Home

Monday, 29 September 2025

பொறியற்ற விலங்குகள்

 

பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி நடைபெற்றுவந்த காலத்தில் நிர்வாக வசதிக்காக தமிழகம் எழுபத்திரண்டு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றில் தெலுங்குப் பாளையங்கள் ஐம்பத்தாறு. தமிழ்ப்பாளையங்கள் பதினாறு. பதினாறு தமிழ்ப்பாளையங்களுக்கும் தலைமையிடமாக நெற்கட்டான் செவ்வயல் பாளையம் திகழ்ந்தது. 

அதே சமயத்தில் பாளையங்களில் வரி வசூல் செய்யும் உரிமை தமக்கே இருப்பதாக ஹைதராபாத் நிஜாமும் ஆற்காடு நவாபும் உரிமை கொண்டாடினர். அப்போது நாடெங்கும் சிற்றரசர்களிடம் நட்புக்கரம் நீட்டுவதுபோல நடித்து ஆட்சி உரிமையைப் பறித்துக்கொள்வதைப் பழக்கமாகக் கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவம் ஆற்காட்டு நவாபுக்கு உதவி செய்ய முன்வந்தது.

நவாபின் ராணுவமும் கம்பெனியின் ராணுவமும் இணைந்து நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தை நோக்கிப் படையெடுத்துச் சென்றது. இரவு நேரமாகிவிட்டதால் பாளையத்துக்கு வெளியே தென்மலை என்னும் பகுதியில் அவர்கள் முகாமிட்டிருந்தனர். இராணுவத்தினரின் வருகையையும் அவர்கள் தங்கியிருக்கும் இடம் பற்றிய தகவலையும் அறிந்த நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தைச் சேர்ந்த வீரன் பகடை என்னும் படைத்தலைவன் இரவு நேரத்தில் தன்னந்தனியாகச் சென்று இராணுவத்தினர் நிறுத்தியிருந்த பீரங்கிகளை அவர்களுடைய முகாமின் பக்கமாகத் திருப்பி நிறுத்தினார். பிறகு முகாமின் எச்சரிக்கை முரசை அறைந்து ஓசையை எழுப்பிவிட்டு அங்கிருந்து ரகசியமாகத் தப்பித்து வந்துவிட்டார்.

முரசொலி கேட்டு எழுந்த  வீரர்கள் இருளில் பார்வை தெரியாமல் பதற்றத்தில் ஓடிவந்து பீரங்கிகளை இயக்க, குண்டுகள் அவர்களுடைய முகாமின் மீது பாய்ந்து அவர்களுடைய வீரர்களின் உயிரைப் பலிவாங்கின. அவமானத்தில் திகைத்த படை வந்தவழியாகவே திரும்பிச் சென்றது.

எதிரிகளின் பாசறைக்குள் தன்னந்தனியாகச் சென்று வெற்றியைத் தேடிக் கொடுத்ததால் அன்றுமுதல் வீரன் பகடை ஒண்டிவீரன் பகடை என்று மக்களால் அழைக்கப்பட்டார். ஒண்டி என்னும் தெலுங்குச் சொல்லுக்கு தனியாக, ஒற்றையாளாக என்பது பொருள்.

ஒண்டிவீரன் பற்றிய தகவல்கல் கும்மி, சிந்து, வில்லுப்பாட்டு போன்ற நாட்டுப்புறப்பாடல்கள் வழியாகவே வழிவழியாக அறியப்பட்டு நிலைபெற்றது. ஒண்டிவீரனின் முன்னோர்களான அருந்ததியர்கள் ஒரு காலத்தில் நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தில் நிலவுடைமையாளர்களாக இருந்தவர்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் வாசுதேவநல்லூருக்கு அருகில் நல்ல விளைச்சலை உடைய செழிப்பான பூமி நெற்கட்டான் செவ்வயல் பாளையம்.

தொடக்கத்தில் அருந்ததியர் ஜமீனாகவே அந்த இடம் இருந்திருக்கிறது. ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த பெத்தவீரன் – வீரம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் வீரன். வாள் வீச்சு, வளரி வீச்சு, குதிரை சவாரி, சிலம்பம் என எல்லாக் கலைகளையும் கற்றுத் தேர்ச்சி பெற்று பெயருக்கேற்ற வகையில் உண்மையாகவே வீரனாக வளர்ந்தார். அதே ஜமீனில் திசைக்காவல் புரிந்துவந்த சித்திரபுத்திரத் தேவரின் மகனான காத்தப்பன் என்கிற பூலித்தேவன், வீரனுக்கு நெருக்கமான நண்பராக இருந்தார். ஜமீன் முறை பாளையமாக மாற்றம் பெற்ற சமயத்தில் இருளப்பப் பிள்ளை என்பவரின் சூழ்ச்சியால் பாளையத்தின் ஆட்சிப் பொறுப்பு பூலித்தேவனிடமும் படைத்தலைமைப் பொறுப்பு வீரனிடமுமாக மாறிவிட்டன.  

நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தை வீழ்த்துவதற்கு கிழக்கிந்திய கம்பெனி மூன்றுமுறை முயற்சி செய்தும் அவர்களால் வெற்றி பெறமுடியவில்லை. வீரனின் வீரத்தின் விளைவாக அவர்கள் ஒவ்வொரு முறையும் தோற்றுத் திரும்பினர். பாளையத்திடமிருந்து வரி பெற முடியாததால் சீற்றம் கொண்டிருந்த கம்பெனி அரசு மருதநாயகம் என்கிற யூசுப்கான் தலைமையில் ஒரு படையை அனுப்பியது. அவர் பாளையத்துக்கு நேரிடையாக வராமல் கங்கைகொண்டானுக்கு அருகில் தங்கினார். நேரிடையாக அவர்கள் நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தைத் தாக்காமல் அருகிலிருந்த ஊத்துமலை, கரண்டை ஆகிய பாளையங்களையெல்லாம் தாக்கி ஒவ்வொன்றாகக் கைப்பற்றினார். எனினும் சில மாத இடைவெளியில் அவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தி அப்பாளையங்களை மீட்டெடுத்தார் வீரன். இதனால் கோபம் கொண்ட யூசுப்கானுக்கும் வீரனுக்கும் இடையில் கடும்போர் மூண்டது. இறுதியில் யூசுப்கான் தோல்வியைத் தழுவி தப்பித்துச் செல்லவேண்டியதாயிற்று.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு டொனால்ட் காம்பெல் என்னும் தளபதியின் தலைமையில் கம்பெனியாரின் படை மீண்டும் நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தைத் தாக்கியது. இரு வாரங்களாக போர் ஓய்வின்றி நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில் ஒண்டிவீரன் களத்தில் இருக்க பூலித்தேவன் அங்கிருந்து தப்பித்துச் சென்றார். அவரைப் பிடிக்கத் துரத்திச் சென்ற கம்பெனியார் படை ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது. ஒண்டிவீரன் கம்பெனி படையினரை விரட்டியடித்தார்.

பாளையத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒண்டிவீரன் பாளையத்தையும் பூலித்தேவன் குடும்பத்தாரையும் பாதுகாத்துவந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படையெடுத்துவந்த கம்பெனியாருக்கும் ஒண்டிவீரனுக்கும் இடையில் தென்மலை என்னும் இடத்தில் போர் நிகழ்ந்தது. அப்போரில் வீரன் பகடை வீரமரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அப்பகுதி ஆங்கிலேயர் வசமானது. அந்த மண்ணின் மக்களான அருந்ததியினர் பெருமளவில் போர்க்களத்தில் உயிரிழந்ததால் சிறுபான்மையினராகவும் நிலமற்றவர்களாகவும் மாறி பிழைப்பைத் தேடி பிற ஊர்களுக்குச் சென்று குடியேறி வாழத் தொடங்கினர்.

கதைப்பாடல்கள் வழியாகவும் செவிவழிச்செய்திகள் வழியாகவும் ஒண்டிவீரனைப்பற்றி நமக்குக் கிடைக்கும் தகவல்களே இவை. இக்குறிப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு ‘சுதந்திர வேங்கை ஒண்டிவீரன் பகடை’ என்னும் தலைப்பில் துரை.அறிவழகன் ஒரு நாவலை எழுதியிருக்கிறார்.  அன்னம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ஓங்கிய குரலில் பாட்டிசைத்துக் கதைகூறும் வில்லிசைக்கலைஞரைப்போல ஒவ்வொரு அத்தியாயத்தையும் வெவ்வேறு பின்னணியில் வெவ்வேறு குரலமைப்பில் ஏற்ற இறக்கங்களோடு எடுத்துரைத்தபடி செல்கிறார் அறிவழகன். ஒரு நாட்டார் கலைஞருக்கே உரிய மன எழுச்சியையும் வேகத்தையும் அந்த அத்தியாயங்களில் பார்க்கமுடிகிறது.

வீரன் குழந்தையாக வளர்வது பற்றி ஒரு அத்தியாயம், அவர் வேட்டை பயில்வது பற்றி ஒரு அத்தியாயம், விவசாயம் பற்றி ஒரு அத்தியாயம், பஞ்சம் ஏற்பட்டு மக்கள் குடும்பம்குடும்பமாக வெளியேறுவது பற்றி ஒரு அத்தியாயம் என ஒவ்வொன்றும் தனித்தனி தகவல்களோடும் தனி கதைகளாகவே வாசித்து மகிழும் அமைப்போடும் எழுதப்பட்டுள்ளன.

நாவலில் ஓர் அத்தியாயத்தில் உழவுவேலை பார்க்கும் தாயொருத்தி, வேலைகளுக்கு இடையில் ஓடோடிவந்து குழந்தையைப் பாலருந்த வைத்து மரக்கிளையில் தொங்கும் ஏணையில் கிடத்தி தாலாட்டு பாடி உறங்கவைக்கும் காட்சியொன்றை எழுதியிருக்கிறார் அறிவழகன்.

 

காத்தடியா மூலையில கண்ணே உனக்கு

கண் நிறைஞ்ச தொட்டி கட்டி

நீ உறங்கும் தொட்டிலுக்கு

எத்தனை பேர் காவலாளி

 

வெயிலடியா மூலையில கண்ணே உனக்கு

வெள்ளை நிறத் தொட்டி கட்டி

நீ உறங்கும் தொட்டிலுக்கு

எத்தனை பேர் காவலாளி

 

நித்திரையோ நித்திரையோ கண்ணே உனக்கு

சித்திரைப்பூ மெத்தையோ

நீ உறங்கும் தொட்டிலுக்கு

எத்தனை பேர் காவலாளி

 

     இதுதான் அந்தத் தாய் பாடும் தாலாட்டுப் பாடல். அந்த வரிகளைப் படித்துமுடித்ததும் மற்ற வரிகளைப்போல உடனடியாகக் கடந்து செல்லமுடியவில்லை. அந்தக் காட்சியைக் கண்முன்னால் விரித்தெடுத்து அசைபோட வைக்கிறது.

நாவலின் தொடக்கத்தில் நண்பர்களான வீரனும் காத்தமுத்துவும் (பூலித்தேவனின் இயற்பெயர்) ஒரு முழுநிலவு நாளன்று காட்டுக்குள் வேட்டையாடச் செல்வது தொடர்பான ஓர் அத்தியாயம் இடம்பெற்றிருக்கிறது. வீரன் வளைஎறி என்னும் ஆயுதத்தை வைத்திருக்கிறான். அது தண்ணீரின் மீது சீவிச் சென்று தாக்கும் ஆயுதம். அதைக் கொண்டு நின்ற இடத்திலிருந்தே ஒரு விலங்கைத் தாக்கிவிடமுடியும். காத்தப்பனிடமும் பொன்திகிரி என்னும் ஆயுதம் இருக்கிறது. அது காற்றைக் கிழித்துச் சென்று விலங்குகளைத் தாக்கி வீழ்த்தும் ஆற்றலைக் கொண்டது.

இரு சிறுவர்களும் காட்டுக்குள் பேசிக்கொண்டே செல்கிறார்கள். அப்போது வானத்தில் நாரைக்கூட்டமொன்று பறந்து செல்கிறது. வீரன் தன் வளைஎறியை வீசி கூட்டத்தில் முதலாவதாகப் பறந்து செல்லும் நாரையை வீழ்த்துகிறான். சிறிது நேரத்தில் ஒரு முயல்கூட்டத்தை அவர்கள் பார்க்கிறார்கள். காத்தப்பன் தன் பொன்திகிரியை எறிந்து ஒரு முயலை வீழ்த்துகிறான்.

இப்படி இவ்விருவரும் தன் ஆயுதங்களை எறிந்து வீழ்த்திய பறவைகளையும் முயல்களையும் மான்களையும் பிற சிறுவர்கள் சுமந்துகொண்டு ஊருக்குத் திரும்புகிறார்கள். நாவலின் இறுதி அத்தியாயங்களில் நிகழவிருக்கும் போர்களின் முன்னோட்டமாக இக்காட்சி அமைந்துவிட்டது. பறவைகளையோ, விலங்குகளையோ அல்ல, அப்போரில் அவர்கள் உண்மையிலேயே மனிதர்களை வீழ்த்துகிறார்கள். வெற்றி பெறுகிறார்கள். எதிரிகளின் வலிமை பெருகியிருந்த ஒரு கரிய தருணத்தில் அவர்களே பலியாகிவிடுகிறார்கள். சிறுவர்களின் விலங்கு வேட்டைக் காட்சியை ரசித்துப் படிப்பதுபோல யுத்தக்காட்சியைப் படிக்கமுடிவதில்லை. மரணங்கள் நெஞ்சைக் கனக்கவைக்கின்றன. அதிகாரம் மோதலுக்கு வழிவகுக்கிறது. மோதல் அனைவரையும் மரணத்தை நோக்கித் தள்ளிவிடுகிறது.

ஒண்டிவீரனின் வீரத்தையும் உற்சாகத்தையும் துள்ளலான நடையில் விவரித்திருக்கும் அறிவழகன் அவருடைய மரணத்தைப்பற்றி நாவலில் குறிப்பிடவில்லை. பூலித்தேவர் தலைமறைவானதற்குப் பிறகு சிதறிச் சென்ற மக்களை மீண்டுமொரு பாளையமாகத் திரட்டும் ஒண்டிவீரன் அதை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதோடு நாவல் நிறைவடைகிறது.

சுதந்திர உணர்வின் அடையாளமாக வாழ்ந்தவன் ஒண்டிவீரன் பகடை. அவனுடைய வீரம் அவனுக்குக் கவசமாக இருந்தது. நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தைப்போல அன்றிருந்த எழுபத்திரண்டு பாளையங்களும் சுதந்திர உணர்வோடு இருந்திருந்தால் ஒண்டிவீரன் பகடை போன்ற வீரர்கள் இன்னும் கூடுதலான காலம் நம்மிடையில் வாழ்ந்திருப்பார்கள். நம் தாயகமும் சுதந்திரமாக இருந்திருக்கும். கெடுவாய்ப்பாக, நமக்கு அத்தகு சூழல் அமையவில்லை.

பாரதியாரின் ‘நெஞ்சு பொறுக்குதிலையே’ பாடலின் இறுதி வரியாக இடம்பெற்றிருக்கும் ‘புண்ணிய நாட்டினிலே இவர் பொறியற்ற விலங்குகள் போலவாழ்வார்’ என்னும் வரி மிகமுக்கியமானது. கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்தைப் போன்ற அவ்வரியை ஒருபோதும் மறக்கமுடியாது. அன்றைய காலகட்டத்து மனிதர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள இந்த ஒரு வரி போதும். அதற்கும் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய தலைமுறை இதே விதமாகவோ அல்லது இதைவிட மோசமாகவோதான் வாழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஒண்டிவீரன் போன்ற வீரர்களின் மறைவுக்கு ஆங்கிலேயரின் படைபலம் ஒரு முக்கியமான காரணம் என்பதெல்லாம் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானம் மட்டுமே. உண்மையான காரணம், பொறியற்ற விலங்குகளென வாழும் மக்களின் மனநிலையே.

 

(சுதந்திர வேங்கை ஒண்டிவீரன் பகடை. துரை.அறிவழகன். அன்னம் பதிப்பகம். மனை எண் 1. நிர்மலா நகர், தஞ்சாவூர் -7.விலை. ரூ.150)

 

(புக் டே – இணைய இதழ் 23.09.2025)