவைத்து வழிபட்டனர்.
குமரக்கடவுளின் பெயராலேயே அப்பகுதிக்கு குமாரபுரி என்று பெயர்சூட்டினர். அவர்களுடைய
உழைப்பால் அப்பகுதி மேலும் செழித்தது. அச்செழிப்பு இன்னும் பல ஊர்களிலிருந்து பலர்
வந்து அங்கு குடியேற வழிசெய்தது.
குமாரபுரி என்னும் சொல்லே பிற்காலத்தில்
குமாரகுப்பமானது. இதன் மறுபுறத்தில் குலோத்துங்க சோழனின் கொடிவழியினரின் ஆட்சிக்குட்பட்ட
வளவனூர் வற்றாத ஏரிப்பாசனத்தால் விவசாயத்தில் செழித்து வளமோடு விளங்கியது. காலப்போக்கில்
இரு பகுதிகளும் இணைந்து, பெரும்பான்மையினர் வசித்த பகுதியின் பெயரிலேயே வளவனூர் என்னும்
பெயரைத் தாங்கி ஓங்கி வளரத் தொடங்கியது.
இயற்கை வகுத்துவைத்திருக்கும் எல்லைகளைப்பற்றியெல்லாம்
எதுவும் தெரியாத என் பிள்ளைமனம் அக்காலத்தில் வளவனூரை வேறொரு கோணத்தில் வகுத்துக்கொண்டது.
பெரிய கீற்றுக்கொட்டகையில் திரைப்படங்கள் திரையிடப்பட்ட காலம் அது. ஒரு பெரிய புளியந்தோப்புக்கு
நடுவில் பிரபாத் என்னும் பெயரில் இயங்கிவந்த கீற்றுக்கொட்டகைதான் கிழக்கு எல்லை. நீத்தார்
சடங்குகள் செய்வதற்கு ஏற்ற வகையில் எழுப்பப்பட்ட ஒரு சின்னதொரு கூரையும் படித்துறையும்
கொண்ட புதுக்குளத்தைக் கடந்த தோப்பையொட்டி குமரன் என்னும் பெயரில் இயங்கிவந்த கீற்றுக்கொட்டகைதான்
மேற்கு எல்லை. சுற்றியிருக்கும் பதினெட்டு சிற்றூர்களுக்கு பாசனவசதியை வழங்குவதற்காக
அரசர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட பெரியதொரு ஏரி தெற்கு எல்லை. அங்காளம்மன் கோவிலும்
அதைத் தாண்டியிருக்கும் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியும் வடக்கு எல்லை. இதற்கு நடுவில்
தோராயமாக ஐம்பது தெருக்கள் இருந்தன. ஏறத்தாழ பத்தாயிரம் பேர் வசித்துவந்தனர். அதுதான்
வளவனூரின் முகம்.
எப்போதும் நடமாட்டமுள்ள ஒரு பெரிய கடைத்தெரு,
ஒரு போலீஸ் ஸ்டேஷன், ஒரு நூலகம், ஒரு பெரிய மருத்துவமனை, கால்நடைகளுக்கென மற்றொரு தனி
மருத்துவமனை, ஒரு பெரிய காட்டுபங்களா போல காட்சியளிக்கும் ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையம், அஞ்சல் நிலையம், நிலப்பதிவு அலுவலகம்,
காய்கறிக்கடைகள், மீன்கடைகள், இறைச்சிக்கடைகள், உணவுக்கடைகள், இரும்புக்கடைகள், கோவில்கள்,
மசூதிகள் எல்லாமே இருந்தன.
தி.மு.க. சார்பில் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.
மன்றமும் காங்கிரஸ் சார்பில் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் படிப்பகமும் பிரதான சாலையில் சாலையோரத்துக் கால்வாயை ஒட்டி இருந்தன.
பெரிய கட்டடமெல்லாம் இல்லை. மண்சுவரோடு கூடிய கூரைக்குடிசை. அவ்வளவுதான். எம்.ஜி.ஆர்.
மன்றத்துச் சுவரில் பெரியார், அண்ணாதுரையின் படங்கள் தொங்கும். ஒரு பெரிய மேசையில்
தினத்தந்தி, முரசொலி, சமநீதி, காஞ்சி பத்திரிகைகள் இருக்கும். காங்கிரஸ் படிப்பகத்துச்
சுவரில் காந்தியடிகள், நேரு, காமராஜர் ஆகியோரின் படங்கள் தொங்கும். ஒரு நீளமான பெஞ்ச்சில்
தினமணி, நவசக்தி, தினத்தந்தி பத்திரிகைகள் இருக்கும். பள்ளிக்கூடம் போகிறபோது கொஞ்ச
நேரம் அந்த மன்றத்துக்குள்ளும் படிப்பகத்துக்குள்ளும் சென்று தொடர்கதைகளை ஒரு வேக வாசிப்பில்
படித்துவிட்டு ஓடிவிடுவோம்.
பிரபாத் டாக்கீஸ், குமரன் டாக்கீஸ்
இரண்டும் கீற்றுக்கொட்டகையில் ஒரே சமயத்தில் அதிகபட்சமாக ஆயிரம் பேர் உட்கார்ந்து படம் பார்க்கும் வகையில் அமைந்திருந்தன.
அந்த அளவுக்கு உயரமும் பருமனும் கொண்ட பனைவாரைகளை நிறுத்தி அதைக் கட்டியிருப்பார்கள்.
முற்றிலும் கீற்றுகளால் வேயப்பட்ட கொட்டகை. காற்று வீசினாலும் மழை பொழிந்தாலும் படம்
பார்க்கலாம். ஒன்றும் தெரியாது.
கொட்டகைக்குள் வண்டிவண்டியாக ஆற்றுமணலைக்
கொண்டு வந்து நிரப்பிவைத்திருப்பார்கள். ஒருபக்கம் படம் திரையிடுவதற்கு ஏற்ற வகையில்
வெள்ளைத்திரை நிறுவப்பட்டிருக்கும். அதற்கு நேர் எதிரில் ப்ரொஜெக்டர் ரூம் அமைக்கப்பட்டிருக்கும்.
ப்ரொஜெக்டர் ரூமுக்கும் வெள்ளைத்திரைக்கும் நடுவில் மூன்றடி உயரத்துக்கு சுவர் எழுப்பப்பட்டிருக்கும்.
சுவருக்கு ஒரு பகுதி ஆண்களுக்குரியது. மற்றொரு பகுதி பெண்களுக்குரியது. அங்கு செல்வதற்கான
நுழைவாயிலும் தனித்தனியாக இருக்கும்.
திரைப்படம் தொடங்கும் வரைக்கும் பகல்போல
வெளிச்சம் விழும் வகையில் எல்லாப் பக்கங்களிலும் விளக்குகள் எரியும். திரைப்படம் தொடங்கியதும்
எல்லா விளக்குகளும் அணைந்துவிடும். அப்போது திரையில் தோன்றும் மனிதர்களின் நடமாட்டம்
எல்லாமே உண்மையான நடமாட்டத்தைப்போல இருக்கும். சண்டைக்காட்சிகள் எல்லாமே உண்மையான சண்டைபோலவே
இருக்கும்.
ஒருமுறை எம்.ஜி.ஆர். படம் பார்க்க என்
அம்மாவும் நானும் சென்றிருந்தோம். திரையில்
சண்டைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். யாரோ ஒருவருடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டிருக்கும்
காட்சி. அப்போது எம்.ஜி.ஆரை முதுகுக்குப் பின்னாலிருந்து கத்தியால் குத்தி வீழ்த்துவதற்கு
வேறொரு பாத்திரம் அடிமேல் அடிவைத்து முன்னேறிக்கொண்டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்ததுமே
சில பெண்களும் ஆண்களும் “ஐயோ, படுபாவி. குத்தப் போறானே. ஐயா சாமி. ஒரு நிமிஷம் திரும்பிப்
பாரேன். திரும்பி அவன் முஞ்சியிலயே ரெண்டு போடு” என்று உரத்த குரலில் எச்சரிக்கை விடுத்ததை
நான் பார்த்திருக்கிறேன். படம் பார்க்கும் சமயத்தில் அந்த அளவுக்கு அவர்கள் அந்தத்
திரைக்கதையோடு ஒன்றிவிட்டனர் என்பது ஒரு விஷயம்.
திரையில் நடப்பவை அனைத்தும் உண்மையானவை என்று நம்பினார்கள் என்பது இன்னொரு விஷயம்.
அப்போதெல்லாம் ஒவ்வொரு திரைப்படமும்
நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு பகுதி முடிந்து அடுத்த பகுதியைத் தொடங்குவதற்கு
சிறிது நேரம் பிடிக்கும். அதுவரைக்கும் இருண்டிருந்த கொட்டகையில் அந்த நேரத்தில் வெளிச்சத்தால்
நிறைந்துவிடும். உடனே முறுக்கு, எள்ளடை, கடலை
உருண்டை போன்ற நொறுக்குத்தீனிகளை வட்டமான தட்டு நிறைய அடுக்கியெடுத்துக்கொண்டு ‘முறுக்கே
முறுக்கே’ என்று குரலெழுப்பியபடி ஓடி வருவார்கள். உட்கார்ந்திருக்கும் இடம் தேடி வரும்
தின்பண்டத்தை பலரும் சில்லறை கொடுத்து ஆவலோடு வாங்கித் தின்பார்கள். விளக்குகள் மீண்டும்
அணைக்கப்பட்டு படம் தொடங்கும் வரைக்கும் அரங்கமே அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். படம் தொடங்கியதும் அனைவரும் சிட்டுக்குருவி போல
பறந்துபோய் விடுவார்கள்.
கீற்றுக்கொட்டகைகளுக்கு அப்போதெல்லாம்
எண்ணற்ற நிபந்தனைகளுடன்தான் உரிமம் வழங்கப்படும். அவற்றுக்கெல்லாம் கட்டுப்பட்டால்தான்
கொட்டகையை நடத்தமுடியும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த உரிமத்தைப் புதுப்பிக்கவேண்டும்.
புதுப்பிப்பது என்றால், கொட்டகையை முழுமையாகப் பிரித்துவிட்டு முற்றிலும் புதிதாக கீற்றுகளை
வேய்ந்து கட்டவேண்டும். அவசரப்படக் கூடாது என்பதற்காகவே இரண்டு மாத இடைவெளி விடப்படும்.
கொட்டகையைப் பிரித்த பிறகு ஒரு சில
நாட்கள் வரைக்கும் நாங்கள் குட்டிச்சுவராக வானம் பார்த்தபடி இருக்கும் ஆப்பரேட்டர்
அறையைச் சுற்றிச்சுற்றி வருவோம். ஆப்பரேட்டர் வெட்டிப் போட்ட துண்டு ஃபிலிம்கள் அங்கங்கே
இறைந்து கிடக்கும். அவற்றைச் சேகரிப்பது அந்தக் காலத்தில் ஒரு சாகச விளையாட்டு. நூறு
ஃபிலிம்கள், இருநூறு ஃபிலிம்கள் என கணகில்லாமல் சேர்த்துவைத்திருப்பவர்களைச் சுற்றி
பத்து இருபது சிறுவர்கள் எப்போதும் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். சேகரிப்பாளரின் குற்றேவல்களையெல்லாம்
நிறைவேற்றுவார்கள். அப்போதுதான் அந்த ஃபிலிம்களை அவர்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்தில்
தூக்கிப் பிடித்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு ஃபிலிம் வழியாக ஒரு முழுப்படத்தையும்
நினைவுக்குக் கொண்டுவந்து உரையாடுவது சுவாரசியமான அனுபவம்.
திண்ணை வைத்த வீட்டில் வசிப்பவர்களிடம்
இப்படி எண்ணிக்கையில்லாமல் ஃபிலிம் துண்டுகள் சேர்ந்திருந்தால், அவர்களுக்கு இன்னும்
கூடுதலான மதிப்பு கிடைக்கும். விடுமுறை நாட்களில்
அவர்கள் தம் வீட்டுத் திண்ணையையே ஒரு சின்னஞ்சிறு திரையரங்கமாக மாற்றிவிடுவார்கள்.
வேட்டியையோ புடவையையோ கொண்டுவந்து திண்ணையில் வெளிச்சம் விழாமல் மறைத்துக் கட்டிவிட்டால்
அது ஒரு திரையரங்கமாக மாறிவிடும். சிறுவர்கள் உள்ளே சென்று அமர்ந்துகொள்வார்கள். விதம்விதமான
கண்ணாடிகளையும் லென்ஸ்களையும் பயன்படுத்தி ஃபிலிம்காரர் படம் காட்டுவார்.
பிரபாத் கொட்டகையை நடத்தியவர் நடராஜ
முதலியார். அவருக்குச் சொந்தமாக கடைத்தெருவில் ஒரு கடை இருந்தது. குமரன் கொட்டகையை
நடத்தியவர் மணி என்கிற இராஜரத்தினம். அவர் அரசியலில் வளர்ந்துவரும் ஆளுமையாக இருந்தார்.
பிரபாத் கொட்டகை இயங்காத சமயத்தில் குமரன் கொட்டகை இயங்கும். குமரன் கொட்டகையைப் பிரித்து
புதுப்பிக்கும் வேலை நடைபெறும்போது பிரபாத் இயங்கும். அதனால் திரைப்படக் காட்சிகள்
எப்போதும்போல நிகழும். இரண்டும் இயங்கும்போது பார்வையாளர்களை இழுப்பதற்காக இரு அரங்கினருக்கும்
இடையில் ரகசியமான போட்டியே நிகழும். வெள்ளிக்கிழமைதான் திரைப்படம் மாற்றும் நாள். அன்று
காலை வரைக்கும் எந்தப் படம் போடப் போகிறார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது. ஒன்றிரண்டு
புதுப்பித்தல்களுக்குப் பிறகு பிரபாத் டாக்கீஸைப் புதுப்பிப்பதில் நடராஜ முதலியார்
ஆர்வமிழந்துவிட்டார். கடை வியாபாரம் மட்டும் போதும் என்று ஒதுங்கிவிட்டார். மணி மட்டும்
குமரன் டாக்கீஸைத் தொடர்ந்து நடத்தி வந்தார். அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை,
டாக்கீஸைப் புதுப்பித்த போது குமரன் என்னும் பெயரை சரவணன் என்று மாற்றிவிட்டார். சரவணன்
டாக்கீஸ் மட்டும் வளவனூரில் தனி ஆட்சி புரிந்தது.
வளவனூரின் முக்கியத்துவத்துக்குக் காரணம்,
தெற்குத்திசையை அடைத்தபடி பிரும்மாண்டமாக காட்சியளிக்கும் ஏரி. அந்த ஏரிக்கும் தென்பெண்ணையாற்றுக்கும்
கால்வாய் இணைப்பு உண்டு. அதனால் சித்திரை, வைகாசி, ஆனி மூன்று மாதங்களைத் தவிர மற்ற
எல்லா மாதங்களிலும் ஏரியில் தண்ணீர் இருக்கும். சில மாதங்களில் கரையை முட்டி முட்டி
இடிக்கிற அளவுக்கு தண்ணீர் நிறைந்திருக்கும். இன்னும் சில மாதங்களில் அரையடி உயரத்துக்கு
தரையைத் தொட்டுக்கொண்டு நிற்கும். உலர்ந்து வறண்டிருக்கும் காலத்தில் வண்டி வண்டியாக
வண்டலை அள்ளிக்கொண்டு செல்வார்கள். நடு ஏரியில் செங்கல் அறுத்து சூளை வைத்து சுட்டு
ஆறவைத்து வண்டிவைத்து ஏற்றிக்கொண்டு செல்வார்கள்.
ஏரிக்குள் ஒரு துண்டு நிலத்தை வளைத்து ஏரோட்டி, மானாவாரிப்பயிரான கம்பும் தினையும்
தூவி, வளர்ந்த பிறகு கதிரறுத்துச் செல்லும் சாமர்த்தியம் உள்ளவர்களும் இருந்தார்கள்.
ஏரியின் பரப்பளவு நாலைந்து சதுரகிலோமீட்டர்
இருக்கும். அணைக்கட்டின் சுவர்களைப்போல கரைகள் உயர்ந்து இருபுறமும் சரிந்து அழகாக இருக்கும்.
கரைநெடுக்க சீரான இடைவெளியில் இருபுறச் சரிவுகளிலும் மரங்கள் நிறைந்திருக்கும். புளியமரங்கள்.
பனைமரங்கள். ஈச்சமரங்கள். நாவல்மரங்கள். அரசமரங்கள். வேப்பமரங்கள். ஆலமரங்கள். இருவாட்சி
மரங்கள். மகிழமரங்கள். அங்கு இல்லாத மரங்களே இல்லை. மாமரங்கள் கூட இருக்கும். காய்
பிடித்துத் தொங்கும் காலத்தில் காற்றின் அசைவில் கீழே விழுந்து கிடக்கும் பிஞ்சுகளையும்
காய்களையும் தேடி எடுத்துவர அதிகாலையிலேயே எழுந்து கரையோரமாக நடந்து செல்லும் சிறுவர்
கூட்டமுண்டு.
ஏரியைச் சுற்றி சாலையாம்பாளையம், அர்ப்பிசம்பாளையம்,
தாதம்பாளையம் என பதினெட்டு சிற்றூர்கள் உண்டு. ஏரியின் கிழக்குக்கரையை ஒட்டி இரு மதகுகளும்
தெற்குக்கரையை ஒட்டி இரு மதகுகளும் உண்டு. மதகுகளிலிருந்து பிரிந்துசெல்லும் கால்வாய்கள்
ஏரியைச் சுற்றிய சிற்றூர்களின் விவசாய நிலங்கள் வரைக்கும் நீண்டிருக்கும்.
நீர்வளத்தை நாடி வரும் பறவைகளை ஏரியைச்
சுற்றி எப்போதும் மரக்கிளைகளில் பார்க்கலாம். எந்தப் பக்கம் நடந்தாலும் குயில், காடை,
கவுதாரி, அக்காக்குருவி, இரட்டைவால் குருவி, கானாங்கோழி, கொக்கு போன்ற பறவைகள் கண்ணில்
தென்பட்டுக்கொண்டே இருக்கும். சில சமயங்களில்
மோதிரக்கழுத்துக் கிளி, கருப்புக்கழுத்து முக்குளிப்பான், செவ்வரிக்கொண்டைக் குயில்
போன்ற அபூர்வமான இனத்தைச் சேர்ந்த பறவைகளையும்
பார்க்கலாம்.
வளவனூருக்குப் பெருமை சேர்க்கும் மற்றொரு
முக்கியமான இடம், ஏரியை ஒட்டி நீண்டிருக்கும் ரயில்வே ஸ்டேஷன். ஆலமரங்களும் அரசமரங்களும்
சூழ்ந்திருக்கும் ஸ்டேஷன் கட்டடத்தை தொலைவில் இருந்து பார்க்கும்போது யாரோ ஒரு பணக்காரருக்குச்
சொந்தமான தோப்பு பங்களா போல இருக்கும். நடைமேடையின் இரு எல்லைகளிலும் நின்றிருக்கும்
பெயர்ப்பலகைகளில் வளவனூர் என்னும் பெயர் மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கும். வண்டி நிற்பதையும் பார்க்காமல் செல்வதையும் பார்க்காமல்
சிலர் அந்தப் பெயர்ப்பலகைக் கம்பத்தை ஒட்டி சாய்ந்தபடி பேசிக்கொண்டே இருப்பார்கள்.
புதுச்சேரியிலிருந்து புறப்பட்டுச்
செல்லும் எல்லா வண்டிகளும் வளவனூரில் நின்று செல்லும். வண்டியில் ஏற வந்தவர்களும் வண்டியிலிருந்து
இறங்கியவர்களுமாக நடைமேடை எப்போதும் ஜேஜே என்று திருவிழாக்கூட்டம் போல இருக்கும். அவர்களுக்காகவே
ஸ்டேஷனுக்கு வெளியே குதிரைவண்டிகள் காத்திருக்கும். ஸ்டேஷனுக்குள் நுழைகிறவர்களும்
ஸ்டேஷனைவிட்டு வெளியேறுகிறவர்களும் பார்க்கிற வகையில் சுவரோடு அடிக்கப்பட்டிருந்த நீலவண்ண
இரும்புத்தகட்டில் ”இந்த வார ஆனந்த விகடன் வாசித்துவிட்டீர்களா?” என வெள்ளை வண்ணத்தால்
எழுதப்பட்ட விளம்பரச் சொற்கள் பளிச்சென இருக்கும்.
வளவனூரில் இரண்டு இடங்கள் முக்கியமானவை.
ஒன்று சத்திரம். இன்னொன்று கடைத்தெரு. இரண்டும் மக்கள் கூடும் பொது இடங்கள். இரண்டும்
இரு எல்லைகள் போல. எல்லாப் பேருந்துகளும் அந்த இடங்களில் நின்று செல்லும். கசகசவென
மக்கள் எப்போதும் நடமாடிக்கொண்டே இருப்பார்கள். அதனால் திரைப்பட அறிவிப்புத் தட்டிகளைக்
கொண்டுவந்து அங்கு நிறுத்துவது வழக்கமாகிவிட்டது. வெள்ளிக்கிழமை விடிந்துவிட்டால் எல்லோருடைய
பார்வையும் அந்தத் தட்டிகள் மீதே இருக்கும். யாராவது ஒரு அரங்கத்தின் சார்பாக முதலில்
விளம்பரத்தட்டியைச் சுமந்து வந்து கம்பங்களில் இணைத்துக் கட்டுவார்கள். அதைப் பார்த்த
பிறகே அடுத்த அரங்கத்தினர் அவர்கள் வெளியிட உள்ள படத்துக்கான விளம்பரத்தட்டியை தயார்
செய்து கொண்டுவருவார்கள். இங்கே எம்.ஜி.ஆர். படம் என்றால், அங்கே சிவாஜி படம். இங்கே
பக்திப்படம் என்றால், அங்கே தேசபக்திப்படம். இங்கே குடும்பப்படம் என்றால் அங்கே நகைச்சுவைப்படம்.
வழக்கமாக இரண்டு மூன்று ஆண்டுகள் பழைய படங்களையே திரையிடுவார்கள் என்றாலும், சிற்சில
சமயங்களில் இத்தகு போட்டியின் விளைவாக புத்தம்புதிய படங்களும் வந்துவிடுவதுண்டு.
வளவனூரின் இதயம் போன்ற இடம் சத்திரம்.
கல்திண்ணை வைத்துக் கட்டப்பட்ட பெரிய இடம். உள்ளே ஒரு பெரிய கூடமும் பல அறைகளும் இருந்தன.
சத்திரத்தின் முன்பக்கம் ஒரு பெரிய கிணறு இருந்தது. கிணற்றின் ஒருபக்கம் மகிழமரமும்
மற்றொரு புறத்தில் மாமரமும் இருந்தன. சத்திரத்தின் பின்பக்கத்திலும் பக்கவாட்டிலும்
அரசமரங்கள் இருந்தன. போக்குவரத்துக்கு மாட்டுவண்டிகளும் பெட்டிவண்டிகளும் மட்டுமே பயன்பட்டு
வந்த காலத்தில் பயணியர் தங்கி ஓய்வெடுத்துவிட்டுப் புறப்பட்டுச் செல்வதற்கு வசதியாக
அந்தச் சத்திரம் ஏற்படுத்தப்பட்டது. இரவுப்பொழுதைக் கழித்துவிட்டுச் செல்பவர்களும்
இருந்தார்கள். அவர்களுக்காகவே அறைகள் இருந்தன. திண்ணையில் படுத்து ஓய்வெடுத்துவிட்டுச்
செல்பவர்களும் இருந்தார்கள். மாட்டுவண்டிப் பயணங்கள் குறைந்து பேருந்துப் பயன்பாடுகள்
பெருகப்பெருக, சத்திரத்தில் தங்கிச் செல்பவர்கள் குறைந்து போனார்கள். ஒரு திண்ணை நிலப்பதிவுப்
பத்திரங்களை எழுதும் எழுத்தரின் இடமாக மாறியது. இன்னொரு திண்ணை நிலவிற்பனை வீட்டு விற்பனையுடன்
தொடர்புடைய தரகர்களின் களமானது. மற்றொரு திண்ணை வம்பு பேசுபவர்களின் அரங்கமாக மாறியது.
உள்ளறைகள் இணைக்கப்பட்டு கூடமாக உருமாற்றப்பட்டு காப்பி கிளப்பாக இயங்கத் தொடங்கியது.
அந்தக் கிளப்புக்கு எதிர்ப்புறத்திலேயே
ஒரு ஓட்டல் தொடங்கப்பட்டு பொதுமக்களின் ஆதரவோடு
வெற்றிகரமான முறையில் இயங்கி வந்தது. அதற்குத் தனியாக பெயர்ப்பலகை எதுவும் இல்லை. அந்தக்
கடையைத் தொடங்கியவர் நாராயணசாமி கிராமணி. அதனால் மக்கள் கிராமணி ஓட்டல் என்றே அழைத்தார்கள். அவர் பெரிய
முருக பக்தர். சந்தனமும் திருநீறும் இல்லாமல் அவரைப் பார்க்கவே முடியாது. அதிகாலையில்
முதல் ஈடு இட்லியை அடுப்பிலிருந்து இறக்கியதும் ஐந்தாறு இட்லிகளை ஒரு தட்டில் எடுத்துவந்து,
அவரே சிறுசிறு துணுக்குகளாகக் கிள்ளிக்கிள்ளி நிரப்பிவைத்துக்கொள்வார். கருக்கல் கலைந்து வானத்தில் சுண்ணாம்பு பூசிய மாதிரி வெளிச்சம்
படரத் தொடங்கியதுமே வாசலைத் திறந்து வெளியே செல்வார். அவர் கா என்று அழைப்பதற்கு முன்பே
அவருடைய கடைக்கூரையின் மீது காத்திருக்கும் காக்கைகளின் பட்டாளம் இறங்கி வந்துவிடும்.
அவர் நீளமான ஒரு மூச்சை வாங்கிக்கொண்டு முருகா என்றபடி புன்னகைத்துக்கொண்டே தட்டிலிருக்கும்
இட்லித்துணுக்குகளை வாரிவாரி வீசுவார். காக்கைகள் பறந்து பறந்து அத்துணுக்குகளைக் கவ்விக்கொண்டு
பறந்துபோகும். அவர் கல்லாவில் வந்து உட்காரவும் சாலைத் துப்புரவுக்காக புறப்பட்டு வந்த
தொழிலாளர்கள் ஒவ்வொருவராக வந்து டீ வாங்கிக் குடித்துவிட்டுச் செல்வார்கள்.
கிராமணி ஓட்டலிலிருந்து அதே வரிசையில்
ஐம்பது அடி தொலைவில் இன்னொரு ஓட்டல் இருந்தது. அதற்கும் பெயர்ப்பலகை கிடையாது. அதை
நடத்தியவர் ராஜாராம ரெட்டியார். அதனால் மக்கள்
அந்த ஓட்டலை ரெட்டியார் ஓட்டல் என்ற பெயரில் அழைத்தார்கள். அவர் திராவிடர் கழகத்தைச்
சேர்ந்தவர். அவர் கடையில் கண்ணாடிச்சட்டமிட்ட பெரியார் படம் தொங்கும். ரெட்டியாரும்
பெரியாரைப்போலவே தாடி வைத்திருப்பார். கருகருவென்று அடர்த்தியாக இருக்கும். காலை நேரத்தில்
கிராமணி ஓட்டலில் காணும் காட்சிகள் அனைத்தையும் அவருடைய கடையின் முன்னாலும் பார்க்கமுடியும்.
இவ்விரண்டு ஓட்டல்களுக்கு அப்பால் மூன்றாவதாக
ஒரு ஓட்டலும் சத்திரத்தில் இருந்தது. இரண்டு ஓட்டல்களின் இருப்பிடத்திலிருந்து அது
சற்றே விலகி வேறொரு இடத்தில் இருந்தது. அந்த ஓட்டலின் முன்னால் ‘மங்கலட்சுமி விலாஸ்’
என்று பெயர்ப்பலகை தொங்கும். அதை நடத்தியவர் சண்முகம் பிள்ளை. ஓட்டலுக்கு பெயர்ப்பலகை
இருந்தாலும் கூட மக்கள் அவருடைய பெயரைக் கொண்டே ‘சண்முகம் பிள்ளை கடை’ என்றே அழைத்தார்கள்.
பகல் வேளையில் கிராமணி ஓட்டலுக்கும் ரெட்டியார்
ஓட்டலுக்கும் வரும் வாடிக்கையாளர்களைவிட சற்றே குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களே
அங்கு வருவார்கள். ஆனால் இரவு நேரத்தில் அந்த இரு ஓட்டல்களும் மூடப்பட்ட பிறகும் கூட
சண்முகம் பிள்ளை கடை இயங்கிக்கொண்டிருக்கும். அப்போதுதான் அங்கே கூட்டம் அலைமோதும்.
அது இருபத்திநாலு மணி நேரக் கடை. பகலில் அவரே கடையில் உட்கார்ந்திருப்பார். இரவு நேரத்தில்
அவருடைய சகோதரர்கள் கவனித்துக்கொள்வார்கள்.
சினிமா பார்த்துவிட்டு திரும்புகிறவர்கள்
ஒரு பக்கத்திலிருந்து வந்து சேர்வார்கள். ரயிலில் வந்து இறங்கி ஊருக்குள் வரும் பிரயாணிகள்
இன்னொரு பக்கத்திலிருந்து வந்து சேர்வார்கள். புதுச்சேரியிலிருந்து வளவனூர் வழியாக
வெளியூர்களுக்குச் செல்லும் சரக்கு வாகன ஓட்டுநர்களும் வளவனூர் வழியாக புதுச்சேரியை
நோக்கிச் செல்லும் சரக்கு வாகன ஓட்டுநர்களும் அந்த ஓட்டலுக்கு அருகில்தான் வாகனங்களை நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்கு வருவார்கள்.
இதனால் சண்முகம் பிள்ளை ஓட்டலில் பகல் வியாபாரத்தைவிட இரவு வியாபாரம் அதிகமாக இருக்கும்.
முன்பக்கத்தில் ஓட்டலும் பின்பக்கத்தில் வீடும் கொண்ட கட்டடம் என்பதால், வீட்டு மனிதர்களே
பெரும்பாலான ஓட்டல் வேலைகளை மாறிமாறிக் கவனித்துக்கொள்வார்கள்.
சண்முகம் பிள்ளை தாராள மனம் கொண்டவர்.
வியாபாரத்தின் வழியாக பணத்தைச் சம்பாதிப்பதைவிட மனிதர்களைச் சம்பாதிப்பது மிகவும் முக்கியம்
என்கிற எண்ணம் கொண்டவர். வளவனூரைச் சுற்றியிருக்கும் பல ஊர்களில் வெறும் தொடக்கப்பள்ளிகள்
மட்டுமே இருக்கும். அதற்கு மேல் படிக்க வழியிருக்காது. அப்போது வளவனூரில் மட்டுமே உயர்நிலைப்பள்ளி
இருந்தது. ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய ஒரு கட்டடத்தில் அந்தப் பள்ளி இயங்கிவந்தது. படிப்பைத்
தொடர நினைக்கும் வெளியூர்ப்பிள்ளைகளை அவர்களுடைய பெற்றோர்கள் வளவனூருக்கு அழைத்துவந்து
சேர்ப்பார்கள். தினமும் பயணம் செய்வது என்பதையெல்லாம் கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது. அந்தப் பிள்ளைகளுக்கெல்லாம் சண்முகம் பிள்ளைதான்
அடைக்கலம். அவர்களை தன் சொந்தப் பிள்ளைகளைப்போல தன் வீட்டிலேயே தங்கவைத்துக்கொள்வார்.
அவர்கள் அனைவரும் ஓட்டலில் சாப்பிட்டுக் கொள்வார்கள். அதற்காக யாரிடமும் பணம் வாங்கமாட்டார்.
அந்தப் பிள்ளைகள் படித்து முடித்து வெளியேறும் வரை சண்முகம் பிள்ளையின் வீட்டிலேயே
இருப்பார்கள்.
சண்முகம் பிள்ளையைப்போல இரக்க மனத்துடன்
இருக்கமுடியாதவர்களும் பணத்தில் குறியாக இருப்பவர்களும் பல நேரங்களில் “எல்லாருக்கும் தர்மத்துக்கு சோறு
போட நான் என்ன சண்முகம் பிள்ளையா?” என்று சொல்லி கைவிரிப்பார்கள். கெடுவாய்ப்பாக, அந்த
நல்ல மனிதரால் தொடர்ந்து அந்தக் கடையை வெற்றிகரமாக நடத்தமுடியாமல் போய்விட்டது. வாடகைக்கட்டடத்தில்தான் சண்முகம் பிள்ளையின் கடை
இயங்கி வந்தது. திடீரென அந்தக் கட்டடத்துக்குச் சொந்தக்காரர் சண்முகம் பிள்ளையை காலி
செய்துவிட்டு வெளியேறும்படி நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார். பொருத்தமான இடம் வேறெங்கும்
கிடைக்காத காரணத்தால், சண்முகம் பிள்ளை உடனடியாக வெளியேற வழியில்லாமல் இருந்தது. மீண்டும்
மீண்டும் கால அவகாசத்தை அவர் கேட்டுப் பெறவேண்டியதாக இருந்தது. அந்தத் தருணத்தில் கடைக்குச்
சொந்தக்காரர் திடீரென ஒருநாள் ரகசியமாக அந்த இடத்தை வேறொருவருக்கு விற்றுவிட்டார்.
எப்படி இடத்தை மாற்றுவது என்னும் கவலையைவிட, தன்னை நம்பி படிக்கவந்த பிள்ளைகளுக்கு
கடைசி வரைக்கும் துணையாக இருக்கமுடியாமல் போய்விட்டதே என்பதுதான் சண்முகம் பிள்ளையை
வாட்டியது. அந்த உளைச்சலிலேயே அவர் இறந்துவிட்டார். அவருடைய சகோதரர்கள் கடைச்சாமான்களோடு வெளியேறினார்கள்.
எந்த இடத்தில் கடை தொடங்கினாலும் அவர்களால்
பழைய இடத்தை எட்டித் தொடவே முடியாமல் போனது.
ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நடந்து செல்கிற
தூரத்தில் புதுக்குளம் இருக்கும். அதன் தண்ணீர் எப்போதும் புத்தம்புதிதாக இருப்பதுபோலவே
தோன்றும். அதைச் சுற்றி ஏராளமான மாமரங்கள் உண்டு. அந்தக் குளத்தங்கரைக்கு எப்போது சென்றாலும்
அம்மரங்களில் அடியில் நாலைந்து காய்கள் விழுந்திருக்கும். அவற்றை விருப்பம்போல எடுத்து வந்து தின்னலாம். யாரும்
தடுக்கமாட்டார்கள். குளத்தைச் சுற்றி இருவாட்சி
மரங்களும் சரக்கொன்றை மரங்களும் வேப்பமரங்களும் தோப்பு மாதிரி அடர்ந்து வளர்ந்திருக்கும்.
பக்கத்தில் இருக்கும் வீடுகளிலிருந்து பெண்கள் வந்து குளித்துவிட்டுப் போவார்கள்.
குளத்திலிருந்து சிறிது தொலைவில் மதுரை
வீரனுக்கும் ஐயனாருக்கும் வழிபாடு செய்யும் இடங்கள் இருந்தன. அண்ணாந்து பார்க்கும்
அளவுக்கு மூன்று ஆள் உயரத்துக்கு அந்தச் சிலைகள் இருக்கும். படர்ந்து விரிந்த மார்போடும்
கரிய மீசையோடும் அந்த உருவங்களைப் பார்க்கும்போதே மிரட்சியாக இருக்கும். அந்த உருவங்களைவிட
உயரமான கம்பங்களை நட்டு விளக்குகளைப் பொருத்தியிருப்பார்கள். இரவு நேரத்தில் அந்த உருவங்கள்
மீது அந்த வெளிச்சம் விழுந்திருப்பதைப் பார்க்கும்போது அச்சமூட்டுவதாக இருக்கும். இரவில்
சரவணன் டாக்கீஸில் சினிமா பார்க்கச் செல்லுபோது தொலைவில் ஒரு துண்டுச்சித்திரம் போலத்
தெரியும் அந்தக் காட்சியைக் கண்டு பல நேரங்களில் நடுங்கியிருக்கிறேன்.
மழைக்காலத்தில் புதுக்குளம் நிறைந்த
பிறகு வழியும் நீர் செல்வதற்காக ஒரு நீண்ட கால்வாய் இருந்தது. அந்தக் கால்வாய் நீண்டு
சென்று மற்றொரு கோடியில் இருக்கும் அம்சா கோவிலுக்குப் பின்னால் இருக்கும் வேறொரு குளத்தில்
சென்று முடியும். குளங்கள் நிறைந்து கால்வாயும் வழிந்தோடிய காலம் ஒன்று இருந்தது. சத்திரத்துக்கு
எதிர்ப்புறமாக ஓடிய கால்வாயில் இறங்கி கைகால் சுத்தம் செய்துகொள்பவர்களும் இருந்தார்கள்.
சத்திரத்தை ஒட்டியே இருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து சுத்தம் செய்துகொள்பவர்களும்
இருந்தார்கள்.
சத்திரத்தின் பின்பக்கம் ஒரு பன்னீர்
மரத்துக்கு எதிரில் திரெளபதை அம்மன் கோவில் இருக்கிறது. கோவில் வாசலையொட்டி ஒரு பெரிய
அரசமரம் இருக்கிறது. இரண்டு மரங்களுக்கும் இடைப்பட்ட இடம் பெரிய திடல் போல இருக்கும்.
கோவிலை ஒட்டிய பகுதியில் ஒரு பெரிய
திண்ணையின் அமைப்பில் ஒரு மேடை உண்டு. பொதுவாக வெயில் காலத்தில் சற்றே கால்நீட்டி அமர்ந்து
ஓய்வெடுக்க நினைப்பவர்களும் வெகுதொலைவு நடந்து வந்தவர்களும் அந்த மேடையில் நிறைந்திருப்பார்கள்.
ஆனால் திரெளபதை அம்மன் கோவில் திருவிழா அறிவிக்கப்பட்டதும், அந்த மேடைக்கு ஒரு புனிதமான
மதிப்பு கிடைத்துவிடும். சாதாரணமானவர்கள் அங்கே
ஒதுங்கமுடியாது. அந்த இடம் பாரதக்கதை படிக்கும் மேடையாக மாறிவிடும்.
ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று
மணி நேரம் ஒரு பெரியவர் பாரதக்கதையை உணர்ச்சிபூர்வமாகப் படித்துக் காட்டுவார். கதை
நிகழ்ச்சிகளை சுவாரசியமாக சொல்லிக்கொண்டே செல்வார். நடுநடுவே முக்கியமான பாடல்களை ராகம்போட்டு
பாடுவார். பிறகு அந்தப் பாடல்களுக்குப் பொருள் சொல்லி விளக்கமும் கொடுப்பார். பாடலும்
விளக்கமும் இணைந்த கலவையாக கதாகாலட்சேபத்தைப் போல இருக்கும். திடலில் சில சமயங்களில்
மிகவும் குறைவான பார்வையாளர்களே நிறைந்திருப்பார்கள். வேறு சில சமயங்களில் எதிர்பாராதபடி
அதிக எண்ணிக்கையில் வந்து சேர்ந்திருப்பார்கள். ஆனால் ஆட்களின் எண்ணிக்கையைப்பற்றிய
கவலையே இல்லாமல் அந்தப் பெரியவர் மிகவும் உற்சாகமாக கதை சொல்வார். அப்போது அவரைப் பார்க்கும்போது
உற்சாகமாக கதை சொல்வதற்காகவே பிறந்தவர் என்று தோன்றியது.
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில்
மகாபாரதக்கதையையும் இராமாயணத்தையும் விரும்பிப் படித்தவன். இராஜாஜி எழுதிய வியாசர்
விருந்து, சக்கரவர்த்தித்திருமகன் புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகங்கள்.
ஒருநாள் கதைசொல்லி வழியாக பாரதக்கதையைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, கோவிலில் பாரதக்கதையைப்
படிக்கும் வழக்கம் எப்படி வந்திருக்கும் என்கிற ஒரு கேள்வி எழுந்தது. அடுத்த நாள் பள்ளியில்
எங்கள் தமிழாசிரியர் ராதாகிருஷ்ணனிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன். அவர் உடனே சிரித்துக்கொண்டே
“நீ படிக்கத் தெரிஞ்ச ஆள். லைப்ரரியில புத்தகத்தை எடுத்துப் படிச்சிட்ட. படிக்கத் தெரியாத
ஆள் என்ன பண்ணுவான்? அவனுக்கு இப்படி யாராவது நாலு பேரு சொன்னாதான் உண்டு, இல்லையா?”
என்று இன்னொரு கேள்வியையே பதிலாகச் சொன்னார்.
நான் அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு
அமைதியடைந்த வேளையில் ராதாகிருஷ்ணன் சார் என் தோளில் தட்டி “இங்க பாரு, இந்த மாதிரியான
கேள்விக்கெல்லாம் திட்டவட்டமான பதிலே கெடையாது. ஆளாளுக்கு ஒரு பதில் வச்சிருப்பாங்க.
ஒரு பழக்கம் எப்படி வந்ததுன்னு நூத்துக்கு நூறு பர்சண்ட் நம்மால நிரூபிக்கமுடியாது.
ஏத்துக்க மனசு இருந்தா ஏத்துக்கலாம். இல்லைன்னா, இன்னொரு பதிலைத் தேடிப் போவலாம்” என்றார்.
ஓரளவு தெளிவு கிடைத்துவிட்டது என்று
நான் எண்ணியிருந்த வேளையில் மீண்டும் மனத்தில் குழப்பம் ஏற்பட்டு விட்டது. “என்ன சார்
சொல்றீங்க, புரியலையே” என்றேன். அவர் புன்னகைத்தபடியே “நான் உனக்கு சொன்ன பதில் இருக்குதே,
அது நான் கண்டுபிடிச்ச பதில். எனக்கு சரின்னு தோனுற பதில்” என்றார். தொடர்ந்து ‘இன்னொரு
பதிலும் சொல்வாங்க. அதையும் சொல்றேன். கேட்டுக்கோ. எது உனக்குப் பொருத்தமான பதில்னு
தோணுதோ, அத வச்சிக்கலாம்” என்று சிரித்தார்.
“அந்தக் காலத்துல சாளுக்கிய மன்னர்களுக்கும்
பல்லவ மன்னர்களுக்கும் இடையில பெரிய பகை. வாழற காலம் முழுக்க சண்டை போட்டுகிட்டே இருந்தாங்க. ஒருமுறை புலிகேசி
மகேந்திரவர்ம பல்லவர் மேல போர் தொடுத்து வந்து காஞ்சிபுரத்தை புடிச்சிகிட்டாரு. மகேந்திரவர்மர்
தோத்துட்டாரு. அப்பாவுடைய தோல்விக்குப் பழி
வாங்க, அவருடைய மகன் நரசிம்மவர்ம பல்லவர் துடிச்சாரு. அதுக்காக படை வீரர்களைத் திரட்டினாரு.
அவருக்குப் படைத்தளபதியா இருந்தவர் பேரு பரஞ்சோதி. பிற்காலத்துல சிவத்தொண்டராகி சிறுதொண்ட
நாயனாரா மாறியவர். அவர்தான் படைவீரர்களுக்கு வீரத்தை ஊட்டணும்ங்கறதுக்காக தினமும் பாரதம்
படிக்கிற பழக்கத்தை ஏற்படுத்தியதா சொல்றதுண்டு. அதுக்கு அவர் எதிர்பார்த்த பலன் கிடைச்சது.
அந்த வீரர்களுடைய உதவியோடு புலிகேசி ஆட்சி செய்த பாதாமிக்கு போய் அவரை யுத்தத்துல தோற்கடிச்சிட்டு
வந்தாரு. அதனால பாரதக்கதை படிச்சாலும் கேட்டாலும் வீரம் வரும்னு ஒரு நம்பிக்கை பிறந்துட்டுது.
நரசிம்ம பல்லவன்கிட்ட படைவீரர்களா இருந்த மக்கள் கால ஓட்டத்துல தமிழ்நாட்டுக்குள்ள
வெவ்வேறு இடங்களுக்குப் போய் வாழத் தொடங்கினாலும், பாரதக்கதையை படிக்கிற பழக்கத்தை
மட்டும் அப்படியே வச்சிகிட்டாங்க. அந்தப் பழக்கம் பல நூற்றாண்டு கடந்தும் இன்னைய தேதி
வரைக்கும் தொடர்ந்து வருது”
பாடவகுப்பு முடிவதற்கு அடையாளமாக மணி
அடித்துவிட்டதால், ராதாகிருஷ்ணன் ஐயா “அதான் பதில்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுப்
போய்விட்டார்.
திரெளபதை அம்மன் கோவிலையொட்டி பாதை
இரு பிரிவுகளாகப் பிரிந்து இரு திசைகளில் செல்லும். ஒரு பாதை நீண்டு சென்று ஒரு பெரிய
தாமரைக்குளத்தில் முடிவடையும். அல்லியும் தாமரையும் கணக்கில்லாமல் பூத்து அடர்ந்திருக்கும்
அக்குளத்தில் தண்ணீர்ப்பரப்பையே பார்க்கமுடியாது. அந்த அளவுக்கு வட்டமவட்டமாக தாமரை
இலைகள் விரிந்து படர்ந்திருக்கும். குளக்கரையை ஒட்டி நான்கு திசைகளிலும் தூங்குமூஞ்சி
மரங்கள் நின்றிருக்கும். அந்தப் பாதை வழியாக நறையூர், தனசிங்கபாலையம் போன்ற சிற்றூர்களிலிருந்து
வளவனூருக்கு வெயிலில் நடந்து வருகிறவர்கள் இளைப்பாறி ஓய்வெடுக்க அந்த மரத்தடியும் குளக்கரையும் பொருத்தமாக இருக்கும். இன்னொரு கிளைப்பாதை சுப்பிரமணியர்
கோவில் பக்கம் செல்கிறது. ஒரு காலத்தில் பஞ்சம் பிழைப்பதற்காக அந்த ஊரை நாடி வந்த மக்கள்
கட்டியெழுப்பிய கோவில் அது. மயிலம் என்னும் குன்றிலிருக்கும் முருகர் கோவிலுக்கு அடுத்தபடியான
பெரிய முருகர் கோவில் அதுதான் என்று சொல்வதுண்டு.
ஒருநாள் நானும் நண்பர்களும் பள்ளிக்கூடத்தில்
மதிய உணவைச் சாப்பிட்ட பிறகு புளியமர நிழலில் கதை பேசிக்கொண்டு அமர்ந்திருந்தோம். பேய் சினிமா தொடர்பாக தொடங்கிய பேச்சு எப்படியோ பேய்
தொடர்பானதாக அமைந்துவிட்டது. சின்ன வயதில் தான் ஒரு பேயைப் பார்த்ததாகவும் அதற்குப்
பிறகு எழுந்திருக்கமுடியாமல் பத்து நாட்கள் காய்ச்சல் வந்து படுத்த படுக்கையாக இருந்ததாகவும்
சொன்னான் குமாரசாமி. ஆசை நிறைவேறாமல் இறந்துபோகிறவர்களும் தற்கொலை செய்துகொள்கிறவர்களும்
நிம்மதியில்லாமல் பேயாக உலகத்தில் திரிந்துகொண்டே இருப்பார்கள் என்று ராஜசேகர் விளக்கம்
கொடுத்தான். இப்படியே ஒவ்வொருவரும் மாறிமாறி பேய் தொடர்பாகவே பேசத் தொடங்கிவிட்டனர்.
பேயின் உருவத்தை நம்மால் பார்க்க முடியாது
என்றும் பேய் எழுப்பும் சத்தத்தை மட்டும் நம்மால் கேட்க முடியும் என்றும் அந்தச் சத்தத்தை
வைத்து பேயின் இருப்பை நம்மால் புரிந்துகொள்ள முடியும் என்றும் சரபோஜி உறுதியாகச் சொன்னான்.
“அதை எப்படி அந்த அளவுக்கு நீ உறுதியா
சொல்லமுடியும்? அதற்கு சாட்சி ஏதாவது இருக்குதா?” என்று அவனிடம் குறுக்குக்கேள்வி கேட்டான்
கனகராஜ்.
“எனக்கு எங்க அம்மா சொல்லியிருக்காங்க”
என்று நம்பிக்கை மிகுந்த குரலில் சொன்னான் சரபோஜி.
“என்ன சொன்னாங்க உங்க அம்மா?”
“எங்க வீட்டுக்கு முன்னால ஒரு பெரிய
குளம் இருக்குது. அந்தக் குளத்துல பேய் நடமாட்டம் உண்டு. ஆள் நடமாட்டம் இருக்கிற பகல்
நேரத்துல அதெல்லாம் வரவே வராது. ஆள் நடமாட்டம் இல்லாத நடுராத்திரி நேரத்துல வெளியே
வந்து ஓன்னு ஒப்பாரி வச்சி அழுது ஆர்ப்பாட்டம் செய்யுங்களாம். சில சமயம் மேளம் அடிக்கிற
சத்தம், நாதஸ்வரம் ஊதுற சத்தம் எல்லாம் கேக்குமாம். என்னமோ கல்யாண வீட்டுல கேக்கறமாதிரியே
இருக்குமாம். எங்க அம்மா கேட்டிருக்காங்களாம்.”
“அப்படியா?”
”ஆமாம். ஆளே இல்லாம சலங்கை சத்தம் மட்டும்
கேட்டா என்ன அர்த்தம்? யாரோ நடமாடறாங்கன்னுதான அர்த்தம்? நடுராத்திரியில பல தரம் அந்த
மாதிரி சலங்கை சத்தத்தை எங்க அம்மா கேட்டிருக்காங்களாம். மெதுவா சத்தம் காட்டாம எழுந்து ஜன்னல் வழியா இருட்டுல
பார்த்தா, ஒன்னுமே தெரியாதாம். முதல்ல வெறும் சலங்கை சத்தம் மட்டும் கேக்குமாம். அப்புறம்
ஒப்பாரிச் சத்தம், நாதஸ்வர சத்தம் எல்லாம் மாறிமாறி கேக்குமாம். கடைசியா அழுது அழுது
அந்த சத்தம் தானா அடங்கிடுமாம்.”
”அட போடா. பேயும் இல்லை. பிசாசும் இல்லை.
எல்லாமே நம்ம மனப்பிரமைதான். இப்ப யாருமில்லாத நேரத்துல வேகமா காத்து அடிச்சா கூட,
யாரோ கூப்புடறமாதிரி சத்தமாத்தான் கேக்கும். அதனால பேய் கூப்புடுதுன்னு சொல்லமுடியுமா?”
என்று கனகராஜ் எதிர்க்கேள்வி கேட்டான்.
அவன் ஏற்றுக்கொள்கிற விதமாக எங்களில்
ஒருவராலும் பதில் சொல்ல இயலவில்லை. சலங்கைச் சத்தமும் அழுகைச் சத்தமும் ஒருவருக்குக்
கேட்கிறது என்னும்போது, அதை நம்பமுடியாது என இன்னொருவர் எப்படிச் சொல்லமுடியும் என்பது
எங்களுக்குக் குழப்பமாக இருந்தது. நாங்கள் எல்லோரும் அமைதியாக இருக்க, கனகராஜும் சரபோஜியும்
மட்டும் மாறிமாறி விவாதம் செய்துகொண்டனர். கடைசியாக, “ஒனக்கு சந்தேகமா இருந்தா, ஒருநாள்
எங்க வீட்டுக்கு வா. எங்க அம்மாவையே கேளு. அழுவுற சத்தம் உண்மையா இல்லையான்னு அவுங்க
சொல்வாங்க” என்று சொல்லி முடித்துக்கொண்டான் சரபோஜி.
எனக்கு அந்தக் கதையை நம்புவதா இல்லையா
என்று குழப்பமாக இருந்தது. ஒரு பெரிய கேள்வி குடைந்துகொண்டே இருந்தது.
அன்று இரவு சாப்பிட்டுவிட்டு கதை பேசிக்கொண்டிருக்கும்போது
எங்கள் அப்பாவிடம் சரபோஜி சொன்ன கதையைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, அந்தக் கதையை நம்பலாமா
வேண்டாமா என்று கேட்டேன்.
”எல்லாத்துக்கும் நம்ம மனசுதான்டா காரணம்.
நம்பணும்னு நெனைச்சா நம்பலாம். வேணாம்னு நெனச்சா விட்டுடலாம்” என்று பொதுவாகச் சொன்னார்
அப்பா.
நான் அவரை ஏமாற்றத்துடன் பார்த்தேன்.
அவர் புன்னகைத்தபடி “அவன் வீடு எந்த பக்கத்துல இருக்குது?” என்று கேட்டார். நான் “கடைத்தெருவிலிருந்து
செங்காடு ரோடு வழியா போகும்போது ஒரு குட்டை வருது தெரியுமா, அதுக்குப் பக்கத்துல இருக்குது”
என்று இடவிவரத்தைச் சொன்னேன்.
“ஓ, அந்த இடத்துல இருக்கற ஆளுங்களா?
அங்க இருக்கிற ஆளுங்க எல்லாருமே பேய் பிசாசு அனுபவம் உள்ளவங்கதான்”
”ஏன் அப்படி?”
”அதுக்குப் பின்னால ஒரு சரித்திரமே
இருக்குது. ராமாயணம் மாதிரி பழைய காலத்துக் கதை” என்றார் அப்பா. உடனே அம்மா குறுக்கில்
புகுந்து ”இங்க பாரு, பள்ளிக்கூடம் போற பையன். சும்மா அதையும் இதையும் சொல்லி பயப்பட
வச்சிடாத” என்று சொல்லி பேச்சைத் தொடரவிடாமல் தடுத்தார்.
“இதுல பயப்பட ஒன்னுமில்லை. எல்லாம்
தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்தான்” என்றார் அப்பா. பிறகு என்னைப் பார்த்து “அந்த இடம்
இப்பதான் குட்டை மாதிரி இருக்குது. உண்மையிலேயே பெரிய குளமா இருந்த இடம் அது. நானே
பார்த்திருக்கேன். நந்தவனம் மாதிரி இருக்கும். ஆளுங்க இறங்கி குளிச்சிட்டு போவாங்க.
அதுக்கும் முன்னால இன்னும் பெரிய இடமா இருந்திருக்கலாம். அந்தக் குளத்தைப் பத்தி ஆதிகாலத்திலேர்ந்து
ஒரு கதை இருக்குது. நானும் சின்ன வயசுல கேட்டதுதான்” என்று தொடங்கினார்.
“கதையா? சொல்லுங்க, சொல்லுங்க” என்று
வேகமாக பாயிலிருந்து எழுந்து உட்கார்ந்தேன்.
“ஒரு ராஜா காலத்துல தெற்குப் பக்கத்திலிருந்து
ஒரு பெரிய கூட்டம் கல்யாணப்பொண்ண அழச்சிகிட்டு வண்டியில வந்தாங்களாம். அவுங்க வடக்கை
நோக்கி இன்னும் தொலைவா போவணும். ஆனா வளவனூருகிட்ட வரும்போது இருட்டற நேரமாய்டுச்சி.
பெரிய குளத்தைப் பார்த்ததுமே தங்கிட்டு போறதுக்கு நல்ல இடம்னு சொல்லி, வண்டிகளை நிறுத்திட்டு
எல்லாரும் அங்கயே தங்கிட்டாங்களாம். ராத்திரியில என்ன நடந்ததோ, என்ன பேசினாங்களோ தெரியலை.
எல்லோரும் கூட்டமா அந்தக் குளத்துல விழுந்து தற்கொலை செஞ்சிகிட்டாங்க. காலையில எல்லாரும்
பொணமா மெதந்தாங்களாம். எந்த ஊருலிருந்தோ வந்து இந்த ஊருல உயிர விட்டுட்டாங்க. ஊருகாரங்க
எல்லாரும் ஒன்னா சேர்ந்துதான் அடக்கம் செஞ்சாங்களாம்.”
“ஐயோ” என்று வாய்விட்டு சொல்லிவிட்டேன்.
அந்த அளவுக்கு அச்செய்தி திகைப்பூட்டுவதாக இருந்தது.
“அதுக்குப் பிறகு அந்தக் குளத்துப்
பக்கத்துல ராத்திரி நேரத்துல மேளச்சத்தம் கேக்குது, நாதஸ்வர சத்தம் கேக்குது, சலங்கைச்சத்தம்
கேக்குதுன்னு ஆளுக்கொரு கதை சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப காலம் எவ்வளவோ மாறி முன்னேறிடுச்சி.
இன்னும் சத்தம் கேக்குதுன்னு சொல்ற சங்கதி மட்டும் மாறவே இல்லை…”
சத்தத்துக்குப் பின்னால் இவ்வளவு பெரிய
சோகக்கதை இருக்கும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. கதையின் முடிவு சங்கடமாக
இருந்தது. “எல்லாருமே ரொம்ப பாவம்” என்று சொல்லிக்கொண்டேன். பிறகு “அதெல்லாம் சரிப்பா,
பேய் இருக்குதா, இல்லையா, அதைச் சொல்லவே இல்லையே” என்று கேட்டேன்.
“இதுக்கெல்லாம் ஒரு முடிவே கெடையாதுடா.
இருக்குதுன்னு நினைக்க ஆசைப்படறவங்க இருக்குதுன்னு நெனச்சிகிடலாம். இல்லைன்னு நினைக்க
ஆசைப்படற கூட்டம் இல்லைன்னு நெனச்சிகிடலாம். யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி ஒரு விஷயத்தை
ஏத்துக்க வைக்கக்கூடாது” என்று சொல்லிமுடித்தார்
அப்பா.
அதற்காகவே காத்திருந்ததுபோல அம்மா
”சரி சரி, பேசனதுலாம் போதும். படுத்துத் தூங்குங்க. நேரமாவுது” என்று ஒரு அதட்டல் போட்டார்.
அத்தோடு உரையாடல் தானாகவே ஒரு முடிவுக்கு வந்தது.
வளவனூரில் உள்ள ஒரு குளத்தை மையமாக்கி
ஆதி காலத்திலிருந்து உலவிவரக்கூடிய ஒரு கதையை முதன்முதலாகத் தெரிந்துகொண்டதில் எனக்கு
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதை அசைபோட்டபடி உறங்கிவிட்டேன்.
மற்றொரு நாளில் நானும் என் ஆயாவும்
நெல் அரைத்து வருவதற்காக அரவை மில்லுக்குச் சென்றோம். நெல் அரைத்த பிறகு அரிசியைத்
தனியாகவும் தவிடைத் தனியாகவும் கொண்டுவர வேண்டும். அதற்கு இரண்டு கூடைகள் வேண்டும்.
அரிசிக்கூடையை நான் தூக்கிக்கொள்வேன். தவிட்டுக்கூடையை ஆயா தூக்கிக்கொண்டு வருவார்.
சாலையில் எங்களுக்கு முன்னால் நடந்துசென்ற
ஒருவர் சட்டென ஒரு கட்டடத்தின் முன்னால் நின்று ஒரு கணம் கோவில் முன்னால் நின்று கும்பிடுவதுபோல
கைகுவித்து வணங்கிவிட்டு, இரு கன்னங்களையும் மாறிமாறித் தொட்டபடி முணுமுணுத்துக்கொண்டே
சென்றதைப் பார்த்தேன். அது கட்டடம் கூட அல்ல. அரைகுறையான சுவர்கள். அனைத்தையும் மறைத்தபடி
திரையைப்போல ஒரு தார்ப்பாய் தொங்கிக்கொண்டிருந்தது.
அவர் எதைப் பார்த்துவிட்டு கும்பிட்டுவிட்டுப் போகிறார் என்னும் கேள்வி என் தலையைக்
குடைந்தது.
ஆயாவிடம் “யாரைப் பார்த்து கும்பிட்டுட்டு
போறாரு அவரு?” என்று கேட்டேன். ஆயாவுக்கு நான் கேட்டதே புரியவில்லை. “யாருடா?” என்று
புருவத்தைச் சுருக்கிக்கொண்டு என்னிடம் கேட்டார். நான் எங்களுக்கு முன்னால் நடந்துபோன
பெரியவரைக் காட்டி நான் கண்ணால் பார்த்ததைச் சொன்னேன். உடனே ஆயா “அதுவா? அதுவும் ஒரு
கோயில் மாதிரிதான். அது ஜீவசமாதி. கும்புடக்கூடிய இடம்தான்” என்றார்.
“அப்ப நீ ஏன் கும்புடலை?”
“நான் கும்புடலைன்னு நீ பார்த்தியா?
மனசுக்குள்ளயே கும்புட்டுகிட்டேன். போதுமா?” என்று ஆயா சிரித்தார். பிறகு “அந்தக் காலத்துல
சித்தர்னு சொல்லக்கூடிய பெரிய பெரிய ஞானிகள் நமக்கு நடுவுல வாழ்ந்தாங்க” என்று தொடங்கினார்.
ஆயா எதையோ பெரிதாகச் சொல்லத் தொடங்குகிறார்
என்று தோன்றியது. கூடைச்சுமை தெரியாமல் இருக்க அதைக் கேட்கலாம் என்று தோன்றியது. உடனே
ம் கொட்டத் தொடங்கினேன்.
“ஆசை, பற்று எல்லாத்தயும் கடந்தவங்க
அந்த சித்தர்கள். தன்னுடைய மரணம் எப்ப வரும், எப்படி வரும்ங்கற விஷயங்கள் கூட அவுங்களுக்குத்
தெரியும். மரணம் நெருங்கிட்டுதுன்னு தெரிஞ்சதுமே பூமியில தனக்குத்தானே ஒரு பெரிய சமாதியை
கட்டி அதுக்குள்ள போய் உக்காந்துக்குவாங்க. கொஞ்ச நாள்ல அவுங்க எதிர்பார்த்தபடியே உயிர்
பிரிஞ்சிடும். உயிரோடு சமாதிக்குள்ள போகறதால அதுக்கு ஜீவசமாதின்னு பேரு. அவர் ஞாபகமா
அந்த சமாதிக்கு மேல கோயில் கட்டி கும்பிடுவாங்க. அப்படி ஒரு பழக்கமும் நம்பிக்கையும்
உண்டு”
“அது சரி, அந்த மாதிரி எழுதி அங்க ஒரு
போர்டு வச்சிருந்தா எல்லாருமே படிச்சி தெரிஞ்சிக்க வசதியா இருக்கும், இல்லையா?”
ஆயா சில கணங்கள் அமைதியாக நடந்து வந்தார்.
“தனக்கு நாலு காசி கெடைக்கும்னு தெரிஞ்சா, எல்லாத்தயும் செய்வானுங்க. இல்லைன்னா ஒருத்தனும்
இந்த உலகத்துல சீந்த மாட்டானுங்க” என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டார்.
“அந்த சித்தர் பேர் என்ன?”
“பேரா?” என்று ஒருகணம் யோசனையில் ஆழ்ந்து
மீண்ட பிறகு “சொரூபானந்த சுவாமி” என்றார். பிறகு அவரே தொடர்ந்து எதிர்த்திசையில் விரலால்
சுட்டிக் காட்டி “அதோ, அந்த இலுப்பை மரத்துக்குப் பக்கத்துல ஒரு மடம் தெரியுது பாரு,
அது கூட ஒரு ஜீவசமாதி மடம்தான். சண்முகசுவாமிங்கற
சித்தர் அந்த இடத்துலதான் சமாதி அடைஞ்சாரு.”
“இது ரெண்டு மட்டும்தானா? இன்னும் இருக்குதா?”
”இன்னும் இருக்குது. இரு ஞாபகப்படுத்திகிட்டு
சொல்றேன்” என்றார் ஆயா. நான் அவர் சொல்வதைக் கேட்கும் ஆவலோடு அவரையே திரும்பித்திரும்பிப் பார்த்தபடி நடந்தேன்.
“சுப்பிரமணியர் கோவில் தெரு பக்கமா
போகும்போது, வன்னிமடத்தெருன்னு ஒரு தெரு வரும். அந்த வன்னி மடத்துக்குள்ள ஒரு ஜீவ சமாதி
இருக்குது. முத்தைய தேசிகன்னு ஒரு சுவாமி அங்க சமாதியடைஞ்சார்னு சொல்றதுண்டு. யார்
செஞ்ச புண்ணியமோ, அது கொஞ்சம் நல்லவங்க கையில இருக்குது. அங்க தெனமும் பூஜை நடக்குது.
சமாதிக்கு மேல் சிவலிங்கம்லாம் வச்சி பூஜை செய்றாங்க” என்றார்.
திடீரென எங்களுக்குப் பின்னால் ஹாரன்
அடித்து சத்தமெழுப்பியபடியே நாலைந்து கார்கள் வரிசையாக வந்தன. அவை அனைத்தும் செல்லட்டும்
என நாங்கள் இருவரும் சில கணங்கள் ஒதுங்கி நின்றுவிட்டு, பிறகு நடக்கத் தொடங்கினோம்.
“கடைத்தெருவுக்கு போற பாதையில ஒரு ஜீவசமாதி
இருக்குது. அது தண்டாயுதபாணி சுவாமின்னு ஒரு சித்தர் உயிர்விட்ட இடம்”
ஆயா சொல்லச்சொல்ல ஒவ்வொன்றாக நான் மனத்துக்குள்
எண்ணிக்கொண்டு வந்தேன். நான்கு வந்துவிட்டது. ஆயா மேலும் சொல்லக்கூடும் என்று நான்
அமைதியாக நடந்தேன். அவ்வப்போது யோசனையில் மூழ்கிய அவருடைய முகத்தை மட்டும் திரும்பித்திரும்பிப்
பார்த்தேன்.
“உன் ஐஸ்கூல் போற வழியிலயே ஒன்னு இருக்குது,
தெரியுமா?.”
“அங்க எங்க ஆயா?”
“உங்க ஸ்கூலுக்குப் பக்கத்துல ஒரு புளியந்தோப்பு
இருக்குதில்லையா? அதுக்குப் பக்கத்துல நடராஜ சுவாமிகள் ஒரு சித்தர் இருந்தார். அவருடைய
ஜீவசமாதி அங்கதான் இருக்குது”
“நீ சொல்ற இடத்துல நடராஜர் கோயில்தான்
இருக்குது. சமாதிலாம் இல்லை”
ஆயா அதைக் கேட்டு சிரித்தார். “அந்த
சமாதிக்கு மேல ஒரு அடையாளமாத்தான்டா அந்தக் கோயில் இருக்குது” என்றார்.
“அப்புறம்?”
“அவ்ளோதான்டா எனக்குத் தெரியும். வேணும்ன்னா
உன் அம்மாவ கேட்டுப் பாரு”
“ஆக மொத்தத்துல வளவனூருல அஞ்சி ஜீவ
சமாதி இருக்குது. பஞ்சபாண்டவர்கள் மாதிரி பஞ்சஜீவசமாதி”
ஜீவசமாதி கதைகள் பேசிக்கொண்டே வந்ததில்
தலையில் கூடையைச் சுமந்துகொண்டு நடந்து வந்ததே தெரியவில்லை. வீட்டுக்கு வந்ததும் கூடையை
இறக்கிவைத்துவிட்டு விளையாட ஓடிவிட்டேன்.
எல்லாத் தெருக்களிலும் நடந்து திரிந்த
அனுபவத்தில் நான் தெரிந்துகொண்ட உண்மை ஒன்றுண்டு. எல்லாக் கோவில்களும் இரண்டிரண்டாக
இருந்தன. இரண்டு பெருமாள் கோவில்கள். இரண்டு சிவன் கோவில்கள். இரண்டு அங்காளம்மன் கோவில்கள்.
மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் ஒவ்வொரு வகைமையிலும் இரண்டு கோவில்களுக்கான தேவை என்னவாக
இருந்திருக்கும் என்ற புதிரை என்னால் விடுவிக்க முடிந்ததில்லை. இரண்டு விதமான கோவில்களுக்கும்
நான் சென்று வந்திருக்கிறேன். எந்த வேறுபாடும் என் கண்களில் தென்பட்டதில்லை இரண்டுமே
ஊர்மக்களால் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன.
கோவில்கள், குளங்கள், சத்திரங்கள்,
ஏரி ஆகியவற்றுக்கு அப்பால் வளவனூருக்கென தனித்த அடையாளமாகத் திகழ்பவர் கோவிந்தையர்
என்னும் தனிமனிதர். அவருக்கு வணிகத்தில் நல்ல ஈடுபாடு இருந்தது. நிலக்கடலையை வாங்கி
செக்கிலிட்டு எண்ணெயாக்கி விற்பனை செய்வதை ஒரு விருப்பத்தொழிலாக செய்து வந்தார். சொந்தமாகவே
செக்கு வைத்திருந்தார். தாது வருஷத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
சொந்தச் செலவில் கஞ்சித்தொட்டியை ஏற்படுத்தி
பசியின்றி வாழ வழிவகுத்தவர் என்பதால் பொதுமக்களிடையில் அவர் நற்பெயர் பெற்றிருந்தார்.
ஒரு நாள் ஒரு பத்திரிகையில் வெளிவந்திருந்த
விளம்பரம் அவருடைய பார்வையில் விழுந்தது. கல்கத்தாவிலிருந்து எண்ணெய் வணிகரொருவர் அவ்விளம்பரத்தைக் கொடுத்திருந்தார்.
பர்மாவுக்கு ஏற்றுமதி செய்ய சில பீப்பாய்கள் கடலை எண்ணெய் தேவைப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது வளவனூரைச் சுற்றியிருந்த பகுதிகளில் நிலக்கடலை விளைச்சல் குறைவாகவே இருந்தது.
எல்லோருமே நெல்லும் கரும்பும் பயிரிடும் விவசாயிகளாக இருந்தனர். அதனால் மாவட்டத்தில்
உள்ள எல்லா கிராமங்களுக்கும் பயணம் செய்து நிலக்கடலையைச் சேகரித்தார் கோவிந்தையர்.
அவரால் நான்கு பீப்பாய் எண்ணெய் அளவுக்கு மட்டுமே நிலக்கடலையைச் சேகரிக்க முடிந்தது.
அவற்றை மட்டும் கல்கத்தாவுக்கு அனுப்பி வைத்தார் கோவிந்தையர். அவருடைய ஆர்வத்தைப் புரிந்துகொண்ட
கல்கத்தா வணிகர் அவரிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கி வந்தார். லாபத்தில் ஒரு பகுதியை
எப்போதும் பொதுமக்கள் சேவைக்காக ஒதுக்கிப் பயன்படுத்தினார்.
ஒருமுறை அந்த வணிகருக்கு நூறு பீப்பாய்களுக்கும்
மேல் எண்ணெய் தேவைப்பட்டது. வழக்கம்போல கோவிந்தையரின் உதவியை நாடினார். கோவிந்தையருக்கு
கூடுதலான நிலக்கடலையும் தேவைப்பட்டது. பீப்பாய்களும் தேவைப்பட்டன. பீப்பாய்களை செய்விக்கும்
பொருட்டு மரவேலை தெரிந்த ஆசாரிமார்களை அழைத்துவந்து வளவனூரிலேயே குடியிருக்க வசதி செய்து
கொடுத்தார். தடையின்றி எண்ணெய் ஆட்டுவதற்கு ஏதுவாக செக்கு இயக்கத் தெரிந்த ஊழியர்களையும்
அழைத்து வந்து தங்குவதற்கு வசதி செய்துகொடுத்தார். தமிழ் மாகாணம் முழுக்க அலைந்து திரிந்து
நிலக்கடலைகளைத் திரட்டிக்கொண்டு வந்து குவித்தார் கோவிந்தையர். வீரிய கடலை விதைகளை
ஆப்பிரிக்காவிலிருந்து வரவழைத்து விவசாயிகளிடம் கொடுத்து நிலக்கடலை பயிரிட ஊக்கமளித்தார்.
குறுகிய காலத்தில் பயிர் செழிப்புடன் விளைந்ததைப் பார்த்த பிற விவசாயிகளும் தானாகவே
நிலக்கடலையை வாங்கி பயிரிடத் தொடங்கினர். அதன் விளைவாக, கல்கத்தா வணிகரின் தேவைக்கேற்ப
நூறு பீப்பாய் எண்ணெயை குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பிவைத்தார். நாளுக்கு நால் அவருடைய
எண்ணெய் வணிகம் செழித்தது. மக்களுக்காற்றும் சேவையும் வளர்ந்தது.
அவரால் குடியேற்றப்பட்ட மக்கள் வீடுகட்டி
வாழ்வதற்கு ஏதுவாக நிலமொதுக்கிக்கொடுத்தார். அவர்கள் ஊரெங்கும் பல வீதிகளில் பரவி வாழ்ந்தனர்.
அவர்களுடைய குழந்தைகள் கல்வியறிவில்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக அரசாங்க அனுமதியோடு
1908ஆம் ஆண்டில் ஒரு தொடக்கப்பள்ளியைத் தொடங்கினார். அதுதான் அந்த வட்டாரத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட
முதல் பள்ளிக்கூடம். வேறெங்கும் இடம் கிடைக்காதபோது அக்கிரகாரத்தில் தனக்குச் சொந்தமான
இடத்திலேயே அந்தப் பள்ளிக்கூடத்தைத் தொடங்கினார் அவர். சாதி மத வேறுபாடில்லாமல் அனைத்துப்
பிரிவினரும் சேர்ந்து படிக்கும் வகையில் அமைத்தார். பிரிட்டன் மன்னரை நன்றியுடன் நினைவுகூரும்
வகையில் அந்தப் பள்ளிக்கூடம் ஜார்ஜ் ஸ்கூல் என்றே அழைக்கப்பட்டது. நாடு விடுதலையடைந்ததும்,
கோவிந்தையரின் நினைவாக அவருடைய பெயரே பள்ளிக்குச் சூட்டப்பட்டது.
ஆங்கிலேய அரசாங்கத்துக்கும் பிரெஞ்சு
அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக சென்னையிலிருந்து விழுப்புரம்
வரைக்குமான ரயில் போக்குவரத்து புதுச்சேரித்
துறைமுகத்தையும் இணைக்கும் வகையில் நீட்டிக்கப்பட்டது. எண்ணெய்ப்பீப்பாய்களையும் கடலைமூட்டைகளையும்
வளவனூரிலிருந்தே அனுப்பும் வகையில் விழுப்புரம் – புதுச்சேரித் தடத்தில் வளவனூரில்
ஒரு ஸ்டேஷன் அமைக்கவேண்டும் என்று கோவிந்தையர் முன்வைத்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதால்
வளவனூரில் ஸ்டேஷன் உருவானது.
வளவனூர் கடைத்தெரு என்பது நான்கு சாலைகள்
கூடுகிற ஒரு முக்கியமான சந்திப்பு. அங்காளம்மன் தெரு, குமாரகுப்பம் தெரு, தக்கா தெரு
ஆகிய தெருக்களிலிருந்து ஊரை நோக்கி வருவது ஒரு சாலை. மடுகரையிலிருந்து வளவனூரை நோக்கி
வருவது ஒரு சாலை. விழுப்புரத்திலிருந்து புதுச்சேரியை நோக்கிச் செல்லும் ஒரு சாலை.
புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கிச் செல்லும் ஒரு சாலை. பொழுது விடிந்து பொழுது
அடைகிற வரை, அந்த நாலு சாலைச் சந்திப்பில் மக்கள் கூட்டம் ஏதோ திருவிழாக்கூட்டம் போல
ஜே ஜே என்று இருக்கும். முக்கியமான எல்லாக் கடைகளும் அந்தக் கடைத்தெருவில்தான் இருந்தன.
துணிக்கடைகள், மருந்துக்கடை, நகைக்கடை, பலசரக்குக்கடை, காய்கறிக்கடை, பழங்கள் விற்கும்
கடை, ஓட்டல்கள் எல்லாமே கடைத்தெருவில் அடுத்தடுத்து இருந்தன.
வளவனூரின் முகம் என சொல்லத்தக்க ஒரு
முக்கியமான கடை, நாலுசாலைச் சந்திப்பில் தொடக்கத்திலேயே இருக்கும் பட்டாணிக்கடை. அதை
நடத்தி வந்தவர் சீனிவாசன். அதை முழுமையான கடை என்று கூட சொல்லமுடியாது. எட்டடி நீளம்
எட்டடி அகலம் கொண்ட ஒரு திண்ணை. அவ்வளவுதான். வீட்டிலிருந்து புதிதாக வறுத்து எடுத்துவந்த
பட்டாணி, பொட்டுக்கடலை, நிலக்கடலை, பொரி, உப்புக்கடலை ஆகியவற்றை ஐந்து பெரிய கூடைகளில்
நிரப்பி வைத்துக்கொண்டு அவற்றையொட்டி அவர் உட்கார்ந்திருப்பார். அந்த மணமே கடைத்தெருவில்
நடமாடும் ஒவ்வொருவரையும் ஈர்த்துவந்து விடும். கேட்பவர்களுக்கு கேட்கிற அளவில் அளந்து
அளந்து பொட்டலம் கட்டிக் கொடுத்தபடியே இருப்பார். அவர் கை ஓய்ந்ததே இல்லை.
நான் ஐந்து பைசா கொடுத்து பொட்டுக்கடலை
கேட்பேன். உடனே நாணயத்தை வாங்கிக்கொண்டு, கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் தன் கையாலேயே
ஒரு பிடி பொட்டுக்கடலையை அள்ளி என் கைகளுக்கிடையில்
வைத்துவிடுவார். எப்போதாவது ஒரு ஆயாவோ தாத்தாவோ அல்லது தலைகலைந்து முகத்தில் சோகம்
படிந்த நோயாளியோ கூட்டத்தோடு நிற்க கூச்சமுற்று விளிம்பில் நின்று கை நீட்டுவதையும் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம்
அவர் ஒரு சொல்லும் சொல்லமாட்டார். முகத்திலும் எவ்விதமான குறிப்பும் தெரியாது. சட்டென ஒரு பிடி அள்ளி அவர்களுடைய கையில் வைத்துவிடுவார்.
அவருடைய விரல் செயல்படும் வேகத்தை கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது.
கடைத்தெருவில் இன்னொரு முக்கியமான கடை
செந்தில்விநாயகம் செட்டியார் கடை. ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்
இணைந்து அந்தக் கடையை நடத்தினர். அவர்கள் தொட்டதெல்லாம் பொன்னான காலம் அது. துணிக்கடை,
இரும்புக்கடை, நோட்டுப்புத்தகக் கடை என அவர்கள் தொடங்கிய எல்லா வணிகமுயற்சிகளும் வெற்றி
கண்டன. ஊராட்சி ஒன்றியப்பள்ளி, கோவிந்தையர் பள்ளி, உயர்நிலைப்பள்ளி என எந்தப் பள்ளிக்குச்
செல்லவேண்டுமென்றாலும் அந்தச் சந்திப்பைக் கடந்துதான் செல்லவேண்டும். அந்தப் பிள்ளைகளுக்காகவே
காலையில் எட்டு மணிக்கே செட்டியாரின் கடை திறக்கப்பட்டுவிடும். செட்டியார் சற்றே கண்களில்
ஓரப்பாவை கொண்டவர். வெள்ளைவெளேரென்ற ஆடைகளுடன்
நெற்றி நிறைய சந்தனமும் திருநீறும் துலங்க கடைக்கு வந்து உட்கார்ந்துவிடுவார். அந்தக்
காலத்தில் தொடக்க வகுப்புப் பிள்ளைகள் சிலேட்டில்தான் எழுதவேண்டும். சிலேட்டில் எழுதுவதற்கான
பலப்பக்குச்சிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளத் தெரியாத விளையாட்டுச்சிறுவர்கள் அடிக்கடி
பலப்பத்தைத் துடைத்துவிடுவார்கள். “ஐயா, பலப்பம்” என்று அந்தப் பிள்ளைகள் கடைக்கு முன்னால்
வந்து நிற்பார்கள். அவர்கள் சொல்லி முடிக்கும் முன்பே ஒரு துண்டு பலப்பத்தை எடுத்து
அவர் கொடுத்துவிடுவார். இலவசமாகக் கொடுக்கிறோம் என்கிற எண்ணத்தின் நிழலே செட்டியாரின்
முகத்தில் இருக்காது. இலவசமாக வாங்குகிறோம் என்கிற வெட்கத்தின் நிழல் பிள்ளைகளின் முகத்திலும்
இருக்காது. ஒரு தாத்தாவுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் இடையில் நிகழும் உரையாடலைப்போலவே
அக்காட்சி இருக்கும். பலப்பங்களைப் பயன்படுத்தும் வயதைக் கடந்து பேனாவைப் பயன்படுத்தும்
சிறுவர்கள் கடையின் முன்னால் வந்து நின்று அதன் மூடியைக் கழற்றிவிட்டு நீட்டுவார்.
அங்கே அதற்கெனவே உட்காரவைக்கப்பட்டிருக்கும் ஊழியர் மைப்புட்டியிலிருந்து உறிஞ்சியால்
ஒருமுறை மையை எடுத்து அந்தப் பேனாவை நிரப்பிக் கொடுப்பார். இது தினசரிக்காட்சி. அரசன்
அதியமானைப்பற்றி ஒளவையார் பாடியிருக்கும் ஒரு பாடலில் அவனுடைய குணத்தைக் குறிக்கும்
விதமாக ’ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம் பலநாள் பயின்று பலருடன் செல்லினும் தலைநாள்
போன்ற விருப்பினன்’ என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். அதியமானைப்போல செட்டியாரும் தலைநாள்
போன்ற விருப்பினராகவே இருப்பார்.
செட்டியாரைப்போலவே தலைநாள் போன்ற விருப்பினராக
இருந்தவர் நடராஜ முதலியார். பிரபாத் டாக்கீஸை சில ஆண்டுகள் மட்டும் நடத்திப் பார்த்துவிட்டு
ஒதுங்கி கடையோடு நின்று விட்டவர் அவர். அவருடைய கடை செட்டியாரின் கடைக்கு எதிர்ப்புறத்தில்
இருக்கும். அந்தப் பக்கமாக வரும் பிள்ளைகள் அவருடைய கடையில் நின்று துண்டு பலப்பங்களையும்
மையையும் வாங்கிச் செல்வார்கள்.
வளவனூரில் முதன்முதலாக ஓர் இலக்கிய
அமைப்பை ஏற்படுத்தி இலக்கிய ஈடுபாடு கொண்டவர்களை ஒருங்கிணைத்தவர் ராஜாராமன். சிதம்பரத்தில்
படித்துக்கொண்டிருந்த அவரை, பாதியிலேயே நிறுத்தி ஊருக்கு அழைத்துவந்த அவருடைய அப்பா
கடைத்தெருவிலேயே சின்ன அளவில் ஒரு துணிக்கடையை வைத்துக் கொடுத்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த
அளவுக்கு அந்த வணிகம் வெற்றியைக் கொடுக்கவில்லை. சில ஆண்டுகள் தோல்வி நிறைந்த வாழ்க்கைக்குப் பிறகு
நண்பர்களோடு கூட்டு சேர்ந்து ’வளவன் சவளி வணிகம்’ என இன்னொரு கடையைத் தொடங்கினார்.
கெடுவாய்ப்பாக, திருமணத்துக்கான மொத்த துணிமணிகளையும் கடனுக்கு வாங்கிச் சென்றவர்கள்,
கடைசிவரைக்கும் பணத்தைக் கொடுக்கவே இல்லை. கடையைத் தொடர்ந்து நடத்த முடியாமல் அவர்
மூடும்படி நேர்ந்தது. “யாராவது வந்து ரெண்டு திருக்குறள் சொல்லி கதை சொன்னா, நீங்க சிரிச்சிகிட்டே
ரெண்டு மீட்டர் துணிய கடனா கொடுத்துட்டு நிப்பீங்க. உங்களுக்கும் வியாபாரத்துக்கும்
ஒத்தே வராது” என்று பங்குத்தொகையைப் பறிகொடுத்த நண்பர்கள் இடித்துரைத்தார்கள். அதற்கிடையில்
அவர் படித்த இலக்கியம் அவரை வெகுதொலைவு வேறு திசையில் இழுத்துச் சென்றுவிட்டது. திருக்குறளும்
கம்பராமாயணமும் அவரைக் கொள்ளைகொண்டன. திருக்குறள் கழகம் என்னும் பெயரில் ஓர் இலக்கிய
அமைப்பை உருவாக்கினார். ஊருக்குள் வெவ்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த அவருடைய சமவயதுக்காரர்களாக
இருந்த அ.ப.சுப்பிரமணியன், சா.வே.இராமச்சந்திரன், துரை.சுந்தரமூர்த்தி, துரைக்கண்ணு,
தி.பழனிச்சாமி, இராசேந்திரன், பழனி, தா.மு.கிருட்டிணன், சா.கணேசனார், இராமகிருஷ்ணன்,
ந.க.காந்தி அனைவரும் அதில் இணைந்துகொண்டனர். திருக்குறள்தான் அனைவரையும் ஒன்றிணைத்தது.
இலக்கியம் வாசிப்பதையும் தமிழ் வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட்டனர்.
மாதந்தோறும் கூட்டங்கள் நடத்தில் ஊராரிடையில் திருக்குறள் புகழைப் பரப்புவதற்கு முயற்சி
செய்தனர். பள்ளிச்சிறுவர்களிடையிலும் இலக்கிய
ஆர்வத்தை விதைக்கும் முயற்சியாக, ஒவ்வொரு மாதமும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடத்தி
பரிசு கொடுத்து ஊக்கமளித்தனர். மாதாந்திர நிகழ்ச்சிகளையும் பட்டி மன்றங்களையும் ஆண்டு
விழாக்களையும் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
விடுதலைக்குப் பிறகு கல்விக்கூடங்களுக்கு
வந்து கல்வி கற்ற கிராமத்தைச் சேர்ந்த முதல் தலைமுறையினருக்கு கல்லூரிக்குச் செல்வது
என்பது எட்டாக்கனவாகவே இருந்தது. அப்போதெல்லாம் கல்லூரிப்படிப்புக்கு சென்னை அல்லது
சிதம்பரம் செல்வதுதான் ஒரே வழியாக இருந்தது. செல்ல முடியாதவர்கள் தட்டுத்தடுமாறி தட்டச்சுப்பயிற்சியும்
சுருக்கெழுத்துப்பயிற்சியும் பெற்று எங்காவது வேலைவாய்ப்பைத் தேடி இடம்பெயர்ந்தார்கள்.
அந்தப் பயிற்சிகளுக்கும் அவர்கள் விழுப்புரத்துக்கோ புதுச்சேரிக்கோ ஓடவேண்டும் என்கிற
நிலையே இருந்தது. அந்த நிலையை மாற்றுவதற்காகவே, வளவனூருக்குள்ளேயே ‘ஜோதி தட்டச்சு நிலையம்’ என்னும்
பெயரில் தன் உறவினர் வீட்டுத் திண்ணையிலேயே ஒரு தட்டச்சுப் பயிற்சி நிலையத்தை இராமகிருஷ்ணன்
என்னும் பட்டதாரி தொடங்கினார். கிட்டத்தட்ட திருக்குறள் கழகமும் ஜோதி தட்டச்சு நிலையமும் ஒருசில மாத இடைவெளியில்
உருவானவை. பகல் நேரத்தில் தட்டச்சு பயிற்சி நிலையமாக இயங்கும் இடம் மாலைக்குப் பிறகு
திருக்குறள் கழகம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சிக்கான அரங்கமாக மாறிவிடும்.
இப்படித்தான் என் நினைவுகள் மனிதர்களாலும்
நிலக்காட்சிகளாலும் நிறைந்திருக்கின்றன. ஒரு பழைய புகைப்படத்தொகுப்பைப்போல நான் அவற்றையெல்லாம்
பாதுகாத்துவைத்திருக்கிறேன். வளவனூரைவிட்டு வெளியேறி ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் பறந்துவிட்டன.
இப்போதும் வளவனூருக்குப் போய்வந்துகொண்டுதான் இருக்கிறேன். எல்லாத் தொடர்புகளும் இன்னும்
அப்படியே உள்ளன. ஊருடன் தொடர்பில் இருப்பது என்பது வேறு, ஊரிலேயே வாழ்வது வேறு என்பதை
என் மனம் உணர்ந்தே இருக்கிறது. இனி, ஊருக்குத் திரும்ப முடியுமா, முடியாதா என திட்டவட்டமாகத்
தெரியாத நிலையில், நான் கண்ட வளவனூரை மீண்டும் மீண்டும் அசைபோட்டு, அந்த இனிமை நிறைந்த
நினைவுகளில் திளைப்பதன் வழியாக ஊரை என்னை நோக்கி கொஞ்சம்கொஞ்சமாக இழுத்துவந்து நிறுத்திக்கொள்கிறேன்.
(மானுடவியலாளர் பக்தவத்சல
பாரதி அவர்கள் ‘எங்கள் ஊரில் எங்கள் வாழ்க்கை’ என்னும் தலைப்பில் தொகுத்து அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும்
தொகைநூலில் இடம்பெற்ற கட்டுரை)