Home

Monday, 29 September 2025

கற்றுக்கொள்வதற்கு எல்லையே இல்லை

 

நான் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இறுதித்தேர்வு விடுமுறைக்காகக் காத்திருப்பேன். அந்த விடுமுறையில்தான் தாத்தா வீட்டுக்குச் செல்ல அனுமதி கிடைக்கும். போகும்போது அம்மாவோ அப்பாவோ யாராவது ஒருவர் எனக்குத் துணையாக  வந்து தாத்தா வீட்டில் விட்டுவிட்டுச் சென்று விடுவார்கள். ஒரு வாரமோ, பத்து நாட்களோ கழிந்ததும் தாத்தா என்னைப் பேருந்தில் ஏற்றி அனுப்பிவைப்பார். நானாகவே ஊருக்கு வந்து சேர்ந்துவிடுவேன். 

தாத்தா வீட்டிலிருந்து நடந்துசெல்கிற தொலைவில் ஒரு நூலகம் இருந்தது. அங்கு ஏராளமான புத்தகங்கள் இருந்தன. எங்கள் வளவனூர் நூலகத்தைவிட பெரிய நூலகம். புத்தகங்களை கண்ணாடி அலமாரிகளில் வைத்திருந்தார்கள். நூலகம் திறந்ததில் இருந்து மூடும் வரை அங்கேயே இருந்து படிக்கலாம். அதுதான் நான் தாத்தா வீட்டுக்குச் செல்ல விரும்புவதற்கான முதல் காரணம்.

தாத்தா வீட்டிலிருந்து சிறிது தொலைவில் பூப்பந்து விளையாட்டுக்கான மைதானம் இருந்தது. காலையிலும் மாலையிலும் அங்கே சென்று வேடிக்கை பார்ப்பதும் எல்லைக்கோட்டுக்கு வெளியே செல்லும் பந்துகளை எடுத்து வீசுவதும்  ஆனந்தமாக இருக்கும். விளையாடுபவர்கள் ஓய்வெடுக்கும் நேரங்களில் அவர்களுடைய மட்டையை வாங்கி விளையாடுவது இன்னும் ஆனந்தமாக இருக்கும். நூலகத்துக்குச் செல்வதற்கு முன்பும் நூலகத்திலிருந்து திரும்பிய பிறகும் அந்த விளையாட்டில் ஒவ்வொரு நாளும் இனிமையாகக் கழிந்துவிடும். அது இரண்டாவது காரணம்.

நூலக உதவியாளரின் பெயர் முருகவேள். அவரிடம் பேசிப்பேசி அவர் மனத்தில் இடம் பிடித்துவிட்டேன். ஒவ்வொரு விடுமுறைக்காலத்திலும் நான் அங்கு சென்றுவிடுவதால் என் முகமும் பெயரும் அவருடைய நினைவில் நன்றாகப் பதிந்துவிட்டன. தொடக்கத்திலிருந்தே நான் அவரை அண்ணன் என அழைத்து பழகத் தொடங்கிவிட்டேன். என்னுடைய புத்தக ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, நான் உறுப்பினரல்ல என்றபோதும் விரும்பிய புத்தகத்தை எடுத்துப் படிக்கிற சுதந்திரத்தை எனக்கு அவர் அளித்திருந்தார். பதிலுக்கு நான் அந்த நூலகத்தின் மேசைகளைத் துடைப்பது, குடம் நிறைய புதிய நீர் நிரப்பி எடுத்துவந்து வைப்பது, அடிக்கடி கலைந்துவிடும் செய்தித்தாட்களை அடுக்குவது, சிறிது தொலைவில் இருக்கும் தேநீர்க்கடையிலிருந்து அவருக்கு தேநீர் வாங்கி வந்து கொடுப்பது என சில குற்றேவல்களை நானாகவே விரும்பிச் செய்தேன்.

பத்தாம் வகுப்புக்குரிய இறுதித்தேர்வை முடித்துக்கொண்டு வழக்கம்போல தாத்தா வீட்டுக்குச் சென்றிருந்தேன். சிறிது நேரம் தாத்தா பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தேன். பிறகு நூலகத்துக்குப் புறப்பட்டேன். நூலகத்தின் வாசலையொட்டி இருந்த திண்ணையில் சுவரோடு சாய்ந்தபடி ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார்.  அவருக்கு எதிரில் என் வயதொத்தவர்களாக  நான்கு பேரும் அவர்களைவிட சிறியவர்களாக மூன்று பேரும் அமர்ந்திருந்தனர். பெரியவர் அவர்களுக்கு ஏதோ கற்பித்துக்கொண்டிருந்தார். என்ன மொழியில் பேசுகிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இழுத்து இழுத்து எதையோ மூக்கால் பேசுகிற மாதிரி இருந்தது.  அதுவரையில் அந்த இடத்தில் அப்படி யாரையும் நான் பார்த்ததில்லை. எனவே அது ஒரு புதிய காட்சியாக இருந்தது.

குழப்பத்தோடு மெதுவாக நூலகத்துக்குள் சென்று முருகவேள் அண்ணனைப் பார்த்து வணக்கம் சொன்னேன். என் குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தபடி ”வா.வா. எப்ப வந்த? என்னடா லீவ் தொடங்கியும் ஆளக் காணமேன்னு நினைச்சிகிட்டே இருந்தேன். சரியான நேரத்துக்குத்தான் வந்திருக்க. வா. எப்படி இருக்க? பரீட்சையெல்லாம் நல்லா எழுதியிருக்கியா?” என்று விசாரித்தார். நான் சுருக்கமாக அவருடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு “வாசல்ல யாரோ ஒருத்தர் புதுசா உக்காந்திருக்காரே, யாருண்ணே அவரு?” என்று அடங்கிய குரலில் கேட்டேன். “அவரா, எல்லாம் நமக்கு வேண்டப்பட்டவருதான். அவரைப் பத்தி சொல்றேன். முதல்ல அவருக்கும் எனக்கும் ஒரு டீ வாங்கியாறியா?” என்று பையிலிருந்து சில்லறைகளையும் பிளாஸ்கையும் எடுத்துக் கொடுத்தார். நான் ஒரே ஓட்டமாக ஓடி டீ நிரப்பப்பட்ட பிளாஸ்க்கோடு திரும்பி வந்தேன்.

திண்ணையில் தூணுக்கு அருகிலேயே இரண்டு தம்ளர்களோடு நின்றிருந்தார் முருகவேள் அண்ணன்.  பிளாஸ்கை வாங்கி இரண்டு தம்ளர்களிலும் டீயை நிரப்பினார். ஒரு தம்ளரை அவரே எடுத்துச் சென்று அந்தப் பெரியவரிடம் கொடுத்தார். நான் அந்தப் பெரியவர் முகத்தையும் எதிரில் அமர்ந்திருந்தவர்கள் முகங்களையும் அவர்கள் பிரித்துவைத்திருந்த புத்தகங்களையும் மாறி மாறிப் பார்த்தேன்.

டீயை அருந்தியபடியே ”யாரு பையன் புதுசா இருக்கான்?” என்று கேட்ட பெரியவரின் கேள்வி என் காதிலும் விழுந்ததால் நான் அவரைப் பார்த்தேன்.  அதே நேரத்தில் பெரியவரும் திரும்பி என்னைப் பார்த்தார்.

“வளவனூரு பையன். இங்க தோப்புக்குப் பின்னால அவுங்க தாத்தா வீடு இருக்குது. ஒவ்வொரு லீவுக்கும் இங்க வந்துடுவான். புஸ்தகப்பைத்தியம். உள்ள வச்சி பூட்டிகிட்டு போனாலும் கூட அவனுக்குத் தெரியாது. படிச்சிகிட்டே இருப்பான்”

“படிப்புங்கறது ஒரு ருசி முருகவேள். அந்த ருசி புடிச்சிடுச்சின்னா விடவே விடாது. கருவாட்டுக்குழம்புல ருசி கண்டவனுக்கு தெனமும் அதை ஊத்தினாதான் சோறு உள்ள எறங்கும். படிப்பு ருசியும் அப்படித்தான். தேடித்தேடி ருசிக்க வச்சிடும்”

பேசிக்கொண்டே இருவரும் டீயை மிடறுமிடறாக அருந்தி முடித்தனர். நான் அந்தத் தம்ளர்களை எடுத்துச் சென்று கழுவி உள்ளே தண்ணீர்க்குடம் ஓரமாகக் கவிழ்த்துவைத்துவிட்டுத் திரும்பினேன்.

“எந்த க்ளாஸ் படிக்கிற?” என்று என்னிடம் கேட்டார் பெரியவர்.

“பத்து முடிச்சாச்சி. பதினொன்னுக்குப் போவப் போறேன்”

“தமிழ், இங்க்லீஷ்லாம் நல்லா தெரியுமா?”

“ம்”

“நான் பிரெஞ்ச் சொல்லிக் குடுக்கறேன். கத்துக்கறியா?”

அந்தக் கேள்விக்கு என்னால் உடனடியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. நான் அவர் முகத்தையே பார்த்தபடி நின்றேன்.

“தமிழ்நாட்டுலதான படிக்கறோம், நமக்கு எதுக்கு பிரெஞ்ச்னு யோசிக்கறியா?” என்று கேட்டுவிட்டு சிரித்தார்.

நான் அந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் நின்றிருந்தேன்.

“பிரெஞ்ச்காரங்கதான் பிரெஞ்ச் கத்துக்கணும்னு ஒன்னும் அவசியமில்லை. இங்க்லீஷ் மாதிரி அதுவும் ஒரு மொழி. யார் வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் கத்துக்கலாம். கத்துக்கறதுக்கு எல்லையே கிடையாது. புரியுதா?”

நான் வெறுமனே “ம்” என்று சொன்னபடி தலையசைத்தேன்.

“இப்ப உனக்குத் தமிழ் தெரியறதால தமிழ் புஸ்தகம்லாம் எடுத்துப் படிக்கற.  இல்லையா? அது மாதிரி பிரெஞ்ச் தெரிஞ்சா பிரெஞ்ச்ல இருக்கற கதை புஸ்தங்கள எடுத்துப் படிக்கலாம். அம்பது புஸ்தகம் படிக்கிற ஆளு நூறு புஸ்தகம் படிக்கலாம்ங்கறது நமக்கு நல்ல விஷயம்தான?”

அவர் சொன்ன விதத்தில் எதைச் சொன்னாலும் எனக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருந்தது. ஆயினும் எந்தப் பதிலும் சொல்லாமல் அவர் முன்னாலேயே நின்றிருந்தேன்.  அதை அவர் எப்படி புரிந்துகொண்டாரோ தெரியவில்லை, கடைசியாக “ஒரு வாரம் பத்து நாள்னு லீவுக்கு வந்திருக்கிற பையன் நீ. உனக்கு எதுக்கு இதெல்லாம். சரி போ” என்று என்னை அனுப்பிவைத்தார்.

நான் நூலகத்துக்குள் சென்று முருகவேள் அண்ணன் அமர்ந்திருந்த நாற்காலிக்கு எதிரில் உட்கார்ந்தேன். “யாருண்ணே அவரு? எதுக்கு பிரெஞ்ச் கத்துக் குடுக்கறாரு?” என்று மெதுவாகக் கேட்டேன்.

“அவர் அந்தக் காலத்துல ஸ்கூல்ல வாத்தியாரா இருந்தவரு. அவருடைய புள்ளைங்கள்லாம் பிரான்ஸ்ல இருக்காங்க. இங்கயே இருக்கணும்ங்கற ஆசையினால இவரு மட்டும் பாண்டிச்சேரியிலயே இருக்காரு. சில பிள்ளைகளுக்கு பிரெஞ்ச் படிக்க ஆசையா இருக்கும். ஆனா வழி இருக்காது. அந்த மாதிரியான ஏழைப் பிள்ளைங்களுக்கு இப்படி லீவு நாள்ல ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம் சொல்லிக் கொடுப்பாரு. உனக்கு விருப்பமிருந்தா நீயும் கத்துக்கலாம்”

“பிரெஞ்ச் சொல்லிக் குடுத்து எல்லாரையும் பிரான்ஸ்க்கு அனுப்பி வச்சிடுவாரா?”

“பிரெஞ்ச் கத்துக்கறதுக்கும் பிரான்ஸ் போவறதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதை முதல்ல புரிஞ்சிக்கோ”

முருகவேள் அண்ணன் எனக்குப் பதில் சொல்லிக்கொண்டே எதிர்ப்புறத்தில் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த காந்தியடிகளின் புகைப்படத்தை நிமிர்ந்து பார்த்தார்.

“நம்ம காந்தி குஜராத்காரர். வக்கீல் படிப்புக்கு படிச்சவரு. லண்டனுக்குப் போய் படிச்சாரு. ஆப்பிரிக்காவுல வேலை செஞ்சாரு. அவருக்கு ஒரு வாய்ப்பு வந்தபோது தமிழ் கூட கத்துகிட்டாரு தெரியுமா?. தமிழ்ல திருக்குறள் படிக்கிற அளவுக்கு அவருக்குத் தமிழைத் தெரிஞ்சி வச்சிகிட்டாரு. நமக்கு எதுக்கு தமிழ், நாம என்ன தமிழ்நாட்டுக்குப் போயா வாழப் போறோம்னு நெனச்சிருந்தா, தமிழைப் படிச்சிருக்கமுடியுமா?”

முருகவேள் அண்ணன் சொல்லச்சொல்ல, சத்தியசோதனையில் அவர் தமிழ் கற்றுக்கொண்ட சூழல் குறித்த பகுதி என் நினைவில் நிழலாடியது.

“கத்துக்கறதுக்கு எல்லையே கிடையாது. இந்த உலகத்துல இருக்கற எல்லாத்தையும் கத்துக்கலாம். பொய், சூது, திருட்டு மூனு விஷயங்கள்தான் ஒரு மனுஷன் கத்துக்கக்கூடாத விஷயங்கள்”

”அந்தப் பசங்க எல்லாரும் ஏழைங்க. டியூஷனுக்குப் போய் பணம் கொடுத்து பிரெஞ்ச் கத்துக்கமுடியாதவங்க. ஆனா கத்துக்கணும்ங்கற ஆசை இருக்குது. பெரியவருக்கு மத்தவங்களுக்குப் பயன்படற மாதிரி எதையாவது செய்யணும்னு ஒரு எண்ணம் இருக்குது. ஒருநாள் நம்ம நூலகத்துல பேப்பர் பார்க்க வந்தாரு. எழுந்து போவறதுக்கு முன்னால எங்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தாரு. அப்பதான் இந்த விஷயத்தைச் சொன்னாரு. தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி நான்தான் ஒரு ரெண்டு பசங்கள தயார் செஞ்சேன். இப்ப எட்டு பசங்க படிக்கறானுங்க.”

முருகவேள் அண்ணன் விரிவாகச் சொன்னதைக் கேட்டதும் எனக்கும் பிரெஞ்ச் மொழியைக் கற்றுக்கொள்ள ஆசை பிறந்தது. “நானும் போய் உக்காந்து கத்துகிடட்டுமாண்ணே” என்று கூச்சத்தோடு அவரிடம் கேட்டேன். உடனே அவர் முகம் மலர்ந்தது. மேசை மீது வைத்திருந்த ஒரு வெள்ளைத்தாளையும் பேனாவையும் எடுத்துக்கொடுத்து “போ. இப்பவே போய் உக்காந்து கத்துக்கோ” என்றார்.

அந்தத் தாளையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு பெரியவருக்கு அருகில் மீண்டும் சென்றேன். “என்னப்பா?” என்ற கேள்வியோடு என்னைப் பார்த்தார். “எனக்கும் சொல்லிக் கொடுங்க, நானும் கத்துக்கறேன்” என்றேன்.

“வா.வா. இப்படி வந்து உக்காரு”

நான் அவருக்கு அருகில் சென்று உட்கார்ந்தேன்.

“நீ வச்சிருக்கிற தாள்ல ஏபிசிடி இருபத்தாறு எழுத்துகளையும் வரிசையா நல்லா இடைவெளி விட்டு எழுது.

ஒருசில நிமிடங்களிலேயே நான் எழுதிமுடித்துவிட்டு அந்தத் தாளை அவரிடம் நீட்டினேன். அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு “கையெழுத்து நல்லா முத்துமுத்தா அழகா இருக்குது” என்று பாராட்டினார். தாளில் எழுதப்பட்ட சில எழுத்துகளின் பிரெஞ்ச் வடிவங்களை பக்கத்திலேயே குறிப்பிட்டார். தொடர்ந்து “இங்க்லீஷ்லயும் பிரெஞ்ச்லயும் அடிப்படை எழுத்துகள் ஒன்னுதான். சின்னச்சின்ன வளைவுகள்தான் வித்தியாசம். உச்சரிக்கிற முறையில மாற்றம் இருக்கும். அந்த நுணுக்கத்தை நாம புரிஞ்சிகிட்டா, பிரெஞ்ச் சுலபமாயிடும். அதுக்கப்புறம் நேரா படிக்க ஆரம்பிச்சிடலாம்” என்றார். பிறகு உற்சாகமுடன் “நான் ஒரொரு எழுத்தா நிறுத்தி நிறுத்தி படிக்கறேன். ஒவ்வொன்னயும்  எப்படி உச்சரிக்கறேன்னு நல்லா கவனிச்சி கேட்டுக்கோ. அப்புறம் நீ தனியா படிக்கப்படிக்க தானா வந்துடும்” என்றார்.

ஏ எழுத்தின் மீது விரல்வைத்து ஆ என்றார். பி எழுத்தின் மீது விரல்வைத்து பே என்றார். அவர் சொல்லச்சொல்ல நான் அவரைப்போலவே நான் சொல்லிப் பழகினேன். ஒரு பத்துமுறை படித்த பிறகு எல்லா எழுத்துகளும் என் மனத்தில் பதிந்துவிட்டன.

அந்த ஆண்டின் விடுமுறைக்காலத்தில் நூலக வாசிப்போடு மொழிப்பயிற்சியும் சேர்ந்துகொண்டது. பத்து நாள் பயிற்சியின் விளைவாக இரண்டெழுத்துச் சொற்களையும் மூன்றெழுத்துச் சொற்களையும் சொந்தமாகப் படிக்கும் அளவுக்கு பிரெஞ்ச் மொழியில் தேர்ச்சியடைந்தேன். அடுத்தநாள் ஊருக்குப் புறப்படவேண்டும் என்று தீர்மானித்ததும் அந்தப் பெரியவரிடமும் முருகவேள் அண்ணனிடமும் விடைபெற்றுக்கொண்டேன்.

ஊருக்குத் திரும்பிய சில நாட்களிலேயே பதினொன்றாம் வகுப்பு தொடங்கிவிட்டது. பள்ளியிறுதி வகுப்பு என்பதால் படிக்கவேண்டிய பாடங்கள் ஏராளமாக இருந்தன. ஒவ்வொரு வாரமும் ஒரு தேர்வு இருந்தது. அந்த நெருக்கடியில் கூட பல சமயங்களில் சுவரொட்டிகளிலும் செய்தித்தாட்களிலும் தென்படும் ஆங்கில எழுத்துகளை பிரெஞ்ச் எழுத்துகளாக கற்பனை செய்துகொண்டு பிரெஞ்ச் படிக்கிறமாதிரி படித்தேன். கொஞ்சகாலம் வரைக்கும் அது ஒரு பைத்தியமாக இருந்தது. அப்புறம் எல்லாம் தானாகவே மறைந்தது. பிரெஞ்ச்சுக்குப் பதிலாக என் நினைவுப்பரப்பில் அல்ஜீப்ரா சமன்பாடுகளும் ஜியோமிதி சூத்திரங்களும் ஆக்கிரமிக்கத் தொடங்கின.

ஒரு சனிக்கிழமை அன்று கடன் கொடுத்திருந்த கணக்கு நோட்டை வாங்கிவருவதற்காக என் நண்பன் அன்பழகனுடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். என்னைப் பார்த்ததுமே அவன் நோட்டை எடுத்துவந்து கொடுத்துவிட்டான்.

”போஸ்ட் ஆபீஸ்க்குப் போறேன். வரியாடா?” என்று கேட்டான் அன்பழகன்.

“படிக்கணும்டா. வேலை இருக்குது” என்றேன்.

”நேத்து எங்க மாமா கூட விழுப்புரத்துக்குப் போய் பட்டிக்காட்டு பொன்னையா பார்த்துட்டு வந்தேன். என் கூட வந்தா உனக்கு நான் அந்தக் கதையை சொல்வேன்” என்று ஆசை காட்டினான். என்னால் அந்த ஆசைக்கு இணாங்காமல் இருக்கமுடியவில்லை. என்னை அறியாமலேயே நான் அவனோடு சேர்ந்து நடக்கத் தொடங்கிவிட்டேன்.  அங்கங்கே நின்று நின்று கதை கேட்டபடி நடந்ததால் நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் நாங்கள் போஸ்ட் ஆபீஸ்க்குச் சென்றோம்.

”நீ இங்கயே நில்லு. நான் உள்ள போய்ட்டு உடனே வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு அன்பழகன் போஸ்ட் ஆபீஸ்க்குள் சென்றுவிட்டான்.  அந்த ஆபீஸ் வாசலில் வெயிலாக இருந்ததால், போஸ்ட் ஆபீஸ்க்கு எதிரில் இருந்த திண்ணையின் பக்கமாகச் சென்றேன் நான்.

பெரிய திண்ணை. சில  தபால்காரர்கள் ஒரு பக்கமாக உட்கார்ந்து அன்று கொடுக்கவேண்டிய தபால்களையெல்லாம் கொட்டி தெருவரிசைப்படி அடுக்கி கட்டுபோட்டு பைக்குள் வைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து விலகி ஒரு சுவரோரமாக ஒரு பெரியவர் உட்கார்ந்து குனிந்த தலை நிமிராமல் எழுதிக்கொண்டிருந்தார். அவருக்கு எதிரில் ஒரு ஆயா உட்கார்ந்து எதையோ சொல்லிச்சொல்லி அழுதுகொண்டிருந்தார்.

முதலில் அந்தக் காட்சி எனக்குப் புரியவில்லை. தனக்கு முன்னால் உட்கார்ந்து அழுகிற ஒருவருக்கு ஆறுதல் சொல்லாமல் குனிந்த தலை நிமிராமல் யாரோ எழுதிக்கொண்டிருக்கிறாரே என்றுதான் எனக்குத் தோன்றியது. பிறகுதான் அந்தப் பெரியவர் அந்த ஆயா சொன்ன விஷயத்தையெல்லாம் யாருக்கோ கடிதமாக எழுதிக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன்.

எழுதி முடித்த கடிதத்தை ”எழுதனதை ஒருமுறை படிச்சிக் காட்டறேன். கேளுங்க ஆயா” என்று சொல்லிவிட்டு மெதுவாக ஒவ்வொரு சொல்லாகப் படித்தார் பெரியவர். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ஆயா தலையசைத்தபடி பெருமூச்சு விட்டார். பெரியவர் அக்கடிதத்தை மடித்து தன்னிடமிருந்த பசையை எடுத்துத் தடவி ஒட்டி ”இந்தாங்க ஆயா, உங்க கையாலயே போட்டுட்டு போங்க” என்று அவரிடம் ஒப்படைத்தார்.

ஆயா எழுந்து நகர்ந்ததும் ஒரு தாத்தா அந்த இடத்தில் உட்கார்ந்தார்.

“என்ன பெரியவரே, என்ன எழுதணும்? லெட்டர குடுங்க” என்று கேட்டார்.

“கடுதாசி இல்லை. என் கணக்குலேர்ந்து கொஞ்சம் பணம் எடுக்கணும்” என்று சொல்லிக்கொண்டே கையோடு சுருட்டி வைத்திருந்த தன் மஞ்சள் பையிலிருந்து பாஸ்புக்கை எடுத்து நீட்டினார் தாத்தா.

“கணக்குல பணம் இருக்குதா?” என்று தனக்குத்தானே பேசியபடியே பெரியவர் அந்தக் கணக்குப்புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தார். பிறகு “எவ்ளோ எடுக்கணும் தாத்தா?” என்று கேட்டார். “ஒரு எரநூறு ரூபா வேணும். பூச்சி மருந்து வாங்கணும்” என்றார் தாத்தா.

பெரியவர் எழுந்து தபால் நிலையத்துக்குள் சென்று பணம் எடுப்பதற்குரிய படிவத்தை வாங்கிக்கொண்டு திரும்பிவந்து உட்கார்ந்தார். ”எரநூறுதான சொன்னீங்க” என்று மீண்டுமொரு முறை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார். அதுவரை வலது கையிலிருந்த பேனாவை சட்டென இடது கைக்கு மாற்றி அதே வேகத்தில் அந்தப் படிவத்தை எழுதி முடித்தார். “இந்த இடத்துல கையெழுத்து போடுங்க” என்று ஒரு புள்ளி வைத்து தாத்தா பக்கம் படிவத்தைத் திருப்பினார். பெரியவரிடமிருந்து பேனாவை வாங்கி ஒரு ஒரு எழுத்தாக தன் பெயரை கொட்டை எழுத்தில் எழுதினார் தாத்தா. அவர் கையெழுத்து போட்டு முடித்ததும் “உள்ள போய் கொடுங்க” என்றபடி கணக்குப்புத்தகத்தையும் அந்தப் படிவத்தையும் தாத்தாவிடம் கொடுத்து அனுப்பிவைத்தார் பெரியவர்.

“உன்ன எங்கல்லாம் தேடறன் தெரியுமா?” என்றபடி பின்னால் வந்து முதுகைத் தொட்டான் அன்பழகன். நான் “இங்கதான்டா வேடிக்கை பார்த்துட்டிருந்தேன்” என்று சொன்னதும் அவனும் ஆர்வத்தோடு எனக்குப் பக்கத்தில் நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். பள்ளிக்கூடப் பிள்ளைகள் வரிசையாக நிற்பதுபோல நிறைய பேர் அங்கு நின்றிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருந்தது. சிலருக்கு கடிதம் எழுதவேண்டும். சிலருக்கு பணம் எடுக்க வேண்டும். இன்னும் சிலருக்கு பணம் அனுப்ப வேண்டும். அவர்கள் கேட்பதையெல்லாம் எந்த முகச்சுளிப்பும் இல்லாமல் அந்தப் பெரியவர் செய்தார். எழுதுவதற்கு அவர் வலது கையையும் இடது கையையும் மாறிமாறிப் பயன்படுத்திய விதம்தான் எனக்கு பார்க்கப்பார்க்க விந்தையாக இருந்தது.

“யாருடா இவரு? நம்ம தெருவா?” என்று அன்பழகனிடம் ரகசியமாகக் கேட்டேன்.

“நம்ம தெரு இல்லை. சுப்பிரமணியர் தெருவுல இருக்கறாரு. நம்ம ரங்கநாதன் சார் இருக்கற தெரு”

“நான் இவர இங்க பார்த்ததே இல்லைடா. இன்னைக்குத்தான் பார்க்கறேன்”

”நான் ரொம்ப நாளா பார்க்கறேன். காலையில வந்தார்ன்னா, மதிய சாப்பாட்டு நேரம் வரைக்கும் இங்க உக்காந்து எல்லாருக்கும் உதவி செய்வாரு. தங்கமானவரு. பில்லூரு பக்கம் வாத்தியாரா இருந்தாராம். அவரு பேரு கோவிந்தசாமி. ரிட்டயரான பிறகு இங்க ஊரோடு வந்துட்டாரு”

அன்பழகனுக்கு அவரைப்பற்றி எனக்குத் தெரியாத பல செய்திகள் தெரிந்திருந்தன. அவன் சொல்வதையெல்லாம் நான் ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு அங்கிருந்து புறப்பட மனமே இல்லை. அவர் கைமாற்றி எழுதுவது எனக்கு பெரிய சாகசமாகத் தெரிந்தது. “இன்னும் கொஞ்ச நேரம்டா, இன்னும் கொஞ்சம் நேரம்டா” என்று கெஞ்சிக்கெஞ்சி நண்பகல் வரைக்கும் அங்கேயே நின்றிருக்க வைத்துவிட்டேன்.

அவரைச் சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் போன பிறகு தலையை மேலும் கீழும் ஒரு முறை உயர்த்தித் தாழ்த்தினார். பிறகு விரல்களை உதறி சொடக்கு எடுத்துக்கொண்டார். பட் பட் என்று முரியும் சத்தம் கேட்டது. அப்போதுதான் அவர் எங்களைக் கவனித்தார்.

”என்னடா பசங்களா, என்ன பார்க்கறீங்க?”

எங்களைப் பார்த்து அவர் பேச்சுக் கொடுத்த கணமே நான் அவரைப் பார்த்து சிரித்தபடி “நீங்க எப்படி ரெண்டு கையாலயும் மாத்தி மாத்தி அழகா எழுதறீங்க?” என்று கேட்டேன்.

“எல்லாமே பழகிப் பழகி கத்துகிட்டதுதான்டா. இப்ப நீச்சல் பழகற மாதிரி, சைக்கிள் ஓட்ட பழகற மாதிரிதான் எல்லாம். எழுதி எழுதிப் பழகினா தானா எல்லாம் வந்துடும்”

“நீங்க எதுக்காக அப்படி கத்துகிட்டீங்க?”

அவர் உடனே என்னைப் பார்த்துச் சிரித்தார். “நானே ஒரு வாத்தியாரு. நீ என்கிட்டயே வாத்தியாரு மாதிரி கேள்வி கேக்கறியா?” என்று சொல்லிக்கொண்டே தலையை அசைத்துக்கொண்டார்.

“இப்ப நெனச்சா சிரிப்பா இருக்குது. எல்லாம் ஒரு கிறுக்குத்தனத்தால கத்துகிட்டதுதான். இன்னைக்கு இத்தனை பேருக்கு உதவி செய்யறதுக்கு, அந்தப் பழக்கம்தான் காரணம்”

நான் அமைதியாக அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அதைக் கவனித்துவிட்டு அவராகவே தொடர்ந்து சொன்னார்.

“என் கூட நடேசன்னு ஒருத்தர் வாத்தியாரா இருந்தாரு. ஒருநாள் ஸ்கூல்ல லஞ்ச் டைம்ல அவர் ஒரு பேப்பர்ல இடது கையால எழுதறதுக்குப் பழகிட்டிருந்தாரு. என்ன விஷயம்னு நான் அவர்கிட்ட கேட்டேன். ஒரு பத்திரிகையில காந்திக்கு ரெண்டு கையாலயும் எழுதற பழக்கம் இருந்திச்சின்னு படிச்சேன். எனக்கும் அப்படி ரெண்டு கையாலயும் எழுதணும்ங்கற ஆசையில ஒரு ஒரு எழுத்தா எழுதி எழுதி கத்துகிட்டிருக்கேன்னு சொன்னாரு. அவர் சொன்னதைக் கேட்டு எனக்கும் அதைக் கத்துக்கணும்னு ஆசை வந்துட்டுது. இந்த உலகத்துல இருக்கற எல்லா நல்ல விஷயங்களையும் கத்துக்கலாம்னு நெனைக்கற ஆளு நானு. அப்பவே ஒரு தாளையெடுத்து இடது கையால ஆனா ஆவன்னா எழுத ஆரம்பிச்சிட்டேன். அடுத்து மூனே மாசத்துல வலது கை எழுத்துக்கும் இடது கை எழுத்துக்கும் எந்த வித்தியாசமும் தெரியாத அளவுக்கு என் கையெழுத்து அமைஞ்சிட்டுது. அன்னைக்கு அது விளையாட்டு மாதிரி இருந்தது. இன்னைக்கு இத்தனை வருஷம் கழிச்சி இத்தனை பேருக்கு  பிரயோஜனமா இருக்குது”

அதைக் கேட்கக்கேட்க எனக்கு உற்சாகமாக இருந்தது. ”நானும் கத்துக்கிடலாமா சார்? எனக்கு வருமா?” என்று ஒரு வேகத்தில் கேட்டேன்.

“ஆர்வத்தோடு பயிற்சி செய்றவங்க எல்லாருக்கும் வரும்”

எனக்குப் பதில் சொல்லிக்கொண்டே திண்ணையிலிருந்து கீழே இறங்கினார் அவர். எங்கள் இருவருடைய பெயர்களையும் படிப்பு விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். “சரி, நேரத்தோடு வீட்டுக்குப் போய் சாப்புடுங்க” என்று சொன்னபடி பக்கத்தில் நிழலில் நிறுத்தியிருந்த சைக்கிளில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார்.

அன்று மாலையில் விளக்கு ஏற்றியதும் கோவிந்தசாமி சார் சொன்ன சொற்கள்தான் நினைவுக்கு வந்தன. அன்று படித்து முடிக்கவேண்டிய பாடங்களையெல்லாம் படித்த பிறகு இடது கையால் பேனாவைப் பிடித்து முதன்முதலாக ஆனா ஆவன்னா எழுதத் தொடங்கினேன். முதலில் தடுமாற்றமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு எழுத்தும் எந்தவொரு வடிவத்திலும் அடங்காததாக உருவெடுத்தது. ஏறத்தாழ ஒரு மாதப் பயிற்சிக்குப் பிறகுதான் என் இடதுகை  உயிரெழுத்துகளையும் மெய்யெழுத்துகளையும் ஏற்றுக்கொண்டது. பள்ளி இறுதித்தேர்வு நெருங்கியதால்  என் பயிற்சியைத் தொடரமுடியவில்லை.  நிறுத்திவைத்திருந்தேன். தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியதும் மீண்டும் தொடங்கி வெற்றிகரமாக எழுத ஆரம்பித்தேன்.

வழக்கம்போல அந்த ஆண்டு விடுமுறையிலும் தாத்தா வீட்டுக்குச் சென்றேன். அப்போது அப்பா, அம்மா யாரும் எனக்குத் துணையாக வரவில்லை. நானாகவே பேருந்து பிடித்து தாத்தா வீட்டுக்குச் சென்றுவிட்டேன். வழக்கம்போல சிறிது நேரம் தாத்தா பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு ஆவலோடு நூலகத்துக்குச் சென்றேன்.

படியேறும் போதே நூலகத்தின் திண்ணை வெறுமையாக இருப்பதைப் பார்த்ததும் சற்றே ஏமாற்றமுற்றேன். நான் ஆவலோடு எதிர்பார்த்திருந்த பிரெஞ்ச் சொல்லிக்கொடுக்கும் பெரியவர் அங்கு இல்லை. மாணவர்களும் இல்லை.

வருகைப்பதிவேட்டில் பெயரை எழுதி கையெழுத்து போட்டுவிட்டு நூலகத்துக்குள் வேகமாகச் சென்றேன். கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே செல்லும்போதே என்னை முருகவேள் அண்ணன் பார்த்துவிட்டார். ”வா தம்பி, வா? எப்படி இருக்க? எக்சாம்லாம் எப்படி எழுதியிருக்க? எவ்ளோ பர்செண்ட் வரும்?’ என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றார். அவருக்கு எதிரில் சென்று உட்கார்ந்துகொண்டு அவர் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னேன். அதைத் தொடர்ந்து “ப்ரெஞ்ச் சொல்லிக்கொடுக்கிற தாத்தா எங்க போனாருண்ணே? திண்ணையில ஒருத்தரையும் காணோம்” என்று கேட்டேன்.

“அது ஒரு பெரிய கதை. ஒரு மூனு மாசத்துக்கு முன்னால திடீர்னு அவருடைய மனைவி ஹார்ட் அட்டாக்ல செத்துப்போயிட்டாங்க. பிரான்ஸ்லேர்ந்து அவருடைய ரெண்டு பசங்களும் வந்துதான் அடக்கம் செஞ்சாங்க. அப்பாவை தனியா விட்டுட்டு போக அவுங்களுக்கு மனசில்லை. அதனால போவும்போது அவரையும் அழைச்சிகிட்டு போயிட்டாங்க”

முருகவேள் அண்ணன் சொன்னதைக் கேட்டதும் எனக்கு வருத்தமாக இருந்தது. அவர் வழியாக நான் கற்ற ஈரெழுத்து பிரெஞ்ச் சொற்களும் மூன்றெழுத்துச் சொற்களும் என் நினைவில் சுழன்றன. என் காதருகில் அவர் குரல் கேட்டது. கத்துக்கறதுக்கு எல்லையே இல்லை என்று பேச்சுவாக்கில் அவர் சொன்ன சொல் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. அவர் சொல்லிக் கொடுத்ததை ஒரு தொடக்கமாகக் கொண்டு பிரெஞ்ச் மொழியைக் கற்றுக்கொள்வதுதான் அவருக்கு நாம் செலுத்தக்கூடிய அஞ்சலியாக இருக்கும் என நினைத்துக்கொண்டேன்.

“ஊருக்குப் புறப்படறதுக்கு முன்னால சொல்லிட்டு போவறதுக்காக ஒரு தரம் இங்க வந்தாரு. இங்க படிச்ச பசங்களுக்கெல்லாம் நோட்டு புஸ்தகம்னு ப்ரசன்ட் பண்ணாரு. எனக்கு விருப்பமில்லை முருகவேள், பிள்ளைங்க விருப்பத்துக்காகத்தான் போறேன்னு சொன்னாரு. அதுதான் சரியான முடிவு, குழப்பிக்காம போய்வாங்கன்னு அனுப்பி வச்சேன்”

முருகவேள் அண்ணன் அன்றைய நிகழ்ச்சியைத் தன் சொற்களாலேயே ஒருமுறை விரிவாக விவரித்தார். “சரிங்கண்ணே, நான் அந்தப் பக்கமா வெளிச்சத்துல உக்கார்ந்து படிக்கறேன்” என்றபடி அவருடைய மேசையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஜன்னலோர நாற்காலியின் பக்கம் சென்றேன்.

தாத்தா வீட்டில் பத்து நாட்கள் இருந்தேன். பத்து நாட்களில் பத்து புத்தகங்கள் படித்தேன். “காலேஜ்ல சேர்ந்ததும் பழக்கவழக்கத்தை மாத்திக்கக் கூடாது புரியுதா? ஸ்கூல்ல படிச்ச மாதிரியே படிச்சி ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் செய்யணும்” என்று சொல்லி தோளைத் தொட்டு தட்டிக்கொடுத்து அனுப்பினார் முருகவேள்.

விழுப்புரம் அரசு கல்லூரியில்தான் புகுமுக வகுப்பைப் படித்துமுடித்தேன். பிறகு புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்வதற்காக மீண்டும் தாத்தா வீட்டுக்கு வந்தேன். தாத்தா வீட்டுக்கு அருகிலேயே இருந்த நூலகம் காணாமல் போய்விட்டது. வருகையாளர்களின் எண்ணிக்கையை ஒரு காரணமாகக் காட்டி அந்த நூலகத்தை வேறு ஏதோ ஒரு பகுதிக்கு இடம் மாற்றிவிட்டார்கள். “நீங்க ஆசைப்பட்ட மாதிரி ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் செஞ்சிட்டேண்ணே” என்று சொல்லி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள முருகவேள் அண்ணன் இல்லை. என்னால் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

பட்டப்படிப்புக்கான மூன்றாண்டு காலத்தில் கிடைத்த ஓய்வுப் பொழுதுகளில் ஓவியம் தீட்டக் கற்றுக்கொண்டேன். இந்தி மொழியைக் கற்றுக்கொண்டேன். யோகப்பயிற்சியில் ஈடுபட்டேன். கல்லூரி நூலகத்திலும் ரோமண்ட் நூலகத்திலும் புத்தகங்களைத் தேடித்தேடிப் படித்தேன். ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போது கத்துக்கறதுக்கு எல்லையே கிடையாது என்று பிரெஞ்ச் ஆசிரியர் சொன்ன வாசகம் ஒலித்து, என்னை மேன்மேலும் ஊக்கம் கொண்டவனாக மாற்றியது.

பட்டப்படிப்பு முடித்ததுமே ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துவிடலாம் என நினைத்த என் கனவு உடனடியாக நிறைவேறவில்லை. அதற்கு இன்னும் ஓராண்டு காலம் காத்திருக்கவேண்டியிருந்தது. அஞ்சல்துறையில் எழுத்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மைசூரில் மூன்று மாதப் பயிற்சி. அது முடிவடையும் தருணத்தில் விழுப்புரத்தில் ஒரு கிளை அலுவலகத்தில் சேருமாறு உத்தரவுக்கடிதம் வந்தது.

அது அஞ்சல் பட்டுவாடா இல்லாத சின்ன அலுவலகம். ஒரு போஸ்ட் மாஸ்டர். ஒரு க்ளார்க். ஒரு ஸ்டாம்ப் வெண்டர். ஓர் உதவியாளர். நான்கு பேர் மட்டுமே கொண்ட அலுவலகம்.

போஸ்ட் மாஸ்டர் அடிப்படையில் நல்ல மனிதர். ஆனால் யாரையும் அவர் நம்பமாட்டார். எல்லோரையும் சந்தேகக்கண் கொண்டு மட்டுமே அவரால் பார்க்க இயலும். அந்தக் குணமே அவரை அடிக்கடி அமைதியிழக்க வைத்துவிடும். அதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் என் அப்பாவைவிட வயதில் மூத்தவர். இன்னும் இரண்டு மூன்றாண்டுகளில் ஓய்வு பெறவேண்டிய கட்டத்தில் இருந்தார். அந்த வயது வித்தியாசத்தின் காரணமாக அவருடைய இரைச்சலை நான் சகித்துக்கொள்ளப் பழகியிருந்தேன்.

அந்த அலுவலகத்துக்கு எதிரில் நெல் மற்றும் தானியங்களின் கொள்முதல் நிலையம் இருந்தது. ஏறத்தாழ ஐநூறு அறுநூறு பேர் அங்கு வேலை செய்தனர். அங்கிருந்து சிறிது தொலைவில் பெரிய காய்கறி மார்க்கெட் இருந்தது. அங்கும் ஏறத்தாழ முன்னூறு நானூறு பேர் வேலை செய்துவந்தனர். அவர்கள் வசிக்கும் குடியிருப்புகள் எல்லாமே அக்கம்பக்கத்தில்தான் இருந்தன. அந்தத் தொழிலாளர்களின் சேமிப்புக்கணக்குகள் அனைத்தும் எங்கள் அலுவலகத்தில் இருந்தன.

அந்தத் தொழிலாளர்களில் முக்கால்வாசிப் பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். பணம் எடுக்கவும், போடவும், அனுப்பவும் அவர்கள் அனைவரும் எங்கள் அஞ்சல்நிலையத்துக்குத்தான் வந்தாகவேண்டும். கையில் படிவத்தை வைத்துக்கொண்டு அவர்கள் தடுமாறுவார்கள். கூடத்தில் வேறு வேலையாக வரும் யாராவது ஒருவரிடம் கெஞ்சிக்கேட்டு எழுதி வாங்குவார்கள். “நீங்களே கொஞ்சம் எழுதிக் கொடுங்க சார்” என்று சிலர் போஸ்ட் மாஸ்டரிடமே கேட்பார்கள். அவர்களிடம் எரிந்துவிழுவார் அவர். “நாங்க யாருமே எழுதக் கூடாதும்மா. எல்லாமே எங்க கையெழுத்தா இருந்தா எங்க மேலதான் சந்தேகப்படுவாங்க. போங்க போங்க. எங்கயாவது யார்கிட்டயாவது கொடுத்து எழுதிகிட்டு வாங்க” என்று பேசி அனுப்புவதிலேயே தீவிரமாக இருப்பார். அவர்களுக்கு உதவி செய்ய என் கை துடிக்கும். “நீ இன்னும் சின்னப் பையன். துடுக்குத்தனமா ஏதாவது செஞ்சி வைக்காத” என்று என்னைத் தடுத்துவிடுவார் அவர்.

தொடக்கத்தில் அவர் சொல்வதில் உள்ள நியாயம் புரிந்ததால் அமைதியாக இருந்தேன். போகப்போக,  இப்படி வராத ஆபத்தையெல்லாம் நினைத்து நடுங்கிக்கொண்டே இருந்தால் வாழ்க்கையில் யாருக்குமே நாம் உதவி செய்யமுடியாமல் போய்விடும் என்று தோன்றத் தொடங்கியது. முதல் இரண்டு மாத காலம் இப்படி குழப்பத்திலேயே மூழ்கியிருந்தேன்.

ஒருநாள் ஒரு தாத்தா அஞ்சல் நிலையத்துக்குள் வந்தார். அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் யாராவது வருகிறார்களா என நீண்ட நேரம் பார்த்தார்.  சில நிமிடங்களுக்குப் பிறகு என் முன்னால் ஜன்னலருகில் தயங்கித்தயங்கி வந்தார்.  ”என்ன வேணும் தாத்தா?” என்று நான் கேட்டேன்.

“தம்பி, ஒரு ஐநூறு ரூபா வேணும். நீயே எழுதிக்கிட்டு குடு தம்பி” என்று சொன்னபடி ஒரு வெற்றுப் படிவத்தையும் கணக்குப்புத்தகத்தையும் கொடுத்தார்.

அவருடைய கையறு நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நான் அவருடைய கணக்குப்புத்தகத்தை வாங்கித் திறந்து பார்த்தேன். ஆயிரத்துக்கும் மேல் வரவு வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு உதவிசெய்யவேண்டும் என என் மனம் நினைத்தது. ”கையெழுத்து போடுவீங்களா தாத்தா?” என்று கேட்டேன். “போடுவேன் தம்பி” என்று தலையசைத்தார் தாத்தா.

அந்தப் புத்தகத்தை என் பக்கமாகப் பிரித்துவைத்துக்கொண்டு படிவத்தை எடுத்தேன். அதுவரை அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த போஸ்ட் மாஸ்டர் அக்கணமே பதற்றத்தோடு “என்ன செய்யப்போற, என்ன செய்யப்போற?’ என்று கேட்டார். “பாவம் சார். நமக்கே தெரியுதில்ல, அவருக்கு எழுதிக் கொடுக்க இங்க யாருமில்லை. இந்த மாதிரி நேரத்துலகூடவா சார் ரூல்ஸ் பார்க்கணும்” என்று தாழ்ந்த குரலில் சொல்லிக்கொண்டே பேனாவைத் திறந்தேன்.

“உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். உனக்குப் புரியலையா? ஃபார்ம்லயும் உன் கையெழுத்து, பாஸ்புக்லயும் உன் கையெழுத்துன்னா பார்க்கறவங்களுக்கு சந்தேகம் வராதா? நீயா ஏன் ஆபத்த இழுத்து விட்டுக்கற? பின்விளைவு என்னன்னு தெரியாம எதையும் செய்யவேணாம்”

என்னைத் தடுப்பதிலேயே அவர் குறியாக இருந்தார். எனக்கும் குழப்பமாகத்தான் இருந்தது. ஆயினும்  ஆழ்மனத்தில் எங்கோ அந்தத் தாத்தாவுக்கு உதவி செய்யவேண்டும் போல இருந்தது. ஏதோ ஒரு சாயலில் அவர் என் தாத்தாவின் தோற்றத்தைக் கொண்டிருந்தார்.  என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் பேனா முனையையும் அவர் கண்களையும் சில கணங்கள் நான் மாறிமாறிப் பார்த்தேன்.

“ரெண்டு இடத்துலயும் ஒரே கையெழுத்தா இருந்தா சிக்கலாயிடும்கறதுதான உங்க எண்ணம்?”

“ஆமா. கடவுளே, இப்பவாச்சிம் உனக்குப் புரிஞ்சதே”

“கையெழுத்து மாறியிருந்தா?”

“அது எப்படி மாறும்? ஒரே ஆளு எழுதினா அங்கயும் இங்கயும் ஒரே கையெழுத்தாதான இருக்கும்?”

எதிர்பாராதபடி அக்கணத்தில் என் மனம் இரண்டு கையாலும் மாறிமாறி படிவங்களை எழுதிக் கொடுத்த கோவிந்தசாமி சாரை நினைத்துக்கொண்டது. அக்கணம் என் பிரச்சினைக்கு ஒரு தீர்வை உணர்த்திவிட்டதாகத் தோன்றியது.

“மாறும் சார். பார்த்துட்டே இருங்க சார்” என்றபடி திறந்த பேனாவை இடதுகைக்கு மாற்றினேன். பணம் கோரும் படிவத்தில் தாத்தாவின் பெயரையும் கணக்கு எண்ணையும் விவரத்தையும் எழுதினேன். என் இடதுகை எழுத்து வேகம் போஸ்ட் மாஸ்டரை வாயடைக்க வைத்துவிட்டது.  நம்பமுடியாதவராக என் முகத்தையே பார்த்தபடி இருந்தார். படிவத்தை நிரப்பி தாத்தாவிடம் நீட்டி கையெழுத்து வாங்கினேன்.  அதே வேகத்தில் நிலையத்தின் பேரேட்டில் உள்ள தாத்தாவின் கையெழுத்தோடு ஒப்பிட்டு சரிபார்த்தேன். பேனாவை வலதுகைக்கு மாற்றி அந்தப் படிவத்தில் பிற விவரங்களை எழுதி முடித்து கணக்குப்புத்தகத்தையும் பேரேட்டையும் போஸ்ட்மாஸ்டரின் முன்னால் வைத்தேன். அதை அவர் எதிர்பார்க்கவில்லை. வேறு வழியில்லாமல் பணத்தை எடுத்துக் கொடுத்தார். நான் அந்தப் பணத்தையும் கணக்குப் புத்தகத்தையும் வாங்கி தாத்தாவிடம் கொடுத்து அனுப்பினேன். அவர் கையெடுத்துக் கும்பிட்டபடி “வரேங்க தம்பி” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அவர் புறப்பட்டுச் சென்றதற்குச் சில கணங்களுக்குப் பிறகுதான் போஸ்ட்மாஸ்டருக்கு பேச்சே வந்தது. “இதெல்லாம் நல்லதுக்கில்லை பார்த்துக்க. நாளைக்கு இதே ஜனங்க என் பணத்தை வேற யாரோ கையெழுத்து போட்டு எடுத்துகிட்டாங்கன்னு புகார் கொடுத்தா என்ன செய்வ? நம்ம பாதுகாப்பை நாமதான் பார்த்துக்கணும். நாளைக்கு நமக்கு உதவி செய்ய இந்த உலகத்துல ஒருத்தனும் வரமாட்டான்” என்று இயல்பான குரலில் சொன்னார்.

“எல்லா நேரத்துலயும் எல்லாரையும் சந்தேகப்பட்டுகிட்டே இருந்தா, நம்ம வாழ்க்கையில யாருக்குமே உதவி செய்யமுடியாது சார்” என்று நானும் புன்னகைத்தபடி இயல்பான குரலில் சொன்னேன்.

“அது சரி, என்னமோ காலம்காலமா பழகினமாதிரி எப்படி ரெண்டு கையாலயும் சர்வசாதாரணமா எழுதற?’ என்று ஆச்சரியத்தோடு கேட்டார்.

”நெனச்சா எதைவேணும்னாலும் கத்துக்கலாம் சார். கத்துக்கறதுக்கு எல்லையே கிடையாது” என்றேன்.

“பொல்லாத ஆளுய்யா நீ” என்று போஸ்ட் மாஸ்டர் சிரித்தார்.

 

(சொல்வனம் – இணைய இதழ் 14.09.2025)