Home

Sunday, 21 September 2025

இராசபாளையம் என்னும் தகவல் களஞ்சியம்

 

இராசபாளையம் என்னும் நகரத்தின் பெயரைச் சொன்னதுமே, நான்கு செய்திகள் உடனடியாக ஒரு பொதுவாசகனின் நினைவைத் தொட்டுச் செல்லும். ஒன்று, தமிழ்மாகாணத்தின் முதல்வராக இருந்த குமாரசாமிராஜா. இரண்டு, திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில். மூன்று ஆங்கிலேயர் காலத்திலிருந்து இயங்கிவரும் பென்னிங்டன் நூலகம். நான்கு, வீட்டுக்காவலுக்குப் பேர்போனது என எல்லோராலும் பாராட்டப்படும் கோம்பைவகை நாய்.  இதுவரை மேலோட்டமாக மட்டுமே அனைவருக்கும் தெரிந்திருந்த இச்செய்திகளை வரலாற்றுப்பின்னணியில் மிக விரிவாக தன் ‘இராசபாளையம்’ என்னும் நூலில் பதிவு செய்திருக்கிறார் நரேந்திரகுமார்.

பூசப்பாடி சஞ்சீவி குமாரசாமிராஜா என்கிற பி.எஸ்.குமாரசாமிராஜா 1907இல் சூரத் நகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டைத் தொடர்ந்து  அன்னிபெசண்ட் அம்மையார் தொடங்கிய ஹோம் ரூல் இயக்கத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அரசியல் களத்தில் இறங்கியவர். 1910இல் பிறப்பிக்கப்பட்ட ரவுலட் சட்டத்தை எதிர்க்கும் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தார். 1919இல் காந்தியடிகளைச் சந்தித்த பிறகு அவருடைய அகிம்சை வழியை ஏற்றுக்கொண்டு அவர் வழியைப் பின்பற்றினார். தீண்டாமை எதிர்ப்புப் பிரச்சாரத்திலும் கதர் ஆதரவுப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். 1934இல் நடைபெற்ற முதல் தேர்தலில் வெற்றி பெற்று 39 வயதில் சட்டமன்றத்துக்குச் சென்றார். 1946இல் டி.எஸ்.பிரகாசத்தின் தலைமையில் உருவான அமைச்சரவையில் விவசாய அமைச்சராகப் பணியாற்றினார். 1949இல் சென்னை மாகாணத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டு சிறந்த ஆட்சியை அளித்தார். நீதித்துறையை தனியாகப் பிரித்து சுதந்திரமாகச் செயல்பட வழிவகுத்தது அவருடைய ஆட்சிக்காலத்தின் முக்கியப் பங்களிப்பாகும். பிறகு 1954முதல் இரு ஆண்டு காலம் ஒரிசாவின் ஆளுநராகவும் பணியாற்றினார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்துக்கு உட்பட்ட திருவில்லிப்புத்தூரில் பென்னிங்டன் என்பவர் மாவட்ட ஆட்சியராகப் 1875ஆம் ஆண்டில் பணிபுரிந்துவந்தார். மலைவாழ் மக்களுக்காகவும் பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் பென்னிங்டன் பொதுநூலகம் என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினார். தமிழ்நாட்டில் இதுவே முதலாவதாகத் தொடங்கப்பட்ட தனியார் நூலகமாகும். பிற்காலத்தில் முதல்வரான பி.எஸ்.குமாரசாமிராஜா தன் தொடக்கப்பள்ளிக் கல்வியை திருவில்லிப்புத்தூரில் பெற்றபோது இந்நூலகம் அவரை ஈர்த்தது. பிற்காலத்தில் ’குமாரபவனம்’ என்ற பெயரில் அமைந்த தன் வீட்டையே காந்தி கலைமன்றமாகவும் நூலகமாகவும் மாற்றினார். காந்தியடிகள், நேரு, தக்கர்பாபா, மீராபென், இராஜேந்திர பிரசாத், வினோபா பாவே போன்ற மாபெரும் தலைவர்கள் எல்லோரும் அந்நூலகத்துக்கு வருகை புரிந்திருக்கிறார்கள்.

திருவில்லிப்புத்தூரில் கோவில் உருவான வரலாற்றை ஒரு கட்டுரையில் ஒரு தகவலாகக் குறிப்பிட்டிருக்கிறார் நரேந்திரகுமார். திருமலை நாயக்கர் காலத்தில் ஆண்டாள் கோவிலின் தலைமைக்கணக்கர் சம்பந்தம் பிள்ளை என்பவரை தொழுநோய் தாக்கியது. வைத்தியத்திலும் சோதிடத்திலும் வல்லவரான மலையாளத் தந்திரி ஒருவர் அவருக்கு விஷ்ணு தோஷம் இருப்பதாகவும் அதற்குப் பரிகாரமாக விஷ்ணுகோவில் ஒன்றைக் கட்டவேண்டும் என்றும் அதற்கு அருகிலேயே அக்கிரகாரம் ஒன்றை அமைத்து பிராமணர்களைக் குடியமர்த்தவேண்டும் என்றும் தெரிவித்தார். சம்பந்தம் பிள்ளை அந்தப் பரிகாரத்தைச் செய்வதற்கு இசைந்தார்.  திருமலை நாயக்கரும் அதற்குத்தேவையான பண உதவியைச் செய்தார். அவ்வகையில் சம்பந்தம் பிள்ளை உருவாக்கியதே சம்பந்தபுரம் அக்கிரகாரம். அதன் மேலைக்கோடியில் அமைந்திருக்கும் சூடிக்கொடுத்த நாச்சியார் கோவிலும் அவர் உருவாக்கி அளித்ததாகும். இதைப்போலவே திருவில்லிப்புத்தூருக்கு அருகில் உள்ள செட்டிகுளம், புதுப்பாளையம் போன்ற இடங்கள் உருவான பின்னணியையும் சுவாரசியமான வரலாற்றுத்தகவல்களோடு எழுதியிருக்கிறார் நரேந்திரகுமார்.

இந்த நூலில் இராசபாளையத்தில் நடைபெற்ற ஒரு சுற்றுச்சூழல் வழக்கு தொடர்பான விவரங்களும் சுருக்கமாக அளிக்கப்பட்டிருக்கின்றன. இராசபாளையத்துக்கு அருகிலிருக்கும் அயன்கொல்லங்கொண்டான் என்னும் சிற்றூரில் ஏறத்தாழ நூறு அடி உயரமுள்ள ஒரு குன்று இருக்கிறது. அதன் பெயர் திருப்பணிமலை. விவசாய நிலங்களுக்கு நடுவில் வீற்றிருக்கும் அந்தக் குன்று ஊருக்கே அழகான எல்லையாக இருக்கிறது. தேசமெங்கும் குன்றுகளை எல்லாம் கல்குவாரிகளாக மாற்றி இயற்கைச்செல்வத்தைச் சீரழிக்கும் வணிகர்கள் அரசு அனுமதியோடு அந்தக் குன்றையும் சிதைக்கத் தொடங்கினர்.  வேலைவாய்ப்பு பெறுவதற்கு அது ஒரு வழி என தொடக்கத்தில் ஊர்க்காரர்களும் அமைதி காத்தனர். ஆனால் குன்றையே இல்லாமல் அழிக்கும் அளவுக்கு குத்தகைதாரர்கள் எல்லை மீறியபோது அக்கிராமத்தினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அந்த ஊரைச் சேர்ந்த இரு சகோதரர்கள் நீதிமன்றத்தை நாடி ஒரு பொதுநல வழக்கைத் தொடுத்தனர்.

சக்திவாய்ந்த வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பாறைகள் தகர்க்கப்படுவதால், குன்றைச் சுற்றியிருக்கும் விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன என்றும் வெடி வெடிக்கும்போது எழும் தூசு காரணமாக காற்று மாசுபடுகிறது என்றும் நீர் ஆதாரங்களும் பாதிக்கப்படுகின்றன என்றும் அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதே சமயத்தில் அது ஒரு புறம்போக்கு நிலம் என்றும் அரசு அனுமதியோடு குவாரி இயங்குவதாகவும் அரசு விதிகள் அனைத்தும் பேணப்படுகின்றன என்றும் குத்தகைதாரர்கள் தரப்பில் முறையிடப்பட்டது. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி புறம்போக்கு நிலம் என்பதாலேயே குத்தகைதாரர் சுரண்டலுக்கு இசைவாக அரசு அந்நிலத்தை வழங்கிவிட முடியாது என்று குறிப்பிட்டு குவாரி வேலையை உடனடியாக நிறுத்தவேண்டும் என தீர்ப்பளித்தார். அத்தீர்ப்பை வழங்கியவர் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாவோபாப் என்னும் மரம் உலகின் பழமையான  மரங்களில் ஒன்று. ஐநூறு ஆண்டு முதல் ஆறாயிரம் ஆண்டு வரை நிலத்தில் உறுதியாக நின்றிருக்கும் பழமையான மரங்கள் ஆப்பிரிக்காவில் பல இடங்களில் நிறைந்திருக்கின்றன. வறண்ட காலநிலை நிலவும் ஆப்பிரிக்காவின் சவன்னா  பகுதியில் பிற மரங்கள் சிரமப்பட்டு வளரும் நிலையில் பாவோபாப் மரம் மட்டும் செழிப்போடு வளர்கிறது. அத்தகு அதிசய மரங்களில் ஒன்று இராசபாளையத்தில் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாக நின்றிருக்கிறது என நரேந்திரகுமார் குறிப்பிட்டிருக்கும் தகவல் சுவாரசியமானது. அந்த மரத்தின் புகைப்படத்தையும் நரேந்திரகுமார் தன் நூலில் கொடுத்திருக்கிறார். ஏறத்தாழ இருபது மீட்டர் சுற்றளவும் இருபத்தைந்து மீட்டர் உயரமும் கொண்டது இந்த மரம்.

முன்னொரு காலத்தில் தமிழ்நாடு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு குதிரைகளுக்குப் போர்ப்பயிற்சி வழங்குவதற்காக வந்த அரேபியர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இம்மரம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இராமேஸ்வரம், பாம்பன், இராமநாதபுரம், மதுரை அமெரிக்கன் கல்லூரி, சென்னை புனித தாமஸ் மலை ஆகிய இடங்களுக்குப் பிறகு இராசபாளையத்தைச் சேர்ந்த திருவில்லிப்பூத்தூரில் மட்டுமே இன்றளவும் காணப்படுகிறது. இராசபாளையம் அருகிலுள்ள மாங்குடி, கரிவலம் வந்த நல்லூர் போன்றவை பெருநகரங்களாகவோ, வணிகமையமாக இருந்த காலகட்டத்திலோ பாளையக்காரர்கள் ஆட்சியிலோ இம்மரம் வணிகர்கள் வழியாக திருவில்லிப்புத்தூரில் வளர்க்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர் நரேந்திரகுமார்.

தமிழ்த்திரையுலகில் நாற்பதுகளில் நட்சத்திரத்தகுதியோடு வாழ்ந்த முக்கியமான நடிகர் பி.யு.சின்னப்பா. தன் குரல்வளம் காரணமாக திரையுலகில் மட்டுமன்றி நாடக உலகத்திலும் வலம்வந்தவர் அவர். அவருக்கென தனியாக ஒரு நாடகக்குழுவே இருந்தது. திருவில்லிப்புத்தூருக்கு ஒருமுறை அவர் ஒரு நாடகத்தை நிகழ்த்துவதற்காக  வந்தார். திருவில்லிப்புத்தூரில் உள்ள சி.எம்.எஸ்.பள்ளிக்கு அருகில் அந்த நாடகம் நடைபெற்றது. அப்போது நாடகத்தைக் கண்டு களிப்பதற்காக இராசபாளையத்திலிருந்து எஸ்.என்.இராசையா, எஸ்.பி.செல்லப்பிள்ளை, சி.வேல்சாமி, கணபதி, காளியப்பன் உள்ளிட்ட சில நண்பர்கள் ஒரு குழுவாகச் சென்றிருந்தனர். தம் ஊரில் கல்வி வளர்ச்சிக்காக நிதி திரட்டும் பொருட்டு பி.யு.சின்னப்பாவின் குழுவை வைத்து ஒரு நாடகம் நடத்தவேண்டும் என்றொரு எண்ணம் அவர்களுக்கு அப்போது எழுந்தது. அதனால் நாடகம் முடிந்த பிறகு பி.யு.சின்னப்பாவைச் சந்தித்து தம் விருப்பத்தைத் தெரிவித்தனர். கல்வி வளர்ச்சிக்காக என்று குறிப்பிட்டதும் அவரும் தன் கூடிய விரைவில் வருவதாக ஒப்புதலைத் தெரிவித்துவிட்டார். இளைஞர்களுடைய ஆட்டோகிராப்களில் ‘அன்பு வளர்க’ என எழுதி கையெழுத்திட்டு புன்னகையோடு வழியனுப்பிவைத்தார். ஆனால் திருவில்லிப்புத்தூருக்குக் கிடைத்த நற்பேறு இராசபாளையத்துக்குக் கிடைக்கவில்லை. அடுத்த ஐம்பது நாட்களில்,  சொன்ன வாக்கை நிறைவேற்றமுடியாதபடி எதிர்பாராத மரணம் பி.யு.சின்னப்பாவை அள்ளிக்கொண்டு சென்றுவிட்டது.

இசைக்கலைஞர்களிடையில் மோர்சிங் வாசிப்பு மிகவும் புகழ்பெற்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அக்கருவியை உற்பத்தி செய்வதில் அக்காலத்தில் இராசபாளையம் முன்னணியில் இருந்தது என்னும் தகவலை நரேந்திரகுமார் இந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.  தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மோர்சிங் தேவையையும் நிறைவுசெய்யும் ஊராக இராசபாளையம் இருந்தது என்ரொரு குறிப்பை அவர் அளிக்கிறார். சஞ்சீவி ஆசாரி, மகாலிங்கம் ஆசாரி என பல கலைஞர்கள் அதன் உருவாக்கத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்கள் மறைந்த பிறகு அவர்களுடைய பிள்ளைகள் அக்கருவியைத் தயாரிப்பதில் ஈடுபட்டு, பிற்பாடு காலத்தில் கரைந்துபோயினர். மகாலிங்கம் ஆசாரியின் மகனான முனியராஜ் என்பவர் மட்டும் மோர்சிங் தயாரிக்கும் பணியை இன்னும் தொடர்ந்து செய்துவருகிறார். மோர்சிங் உற்பத்தில் இராசபாளையம் முன்னணியில் இருந்தாலும், மோர்சிங் வாசித்து புகழ்பெற்றவர் ஒருவரும் அவ்வட்டாரத்திலேயே இல்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி.

இராசபாளையத்தில் வாழ்ந்த சுதந்திரப்போராட்ட வீரர்களில் ஒருவரான தனுஷ்கோடி ராஜாவைப்பற்றி நரேந்திரகுமார் அளித்திருக்கும் தகவல் சுவாரசியமானது. பெயரின் முன்னொட்டாக தனுஷ்கோடி இருந்தாலும் அவர் இராசபாளையத்தில் வாழ்ந்தவர். 1942இல் நாடெங்கும் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய நண்பரான ஈரோடு கோவிந்தசாமி என்பவரும் அச்சமயத்தில் அவரோடு சிறையில் இருந்தார். அவர் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் ஈடுபாடு கொண்டவர்.  ஓய்வு நேரங்களில் அவருடைய பாடல்களை இசையோடு பாடிப் பொழுதுபோக்குவார். இன்னொரு தொண்டரான சாம்பசிவம் என்பவர் அப்பாடல்களுக்கு விளக்கம் சொல்வார். இப்படி கேட்டுக்கேட்டு ராஜாவுக்கும் பாவேந்தர் பாடல்கள் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது.

சிறையிலிருந்து விடுதலை பெற்று தமிழ்நாட்டுக்குத் திரும்பியதும் முதல் வேலையாக, கடைக்குச் சென்று பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியை வாங்கிக்கொண்டார். அடுத்து, பாரதிதாசனைச் சந்திப்பதற்காக புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்றார். கதர்ச்சட்டை, கதர்ப்பை, தாடி, மீசையோடு போய் வாசலில் நின்ற ராஜாவைப் பார்த்துவிட்டு “யார் நீ? என்ன வேணும்?” என்று விவரம் கேட்டார் பாரதிதாசன். தன்னைப்பற்றிய விவரங்களைச் சுருக்கமாகச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்ட ராஜாவை தன் வீட்டிலேயே ஒரு வார காலம் தங்கவைத்து இலக்கிய உரையாடல்களில் மூழ்கவைத்து, உபசரித்து  அனுப்பிவைத்தார் பாரதிதாசன்.

இராசபாளையத்துக்குத் திரும்பியதும் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது பாரதிதாசன் எழுதிய சித்திரச்சோலைகளே, உலகப்பன் பாட்டு ஆகிய பாடல்களைப் பாடிவிட்டுத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டார். தென்மாவட்டங்களுக்கு வரும்போதெல்லாம் பாரதிதாசனும் ராஜாவைச் சந்திக்காமல் செல்லமாட்டார். இருவருக்குமிடையில் அப்படி ஒரு நெருக்கம் உருவாகிவிட்டது. 

இராசபாளையத்தில் பாரதிதாசன் மீது பற்றுள்ள இளைஞர்களைத் திரட்டி பாரதிதாசனுக்காகவே ஒருநாள் விழா ஒன்றை ஏற்பாடு செய்தார் ராஜா. முல்லை முத்தையாவிடமிருந்து பெற்ற கடிதத்தின் துணையோடு அண்ணாவைச் சந்தித்து விழாவுக்கு வருகை புரியும்படி அழைப்பு விடுத்தார். இராசபாளையம் வடிவேல் ரைஸ்மில்லில் நடைபெற்ற அந்த விழாவுக்கு அண்ணா வருகை புரிந்து பாரதிதாசனுக்குப் பொன்னாடை போர்த்தி திரட்டிவைத்திருந்த இரண்டாயிரம் ரூபாய் பணமுடிப்பை வழங்கினார். அந்த விழா நடைபெற்ற முழுமூச்சாக உழைத்தவர் தனுஷ்கோடி ராஜா. அவரைப்போன்ற தொண்டர்கள் மிக அரிதானவர்கள். அவரைப்பற்றிய விவரங்களைத் தேடி இந்தப் புத்தகத்தில் இணைத்திருக்கும் நரேந்திரகுமார் பாராட்டுக்குரியவர்.

இராசபாளையத்தின் பெருமைமிகு பக்கங்களைக் காட்டுவதோடு மட்டுமன்றி, கறைபடிந்த ஒரு பக்கத்தையும் பதிவு செய்திருக்கிறார் நரேந்திரகுமார். தி.மு.க. உருவான போது, தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் கிராமங்களிலும் பெரும்பாலான இடைநிலை சாதிகளைச் சேர்ந்தவர்கள் அக்கட்சிக்கு ஆதரவு நல்கினர். சமூகத்தில் தமக்கென ஒரு தனித்த அடையாளத்தை அதன் வழியாகப் பெறமுடியும் என்னும் நம்பிக்கை அவர்களை அந்த இயக்கத்தை நோக்கிச் செலுத்தியது.

மேல்சாதி உயர்வு மனப்பான்மை பெருகியிருந்த இராசபாளையத்தில் தி.மு.க.வுக்கு இடைநிலை சாதிகளைச் சேர்ந்தவர்களின் ஆதரவு கூடுதலாகவே இருந்தது என்று குறிப்பிடுகிறார் நரேந்திரகுமார். அக்காரணத்தினாலேயே அவர்களுக்கு மேல்சாதிக்காரர்களின் எதிர்ப்பும் கூடுதலாக இருந்தது. ஒரு கட்டத்தில் தி.மு.க. இயக்கத்தின் கொடியை  இராசபாளையத்தில் எந்த இடத்திலும் ஏற்றமுடியாத நிலை இருந்தது.  ஏற்றிய மறுகணமே அக்கம்பத்தை வெட்டிச் சாய்க்கும் அளவுக்கு வன்மம் உள்ளவர்களாக இருந்தனர் மாற்றுத்தரப்பினர்.

ஒருமுறை இராசபாளையத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த நாஞ்சில் மனோகரன் உரையாற்றுவதற்காக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  முதல்நாள் நள்ளிரவிலேயே தெருமுனைகளில் கொடிக்கம்பங்களை ஊன்றி கட்சிக்கொடிகளைப் பறக்கவிட்டிருந்தனர் கட்சிக்காரர்கள். காலையில் எழுந்ததும் கொடி பறப்பதைப் பார்த்த மாற்றுத்தரப்பினர் ஆத்திரம் கொண்டு ஒவ்வொரு கம்பமாக வெட்டிச் சாய்த்து கொடியைப் பிடுங்கி தீக்கிரையாக்கிக்கொண்டே வந்த்ஹனர். அதைப் பார்த்ததும் முடிதிருத்தும் தொழிலாளியான சேவகன் என்னும் தொண்டருக்கு மனம் பொறுக்கவில்லை. எரிக்கப்படும் முன்பாக கொடியை அவிழ்த்துப் பாதுகாக்கும் உணர்வோடு வேகவேகமாக ஒரு கம்பத்தில் ஏறினார்.  கம்பத்தோடு கட்டப்பட்டிருந்த கொடியைக் கழற்றும் வேலையில் ஈடுபட்டார். கிஞ்சித்தும் இரக்கவுணர்வு இல்லாத மாற்றுத்தரப்பினர் அவர் கம்பத்தின் உச்சியில் இருக்கும்போதே அக்கம்பத்தை வெட்டிச் சாய்த்தனர். அடுத்த கணமே தொபீரென கீழே விழுந்த சேவகன் எலும்பு முறிந்து படுத்த படுக்கையானார். சிறிது கால இடைவெளியில் நலம் குன்றிய நிலையிலேயே அவர் உயிர் பிரிந்தது.

கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டில் ஆட்சி செய்த எல்லா அரசுகளும் தொடர்ந்து புறக்கணித்த ஒரு திட்டத்தைப்பற்றி ஆற்றாமையுடன் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் நரேந்திரகுமார். இராசபாளையத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் ஓர் அணையைக் கட்டும் திட்டம்தான் அது. அழகர் அணைத்திட்டம் என்கிற பெயரைக் கொண்ட அத்திட்டம் முதன்முதலாக ஆங்கிலேயர் ஆட்சியில் 1929இல் கருத்துருவாக விவாதிக்கப்பட்டு, செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. சுதந்திரம் பெற்ற பிறகு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த பக்தவத்சலம் அவர்களுடைய கவனத்துக்குக் கொண்டு சென்றபோதும் அது செயலுருவம் பெறவில்லை. 1969இல் தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்றிருந்த போது திருவல்லிப்புத்தூர் வட்டம் மல்லி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் அன்றைய முதல்வராக இருந்த கலைஞரிடம் நேரிடையாக அழகர் அணைத்திட்டத்துக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போதும் அது செயல்வடிவம் கொள்ளவில்லை. இன்றுவரை ஆட்சியாளர்களிடையில் அது ஒரு பேசுபொருளாக மட்டுமே இருக்கிறதே தவிர, அத்திட்டத்தை நிறைவேற்றும் முனைப்பு ஒருவரிடமும் இல்லை. அழகர் அணைத்திட்டம் தொடர்பான கட்டுரையைப் படித்துமுடிக்கும்போது நரேந்திரகுமாரின் ஆற்றாமை நம் மனத்திலும் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

இராசபாளையத்துக்குப் பெருமை சேர்த்த, சேர்த்துக்கொண்டிருக்கிற பல முக்கியமான ஆளுமைகளின் பங்களிப்பை ஒரு பொது வாசகன் புரிந்துகொள்ளும் வகையில் ஒவ்வொருவரைப்பற்றியும் சிறுசிறு சொல்லோவியங்களைத் தீட்டி இறுதிப்பகுதியில் தனி அத்தியாயமாகவே இணைத்திருக்கிறார் நரேந்திரகுமார். பன்மொழிப்புலவர் ஜகந்நாதராஜா, சென்னை மாநகராட்சி ஆணையராகப் பணிபுரிந்த பெரியசாமி,  பூலித்தேவன் வரலாற்று ஆய்வுநூலை எழுதிய இராசையா, தேவநேயப்பாவாணர், முத்தரசு, மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ், கொ.மா.கோதண்டம், இளங்குமரன் உள்ளிட்ட பலர் அப்பட்டியலில் அடங்குவர். துல்லியமான நிலவியல் சித்திரங்களோடு மண்ணின் மாண்பை உலகத்துக்கு உணர்த்தும் வகையில் வாழ்ந்து மறைந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் அரிய மனிதர்களின் சித்திரங்களையும் இணைத்து, இராசபாளையம் என்னும் பெயரில் அழகிய நூலாகத் தொகுத்து வழங்கியிருக்கும் நரேந்திரகுமார் பாராட்டுக்குரிய மாபெரும் பணியை ஓசையின்றிச் செய்திருக்கிறார். காவ்யா இந்நூலை அழகுற வெளியிட்டிருக்கிறது.

 

(இராஜபாளையத்தைச் சேர்ந்த எழுத்தாளர் நரேந்திரகுமார் ‘சுழலும் இசைத்தட்டின் தன்வரலாறு’ என்னும் தலைப்பில் ஒரு நூலைத் தொகுத்துள்ளார். அவருடைய வாழ்க்கைவரலாறு ஒரு பகுதியாகவும் அவருடைய நூல்களைப்பற்றி பிறர் எழுதிய கட்டுரைகள் இன்னொரு பகுதியாகவும் அமைந்துள்ள இந்நூலை காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அத்தொகுதிக்காக எழுதிய கட்டுரை)