Home

Wednesday 17 August 2016

விடைசொல்லமுடியாத கேள்வி - (கட்டுரை)



     ஆதர்ஷா திரையரங்கிலிருந்து செல்லும் சாலை ஒரு செங்குத்துக்கோடுபோல பழைய சென்னைச்சாலையைத் தொட்டு முடிகிறது. அங்கிருந்து இடதுபுறம் திரும்பி பத்து நிமிடநேரம் நடந்துசென்றால் ஏரியை அடைந்துவிடலாம். யாருமே அதை சாதாரணமாக ஏரி என்று சொல்வதில்லை. அல்சூர் ஏரி என்று குறிப்பிடுவதுதான் வழக்கம். ஒரு செல்லப்பெயர்போல. ஏறத்தாழ ஒரு சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரந்த ஏரி. கணந்தோறும் புகை கக்கியபடி ஓடுகிற வாகனங்களுக்கிடையே உலரவைக்கப்பட்ட பள்ளிக்கூட வெள்ளைச் சீருடைபோல பளபளக்கும். ஏரியையொட்டிய சாலையில் நடக்கும்போது உணரக்கூடிய காற்றின் குளுமையில் திளைப்பது எப்போதும் இனிய அனுபவம்.

     அரசர்களின் காலத்தில் இந்த ஏரியின் பரப்பளவு  இன்னும் அதிகமானதாக இருந்ததுண்டு. பலாமரங்கள் மிகுதியாக இருந்த காடும் வயல்களும் சூழந்த கிராமங்களுடைய இந்த ஏரியே மிகப்பெரிய நீர்ஆதாரம். நகரத்தையொட்டிய சந்தைக்கு விவசாயப் பொருட்களைக் கொண்டுசெல்லவும் சந்தையிலிருந்து தேவையான பொருட்களை வாங்கிவரவும் ஏரியையொட்டி வண்டிச்சாலைகள் சென்றன. ஆங்கிலேயர்கள் தம் இராணுவத்தளத்தை நிறுவிப் பயிற்சி தர இந்த இடமே பொருத்தமென நினைத்து, ஏரியையும் அதையொட்டிய காட்டுப்பகுதியையும் குத்தகைக்கோ அல்லது விற்பனைக்கோ அரசனிடமிருந்து வாங்கினார்கள். பக்கத்துப் பிரதேசங்களின் சிற்றரசர்களிடமிருந்தும் பேரரசர்களிடமிருந்தும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஆங்கிலேயர்களின் ராணுவம் உதவக்கூடும் என்கிற கணக்கில் அவர்களும் இந்த இடங்களை வழங்கினார்கள். தொடக்கத்தில் ராணுவம் கட்டமைக்கப்பட்டு, பரஸ்பர உதவிகள் என்ற நிலையையெல்லாம் கடந்து, நாளடைவில் நகரமே ஆங்கிலேயர்களின் வசமானதும் தளத்தைச்சுற்றிய ஏராளமான பகுதிகள் ஆங்கிலேய அதிகாரிகளின் குடியிருப்புகளாகவும் அவர்கள்மட்டுமே புழங்கக்கூடிய இடங்களாகவும் மாற்றமடைந்தன. அதிகாரிகள் ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்த, அவர்களுடைய மனைவிமார்களும் குடும்பத்தினரும் உல்லாசமாக பொழுதுபோக்கவும் உட்கார்ந்து கதைபேசவும்  ஏரி அழகுபடுத்தப்பட்டது. ஏரியையொட்டி பச்சைப்பசேலென பூந்தோட்டங்fகள் உருவாக்கப்பட்டன. ஏரியில் படகுப்பயணம் ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுமுழுக்க நீர் நிரம்பித் தளும்பிய ஏரி அவர்களுடைய ஆனந்தவாழ்க்கைக்கு உற்ற துணையாக இருந்தது.
     சுதந்திர இந்தியாவில் ஆங்கிலேயர்களின் இராணுவமையம் இந்தியாவின் இராணுவப் பயிற்சிக்கூடமாக மாறியது. துரைசாணிகளின் பொழுதுபோக்கு மையமாக விளங்கிய ஏரி, முதலில் கப்பற்படையினரின் பயிற்சித்தளமாக உருமாற்றப்பட்டது. பிறகு, பொதுமக்கள் வந்துபோகும்படி சுற்றுலாத்தளமாகவும் மாற்றமடைந்தது.  வசிப்பிட நெருக்கடியாலும் வாகன நெருக்கடியாலும் நகரத்தின் முகமே மாறிக்கொண்டிருந்த சூழலில் எல்லாப் பக்கங்களிலும் ஏரிகளும் குளங்களும் சிறுகச்சிறுக தூர்க்கப்பட்டு இல்லாமலாக்கப்பட்டன. கருணையே இல்லாமல் மரங்கள் வெட்டப்பட்டன. அரசியல் செல்வாக்கு ஒன்றிருந்தால் போதும் என நினைக்கத் தொடங்கினார்கள் கட்சிக்காரர்கள். இரக்கமற்ற தன்னலக்காரர்கள். நகரத்தின் பச்சைப்பசேலென்ற முகம் அழிந்துபோக அவர்களும் ஒரு காரணம். அவர்கள் செல்வாக்கு பலிக்காத ஒரே இடமாக இருந்தவை ராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த இடங்கள்மட்டுமே. அல்சூர் ஏரி இன்றளவும் உயிர்த்திருப்பதற்கும் அதன் சாலைகள் இன்னும் பச்சைமரங்கள் சூழ பிழைத்திருப்பதற்கும் ராணுவத்துக்கு நன்றி சொல்லவேண்டும்.
     இருபது ஆண்டுகளுக்கு முன்பாக, இந்த நகரத்துக்கு வந்ததும் நான் மிகவும் ஆசையாகப் பார்த்த இடங்களில் ஒன்று இந்த ஏரி. பல கோணங்களில் அது எங்கள் கிராமத்து ஏரியை நினைவுபடுத்தியது. அதன் கரைகளில் நிற்கும்போது, என் இளமையை மீண்டும்மீண்டும் நான் வாழ்வதுபோல ஓர் உணர்வு தளும்பும்.
     ஒரு மார்ச் மாதத் தொடக்கத்தில் ஏரியின் ஓரமாக மஞ்சள்வண்ணப் பூக்களாலும் நீலவண்ணப் பூக்களாலும் நிறைந்திருந்த மரங்களைக் கண்ட ஆச்சரியம் இன்னும் என் நெஞ்சில் மாறாமல் உள்ளது. வெறும் பூக்களைமட்டுமே கொண்ட மரம் என்பது அதுவரை நான் காணாத அதிசயம். அந்த அழகு ஒரு சித்திரம்போல என் மனத்தில் பதிந்தது. அதன் பெயர்கூட அப்போது எனக்குத் தெரியாது. நானாகவே அவற்றுக்கு தொங்கட்டான் மரம் என்று பெயர்சூட்டிவைத்தேன்.
     மிகவேகமாக ஒரு பெண்ணின் உடலில் உருவாகும் மாற்றங்கள்போல அந்த மரங்கள் உருமாறக்கூடியவை. குளிர்கால இறுதியில் அம்மரங்கள் தம் இலைகளையெல்லாம் உதிர்த்துவிடுகின்றன. அப்போது ஒரு வெள்ளைத்தாளில் எல்லாத் திசைகளிலும் குறுக்கிலும் நெடுக்கிலும் இழுத்து நீட்டிய கோடுகள்போல அதன் கிளைகள் மெலிந்து நீண்டிருக்கும். பிறகு, ஒன்றிரண்டு வாரங்களுக்குள் அவற்றின்மீது தளிர்கள் வெடித்துக் கிளம்பும். கிளைகளெல்லாம் அப்போது பச்சை இலைகளால் நிரம்பி வழியும். எதிர்பாராமல் ஒருநாள் காலையில் கிளைகளிடையே சின்னச்சின்ன பூமொட்டுகள் தொங்கும். காதணிகள்போல. பிறகு அது தன்னை அலங்கரித்துக்கொள்ளும் வேகம் கூடுதலாகும். ஒரு கட்டத்தில் இலைகளெல்லாம் உதிர்ந்துவிட, மரம்முழுக்க பூக்கள்மட்டுமே சுடர்விடும். ஏராளமான விளக்குகளை ஒரேநேரத்தில் ஒளிரவிட்டதுபோல. முடியப்போகும் ஆண்டை வழியனுப்பவும் பிறக்கப்போகும் புத்தாண்டை வரவேற்கவும் இயற்கை ஒளிரவிடும் ஒளிவிளக்குகள் அந்தப் பூக்கள். யுகாதிக்குப் பிறகு அந்தக் கோலத்தை அதிக நாட்கள் இயற்கை அனுமதிப்பதில்லை. அசையும் காற்றில் ஒவ்வொரு பூவாக உதிரத்தொடங்கி ஒருநாள் எதுவுமே இல்லாமலாகும். ஒரு திரைப்படத்தின் காட்சிகள்போல மாறும் அந்தத் தோற்றத்தைத் தொடர்ந்து கவனிப்பதில் நான் எப்போதும் உற்சாகம் கொள்வேன். சில சமயங்களில் குடும்பத்துடன் செல்வேன். சில சமயங்களில் தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ செல்வேன்.  மிகவும் தாமதமாகத்தான் அவற்றின் பெயர்களைத் தெரிந்துகொண்டேன். ஒன்று ஜமக்கரண்டா. இன்னொன்று தெபூபியா அர்ஜென்டினா.
     ஏரியின் நடுவில் வட்டமாகவும் சற்றே உயரமாகவும் செயற்கையாக உருவாக்கப்பட்ட மேட்டில் நிற்கும் ஒரு மழைமரத்தின் தோற்றம் கண்கொள்ளாத காட்சி. கண்ணால் பார்க்கும் கணம் எண்ணற்ற கற்பனைகள் மூண்டெழும். காலம்காலமாக நின்றபடி தவம்செய்யும் ஆதிமனிதன்போல. கையைவிட்டுத் தாவிப்போன ஒன்றை மீண்டும் அடைவதற்காக காற்றுவெளியில் சலிப்பின்றி கிளைவிரல்களால் துழாவும் அரசியைப்போல. மாறிமாறி பருவங்கள் கடந்துபோகிற சூழலில் தன் காதலுக்கு உரியவன் இன்னும் வராததைக் கண்டு மனச்சோர்வோடும் தீராத பதற்றத்தோடும் காத்திருக்கும் இளம்பெண்ணைப்போல. தனிமையில் காற்றில் மரக்கிளைகள் நான்குபுறங்களிலும் நடுங்கிச் சுழலும் காட்சி ஒரு வேகமான நடனத்தைப்போலத் தோன்றும். கரையிலிருந்து தொடங்கும் படகுகள் இக்கரையிலிருந்து அக்கரையைத் தொட்டபிறகு, நடுவிலிருக்கும் மரத்தையும் ஒரு வட்டமடித்துச் சுற்றிவிட்டுத் திரும்புவது வழக்கம். மரத்தை வட்டமடிக்கும்போது ஆனந்தஉச்சத்தில் பயணியர் எழுப்பும் சத்தம் கரையைத் தொட்டு  எதிரொலிக்காத நாளே இல்லை.
     எந்த நேரத்தில் சென்றாலும் ஏரிப்பூங்காவின் புல்வெளியிலும் மரத்தடிகளிலும் சிமெண்ட் இருக்கைகளிலும் ஆட்கள் உட்கார்fந்திருப்பார்கள். பெரும்பாலும் ஜோடிகள். ஒருவர் தோளை ஒருவர் தொட்டு அழுத்தியபடியும் சாய்ந்தபடியும் கைகோர்த்தபடியும் அவர்கள் அமர்fந்திருக்கும் கோலம் தம்மைச்சுற்றி யாருமே இல்லை என்று அவர்கள் நினைத்துக்கொள்வதாகத் தோன்றும். அவர்கள் ஒரு தனியுலகிலும் பூங்கா வேறொரு உலகத்திலும் இருப்பதுபோன்ற கற்பனை. ஆட்டோக்களிலும் சொந்த வாகனங்களிலும் நடந்தும் ஏராளமான இளம்ஜோடிகள் வந்து நிறைந்தபடியே இருப்பார்கள். விதம்விதமான உடைகளிலும் ஒப்பனைகளிலும் உரசியபடியும் ஒருவர் தோள்மீது மற்றவர் சாய்ந்தபடியும் கைகளை இறுக்கமாகப் பற்றியபடியும் தலைகுனிந்தவண்ணம் சிற்பங்களைப்போல அவர்கள் அசைந்தசைந்து வருவதை ஒருவித கூச்சத்தோடும் பரபரப்போடும் பல நாட்கள் பார்த்திருக்கிறேன். வாசலையொட்டி விற்கப்படுகிற ஐஸ்கிரீமை வாங்கி, மாற்றிமாற்றி அவர்கள் சுவைத்துக்கொள்ளும் போக்கில் ஒரு மிதமான போதையைக் கண்டிருக்கிறேன். பொருத்தமான நிறம்கொண்ட அழகான புடவைகள். கச்சிதமான சூடிதார்கள். பின்னலின் தொங்கும் மல்லிகைச்சரம். காதோரமாக ஆட்காட்டி விரலால் சுற்றப்பட்டு சுற்றப்பட்டு விடுவிக்கப்படும் அழகான சுருள்முடி. எதிர்பார்ப்பும் ஏக்கமும் மிதக்கும் கண்கள். அவசரமே இல்லாத பொடிநடை. ஒவ்வொன்றும் அவர்கள் நெஞ்சில் நிரம்பியிருக்கிற ஆழ்ந்த ஏக்கத்தை உலகுக்கே சொல்லாமல் சொல்வதை உணர்ந்திருக்கிறேன்.
     ஊரிலிருந்து வந்திருந்த நண்பனிடம் அல்சூர் ஏரியைப்பற்றிச் சொன்னதுமே அவன் அதைப் பார்க்க விரும்பினான். எல்லாருமே நடந்து சென்றோம். நண்பனுடைய குழந்தைக்கு நகரத்தின் வேகம் நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது. அவள் வாய் ஓயவே இல்லை. கால்களும் தரையில் படவில்லை. கண்ணில் படுகிற ஒவ்வொன்றையும் பார்த்து "ஐ பூமரம்", "ஐ தண்ணீர்ப்பழம்" என்று இடைவிடாமல் வியப்பை வெளிப்படுத்தியபடி வந்தாள். பார்க்கிறவர்கள் எல்லாரும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு அச்சிறுமியின் குரல் ஓங்கி ஒலித்ததைக் கேட்டு, அவள் தாய் சற்றே வெட்கமும் சங்கடமும் அடைந்து, "ஸ்..ஸ்.." என்று மெதுவாகக் குரலெழுப்பி அடக்கப் பார்த்தாள். "என்னம்மா நீ, ஸ்கூல்லயும் சத்தமா பேசக்கூடாது, வீட்டுலயும் சத்தமா பேசக்கூடாது, தெருவுலயும் சத்தமா பேசக்கூடாதுன்னா, எங்கதான் சத்தமா பேசலாம், சொல்லு?" என்று சிணுங்கினாள் சிறுமி. நாங்கள் எல்லாருமே சிரித்துவிட்டோம். "எதுக்கும் கவலப்படவேணாம் கண்ணு, நீ பேசு. தாராளமா பேசு, ஒன்ன யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க, எல்லாத்தயும் நான் பாத்துக்கறேன்.." என்று அவளுக்கு ஆதரவாகக் குரலெழுப்பினேன். அடுத்த கணமே அவள் என்னோடு ஒட்டிக்கொண்டாள். "அங்கிள் அது என்ன?" "அங்கிள் அங்க என்ன இருக்குது?" கண்ணில்பட்ட ஒவ்வொன்றைப்பற்றியும் கேள்வி கேட்டாள். ஒரு பதில் முடிவதற்குள்ளாகவே மற்றொரு கேள்வி தயாராக இருந்தது. அவள் உருவமே ஒரு கேள்விக்கிடங்குபோல இருந்தது. அந்த நடையை அவள் கேள்விகளின் பயணமாக மாற்றிவிட்டாள். ஒரு திருப்பத்தில் ஏரி தெரிய ஆரம்பித்ததுமே அவள் "இவ்வளவு மழத்தண்ணிய எதுக்காக இங்க தேக்கிவச்சிருக்காங்க?" என்று கேட்டதுதான் கேள்விகளின் உச்சம். அவள் தாய் வெட்கம் தாங்காதவளாக, "அடியே குட்டி, தோல்வாய்டி ஒனக்கு. பேசாம சும்மா வாடி.." என்றபடி, அழுத்தமில்லாமல் அவள் தலையில் செல்லமாகத் தட்டினாள்.  மற்றவர்களால் சிரிப்பைத் தாங்கமுடியவில்லை. கண்களில் நீர் தளும்பும் அளவுக்கு சிரித்தார்கள். அவள் எதைப்பற்றியும் கவலையே படாமல் அடுத்த கேள்விக்குத் தாவினாள். "அங்கிள், அந்த மரங்களுக்கெல்லாம் பூவச்சி எதுக்காக அலங்காரிச்சி வச்சிருக்காங்க?" மீண்டும் சிரிப்பலை.
     வாசலில் வாகனங்கள் அத்துமீறி நுழைந்துவிடாமல் இருக்கும்பொருட்டு இடுப்பு உயரத்தில் நான்கு கல்தூண்களை நட்டுவைத்திருந்தார்கள். அவற்றின் இடைவெளிகளில் புகுந்து உள்ளே சென்றோம். சிறுமி ஏதாவது கேட்கக்கூடும் என்று நான் நினைப்பதற்குள், "இங்க எதுக்காக கல் நட்டு வச்சிருக்குது அங்கிள்? கல்லு கூட மொளைக்குமா?" என்று கேட்டுவிட்டாள். உடனே சிரிப்பு உயர்ந்தது. "ஐயோ, மானத்த எடுக்காதடி, வாடி இங்க.." என்று தன் பக்கமாக இழுத்துக்கொண்டாள் அவள் தாய். எல்லாமே ஆறேழு அடி தொலைவு நடக்கும்வரைதான். மறுகணமே எல்லாவற்றையும் மறந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள் சிறுமி.
     செடிகளின் வேருக்கருகே பல சேவல்கள் எதையோ கொத்திக்கொண்டிருந்தன. வெள்ளை. கருப்பு. பழுப்பு நிறங்களில் மிடுக்கான சிப்பாய்கள்போல அவை காணப்பட்டன. சிவப்பு நிறத்தில் கொண்டையும் தாடியும் வசீகரமாக அசைய கொக்கொக் என்று ஓசையிட்டபடி தலைநிமிர்ந்து நடந்தன. எதிர்பாராத கணத்தில் சட்டென்று ஒரு சேவல் எகிறிப் பறந்து கம்பிவலைச் சுவர்மேல் உட்கார்ந்து தலையை ஆட்டியது. சுவரோரமாக இன்னொரு மூலையில் சில கோழிகள் மேய்ந்துகொண்டிருந்தன.
     இரண்டு படகுகளுமே ஏரிக்குள் போயிருந்தன. திரும்பி வந்த பிறகுதான் அடுத்த சவாரி என்றார்கள். குளிர்ந்த காற்றை அனுபவித்தபடி கொஞ்ச நேரம் கரையிலேயே நின்று வேடிக்கை பார்த்தோம். அதற்குள் சிறுமி குனிந்து தண்ணீரைத் தொட்டு வாரியிறைக்கத் தொடங்கினாள். அதன் தாய் பலமுறை எடுத்துச் சொன்னபிறகும் அவள் செய்கையை நிறுத்த முடியவில்லை. ஒரு பாதுகாப்புக்காக, கரையிலிருந்து விலகி பூங்காவுக்குள் வந்தோம்.
     எங்காவது உட்காரலாமா என்று இடம்பார்த்தோம். எல்லா சிமெண்ட் பெஞ்சுகளிலும் ஆட்கள் உட்கார்ந்திருந்தார்கள். எங்கெங்கும் இளம்ஜோடிகள்.  புன்னகையாலும் வெட்கத்தாலும் நிறைந்த முகங்கள். பின்னல்முடிச்சுக்குள் சிலர் விரல்கள் அளைந்தபடி இருந்தன. சிலர் விரல்கள் குச்சியால் தரையில் கோடுபோட்டுக் கிழித்தன. கொஞ்சதூரம் நடந்தபிறகு, ஒரு புல்வெளியில் நாங்கள் உட்கார இடம்கிடைத்தது. "என்னடா இப்படி உக்காந்திருக்காங்க? இவ்ளோ பேரு இருக்காங்களேன்னு வெக்கமே வராதா?" நண்பன் காதருகே கிசுகிசுத்தான். "இதுல என்னடா தப்பிருக்குது? ஊருல கெணத்தங்கரை, ஏரிக்கரைல பாத்துக்கறதில்லயா? அதுமாதிரிதான் இது." என்றேன்.
     "அங்க ரகசியமா பாத்துக்கறதுக்கும் இப்படி கூட்டத்துக்கு நடுவுல பாத்துக்கறதுக்கும் வித்தியாசம் கெடையாதா?" ஆதங்கத்துடன் வெளிப்பட்டது அவன் கேள்வி.
     "வும் ஒருவகையில ரகசியம்தான்டா. அவுங்க யாருன்னு அவுங்களுக்குத் தெரியாது. அவுங்க யாருன்னு இவுங்களுக்குத் தெரியாது. அப்படின்னா அது ரகசியம்தான?"
     அதை ஏற்றுக்கொள்ளமுடியாததை அவன் முகத்தில் தென்பட்ட சலிப்பின் சாயல் உணர்த்தியது. மெதுவாக நான் பேச்சின் திசையை மாற்றி, கரையின் மறுபக்கம் இருந்த தமிழ்ச்சங்கக் கட்டிடத்தையும்  திருவள்ளுவர் சிலை இருக்கக்கூடிய திசையையும் காட்டினேன். தோளில் ஒரு குட்டிக்குரங்கைச் சுமந்துகொண்டு வந்த ஒருவன் எங்கள்முன்னால் உட்கார்ந்து குரங்கை இறக்கி வித்தை காட்டினான். கையில் வைத்திருந்த சின்ன கோலை குறுக்கில் நீட்டி "தாண்டுடா ராமா.. தாண்டுடா ராமா" என்றான். அவன் கட்டளைக்குப் பணிந்த குரங்கு இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்துக்கும் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கத்துக்கும் மாறிமாறித் தாண்டியது. அதன் நெற்றியில் வட்டமாக குங்குமம் வைக்கப்பட்டிருந்தது. துறுதுறுப்பான வட்டக்கண்கள் இங்குமங்கும் அலைபாய்ந்தன. "மல மேல ஏறுடா ராமா.. ஏறுடா ராமா" என்று அவன் கோலை செங்குத்தாக நிறுத்தினான். குரங்கு மடமடவென்று அதன்மீது ஏறி உச்சியில் நின்றது. வாலை அழகாகத் தொங்கவிட்டு ஆட்டியது. சிறுமி குதித்துக்குதித்துச் சிரித்தாள். அவள் கைத்தட்டலால் குரங்கும் குரங்காட்டியும் உற்சாகமடைந்தார்கள். "காலயிலேருந்து ஒன்னும் கெடைக்கல சாமி, கொரங்கும் நானும் பட்டினி சாமி" என்று முகத்தை அடைத்திருந்த பத்துநாள் தாடியைச் சொரிந்துகொண்டே சொன்னான் குரங்காட்டி. முதல்நாள் இரவில் கன்டோன்மென்ட் ஸ்டேஷனில் பயணச்சீட்டு பரிசோதகரால் ஓடும் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்டது எப்படி என்று கதைபோலச் சொல்லத் தொடங்கினான். எல்லாரும் அவன் கதையைக் கேட்டு உருகி நின்றார்கள். செய்தியைப் புரிந்துகொண்டமாதிரி, சட்டென்று  இறங்கிவந்த குரங்கு, அவன் தோளில் தொங்கிய பையிலிருந்து தட்டை எடுத்து பாவம்போல உம்மென்று முகத்தைவைத்துக்கொண்டு நீட்டியது. தட்டுடன் அது நடந்துவரும் கோலத்தை நம்பமுடியாமல் பார்த்தாள் சிறுமி. நண்பர் சில்லறையை பையிலிருந்து எடுத்ததும், "அப்பா அப்பா நான் குடுக்கறேன்" என்று வேகமாக அவற்றை வாங்கி குரங்கு நீட்டிய தட்டில் போட்டாள். நன்றி சொல்லி கும்பிட்டுவிட்டு வேறு பக்கமாக நடந்தான் அவன். சுவரோரமாக நடந்துகொண்டிருந்த ஒரு சேவலைப் பார்த்து குரங்கு சட்டென்று சீறியது. அதன் கழுத்திலிருந்த கயிற்றை இறுக்கி "ஸ்" என்று அடக்கினான். அதற்குள் படகு கரையைத் தொடுவதைப் பார்த்த சிறுமி, "அங்கிள் படகு வந்தாச்சி.. படகு வந்தாச்சி" என்று குதித்தாள். எல்லாரும் சிரித்தார்கள்.
     படகு நகரத் தொடங்கியதும் பேச்சு நின்றுவிட்டது. ஒருவித ஆர்வமும் அச்சமும் கலந்த உணர்வுடன் அலைநௌiயும் தண்ணீர்ப்பரப்பைப் பார்த்தார்கள். மோட்டார் சத்தத்தில் மரங்களில் இருந்த பறவைகள் கலைந்து எழுந்து வானில் பறந்தன. சிறிது தொலைவுவரைக்கும் வாகனச்சத்தம் கேட்டபடி இருந்தது. பிறகு, எல்லாச் சத்தமும் அடங்கிவிட, ஒரே அமைதி. உறுமும் படகுமோட்டார் சத்தத்தைமட்டுமே அனுமதித்த அமைதி. அக்கணம் மனம் சற்றே பதைபதைத்தது. ஒரு வட்டமாகச் சுற்றி மறுகரையைத் தொட்டபோது மீண்டும் வாகனங்களின் இரைச்சல் கேட்டது. அசைவதுபோல தோற்றமளித்த கட்டடங்களின் வரிசை ஆச்சரியமாக இருந்தது. நடு ஏரியில் நிற்கும் ஒற்றைமரத்தைச் சுற்றும்போது மனம் அதிர்ந்தது. மரமாகச் சபிக்கப்பட்ட ஏதோ ஒரு உயிர் கதறி அழைப்பதுபோல ஒரு எண்ணம் அலைக்கழித்தது. மரம் மறைந்து, தலைவிரித்தாடுகிற ஒரு பெண்ணின் வெறிமுகம் அந்த வெட்டவெளியில் பரவியது. கரையை நெருங்குகிறவரைக்கும் அந்த எண்ணம் அகலவே இல்லை.
     படகிலிருந்து இறங்கி, அருகிலிருந்த கடையில் தேநீர் அருந்திவிட்டு வெளியேவந்து மீண்டும் புல்வெளியைத் தேடி நடந்த  கணத்தில் நெஞ்சை உறையவைக்கும் குரல்களும் அலறல்களும் எழுந்fதன. என்ன என்று புரிவதற்கு சில கணங்கள் பிடித்தன. "என்னா திமிருடா ஒனக்கு? ஏரியா உட்டு ஏரியா வந்துட்டா தெரியாம போயிடும்னு நெனச்சிட்டியா?"  "நீ கெட்ட கேட்டுக்கு லவ்வாடா கேக்குது லவ்வு?" கையில் உருட்டுத் தடிகளோடு நின்ற சிலர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந் இளைஞனொருவரை காலாலேயே பந்தை உதைக்கிறமாதிரி உதைத்துத் தள்ளினார்கள். நிலைகுலைந்து உருண்டு விழுந்தான் அவன். "அவர உடுங்கடா... அவர உடுங்கடா" என்று அலறிய பெண்ணை வேறொரு நான்குபேர் இழுத்து நிறுத்திக்கொண்டார்கள். திமிறிய வேகத்தில் அவள் துப்பட்டா நழுவி விழுந்ததுகூடத் தெரியவில்லை. சரமாரியாக அடிகள் அவன் முதுகிலும் தலையிலும் இறங்கின. அவன் தப்பித்துச் செல்லமுடியாதபடி வட்டம் கட்டி அடித்தார்கள். "அவள மறந்துடுன்னு அன்னிக்கு குடுத்தயெல்லாம் மறந்துட்டியா? மாட்டு ஜென்மமா நீ"  "இன்னிக்கு ஒன் எலும்ப எண்ணாம உடறதில்லடா பாத்துக்கோ?"  "மொவனே, இன்னிக்கு ஒனக்கு சாவுதான்?"  "தொரைக்கி பெரிய மன்மதக்குஞ்சின்னு நெனப்பா?"  "பத்து ரூபா சம்பாதிக்கறதுக்கு வக்கு இல்லாத நாய் நீ. சுத்தறதுக்கு பணக்கார பொண்ணுதான் கேக்குதா ஒனக்கு?"  "கைகால முரிச்சி பிச்ச எடுக்க வச்சாதான் நீ வழிக்கு வருவ" பயங்கரக் கூச்சலோடு அவனைச் சுற்றி நின்று அடித்தார்கள். அவர்களுடைய கர்ஜனை ஏதோ மிருகங்களின் ஊளைபோல இருந்தது. அவன் தலை உடைந்து ரத்தம் ஒழுகியது. அம்மா என்று அலறியபடி அவன் உடல்குறுகி தரையில் விழுந்தான். வலி தாளாமல் கையைவைத்து தலையில் அழுத்தினான். அவன் விரல்களிடையே வழிந்த ரத்தம் கோடாக வழிந்து தரையில் துளித்துளியாகச் சிந்தியது. "கதிரேசா... கதிரேசா..." என்று அந்தப் பெண் கத்தினாள். வந்திருந்த கூட்டம் இற்றுவிழுந்த தென்னைஓலையை இழுத்துச் செல்வதுபோல அவளை கதறக்கதற வாசல்பக்கமாக இழுத்துக்கொண்டு போனது. தயாராக இருந்த வாகனத்துக்குள் தள்ளி, வேகமாக கதவைச் சாத்திக்கொண்டு கிளம்பினார்கள்.
     எங்கள் உடல்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. யாருக்கும் பேச்சு வரவே இல்லை. "போயிடலாம்டா" என்று அச்சத்தோடு காதருகே குழறினான் நண்பன். அந்தப் பையனை பக்கத்தில் இருந்த சிலர் தூக்கி உட்காரவைத்தார்கள். கந்தலாக அவன் துணி கிழிந்து தொங்கியது. முகம் முழுக்க ரத்தக் கோடுகள். ஒருவர் அவனிடம் ஒரு பாட்டிலில் தண்ணீர் கொடுத்து பருகும்படி சொன்னார். இரண்டு வாய் குடிப்பதற்குள் அவனுக்கு மூச்சுத் திணறியது. கையிலிருந்து பாட்டில் நழுவியது. "தூக்குங்கப்பா.. தூக்குங்கப்பா, ஆஸ்பத்திரிக்கு கொண்டும் போயிடலாம். யாரு பெத்த புள்ளயோ" நாலு பேர் அவனைத் தூக்கிக்கொள்ள மேலும் சிலர் அவனுக்கு ஆதரவாக வந்தார்கள். வாசலில் நின்றிருந்த ஒரு ஆட்டோவில் ஏற்றினார்கள். ஆட்டோவை வழியனுப்ப பூங்காவில் இருந்த கும்பலெல்லாம் திரண்டு வாசலுக்கு வந்துவிட்டது. எங்கிருந்தோ வந்த ஒரு சேவல் நடந்துபோய் துளித்துளியாய் சொட்டித் தேங்கிய ரத்தத்தை குனிந்து முகர்ந்து பார்த்தது. பச்சைப்புல்மீது சிவப்பு வட்டமான ரத்தத்திட்டையே சில கணங்கள் சுற்றிச்சுற்றி வந்தது. பிறகு மெதுவாக மரத்தடியைநோக்கி நடந்து, அங்கே சிதறியிருந்த கடலைகளைக் கொத்தித் தின்னத் தொடங்கியது.
     எல்லாரும் அமைதியாக வீட்டுக்குத் திரும்பி நடந்தோம். எங்கள் மகிழ்ச்சியெல்லாம் ஒரே நொடியில் தண்ணீர்ப்பானைபோல உடைந்து நொறுங்கிவிட்டது. ஏரியை திரும்பிப் பார்க்கும்போது கசப்பான வெறுமையும் அச்சமும் மனத்தில் படர்ந்தன. ரத்தம் தோய்ந்த அந்த இளைஞனின் முகம் கண்ணெதிரே மிதந்தபடி இருந்தது. அந்தக் காட்சியை மறக்கவே முடியவில்லை. "கதிரேசா.. கதிரேசா.." என பிடிகளிலிருந்து திமிறிக்கொண்டு சத்தமிட்ட அந்தப் பெண்ணின் கதறலை நினைத்தபோது, காரணமே இல்லாமல் கிளைகளைச் சுழற்றியாடிய நடுஏரி மரம் நினைவுக்கு வந்து அலைக்கழித்தது. அந்த மௌனத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. யாராவது பேசினால் நன்றாக இருக்குமென்று தோன்றிய சமயத்தில், அந்தச் சிறுமி மெதுவாக என் விரலைப் பற்றி "அங்கிள், எதுக்காக அந்த அண்ணன எல்லாரும் போட்டு அடிச்சாங்க?" என்று கேட்டாள்.

(’யுகமாயினி’ இதழில் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த கட்டுரை)