Home

Monday, 28 November 2016

கனவு நனவான கதை - (புத்தக அறிமுகம்)


ஆறாம் வகுப்பில் எங்களுக்கு ஆசிரியராக இருந்த ராமசாமி சாரை நினைத்தால் எனக்கு இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. எங்களுக்கு அவர் எடுக்காத பாடமே இல்லை. தமிழ் நடத்துவார். கணக்கும் சொல்லித்தருவார்.  ஆங்கில எழுத்துகளை கூட்டி உச்சரிக்கும் விதங்களில் இருக்கும் வேறுபாட்டை, மரங்களில் கொத்துக்கொத்தாகத் தொங்கும் புளியம்பழங்களைக் குறிபார்த்து அடிக்கச் சொல்லித் தருகிற லாவகத்தோடும் சுவாரஸ்யத்தோடும் சொல்லித்தந்ததை மறக்கவே முடியாது. ஒவ்வொரு நாளும் எங்கள் முன்னால் விலைமதிப்பற்ற புதையல்களை அவர் அள்ளிப்போட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் பாடங்களையெல்லாம் நடத்துகிற சமயத்தில் கொஞ்ச நேரம் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கவேண்டிய அவசியம் இருந்தது அவருக்கு. ஆனால், சரித்திரம், பூகோளம் நடத்துவதற்கு எந்தப் புத்தகத்தையும் புரட்டிப் பார்க்கிற அவசியமே இருந்ததில்லை. அப்படியே நேரிடையாக நினைவிலிருந்து அருவிபோலப் பொழியத் தொடங்கிவிடுவார்.


ஒருநாள் படையெடுப்புகளின்போது உடைக்கப்பட்ட சிலைகளைப்பற்றிய பேச்சு எங்கெங்கோ அலைந்து, ஆங்கிலேயர்களுக்காக உருவாக்கப்பட்ட சிலைகளைப்பற்றிய பேச்சில் வந்து நின்றது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த சமயத்தில் அரசாட்சியின் உயர்வுக்குக் காரணமாக இருந்த ஒருசிலரைப் பெருமைப்படுத்தும் விதமாக, நாட்டின் முக்கியமான நகரங்களில் அவர்களுடைய சிலைகள் எழுப்பப்பட்டன.  சென்னையில் அவ்விதத்தில் நிறுவப்பட்ட இரண்டு சிலைகள் முக்கியமானவை. ஒன்று, நீல் என்னும் அதிகாரியுடையது, மற்றொன்று தாமஸ் மன்றோ என்னும் அதிகாரியுடையது. சுதந்திரத்துக்குப் பிறகு, நீல் சிலை அகற்றப்பட்டது. தாமஸ் மன்றோ சிலை மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. இதற்குக் காரணம் என்ன என்றொரு கேள்வியைக் கேட்டார் ராமசாமி சார். பிறகு அவரே விடையையும் சொன்னார். அதிகாரத்தின் எல்லை தெரியாமல், தன்னிடம் அதிகாரம் உள்ளது என்கிற காரணத்தாலேயே மக்களைத் துன்புறுத்திய அதிகாரி நீல். கொடுங்கோலன். இரக்கமில்லாத நெஞ்சுக்காரன். எண்ணற்ற மக்களின் அமைதியான வாழ்வைக் குலைத்தவன். தன்னை எதிர்த்த இந்தியப் படைவீரர்களை கூட்டம்கூட்டமாகக் கொன்றொழித்தவன். அவன் மீது கொண்ட வெறுப்பு மக்கள் நெஞ்சில் மாறாமல் பதிந்திருந்தது. அந்த வெறுப்பே சுதந்திரத்துக்குப் பிறகு, அவன் சிலை அகற்றப்படுவதற்கு அடிப்படைக் காரணமானது. மன்றோவும் அதிகாரிதான். ஆங்கிலேயன் என்றாலும் இந்தியர்களை தன் ஆட்சிக்குட்பட்டவர்கள் என்று கருதினாரே ஒழிய, ஒருபோதும் அவர்களை அடிமை என்று நினைத்ததில்லை. அவருடைய பல நடவடிக்கைகள் பொதுமக்களுக்குச் சாதகமாகவே எப்போதும் இருந்தன. இந்தியாவின் செல்வத்தைச் சுரண்டியெடுத்துச் செல்வதற்காகவே இங்கே அதிகாரிகளாக பலரும் குடியேறிக்கொண்டிருந்த சமயத்தில், வேலைக்கான சம்பளத்தைத் தவிர வேறு எதையும் எண்ணிப் பார்க்காதவர் அவர்.  ராமசாமி சார் அன்று வகுப்பு முடிகிறவரைக்கும் இரண்டு அதிகாரிகளைப்பற்றியும் சொல்லிக்கொண்டே இருந்தார். தாமஸ் மன்றோவின் பெயர் என் இளம் மனத்தில் அப்படித்தான் பதிந்தது.
வாடகைவீட்டில் குடியிருந்தபடி சென்னை ராஜதானிக்கு முதல்வராகப் பணியாற்றிய ராஜாஜி, நமது நாட்டின் ஒவ்வொரு அமைச்சரும் அதிகாரியும் தாமஸ் மன்றோவை முன்னுதாரண புருஷனாக நினைத்துச் செயல்படவேண்டும் என்று அடிக்கடி சொல்வதுண்டு என்று எப்போதோ ஒருமுறை படித்தேன். அந்தக் குறிப்பு, அவரைப்பற்றி மேலும் அறிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆவலைத் தூண்டிவிட்டது. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடிக்கிற தருணத்தில், கூடுதலாகத் தேவைப்பட்ட தொகையை அரசு தரமறுத்ததும், இங்கிலாந்தில் தமக்கிருந்த சொத்து, வீடு, நகைகள் எல்லாவற்றையும் விற்றுப் பணமாக மாற்றி எடுத்துக்கொண்டு வரும்படி தன் மனைவிக்குக் கடிதம் எழுதிய பென்னி குயிக் என்கிற அதிகாரி மற்றும் வனவிலங்குகளின் வருகையால் எளிய கிராமத்து மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, தன் சொந்தச் சேமிப்பிலிருந்து பணத்தை எடுத்து, ஏறத்தாழ ஐந்தரை கிலோமீட்டர் தொலைவுக்கு பாதுகாப்பான முறையில் ஆளுயர நீளச் சுவரைக் கட்டியெழுப்பித் தந்த ஜிம் கார்பெட் என்கிற வேட்டை ஆர்வலர் ஆகியோரின் வரிசையில் தாமஸ் மன்றோவுக்கும்  என் மனம் இடமளித்தது. தருமபுரியைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒருமுறை தற்செயலாக மன்றோவின் பெயரால் எழுப்பப்பட்டிருந்த பெரிய ஸ்தூபி ஒன்றைப் பார்த்தேன். அதையொட்டி, ஒரு பெரிய குளமும் மாளிகையும் இருந்தன. அவை மன்றோவால் உருவாக்கப்பட்டவை என்று என்னோடு வந்த நண்பர் சொன்னார். மன்றோவைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆவல் பெருகிப்பெருகி அது ஒரு கனவாகவே ஆழ்மனத்தில் விதையாக விழுந்துவிட்டது.

மன்றோவைப்பற்றிய தகவல்களை அடங்கிய புத்தகமொன்று முன்னூறு பக்க அளவில் ”கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ” என்கிற தலைப்பில் வந்திருப்பதாக சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர் தங்கமணி தொலைபேசியில் சொன்னார். அந்தப் புத்தகத்துக்கான அறிமுகக்கூட்டமொன்றை தனது கிராமத்தில் ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். இரண்டுவார இடைவெளிக்குப் பிறகு, அவருடன் பேசி கூட்டம் நடைபெற்ற விதத்தைப்பற்றித் தெரிந்துகொண்டேன். மாவட்டத்தில் உள்ள பல முக்கிய வாசகர்கள் கலந்துகொண்டார்கள் என்றார். புத்தக ஆசிரியரான இடைப்பாடி அமுதன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை மகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார்.  அந்தப் புத்தகத்தைப் படிக்க நான் மிகவும் ஆவலாக இருந்தேன். அந்த வார இறுதியில் தங்கமணி எனக்கு அதை அனுப்பிவைத்தார்.  நானும் அதை அன்றே படித்துமுடித்தேன். நாற்பதாண்டுகளாக என் மனம் சுமந்திருந்த கனவு அன்று நனவானது. இந்த ஆண்டில் நான் படித்த புத்தகங்களில் இது ஒரு முக்கியமான புத்தகம்.

மன்றோவின் வாழ்க்கை வரலாறைப் படிக்கும்போது ராபர்ட் கிளைவை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. இருவருமே மிக எளிய ஒரு சிறிய வேலையை ஏற்றுக்கொண்டு இந்தியாவுக்கு வந்தவர்கள். ஆங்கிலேய ஆட்சியின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு உழைத்தவர்கள்.  ஒரு போரில் ஈட்டித் தந்த வெற்றி, அவரே எதிர்பார்க்காதபடி வாழ்க்கையின் மிக உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் சென்றது. ஆனால் அதை அவரால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. அவருடைய அதிகார ஆணவம், தன்னிச்சையான போக்கு, தந்திரங்கள் அவரை வெகுவிரைவில் கீழே சரியவைத்துவிட்டன. பதவியிலிருந்து இறக்கப்பட்டு, விசாரணைக்காக அழைக்கப்படும் அளவுக்கு அவருடைய நடவடிக்கைகள் இருந்தன. இதற்கு நேர்மாறாக, மன்றோவின் வளர்ச்சி மிகமிக நிதானமாகவே மேல்நோக்கிச் செல்கிறது. பதினைந்து ரூபாய் சம்பளம் வாங்கும் சிப்பாயாக வேலையில் சேர்ந்து, தொடர்ச்சியாக ஒவ்வொரு கட்டத்திலும் தன் திறமையை நிரூபித்து மேல்நிலையை அடைந்தார். இறுதியில் விடுப்பில் ஊருக்குச் சென்றுவிட்டவரை அழைத்து இங்கிலாந்து அரசாங்கம் அவருக்கு கவர்னர் பதவியை அளித்தது.

கிளாஸ்கோ நகரில் 27.05.1761 அன்று மன்றோ பிறந்தார். நான்கு சகோதரர்களையும் இரண்டு சகோதரிகளையும் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. தந்தை அலெக்ஸாண்டர் மன்றோ. தாய் மார்கரெட் ஸ்டார்க். சிறுவயதில் மன்றோ அம்மை நோயால் பாதிக்கப்பட்டார். தன் தாக்கம் கடுமையாக இருந்த்து. அம்மையின் தழும்புகள் அவர் முகத்தில் கடுமையாகப் பதிந்தன. அம்மையின் காரணமாக இளம்வயதிலேயே காது கேட்கும் திறன் குறைந்துபோனது. வணிகத்துறையில் ஈடுபட்டிருந்த தந்தை கடுமையான பொருளிழப்புக்கு ஆளானார். வறுமை வாட்டிய நிலையில், மகன் மன்றோவை இந்தியாவில் இருந்த வேலைவாய்ப்பைக் கேள்விப்பட்டு அனுப்பிவைத்தார். இந்திய ராணுவத்தில் சிப்பாய் வேலைக்காக மன்றோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பத்து மாதங்களுக்கும் மேற்பட்ட நீண்ட கப்பற்பயணத்தில் கப்பலில் கிடைத்த பணியாள் வேலையைப் பார்த்தபடி இந்தியாவை அடைந்தார்.

மன்றோவின் ஆரம்பச் சம்பளம் ஐந்து பக்கோடா. ஒரு பக்கோடா என்பது மூன்று ரூபாய்க்குச் சமம்.  தன்னுடன் வேலை செய்த மொழிபெயர்ப்பாளருக்கு இரண்டு பக்கோடாவையும் சமையல்காரருக்கு ஒரு பக்கோடாவையும் முடிதிருத்துபவருக்கும் துணிவெளுப்பவருக்கும் ஒரு பக்கோடாவையும் சம்பளமாக்க் கொடுத்தார். எஞ்சிய ஒரு பக்கோடாவை தன் செலவுக்கு வைத்துக்கொண்டார். பன்னிரண்டு ஆண்டுகள் ராணுவத்தில் சேவையாற்றியபின்னர் நிர்வாகப்பிரிவில்  கிடைத்த பணியை ஏற்றுக்கொண்டார்.

மன்றோவின் நிர்வாகப்பணி பாராமகால் என்னும் இடத்திலிருந்து தொடங்கியது. தற்போதைய தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பெரும்பகுதியும் வட ஆர்க்காட்டின் திருப்பத்தூர் பகுதியையும் சேர்த்து அக்காலத்தில் பாராமகால் எனப்பட்டது. ஜெகதேவி, மத்தூர், கனககிரி, வீரபத்திரதுர்க்கம், காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, மலப்பாடி, தட்டக்கல், மகாராஜாகடை போன்ற பன்னிரண்டு கோட்டைகளைக்கொண்ட நிர்வாகப் பிரிவுகளைக் கொண்டது பாராமகால். ஏறத்தாழ ஏழாண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் பணிபுரிந்தார் மன்றோ. தனது நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளில் குதிரையில் வலம் வந்தபடி இருந்தார் மன்றோ. பெரும்பாலும் கூடாரங்களில் தங்கியபடியே வேலை செய்தார். மக்களையும் ஊர்களையும் நாட்டுநிலைமையையும் நேரில் கண்டறிந்தால்தான் தன் பணி சிறக்கும் என நினைத்தார் மன்றோ. தருமபுரியில் அவர் தனக்கென ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டார். அதன் அருகில் அழகான ஒரு தோட்டத்தையும் குளத்தையும் உருவாக்கினார். இங்கிலாந்தில் கெல்வின் நதிக்கரையோரமாக இருந்த தன் இளமைக்கால வீட்டைப்பற்றிய நினைவுகளே அதற்கு உந்துதலாக இருந்தன.
மாவட்டம் முழுக்க அலைந்து நில அளவை செய்ததும், அதன் தரத்துக்கேற்றபடி நன்செய், புன்செய், தரிசு என வகைப்படுத்தியதும், அதில் பயிர்செய்யப்படுகிற பயிர்களின் விளைச்சலுக்கேற்றபடி வரியை நிர்ணயம் செய்ததும், விவசாயிகள் செலுத்தக்கூடிய வரியின் வருமானம் நேரிடையாக அரசாங்கத்துக்குக் கிடைக்கும்படி நிர்வாக ஏற்பாடுகளைச் செய்ததும் அவருடைய முக்கியமான பணிகள். விருப்பம்போல விவசாயிகளின்மீது வரிச்சுமையை ஏற்றி கொள்ளையடித்துக்கொண்டிருந்த பழைய முறைகளை முற்றிலுமாக இல்லாமல் ஆக்கினார் மன்றோ. இந்த முறை உடனடியாக இரண்டு பயன்களைத் தந்தது. ஆங்கிலேயர்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விளைச்சல் நிலங்களின் மொத்த அளவு என்ன என்பது மதிப்பிடப்பட்டது. அவற்றின்மூலமாக அரசாங்கத்துக்குக் கிடைக்கக்கூடிய ஆண்டுவருவாய் என்ன என்பதுவும் மதிப்பிடப்பட்டது. அக்காலத்தில் விவசாயிகள் நிலத்தை ஏற்றுக்கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்பதையும் சாதிப்பிரிவுக்கேற்றபடி தீர்வையின் அளவு மாறுபடும் தன்மையைக் கொண்டிருந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அரசாங்கத்துக்கு நிரந்தரமான வரித்தொகை வரவேண்டும் என்றால், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விளைச்சல்நிலத்தில் தொடர்ச்சியாக விவசாயம் நிகழவேண்டும். தரிசு நிலங்களையும் விவசாயத்துக்குத் தகுந்ததாக மாற்றவேண்டும். அதற்கு விவசாயிகளை நிலத்தைநோக்கி ஈர்க்கவேண்டும். அதற்கு வரிவிகிதத்தில் பொருத்தமான மாற்றத்தைக் கொண்டுவருவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த வழிமுறைக்கும் தொடக்கத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால், இன்னும் சற்றே இறங்கி வந்து, ஐந்தாண்டுகளுக்கான குத்தகை முறை அல்லது இருபதாண்டுகளுக்கான குத்தகைமுறையை அறிவித்து வரியை வசூல் செய்யத் தீர்மானிக்கப்பட்டது. மற்ற அரசு அதிகாரிகளோடும் ஆட்சியரோடும் தொடர்ச்சியான விவாதங்களை நிகழ்த்தி, மன்றோ கொண்டுவந்த வரி சீர்திருத்தம் ஒருபக்கம் மக்களை விவசாயத்தை நோக்கி ஈர்த்தது. மறுபக்கம் அரசுக்கு நிரந்தர வருமானத்துக்கு வழிவகுத்துத் தந்தது.
விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நெசவாளர்களும் பயன்பெறும் வகையில் சில சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் மன்றோ. இங்கிலாந்தில் விசைத்தறிகள் அதிக அளவில் பரவாத காலகட்டத்தில் இந்தியத் துணிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சேலத்திலிருந்த வணிக மைய அதிகாரியின் முக்கிய வேலை குறைந்த விலையில் நெசவாளர்களிடம் துணிகளைப் பெற்று இங்கிலாந்துக்கு அனுப்பிவைப்பதாகும். அத்துணிகள் ஏறத்தாழ ஐம்பது அறுபது மடங்கு அதிக விலையில் இங்கிலாந்தில் விற்கப்பட்டன. லாபத்தின் மீதுள்ள ஆசையால், நெசவாளர்கள் அரசாங்கத்துக்கு மட்டுமே நெய்து தரவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள். தங்கள் சொந்த ஊதியத்துக்கு அவர்கள் நெய்யவேண்டுமானால் யாருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாக நெய்துகொள்ளவேண்டியிருந்தது. விற்பனை கைமாறுவது கண்டறியப்பட்டால் அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால், மனம் சோர்ந்துபோன நெசவாளர்கள் அப்பகுதியிலிருந்து வேறு பகுதியை நோக்கி இடம்பெயரத் தொடங்கினார்கள். 

நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் துணிகளுக்கான விலையை உயர்த்திக் கொடுத்தல் மற்றும் வெளியாருக்கும் துணிகளை நெய்ய அனுமதியளித்தல், பஞ்சு, நூல், துணி ஆகியவற்றின் மீதிருந்த சுங்கவரியை விலக்குவதன்மூலம் தொழில் பெருக ஆதரவளித்தல் ஆகிய மூன்று விஷயங்களை வலியுறுத்தி அரசாங்கத்துக்கு இடைவிடாமல் கடிதங்களை அனுப்பியபடி இருந்தார் மன்றோ. உடனடியாகச் செய்யவேண்டிய இச்சீர்திருத்தங்களைச் செய்ய மறுத்தால், நெசவுத்தொழிலைக் காப்பாற்றுவது கடினம் என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார். தொடர்ந்து பல ஆண்டுகளாக மறுத்துவந்த சென்னை அரசாங்கம் இறுதியில் மன்றோவின் கூற்றிலிருந்த உண்மையை உணர்ந்து அவர் அளித்த ஆலோசனைகளை ஏற்று, அதன்படியே உத்தரவிட்டு, நெசவாளர்களின் வாழ்வில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியது.

திப்பு சுல்தான் மறைவுக்குப் பிறகு, ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிடைத்த மங்களூர்ப்பகுதியில் நிர்வாகியாகப் பணியாற்ற மன்றோ அனுப்பிவைக்கப்பட்டார். உள்ளூர அந்த மாற்றத்தில் அவருக்குச் சிறிதும் விருப்பமில்லை. ஆனால் அவர் கோரிக்கையை சென்னைக் கோட்டையினர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் மன்றோ மங்களூர் செல்லவேண்டியிருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இதேபோலவே வேறொரு போரில் கிடைத்த கடப்பைப் பகுதியில் பணியாற்ற அனுப்பிவைக்கப்பட்டார். விருப்பத்துக்கு மாறாக அனுப்பிவைக்கப்படுவதை ஒட்டி மனவருத்தம் இருந்தாலும், பணியாற்றும் பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள்மீது அவர் கொண்ட நேசம் எப்போதும் குறைந்ததில்லை.
பணத்தேவையை ஒட்டித்தான் மன்றோ பதினேழுவயதில் இந்தியாவுக்கு வந்தார். அப்பணப்பற்றாக்குறையை- இறுதிவரையில் அவரால் தீர்க்கவே முடியவில்லை. ஒரு சமயத்தில் மூன்று சகோதரர்களும் இந்தியாவில் வேலை பார்த்து, தந்தைக்குப் பணம் அனுப்பினார்கள். பிள்ளைகள் அனுப்பும் சிறிய தொகையை வைத்துக்கொண்டுதான் மன்றோவின் குடும்பம் வாழ்க்கையை நடத்தவேண்டியிருந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மன்றோ உதவி கலெக்டரானார். அப்போதும் அவரால் அதிக தொகையை அனுப்பிவைக்க இயலாத நிலையிலேயே இருந்தார். குடும்பச் செலவுக்காக அவரது குடும்பம் தம் கோடைக்கால வீட்டை விற்கவேண்டி வந்தது. கலெக்டரான பிறகுதான் ஓரளவு கூடுதலான தொகையை அவரால் அனுப்பமுடிந்தது. குடும்பத்தின் பொருளாதார நிலைமை சீரானது. பின்னர் ஒரு வீடு வாங்கும் அளவுக்கு பணம் அனுப்பினார் மன்றோ. துரதிருஷ்டவசமாக, அந்தப் புதிய வீட்டில் வாழ்ந்து பார்க்க அவருடைய தாயார் உயிரோடு இல்லை. தந்தையோ வயது முதிர்ந்தவராக ஆகிவிட்டார். அவருடன் பணியாற்றிய பல ஆங்கிலேய அதிகாரிகள் கையூட்டுகளில் கைதேர்ந்தவர்களாக வாழ்ந்து செல்வத்தை மலைபோலக் குவித்தனர். ஆனால் அப்படிப்பட்ட வழிமுறைகளில் சிறிதும் நாட்டமற்றவராக இருந்த மன்றோ ஒருமுறை தன் கடிதத்தில் “நாட்டின் வளத்தைக் கொள்ளையடிக்க பச்சைக்கொடி காட்டும் கலெக்டர் எவ்வாறு நாட்டைச் செழிப்பாக வைத்துக்கொள்ளமுடியும்?” என்று குறிப்பிட்டார்.

பதினேழு வயதில் இந்தியாவுக்கு வந்த மன்றோ, இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் லண்டனுக்குத் திரும்பிச் சென்றார். அவர் தாய் அப்போது இறந்திருந்தார். மகனுடைய வளர்ச்சியையும் அடைந்த பெருமைகளையும் ஆர்வமாகக் கவனித்துவந்த தந்தையோ மூப்பின் காரணமாக மகன் பெற்றிருக்கும் அந்தஸ்தையும் செல்வத்தையும் கண்டு மகிழ்ச்சியோடு பிறரோடு பேசிப் பகிர்ந்து பெருமைப்பட்டுக்கொள்ளும் துடிப்பில் இல்லை. மனத்தளவிலும் உடலளவிலும் மிகுந்த தளர்ச்சியடைந்திருந்த்தார். மன்றோவின் தம்பிகளும் பல நண்பர்களும் இறந்துபோயிருந்தார்கள். ஐம்பது வயதை நெருங்கும்போதுதான் அவர் திருமணம் புரிந்துகொண்டார். பிறாகு, தனக்குப் பிடித்தமான ரசாயனப் பாடத்தைப் படிப்பதில் காலம் கழித்தார். அச்சமயத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் பட்டயக்காலத்தை மேலும் நீட்டிப்பது தொடர்பாக இங்கிலாந்து அரசு பல்வேறு தரப்புகளிடமிருந்து ஆலோசனைகளைக் கேட்டது. மன்றோவும் தம் ஆலோசனைகளை விரிவாக முன்வைத்தார். அவற்றை ஏற்றுக்கொண்ட அரசாங்கம் வங்காளம் மற்றும் தென்னிந்தியாவில் நீதிமன்ற நிர்வாக முறைகளை ஆய்வு செய்து அறிக்கை தருவதற்காக ஒரு தனி ஆணையத்தை அமைத்து, அதன் தலைமைப் பொறுப்பை மன்றோவுக்குக் கொடுத்து மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பிவைத்தது. அப்போது அவருக்கு வயது 53.  முதலில் எல்லாப் பகுதிகளிலும் பயணங்களை மேற்கொண்ட மன்றோ, ஒவ்வொரு இடத்திலும் நிலவும் நீதி நிர்வாக முறைகளைக் கண்டறிந்தார். எல்லாக் குறிப்புகளையும் தொகுத்துக்கொண்ட பிறகு, தன் அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனைகளை அரசிடம் வழங்கினார். அவற்றில் சில ஏற்கப்பட்டன. சில ஏற்கப்படவில்லை. தான் ஏற்றுக்கொண்ட பணியை செவ்வனே முடித்த திருப்தியில் லண்டனுக்குத் திரும்பினார். 

இந்தியர்களுக்கு அரசு வேலைகளை வழங்கவேண்டும் என்று வெளிப்படையாகவே பேசினார் மன்றோ. ஒன்றரைக்கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் மக்களுக்குத் தண்டனை வழங்கக்கூடிய பதவிகள் இந்தியருக்கும் தரப்படவேண்டும் என்று வாதாடினார். அதில் அவரால் போதிய வெற்றி பெற முஜ்டியவில்லை என்றாலும் தம் கருத்தில் உறுதியாக இருந்தார் மன்றோ.

லண்டனில் சில மாதங்களும் ஸ்காட்லாந்தில் சில காலமும் என தங்கி ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் உடனடியாக லண்டனுக்குத் திரும்பி வரும்படி அவருக்குத் தகவல் தரப்பட்டது. அடுத்த சில வாரங்களில் அவருக்கு சென்னை கவர்னராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. எந்தக் கோட்டையில் பதினைந்து ரூபாய் சம்பளத்துக்கு சாதாரண சிப்பாயாகச் சேர்ந்தாரோ, அதே ராஜதானியின் உச்ச அதிகாரப் பதவியான கவர்னர் பதவி அவருக்குக் கிடைத்தது. ஏறத்தாழ நாற்பதாண்டுகால கடுமையான உழைப்புக்குக் கிடைத்த பரிசு இது. அவர் காலத்தில் மூடப்பட்டிருந்த திண்ணைப்பள்ளிக்கூடங்களை திரும்பவும் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்திலும் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இரண்டு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. அப்பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டது. தாலுகா தலைநகரங்களில் ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. அப்பள்ளிகளில் உள்ளூர் மொழிதான் பயிற்சிமொழி. ஆசிரியர்களுக்காக பயிற்சி தருவதற்கு தனி அமைப்பு உருவாக்கப்பட்டது.

1821 ஆம் ஆண்டில் குதிரையில் சவாரி செய்துகொண்டிருந்தபோது, திருமதி மன்றோ கீழே விழுந்து காயமுற்றார். தலையில் அடி. கண்ணில் காயம். போதுமான மருத்துவம் தரப்பட்டாலும் பெங்களூரில் தங்கியிருந்து ஓய்வெடுக்குமாறு ஆலோசனை தரப்பட்டது. ஆனாலும் மனைவியைமட்டும் பெங்களூரில் தங்கவைத்துவிட்டு,  தன் அரசுப்பணிகளில் மூழ்கியிருந்தார் மன்றோ. அவ்வப்போது பெங்களூர் சென்று அவரைப் பார்த்துவந்தார். உடல்நிலை சரியான பிறகு, அவரை அழைத்துக்கொண்டு மதராஸுக்குத் திரும்ப ஆயத்தங்களைச் செய்தார். திரும்பி வரும் வழியில் தன் இளமைக் காலத்தில் உருவாக்கிய பாராமகால் தோட்டத்தையும் குளத்தையும் மனைவிக்குக் காட்டி மகிழ்ந்தார்.

1826 ஆம் ஆண்டில் எதிர்பாராத விதமாக திருமதி.மன்றோவின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. அவருடைய இரண்டாவது மகனுக்கும் உடல்நலம் குன்றியது. அவர்கள் இருவரையும் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். அதே ஆண்டின் இறுதியில் வேறு வழி தெரியாததால், மகனையும் மனைவியையும் ஊருக்கு அனுப்பிவைத்தார் மன்றோ. ஏற்கனவே தன்னை பதவியிலிருந்து விடுவிக்கும்படி அரசாங்கத்துக்கு எழுதியிருந்தார். ஆனாலும் அவர்களிடமிருந்து தகுந்த விடை வராததால், அவர் இந்தியாவிலேயே தங்கியிருக்கும்படி நேர்ந்தது.  சோர்வு அண்டாமலிருக்கும்பொருட்டு, அவர் ஒரு நீண்ட பயணத்தைத் திட்டமிட்டார். பல்லாவரம், மதுராந்தகம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, பாளையங்கோட்டை, திண்டுக்கல், கோயம்பத்தூர், நீலகிரி, மைசூர், கொள்ளேகால், சிவசமுத்திரம் என பல இடங்களைத் தொடர்ச்சியாகப் பார்வையிட்டபடி வந்தார். தனது பதவி விலகல் கடிதம் ஏற்கப்பட்டு, புதிய கவர்னர் வருவதில் தாமதம் ஏற்பட்டதை அறிந்த மன்றோ, அதற்குமுன்பாக தனக்குப் பிடித்தமான கடப்பை மாவட்டப் பகுதிகளுக்குச் சென்றுவர விரும்பினார். அச்சமயத்தில் அங்கே கடுமையான காலரா நோய் பரவியிருப்பதாகவும், அங்கே செல்லவேண்டாம் என்றும் அவருக்கு ஆலோசனை தரப்பட்டது. ஆனால் அதை ஏற்கவில்லை மன்றோ. அப்படிப்பட்ட தருணத்தில் நிர்வாகம் அங்கே எப்படிச் செயல்படுகிறது என்பதைக் கண்டறிவது தன்னுடைய கடமை என்று சொன்னபடி பிரயாணத்தைத் தொடங்கிவிட்டார். மெய்க்காப்பாளர்கள், அதிகாரிகள், கலெக்டர், உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள் எனப் பலரும் அவரோடு பயணம் செய்தார்கள். பட்டிகொண்டா என்னும் கிராமத்தில் தங்கி, கிராமத்து மக்களைச் சந்தித்துப் பேசினார். துரதிருஷ்டவசமாக அப்போது மன்றோவை காலரா நோய் தாக்கியது. அன்று இரவு அவர் உயிர் பிரிந்தது. தாமஸ் மன்றோவின் உடல், இறந்த ஒன்றரை மணிநேரம் கழித்து, குத்தி எனும் இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  

மலையடிவாரத்தில் கோட்டைக்குக் கீழே அமைந்திருந்த கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. புனித ஜார்ஜ் கோட்டைக்குச் செய்தி கிடைத்ததும், கோட்டையில் இருந்த கொடி உடனடியாக அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டு சூரிய அஸ்தமனம் வரைக்கும் பறந்தது. இறந்துபோன மன்றோவின் வயதைக் குறிப்பிடும் வகையில் கோட்டையின் கொத்தளத்திலிருந்து 65 முறைகள் பீரங்கிகள் முழங்கின. மன்றோவின் நண்பர்களும் உடன் பணிசெய்த அதிகாரிகளும் சேர்ந்து பணம் திரட்டி வெண்கலத்தாலான மன்றோ சிலையை உருவாக்கி நிறுவியது.

மன்றோ புத்தகம் வாசிப்பதிலும் கடிதங்கள் எழுதுவதிலும் தன் ஓய்வுப் பொழுதுகளைக் கழிப்பவராக  இருந்தார். இந்தியாவில் தான் காண நேர்ந்த ஒவ்வொரு சம்பவத்தைப்பற்றியும் – அது அரசு சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி, பொதுவான விஷயமாக இருந்தாலும் சரி-  தன் தந்தையாருக்கு அதைப்பற்றி விரிவாகத் தெரிவித்து, அதையொட்டி தன் நிலைபாடு என்ன என்பதையும் தெரிவித்துக் கடிதம் எழுதும் பழக்கம் மன்றோவிடம் இறுதிவரை இருந்தது. தன் சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் நண்பர்களுக்கும் மனைவிக்கும் இடைவிடாமல் அவர் கடிதங்களை எழுதியபடி இருந்தார். நூலாசிரியரான அமுதன் மன்றோவின் பல கடிதங்களைத் தேடியெடுத்து மொழிபெயர்த்து, அவற்றைப் பொருத்தமான பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். தன் உயர் அதிகாரிகளுக்கு அவர் எழுதிய கடிதங்களும் முக்கியமானவை. எடுத்துக்காட்டுக்காக அமுதன் மொழிபெயர்த்திருக்கும் சில கடிதங்களின் உள்ளடக்கம், அவை மிகச்சிறந்த வரலாற்று ஆவணம் என்னும் எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. அவருடைய கடிதங்களைமட்டுமே தனித்தொகுதியாகக் கொண்டுவரும் அளவுக்கு இருக்கும்போலும். அப்படி ஒரு தொகுப்பு வந்தால், இந்தியாவைப்பற்றிய அவருடைய பார்வையை இன்னும் விரிவாக உணரமுடியும். கடிதங்களில் அரசியல் விஷயங்களைமட்டுமல்ல, இங்குள்ள இயற்கைக் காட்சிகளைச் சுவைத்த அனுபவங்களையும் மிக அழகான குறிப்புகளாகக் கடிதங்களில் விவரித்துள்ளார்.

மக்கள்மீதான அன்பும் நேர்மையும் மன்றோவின் தனிப்பட்ட சிறப்பம்சங்கள். ஒரு திறந்த புத்தகமாக அதற்கு அவருடைய வாழ்வே சாட்சியாக விளங்குகிறது. அக்குணங்களைமீறி, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஓர் ஆங்கிலேய அதிகாரியாகமட்டும் நடந்துகொண்ட ஒரு சில தருணங்களும் அவர் வாழ்வில் அமைந்துவிட்டதைப் பார்க்கமுடிகிறது. குறிப்பாக, திப்பு சுல்தானை வீழ்த்துவதற்காக ஆங்கிலேயர்கள் கையாண்ட தந்திரங்களைப்பற்றி அவருக்கு எவ்விதமான விமர்சனமும் இல்லை. ஆங்கிலேய அரசாங்கத்தால் வீழ்த்தப்பட வேண்டிய ஒருவராகவே திப்புவை மன்றோ பார்க்கிறார். இரண்டாம் மைசூர்ப் போரில் தோற்ற திப்புவிடமிருந்து வசூல் செய்யப்பட வேண்டிய மூன்று கோடி ரூபாய் பணத்துக்குப் பிணையாக, திப்புவின் இளம்பிள்ளைகளை அரசின் சார்பாக மன்றோதான்  அழைத்துவருகிறார். 

பிற்காலத்தில் வேலூர் கோட்டையில் எழுந்த சிப்பாய்க் கலகத்தை, இந்து வீரர்கள்மீது தேவையில்லாமல் அரசாங்கத்தாரால் விதிக்கப்பட்ட – பணியில் ஈடுபட்டிருக்கும் தருணங்களில் நெற்றியில் சமயச் சின்னங்களை அணியக்கூடாது, எல்லோரும் சவரம் செய்யப்பட்டு உதட்டின்மீது சீரான மீசையமைப்பு உள்ளவர்களாக இருக்கவேண்டும், மாட்டுத்தோலால் ஆன பட்டையை மார்பில் அணியவேண்டும் எனபவை போன்ற-  சில நிபந்தனைகளே காரணங்கள் என்று நீண்ட குறிப்பை பல ஆய்வுகளின் அடிப்படையில் எழுதும் மன்றோ, திப்புவின் மீது தீராத பகைகொண்டு அலைந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கான பின்னணிகளில் இருக்கும் நியாய அநியாயங்களை அலசுவதற்கான மனநிலை அற்றவராக இருந்ததன் பின்னணியை விளங்கிக்கொள்ளமுடியவில்லை. போர்மீது அவர் கொண்டிருந்த ஆர்வமும் வேகமும் கூட அவருடைய இன்னொரு பக்கத்தின் முகங்கள். சிப்பாயாக அவர் இந்தியாவுக்கு வந்ததிலிருந்து பல போர்களில் இடைவிடாமல் ஈடுபட்டபடி இருந்தார். அதுவே அவர் ஆழ்மனத்தில் படிந்துபோயிருக்கக்கூடும். திப்புவுடனான எல்லாப் போர்களிலும் அவர் குறிப்பிட்ட அளவுக்குப் பங்காற்றியிருக்கிறார். இறுதியாக ஆங்கிலேயர்கள் வென்ற பர்மா யுத்தத்திலும் அவர் முக்கியமான பொறுப்பில் இருந்து செயல்பட்டிருக்கிறார்.  ராணுவப் பணியிலிருந்து விலகி, நிர்வாகப் பணியில் ஈடுபட்டிருந்த சமயங்களில், நிகழ்ந்த போர்களில் தனக்கும் பங்குவகிக்க வாய்ப்பளிக்கவேண்டும் என்றொரு கோரிக்கையை அரசாங்கத்துக்கு இடைவிடாமல் முன்வைப்பவராக இருந்தார் மன்றோ. சில சமயங்களில் அவை ஏற்கப்படுகின்றன. சில சமயங்களில் அவை ஏற்கப்படவில்லை. ஏற்கப்படாதபோது மன்றோ மனம் சோர்ந்துபோய்விடுகிறார்.


இந்தக் குறைகளும் அவருடைய குணங்கள் என்கிற அளவிலேயே நாம் பார்க்கவேண்டும். மக்கள் நலங்களையே பெரிதும் விரும்பிய அவர் இந்த மண்ணில் வாழ்ந்த போற்றத்தக்க அதிகாரி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அதற்கான சான்றாக இந்த நூலில் அமுதன் எழுதிய ஒவ்வொரு பக்கமும் விளங்குகிறது. என் இளமை நாட்களில் எங்கள் ராமசாமி சாரால் என் மனத்தில் விதைக்கப்பட்ட கனவு இடைப்பாடி அமுதனின் நூலால் நனவாகிவிட்டது.