Home

Sunday, 2 March 2025

வழி


வனாந்திரமான இடத்தில் பெரியபெரிய புகை போக்கிகள் முளைத்த கல் கட்டிடத்தின் கம்பீரம் தெருவில் போகும் யாரையும் திரும்ப வைத்துவிடும். இதே பாதையில் வேலை சம்பந்தமாய் நான் அலைய ஆரம்பித்து ஒரு வருஷத்துக்கு மேலிருக்கும். என் வேலைக்கென்றே இலாக்கா மோட்டார் சைக்கிள் ஒன்று என் வசமிருந்தது

ஆரம்பத்தில் நான் பார்த்தபோது முன்தடுப்பு மறைத்த ஏழு, எட்டு அடி சுவர்கள் மட்டும்தான். அப்புறம் கிடுகிடுவென சுவர்கள் வளர்ந்தன. கம்பிகள் முளைத்தன. தகடுகள். இரும்பு உத்திரங்கள். பெரிய தூண்கள். அணு அணுவாய் வளர்ந்து பெரிய தொழிற்சாலையாகிவிட்டது. தமிழ்நாட்டுக்காரர்தான் யாரோ முதலாளி. கர்நாடக அரசாங்கமும் பணம் போடுகிறது. தென்னிந்தியாவில் ஃபைபர் தொழிற்சாலைக்கு எல்லா மாநிலங்களும் இடம் மறுத்தபோது அந்தக் கிராமத்தில் இடம் தந்து தக்கவைத்துக் கொண்டது கர்நாடகம். அரசல்புரசலாய் காதில் விழுந்த சங்கதிகள் இவை. எத்தனை தூரத்துக்கு பொய் அல்லது சத்தியம் என்பது தெரியாது. பாதையோடு போகிற நான் கட்டிடத்தைப் பற்றி யோசிக்கச் செலவழிக்கிற ஒரு சில நிமிஷங்களெல்லாம் இந்த டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்து முடிக்கிறவரைதான். அப்புறம் நான் ஒரு திசையில். அது ஒரு திசையில்.

டீக்கான சில்லறையை மேசையில் வைத்துவிட்டு வெளியே வந்தபோது ‘‘சாரு... சாரு”  என்ற பெண்ணின் குரல் அழைத்த. மேசைகளுக்குப் பக்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த கடை  ஆள்தான். பின்வாசல் வழி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். வேறு யாரையாவது இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு. அப்படியும் தோன்றவில்லை. தனியாய்த்தான் நின்றிருந்தேன். அவள் வருவதையே கூர்ந்து பார்த்தேன். முந்தானைத் துணியைச் சரி செய்தபடி வேகவேகமாய் வந்து நின்றாள்.

எப்பிடி சாரு இருக்காரு ஒங்க சிநேகிதரு...’’

குழப்பமாய் இருந்தது எனக்கு. அவளோ என்னை ஆவலுடன் பார்த்தபடி இருந்தாள். பதிலாக நான் உதிர்க்கப் போகும் வார்த்தைகளைச் சேகரித்துக்கொள்ளும் ஆவல் அவள் கண்களில் மின்னியது. பார்வையில் விடை தேடும் அபரிமிதமான துடிப்பு.

யாரக் கேக்கறீங்க? எனக்குப் புரியல...?’’

செத்துவிட்டது அவள் முகம். கொஞ்சநேரம் தரையை வெறித்தபடி இருந்தாள். நொடியில் கண்கள் கலங்கிவிட்டது. முந்தானையால் வாயை அழுத்திப் பொருமலைக் கட்டுப்படுத்தினாள்.

நெஜமாகவே தெரியலம்மா. யாரப்பத்திக் கேக்கறீங்கன்னு வெவரமா சொன்னா பரவால்ல...’’

தட்டுத்தடுமாறிக் கேட்டேன். சிறிதுநேரம் பேசாமல் இருந்தாள் அவள். லேசாகச் சிரித்துக் கொண்டாள்.

பாண்டிச்சேரிதான சொந்த ஊரு ஒங்களுக்கு...?’’

தூக்கி வாரிப்போட்டது எனக்கு. அவளை திகைப்போடு பார்த்தேன்.

ஒரு தரம் இங்க டீ குடிக்கும்போது நீங்களும் பாண்டிச்சேரி தானான்னு கை குடுத்திங்களே. ஒரு அஞ்சாறு மாசத்துக்கும் மின்னால. டீக்கு காசி குடுக்க வந்தப்போ கூட ஒங்ககிட்ட வாங்கவேணாம் வாங்கவேணாம்னு சொன்னாரே ஒர்த்தர் தெரியுதுங்களா...?’’

சட்டென்று ஒரு மின்னல் போல அந்தக் காட்சி ஞாபகத்துக்கு வந்துவிட்து. டீ மேசையில் வைத்திருந்த டைரியின் முகப்பில் எழுதியிருந்த முகவரியைப் பார்த்து விட்டு அடுத்த மேசையில் இருந்து ஓடிவந்து குலுக்கிய அந்த அழுத்தமான கைகள். தட்டையான அந்த முகம். சுருள் சுருளான அந்த முடியமைப்பு. சிரிப்பு வழியும் அந்த உதடுகள். சரம்சரமாய் எல்லாம் ஞாபகத்துக்குக் கூடிவந்து விட்டது.

இப்ப தெரியுது. சொல்லுங்க. என்னாச்சி அவருக்கு?’’

அவருக்கு ஒன்னும் ஆவல. பாத்திங்களான்னு கேட்டேன்.’’

அன்னிக்கு ஒருநாள் பாத்தனே. அதுக்கப்பறம் மீர் ஆலம் டாக்கீஸ்ல படத்துல ஒரு தரம் பாத்தன். அதோட சரி. அப்புறம் பாத்துக்கலியே...’’

அவள் முகம் விழுந்துவிட்டது. ‘‘நெசமாவா’’ என்று உடைந்த குரலில் கேட்டுவிட்டு நிமிர்ந்தாள். தலையை அசைப்பதைப் பார்த்ததும் ஏமாற்றத்துடன் திரும்பி நடந்து உள்ளே சென்று விட்டாள்.

இதை நான் எதிர்பார்க்கவில்லை. கஷ்டமாய் இருந்தது. மேற்கொண்டு விசாரிக்க முடியாதபடி அவள் திரும்பி விட்டது ஏமாற்றமாயிருந்தது. எதையும் ஊகிக்க முடியாமல் திரும்பிவிட்டேன். மனசில் மீண்டும்மீண்டும் அந்த இளைஞனின் சித்திரத்தைக் கொண்டுவந்து யோசித்தபடி இருந்தேன். சாயங்காலம் திடுமென ஞாபக மடை உடைந்து அவன் பெயர் உதிர்ந்துவிட்டது. ராஜசேகர்.

நடந்ததை அவளே கொஞ்சம் கொஞ்சமாய் அடுத்தடுத்த நாள்களில் சொன்னாள். தொழிற்சாலைக்குத்தான் வேலைக்கு வந்தானாம். கடைக்கு வந்துபோக உண்டாகிய பழக்கம்தானாம். ஆசைப்பட்டு ஆறேழு மாசங்களாய் குடித்தனம் நடத்தினாளாம். ஏதோ இன்டர்வ்யு என்று ஊர்ப்பக்கம் போனவன்தானாம். மாசம் இரண்டாகிவிட்டதாம். தகவல் எதுவும் இல்லையாம்.

ஊருக்குப் போவிங்களா சாரு நீங்க...’’

தீபாவளிக்குத்தான் போவணும்.’’

தேடிப்பாத்து சொல்றிங்களா...?’’

பாண்டிச்சேரி பெரிய ஊரும்மா. எந்த எடம்ன்னு பாத்து தேடமுடியும்? ஒங்ககிட்ட அட்ரஸ் கிட்ரஸ் எதுவும் தரலியா...?’’

பாண்டிச்சேரின்னுதான் சொல்வாரு. அதான் கண்டன். அதுக்குமேல் இன்னாத்த கண்டன். படிக்காத முண்டம் நானு...’’

அவள் குரல் உடைந்து அழ ஆரம்பித்துவிட்டாள். மனச்சோர்வுடன் வெளியே வந்துவிட்டேன் நான். ஏதோ பாலாஜி தியேட்டர் பக்கத்தில் இருப்பதாய் அவன் சொல்லியிருந்தது மங்கலாக என் ஞாபகத்தில் ஒட்டியிருந்தது. அது ஒன்றுதான் அப்போதைய தைரியம். அடுத்த நாள் அதைத்தான் சொன்னேன். அவள் முகம் பிரகாசமாகிவிட்டது.

அன்றிலிருந்து அவள் என்னை அரித்தெடுக்க ஆரம்பித்து விட்டாள். எனக்கு ஏதாவது வேலைகள் அடுக்கக்காய் முளைத்துக் கொண்டே இருந்தன. அவளிடம் புதுசு புதுசாய் ஏதாவது சாக்குபோக்குள் சொல்லிக்கொண்டிருந்தேன். தீபாவளிக்குத்தான் விடுப்பு அனுமதிக்கப்பட்டிருந்தது. என்னைவிட அவளுக்கு நாள்களை எண்ணுவதில் உற்சாகமிருந்தது. நெருங்கநெருங்க என்னைத் தயக்கம் பின்னிக் ªக்£ண்டது. மொட்டையான ஒரு ஞாபகத்தை நம்பிக் காரியத்தில் எப்படி இறங்குவது என்று.

ஆலைல விசாரிச்சிப் பாத்திங்களா. முழு அட்ரஸ் கெடைச்சாலும் கெடைக்குமல்ல...’’

ஐயோ, அந்தக் கூத்த எதுக்கு கேக்கறிங்க சாரு... ஏழ பாழய பாத்தா எவன் சாரு உள்ள உடறான். அந்த கூர்க்காவேஜாவ் ஜாவ்னு தள்ளி உட்டுடறான். அப்படியும் அங்கபுடிச்சி இங்க புடிச்சி விசாரிச்சன். ஆலக்கின்னு வேலக்கி வரலியாம் அவரு. ஏதோ கான்ட்ராக்ட்காரங்களாம். வந்தாங்க முடிச்சிட்டு போய்ட்டாங்கன்னு சொன்னாங்க. ஊட்லதா ஒரே பாட்டு. ரெண்டு அண்ணனுங்க இருந்து இன்னா புரோஜனம். புள்ள எதயும் வாங்கிக்காம இருந்தியே, அதுவே அதிர்ஷ்டம், சும்மா மறந்துட்டு கெடன்னு சொல்றானுங்க. என்னமோ அந்தக் காலத்துலேந்து இந்தக் காலம் வரிக்கும் இந்த ஓட்டல்தான் கஞ்சி ஊத்துது...’’

சிறுகச்சிறுகச் சொல்லிவிட்டாள்.

அடுத்த வாரம் தீபாவளிக்கென்று பாண்டிச்சேரி போயிருந்தேன். பண்டிகைக்கு மறுநாள் பாலாஜி தியேட்டரைச் சுற்றி நடந்துநடந்து தேடினேன். வீதிகளில் நின்றுநின்று ஆள்களை முறைத்தேன். ஏதோ ஓர் ஆள் கோடியில வரும்போது ராஜசேகர் மாதிரி இருந்தது. நெருங்கும்போது தெரிந்தது. ஆள் வேறு என்று. நிறைய சங்கடங்கள். இரண்டு நாள்கள் இப்படியே கழிந்தன. ஏமாற்றத்தைச் சுமந்து திரும்ப எனக்கே வருத்தமாய் இருந்தது.

ஊருக்குத் திரும்பிய மறுதினம் டீக்கடைக்குப் போனேன். பின்கட்டில் அவள் நின்றிருந்தாள். நான் குடித்து வெளியேறுகிறவரை பரபரப்போடு காணப்பட்டாள். ஜாடையாலேயே ‘‘பாத்திங்களா, பாத்திங்களா”  என்றாள். என்னால் பெருமூச்சைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

வெளியே வந்து நின்றேன். பின்வாசல் வழியே என்னை நெருங்கினாள் அவள்.

கெடச்சாரா சாரு”  என்றாள். ‘‘எப்ப வருவீங்க எப்ப வருவீங்கன்னு எதிர்பார்த்துக்னே இருந்தன் சாரு   என்றாள். ‘‘எதாச்சிம் சொன்னாரா சாருஎன்றாள்.

அவளது உற்சாகம் அதிகரித்துக்கொண்டே போனது. நான் திரும்பிக் கட்டிடத்தின் பக்கம் பார்வையை திருப்பினேன். உள்ளுக்குள் மிகவும் படபடத்தேன். பெரிய தைரியசாலி போல பைகளுக்குள் கையைவிட்டு நின்றிருந்தேன்.

சொல்லுங்க சார்...’’

இல்ல. எவ்ளோ தேடியும் அவனப் பாக்க முடியல. எங்க இருக்கான்னே தெரியல...’’

அவள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள்.

நல்லா பாத்திங்களா சாரு...?’’

சல்லட போட்டுத் தேடாத கொறதான். அப்படித் தேடனன். ஆப்படவே இல்ல ஆளு.’’

பெருமூச்சுவிட்டவள் திரும்பி நடந்தாள். துவண்ட முகமும் கலங்கிய கண்களும் என்னைச் சங்கடப்படுத்தின.

இந்தக் காலத்துல யாரயும் நம்பறதுக்கில்ல சாரு.’’

சொல்லிக்கொண்டே நிற்காமல் நடந்து பின்கட்டுக்கு போய்விட்டாள். லேசான அதிர்ச்சி எனக்கு. அவள் இதை எந்த அர்த்தத்தில் சொன்னாள் என்று விளங்கவில்லை. உள்ளர்த்தம் எதுவுமின்றி எதேச்சையாய் சொன்னவள் போல்தான் அவள் முகமிந்தது.

மறுநாள் பகல். மீண்டும் போய் டீ குடித்த போது அத்தனை திருப்தியாய் டீ குடித்ததாய்ச் சொல்லமுடியாத ஏதோ ஒரு கசப்பு நெஞ்சில் இடறியது. திரும்பும்போது அழைக்கும் குரல் கேட்டது. ஏதாவது அவள் சொல்லக்கூடும் என்று திரும்பினேன். அதிர்ச்சி. அவளில்லை. கடைக்காரர். நாற்பதை எட்டிய கருத்துப்பருத்த சரீரத்தை அசைத்துஅசைத்து வந்தார்.

எல்லாத்தையும் கேள்விப்பட்டேன் சார். கஷ்டமாத்தான் இருக்குது. எவ்ளோ செய்றிங்க சார். எனக்கும் ஒரு காரியம் செய்யுங்க. ஊர்ல மொத சம்சாரம் தவறி ரொம்ப காலமாய்டுச்சி. அந்தக் துக்கத்துலதான் இப்படி கௌம்பி இங்க வந்து கடய வச்சி ஒக்காந்துட்டன். தனிக்கட்டதான். அந்தப் பொண்ணுக்கும்  இன்னாச்சி ஏதாச்சின்னு கண்ணால பாத்தவன் நானு. வாழ்க்கைல எல்லாம் சகஜம். எங்கூட இருந்துறச் சொல்லுங்க. எனக்கும் தொணயாயிருக்கும். கடைக்கும் தொணயாயிருக்கும். மனசுவச்சி சார் ஒரு வார்த்த சொன்னா நல்ல வழி பொறக்கும்.’’

கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அவன் திரும்பி நடந்தான். வெகுநேரம் வரையிலும் என்ன வழி சொல்வது என்று புரியாமல் திகைத்து நின்றேன் நான்.

(தாய் - 1991)