Home

Sunday, 21 September 2025

அதிசய மனிதரும் அற்புத ஓவியங்களும்

 

சந்தியா பதிப்பகம் நடராஜனின் மகனுடைய திருமண நிகச்சியில் கலந்துகொள்வதற்காக பெங்களூரிலிருந்து  விட்டல்ராவ், மகாலிங்கம், அவர் மனைவி, நான், அமுதா, திருஞானசம்பந்தம் என ஆறு பேர் சென்னைக்குச் சென்றிருந்தோம். வழிநெடுக விட்டல்ராவுடன் உரையாடிக்கொண்டே சென்றோம். எந்தப் பேச்சைத் தொடங்கினாலும் அதையொட்டிப் பகிர்ந்துகொள்வதற்கு அவரிடம் சில கதைகளும் பழைய நினைவுகளும் இருந்தன. அந்த உரையாடல்களை மட்டுமே தொகுத்தால் ஒரு தனி புத்தகமாக எழுதிவிடலாம். அவற்றைக் காதாரக் கேட்டு சுவைத்தபடி சென்றதால், ஏழுமணி நேரப் பயணம் ஏதோ அரைமணி நேரத்துப் பயணத்தைப்போல  அமைந்துவிட்டது. புறப்பட்டதும் தெரியவில்லை, இறங்கியதும் தெரியவில்லை, சென்னையை அடைந்துவிட்டோம்.

சென்னையில் தங்குவதற்கு அஃப்சன் விடுதியில் எங்களுக்கு அறைகளைப் பதிவு செய்திருந்தார் நடராஜன். அறைகளில் எங்களுடைய உடைமைகளை வைத்துவிட்டு, வேகமாக குளித்து உடைமாற்றிக்கொண்டு வெங்கடநாராயணன் சாலையில் உள்ள பத்மம் விடுதிக்குச் சென்று காப்பி அருந்தினோம். பிறகு ஏதேதோ கதை பேசியபடி அங்கிருந்து விடுதிக்கு நடந்துவந்தோம்.

அந்தத் தெரு மிகவும் குறுகலாக இருந்தது. இருபுறங்களிலும் நெரிசலான வீடுகள். வேகவேகமாகப் பாய்ந்துசெல்லும் வாகனங்கள். சேர்ந்து நடக்கமுடியவில்லை. ஒருவர் பின்னால் ஒருவரென நடந்தோம். அடுத்தடுத்து நெருங்கிநின்ற வீடுகளின் வரிசைக்கு நடுவில் வித்தியாசமான வடிவத்தில் நீண்ட சுற்றுச்சுவருடைய ஒரு பெரிய வீடு இருந்தது. மதிலுக்குள் ஒரு பெரிய வேப்பமரம் நின்றிருந்தது. அகலமான அதன் தோற்றமே ஆச்சரியத்தை அளித்தது. எல்லாத் திசைகளிலும் அதன் கிளைகள் விரிந்து பரந்திருந்தன. பெயர் தெரியாத ஒரு கொடி பச்சைப்பசேலென அடர்த்தியாக அந்த மதில்சுவர் மீது ஒட்டிப் படர்ந்திருந்தது. பசுமை படர்ந்திருந்த அண்டச் சூழலால் ஈர்க்கப்பட்டு அந்த வீட்டின் முன்னால் ஒருகணம் நின்று அண்ணாந்து பார்த்தேன்.

சுற்றுச்சுவர் தொடங்கும் வாசல் முகப்பில் இரு சிமெண்ட் தூண்கள் நின்றிருந்தன. அவற்றின் உச்சியில் குமிழ்விளக்குகள். இரு தூண்களுக்கு இடையில் உயரமான தடுப்புக்கதவு. ஒரு தூணுக்கு நடுவில் அருணா காமாட்சி நிலையம் என வீட்டின் பெயர் பொறிக்கப்பட்ட கற்பலகை பதிக்கப்பட்டிருந்தது. மற்றொரு தூணின் நடுப்பகுதியில் இரண்டாக மடித்த தினத்தந்தியின் அளவில் அழகான ஒரு பீங்கான் ஓடு பதிக்கப்பட்டிருந்தது. அதில் சிறிய அளவில் வசீகரமான வண்ணத்தில் பிள்ளையாரின் சித்திரம் தீட்டப்பட்டிருந்தது. நான் அந்தச் சித்திரத்தையே சில கணங்கள் பார்த்தபடி நின்றேன். மதில்நெடுக சீரான இடைவெளியில் அதே அளவில் வெவ்வேறு கடவுளரின் சித்திரங்களைக் கொண்ட ஓடுகள் பதிக்கப்பட்டிருந்தன. வெள்ளைவெளேரென்ற பின்னணியில் அச்சித்திரங்கள் கண்ணைக் கவர்ந்தன. பிறருடன் உரையாடியபடி சில அடிகள் தொலைவு முன்னால் சென்றுவிட்ட விட்டல்ராவை அழைத்து அந்தப் பீங்கான் ஓட்டுச்சித்திரத்தைக் காட்டினேன். பார்த்த கணத்திலேயே அவருக்கும் அச்சித்திரம் பிடித்துவிட்டது. “நல்ல அழகான வேலைப்பாடு” என்று பாராட்டினார். சுவரை நெருங்கி ஒரு விரலால் அந்த ஓட்டுச்சித்திரத்தைத் தொட்டுப் பார்த்து தலையசைத்துக்கொண்டார்.

“என்ன சார் பார்க்கறீங்க?” என்று நான் கேட்டேன்.

“பீங்கான் ஓட்டு மேல அச்சிடப்பட்ட ஓவியமா அல்லது தீட்டிய ஓவியமான்னு பார்த்தேன்” என்று சொன்னார் விட்டல்ராவ்.

“அப்படி கண்டுபிடிக்கமுடியுமா சார்?” என்று நான் மீண்டும் கேட்டேன்.

“முடியும். ஃபினிஷிங் ஒர்க்கை வச்சி கண்டுபிடிச்சிடலாம்”

“ரெண்டுக்கும் என்ன சார் வித்தியாசம்?”

“விலைதான் வித்தியாசம். வேலைப்பாடுக்குத் தகுந்த விலை”

பீங்கான் ஓடுகளில் அத்தகு வேறுபாடுகள் உள்ளன என்னும் விஷயத்தையே அப்போதுதான் நான் தெரிந்துகொண்டேன். எனவே, அது சார்ந்து அவர் சொன்ன  ஒவ்வொரு விஷயமும் எனக்குப் புதுசாகவே தோன்றியது.

“இது எந்த மாதிரியான ஓடு சார்?”

“இது அச்சிடப்பட்ட ஓடு. சந்தேகமே இல்லை. கொஞ்சம் கூடுதலான விலை கொடுத்துத்தான் வாங்கியிருப்பாரு. முகப்புக்கு அழகா இருக்கலாம்ன்னு செலவைப் பார்க்காம வாங்கியிருக்கலாம்”

உரையாடிக்கொண்டிருந்தபோதும் விட்டல்ராவின் பார்வை அந்தச் சித்திரத்தின் மீதே இருந்தது.

“பீங்கான் ஓட்ட இங்க்லீஷ்ல செராமிக் ஓடுன்னு சொல்றோம் இல்லையா? அது கெராமோஸ்ங்கற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவான சொல். அதுக்கு அர்த்தம் மண்ணால் செய்யப்பட்ட பாண்டம். அந்த வார்த்தைதான் கால மாற்றத்தால செராமோஸ்னு மாறி, படிப்படியா செராமிக்ஸ்னு மாறிட்டுது. அடிப்படையில அது பக்குவம் செய்யப்பட்ட களிமண்தான். அதுதான் ஒரு ஓட்டினுடைய முக்கால் பங்கு மூலப்பொருள். உறுதியா இருக்கறதுக்காக, அதோடு சில கனிமங்களையும் தேவையான அளவுக்கு சேர்த்துக்கறாங்க. எல்லாத்தையும் கலந்து குழப்பி சாந்தாக்கி செங்கல் அறுக்கறமாதிரி தேவையான அளவுல இந்த ஓடுகளை அறுத்து உலரவச்சிடுவாங்க. சக்கையா உலர்ந்தபிறகு நம்ம நாட்டுல செங்கற்களை சூளையில வச்சி சுடறமாதிரி சுடுவாங்க. சுட்டு எடுக்கப்பட்ட ஓடுகளுக்கு ஆயுள் அதிகம். அதுதான் பீங்கான் ஓடு. பிறகு தேவையான பூ வேலைப்பாடுகளையும் கோடுகளையும் அந்த ஓடுகள் மேல பதிவு செய்ய வசதியா விதவிதமான அச்சுகள் இருக்குது. எந்த அச்சை அதன் மீது பொருத்தி எடுக்கறமோ, அந்த அச்சின் வடிவம் அந்த ஓட்டு மேல விழுந்துரும். இந்தச் சித்திரம் அந்த வகையில ஓட்டின் மீது பதிவு செய்யப்பட்ட ஒரு சித்திரம்”

சித்திரப்பதிவைக் கொண்ட பீங்கான் ஓடு தயாராகும் விதத்தை எங்களுக்குப் புரியவைத்தார் விட்டல்ராவ்.

அந்த வீட்டு வாசலில் நின்றபடி உரையாடிக்கொண்டிருந்த எங்களை போகிறவர்களும் வருகிறவர்களும் ஒரு மாதிரி பார்த்தபடி செல்வதை நான் சற்றே தாமதமாகவே உணர்ந்தேன். “சரி வாங்க சார். இங்க நிக்க வேணாம். நாம நடந்துகிட்டே பேசலாம்” என்று அவரை அழைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினேன். விடுதி வாசலை அடையும்வரைக்கும் உரையாடலைத் தொடர்வதற்குப் பொருத்தமான சூழல் அமையவில்லை. வாசலை அடைந்ததும் அனைவரும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குப் புறப்படுவதற்குத் தயாராவதற்காக அறைகளுக்குத் திரும்பினர். நானும் விட்டல்ராவும் மட்டும் வாசலிலேயே நின்றுகொண்டு எங்கள் உரையாடலைத் தொடர்ந்தோம்.

“இந்த மாதிரியான பீங்கான் ஓட்டுச் சித்திரங்களை முப்பது முப்பத்தஞ்சி வருஷங்களுக்கு முன்னால நான் முதன்முதலா பார்த்தேன் பாவண்ணன். அதுக்கும் முற்பட்ட காலத்துல இங்க இருந்திருக்குமோ என்னமோ, எனக்குச் சரியா தெரியலை” என்று தொடங்கினார் விட்டல்ராவ்.

“எங்க சார் பார்த்தீங்க? சென்னையிலயா?”

“சென்னையில கிடையாது. சென்னையில சில வீடுகள்ல தரையில அழகான வண்ணவண்ண சலவைக்கல் பதிச்சிருப்பாங்க. அதை நான் பார்த்திருக்கேன். ஆனா பீங்கான் ஓடு பார்த்ததில்லை. முதன்முதலா காஞ்சிபுரத்துல ஒரு வீட்டுல பார்த்தேன்”

“காஞ்சிபுரமா? அங்க ஏன் போனீங்க?”

”ஹரின்னு ஒரு போட்டோகிராபரப் பத்தி நான் ஏற்கனவே உங்ககிட சொல்லியிருக்கேன், இல்லையா?.  ஒருநாள் நானும் அவரும்  காஞ்சிபுரத்துக்குப் போய் ரெண்டு நாள் தங்கி எல்லாக் கோயில்களையும் சுத்தி பார்த்துட்டு படம் புடிச்சிட்டு வரலாம்னு திட்டம் போட்டு புறப்பட்டோம்”

“சரி”

“ஒரு லாட்ஜ்ல ரூம் போட்டுட்டு ஒவ்வொரு கோவிலா சுற்றிப் பார்த்தோம். ஒவ்வொரு கோவில்லயும் தூண்கள்ளேயும் சுவர்கள்ளேயும் செதுக்கப்பட்டிருந்த சிலைகளை பார்த்துகிட்டே நடந்தோம். எங்களுக்குப் புடிச்ச சிற்பங்களை மட்டும் கேமிராவுல படம் பிடிச்சிகிட்டோம். ஹரிகிட்டயும் கேமிரா இருந்தது. நானும் என்னுடைய கேமிராவை எடுத்துட்டு போயிருந்தேன்.”

“சரி”

“வரதராஜ பெருமாள் கோவில்ல படம் பிடிச்சிகிட்டு வெளியே வந்து லாட்ஜ்க்கு நடக்க ஆரம்பிச்சோம். அந்த வழியில இப்ப பார்த்தமே, அதே மாதிரி ஒரு பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டு வாசல்லயும் இதே மாதிரி அழகான பீங்கான் ஓடு பதிச்சிருந்தாங்க. அதுல சங்குசக்கரம் மட்டும் கொண்ட அழகான ஒரு சித்திரம் இருந்தது. பார்த்த முதல் பார்வையிலயே வைணவர்கள் வீடுன்னு புலப்படுத்தற மாதிரி இருந்தது. கலர்ல ஒரு போஸ்டர அடிச்சி ஒட்டிவச்ச மாதிரி இருந்தது. தொலைவுல இருந்து பார்த்தா எல்லாருக்குமே அப்படித்தான் தோணும். எனக்கும் முதல்ல அப்படித்தான் தோணிச்சி. அதனாலயே ஒரு ஆர்வக்கோளாறுல நானும் ஹரியும் வாசலுக்குப் பக்கத்துல போய் தொட்டுத்தொட்டு பார்த்தோம். எந்தப் படமும் அந்த ஓட்டுமேல ஒட்டினமாதிரி இல்லை. அசலான ஓடுதான். ஆனா அந்தப் படம் அதும்மேல எப்படி வந்ததுன்னு எங்களுக்கு ஒரே ஆச்சரியம். அந்த அளவுக்கு அழகான தொழில்நுட்பம். எங்களுக்கு எதுவும் புரியலை. ஆனா அந்தப் படத்தைப் பார்க்கறதுக்கு மகிழ்ச்சியா இருந்தது. வெவ்வேறு கோணங்கள்ல நின்னு பார்த்து ரசித்தோம்.”

“ம்”

“வீட்டுல இருக்கறவங்ககிட்டயே ஒரு வார்த்தை கேட்டுடலாமா சார்னு ஹரி கேட்டாரு. நான் கேக்கலாமா வேணாமாங்கற யோசனையில பதில் சொல்லாம குழம்பிகிட்டிருந்தேன். அதுக்குல்ல சட்டுனு பக்கத்துல இருந்த காலிங் பெல்ல அழுத்திட்டாரு ஹரி”

“அப்புறம்?”

“ஐயோ இப்படி பண்ணிட்டாரேன்னு ஒரு கணம் எனக்கு உதறலா இருந்தது. வீட்டுக்குள்ளேருந்து வர ஆளு கடாமுடான்னு ஏதாச்சிம் பேசிட்டா என்ன செய்யறதுன்னு சின்னதா ஒரு குழப்பம் இருந்தது. மணியை அழுத்திட்ட பிறகு அங்கேர்ந்து புறப்படவும் முடியாத நிலை. ஒரு நிமிஷம் தடுமாறித்தான் போயிட்டோம். அதுக்கப்புறம் நாம விவரம் தெரிஞ்சிக்கத்தானே அழைக்கிறோம், தப்பான நோக்கத்தோடு அழைக்கலையேன்னு என்னை நானே சமாதானம் செஞ்சிகிட்டேன்.”

“யாராச்சிம் கதவைத் திறந்தாங்களா?”

“ஆமாம். உள்ளேயிருந்து ஒரு பெரியவர் வந்து யாரு வேணும்ன்னு எங்களைக் கேட்டாரு”

“சரி”

“நாங்க அவருக்கு வணக்கம் சொல்லிட்டு சுவரோடு பதிக்கப்பட்டிருந்த கல்லுல இருந்த சங்கு சக்கரத்தைக் காட்டி இது சலவைக்கல்லா சார்னு கேட்டோம். அவர் இல்லை இல்லைன்னு தலையை ஆட்டிட்டு சிரிச்சிகிட்டே செராமிக் ஸ்லாப்னு சொன்னார். அடுத்த கேள்வியா உடனே ஸ்லாப்ல இந்த ஓவியம் எப்படி வந்தது சார்னு கேட்டோம். இந்தியாவுல ஸ்க்ரீன் ப்ரிண்டிங் செய்றமே, அது மாதிரி இது ஸ்லாப் ப்ரிண்டிங் ஒர்க். இந்தியாவுல செஞ்சதில்லை. பெல்ஜியத்துல செஞ்சது. சுதந்திரத்துக்கு முன்னால, எங்க அப்பா பெல்ஜியத்துல செய்ய வச்சி இங்க வரவழைச்சாருன்னு சொன்னாரு. கேள்விப்படாத புது டெக்னிக்கா இருக்குதேன்னு சொல்லிகிட்டே நாங்க மறுபடியும் அந்தப் பீங்கான் படத்தைத் தொட்டுப் பார்த்தோம்”

“சரி”

“நாங்க அந்தப் பீங்கானை மறுபடியும் தொட்டுத் தொட்டு  பார்த்து ஆச்சரியப்படறதைப் பார்த்துட்டு அவரும் ஒரு மாதிரி சந்தோஷமாயிட்டாரு. எங்க ரெண்டு பேரையும் ஏற இறங்கப் பார்த்தாரு. எங்க தோள்ல இருந்த கேமிராக்களையும் பார்த்தாரு. நீங்க என்ன சினிமாக்காரங்களான்னு கேட்டாரு. நாங்க உடனே தலையை அசைச்சி மறுத்துட்டு எங்களைப் பத்தி சொல்லி அறிமுகப்படுத்திகிட்டோம். எங்க ஆர்வத்தைப் பத்தியும் எடுத்துச் சொன்னோம். அதைக் கேட்டபிறகு, எங்க கூட பேசறதுல அவருக்கும் ஒரு ஆர்வம் பிறந்துடுச்சி. இந்தப் படத்தையே நீங்க இப்படி வச்ச கண்ண எடுக்காம பார்க்கறீங்களே, இன்னும் சில படங்கள் உள்ள இருக்குது. அதையெல்லாம் பார்த்தா இன்னும் நீங்க ஆச்சரியப்படுவீங்க. உள்ள வாங்க காட்டறேன். ஒவ்வொரு படத்தையும் பார்க்கப் பார்க்க, உங்களுக்குத் தேவலோகத்துக்கே போய்வந்த மாதிரி இருக்கும். அப்படி சொக்கிப் போய்டுவீங்கன்னு சொன்னாரு.”

”ஆகா, நீங்க தேடிப் போய் நிக்கிற இடத்துல உங்களுக்கு எல்லாக் கதவுகளும் தானா தெறக்கறதப் பார்த்தா சந்தோஷமா இருக்குது. சொல்லுங்க சார், வீட்டுக்குள்ள போய் என்ன பார்த்தீங்க?”

“அவருக்குப் பின்னாலயே நாங்க நடந்து உள்ள போனோம். பெரிய கூடம். சினிமாவுல காட்டுவாங்களே, அந்த மாதிரி பெரிய கூடம். ஒரு நூறு பேர் உக்காந்து ஒரு சினிமா பார்க்கலாம். அந்த அளவுக்குப் பெரிய கூடம். அங்க ஊஞ்சல்ல அவுங்க மனைவி உட்கார்ந்திருந்தாங்க. அவுங்களுக்கு அந்தப் பெரியவரு எங்களை அறிமுகப்படுத்தினாரு. நாங்க வணக்கம் சொன்னோம். அவுங்களும் வணக்கம் சொன்னாங்க. இதோ பாருங்கன்னு கூடத்தின் உட்சுவரைக் காட்டினாரு.”

“சுவர்ல என்ன சார் இருந்தது?”

“வள்ளுவர் கோட்டத்துல சிலப்பதிகாரக்கதையை சுலபமா புரிஞ்சிக்கிற மாதிரி  செவ்வகவடிவக் கற்கள்ல செதுக்கப்பட்ட சிற்பங்களை வரிசையா பதிச்சி வச்சிருப்பாங்களே, பார்த்திருக்கீங்களா? அது மாதிரி, அந்தக் கூடத்துக்குள்ள வரிசையா ராமாயணக்காட்சிப் படங்கள் இருந்தது. எல்லாமே அழகான பீங்கான் ஓடுகள். அந்தக் கூடமே ஒரு மினி மியூசியம் மாதிரி இருந்தது. கதவையொட்டி ஒரு பக்கத்துல பார்த்துகிட்டே போனா ஒரு சுத்து பார்த்து முடிச்சி கதவுக்கு மறுபக்கமா வந்து சேர்றதுக்குள்ள ராமாயணத்தை முழுசா புரிஞ்சிக்கலாம். கோயில்ல கூட அப்படி சில சிற்பங்களை நாம பார்க்கலாம். ஆனா தேர்ந்தெடுத்த சில காட்சிகள் மட்டுமே இருக்கும். ராமருக்கும் சீதைக்கும் திருமணம் நடக்கிற காட்சி, காட்டுக்குப் போற காட்சி, வாலியை ராமர் மறைஞ்சி நின்னு கொல்ற காட்சி, ராமரும் ராவணனும் யுத்தம் செய்ற காட்சிதான் பெரும்பாலான கோயில்ங்கள்ல இருக்கும். ஆனா அந்தப் பீங்கான் ஓவிய வரிசை புதுமையா இருந்தது. ஒரு முழு வட்டம் பார்த்து முடிச்சதுமே இன்னொரு முறை பார்க்கணும் போல இருந்தது. வெக்கத்தைவிட்டு நாங்க அவருகிட்ட மறுபடியும் பார்க்கறதுக்கு அனுமதி கேட்டோம். அவரும் சிரிச்சிகிட்டே அனுமதி கொடுத்தாரு.”

“ரொம்ப நல்லவரைத்தான் நீங்க சந்திச்சிருக்கீங்க”

“ஆமாம். அந்த சமயத்துல காலையிலேர்ந்து வெயில்ல நல்லா அலைஞ்சிட்டு வந்ததால எங்க ரெண்டு பேருக்குமே தண்ணி குடிக்கணும் போல இருந்தது. ஆரம்பத்துல ரொம்ப நேரம் கட்டுப்படுத்திட்டுதான் இருந்தோம். ஒரு கட்டத்துல தாகம் தாங்கமுடியாத எல்லைக்குப் போயிடுச்சி. வெக்கத்தைவிட்டு குடிக்க தண்ணீ கிடைக்குமா சார்ன்னு நான் அவருகிட்டே கேட்டேன். அவரு உடனே ஊஞ்சல்ல உக்காந்திருந்த அம்மாவைத் திரும்பிப் பார்த்தாரு. அவுங்க உள்ள போய் ஒரு பெரிய செம்புல தண்ணியும் ரெண்டு தம்ளரும் கொண்டுவந்து கொடுத்தாங்க. அதுக்கப்புறம் அந்த அம்மா மறுபடியும் உள்ள போய் இன்னொரு செம்பு நிறைய மோர் கொண்டுவந்து இதையும் குடிங்கன்னு சொல்லிக் கொடுத்தாங்க. கறிவேப்பிலை, இஞ்சி எல்லாம் போட்ட மோர். அந்த வெயிலுக்கு இதமா இருந்தது. அதுக்கப்புறம்தான் எங்களுக்குப் பழைய தெம்பு வந்தது. உற்சாகத்தோடு மறுபடியும் கூடத்துல இருந்த ஓவியங்களைப் பார்த்தோம். அஜந்தா குகை ஓவியங்களைப் பார்த்த மாதிரி  எங்களுக்கு அவ்ளோ சந்தோஷமா இருந்தது”

“ஏதாவது படம் எடுத்தீங்களா?”

“அதையெல்லாம் படம் எடுக்கணும்னு எனக்கு மனசு துடிச்சிகிட்டே இருந்தது. அவருகிட்ட சொல்லாம எடுக்கறது நாகரிகம் கிடையாதுன்னு நினைச்சி அமைதியா இருந்தேன். பார்த்து முடிச்ச பிறகு மெதுவா அவருகிட்ட படம் எடுக்க அனுமதி கேட்டேன். அவரு ரொம்ப நாகரிகமா அதெல்லாம் வேணாம், நீங்க ஆசையா பார்க்கற ஆட்கள்னு தெரிஞ்சதாலதான் இந்தப் படங்களைப் பார்க்கறதுக்கு அழைச்சிட்டு வந்தேன். பொதுவா இதையெல்லாம் நாங்க வெளி ஆட்களுக்குப் பார்க்கறதுக்கு அனுமதிக்கறதில்லைன்னு சொன்னாரு. உடனே நானும் பரவாயில்லை சார், ஒரு ஆசையில நான் கேட்டேன் தப்பா எடுத்துக்கவேணாம்ன்னு அவருகிட்ட சொன்னேன். அப்ப ஸ்லாப் ப்ரிண்ட்டிங் பத்தி அவர் ஒரு குறிப்பைச் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. உடனே அதைப் பத்தி ஒரு கேள்வி கேட்டு நானும் பேச்சை மாத்திட்டேன்”

“சரி”

“ஸ்லாப் ப்ரிண்ட்டிங் பத்தி பேச்ச ஆரம்பிச்சதும் ரொம்ப உற்சாகமா பேச ஆரம்பிச்சிட்டாரு அவரு. அந்தக் காலத்துல பெல்ஜியத்துல மட்டும்தான் அந்த டெக்னாலஜியை பயன்படுத்தி செராமிக் செய்றாங்கன்னு கேள்விப்பட்டு அது சம்பந்தமான ஆட்களைப் பார்க்கறதுக்காகவே அவரு காஞ்சிபுரத்துலேர்ந்து பம்பாய் போய் பார்த்துட்டு வந்தாரு. ராமாயணத்துல என்னென்ன காட்சிகள் ஸ்லாப்ல இருக்கணும்ங்கறத அவர் ஏற்கனவே முடிவு செஞ்சி வச்சிருந்தாரு. அந்தப் படங்களையெல்லாம் அவரு தன்னோடு பம்பாய்க்கு எடுத்துட்டு போயிருந்தாரு. பம்பாய்ல அதுக்கான ஒரு நல்ல தொடர்பு அவருக்குக் கிடைச்சது. அவுங்ககிட்ட அந்தப் படங்களை ஒப்படைச்சிட்டு, ஆர்டரும் கொடுத்திட்டு திரும்பி வந்துட்டாரு. பெல்ஜியத்துல இருக்கிற ஆர்ட்டிஸ்ட் இந்தியாவுலேர்ந்து போன படங்களைப் பார்த்து தனியா வரைஞ்சி ஸ்லாப் ப்ரிண்டிங் செஞ்சாரு. இப்ப பார்த்தமே, அந்த மாதிரி ஒரு ஓட்டுல ஒரு படம் இருக்கற மாதிரியான அமைப்புல செய்யலை. நாலு ஸ்லாப்கள்ல நாலு தனித்தனி துண்டு. நாலு ஸ்லாப்களயும் ஒன்னா ஒட்டினாத்தான் ஒரு படம் முழுசா தெரியும். அவ்வளவு கச்சிதமாவும் செய்நேர்த்தியும் கொண்ட ஒரு வேலை. நாலைஞ்சி மாசத்துல இங்க சென்னையில எல்லா ஓடுகளும் கப்பல்ல வந்து இறங்கிடுச்சி. அப்பா போய் எல்லாத்தயும் க்ளியர் பண்ணி காஞ்சிபுரத்துக்கு எடுத்துட்டு வந்தாருன்னு சொன்னாரு”

“சரி”

“கூடத்துக்குள்ள ராமாயணக்காட்சிகள் இருக்கணும்ன்னு  அவர் ஏன் பிரியப்பட்டாரு, அதுக்கு ஏதாவது பின்னணிக்காரணம் இருக்குதான்னு ஒரு கேள்வியைக் கேட்டேன். அந்தக் கேள்விக்கு அவரு ரொம்ப அமைதியா பதில் சொன்னாரு. நம்ம காலத்துல நமக்கு நிறைய நேரம் இருக்குது சார். ராமாயணத்தைப் பத்தி தெரிஞ்சிக்கணும்ன்னா நாம அந்தப் புஸ்தகத்தைத் தேடி எடுத்துத்  தெரிஞ்சிக்கறோம். ஆனா எதிர்காலத் தலைமுறைகளும் இப்படியே இருப்பாங்கன்னு உறுதியா சொல்லமுடியாது. நமக்குக் கிடைக்கிற நேரத்துல அவுங்களுக்கு பாதி நேரம்தான் கிடைக்கும். இன்னும் ஒரு தலைமுறை தாண்டிப் போச்சின்னா, அந்தப் பாதியில  பாதி நேரம்தான் கிடைக்கும். அப்படிப்பட்ட தலைமுறை ஆட்கள்கிட்ட இந்தா ராமாயணப் புத்தகத்தைப் புடி, நீயா படிச்சித் தெரிஞ்சிக்கோன்னு எப்படி சொல்லமுடியும்? இந்த மாதிரி ஓவியங்களையோ சிற்பங்களையோ பார்த்து தெரிஞ்சிக்கோன்னுதான் சொல்லமுடியும். அந்த நேரத்துல இதனுடைய முக்கியத்துவம் புரியும்னு சொன்னாரு. அப்ப அவர் சொன்ன பதில் என்னமோ என்னை திருப்திப்படுத்த சொன்ன பதில் மாதிரி தெரிஞ்சிது. இப்ப, எங்க வீட்டுலயே ராமாயணப்புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆள் இல்லாம போயிடுச்சி. அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும்  இப்ப யோசிச்சி பார்த்தா, எந்த அளவுக்கு இந்த உலகத்தை புரிஞ்சி வச்சிகிட்டு பொருத்தமா பேசியிருக்காருன்னு தோணுது. அவருடைய தொலைநோக்குப் புத்தியை நெனைச்சா ஆச்சரியமா இருக்குதுன்னு சொன்னாரு”

“ஒரு கூடத்தை அழகு செய்யறதுக்கு ஒரு மனுஷன் இவ்ளோ தொலைவு சிரமப்பட்டிருக்கார்னு நெனச்சி பார்க்கவே ஆச்சரியமா இருக்குது சார். தொலைநோக்கு புத்தி மட்டுமில்ல, ரொம்ப ரசனைக்கார மனுஷராவும் இருந்திருக்காரு”

விட்டல்ராவ் ஒரு கணம் அமைதியாக என்னை ஆழமாகப் பார்த்தார். பொருத்தமான சொற்களுக்காக காத்திருக்கிறார் என்பதை அவர் பார்வையை வைத்துப் புரிந்துகொண்டேன். ஒரு சிறிய செருமலுக்குப் பிறகு “யாரா இருந்தாலும், ஒரு மனுஷனுக்கு ரசனை ரொம்ப ரொம்ப முக்கியம் பாவண்ணன். ரசனைதான் ஒரு மனிதனை மதிப்பிடக்கூடிய அடிப்படை அளவுகோல். பொதுவா எல்லாரும் பணம்னு நெனச்சிட்டிருக்காங்க. பணம் எல்லாருக்கும் தேவையான ஒன்னா இருக்கறதால, அந்த மாதிரியான ஒரு எண்ணம் வந்திருக்கலாம். ஆனா பணத்தைவிட பல மடங்கு முக்கியமானது ரசனை” என்றார். அப்போது அவருடைய குரல் மிகவும் கனிந்திருந்தது.

“சரி, காஞ்சிபுரத்துக்காரர் என்ன சொன்னாரு?”

“நல்லா பேசினாரு. இன்னொருமுறை மோர் கொடுத்து உபசரிச்சாரு. சாப்ட்டு போறீங்களானு கேட்டாரு. படம் மட்டும் எடுக்கக்கூடாதுங்கறதுதான் அவருடைய ஒரே வேண்டுகோள். அவர் அந்த அளவுக்கு அழுத்திச் சொல்லும்போது அதுக்கு நாம கட்டுப்பட்டுத்தான ஆவணும். அன்னைக்கு அந்த சுவத்துல பார்த்த ஓவியங்கள் எல்லாம் இன்னும் என் கண்ணுக்குள்ளயே இருக்குது. ஒரு பெரிய ஆர்ட் கேலரிக்குள்ள போய் வந்த உணர்வு. அதை என்னால ஒருநாளும் மறக்கமுடியாது.”

அந்தக் காலக் காட்சிகளைக் கண்முன்னால் பார்ப்பதுபோன்ற பரவசத்தை நான் அவருடைய விழிகளில் கண்டேன். “அப்புறம் சார்?” என்று மேலும் தூண்டினேன்.

“அப்புறம் என்ன? சாப்பாடு வேணாம் தூக்கமும் வேணாம்ன்னு சொல்லிட்டு நாம பேசிட்டிருக்கலாம், ஆனா அவுங்க நேரத்துக்கு சாப்ட்டாவணுமே. அதனால ஒரு கட்டத்துல பேச்சை நிறுத்திட்டு வரோம் சார்னு சொல்லி வணக்கம் சொல்லிட்டு வெளியே வந்துட்டோம். வாசலுக்கு வெளியே தலை சுடற வெயில்ல வந்து நின்னபோது நடந்தது எல்லாமே கனவுதானான்னு ஒரு எண்ணம் வந்தது. எங்ககிட்ட ஒரு சாட்சியும் இல்லாத சூழல்ல, இதையெல்லாம் யாருகிட்ட நாங்க சொல்லி நம்பவைக்கமுடியும்னு, அங்கேர்ந்து வந்த பிறகு அதைப்பத்தி யாருகிட்டயும் நாங்க பேசவே இல்லை”

“அது ஒரு பரஸ்பர நாகரிகம்தான் சார். அதை நாம கடைப்பிடிச்சித்தான ஆகணும். அவரு யாரு, என்ன வேலை செய்றாருங்கற விவரத்தையாவது தெரிஞ்சிகிட்டீங்களா?”

“அவருகிட்ட நேரிடையா கேக்கறதுக்கு எனக்குக் கூச்சமா இருந்தது. அதனால அதைப்பத்தி அவருகிட்ட நான் எதுவும் பேசலை. ஆனா வெளியே வந்ததும், அந்தத் தெருமுனையில இருக்கற ஒரு பெட்டிக்கடையில அந்த வீட்டைப்பத்தி விசாரிச்சி தெரிஞ்சிகிட்டேன்.”

”என்ன சொன்னாரு?”

“வெள்ளைக்காரன் காலத்துல அவுங்கப்பா பெரிய வக்கீலா இருந்தவராம். அவருடைய பேரே பிரதிவாதி பயங்கரம் அன்னங்கர ஆச்சாரியார். கோர்ட்ல வாதாடுறதுல பெரிய ஆளாம். அவரு முன்வச்சி பேசற லா பாய்ண்ட்டுக்கு  எதிரா யாராலயும் பதில் பாய்ண்ட் சொல்லமுடியாதாம். அதனாலயே அவருகிட்ட ஒரு கேச கொடுத்தா போதும், நிச்சயம் ஜெயிச்சிடும்னு சொல்வாங்களாம். வாதிக்கு எதிரா பேசறதுல அவருக்கு இருந்த விஷயஞானத்தின் அடிப்படையில அவருக்கு பிரதிவாதி பயங்கரம்னு பட்டப்பேரே வந்துடுச்சின்னு சொன்னாரு. அதே சமயத்துல எப்படிப்பட்ட கேசா இருந்தாலும் சரி, தன்னுடைய கட்டணத்துக்கு மேல ஒரு காசு கூட அதிகமா வாங்கிக்க மாட்டாராம். வழக்கு கொடுத்தவனே கொண்டுவந்து கொடுத்தாலும் வேணாம் போடான்னு அனுப்பி வச்சிடுவாராம். அந்தக் கடைக்காரர் சொல்லச்சொல்ல ஆச்சரியமாதான் இருந்தது.  அந்த நெஞ்சுரமும் நேர்மையும் அவருகிட்ட இருந்ததாலதான் அந்த மனிதரால அப்படி ஒரு வீட்டை கம்பீரமா கட்ட முடிஞ்சிருக்குது”

விடுதிக்குள் உடைமாற்றுவதற்காகச் சென்றவர்கள் ஒவ்வொருவராக கீழே இறங்கிவந்தார்கள். “என்ன, இன்னுமா பேசிட்டிருக்கீங்க? கெளம்பலையா, நேரமாவுது. இங்கேர்ந்து மண்டபத்துக்குப் போக நாற்பது நிமிஷமாவும். போங்க போங்க சீக்கிரம் ட்ரஸ் மாத்திட்டு வாங்க” என்று அனுப்பிவைத்தனர்.

    பிரதிவாதி பயங்கரம் அன்னங்கர ஆச்சாரியார் என்ற பெயர் என் நாவில் புரண்டபடி இருந்தது. ஒருமுறை வாய்விட்டு அவர் பெயரைச் சொல்லிக்கொண்டே படியேறினேன். ”என்ன, அவருடைய பெயரை மறக்கமுடியலையா?” என்று புன்னகைத்தபடி கேட்டார் விட்டல்ராவ்.

“ஆமாம் சார். அருமையான பேரு. அப்படியே பசைமாதிரி நெஞ்சில ஒட்டிகிச்சி. பேருதான் என்னமோ வில்லன் பேரு மாதிரி இருக்குது. ஆனா பெரிய கதாநாயகனாதான் வாழ்ந்திருக்காரு” என்றேன்.

 

(அம்ருதா – செப்டம்பர் 2025)