அந்த இடத்தைக் கோயில் என்று சொல்லமுடியாது. அது இருந்த கோலம் அப்படி. மணிகண்டசாமி இருந்தவரைக்கும் சுத்தபத்தமாகத்தான் இருந்தது. ஐயப்பனுக்கு பக்தர்களும் பெருகிக்கொண்டு வந்தார்கள். இருதய நோயிலிருந்து பிழைத்து எழுந்ததற்காக ஐயப்பனுக்கு நன்றி செலுத்துகிறவண்ணம் நாற்பதுக்கு நாற்பது அடி தேறுகிற இடம் ஒன்றை வாங்கித் தானமாகக் கொடுத்திருந்தார் நமசிவாயம் செட்டியார். அதற்கு நடுவில்தான் பதினெட்டு படிகளும் ஐயப்பன் சிலையும்.
எல்லாம் அந்தக் காலம். மணிகண்டசாமியும் மரணமடைந்து நமசிவாயம் செட்டியாரும் போய்ச் சேர்ந்த பிறகு கோயில் சீந்துவாரில்லாமல் போய்விட்டது. யாரோ ஒரு புண்ணியவதி தினசரி சாயங்காலம் வந்து அகல்விளக்கு ஏற்றிவைத்துச் சென்றாள். மற்றபடி சுற்றியும் முள்புதரும் எருக்கஞ்செடிகளும்தான். எல்லாரும் விழுப்புரம் அல்லது மதகடிப்பட்டு குருசாமிகளைத் தேடிச் சென்றார்கள் என்பது முக்கிய காரணம். லோக்கல் ஐயப்பனுக்கு மவுசில்லாமல் போய்விட்டது.
திடுமென நிலைமை மாறியது. சுப்பையா சாமி வந்தார். கையில் ஒரு துணிப்பை கூட இல்லாமல் உடுத்திய உடுப்போடு நாலைந்து நாள் திரிந்த அலுப்பில் ஒரு நாள் விரக்தியில் வந்து உட்கார்ந்தவர் அவர். பீடத்தையோ ஐயப்பனையோ திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அந்த அளவு விரக்தியில் மூழ்கி இருந்தது மனம். யாரையும் நொந்துகொள்வதில் பயனில்லை என்றது ஒரு குரல். இப்படி அவமானப்பட்டுவிட்டோமே என்றது இன்னொரு குரல்.
வாழத் தெரியாதவன் நீ என்றது ஒரு குரல். வாழ்க்கை என்பதுதான் என்ன என்ற கேள்வியை முன் வைத்தது மறுகுரல். வாதங்களும் பிரதிவாதங்களும் மனசுக்குள் குமுறிக்கொண்டிருந்தன. அப்படியே துக்கத்தில் அமிழ்ந்து போனார். விடிந்த பிறகுதான் ஐயப்பனைப் பார்த்தார். தூக்கி வாரிப்போட்டது. பதறிக்கொண்டு எழுந்தார். அந்தக் கணமே அதுதான் அவர் சரணாலயம் என்று அவர் மனம் முடிவு செய்துவிட்டது.
அதைப் பக்தி என்றும் சொல்லலாம். ஒருவித வேகம் என்றும் சொல்லலாம். வீட்டு மாப்பிள்ளை என்கிற சுதந்திரத்தில் சற்றே துடுக்காக மாமனார்க்காரர் பேசிவிட்டார். கூடத்திலேயே நின்றிருந்த துளசி பரிந்துகொண்டு வருவாள் என்ற உள்ளூர எதிர்பார்த்த நம்பிக்கையும் ஒரு கணத்தில் நொறுங்கிவிட்டது. என் அப்பாவின் கேள்விக்கு என்ன பதில் என்கிற கோரணையில்தான் அவளும் நின்றிருந்தாள். அப்படி நிற்பதைக்கூட ஏதோ பயம் அல்லது மரியாதை என்று எடுத்துக் கொள்ளலாம். ஒருபடி மேலே சென்று “மனுஷனா பொறந்தா சுய புத்தியாவது இருக்கணும். இல்ல சொல் புத்தியாவது இருக்கணும். ரெண்டும் இல்லாம ஒரு ஜென்மம் எதுல சேர்த்தி?”’ என்று மளமளவென்று வார்த்தைகளைக் கொட்டினாள். சுப்பையாவுக்குள் ஏதோ ஒன்று அறுந்ததுபோலானது. நிமிர்ந்து ஒருமுறை துளசியைப் பார்த்தார். மறுகணம் படியிறங்கி நடக்கத் தொடங்கிவிட்டார்.
மூன்று நாள்களாய் ஊரில் இல்லை. ஏதோ ஊரில் ஆடித் திருவிழா. மூன்று நாள்களும் கேளிக்கை. முதல் நாள் செங்கல்பட்டு சொர்ணம் சகோதரிகளின் கரகாட்டம். இரண்டாவது நாள் ஈரோடு சிவபூஷணம் பார்ட்டியின் குறவன் குறத்தி ஆட்டமும் திருப்பூர் தனலட்சுமி குழுவின் பொய்க்கால் குதிரை ஆட்டமும். மூன்றாவது நாள் கோவை பொன்னம்பலக் கவுண்டர் ஜமாவின் பாரதக் கூத்து. மூன்று நாள் சந்தோஷத்தில் அவர் மனம் மிதந்திருந்தது. ஜல் ஜல் என்ற கால் சலங்கையின் ஒலி அவர் காதுக்குள் ஒலித்தபடியே இருந்தது. இசை அலைகள் நரம்புகளில் பொங்கித் துடித்தபடியே இருந்தன. அந்தப் போதையில் காலமெல்லாம் சரணடைந்திருக்க எண்ணித்தான் அவர் அலைந்துகொண்டிருந்தார். சுற்று வட்டாரத்தில் எந்த இடத்தில் ஆட்டம், கச்சேரி, கேளிக்கை நடந்தாலும் அங்கே அவர் ஆஜராகி விடுவார். எப்படியாவது விஷயங்கள் அவருக்குக் கிடைத்துவிடும். அந்த லயிப்பு அவருக்குத் தேவையாக இருந்தது. இல்லாதபோது உயிர்க்காற்றுக்கு அல்லாடும் பிராணியைப்போல ஆகிவிடுவார். எல்லாம் தெரிந்துதான் கல்யாணம் நடந்தது.
ஏழெட்டு வருஷங்கள் குடும்பமும் நடத்தி இரண்டு பிள்ளைகளும் பெற்றாயிற்று. ஜாடை மாடையாய் வந்து விழுந்த வார்த்தைகள்பற்றி அந்த அளவு கவலைப்படவில்லை. ஆனால் நேருக்கு நேர் அசிங்கமாய்ப் பேசப்பட்ட பிறகு இனி ஒரு போதும் அங்கிருப்பது சாத்தியமில்லை என்று தோன்றி படியிறங்கிவிட்டார்.
எருக்கஞ்செடிகளையும் முள்ளுப்புதர்களையும் தனி ஆளாய்ப் பிடுங்கி எறியத் தொடங்கினார் சுப்பையா சாமி. எங்கோ ஒரு மூலையில் ஒரு துருப்பிடித்த தகரத் தகடு கிடந்தது. அதைக் கொண்டு செதுக்கிச்செதுக்கி ஒவ்வொன்றையும் வேரோடு பிடுங்கி வீசினார். மனசிலிருந்தே எதையோ பிடுங்கி எறிந்தது போல இருந்தது. தெருவில் நடமாடுகிற ஜனங்கள் எல்லாம் ஜாடைமாடையாய்ப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். இளவயசுப் பட்டாளம் ஒன்று சீட்டியடித்து அவரைப் பார்த்துக் கிண்டல் செய்தது. எதையுமே அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சாயங்காலமாய் விளக்கேற்ற வந்த அம்மாள் உடனே சென்று ஒரு மண்வெட்டி கொண்டு வந்து தந்தாள். எந்தப் பேச்சுமின்றி அவர் வாங்கிக்கொண்டார். நல்ல நிலாவெளிச்சம். அகல் விளக்கின் சுடரில் ஐயப்பனின் முகம் பிரகாசமாய் இருந்தது. பதினெட்டுப் படிகளின் நிழல் சுத்தம் செய்யப்பட்ட தரையில் பூதாகரமாய் விழுந்தது. எழுந்து மீண்டும் புதர்களை வெட்டினார். மண்வெட்டியின் ச்ளக் ச்ளக் என்ற சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டபடி இருந்தது.
இரண்டு நாள்களில் அந்த இடத்தின் முகத்தையே மாற்றி விட்டார் சுப்பையா சாமி. சில நாள்கள் முன்பு வரை கூடச் சீந்துவார் இல்லாமல் கிடந்த இடம் அது என்று சத்தியம் செய்து சொன்னால் கூட நம்பிக்கை வராத அளவுக்கு சுத்தமாகிவிட்டது. எங்கோ கிடைத்த ஓட்டைப் பிளாஸ்டிக் குடத்தில் குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வந்து பீடத்தையும் ஐயப்பனையும் கழுவினார். பறவைகளின் எச்சங்களும் நாயின் கழிவுமாகக் கிடந்த இடத்தைத் தேய்த்து அப்புறப்படுத்தினார். ஐயப்பனைக் கனிவோடு பார்த்தார். இளம் பிள்ளையின் முகம். கருணை சுரக்கும் கண்கள். ரொம்பவும் கலை நேர்த்தியோடு இருந்தது உருவம். தனக்கு அடைக்கலம் அங்குதான் என்று அவர் உள்ளம் உறுதிப்படுத்தியது. மனசை அழுத்திக்கொண்டிருந்த பாரமெல்லாம் எங்கே விலகிப் போனதோ தெரியவில்லை.
விஷயம் வேகவேமாக ஊருக்குள் பரவிவிட்டது. ஒவ்வொருவராய் வந்துவந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனார்கள். எப்படி இருந்த இடம் எப்படி ஆகிவிட்டது. “ஐயப்பா” என்று கையெடுத்துக் கும்பிட்டார்கள். “கும்புடறன் சாமி” என்று சுப்பையா சாமியையும் வணங்கினார்கள். வேகமாய்க் கடைத்தெருவுக்குப் போய் வந்த பக்தர் ஒருவர் பூ, பழம், கற்பூரம், வத்தியோடு வந்தார். முதல் தீபாராதனை. கற்பூர தீபத்தின் பிரகாசத்தில் ஐயப்பனின் முகம் ஜொலித்தது. சுப்பையா சாமி அந்தக் கோயிலின் முக்கிய அங்கமாகி விட்டார்.
புத்தகக் கடைக்குள் புகுந்து வந்த சுப்பையா சாமி ஐயப்பன் பக்திப் பாடல்களைக் கொண்ட புத்தகத்தை வாங்கி வந்தார். மிகவும் சிரமமான கூத்துப் பாடல்களையும் நையாண்டிப் பாடல்களையும் கூட நொடிக்குள் பதிய வைத்துக் கொண்ட சக்தியை உடையது அவர் மனம். பக்திப் பாடல்கள் வெகு சீச்சிரத்தில் அவர் நெஞ்சில் படிந்துவிட்டன. அவர் குரலும் பாடுவதற்கேற்ற குரல். தொழுத கைகளோடு படிப்படியாக ஏறிச் செல்லும் ஐயப்ப பக்தனின் தோற்றத்தை அந்தக் குரலில் உணர முடியும். அவ்வளவு உருக்கம். குழைவு. ஏற்ற இறக்கம். பக்தி.
ஐயப்பனை நோக்கி வசப்படுத்தும் மார்க்கதரிசியாக உருமாறி விட்டார் சுப்பையாக சாமி. அவர் வாயும் சதா நேரமும் ஐயப்ப நாமத்தையே உச்சரித்தது. எழுந்தாலும் ஐயப்பா. உட்கார்ந்தாலும் ஐயப்பா. படுக்கப் போனாலும் ஐயப்பா.
”சாமி... குடும்பத்துல நிம்மதி இல்ல... வியாபாரத்லயும் நஷ்டம்... நம்பனவங்க எல்லாருமே கைவிட்டுட்டாங்க...”
”ஐயப்பன நம்புங்க. நாப்பத்தெட்டு நாளு விரதமிருந்து ஐயப்ப தரிசனம் செஞ்சிட்டு வாங்க.”
”பாகப்பிரிவினைல தம்பிகாரன் கத்தியாலயே என் ஊட்டுக்காரன் வெட்டிட்டான். உயிர் ஊசலாடிட்டிருக்குது சாமி.”
”ஐயப்பன் பேருல பாரத்த போட்டுட்டு தைரியமாக இரும்மா. தெனமும் ஐயப்பனுக்கு நெய் வௌக்கு ஏத்தி கும்புட்டு வா.”
மெல்ல மெல்ல கோயிலுக்குள் பக்தர்கள் பெருகினார்கள். எங்கிருந்தோ ஒரு சிஷ்யனும் வந்து சேர்ந்துவிட்டான். பித்தளைக் குடத்தில் தண்ணீர் சுமந்து வந்து பீடத்தையும் கோயிலையும் கழுவிச் சுத்தமாக்குவது அவன் வேலை. அழகாக கோலம் போட்டான். குருவின் துணிகளையெல்லாம் தூய்மையாக வெளுத்து வைத்தான். மாற்றுத் துணி இல்லாத குருவுக்கு மாற்றுத் துணி ஏற்பாடு செய்தான். பூக்கட்டினான். தரிசாகக் கிடந்த இடத்தைக் கொத்திப் பாத்தி பிரித்துப் பூச்செடிகள் கொண்டு வந்து நட்டு நந்தவனமாக்கினான். மூலைக்கு ஒன்றாக நான்கு தென்னக்கன்றுகள்
கூட வந்துவிட்டன. தட்சிணை எதையும் சாமி தொடுவதில்லை. பழங்களை மட்டும் ஒன்றிரண்டு வைத்துக்கொண்டு எஞ்சியவற்றைச் சிஷ்யனிடம் கொடுத்துவிடுவார். ஒரு கொத்தனாரைப் பிடித்து அழகாகச் சுற்றுச்சுவரைக் கட்டினான் சிஷ்யன். புது வர்ணம் பொலிந்தது. நமசிவாயம் செட்டியாரின் பேரப்பிள்ளைகளில் ஒருவர் இரும்புக் கதவொன்றை உபயமாக அளித்தார். இன்னொரு ஜவுளிக் கடைக்காரர் உள்ளேயும் வெளியேயும் டியூப் லைட்டுகளை உபயமாய் அளித்தார்.
ஐயப்பன் ஆலயத்தின் பேரையும் புகழையும் கேள்விப்பட்டு விழுப்புரம் குருசாமியே ஒருநாள் அங்கு எழுந்தருளினார். சுப்பையா சாமி அவர் காலில் விழுந்து வணங்கினார். எதற்காகாவோ அவர் மனம் உருகிக் கண்கள் தளும்பின. பெரிய குருசாமிக்கு அந்தச் செய்கை மிகவும் திருப்தியளித்தது. ஒட்டு மொத்தமாகக் கடவுள் மீது அவநம்பிக்கை பெருகிக்கொண்டிருக்கிற காலகட்டத்தில் ஐயப்பனின் மகிமையை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி வழிகாட்டுவது அனைவரின் கடமை என்றும், அந்தச் சேவைக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்களை ஐயப்பன் ஒருபோதும் கைவிடமாட்டான் என்றும் உபதேசித்தார். அன்று நண்பகல் பெரிய குருசாமி அங்கேயே இருந்து சுப்பையா சாமி கொடுத்த பழங்களை உண்டார். சிஷ்யர்களுக்கும் கிடைத்தது. வரும் மார்கழிக்கு மாலை போட்டுக்கொண்டு தன்னோடு தரிசனத்துக்கு வருமாறு அழைத்தார் குருசாமி. அது தனது பாக்கியம் என்று தலை வணங்கி ஏற்றுக்கொண்டார் சுப்பையா சாமி.
இந்த ஊர் கோயிலின் புகழைக் கண்டு விழுப்புரம் சாமி கலங்கிப் போய்விட்டது என்றும் அவர் கண்களில் பொறாமையும் ஏமாற்றமும் ஒதுங்கி இருந்ததைத் தன்னால் புரிந்துகொள்ளமுடிந்தது என்றும் சிஷ்யன் கதை கட்டி விட்டான். ஐயப்பனை வணங்க வரும் கூட்டம் அதிகரித்தது. அந்த மார்கழியில் விரதமிருந்து சுப்பையா சாமியும் சிஷ்யனும் சபரிமலை சென்று வந்தார்கள். ஊரில் பாதி பக்தர்கள் அவரோடு மாலை போட்டுக்கொண்டு தரிசனம் கண்டு வந்தார்கள். இரண்டு மூன்று தரிசனங்களுக்குப் பிறகு சுப்பையா சாமியே குருசாமியாக இருந்து பக்தர்களை வழி நடத்தத் தொடங்கினார். பெரிய குருசாமியின் ஆசீர்வாதம் அவருக்குப் பரிபூரணமாக இருந்தது.
சுப்பையா சாமியின் மனசில் ஐயப்பனின் நாமம் அழுத்தமாய்ப் பதிந்துவிட்டது. தான் ஒரு புதுப்பிறவி எடுத்து வந்துள்ளதாக நினைக்க ஆரம்பித்துவிட்டார். ஒருசமயம் பூசையெல்லாம் முடிந்து பக்தர்கள் வெளியேறி சிஷ்யன் தட்சணையையெல்லாம் ஒதுக்கி
எண்ணத் தொடங்கிய பிறகும்கூட ஒருவர் மட்டும் எழுந்திருக்காமல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார் சுப்பையா சாமி. ரொம்பவும் சங்கடத்தில் இருப்பவர் போலும் என்று நினைத்து, கனிவோடு அவர் கண்களை நோக்கினார். அவரோ இமைக்காமலேயே இவரையே பார்த்தபடி இருந்தார். சட்டென முகத்தை அடையாளம் கண்டு பிடித்தார் சுப்பையா. ‘கோவிந்தசாமி’ என்று கூவுவதற்கு வாய்வரை எழுந்துவிட்ட சொற்களைக் கஷ்டபட்டு அடக்கிக்கொண்டார். தன் அதிர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் தரையைப் பார்த்தபடி குனிந்து கொண்டார். அந்தக் கணம் எந்த எண்ணமும் இன்றி மனம் ஸ்தம்பித்த நிலையில் இருந்தது.
”மூனு வருஷமா உன்ன எங்கெல்லாம் தேடறம் தெரியுமா? நாடகம் சினிமான்னுதா நீ போயிருக்கணும்னு ஒரு ஊகத்துல ஊருல ஒரு எடம் பாக்கியில்லாம தேடனம். எல்லார் கண்லயும் மண்ணைத் தூவிட்டு நீ என்னடான்னா இங்க வந்து உக்காந்திருக்கற. பொண்டாட்டி புள்ளைங்கன்னு ஏதாச்சும் ஞாபகம் இருக்குதா ஒனக்கு? வயசான மனுஷன் நாலு வார்த்த பேசக்கூடாதா? அவருக்குப் பிரியம் இல்லாமயா ஒனக்கு பொண்ண குடுத்தாரு. ஊருல ஒலகத்துல நடக்காததா அது? நீ இப்படிச் செய்யலாமா?”
சுப்பையா சாமி எதுவும் பேசவில்லை.
”நீ விருட்டுனு கௌம்பி வந்துட்ட. ஆனா அங்க எல்லாரும் என்ன பேசிக்கினாங்க தெரியுமா? நீங்கள்ளாம் சேந்துதான்டா அவன கெடுத்துட்டீங்கன்னாங்க. ஒன்னா சுத்தற ஆளுதானேடா, ஒனக்குத் தெரியாம இருக்குமான்னு சந்தேகப்பட்டாங்க. ஒங்க நெஞ்சழுத்தத்தால என் குடும்பத்த கெடுத்துராதீங்கடா பாவிங்களா, வாய தெறங்கடான்னு ஊட்டு வாசல்ல வந்து அழுதாங்க. எங்க ஊட்டு ஜனங்க எல்லாரும் ஒரேடியா என் மேல காய ஆரம்பிச்சாங்க. ஆளாளுக்கு திட்டுதான். கண்ல படும்போதெல்லாம் திட்டு. ஒன்கூடப் பழகனதுக்கு இதெல்லாம் எனக்கு வேணுமா சொல்லு”
சுப்பையா சாமி மௌமாக இருந்தார்.
”ஒன் பொண்டாட்டி மூஞ்சிய பார்க்கவே முடியல. எப்படி இருந்த பொண்ணு எப்படி ஆய்டுச்சி தெரியுமா? எங்க இருந்தாலும் அந்த அண்ணனக் கூப்ட்டாந்து உட்டுட்டுதான் மறு வேல பாக்கணுமின்னு சொல்லிட்டா என் பொண்டாட்டி. அது வரைக்கும் பக்கத்துல படுக்க வராதன்னு கறாரா சொல்லிட்டா...”
சுப்பையா சாமி வாயைத் திறக்கவே இல்லை.
”குடும்பம்ன்னா நாலு பேரு நாலு விதமாத்தான் பேசுவாங்க. அதயெல்லாம் நாமதான் அனுசரிச்சிகிட்டு போவணும். ஒவ்வொரு குடும்பஸ்தனும் இப்படி கோவிச்சிகிட்டு சாமியாராப் போனா, ஊட்டுக்கொரு கோயில்தான் கட்டணும்”
சுப்பையா சாமி குனிந்தபடியே இருந்தார்.
”இனி உன்ன கண்டுபுடிக்கவே முடியாதுன்னு இருந்தப்பதான் இந்த ஊருல நீ இருக்கறன்னு நியூஸ் கெடைச்சது. நம்ம ஊரு வேலாயுதம் உன்ன சபரிமலைல பார்த்தானாம். அவன் வந்து சொன்னப்பறம்தான் விஷயம் தெரியும்.”
சுப்பையா சாமி தன் மௌனத்தைக் கலைக்கவில்லை. பார்வையை மட்டும் ஐயப்பன் பக்கம் திருப்பினார்.
”சரி சரி... ஏந்து வா. பழசயெல்லாம் மறந்துடு. ஒன்ன ஏத்துக்க அங்க எல்லாரும் தயாரா இருக்கறாங்க.”
சுப்பையா சாமி ஐயப்பன் மீதிருந்த பார்வையைத் திருப்பவே இல்லை.
”என்னப்பா நான் சொல்லிட்டே இருக்கேன். நீ என்னடான்னா ஊமைமாதிரி இருக்கற. நான் சொன்னது காதுல உழல?”
அப்போதுதான் சாமி நிமிர்ந்து பார்த்தார். மறுகணம் பீடத்தில் இருந்து இரண்டு பழங்களை எடுத்து அவர் பக்கம் நகர்த்தினார்.
”எழுந்து வாப்பான்னா பழத்த எடுத்து நீட்டறியே. நான் என்ன உன்கிட்ட பிரசாதமா கேட்டன்? அங்க இருக்கறவங்களுக்கு சத்தியம் செஞ்சிட்டு வந்திருக்கேன் தெரியுமா, சும்மா வெளையாட்டு காட்டாத...”
சுப்பையாசாமி பார்வையைத் திருப்பி மீண்டும் ஐயப்பன் மீது பதித்துக்கொண்டார். கோவிந்தசாமி வெகுநேரம் வரை உட்கார்ந்து வற்புறுத்திப் பார்த்தார். சுப்பையா சாமி வாயையே திறக்கவில்லை. “அங்க போயி அந்த பொண்ணுக்கு என்ன பதில் சொல்லப் போறனோ” என்று புலம்பியபடியே கடைசி வண்டியைப் பிடிக்கக் கிளம்பினார்.
சுப்பையா சாமிக்கு இரவு முழுக்கத் தூக்கம் வரவில்லை. அரை மணிக்கொரு தரம் எழுந்து உட்கார்ந்தார். நாலைந்து தரம் வெளியே சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தார். உள்ளே துளசியின் முகம்
எழுந்தது. உடனே அதை அழித்துவிட முனைந்தார். கலைந்து கலைந்து அந்த முகம் கூடிக்கொண்டே இருந்தது. உண்மையிலேயே அவள் தேடி அலைந்தாளா? பிரியம் உள்ளவள் நாக்கில் அந்த வார்த்தை வரலாமா? எல்லாமே நாடகம். திரும்ப வரவழைத்துக்கொள்ள அப்பனும் மகளும் சேர்ந்து போடுகிற வேஷம். இப்போது வேண்டி விரும்பி ஏற்றுக் கொள்கிறவர்கள் நாளை மீண்டும் வெறுப்பை உமிழ்ந்து விரட்ட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். சாமிக்கு சந்தேகம் வளர்ந்துகொண்டே போனது. இரவெல்லாம் தூக்கமின்றி அவர் முகம் வெளுத்து விட்டது. தலை கனத்துவிட்டது. இவ்வளவு தூரத்திற்கு இந்தப் பக்தி மார்க்கத்தில் வந்துவிட்ட பிறகு மீண்டும் சம்சார சமுத்திரத்தில் இறங்குவது தன்னால் சாத்தியப்படாது என்று முடிவு கட்டினார். அது எந்த வகையிலும் உசிதமல்ல என்று தோன்றியது. துளசியின் ஞாபகம் உடல் நரம்புகளில் ஒருவித எழுச்சியை ஊட்டியதையும் அவரால் தவிர்க்க முடியவில்லை. விடிந்ததும் விடியாததுமாகக் குளத்துக்குக் சென்று வந்து முதல் பூஜையைத் தொடங்கிய சுப்பையா சாமி ஐயப்பனை ஊக்கமுடன் கும்பிட்டார். மிகவும் பயபக்தியுடன் தனக்கு அமைதியைத் தரும்படி வேண்டினார்.
மூன்றாவது நாள் சாமி பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. சிஷ்யனுக்கு ஆச்சரியம். பக்தியோடு வாங்கி வந்து தந்தான். சாமி அதை வாங்கி பக்கத்தில் வைத்துக்கொண்டார். ஒரு பக்கம் சாய்வான எழுத்தைப் பார்த்ததுமே அவருக்குப் புரிந்துவிட்டது. துளசியின் கையெழுத்து. ஒருகணம் உடல் அதிர்ந்து அடங்கியது. அடிவயிற்றில் ஈரம் பொங்கிப் பரவியது. மீண்டும் உடல் நரம்புகளின் மீட்டல். ‘ஐயப்பா’ என்று பல்லை இறுக்கி உள்ளுக்குள் கூவினார். தளும்பும் துளசியின் கண்கள் தெரிந்தன. மெல்லச் சுற்றுமுற்றும் பார்த்தார் சாமி. சிஷ்யன் நந்தவனத்தில் இருந்தான். கடிதத்தை இடதுகையால் எடுத்து தீபாராதனை விளக்கில் காட்டிச் சாம்பலாக்கி உதறிவிட்டார்.
அடுத்த வாரம் மறுபடியும் ஒரு கடிதம், அதைப் பார்க்கப் பார்க்க அவருக்குள் ஏதோ பொங்கி வந்தது. ஏன் இந்தச் சோதனை என்று அரற்றியது. மனசுக்குகந்த உலகங்களிலிருந்து இந்த சம்சார பந்தம் ஏன் அறுத்துப் போடுகிறதோ? நிம்மதியாகச் சரண்புக எந்த உலகமும் ஏன் இல்லாமல் போகிறது?
மறுநாள் பெரிய பூஜை. உலகநாதன் செட்டியார் உபயம். எல்லாம் முடிய மணி பத்தாகிவிட்டது. நிம்மதியாக இருந்த மனம் கூட்டத்திடையே உட்கார்ந்திருந்த கோவிந்தசாமியைப்
பார்த்துத் துணுக்குற்றது. புத்தி பேதலித்த மாதிரி ஆனது. பாட்டின் ராகம் தடுமாறியது. கண்களில் ஒருவித பதட்டம் குடிகொண்டது. பக்தர்கள் கலைந்துபோகிற வரைக்கும் கோவிந்தசாமி உட்கார்ந்திருந்தான். சுப்பையா சாமி சிஷ்யனையும் போகுமாறு பணித்தார். தட்சணைகளையும் பழம் தேங்காய்களையெல்லாம் வாரி எடுத்துக்கொண்டு சந்தேகக் கண்களோடு கோவிந்தசாமியைப் பார்த்தவண்ணம் வெளியேறினான் அவன்.
”அந்தக் கெழவன் உயிரு இப்பவோ அப்பவோன்னு கெடந்து துடிக்குது. ஒரு தரம் வந்து பார்க்கக்கூடாதா? அந்தப் பொண்ணு எழுதன லெட்டருக்குக் கூட நீ பதில் போடலியாமே.”
சுப்பையா சாமி குனிந்துகொண்டார்.
”அட, நீ வந்து அங்க வாழ வேணாம்பா. ஒன்ன கட்டிக்கின பாவத்துக்கு அந்தப் பொண்ணு வாழா வெட்டியாவே இருக்கட்டும். போற உயிரு நிம்மதியா போவக்கூடாதா? அந்த அளவுக்குக் கூடவா மனுஷத்தனம் இல்லாம போச்சி.”
சுப்பையா சாமியின் பார்வை ஐயப்பன் மீது பதிந்தது.
”ஒரு மனுஷன் வேல வெட்டிய உட்டுட்டு இவ்வளவு தூரம் வந்து பேசறன். ஒரு மரியாதைக்கு கூடவா என்கூடப் பேசக்கூடாது? ஒரு சிநேகிதக்காரன்ங்கற மொறைக்கிக் கூடவா எப்படி இருக்கிற நீன்னு சம்பிரதாயத்துக்கு கேக்கக்கூடாது? என்ன ஆளுப்பா நீ...”
சுப்பையா சாமி கல்லைப் போல அசையாமல் இருந்தார்.
”இதான் கடைசி தரம். இனிமே எதுவா இருந்தாலும் வர மாட்டன் தெரிஞ்சிக்கோ...”
ஒரே ஒருமுறை கோவிந்தசாமியை நிமிர்ந்து பார்த்துவிட்டுத் தாழ்ந்தது சுப்பையா சாமியின் பார்வை. அடுத்த கணம் கோவிந்தசாமி வெளியேறி விட்டான். சாமியின் மன அமைதி முற்றாகக் குலைந்தது. அன்று அவர் சாப்பிடவே இல்லை. இரவு முழுக்க யோசனைகளின் அழுத்தம். இறந்த கால நினைவுகள், ஒரு பெரும் பாரமாக அவரை அழுத்தியது. அறுக்க இயலாத சங்கிலிகளால் தான் கட்டப்பட்டு இருப்பதைப்போல உணர்ந்தார். அழுகை வெடித்துப் பொங்கிவிடும்போல இருந்தது.
இரண்டு நாள் கழித்து மீண்டும் அவர் மனசை வதைக்கக்கூடிய சாய்வான கையெழுத்தில் துளசியின் மடல் வந்தது. மனசின் ஒருபுறம் பிரித்துப் பார்க்கத் தூண்டியது. இன்னொரு புறம் மறுகணமே
அவரைக் கண்டித்தது. இவ்வளவு சீக்கிரம் இளகி விட்டாயே என்று ஏளனம் செய்தது. சட்டென்று அந்த மடலை எரியும் தீபத்தில் கொளுத்திச் சாம்பலாக்கினார். சட்டென்று கோவிந்தசாமியின் மேல் கோபம் வந்தது. எல்லாவற்றிற்கும் இவன்தான் காரணம். இவனை யார் துப்பறிந்து கொண்டு வரச் சொன்னது. சுப்பையா சாமியின் மனசில் ஒருவித அமைதியின்மை நிரந்தரமாய்க் குடி கொண்டுவிட்டது. நுட்பமான கண்களைக் கொண்ட பக்தர்கள் ஏதோ வித்தியாசம் இருப்பதைப் புரிந்துகொண்டார்கள். “என்ன விஷயம்” என்று சிஷ்யனைக் கண்களால் கேட்டார்கள். அவன் உதட்டைப் பிதுக்கித் தனக்கு எதுவும் தெரியாதென்றும் எல்லாவற்றிற்கும் ஐயப்பனே சாட்சி என்றும் கையை ஐயப்பன் பக்கம் காட்டினாள். “திருடா, உனக்கா தெரியாது?” என்ற மனசுக்குள் திட்டிக்கொண்டே நகர்ந்தார்கள் பக்தர்கள்.
ராத்திரியில் அரைத் தூக்கத்தில் இருக்கும்போது தந்தி கொண்டு வந்த சேவகன் சாமியாரை எழுப்பினான். சட்டென்று வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தார் அவர். கையெழுத்து வாங்கிக்கொண்டு தந்தியைக் கொடுத்துவிட்டுச் சென்றான் சேவகன். அவர் அதைப் பிரிக்காமலேயே வெகு நேரம் கையில் வைத்திருந்தார். அவர் இதயம் துடிக்கிற சத்தம் அவருக்கே கேட்டது. வழக்கம்போல அதை அந்த விளக்கில் எரித்துவிட அவர் கைகள் நீண்டன. ஆனால் எரிக்கவில்லை. பெரிய மனப் போராட்டம். தயங்கினார். பிரித்துப் பார் என்று மனம் கூவியது. மறுகணமே வேண்டாம் என்ற எண்ணம் எழுந்து தடுத்தது. கடைசியில் மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டு தந்தியைப் பிரித்தார்.
”துளசி தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டாள்” என்றது அந்த வாசகம்.
சுப்பையா சாமிக்கு உடம்பு தூக்கி வாரிப் போட்டது. ‘ஐயப்பா’ என்று கூவினார். திடீரென்று தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். ஐயப்பனைப் பார்த்து என்னென்னமோ முணுமுணுத்தபடி இரவெல்லாம் அழுதபடி உட்கார்ந்திருந்தார். கருக்கலில் உடுத்திய துணியோடு கோயிலை விட்டு வெளியேறினார்.
விடிந்து பெருக்குவதற்காக வந்த சிஷயனுக்கு குருசாமியைக் காணாதது ஏமாற்றமாக இருந்தது. ஓடிப் போய் குளக்கரையைப் பார்த்தான். இல்லை. மெல்லத் திரும்பி வந்து வெகு நேரம் காத்திருந்தான்.
பிறகு தானே பூசையைச் செய்தான்.
வழக்கமாய் குருசாமியைப் பார்த்துப் பேச வரும் கோவிந்தசாமி கோயில் வாசலில் வந்து நிற்பதைப் பார்த்தான். “எங்க உங்க சாமி?” என்றான் அவன். சிஷ்யன் சிலையாக நின்றிருந்தான். என்ன பதில் சொல்வது என்று கணக்குப் போட்டது அவன் மனம்.
”செத்த பொண்டாட்டிக்கு கொள்ளி போடவாவது வருவானா, இல்ல ஐயப்பனே கதின்னு இருக்கப் போறானா ஒன் குருசாமி? எங்க ஆளு?”
அவனுக்குச் சட்டென்று எல்லாம் புரிந்துவிட்டது. நல்ல வேளை. சுற்றிலும் யாருமில்லை. உடனே அவன் குரலை நெகிழ்ச்சியாக்கிக் கொண்டான்.
“ஐயா... எத்தன மணிக்குங்க உயிர் போச்சு?”
“பத்து இருக்கும்”
“ஐயப்பா... உன் கருணய என்னன்னு சொல்றது.” உடம்பு சிலிர்த்ததுபோலச் சில கணங்கள் அப்படியே நின்றிருந்தான். “ஐயா... நேத்து அதே நேரத்துல குருசாமி பூஜைலதான் இருந்தாரு. நானும் அவரும் மட்டும்தான் இருந்தம். திடீர்னு ஜோதி பெரிசாச்சி. என்னால பாக்க முடியல. அந்த அளவு வெளிச்சம். கண்ண மூடிக்கிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சி தெறந்து பார்த்தா ஆளக் காணம். ஜோதியிலயே கலந்துட்டாருங்க.”
நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் அதிர்ந்து போய் நின்றான் கோவிந்தசாமி.
(புதிய பார்வை, 1997)