Home

Wednesday 10 August 2016

இருட்டின் தடம் - (கட்டுரை)



     என்னைத் தேடிவரும் புதிய நண்பர்களை வீட்டுக்கு அருகே உள்ள ஆதர்ஷா திரையரங்கத்துக்கு வந்துவிடச் சொல்வதுதான் என் வழக்கம். பிறகு, அந்த இடத்துக்குச் சென்று காத்திருந்து, அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வேன்.  இந்த ஏற்பாட்டில் சில நன்மைகள் உண்டு. பேருந்தில் வருகிறவர்கள் அந்தத் திரையரங்கின் அருகில் உள்ள நிறுத்தத்தில் இறங்கிவிடலாம். ஆட்டோ அல்லது சொந்த வாகனத்தில் வருகிறவர்கள் விசாரித்துக் கண்டுபிடிப்பது எளிது. இது முதல் நன்மை. மொழியும் புரியாமல் தெரு அடையாளமும் புரியாமல் திண்டாடுகிற அலைச்சலை முற்றிலும் தவிர்க்கலாம். இது இரண்டாவது நன்மை.

     நான்கு சாலைகள் கூடுகிற சந்திப்பில் இருக்கிறது அந்தத் திரையரங்கம். புதுப்புதுக் கன்னடத் திரைப்படங்களையே அந்தத் திரையரங்கம் வெளியிடுவதால், எந்த நேரத்திலும் கூட்டம்கூட்டமாக நின்றிருப்பார்கள் மக்கள். திரையரங்கத்துக்கு முன்னால் பெரிய தூங்குமூஞ்சி மரம். நிழலடியில் பேரீச்சம்பழம், பப்பாளிப்பழம், கோலிசோடா, தேங்காய்மிட்டாய் விற்கிற தள்ளுவண்டிக்கடைகள். பாதையோரமாக உள்ள நடைதளத்தில் சுடச்சுட வடையும் போண்டாவும் போட்டு விற்கும் கடைகள். திரையரங்கத்துக்கு இடதுபக்கமாக தகரக்கதவு தொங்கும் சாராயக்கடை. பக்கத்திலேயே ஒயின்ஷாப். எந்தக் கடையிலிருந்து யார் வருகிறார்கள் என்று கண்டறியமுடியாதபடி நடமாட்டம் அதிகமிருக்கும்.  
     புதுச்சேரியிலிருந்து வரும் நண்பரொருவருக்காக ஒருநாள் இரவு திரையரங்கத்துக்கு அருகில் காத்திருந்தேன். மணி பதினொன்று. பேருந்திலிருந்து இறங்கி ஆட்டோவில் ஏறிவிட்டதாக நண்பர் கைப்பேசியில் தகவல் அனுப்பியிருந்தார். வழக்கமான பரபரப்பெல்லாம் அடங்கி மதுக்கடைகளின் முன்னால்மட்டுமே நடமாட்டம் இருந்தது. நாலைந்து ஆட்டோக்கள் தள்ளித்தள்ளி இருட்டில் நின்றிருந்தன. வடை விற்கும் கடைக்கருகே இரண்டு பெண்கள் சுவரோரமாக சாய்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். "நான் அடிச்சா தாங்கமாட்ட நாலுநாளு தூங்கமாட்ட" என்னும் வரியையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டு தகரக்கதவைத் திறந்துகொண்டு ஒருவன் வந்தான். சுட்டுவிரலை காற்றில் ஆட்டிஆட்டி எதிரில் நிற்கும் யாரோ ஒருவனை எச்சரிப்பதுபோல அந்த வரியை மீண்டும் சொன்னான். ஒரு பழைய கிழிந்துபோன பெர்முடாஸ் போட்டிருந்தான். தொளதொளவென்று ஒரு முழுக்கைச்சட்டை. ஒரு கையை மட்டும் முழங்கைவரைக்கும் சுருட்டி ஏற்றி மடித்திருந்தான். எதிர்பாராத விதமாக அவனைப் பார்த்து தூங்குமூஞ்சி மரத்தடியில் நின்றிருந்த நாய் குரைத்தது. உடனே சுட்டுவிரலை நாயின்பக்கமாகத் திருப்பி அதே வரியைச் சத்தமாகச் சொன்னான். சொல்லிக்கொண்டே அதன் அருகே சென்று உட்கார்ந்தான். ஒரு கணம் அச்சத்தில் என் உடல் நடுங்கியது. தன் விரலால் அவன் அதைத் தொட்டதுமே ஆச்சரியப்படும் விதத்தில் நாய் அடங்கிப்போனது. வதங்கிய இலையைப்போல தொங்கிய அதன் காதை வருடிக்கொடுத்து, குனிந்து முத்தம் கொடுத்தான். "தொட்டால் பூ மலரும் தொடாமல் நீ மலர்ந்தாய்" என்று திடீரென அவன் உற்சாகமடைந்து பாடினான். கூர்மையான அதன் மூக்கைத் தனதுபக்கமாகத் திருப்பி மாறிமாறி முத்தமிட்டான். தன் பைக்குள் இருந்த பொட்டலத்தைப் பிரித்து, ஒரு வடையை எடுத்து அதற்கு கொஞ்சம்கொஞ்சமாக ஊட்டிவிட்டான். மடியில் கிடத்தி தாலாட்டுப் பாடினான். "அம்மா என்று அழைக்காத உயிரில்லையே".  பாடிப்பாடி களைத்தபிறகு, அப்படியே சுருண்டு நாயைக் கட்டிப்பிடித்தபடி உறங்கிவிட்டான்.
     விசித்திரமான அவன் நடவடிக்கைகளை ஆர்வத்துடன் கவனித்துக்கொண்டிருந்தபோது, இன்னொரு பக்கத்திலிருந்து ஒரு குரல் மேலெழுந்து வந்தது. "இஸ்திரி போடறவன்னா ஒன் கண்ணுக்கு மட்டமா போயிட்டனா சோமாறி? வாடகைக்கு ஊடு குடுடான்னா, என்ன தொழிலு ஏது தொழிலுன்னு கேட்டுட்டுதான் குடுப்பியா நீ? ஏன்டா பொறம்போக்கு, நீயில்லாம் பொறக்கும்போதே நாலு சைட்டு, ஆறு ஊடுன்னு எழுதி வாங்கினு பொறந்தியா?" அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்து நடுத்தெருவைநோக்கி வீசினான். "கூட நூறு ரூபா கேளு, குடுத்துட்டு போறன். அதயெல்லாம் உட்டுட்டு தரமாட்டன் கிரமாட்டன்னு சொன்னா இன்னாடா அர்த்தம் பேமானி. நீ மட்டும்தான் மனுசன். சோத்துல உப்புபோட்டு துன்ற ஆளு. நான்லாம் மிருகம். கெடச்சத துன்னுட்டு போற நாயி. கண்டவனுக்கு பொறந்தவங்க. அதான ஒன் நெனப்பு" பைக்குள் இருந்து ஒரு பீடியைத் தேடியெடுத்து பற்றவைத்து புகையை வானத்தைப் பார்த்து ஊதினான்.  "என்னைக்காவது தனியா மாட்டுவ நீ. வா, ஒனக்கு அப்ப வச்சிக்கறன். அப்படியே குனியவச்சி முதுவுல பட்டய தேச்சி உடறன். மொவனே, காலம்பூரா ஊனமா கெடக்கறாப்பல பண்ணிடுவன் பாத்துக்கோ" தோளில் இருந்த போர்வையை ஒழுங்காகப் பிரித்து நன்றாகப் போர்த்திக்கொண்டான். "எனக்கா ஊடு தரமாட்டன்னு சொன்ன, ஒன் ஊட்ட ஒனக்கே இல்லன்னு ஆக்கிடுவன்டா நாய" சட்டென்று அருகில் காணப்பட்ட கல்லைப் புரட்டி போக்குவரத்தில்லாத நடுத்தெருவில் புரட்டிவிட்டான்.
     முழு சாலையும் தனக்காகவே இருக்கிற எண்ணத்தில் இரண்டு புல்லட்டுகள் பாம்புபோல வளைந்துவளைந்து உறுமிக்கொண்டு சென்றன. ஒவ்வொரு வண்டியிலும் மூன்று பேர்கள் இருந்தார்கள். ஒரே ஆரவாரம். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் நடமாடும் காவல்துறை வாகனம் வேகமாக வந்து நின்றது.  காது மறையும்படி மப்ளர் சுற்றிக்கொண்டு ஸ்வெட்டரணிந்திருந்த ஒரு காவலர் மட்டும் வாகனத்திலிருந்து இறங்கி மதுக்கடைகளுக்குள் சென்று திரும்பினார். திரையரங்க வாசலில் என்னைப் பார்த்துவிட்டு அருகில் வந்து "எதுக்கு சார் இங்க நிக்கறிங்க?" என்று கேட்டார். "ஆட்டோவுல ஒரு கெஸ்ட் வராங்க. அதான் காத்திட்டிருக்கேன்" என்றேன். என் சொற்களை நம்பாதவர்போல "எந்த தெரு நீங்க?" என்று கேட்டார். "பக்கத்துலதான். பத்தொம்பாவது கிராஸ்" என்று சொன்னேன். என்னையே மேலும் கீழும் சில கணங்கள் பார்த்துவிட்டு "எங்க வேல செய்யறிங்க?" என்று யோசனையோடு கேட்டார்.  நான் என் சட்டைப்பையிலிருந்து என் அடையாள அட்டையை எடுத்து "பிஎஸ்என்எல்" என்றபடி நீட்டினேன். அவர் அதை வாங்கவில்லை. குரலைத் தாழ்த்திக்கொண்டு "காலம் ரொம்ப கெட்டுக்கெடக்குது சார். யாரு நல்லவங்க யாரு கெட்டவங்கன்னு ஒன்னும் புரியமாட்டுது. தப்பா நெனைக்காதிங்க.." என்றார். அட்டையை திரும்பவும் என் பைக்குள் வைத்துக்கொண்டேன். "சரிசரி, ரொம்ப நேரம் நிக்காதிங்க சார், சீக்கிரமா வீடு போயி சேருங்க" என்று புத்திமதி சொல்லிவிட்டு போய்விட்டார் அவர்.
     நீல நிறத்தில் கட்டம்போட்ட சட்டைக்காரர் ஒருவரை ஒயின்ஷாப்பிலிருந்து இன்னொருவர் வெளியே அழைத்துவந்து நின்றார். தொணதொணவென்று இடைவிடாமல் பேசிக்கொண்டே இருந்தார் கட்டம்போட்ட சட்டைக்காரர். எதற்கும் பதில் பேசாமல் ம் கொட்டியபடி  ஆட்டோவின் வருகைக்காக சாலையையே பார்த்துக்கொண்டிருந்தார் இன்னொருவர். தொலைவில் ஆட்டோ சத்தம் கேட்டதுமே, கையைக் காட்டி "ஸ்டாப் ஸ்டாப்" என்றார். முகத்தில் வாரியடிக்கும் வெளிச்சத்தில் ஒன்றும் தெரியவில்லை. அருகில் நெருங்கியபிறகுதான் வாகனத்துக்குள் யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது. எதிர்பாராத கணத்தில் கட்டம்போட்ட சட்டைக்காரர் தன் கையிலிருந்த பாட்டிலை சாலையில் வீசி உடைத்துவிட்டு "மனோகரி" என்று சத்தம்போட்டு அழுதார். வேறு எந்த வார்த்தையும் இல்லை. மீண்டும்மீண்டும் "மனோகரி" என்றபடி மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுதார். பக்கத்திலிருந்தவர் தடையையும் மீறி அவர் அழுகை ஓங்கியது. அதில் நிறைந்திருந்த துக்கம் நெஞ்சைக் கலக்கியது. வானத்தை அண்ணாந்து பார்த்து ஓங்கி அழுதார். அந்த நள்ளிரவில் யாருடைய ஆறுதலை எதிர்பார்த்து அவர் அழுகிறார்? அவர் உச்சரிக்கும் பெயருக்கும் ஆழமான அந்த அழுகைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ஏராளமான கேள்விகள் அடுத்தடுத்து ஐயங்களாக வெளிபட்டபடி இருந்தன. ஆனால் எதையுமே யோசிக்க இடம்தராமல் அந்த அழுகை தடுத்தது.  வெகுநேரம் உச்சக்குரலில் எழுந்து திசைகளை அதிரச்செய்த அழுகை மெல்லமெல்ல ஓய்fந்து, தேம்பலாக முடிந்தது. அப்போதும் அவர் வாய் "மனோகரி மனோகரி" என்று முணுமுணுத்தபடி இருந்தது. பல முயற்சிகளுக்குப் பிறகு, ஒரு காலி ஆட்டோ அவர்களுக்கருகே வந்து நின்றது. இங்கதாம்பா ஜோக்பாளையா என்று சொல்லிவிட்டு கட்டம்போட்ட சட்டைக்காரரை முதலில் ஏற்றிவிட்டு, பிறகு இன்னொருவரும் ஏறிக்கொள்ள வண்டி புறப்பட்டுச் சென்றது.
     நண்பர் இன்னும் வந்து சேராதது பதற்றமாக இருந்தது. பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிவிட்டதாக அவர் தொலைபேசியில் தகவல் சொன்னபிறகுதான் நான் வீட்டைவிட்டுக் கிளம்பியிருந்தேன். இந்நேரத்துக்கு வந்திருக்கவேண்டும். ஏன் வரவில்லை என்று குழப்பமாக இருந்தது. கைப்பேசியை எடுத்து அவரை அழைத்தேன். முதலில் இணைப்பு கிடைக்கவே இல்லை. தொடர்பு வளையத்துக்கு வெளியே இருப்பதாக அறிவிப்புமட்டுமே மீண்டும்மீண்டும் வந்தபடி இருந்தது. ஆறேழு முயற்சிகளுக்குப் பிறகு ஒருவழியாக இணைப்பு கிடைத்தது. "திடீர்னு வண்டி பஞ்சராயிடுச்சி. டிரைவரே கழட்டிட்டு சக்கரம் மாத்தறாரு. பல்லவி தியேட்டர் தாண்டியாச்சி. வண்டி ரெடியானதும் கௌம்பிடுவன்" என்றார் அவர்.
     உரையாடலில் என் கவனம் குவிந்திருந்தபோது, ஒல்லியான இரண்டு சிறுவர்கள் மெதுவாக வந்து சுற்றுச்சுவருக்கு அருகில் நிழலில் நின்றார்கள். பரட்டைத்தலைகள். கால்சட்டை கிழிந்து தொங்கியது. சின்னவனை உட்காரவைத்துவிட்டு, பெரியவன்மட்டும் சுவரோரமாகவே நடந்து வந்து, மெதுவாக தகரக்கதவின் இடுக்கில் கண்ணைவைத்து சில கணங்கள் பார்த்தான். பிறகு மெதுவாக விலகிவந்து நிழல்பக்கமாகச் சென்றான். தலையசைத்து என்னமோ சொன்னான். இப்போது சின்னவன் அடிமேல் அடிவைத்து மெதுவாக சென்று தகரக்கதவின் இடுக்கில் குனிந்து பார்த்தான். "ஆமாம் ஆமாம்" என்றபடி பெரியவன்பக்கமாக ஓடினான். பிறகு இருவரும் அங்கேயே அமர்ந்து அடங்கிய குரலில் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டார்கள். சின்னவனுடைய பார்வை அடிக்கடி போண்டாக்கடை பக்கமாக படர்ந்துபடர்ந்து மீண்டது. பிறகு, ஆசையை அடக்கிக்கொள்ள முடியாமல் "ஒரு போண்டாவுக்கு எவ்ளோண்ணா கேப்பாங்க?" என்று கேட்டான். "ரெண்டு ரூபா சொல்லுவாங்க, சும்மா இருடா" என்று அதட்டினான் பெரியவன். மறுநொடியே பரிவோடு அவன் தலையை வருடியபடி "பசிக்குதாடா?" என்று கேட்டான். அவன் பதில் பேசாமல் தலையைமட்டும் அசைத்தான். அம்மா பொட்டுக்கடல சட்டினலாம் அரச்சி வச்சிருக்கும்டா. "ஊட்டுல போயி கஞ்சி குடிச்சிக்கலாம். இன்னம் கொஞ்ச நேரம்..." என்று ஆதரவாகச் சொன்னான் பெரியவன்.
     அந்த நேரத்தில் தகரக்கதவை காலால் உதைத்து சத்தமெழுப்பியபடி நான்கு பேர் வெளியே வந்தார்கள். ஒரே சத்தம். பாட்டு. கோபத்தை அடையாளப்படுத்தும் கெட்ட வார்த்தைகள். சிறுவர்கள் அவசரமாக கம்பத்துக்குப் பின்னால் மறைந்து அவர்களைப் பார்த்தார்கள். சில கணங்களுக்குப் பிறகு, நிம்மதி படர்ந்த முகத்துடன் வெளியே வந்தார்கள். சின்னவன் கவனத்தைத் திருப்புவதற்காக, திரையரங்கத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியைக் காட்டி, படத்தின் பெயரைப் படித்துக் காட்டுமாறு சொன்னான் பெரியவன். மணிகளை ஒன்றுடன் ஒன்று கோர்த்தமாதிரி  காணப்பட்ட கன்னட எழுத்துகளை அவன் ஒவ்வொன்றாக வாசித்தான். "ம, கா,ரு,ம,ள மகாருமள" என்றான். "ம இல்லடா அது, மு. பக்கத்துல சுழி இருக்குதே தெரியலயா? முங்காரு மளெ" என்று திருத்தினான். பிறகு அந்த சுவரொட்டியில் காணப்பட்ட நடிகர், நடிகை, இயக்குநர் பெயர்கள்  எல்லாவற்றையும் படிக்கவைத்துத் திருத்தினான். உற்சாகமாக ஒரு விளையாட்டுபோல சொல்லிக்கொண்டே வந்த சிறுவன், சட்டென ரொம்ப பசிக்குது என்று சொல்லிவிட்டுத் தேம்பினான்.
     பார்த்தும் பார்க்காதபடி அவர்களுடைய உரையாடலைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்த என்னை அந்தக் கெஞ்சும் குரல் என்னமோ செய்தது. அடுத்த நொடி குரல் உடைந்து அழுகை வெளிப்பட்டுவிடும்போல இருந்தது.
     ஒட்டிப்போன கன்னம். காதோரம் சடையாகத் தொங்கும் முடிக்கற்றை. ஒருபக்கம் சட்டைக்காலர் கிழிந்து தொங்கியது. குளிருக்கு அடக்கமாக மார்பின் குறுக்கில் கைகளை மடக்கிக் கட்டிக்கொண்டிருந்தார்கள். சின்னவனுடைய கவனத்தைத் திசைதிருப்புவதற்காக பெரியவன் திரையரங்க வளாகத்துக்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் எண்களைப் பார்த்துச் சொல்லும்படி கேட்டு ஒரு புதிய விளையாட்டைத் தொடங்கினான். என்னால் அங்கே நிற்கமுடியவில்லை. அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னை எதிர்பார்க்கவில்லை. பின்பக்கமாக அடியெடுத்துவைத்து விலகிச் செல்ல அவர்கள் பார்த்தார்கள். கலவரமும் கவலையும் படிந்த அவர்களுடைய முகங்களைப்போல நான் வேறெந்த இடத்திலும் பார்த்ததில்லை.
     "யாருடா நீங்க? "
     அவர்கள் என்னைப் பார்த்த பார்வையில் அச்சம் தெரிந்தது. "பயப்படாதிங்கடா, ஒங்கள ஒன்னும் செய்யமாட்டன், இந்த நேரத்துல இங்க வந்து நிக்கறிங்களேன்னுதான் கேக்கறேன். யாராவது வரணுமா?" அவர்கள் பேசும்வகையில் விளையாட்டாக சிறிதுநேரம் பேசிவிட்டுக் கடைசியாகத்தான் கேட்டேன். அவர்கள் தலையசைத்தார்கள்.
     "யாருடா?"
     "எங்க அப்பா."
     "எங்கேருந்து?"
     அவர்கள் சாராயக்கடையைக் காட்டினார்கள். அந்தப் பதிலை நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.    "உள்ள இருந்தா, போயி அழச்சிட்டும் போங்க. அத உட்டுட்டு இங்க குளிருல எதுக்குடா நிக்கறிங்க? என்றேன்.
     "உள்ள போனா அடிச்சி நொறுக்கிடுவாரு..." பெரியவன் நடுங்கும் குரலில் சொன்னான்.
     "அப்ப நீங்க இங்க வந்து நிக்கறது அவருக்கு எப்பிடித் தெரியும்? "
     "அவருக்குத் தெரியக்கூடாதுன்னுதான் இங்க வந்து நிக்கறம்."
     குழப்பத்தோடு அவர்களைப் பார்த்தேன்.
     "உள்ள போடற சத்தம் ஒங்களுக்குக் கேக்குதா? அப்பா போடற சத்தம்தான். யாரயாவது வம்புக்கு இப்ப இழுக்கணும். வாய் அரிக்குது அவருக்கு. அதுக்குத்தான் இந்த சத்தம். அங்க எவனும் மாட்டலைன்னு வைங்க, கொஞ்ச நேரத்துல வெளிய வந்துருவாரு. வழியில எவன்கிட்டயாவது எதயாவது பேசி, மாட்டி இழுத்துடுவாரு. அப்பறம் வாய்ச்சண்ட. கைச்சண்டன்னு அப்படியே போயிடும். ரெண்டு அடி குடுத்து, நாலு அடி வாங்கிக்குவாரு. போதையில எதுவுமே புரியாது. கீழ சுருண்டு உழுந்துருவாரு. அதுக்கப்புறம் அவர ஊட்டுக்கு கூட்டிகினு போவணுமில்ல, அதுக்குத்தான் இங்க நிக்கறம்?" அவன் சொல்லும் செய்திகள் ஒவ்வொன்றும் அதிர்ச்சியாக இருந்தது.
     "ஏன் அவரே வரமாட்டாரா?" தயக்கத்தோடு அவர்களைக் கேட்டேன்.
     "மூணு மாசத்துக்கு மின்னால கீழ உழுந்து கைய ஒடச்சிகினாரு. ஒரு ஆட்டோக்காரன் ஏத்திட்டு போயிட்டான். ஆஸ்பத்திரில மாவுகட்டுலாம் போட்டு இப்பதான் சரியாச்சி. மறுபடியும் எங்கனா உழுந்து ஒடச்சிகினா கஷ்டமாயிடும்ன்னு அம்மாதான் பின்னாலயே போங்கடான்னு அனுப்பி வச்சிது."
     பசி கவிந்த அவன் கண்களைப் பார்த்தேன். அவன் இடுப்பை இறுகப் பற்றியபடி சின்னவன் நினறிருந்தான். குளிர்காற்று வேகமாக வீசியது.
     "படிக்கறிங்களாடா?" உரையாடல்வழியாக அவர்கள் மனபாரத்தை சற்றே லேசாக்கலாம் என்று தோன்றியது.
     "நான் ரெண்டாவது. அவன் ஒன்னாவது."
     "எந்த ஸ்கூல்?"
     "இங்கதான். மர்பி டவுன்ல. ஊட்டுக்குப் பக்கத்துலயே."
     "சொந்த ஊரு?"
     "திண்டிவனம்."
     "ஒங்க அப்பாவுக்கு என்ன வேலை?"
     "காய்கறி வண்டி தள்ளம்போயி வித்துட்டு வருவாரு."
     "ஒங்க ஸ்கூல்ல லலிதா டீச்சர் தெரியுமா?"
     "சைன்ஸ் டீச்சர்தான. நல்லா தெரியும். பாட்டுலாம் சொல்லித் தருவாங்க."
     "பாட்டு, பள்ளிக்கூட ஆண்டுவிழா, அவர்கள் போய்வந்த லால்பாக் சுற்றுலா" என்று ஒன்றோடொன்றை பின்னி அந்த உரையாடலை வளர்த்துக்கொண்டு போனேன். கடைவாசலைத் திறந்துகொண்டு அவர்களுடைய அப்பா ஆர்ப்பாட்டமான இரைச்சலோடு வெளிப்படும்வரை அந்த உரையாடல் தொடர்ந்தது. பக்கத்துத் தெருவிலிருந்து ஒரு கும்பல் பேசிக்கொண்டே அந்த இடத்தைக் கடந்துசென்றது.  ஒரு டாட்டா சுமோ சீறிக்கொண்டு வேகமாகப் போனது. வாய்ப்புக்குக் காத்திருந்தவனைப்போல அந்த வாகனம் போன திசையைப் பார்த்து சரம்சரமாக கெட்டவார்த்தைகளைச் சொல்லித் திட்டினான் அவன். வாய் ஓயாமல் பேசியபடி, தள்ளாடித்தள்ளாடி நடந்துசென்று போண்டா வாங்கி பொட்டலத்தை பைக்குள் வைத்துக்கொண்டான். அங்கே நின்றிருந்த பெண்களிடம் சண்டைக்குப் போனான். அவனைப் பார்த்து வேகமாக காறித் துப்பிவிட்டு சட்டென்று விலகி வேறுபக்கம் சென்றார்கள் அவர்கள்.
     கட்டுப்பாடில்லாத அந்த அராஜகமான செயல்பாடுகளைக் கண்டு, என்ன செய்வது என்று புரியாமல் தவிப்போடு நின்றேன். எந்த நிமிடமும் அவன் எனது பக்கம் திரும்பி சண்டைக்கு வரக்கூடும் என்கிற அச்சஉணர்வு என்னை நிலைகுலையச் செய்தது. நாமறியாத வேறொரு உலகில் என்னவெல்லாம் நடக்கிறது என்கிற கசப்பு அழுத்தமாகப் படர்ந்தது. இந்த நகரில் எத்தனை பேர்கள் இப்படி இருப்பார்கள்? இந்தப் பாதையை அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள வலிமையான காரணம் ஏதேனும் இருக்கக்கூடுமா? அழிவு என்பது அத்தனை சுவைமிக்க  உணர்வா? முடிவே இல்லாமல் பல கேள்விகள் புரண்டெழுந்து வந்தன. அடுத்து என்ன செய்வது என்றுகூட என்னால் யோசிக்கமுடியவில்லை.
     தம் நிழல்கூட வெளியே தெரியாதபடி நடுங்கிக்கொண்டு கம்பத்துக்குப் பின்னால் மறைந்திருந்த சிறுவர்களைப் பார்த்தேன். கோழிக்குஞ்சுகள்போல உடலொடுங்கி நின்றார்கள். அவர்கள் கண்கள், காற்றில் மிதந்துபோகும் ஒரு காகிதத்தைப்போல தள்ளாடியபடி பாதையைக் கடந்துசெல்லும் தன் தந்தையின்மீதே பதிந்திருந்தன. இனி திரும்பிப் பார்க்க வாய்ப்பில்லை என்னும் அளவிலான தொலைவைக் கடந்தபிறகு, மெதுவாக மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டார்கள். இருட்டின் தடத்திலேயே அடிமேல் அடிவைத்து நடந்தார்கள். அவர்கள் நேரத்தோடு போய்ச் சேரவேண்டுமே என்று வேதனையோடு சொல்லிக்கொண்டேன். பிள்ளைகளைத் தேடிச் செல்லும் அப்பாக்களைப்பற்றிச் சொல்லும் சம்பவங்களைக் கேட்டதுண்டு. அப்பாவைத் தேடி அழைத்துச் செல்லும் பிள்ளைகளின் சித்திரத்தை முதன்முதலாக அன்றுதான் பார்த்தேன். 
     "எப்படி இருக்கிங்க? என்னால ரொம்ப நேரமா காத்திருக்கறமாதிரி ஆயிடுச்சி. சாரி" என்றபடி ஆட்டோவிலிருந்து இறங்கிவந்தார் நண்பர். மறுகணமே "என்னப்பா உங்க ஊருல இந்த குளிரு குளிருது. ஊருக்கே ஏசி போட்டமாதிரி  நடுங்குது. ஒங்களுக்கெல்லாம் பழகிட்டிருக்குமில்லயா?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டுவிட்டுச் சிரித்தார். நானும் ஒப்புக்குச் சிரித்தேன். அதைப் பார்த்ததும் "ஏன் ஒருமாதிரி இருக்கிங்க? என்ன விஷயம்?" என்று திரும்பித்திரும்பிக் கேட்டார். நான் எதுவும் சொல்லாமல் தலையைமட்டும் ஒன்றுமில்லை என்பதற்கு அடையாளமாக அசைத்தேன். அவரோ விடாமல் தோளில் கைவைத்து "ஒங்கள எனக்குத் தெரியாதா? எதுவா இருந்தாலும் சொல்லுங்க?" என்று கேட்டார். நீண்ட பெருமூச்சை விட்டபடி அவரை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தேன். பிறகு "வாங்க, பேசிட்டே போவலாம்" என்று சொன்னபடி அந்தச் சிறுவர்கள் கதையை அவருக்குச் சொல்லத் தொடங்கினேன்.

(’யுகமாயினி’ இதழில் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த கட்டுரை )