Home

Monday, 29 September 2025

கன்னடத்தில் எழுதிய இந்திய நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பாவுக்கு அஞ்சலி

  

தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் ‘ஆதான் பிரதான்’ என்னும் திட்டத்தின் கீழ் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட நாவல்களில் தலைசிறந்ததாக விளங்கிய செவ்வியல் நாவல்களை பிற மொழிகளில் மொழிபெயர்த்து நூல்களாக வெளியிட்டது. அவ்வகையில் பத்துக்கும் மேற்பட்ட பிறமொழி நாவல்கள் தமிழில் வெளிவந்தன. 1987இல் எச்.வி.சுப்பிரமணியன் என்பவரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ என்னும் நாவலும் அவற்றில் ஒன்று. அதன் மூல ஆசிரியர் கன்னட மொழியின் தலைசிறந்த எழுத்தாளரான எஸ்.எல்.பைரப்பா. தமிழ்ச்சூழலில் அவருடைய அறிமுகம் அப்போதுதான் தொடங்கியது.

அந்த நாவலில் இடம்பெற்றிருக்கும் கதைமாந்தர்கள் மிகமிக எளியவர்கள். ஆனால் சிக்கலான மனப்போக்கை உடையவர்கள். எல்லாம் எனக்குத் தெரியும் என்கிற மனப்போக்கு கொண்டவர்கள் சிலர். ஒரு வேலையையும் செய்யாமல் வேளாவேளைக்கு சாப்பாடு தன்னைத் தேடி வரவேண்டும் என்கிற மனப்போக்கு கொண்டவர்கள் சிலர். எப்போதும் பிறரை ஏமாற்றியும் வஞ்சித்தும் பிழைக்கிற மனப்போக்கு கொண்டவர்கள் சிலர்.

இப்படிப்பட்டவர்களே தாயாகவும் பிள்ளைகளாகவும் உறவினர்களாகவும் ஒரே குடும்பத்தில் நிறைந்திருக்கிற சூழலைத்தான் தன் நாவலில் காட்சிப்படுத்தியிருக்கிறார் பைரப்பா. அவர்களைத் தம் அன்பாலும் கருணையாலும் கண்டிப்பாலும் நேர்ப்படுத்தி வாழ்க்கையில் முன்னேறலாம் என்கிற மனப்போக்குடன் மருமகளாக வருகிறாள் ஒருத்தி.

இருபதாண்டுகளுக்கும் மேலாக அவள் முன்னெடுக்கும் எல்லா முயற்சிகளும்  இறுதியில் தோல்வியில் முடிவடைகின்றன. கடைசிக்கட்டமாக நாட்டையே நிலைகுலைய வைத்த பிளேக் நோய்க்கு அந்தக் கிராமம் நிலைகுலையும்போது அக்குடும்பமும் சிதைந்துவிடுகிறது.  திருமண வயதுவரை பாடுபட்டு வளர்த்த பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டு கையறு நிலையில் நிற்கிறாள் மருமகள்.

 அந்த நாவலின் முதல் காட்சியை ஒரு படிமமாகத் தோன்றும் வகையில் சித்தரித்திருக்கிறார் பைரப்பா. அக்காட்சியில் தன் வீட்டுக்கூரையின் மீது ஏறி ஒவ்வொரு ஓடாகப் பிடுங்கி வீசியெறிந்து விளையாடுகிறார்கள்   அக்குடும்பத்தின் பிள்ளைகள். அதைப் பார்க்கும் அவர்களுடைய விதவைத்தாய் கண்டிப்பதற்கு மாறாக “உங்க கை அழுகிப் போக. உங்க வீடு பாழாய்ப் போக. உங்க குடும்பம் குட்டிச்சுவராப் போக” என்று சபிக்கிறாள். வாயைத் திறந்தாலே சாபமொழியைத் தவிர வேறு எதையும் பேசத் தெரியாத அளவுக்குப் பண்பாடற்றவளாகவே அவள் அக்குடும்பத்தில்  வலம்வருகிறாள். இறுதியில் அவள் சாபம் அவளுடைய குடும்பத்தையே சிதைக்கிறது.

ஒருபுறம் தியாகத்தின் வடிவாக நிற்கும் மருமகள். மறுபுறம் அற்பத்தனத்தின் வடிவாக நிற்கும் மாமியார். பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ இன்றளவும் தமிழ் வாசகர்களால் மட்டுமன்றி, மொழியாக்கம் வழியாக வாசித்த எல்லா இந்திய மொழி இலக்கிய வாசகர்களும் விரும்பி வாசிக்கும் படைப்பாக விளங்குகிறது.

பைரப்பா எழுதிய ‘பருவம்’ நாவல் 2002ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்தது. இந்நாவல் மகாபாரதக் கதையை ஓர் எதார்த்த நாவலுக்குரிய அமைப்பில் மீட்டுருவாக்கம் செய்த படைப்பாகும். குருக்ஷேத்திரப் போரின் தொடக்கத்திலிருந்து தொடங்கும் நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் மகாபாரதக்கதையில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு பெண் பாத்திரத்தின் நினைவோடைக்காட்சியாக விரிவடைகிறது. ஒரு போர் ஒவ்வொருவருடைய பார்வையிலும் வெவ்வேறு விதங்களில் எப்படிப் பொருள்படுகிறது என்பதை ஓர் உளவியல் ஆய்வாளனைப்போலச் சித்தரித்திருக்கிறார் பைரப்பா. போர் அழிவைத் தவிர வேறெதையும் உருவாக்குவதில்லை என்னும் எளிய உண்மையை கடுமையான அழிவுக்குப் பின் உலகம் புரிந்துகொள்கிறது.

2024ஆம் ஆண்டில் வெளிவந்த பைரப்பாவின் வம்சவிருட்சம் மற்றொரு முக்கிய நாவல். மாற்றத்துக்கு இடம் கொடுக்காத நெறிக்கும் மாற்றத்தின் வழியாக வாழ்வின் வசந்தத்தை நாடிச் செல்ல விரும்பும்  எண்ணத்துக்கும் இடையிலான முரணின் விளைவுகள்தான் இந்நாவலின் களம். நம் தோட்டத்து விருட்சம் நம் விருப்பத்துக்குக் கட்டுப்பட்டு வளர்வதையே நெறி என தொடக்கத்தில் எண்ணும் மனம் ஒரு விருட்சத்தின் கிளைகளோ வேர்களோ தம் போக்கில் தாமே சுதந்திரமாகப் பரந்து விரிந்து தன்னைத்தானே நிலைநிறுத்திக்கொள்ளும் பேராற்றல் கொண்டவை என்னும் உண்மையை வாழ்வின் இறுதிக்கட்டத்தில் கண்டடைகிறது.

பைரப்பாவின் ஒவ்வொரு நாவலும் பல பதிப்புகள் கண்டவை. பல்லாயிரக்கணக்கான வாசகர்களைச் சென்று சேர்ந்தவை.  கன்னடத்தில் எழுதிய இந்திய எழுத்தாளர் அவர். அவர் 24.09.2025 அன்று தன் 94வ்து வயதில் இயற்கையோடு கலந்துவிட்டார். ஆயினும் இலக்கிய வாசகர்களின் நெஞ்சில் அவர் என்றென்றும் நிலைத்திருப்பார். மகத்தான அந்தப் படைப்பாளிக்கு அஞ்சலிகள்.

(28.09.2025 அன்று இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான கட்டுரை)