Home

Wednesday 10 August 2016

ஆற்றின் விழிகள் - (கட்டுரை)



     நேத்ராவதி நதியில் புதுவெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது தர்மஸ்தலாவைப் பார்க்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். மழைநாட்களில் சின்னச்சின்ன கிளைகளாக உருவாகி மலைப்பகுதிகளைத் தழுவி ஓடிவந்து இணைந்து நேத்ராவதி என வடிவமெடுத்துப் பொங்கிப் புரளும்போதுதான் புதுவெள்ளம் எழுச்சியோடு பாய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தைப்பற்றிய செய்தியைப் படிக்கும்போது மனம் பரபரக்கும்.  அக்கணமே வண்டியைப் பிடித்துப் பயணம்செய்து குளிர்மேங்கள் கவிந்திருக்கிற மலையடிவாரத்தில் நின்றுவிடவேண்டும் என்று தோன்றும். ஆனால் வேலைநெருக்கடிகளால் அந்தக்கனவு அப்படியே நொறுங்கிவிடும். ஒரேஒரு முறை எந்தக் குறுக்கீடும் இல்லாமல் என் ஆசைப்படியே புறப்பட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அன்று இரவே வண்டியேறித் தூக்கமில்லாமல் பயணம் செய்து அடுத்த நாள் காலை தர்மஸ்தலாவில் இறங்கினேன்.

     சாரல் ஒரு தண்ணீர்த்திரை. அதை விலக்கி நடந்தபோது யாரோ  ஈர விரல்களால் தொட்டு வருடிவிட்டதுபோல பரவசத்தில் திளைத்தது மனம். சாலையோரத்துச் செடிகளிலும் புதர்களிலும் திடமாக நீண்ட இலைகள்மீது சின்னச்சின்ன வசீகரமான மழைத்துளிகள் திரண்டிருந்தன. வைரத்துணடுகள்போல. பாதரசத்துளிகள்போல. அந்த இலையே ஆவுடையாகவும் மழைத்துளியே லிங்கமாகவும் தோன்றிய கணத்தில் அந்தப் புதரே மஞ்சுநாதனின் உறைவிடமாகத் தோன்றியது. சற்றே துவண்டு சாய்ந்த இலைநுனிகளில் அவை தொங்கட்டான்கள் போல அசைந்தன. அருகில் சென்று அந்தத் தண்ணீர்முத்தை விழிசுருக்கிக் கவனித்தபோது தூரத்துப் பச்சைமலை ஒரு சித்திரப்புள்ளியாக அதில் தெரிவதைக் கண்டேன். ஒருகணம் அது இயற்கை அள்ளிவைத்த அமுதமாகத் தோன்றியது.  மறுகணம் அதுவே ஒரு விழியாக என்னை நோக்கி புன்னகைப்பதாக உணர்ந்தபோது உடல் சிலிர்த்தது.
     பனியும் சாரலும் படர்ந்த மலைத்தொடரைப் பார்த்தபடியே நடக்கத் தொடங்கினேன். மரகதப் பச்சையில் மலைத்தொடரே விஸ்வரூபமெடுத்து லிங்கமென நிற்பதுபோல ஓர் எண்ணமெழுந்தது. அதன்மீது நான்கு திசைகளிலிருந்தும் மேகங்கள் புகையெனப் பரவிக் கவிந்திருந்தன.  காற்றில் நெளிந்தபடி பறக்கும் வெண்புடவைபோல. மேய்ச்சல் நிலத்தில் நடைபயிலும் வெண்புரவிகள்போல. குளிர்ந்த காற்று அங்கிருந்து கிளம்பி நகரத்தையே அணைத்துத் தழுவிக்கொண்டிருந்தது. உடல்முழுதும் படர்ந்த பரபரப்பில் எங்கிருந்தோ வீசப்பட்ட மெல்லிய வலையொன்றால் நான் மூடப்பட்டதுபோல உணர்ந்தேன். அப்படியே ஒரு குழந்தையைப்போல என்னைச் சுமந்த ஒரு பறவை வானத்தில் பறந்துசெல்வதுபோல இருந்தது. உயரத்தைநோக்கிச் செல்லச்செல்ல பச்சைமலையும் ஆறும் முதலில் ஒரு தீவாகத் தோன்றத் தொடங்கி பிறகு ஒரு புள்ளியாகக் கரைந்துவிட, இறுதியில் என்னைச் சுற்றி  வெட்டவெளிமட்டுமே நிரம்பியிருப்பதுபோல உணர்ந்தேன்.
     தொலைதூரமான இடங்களிலிருந்து வந்து நின்ற வாகனங்களிலிருந்து ஆட்கள் இறங்கி கூட்டம்கூட்டமாக ஆற்றைநோக்கி நடந்தபடி இருந்தார்கள். சிறுவர்கள் பெரியவர்களின் அதட்டல்களையும் மீறி ஈரத்தரையில் சளக்சளக்கென்று கால்பதித்து ஓடினார்கள். தண்ணீர்த்துளிகள் எல்லாப் பக்கங்களிலும் தெறித்தன. பாதையோரத்தில் குழம்பித் தேங்கியிருந்த மழைக்குட்டைகளின் அருகில் நின்று முகம்பார்த்துச் சிரித்தார்கள்.
     வேடிக்கை பார்த்தபடி சாலையோரத்துக் கடையொன்றில் முகம்கழுவிவிட்டு தேநீர் அருந்தினேன். அந்தக் குளிருக்கு தேநீரின் சூடு இதமாக இருந்தது. கடைக்காரர் ஊர்விவரம் விசாரித்தார். சொன்னேன். பெயரைக் கேட்டதுமே அவர் உற்சாகம் திடீரென்று பல மடங்காகப் பெருகிவிட்டது. "வெளிநாட்டுக்காரங்கள்ளாம் அங்க ஏகப்பட்ட கம்பெனிங்க வச்சி நடத்தறாங்களாமே, உண்மையா சார்?" என்று கண்கள் மின்ன கேட்டார். ஆனால் என் பதிலுக்காகக் காத்திருக்காமல் மறுகணமே அடுத்தடுத்து பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றார்.  "கம்ப்யூட்டரு படிப்புக்குத்தான் அங்க பெரிய மதிப்புனு பேசிகிறாங்களே. ராத்திரி ஷிப்டு பகல் ஷிப்டுன்னு எல்லா கம்பெனிங்களும் ஓய்வு ஒழிச்சலே இல்லாம நடக்குதாமே, இருபதாயிரம் முப்பதாயிரம்னு அள்ளிஅள்ளி சம்பளம் தராங்களாமே? இருக்கற எடத்துக்கே வண்டி வந்து வேளாவேளைக்கி அழச்சிம் போயிட்டு, வேல முடிஞ்சதும் பதுமயாட்டம் எறக்கி உடுவாங்களாமே?...." செய்தித்தாளில் படித்துத் தெரிந்துகொண்டதையும் தெரியாததைக் கற்பனையால் நிரப்பியும் அவர் மனம் கேள்விகளின் கோட்டையாக மாறியிருந்தது.  கடைசியில் ஒரு பெருமூச்சில் கொண்டு வந்து முடித்தார். "நம்ம பையனும் கம்ப்யூட்டருல டிப்ளமா படிச்சிருக்கான் சார். இந்த பாய்லர்லயும் அடுப்புலயும் வெந்துதான் அவன படிக்கவச்சேன். ஆனா தலக்கிறுக்கு அதிகம் சார் அவனுக்கு. லட்சரூபா குடுத்தாலும் இந்த தர்மஸ்தலாவ விட்டு நவுரமாட்டாராம் தொர. தெனமும் வெடிஞ்சி எழுந்தா இந்த மலயத்தான் பாக்கணுமாம். இந்த நேத்ராவதியில குளிக்கணுமாம். இதுலாம் யாருக்கும் கெடைக்காத பாக்கியமாம் இந்த காலத்துல இப்பிடி ஒரு கிறுக்க பாக்கமுடியுமா சொல்லுங்க. ஒரு ப்ரைவேட் ஸ்கூல்ல வெறும் ரெண்டாயிரம் ரூபா சம்பளத்துக்கு பாடம் சொல்லிக் குடுக்கறான். எல்லாம் நான் வாங்கி வந்த வரம் சார் வரம்..." தேநீர்க்கோப்பையை மேசைமீது வைத்துவிட்டு பணத்தைக் கொடுத்தேன். "உலகமே லண்டனுக்கு போவமா, அமெரிக்காவுக்கு போவமான்னு அலையிது. எனக்குப் பொறந்தது என்னடான்னா ஆத்தப் போல ஆவுமா மலயப் போல ஆவுமான்னு அழவு பாக்குது. எல்லாம் என் தலயெழுத்து...." நான் மெதுவாக ஆற்றைநோக்கி நடந்தேன்.
     புதுவெள்ளம் சேற்று வாசத்துடன் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. வறண்டிருக்கும் காலத்தில் ஆற்றின் ஓட்டத்தில் அங்கங்கே யானையின் முதுகுபோல உயர்ந்திருக்கும் பாறைகள் எதுவுமே தெரியவில்லை. எல்லாத் திசைகளிலும் ஒரே நீர்மயம். நீரில் ஒரு மரக்கிளை தெப்பம்போல மிதந்துபோனது. கரையிலிருந்தவர்கள் அதோ அதோ என்று கூக்குரல் எழுப்பினார்கள். கரை நெடுக நின்றிருந்த ஆலயச்சேவையாளர்கள் மக்களைப் பார்த்து "ஆழத்துக்குப் போவாதிங்க, குளிக்கறவங்க கரையிலயே குளிங்க..." என்று மீண்டும்மீண்டும் அறிவித்தபடி இருந்தார்கள்.  அலைமோதும் கரையிலேயே முட்டிக்கால் அளவுக்கு ஆழம் இருந்தது. ஆண்களும் பெண்களும் அப்படியே உட்கார்ந்து நீந்துவதுபோல கைகளைத் தண்ணீரில் அசைத்தனர்.  சிறுவர்கள் அந்த வட்டத்துக்குள்ளேயே ஆனந்தமாக மூழ்கி நீச்சலடித்தார்கள்.
     சிறிதுநேரம் ஒரு பாறையின்மீது அமர்ந்து அந்த ஆற்றையே பார்த்தேன். சீறிப் பாயும் தண்ணீரின் சலசலப்பை ஓர் இசைத்துணுக்காக அக்கணமே உருமாற்றி மனத்தில் மீட்டினேன். அடிவயிறு பொங்கியது. ஒருகணம் ஆற்றில் தண்ணீருக்கடியில் படுத்திருப்பதுபோலவும் எனக்குமேலே அது வெள்ளமெனச் சுழித்தோடுவதுபோலவும் எண்ணிக்கொண்டேன். நான் வளர்ந்த கிராமத்துக்கருகில் ஓடிய தென்பெண்ணை ஆற்றில் படுத்துக்கிடந்த ஞாபகம் வந்தது. பாதம் மூழ்கும் அளவுக்குமட்டுமே ஆழமுள்ள நீர்ப்பரப்பில் மல்லாந்து படுத்ததும் ஒரு மீனைப்போல வயிற்றின்மீது தண்ணீர் ஊர்ந்து கடந்துபோன ஆனந்தத்தில் திளைத்திருந்ததும் மன ஆழத்திலிருந்து புரண்டு மேலெழுந்தது. அந்த ஆற்றில் படுத்திருந்தவனை காலம் இந்த ஆற்றில் கொண்டுவந்து கிடத்தியதைப்போலத் தோன்றியது. அருகில் பெண்கள் கூட்டமொன்று சிரித்து எழுப்பிய சத்தத்தைக் கேட்ட பிறகுதான் அந்த மயக்கம் கலைந்தது.
     எழுந்து கரையைநோக்கிச் சென்றபோது என்னைப்போலவே ஆற்றையே பார்த்தபடி மரத்தடியில் சாய்ந்து கால்நீட்டியவாறு உட்கார்ந்திருந்த ஒரு பெரியவரை தற்செயலாகப் பார்த்தேன்.  அவர் பார்வை படிந்திருந்த திசையை உத்தேசித்து ஆற்றின்மீது உற்ற ஆசையால் என்னைப்போலவே பார்க்க வந்தவராக அவர் இருக்கக்கூடும் என்று நினைத்தேன். ஆனால் அந்த அமைதி வித்தியாசமாக இருந்தது. வெறுமை ததும்பிய அவர் கண்களையும் பிதுங்கிப்பிதுங்கிச் சேரும் உதடுகளையும் பார்த்த பிறகு குழப்பம்மட்டுமே எஞ்சியது. அவர் முகம் முழுதும் ஒரு தவிப்பு படிந்திருப்பதைக் கண்டேன்.
     யோசனையோடு ஆடைகளைக் களைந்து கரையோரம் வைத்துவிட்டு ஆற்றில் இறங்கி உட்கார்ந்தேன். கழுத்தளவுக்குமேல் நீர்ப்பரப்பு ஒரு கடல்போலக் கொந்தளித்துக்கொண்டிருந்தது. கால்கள் இழுபடுவதுபோல இருந்தது. அதன் சேற்றுமணத்தை நுகர்ந்தபடி தண்ணீரை வாரிவாரி முகத்தில் அடித்துக்கொண்டேன். அண்ணாந்து பார்த்தபோது மழையின் அறிகுறிகளோடு இருந்தது வானம். ஒரு நாரைக்கூட்டம் மலையைநோக்கிப் பறந்துசென்றது. ஒரு கட்டத்தில் மலையும் வானமும் ஆற்றுவெள்ளமும் மட்டுமே என் முன்னால் விஸ்வரூபமெடுத்து நின்றன.  மூன்று வேறுவேறு வடிவங்களைத் தாங்கியிருப்பது ஒரே சக்தியின் தோற்றம்.  பரவசத்தில் என்னையே இழந்து ஒரு கணம் வெள்ளத்தில் தாவிவிடுவேனோ என நடுங்கி, கனவுகளைக் கலைத்தபடி தண்ணீர் சொட்டச்சொட்ட நின்று நிமிர்ந்தபோது, அந்தப் பெரியவரை மீண்டும் பார்த்தேன். பொங்கியோடும் வெள்ளத்தின் வேகத்தைப் பார்வையாலேயே அளப்பவர்போல ஆழமான பார்வை. அவர் என்ன நினைக்கிறார் என்றே தெரியவில்லை. அவருக்கு மிகவும் வேண்டிய ஆணோ பெண்ணோ யாரோ ஒருவர் கரையில் குளித்துக்கொண்டிருக்கிறார். அவரைத்தான் பார்வையாலேயே கண்காணித்தபடி அமர்ந்திருக்கிறார். எழுந்து சீக்கிரம் வந்துவிடவேண்டும் என்ற பதற்றம்தான் அவர் முகத்தில் வெளிப்பட்டபடி இருக்கிறது. அப்படி நானாகவே நினைத்துக்கொண்டேன்.
     ஆடை மாற்றிக்கொண்டு ஆற்றிலிருந்து பிரிந்து நீளும் கோயில் பாதையில் நடந்தேன். வெள்ளத்தின் ஓசை பின்தொடர்ந்தபடி இருந்தது. சாரல் குறைந்து திடீரென்று  வானத்தில் வெளிச்சம் வந்தது. வாதுமை மரங்களின் இலைகளை ஊடுருவி மண்ணில் பரவிப் பதிந்த ஒளிக்கதிர்கள் கண்களைக் கூசவைத்தன.  அருகில் ஒரு சின்னக் குன்று. சிறிது தொலைவு நடந்ததும் சமணத் தீர்த்தங்கரரான பாகுபலியின் சிலை தெரிந்தது. உருகிவழியும் வெளிச்சத்தில் அந்த வெண்பளிங்குச்சிலை எல்லாருக்கும் அருள்வழங்கிக்கொண்டிருந்தது. அந்த வானம்போல. குன்றுகளைப்போல. ஒரு தூணுக்கருகே ஒரு பெரியவர் தன்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்த பள்ளிச்சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் பாகுபலியின் கதையை உணர்ச்சியமயமான குரலில் விவரித்துக்கொண்டிருந்தார். தனக்கென ஒரு அடி நிலம்கூட வேண்டாம் என எல்லாச் சொத்துகளையும் உரிமைகளையும் தன் தம்பிக்கு வழங்கிவிட்டுத் துறவியாகி வெளியேறி நின்ற கோலத்தில் தவம் செய்த பெருமகன் பாகுபலியின் தியாக உணர்வைச் சொல்லும்போது அவர் குரல் தழுதழுத்தது. பேச்சு வரவில்லை. ஒரு சொல்கூடச் சொல்லாமல் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வேறொரு இடத்தைக் காட்டுவதற்குச் சென்றுவிட்டார்.
     அங்கிருந்து நடந்து ஆலயத்துக்குச் சென்றேன். இரண்டுமணிநேரமாவது ஆகக்கூடும் என்று நான் போட்டிருந்த மனக்கணக்குக்கு மாறாக அரைமணிநேரத்திலேயே தரிசனம் முடிந்தது. கருவறையிலிருந்து வெளியேறும் இடத்தில் தவக்கோலத்தில் உட்கார்ந்திருந்த சிவபெருமானுடைய சிற்பமொன்றைத் தற்செயலாகக் கண்டேன். சடைகள் தொங்க பத்மாசனக் கோலத்தில் அமர்ந்திருந்த கருத்த உருவம் யாரோ ஒரு காட்டுவாசியுடையதைப்போல காட்சியளித்தது. மீண்டும் பார்க்க விழி திருப்புவதற்குள் வரிசை என்னை வெளியே தள்ளிவிட்டது. என் மனத்தில் உயிருள்ள மனிதனைப்போல அந்தக் கருத்த உருவம் மீண்டும்மீண்டும் அசைந்தபடி இருந்தது. சிவனை ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்த ஓர் ஆதிவாசியாக எண்ணவைத்தது அந்தச் சிற்பத்தின் நுட்பம். மனிதன்தான். ஆனாலும் தன் கருணையாலும் தியாகத்தாலும் அன்பாலும் ஆதரவாலும் மனிதர்களை வாழவைக்கும் இறைவனாக உயர்ந்தவன்.
     எந்தத் திட்டமும் இல்லாமல் ஆற்றங்கரைக்கே மறுபடியும் வந்து நின்றுவிட்டேன். வானத்தில் கவிந்திருந்த மேகங்கள் கலைந்துவிட்டன. அதிகாலையில் மழைபெய்த வானம் என்று சொல்லவே முடியாதபடி வெளிச்சம் கண்களைக் கூசவைத்தது. வெள்ளத்தில் மிதந்துவந்து கரையில் ஒதுங்கிய ஒரு மரக்கிளைளை நாலைந்து ஆலயச் சேவையாளர்கள் சேர்ந்து இழுத்துப் போட்டார்கள். அங்கிருந்து பார்வையை விலக்கிய கணத்தில் காலையில் நான் பார்த்த பெரியவர் இன்னும் அதே மரத்தடியில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அவர் விழிகள் இன்னும் சுழித்தோடும் வெள்ளத்தின்மீதே பதிந்திருந்தது. குளித்துவிட்டு கரையேறும் ஒருவருக்காக அவர் காத்திருப்பதாக என் மனத்தில் எழுந்த எண்ணம் பிழையானது என்று அக்கணத்தில் தோன்றியது. அவருடைய காத்திருப்பு எதற்காக என்ற கேள்வி என்னைத் திகைக்கவைத்தது.  பரபரப்பும் குதூகலமும் கலந்த ஆற்றங்கரையின் மனநிலைக்கு முற்றிலும் நேர்மாறான உணர்வுகள் அந்த முகத்தில் படிந்திருந்தன. தயக்கத்தோடு அவரை நெருங்கிய கணத்தில் ஒரு சின்ன சுள்ளி எங்களுக்கிடையே தற்செயலாக மேலிருந்து கீழே விழுந்தது. என்ன காரணம் என்று அண்ணாந்து பார்த்தேன். அதே கணத்தில் அந்தச் சுள்ளியை எடுக்க விரைவதுபோல வேகமாகப் பறந்துவந்த காக்கையொன்று எங்கள் தலை உயரம்வரைக்கும் வந்துவிட்டு விலகியது. தாழ்வாகவே சிறிது தொலைவு பறந்துசென்று மீண்டும் உயரே பறந்து வட்டமடித்தது. அதன் கூட்டிலிருந்து விழுந்துவிட்ட சுள்ளியாக இருக்கலாம். அல்லது ஒரு கூட்டைக் கட்டுவதற்காக அலகில் கவ்விச் சென்ற சுள்ளியாகவும் இருக்கலாம். என்ன காரணத்தாலோ நழுவிவிட்டது. எடுக்கவும் வழியில்லாமல் விட்டுவிலகவும் மனமில்லாமல் காக்கை அங்கேயே வட்டமடித்துப் பறந்தபடி இருந்தது.
     "சுள்ளியைப் பறிகொடுத்துவிட்டு இந்த காக்கா படற அவஸ்தய பாத்திங்களா சார்....?" அவருடன் பேச்சைத் தொடங்குவதற்கு எனக்கு அது ஒரு நல்ல புள்ளியாக அமைந்துவிட்டது. கீழே விழுந்திருந்த சுள்ளியை எடுத்து அந்தக் காக்கையின் பார்வையில் படும்படி சிறிது தொலைவான இடத்தில் வீசினேன்.  காக்கை அதைப் பார்த்ததா இல்லையா என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை.  மீண்டும்மீண்டும் வட்டமிட்டபடியே இருந்தது.  "பாத்ததா இல்லயான்னே தெரியலையே..." ஈரமில்லாத ஒரு வேரின்மீது பெரியவருக்குப் பக்கத்திலேயே அமர்ந்தபடி முணுமுணுத்தேன்.
     அவர் கண்கள் ஒருகணம் என்மீது படிந்து விலகின.  அதுவே பேச்சைத் தொடங்க சரியான தருணம் என்று உள்மனம் தூண்டியது.  "ஒரு ஆத்துக்கு நேத்ராவதினன்னு பேரு வச்ச ஆளு நிச்சயமா ஒரு மகாகவியாதான் இருக்கணும் இல்லயா சார்?" அவர் கண்கள் மறுபடியும் என் முகத்தைநோக்கித் திரும்பின.  ஆனால் முன்புபோல சட்டென விலகாமல் நிலைத்து நின்றன.  அதுவே எனக்கு உற்சாகமாக இருந்தது.   "பரஸ்பரம் பாத்துக்கறதுதானே ஒரு பார்வைய முழுமையாக்கும். ராமர் சீதைய பாக்கறாரு. சீதை ராமரைப் பாக்கறாரு. பார்வைப் பரிமாற்றம்ங்கறது மனசயும் பரிமாறிக்கறது போலத்தானே? ஆயிரக்கணக்கான கண்களால மனிதர்கள் ஆத்தப் பாக்கறாங்க. அந்த ஆறும் தன்ன சுத்தி நிக்கற மனிதர்கள பாக்குது. ஆற்றுக்கும் கண்கள் இருக்குது சார். அதன் உருவமே அதன் கண்கள். அகன்று ஆழமான கண்கள்."
     அவர் முகத்தில் அதுவரை இல்லாத ஒரு தெளிவின் வெளிச்சம் படர்ந்தது. என்னையே சில கணங்கள் உற்றுப் பார்த்தார்.  பின்பு பழையபடி ஆற்றைப் பார்த்தார். நரைத்த அவர் தலைமுடியை காற்று கலைத்தது. கழுத்தில் போட்டிருந்த துண்டு  கீழே விழுந்தது.  "அப்ப அந்த ஆறு என்னப் பாக்கறதா எடுத்துக்கலாமா?" பார்வையைத் திருப்பாமலேயே முதன்முறையாகப் பேச்சைத் தொடங்கினார். "நிச்சயமா.." என்றேன். "என் நெஞ்சுல இருக்கற துக்கம் அதுக்குப் புரியுமா?" என்று மீண்டும் கேட்டார். "கண்டிப்பா புரியும் சார்...." என்று பதில் சொன்னேன். "அது புரிஞ்சிகிட்டா என் துக்கம் போயிடுமா? நான் இழந்ததெல்லாம் திரும்ப கெடச்சிடுமா?..." என்று மறுபடியும் கேட்டார். "கெடைக்குதோ இல்லயோ கொஞ்சமாச்சிம் நம்ம மனபாரம் கொறயுமே இல்லயா? அது போதாதா?" என்றேன்.
     காற்றின் வேகம் அதிகரித்தது. ஆற்றில் குளிக்க வருகிற கூட்டம் பெருகியபடி இருந்தது. இப்போது எச்சரிக்கை கொடுப்பதற்கு சில காவலர்களும் வந்திருந்தார்கள்.  இரண்டு புதுமணத் தம்பதிகள் நின்றிருந்தார்கள். வெட்கமும் அச்சமும் கொண்ட பெண்களிடம் நயமாகப் பேசி குளிப்பதற்கு அழைத்துச் சென்றார்கள் இளைஞர்கள்.
     "சொல்லுங்க சார்.. என்ன மனபாரம் ஒங்களுக்கு?" நான் அப்படி நேரிடையாகக் கேட்பேன் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. "காலையில நான்இங்க வந்தபோதே ஒங்கள பாத்தேன். ரெண்டுமூணு மணிநேரமா அப்பிடி இப்பிடி அசயாம உக்காந்திருக்கிங்க. கஷ்டமும் துன்பமும் நாலு பேருகிட்ட பகிர்ந்துகிட்டாதானே ஆறும்..."
     அவர் சிறிதுநேரம் தலையைக் குனிந்து தரையைப் பார்த்தார். "ஏதோ சொந்த சோகம். ஆறுதலுக்காக உக்காந்திருக்கேன். வேற ஒன்னுமில்ல...."
     நான் அவராகவே தொடங்கட்டும் என்று எண்ணியபடி அவர் முகத்தையே பார்த்தேன். "செத்தவங்க திரும்பி வர மாட்டாங்க இல்லயா, அதுதான் துக்கம்...." அவர் பார்வை மறுபடியும் ஆற்றின்மீது பதிந்தது.  சில கணங்களுக்குப் பிறகு ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தார்.
     "யாரு செத்துட்டாங்க?" தயக்கத்துடன்தான் என் கேள்வியை முன்வைத்தேன்.
     "முதலில் என் மகன். அப்பறம் என் மனைவி. ரெண்டுமே கொடும்மரணம்" அடங்கியொலித்த அக்குரலில் பொங்கித் தத்தளித்த துக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
     "எப்பிடி....?"
     "என் பையன் பேரு மஞ்சுநாத். எலெக்ட்ரானிக்ஸ்லதான் எஞ்சினீரிங் படிச்சான். பெல்காம் யுனிவர்சிட்டில கோல்ட் மெடல் வாங்கன பையன். விப்ரோவில இருந்தான். தில்லி, மும்பை, பெங்களூருன்னு நாலு வருஷமா வேல செஞ்சான்.  தங்கமான பையன். திடீர்னு ஒருநாளு வந்து ஒரு பொண்ணுடைய போட்டாவ காட்டி இதும் பேரு நீத்து, உத்தரப்பிரதேசம். என் கூட இங்கதான் வேல செய்றா. இவள புடிச்சிருக்குது. மத்தத நீங்கதான் வந்து பேசணும்ன்னு சொன்னான்.  என்ன ஏதுன்னு மேற்கொண்டு விசாரிக்கறதுக்குள்ள என் ஊட்டுக்காரி அவன பாத்து கண்டமேனிக்கு பேச ஆரம்பிச்சிட்டா. அவனால அத தாங்கவே முடியலை..."
     சிறிதுநேரம் பேச்சை நிறுத்தி பெருமூச்சுவிட்டார்.
     "ஆறு மாசமா வீட்டுக்குள்ள இதே பேச்சு. அவன் ஊருக்கு வரும்போதுலாம் இந்த பேச்சு வந்துடும். என்ன பதில் சொல்லவே விடமாட்டா. வெறி புடிச்சாப்புல அவளே பேசுவா. அவன நோகடிச்சி திருப்பி அனுப்பிடுவா. பலதரம் சொல்லிப் பாத்தேன். அவ புடிவாதம் அவளவிட்டு போகவே இல்ல.  நல்லவதான். இந்த விஷயத்துல என்னமோ கிறுக்குமாதிரி நடந்துகிட்டா. ஒருநாளு அவன் முன்னாலயே நீ கல்யாணமே செஞ்சிக்காம அப்படியே இருந்தாகூட எனக்குப் பரவாயில்ல. ஒரு வடநாட்டுக்காரிய மருமவளா என்னால ஏத்துக்கவே முடியாதுன்னு கறாரா சொல்லிட்டா...."
     "நீங்க ஒன்னும் சொல்லலையா?"
     "ஒரு பக்கம் பொண்டாட்டி. இன்னொரு பக்கம் புள்ள. நான் யாருக்காகன்னு பேசமுடியும்? மெதுவா ஒருநாளு அம்மா மனசு நோகறாப்புல ஏன்டா பண்றேன்னு தெரியாத்தனமா கேட்டுட்டேன். அத அவனால தாங்கவே முடியலை. அப்பா, நீங்களுமா இப்பிடி பேசறிங்கன்னு நாலஞ்சி தரம் கேட்டான். அதோட அவன் பேச்சு நின்னுடுச்சி. அதுக்கப்புறம் ஊருக்கு வரும்போதெல்லாம் சாப்புடுவான். தூங்குவான். கௌம்பி போயிடுவான்.  பேச்சுவார்த்தயே இல்லாம போயிடுச்சி."
     அவர் உதடுகள் துடித்தன. பேச்சை நிறுத்திவிட்டு சிறிதுநேரம் மரத்தை அண்ணாந்து பார்த்தார்.
"ஒருநாளு காலையில திடீர்னு எனக்கு செல்போன்ல ஒரு எஸ்எம்எஸ் வந்திச்சி. அவன்தான் அனுப்பியிருந்தான். யாருடைய மனஅமைதிக்கும் நான் குறுக்கில் நிற்கவில்லை. நானும் என் அமைதியைத் தேடிப் போகிறேன்னு எழுதியிருந்தான். எனக்கு ஒரே பயம். உடனே அவன கூப்புட்டேன். லைன் கெடைக்கவே இல்ல. அதுக்குள்ள ஸ்விட்ச் ஆப்ஃ செஞ்சிட்டான். ரெண்டு நாளா நாங்க தேடாத எடமே இல்ல. ஆபீஸ்ல யாரோ ஒருத்தருகிட்ட தர்மஸ்தலா போவறதா சொல்லியிருந்தான்போல. அந்த செய்தி கெடைச்சிதான் இங்fக ஓடியாந்தம். ஆனா அவன பொணமாத்தான் பாக்கமுடிஞ்சிது. ஆத்துல உழுந்து தற்கொல பண்ணிகிட்டான். அடயாளம் தெரியாத பொணம்ன்னு கெடங்குல வச்சிருந்தாங்க....." கேட்கும்போதே என் மனம் கனத்தது. எப்படி அவரை ஆறுதல்படுத்துவது என்று தெரியாமல் அவரையே பார்த்தபடி இருந்தேன். விழியோரங்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்தபடி அவர் மெதுவாக நிமிர்ந்தார்.
     "இன்னிக்குத்தான் அவன் இறந்த நாள். இன்னியோட ஆறு வருஷம் ஆவுது. எனக்கு கொள்ளிபோட்டு காரியம் பண்ணவேண்டிய புள்ளைக்கு எல்லாத்தயும் நானே செஞ்சேன். அவன நெனைக்கும்போதுலாம் அப்பா நீங்களுமா இப்பிடி பேசறிங்கன்னு அவன் கேட்ட கேள்விதான் ஞாபகத்துக்கு வந்து நெஞ்ச அடைக்குது. புள்ளைக்கு என் பேருல எவ்வளவு நம்பிக்க இருந்திருக்கணும்.   அத புரிஞ்சிக்காத முட்டாளா இருந்துட்டேன். இப்பவும் என் கனவுல வந்து அதே கேள்விய அடிக்கடி கேக்கறமாதிரி இருக்கும். ஒரு மனஅமைதிக்காகத்தான் அவன் செத்த நாள்ல இங்க வந்து அவன் தன்னையே ஒப்படைச்சகிட்ட இந்த ஆத்த பாத்தபடி உக்காந்திருந்துட்டு எழுந்து போயிடுவேன். அதுல ஒரு ஆறுதல்...."
     எதிர்பாராதவிதமாக இருமல் வந்து அவருடைய பேச்சு தடைபட்டது. நீண்ட இருமல். மூச்சுவிட சிரமப்படுவதுபோல இருந்தது. இருமல் சற்றே தணிந்ததும் பையிலிருந்து ஒரு தெளிப்பானை எடுத்து உதடுகளுக்கிடையே வைத்து மூடி வாய்க்குள் இரண்டு தரம் மருந்தைச் செலுத்திக்கொண்டார். பிறகுதான் அவரால் இயல்பான நிலைக்குத் திரும்பமுடிந்தது.
     "ஆறு நம்ம பாக்குதுன்னு சொன்னிங்களே. அது ஆயிரத்துல ஒரு வார்த்த. என் மனசுல இருந்த எப்பிடிதான் சொன்னிங்களோ தெரியலை. ஆறோட பார்வைய நான் என் மகனுடைய பார்வையா நெனச்சிக்குவேன். அதான் வித்தியாசம்."
     "உங்க மனைவி?..."
     கசப்பான சிரிப்பொன்றை அவர் உதிர்த்தார். "ஆஊன்னு ஊரயே கூட்டறாப்புல கூச்சல் போட்டாலே தவிர சரியான கோழ சார் அவள்.  பையன் செத்துட்டதுமே அந்த குற்ற உணர்ச்சிய அவளால தாங்கமுடியலை சார். ஒரு நாளு நான் ஆபீஸ் போயிருந்த சமயத்துல தூக்குபோட்டு உயிர உட்டுட்டா..."
     அவரோடு சேர்ந்து நானும் ஆற்று வெள்ளத்தையே பார்த்தேன். பொங்கித் தாழும் தண்ணீருக்கடியில் தத்தளிக்கும் இரண்டு விழிகளை என்னால் உருவகித்துக்கொள்ள முடிந்தது. அந்த வேதனை சட்டென என் நெஞ்சையே அடைப்பதுபோல இருந்தது. அந்த பிரமையிலிருந்து என்னை நானே கட்டாயமாகத் துண்டித்துக்கொண்டேன். எதைஎதையோ சொல்லி அந்தப் பெரியவரின் கவனத்தை முடிந்தவரையில் திருப்பி, வற்புறுத்தி அந்த இடத்திலிருந்து அழைத்துக்கொண்டு பேருந்து நிலையத்தைநோக்கி நடந்தேன்.
(’யுகமாயினி’ இதழில் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த கட்டுரை )