வீட்டுக்குள் நுழைந்து அலுவலகப்பையை ஆணியில் மாட்டும்போதே
“ரெண்டு தரம் அட்ட வந்துவந்து ஒன்ன தேடிட்டு போனாண்டா” என்றாள் அம்மா. திரும்பி அம்மாவை முறைத்தேன். சட்டைப்பையில் இருந்த கைப்பேசியை மேசைமீது வைத்துவிட்டு உட்கார்ந்தேன்.
“எங்களுக்குள்ள கூப்ட்டுக்கறதுக்குத்தான் பட்டப்பேரு, ஒனக்கு கெடயாதுன்னு எத்தன தரம் சொன்னாலும் எப்படித்தான் மறந்துபோவுமோ தெரியலை” என்றேன். அம்மா சிரித்தபடியே தலைமுடியை ஒதுக்கிக்கொண்டு “சரிடா,
ரொம்பத்தான் முறுக்கிக்காத. ஒன் அரும கூட்டுக்காரன் கோபால் வந்துட்டு போனான். போதுமா?” என்றாள். பிறகு, ‘ஒன்ன செல்லுல கூப்ட்டானாம்.
நீ ஏன் எடுக்கலை?” என்று கேட்டுக்கொண்டே சமையலறைக்குச் சென்றாள். சந்தேகத்தோடு கைப்பேசியை எடுத்துச் சோதித்தேன். சுத்தமாக சார்ஜ் இல்லை. அவசரமாக சார்ஜரில் பொருத்திவிட்டு “என்னவாம்?” என்றபடி அவள் பின்னாலேயே நடந்துசென்று நின்றேன். ”அவன் எங்கடா நின்னு பேசனான்? இன்னும் நீ வரலைன்னு சொன்னதுமே அப்படியே வாசலோட போயிட்டான்” என்றாள்.
கோபாலுக்கு மட்டுமல்ல, சங்கரன்,
பூபதி, விநாயகம், ஸ்ரீதரன், நான் எல்லோருக்குமே பட்டப்பெயர்கள் இருந்தன. எல்லாமே
பள்ளிக்காலத்தில் ராமலிங்கம் டிரில் மாஸ்டர் சூட்டியவை. எல்லாப் பெயர்களும்
எப்படியோ மண்ணோடு மண்ணாக உதிர்ந்துபோக அவனுக்குச் சூட்டப்பட்ட பெயர்மட்டும்
அப்படியே உறுதியாக ஒட்டிக்கொண்டுவிட்டது. அந்தப் பெயரைப்போலவே.
சமையலறைக்குப் பின்னால் தோட்டத்தில் பலாமரம் தெரிந்தது. காற்றின் வேகத்தில் கிளைநுனிகள் வளைந்து அசைந்தன. ஒவ்வொரு கிளையிலும் பழுத்த பழங்கள் துணிமூட்டைகள்போல தொங்கிக்கிடந்தன. இரண்டு அணில்கள் ஒன்றையொன்று துரத்தி விளையாடின.
அம்மா கொடுத்த தேநீரைப் பருகியபடியே உணவு மேசைக்கு வந்தேன். செய்தித்தாளைப் புரட்டி விளையாட்டுச் செய்திகளைப் பார்த்தேன். அடுத்த வாரம் இங்கிலாந்தில் நடக்கவிருந்த கிரிக்கெட் போட்டிப் பந்தயங்களின் வெற்றிதோல்விகளைப் பற்றி பெரியபெரிய உலக ஆட்டக்காரர்கள் கருத்துச் சொல்லியிருந்தார்கள். வெற்றுக்கோப்பையை வைக்கும்போது வாசலில் கோபாலின் வண்டி வந்து நின்றது. ஹார்ன் ஒலி எழுந்தது. நான் சிரித்துக்கொண்டே வாசலுக்குப் போனேன். “உள்ள வாடா” என்றேன். சொன்னதைக் காதிலேயே வாங்காதவனாக “வாடா, வந்து ஒக்காரு. பீச்சுக்குப் போவலாம்” என்றான். “அப்படி என்னடா அவசரம்?” என்று சிரித்தேன். “வாடா மொதல்ல. அப்பறமா சொல்றேன்” என்று தலையசைத்தான். அவசரமாக உள்ளே திரும்பிவந்து கைப்பேசியைமட்டும் எடுத்து பையில் போட்டபடியே “அம்மா, கோபால்கூட வெளிய போயிட்டு வரேன்” என்றேன்.
வண்டியில் ஏறி உட்கார்ந்தபோது
என் கடிகாரப்பட்டியின் முள் அவன் சட்டையில் மாட்டி பிடிவிலகித் தளர்ந்து மண்ணில்
விழுந்தது. வேகமாக இறங்கி அதை எடுத்துத்
துடைத்து ஊதிவிட்டு மீண்டும் பொருத்திப் போட்டுக்கொண்டேன். எலுமிச்சை
மரக்கிளையிலிருந்து குயில் கூவும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்துக்கு இணையாக
விசிலடித்தபடி வண்டியைக் கிளப்பினான் அவன். அந்த விசில் சத்தம் அப்படியே இன்னொரு
பாட்டின் இசைவடிவமாக மாறியது. “என்னடா ரொம்ப கொண்டாட்டத்துல இருக்கறாப்புல
தெரியுது”
என்று தோளைத் தட்டினேன். “சொல்றேன், சொல்றேன். அதுக்குத்தான போறம்” என்றான். அப்புறம் பேசவில்லை. உல்லாசத்தில் அடிக்கடி
தோளைக் குலுக்கினான்.
கடற்கரையில் ஓரமாக வண்டியை
நிறுத்திவிட்டு கரையருகே சென்று ஒரு பாறையின்மீது உட்கார்ந்தோம். காற்றின்
வேகத்தில் உடைகள் படபடத்தன. வெகுதொலைவில்
ஒரு கப்பல் தெரிந்தது. ஏராளமான விளக்குகள் அதில் எரிந்தன. நகரத்தின் ஒரு அடுக்ககம்
போல. மிதக்கும் அந்தக் கப்பலையே பார்த்த கோபால் “என் மனசுகூட இப்படித்தான்டா
மிதக்குது”
என்றான். “எதுக்குடா இவ்வளவு
புதிர்? நேரா விஷயத்த சொல்லக்கூடாதா?” என்று அவன் தோளைத் தட்டினேன். அவன் முகத்தில் புன்னகை படர்ந்த்து. மெதுவாக
பைக்குள் கையைவிட்டு ஒரு கர்ச்சிப்பை எடுத்துக் காட்டி “காதல் பரிசு” என்று தலையாட்டினான். என் உடலில் ரத்தம் குபீரென்று
பொங்கியதுபோல இருந்தது. “யாருடா?” என்று ஆவலோடு அவன் முகத்தைப் பார்த்தேன்.
அவன் சிரித்துக்கொண்டே தலையசைத்தான். “தொடும்போது எப்படி இருந்தது தெரியுமா?
உடம்புமேல ஒரு ஈரத்துணி பட்டமாதிரி... ஒரு பூ வந்து விழறமாதிரி....ஐயோ இன்னும்
கொஞ்ச நேரம் தொட்டுகினே இருக்கமாட்டாளான்னு இருந்தது” என்றபோது அவன் விழிகளில் போதை நிரம்பி வழிந்த்து.
“யாருன்னு சொல்லாம ஏண்டா இப்பிடி வெறுப்பேத்தற?” என்று செல்லமாகக் கோபத்தோடு நீட்டிய என் விரலைப்
பிடித்து தன் கைக்குள் வைத்து அழுத்தினான். ”தொட்டுப் பேசறது எவ்வளவு பெரிய போதை தெரியுமா?
வாஷிங்மிஷின்ல துணி சுத்தறமாதிரி கிறுகிறுன்னு மனசு சுத்துது . நம்ம உடம்புலயா
இவ்வளவு ரத்தம்ன்னு நமக்கே ஆச்சரியமா இருக்குது. நிமிஷத்துக்கு நிமிஷம்
பொங்கிப்பொங்கிப் பாயுதுடா”
என்றான்.
ஒருமுறை அவனை ஆழமாகப்
பார்த்தேன். எங்கள் வட்டத்தில் அவனுக்குமட்டும்தான் இன்னும் சரியாக வேலை
அமையவில்லை. அவனிடம் அதற்கான அக்கறையும் வேகமும் போதுமான அளவில் இல்லை என்பது
அவனுடைய பெற்றோரின் எண்ணம். சலிப்பும் கசப்புமாகவே எப்போதும் பார்த்த அவன் முகத்தில் முதன்முதலாக ஒரு வெளிச்சத்தின்
கீற்றை அக்கணத்தில் அவன் கண்களில் பார்த்தேன். “இப்ப யாருன்னு சொல்லப்போறியா? இல்ல
நான் கெளம்பட்டுமா?”
என்றேன். “அவசரப்படாதடா பொறு
பொறு”
என்றபடி நெருங்கிவந்து ”நீலா”
என்றான். ஒருகணம் என் கண்களில் படர்ந்த குழப்பத்தைக் கவனித்துவிட்டு,
“அதேதான், எங்க பக்கத்துவீடு”
என்று மெதுவாகச் சொன்னான்.
“அந்த டீச்சரயா சொல்ற?”
என்று அவனைச் சட்டென்று உலுக்கினேன். அவன் புன்னகை மாறாமலேயே “அதே அதே” என்றபடி கைகளை உயரே தூக்கி நெட்டிமுரித்தான். வேகமாக நகர்ந்து அவன் முன்னால் சென்று “
அடப்பாவி, ஒரு குழந்தைகூட இருக்குதேடா அவுங்களுக்கு?” என்றேன். அவன் அதற்குப் பதிலே சொல்லவில்லை. அவன்
பார்வை தொலைவில் அசைந்து மிதக்கும் கப்பல்மீது பதிந்திருந்தது. அவன் கண்களில்
தெரிந்த பிரகாசம் என்னை அச்சுறுத்தியது. மெதுவாக “அந்தத் திருவான்மியூர்
கம்பனிலேருந்து இண்டர்வியூவுக்கு ஏதாச்சிம் மெயில் வந்துதா?” எனு பேச்சின் திசையை சட்டென்று மாற்றினேன். அடுத்து
“ ஐடிபிஐல அறுநூறு வேக்கன்சி போட்டிருந்தானே பாத்தியா?” என்று கேட்டேன். அவன் எதையுமே கவனிக்கவில்லை. “இந்த
உலகத்துல உனக்கு பொண்ணாடா கெடைக்கலை? ஏண்டா இந்த குறுக்குப் புத்தி” என்று உலுக்கினேன். அவன் எதையுமே காதில் வாங்கிக்கொள்ளும்
மனநிலையில் இல்லை. அந்தக் கர்ச்சிப்பை உதட்டுக்கு அருகே எடுத்துச்சென்று
முத்தமிட்ட பிறகு பைக்குள் வைத்துவிட்டுச் சிரித்தான்.
””கேக்கறதுக்கே பைத்தியக்காரத்தனமா இருக்குதுடா.
இதெல்லாம் ஒத்துவராத கத. ஒழுங்குமரியாதயா நான் சொல்றத கேளு. எல்லாத்தயும் மறந்து தொலச்சிட்டு
வேல தேடறதுல மனச மாத்துடா”.”
“ஒத்து வரும் வராதுன்னு
யோசிச்சி முடிவெடுக்கறதுக்கு இது என்னடா வட்டிக்கணக்கு விஷயமா? மனசுடா மனசு. உள்ள
அருவியாட்டமா பொங்கி வழியுது. இந்தப்பக்கம் போ இந்தப்பக்கம் போகாதான்னு அதுக்கு
சொல்லிக்குடுக்கவா முடியும்?”” என்றபடி என் கன்னத்தைத் தட்டிச் சிரித்தான்
கோபால். பிறகு, “எல்லாத்தயும் யோசிச்சி பாத்துட்டண்டா. எது வந்தாலும்
பாத்துக்குவம்”” என்றான். என் உற்சாகம் முற்றிலுமாக
வடிந்துபோக அச்சம் படர்ந்தது.
தம் இருவருக்குமிடையே தொடர்பு
உருவான விதத்தை அடுக்கடுக்காகச் சொல்லத் தொடங்கினான் அவன். கிட்டத்தட்ட
ஒருமணிநேரம் இடைவிடாமல் பேசிவிட்டு நிறுத்தினான். இருட்டு கவிந்ததும் கம்பங்களில்
விளக்குகள் எரிந்தன. சுண்டல் விற்கும் சிறுமி பக்கத்தில் வந்து ””சுண்டல் வேணுமாண்ணே, அஞ்சுரூபாண்ணே ஒரு பொட்டலம்”” என்று கேட்டுவிட்டுச் சென்றாள். அவன் கண்கள் மலர
“இனிமேல எல்லாமே நீலாதான்டா. நீலாவ நெனைக்காம இருக்கணும்னா அது இந்த
உடம்புலேருந்து உயிர் போற அன்னிக்குத்தான்டா நடக்கும். ஆண்டவன் எனக்காக படச்ச உயிருடா அவ. ஏதோ
கொழப்பத்துல வேற ஒரு எடத்துல கொண்டும்போயி சேத்துட்டாரு. அது இப்ப சரியான
எடத்துக்கு வந்து சேருது. அவ்வளவுதான்”” என்றபடி எழுந்தான். “சரி வா, போவலாம். ஒன்ன வீட்டுல விட்டுட்டு கெளம்பறேன்.
எட்டுமணிக்குள்ள வீட்டுக்குத் திரும்பிடணும்னு நீலா கட்டள”” என்று சிரித்தான். என்னால் சிரிக்க முடியவில்லை.
வேதனையாக இருந்தது.
அதற்குப் பிறகு அவனைச் சந்திக்க
முடியவில்லை. ஆனால் கைப்பேசியில் அடிக்கடி அழைத்து தொடர்ந்து தகவல்களைக்
கொடுத்தபடி இருந்தான். அவள் வாசல்பக்கம் வரும்போதும் ஜன்னல்பக்கம்
பார்க்கும்போதும் கொடியில் துணியுலர்த்தும்போதும் அவளைப் பார்த்துக்கொண்டே
இருக்கவேண்டும் என்று ஆசை படாதபாடு படுத்துகிறது என்று சொன்னான். அவள் வெளியே
வராமலேயே இருந்துவிடும் நாளில் கோபம் பொங்கிக்கொண்டு வருகிறது என்றும் அப்படிப்பட்ட
நேரத்தில் அவள் வீட்டுக்குள் செல்ல ஏதாவது காரணம் கிடைக்காதா என்று மனம்
தவியாய்த்தவித்து பைத்தியம் பிடித்ததுபோல ஆகிவிடுகிறது என்றும் சொல்லிவிட்டுச்
சிரித்தான். அப்போதெல்லாம் அம்மாவோ அப்பாவோ எதையாவது கேட்கவந்தாலோ பேசவந்தாலோ முட்டிக்கொண்டு வரும் கோபத்தையெல்லாம் அவர்கள்மீது கொட்டிவிடுவதைத் தவிர்க்கமுடியவில்லை என்றான். ஒரு கணமாவது அவளைப் பார்த்து ஒரு வார்த்தையாவது பேசிவிட்டுத் திரும்பினால்தான் நிம்மதி என்கிற நிலையில் அடிக்கடி நேரம்காலத்தைப் பொருட்படுத்தாமல் ஏதோ அற்பக்காரணத்தைச் சொல்லி அவர்கள் வீட்டுக்குள் நுழைந்துவிடுவதாகவும் இரண்டுமூன்று முறை அவள் கணவன் வெறுப்பாகப் பார்த்து வெளியேறிவிட்டதாகவும் சொன்னான். அவள் பள்ளிக்குக் கிளம்பும் நேரத்துக்கு முன்பேயே புறப்பட்டுச் சென்று பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து சந்திப்பதாகவும் சில் நேரங்களில் பள்ளிவரைக்கும் அழைத்துச் செல்வதாகவும் விவரித்தான்.
எந்தக் கட்டத்திலும் அவர்கள் தம் எல்லை மீறிவிடக்கூடாதே என என் மனம் உள்ளூர நடுங்கியது. அவன் அழைப்பு வரும் ஒவ்வொரு கணத்திலும் நெஞ்சம் பதறித் தவித்தது. நேர்காணல்களுக்கு அவன் சென்று திரும்பிய நிறுவனங்களிலிருந்து ஏன் எந்த அழைப்பும் வரவில்லை என்று எண்ணி வருத்தமடைந்தேன்.
ஒரு நண்பகலில் அவன் அழைப்பு வந்தபோது என்னால் எடுக்க முடியவில்லை. மூன்றுமுறை அழைத்துவிட்டு நிறுத்திவிட்டான். மாலையில் வீடு திரும்பிய பிறகு நானே அழைத்துப் பேசினேன். காலையில் அவனுக்கும் அவன் அம்மாவுக்கும் இடையே சண்டை வந்துவிட்டது என்றான். வழக்கம்போல காலையில் செய்தித்தாள் பார்ப்பதற்காக நீலா வீட்டுக்குச் சென்றபோது, அவள் கணவன் வாசலிலேயே தடுத்து இனிமேல் தன் வீட்டுக்கு வரவேண்டாம் என்று சொன்னதாகவும் அதையொட்டி அங்கே வந்த நீலாவுக்கும் அவனுக்கும் சண்டை வந்துவிட்டதாகவும் கோபத்தில் அவன் நீலாவை கண்மண் தெரியாமல் அடித்துவிட்டதாகவும் சொல்லிப் பெருமூச்சுவிட்டான். தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த அம்மாவை அழைத்து அவன் கோழைபோல எல்லாவற்றையும் சொல்லி அழுததாகவும் அசிங்கப்பட்ட உணர்வோடு புயல்போலத் திரும்பிய அம்மா தன்னை அடித்துவிட்டதாகவும் தன் வாகனத்தின் சாவியை அப்பா எடுத்துவைத்துக் கொண்டதாகவும் வேதனையோடு சொன்னான். ”என்ன ஆனாலும் சரிடா, என் நெஞ்சில இருக்கற நீலாவின் சித்திரத்தை யாராலும் அழிக்க முடியாது” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டு பேச்சை நிறுத்திக்கொண்டான்.
ஒரு வாரத்துக்குப் பிறகு அவன் அப்பா எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. விவரம் கேட்ட என் அப்பாவிடம் எல்லாவற்றையும் தலைகுனிந்தபடியே விரிவாகச் சொன்னார். “ என் புள்ளயா இப்படின்னு என்னால நம்பவே முடியலை சார். எப்ப எழுந்து எப்படி போனான்னே தெரியலை. ராத்திரில அந்தப் பொண்ணு ஊட்டுக்குப் போயி கதவ தட்டியிருக்கான் போல. அவன் போலீஸ்க்கு போன்போட்டு வரவச்சிட்டான். விசாரணைன்னு இழுத்தும்போயி இவன அடிச்சி தொவச்சிட்டானுங்க. படிச்ச புள்ளன்னு இத்தோட உடறேன். மானத்தோட வாழணும்னா எல்லாத்தயும் மறந்துட்டு ஒழுங்கா இருன்னு மெரட்டி காலையில உட்டானுங்க. அவன பெத்து இந்த இருபத்தெட்டு வயசுவரிக்கும் அவன என் கையால அடிச்சதே இல்ல சார். அப்படி பூவாட்டம் வளத்தம். அப்படிப்பட்ட புள்ள இன்னிக்கு அடிவாங்கி உழுந்துங்கெடக்கறத பாத்தா அடிவயிறு கொதிக்குது….” அழுகையை அவரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அழுது நிறுத்தட்டும் என்று அமைதியாக நின்றிருந்தேன்.
அம்மா அவருக்கு ஒரு கோப்பை தேநீர் போட்டு எடுத்துவந்து தந்தாள். ” அவன் சிநேகிதன்தான நீ. ஒருதரம் நீ வந்து பேசிப் பாத்தா மனசு மாறனாலும் மாறுவான். ஒருதரம் வரியாப்பா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார் அவர். “ இப்பவே வரேன் அங்கிள். மொதல்ல நீங்க டீ எடுத்துக்குங்க”
என்றேன். என் வண்டியிலேயே அவரை அழைத்துக்கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றேன்.
அவன் அறைக்குள் படுத்திருந்தான். தலையில் பாதி நெற்றியை மறைத்தபடி ஒரு கட்டு இருந்தது. தோளில் ஒரு கட்டு. தலையில் ஒரு கட்டு. உதடு கிழிந்து தையல் போட்டிருந்தார்கள். கண்கண் கலங்கியிருந்தன. அவன் கிடந்த கோலம் அடிவயிற்றைக் கலக்கியது. என் கண்களில் என்னையறியாமல் கண்ணீர் தளும்பியது. அலுவலகத்துக்கு விடுப்பை ஒரு குறுஞ்செய்திமூலமாக அனுப்பிவிட்டு அன்று முழுதும் அவனோடு கழித்தேன்.
அவன் உடல்நிலை முழுதும் தேறிவர மூன்று மாதங்கள் பிடித்தன. இடைப்பட்ட காலத்தில் நீலாவின் குடும்பம் வீடு மாறிப் போய்விட்டது. அவனுக்கும் அவன் அம்மாவுக்கும் அடிக்கடி வார்த்தைகள் தடித்து சண்டைகள் மூண்டன. அவன் அப்பா தலையிட்ட பிறகுதான் ஒவ்வொருமுறையும் அது அடங்கியது. கணிப்பொறியில் ஆறுவாரகால மேல்நிலைப்பயிற்சி ஒன்றில் பணம்கட்டி அவன் அப்பா அவனைச் சேர்த்தார். அந்தப் ப்யிற்சியில் அவன் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறினான். பயிற்சி நிலையம் வழியாக ஒரு நிறுவனத்தில் அவனுக்கு வேலை கிடைத்தது. அதன் பிறகு சிறிதுசிறிதாக அவன் முகத்தில் பொலிவு பெருகியது.
அலுவலக வேலையின் பொருட்டு, எதிர்பாராத விதமாக நான் ஐதராபத் சென்றிருந்தேன். அங்கே தங்கியிருந்தபோது ஒருநாள் கோபால் கைப்பேசியில் அழைத்தான். அவன் குரலில் ஒரு மாற்றம் தெரிந்தது. முதல்நாள் மாலை கடற்கரையில் தற்செயலாக நீலாவைப் பார்த்ததாகவும் அவள் பொங்கிபொங்கி அழுததாகவும் அக்கணமே ஆசைப்பிசாசு நெஞ்சில் குடிகொண்டுவிட்டதாகவும் சொன்னான். யார் பார்வையிலும் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே திண்டிவனம் செல்லும் பேருந்தில் ஏறி இருவரும் பேசிக்கொண்டே சென்றதாகவும் அங்கே இறங்கி மறுவண்டி பிடித்து புதுச்சேரி வந்ததாகவும் சொன்னான். ”தயவு செய்து இதெல்லாம் வேணாம்டா கோபால். எல்லாத்தயும் கெட்ட கனவா நெனச்சி மறந்துடுடா. அம்மா அப்பாவ நெனச்சிப் பாருடா” என்று மன்றாடினேன். அவன் எதையும் பொருட்படுத்தவே இல்லை. அவளைச் சந்திக்கும்வரை ஒரு நெருப்பு உடல்முழுதும் எரிந்தபடியே இருந்ததாகவும் அவளுடன் பேசியபிறகு அது தணிந்து அடங்குவதாகவும் சொன்னான். ”அம்மா” என்று மீண்டும் ஆரம்பித்தேன். “அவுங்கள உடுடா. சுத்த கர்நாடகம். அவுங்களுக்கு என்னடா தெரியும்?” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
ஊருக்குத்
திரும்பிய பிறகு ஒருநாள் மாலை என்னைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றான். பித்து ததும்பிய அவன் கண்களைப் பார்க்க எனக்கு அச்சமாக இருந்தது. நீலா என்னும் சொல் இல்லாமல் அவனால் ஒரு வாக்கியத்தைக்கூட பேச முடியவில்லை. நீலாவின் சிரிப்பு. நீலாவின் கண்கள். நீலாவின் பேச்சு. நீலாவின் உதட்டுக்குமேல் இருக்கும் மச்சம். அவள் முத்தம். “போதும் போதும்டா உன் புராணம்” என்று கோபம்கொண்டு அவனை நிறுத்தவேண்டியிருந்தது.
அவர்கள் தங்கியிருக்கும் புது இடம்பற்றிய விவரங்களை மனப்பாடமாகச் சொன்னான்.
அவன் உற்சாகத்தைப் பார்த்து ஆறுதலாக இருந்தாலும் மீண்டுமொரு ஆபத்தில் அவன் அகப்பட்டுவிடக்கூடாதே என்று அச்சமாக இருந்தது. “ நீ சொல்றதெல்லாம் காதலே இல்ல. வெறும் காமம். அவளுக்குன்னு ஒரு குடும்பம் இருக்குதுடா. மொதல்ல அத யோசிச்சி பாரு” என்று நயமாகப் பேசிப் பார்த்தேன். “காமம் இல்லாத காதல் உலகத்தில எங்கடா இருக்குது?” என்று ஏதோ நகைச்சுவையைக் கேட்டதுபோலச் சிரித்தான்.
அன்று இரவு என்னால் தூங்கவே முடியவில்லை. அவன் தலை பிளந்து ரத்தம் வழிய விழுந்துகிடப்பதுபோல ஒரு காட்சி மீண்டும்மீண்டும் மிதந்துவந்தது. அவன் பெற்றோரிடம் தகவல் சொல்லிவைக்கலாமா என்று ஒருகணம் தோன்றியது. அவர்கள் உடனடியாக அவனை வேறு ஏதேனும் ஊருக்கு அனுப்பிவைக்கக்கூடும் என்று தோன்றியது. எப்படி பேச்சைத் தொடங்குவது என்கிற சங்கடத்தில் நாள்கள் கடந்துகொண்டே இருந்தன. இதற்கிடையில் நான் பலமுறை தவிர்த்தாலும் கூட என்னை அடிக்கடி அழைத்து நீலாவைப்பற்றிய தகவல்களை அடுக்கியபடி இருந்தான். ஒருமுறை நீலாவோடு பத்துகண்ணு மதகுவரை வண்டியில் சென்றுவந்த கதை. இன்னொருமுறை நீலாவோடு திருச்சிற்றம்பலம பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் சாமிகும்பிட்ட கதை. மற்றொருமுறை திண்டிவனத்தில் நீலாவோடு அறையெடுத்துத் தங்கிய கதை. போதும்போதும் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் கதைகளால் என் மனம் அடைந்துகிடந்தது. ஒவ்வொரு முறையும் அவன் குரலில் உற்சாகம் பெருகியபடியே இருந்தது. தன் நெஞ்சில் நினைத்ததும் நினைக்காததும் எல்லாமே நிகழ்வதைக் கண்ட ஆனந்தத்தில் அக்குரல் திளைத்திருந்தது.
வழக்கம்போல அலுவலகம் விட்டுத் திரும்பிய வேளையில் அவன் அழைப்பு வந்தது. அதே உற்சாகம். அதே பரவசம். ”உடனே வாடா வீட்டுக்கு” என்றான்.
எனக்கு அவன் கதைகளைக் கேட்பதில் சிறிதும் ஆர்வமே இல்லை. அதற்கு மாறாக அச்சமும் பீதியும் எழுந்தன. அவனிடம் இதை எடுத்துச் சொல்லும் விதம் தெரியாமல் தவித்தேன். இந்த முறை போகக்கூடாது என்ற முடிவோடு தேநீர் பருகிய பிறகு செய்தித்தாளை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தேன். இடையில் பத்துமுறை கைப்பேசியில் அவன் அழைப்பு வந்துவிட்டது. வேறு வழியில்லாமல் கிளம்பினேன்.
நான் வாகனத்தை வாசலில் நிறுத்தியதுமே அவன் வந்தான். பின்னிருக்கையில் உட்கார்ந்து “கடற்கரைக்கு ஓட்டு” என்றான். விருப்பமே இல்லாமல் வண்டியை ஓட்டிச்சென்று கடற்கரையில் நிறுத்தினேன். கடலில் அன்று அலைவேகம் அதிகமாக இருந்தது. சுண்டல் பொட்டலம் வாங்கிப் பிரித்தபடி உட்கார்ந்து பேசத் தொடங்கினான். அதே நீலா புராணம். அவன் கண்களில் மின்னல். அந்தப் பிரகாசத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளமுடியாமல் அலைகளின் பக்கம் பார்வையைத் திருப்பினேன்.
அவன் தன் கையை நீட்டி, விரலில் அணிந்திருந்த மோதிரத்தைக் காட்டினான். ”காதல் பரிசு” என்றபடி சிரித்தான். விரலை உயர்த்தி முத்தமிட்டான்.
அக்கணத்தில் பின்னால் தடதடவென எழுந்த சத்தம் என்னவென அறிய பக்கவாட்டில் முகம் திருப்பிப் பார்ப்பதற்குள் ஆறேழு பேர்கள் அவனைச் சூழ்ந்து அடித்தார்கள். எதிர்ப்புக் காட்டக்கூட இடம்தராமல் எல்லாப் பக்கங்களிலும் அடிகள் விழுந்தன. ஒருவன் சட்டென்று ஒரு தடியை சட்டையின் மறைவிலிருந்து உருவி, கோபாலின் தலையில் அடித்தான். ”நிறுத்துடா டேய்” என்று பதறி நான் பாய்வதற்குள் யாரோ என்னைப் பின்பக்கத்திலிருந்து இழுத்துத் தள்ளி மிதித்தார்கள். பூஞ்செடித் தொட்டியில் தலை மோதியதில் குப்புற விழுந்தேன். வானம் திடீரென இறங்கி நெருங்கிவருவதுபோல எல்லாமே வேகவேகமாக ஒருகணம் சுழல, நினைவு பிசகியது.
சுயநினைவு
திரும்பியபோது மருத்துவமனையில் இருந்தேன். அம்மாவும் அப்பாவும் அருகில் நிற்பது தெரிந்தது. “அந்தப் படுபாவி பண்ண வேலையால அப்பாவிப் புள்ளயும் சேர்ந்து அடிவாங்கறமாரி ஆயிடுச்சே சார்” என்ற பேச்சுக்குரல் கேட்டது. திரும்பினேன். கோபாலின் தந்தை என்பதை அக்குரலே உணர்த்தியது. ஏதோ கேட்க வாயெடுப்பதற்குள் மீண்டும் நினைவு தப்பியது.
மறுநாள் விழிப்பு வந்த பிறகு நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கோர்வையாகத் தொகுத்துப் பார்த்தேன். விபரீதத்தை முழுப் பரிமாணத்தில் அப்போதுதான் உணர்ந்தேன். கோபாலை அக்கணமே பார்க்கவேண்டும்போல இருந்தது. அம்மாவின் பக்கம் திரும்பி, “கோபால்?” என்று இழுத்தேன். “ஐ.சி.யு.வுல வச்சிருக்காங்கடா.
யாரும் பாக்க முடியாது. இன்னும் ரெண்டு நாளு ஆவும்னாங்க. மொத்தத்துல நாலு பாட்டில் ரத்தம் ஏறியிருக்குது” என்றாள்.
எனக்கு மூச்சு முட்டியது.
அவனைப் பார்க்க அனுமதிக்கப்பட்ட நாளில் எல்லோருடனும் சேர்ந்து நானும் சென்று பார்த்தேன். தலை, கை, கால் என உடல்முழுக்கக் கட்டுகள். “அட்ட,…. டேய் அட்ட…” என்று மானசிகமாக அழைத்தேன். இன்னும் அவன் கண்ணைத் திறக்கவில்லை.
அவன் முகத்தில் படர்ந்திருந்த பிரகாசத்தின் தடத்தைக் கண்டபோது என் மனம் பீதியில் உறையத் தொடங்கியது.
(’பொம்மைக்காரி’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதை)