Home

Friday, 18 November 2016

காலபைரவனின் கதைகள் - கட்டுரை



சில ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளரும் என் நண்பருமான அ.முத்துலிங்கம் ஒரு வாசகனுக்கு பல நூல்களைப்பற்றிய அறிமுகங்கள் ஒரே தருணத்தில் கிடைக்கும்வண்ணம் ஒரு தொகுதியை உருவாக்க எண்ணினார். அதையொட்டி ஒவ்வொரு எழுத்தாளரிடமும் அச்சமயத்தில் தான் படித்துக்கொண்டிருக்கும் ஒரு புத்தகத்தைப்பற்றி ஒரு கட்டுரையை எழுதி அனுப்பும்படி கேட்டார். தற்செயலாக அப்போதுதான் காலபைரவனின் முதல் சிறுகதைத்தொகுதியான ‘புலிப்பாணி ஜோதிடர்’ புத்தகத்தைப் படித்துமுடித்திருந்தேன். உடனே அதைப்பற்றி ஒரு கட்டுரையை விரிவாகவே எழுதி அனுப்பினேன். ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ என்னும் தலைப்பில் அ.முத்துலிங்கம் அத்தொகுதியைக் கொண்டுவந்தார்.

தன் சிறுகதைகள் வழியாகவே காலபைரவனை நான் அன்றும் இன்றும் தெரிந்துவைத்திருக்கிறேன். நேரில் பார்த்ததே இல்லை. புலிப்பாணி ஜோதிடர் தொகுதிக்குப் பிறகு இதழ்களில் அவருடைய பல சிறுகதைகளைப் பார்க்கும்போதெல்லாம் படித்திருக்கிறேன். தம் எழுத்துகள் வழியாகவே இரண்டாயிரத்துக்குப் பிறகு உருவான எழுத்தாளுமைகளில் ஒருவராக அவர் தன்னை நிறுவிக்கொண்டார் என்பதே என் எண்ணம். தேர்ந்தெடுத்த பத்து சிறுகதைகளை அடங்கிய தொகுப்பாக ‘முத்துகள் பத்து’ வரிசையில் அவருடைய தொகுப்பு இப்போது வெளிவருவதில் உண்மையிலேயே நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் ஓர் ஆளுமை என்பதற்கு இத்தொகுதி ஒரு சான்று.
மன இயக்கத்தின் சிக்கலான திசைகளைச் சித்தரிக்கும் முயற்சிகளாக காலபைரவனின் சிறுகதைகளைச் சொல்லவேண்டும். அதுவே அவருடைய கதைக்களம். சிக்கலின் தன்மையைச் சொல்வதற்குச் பொருத்தமாக பல தருணங்களில் இறந்தகாலமும் நிகழ்காலமும் இவருடைய படைப்புகளில் மாறிமாறி இடம்பெற்றிருக்கிறது. கச்சிதமான மொழியின் வழியாக, அந்தக் காலமாற்றத்தை எவ்விதமான சிக்கலுக்கும் இடமின்றி மிகவும் திறமையுடன் கையாகிறார் காலபைரவன்.
ஒருபுறம் மனவியக்கத்தின் புதிரைக்கண்டு திகைத்து அல்லது தத்தளித்து நிற்கும் மனிதர்கள். இன்னொருபுறம் ஐதிகமாக அல்லது நம்பிக்கையாக நிலைத்துவிட்ட மனவியக்கத்தின் புதிரை தன்னுடைய கோணத்தில் விடுவிக்கும் அல்லது வேடிக்கையாக அம்பலப்படுத்தும் மனிதர்கள். காலபைர்வனுடைய கதைக்களன் என்னும் வகையில் நிரந்தர அடையாளத்தை நிறுவுவதற்கு இம்மனிதர்கள் உதவுகிறார்கள் என்று சொல்லலாம். காலபைரவன் தன்னுடைய படைப்பூக்கத்தின் விளைவாக இத்தகு மனிதர்களின் கச்சிதமான சித்திரங்களை தம் படைப்புகளில் தீட்டிவிடுகிறார். அவருடைய கலைத்திறமை இப்பின்னணியில் செறிவான வகையில் வெளிப்படுகிறது.
ஓர் ஆண் அல்லது ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஓர் அலகாகக் கொண்டு, அவர்களுடைய மனவியக்கத்தின் புதிரை ஆய்வுக்குட்படுத்தும் முயற்சி, இன்னொரு வகையில் வாழ்க்கையை ஆய்வுக்குட்படுத்தும் முயற்சி என்றே கருதப்படவேண்டும். இந்த ஆய்வின் முடிவில் விளக்கின் வெளிச்சம் ஒருதிசை குறித்ததாக ஒருபோதும் முடிவடைவதில்லை. ஒரு சிறிய இடைவெளியும் இல்லாமல் எங்கெங்கும் பரந்து விரிந்து எல்லாவற்றையும் பார்க்கும்வகையில் அமைந்துவிடுகிறது. அழகும் அருவருப்பும் அந்த வெளிச்சத்தை உள்வாங்கிக்கொண்டு சம அளவில் காட்சி தருகிறது.
காலபைரவனின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ‘இருவழிப்பாதை’ இத்தொகுதியில் சேர்க்கப்பட்டிருப்பதை அறிய மகிழ்ச்சியாக உள்ளது. இரண்டாயிரத்துக்குப் பிறகான சிறுகதைகளின் தொகுப்பொன்றை யார் தயாரித்தாலும் அத்தொகுதியில் இடம்பெறுவதற்கு முற்றிலும் தகுதி கொண்ட கதை என்றே இதைச் சொல்லவேண்டும்.  தலைப்பின் கவித்துவம் அச்சிறுகதைக்கு ஒரு கூடுதல் தகுதி. ஓர் இருவழிப்பாதை எப்போதும் இரு ஊர்களுக்கிடையே அல்லது இரு நகரங்களுக்கிடையே தொட்டு விரிந்திருக்கிறது. பயணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு எப்போதும் இரு சாத்தியங்கள். எந்த ஊருக்குச் செல்லப் போகிறோம் என்னும் தீர்மானமான முடிவை எடுத்துவிட்டவர்களுக்கு, எந்த ஊசலாட்டமும் இல்லை. முடிவெடுத்த திசையில் சென்றுகொண்டே இருக்கலாம். முடிவெடுக்க முடியாதவர்கள் இருவழிப்பாதை என்னும் புதிர்ப்பாதையின் முன் நின்றுகொண்டே இருக்கிறார்கள்.
ஒரு கூத்துக்கலைஞனுக்கும் ஒரு கிராமத்தில் முறுக்கு விற்றுப் பிழைக்கும் இளம்பெண்ணுக்கும் இடையிலான நுட்பமான உறவைப்பற்றியதாக தொடங்குகிறது இந்தச் சிறுகதை. எப்போதோ சில ஆண்டுகளுக்கு முன்பாக கூத்தாடிய ஒரு கிராமத்துக்கு மறுபடியும் வருகிறது ஒரு குழு. அந்தக் கிராமம் ஒரு கலைஞனின் மனத்தில் பழைய நினைவுகளைக் கிளறிவிடுகின்றன. அந்தக் கிராமத்தில் அவன் மனம் விரும்பிய ஒரு பெண் இருந்தாள். தன்னையே அவனுக்கு வழங்கியவள் அவள். அவள் அழகும் பேச்சும் சிரிப்பும் அவனை மயக்கியது. அவளோடு இன்பம் துய்த்து ஓய்ந்த கணத்தில், அவளோடு தன் வாழ்க்கையை இணைத்துக்கொள்ள அவன் மனம் உள்ளூர விழைந்தது. ஊரில் தனக்கொரு மனைவியும் பிள்ளையும் இருப்பதைக்கூட அக்கணம் அவன் மனம் மறந்துவிட்டது. காமம் அவன் கண்ணை மறைத்துவிட்டது. தன்னோடு வந்துட்டால் ஒரு ராணிபோல வைத்துக் காப்பாற்றுவதாக வாக்குறுதி அளித்தான். தன்னோடு வரும்படி அழைத்தான். அவனுடன் பகிர்ந்துகொண்ட காமத்தால் மனம் மகிழ்ந்திருந்தாலும் அவள் அக்கோரிக்கையை ஒரு புன்னகையோடு மறுத்துவிட்டாள். தன் பிள்ளையைப்பற்றியும் கணவனைப்பற்றியும் சொல்லி “இவுங்களுக்கு பொங்கிப் போடவாவது நான் இங்க இருந்தாவணும்” என்று தெரிவித்து பின்வாங்கிவிட்டாள். அவள் பேச்சில் இருந்த நியாயம் அவனைப் பேச்சற்றவனாக்கிவிட்டது.
இதெல்லாம் ஒரு காலம். மீண்டும் கூத்தாடுவதற்காக அதே கிராமத்துக்கு வந்து இறங்கிய கணத்திலிருந்து அவளையே அவன் கண்கள் தன்னிச்சையாகத் தேடுகின்றன. அவளுடைய முறுக்குக்கடையைத் தேடுகின்றன. எங்கும் அவள் இல்லை. ஆர்வத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் கூத்து நிகழ்ந்துகொண்டிருக்கும் நள்ளிரவில் அவள் வீடுவரைக்கும் சென்று பூட்டியிருப்பதைப் பார்த்துவிட்டு ஏமாற்றத்தின் வலியுடன் வருகிறான். தேநீர் அருந்தும் சாக்கில் கடைக்காரனிடம் பேச்சுக்கொடுத்து அவளைப்பற்றி மெல்ல விசாரிக்கிறான். சேலத்திலிருந்து கிணறுவெட்ட வந்த ஒரு செட்டியாரோடு சென்றுவிட்டதாக அவனுக்குச் சொல்லப்படும் தகவல் அளிக்கும் அதிர்ச்சியிலிருந்து அவனால் அக்கணத்தில் மீளவேமுடியவில்லை.
தான் அழைத்தபோது மறுத்தவள் அவன் அழைத்தபோது எப்படி உடன்பட்டாள் என்னும் கேள்விக்கு அவனிடம் விடையில்லை. உலகத்தில் யாரிடமும் இக்கேள்விக்கு விடையில்லை. மனம் எப்போதும் இருவழிப்பாதையில் நிற்கும் பயணியைப்போல. ஒருகணம் சார்ந்து எடுக்கும் முடிவுக்கும் இன்னொரு கணம் சார்ந்து எடுக்கும் முடிவுக்கும் எவ்விதமான தொடர்புமில்லை.
அம்சவேணி என்னும் அந்தப் பெண்ணின் தரப்பு என எதுவில்லாமலேயே இந்தக் கதை எழுதப்பட்டிருப்பதில் ஒரு தனிச்சிறப்பு உள்ளது. அதே நேரத்தில் உண்மை அறிந்த கணத்தில் குமுறி அந்தப் பெண்ணைப்பற்றி தகாதன பேசி ஆர்ப்பரிக்காமல் அவன் திகைத்து நிற்கும் புள்ளியோடு சிறுகதை நின்றிருப்பதிலும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது. ஒரு குகைச்சித்திரத்தின் முன்னால் திடுமென நிற்க நேர்பவனின் திகைப்புக்கு நிகரானது இத்திகைப்பு. திகைப்பின் இருளில் விழிகள் பழகப்பழக சித்திரத்தின் நுட்பங்கள் பிடிபடுவதுபோல மனவியக்கத்தின் தடங்களும் பிடிபட்டுவிடும்.  அம்சவேணியின் உருவத்தை நெஞ்சில் சுமந்தபடி அவளை எண்ணியெண்ணி ஏங்குகிறவன், கூத்தில் ராமர் வேடம் கட்டி ஆடுகிறவனாக அமைக்கப்பட்டிருக்கும் முரண் கவனிக்கத்தக்க ஓர் அம்சம். ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் உறையும் இரட்டைநிலையைச் சுட்டிக்காட்டும் புள்ளியாக இதைக் கருதலாம்.
‘பைசாசத்தின் எஞ்சிய சொற்கள்’ காலபைரவனின் எழுத்துத் திறமையை எடுத்துரைக்கும் இன்னொரு சிறுகதை. இரு இளைஞர்கள் வெவ்வேறு தருணங்களில் ஒரு மதுச்சாலையில் நிகழ்த்தும் உரையாடல்களையே காலபைரவன் சிறுகதையாக்கியிருக்கிறார். மது அவ்விளைஞர்கள் வாழ்வில் வசீகரமான விஷயமாக இருக்கிற்து. அந்த வசீகரத்தில் வசப்பட்டதாலேயே, ’எடுத்தோம், கவிழ்த்தோம்’ என குடித்துவிட்டுச் செல்கிற எளிய மதுக்கடைகளைவிட, மிக நிதானமாக சிரித்துப் பேசியபடியும் கரையும் பொழுதுகளைப்பற்றி கவலைப்படாமல் ஆனந்தமாக உரையாடியபடியும் மது அருந்துவதற்குத் தோதான உயர்ந்த ரகமான மதுச்சாலையைத் தேடிச் செல்கிறார்கள். அந்தச் சுவையில் மனம் லயித்துவிட்டதால், நகரத்துக்கு புகைப்படச்சுருள் கழுவுவதற்கு வரும் ஒவ்வொரு முறையும் அந்த மதுச்சாலைக்குச் செல்கிறார்கள்.
மது அவர்களுடைய மனபாரத்தை முதலில் எளிதாக்குகிறது. பிறகு எண்ணங்களை எளிதாகுகிறது. தடைகளையும் இல்லாமலாக்குகிறது. அதற்குப் பிறகுதான் அவர்கள் தம் மனத்தில் அதுவரை புதைத்துவைத்துள்ள எண்ணங்களுக்குச் சொல்லுருவம் கொடுத்து உரையாடுகிறார்கள். ஒவ்வொரு உறைகிணறாக தாண்டித்தாண்டிச் செல்வதுபோல மனத்தின் பயணம் அமைந்துள்ளது. ஒரு சொல்லின்மீதுதான் எத்தனை கவசங்கள். ஆமையோடுகள்போல. நாகரிகம் என்னும் பெயரால் மானுடன் தொங்கவிட்டிருக்கும் எல்லாத் திரைகளையும் மது என்னும் பிசாசு தன் நகங்களால் கிழித்து அறுத்தெறிந்துவிடுகிறது.
தன் தமக்கையுடன் தன் நண்பன் கொண்டிருக்கும் காமத்தைப்பற்றி உச்சக்கட்ட போதையில்தான் ஒருவனால் பேசமுடிகிறது. அப்படிப்பட்ட போதையிலும் இன்னொருவன் சுயபிரக்ஞையுடன் தன்னைக் குற்றமற்றவனாகக் காட்டிக்கொள்ளும் பொருட்டு ‘அவுங்கதான் கூப்ட்டாங்க’ என்று சொல்லித் தப்பிக்க எண்ணும் பிழைப்புவாதச்சொல்லைச் சொல்கிறான். அவன் பற்றிக்கொண்டிருக்கும் பிரக்ஞைச்சுவரின் பிடி விலக, அவன் இன்னும் சில உறைகிணறுகளைத் தாண்டித்தான் உரையாடவேண்டும்போலும். இத்தருணத்தில் ஒரு வெளிச்சம் படர்வதை உணரமுடியும். இந்த உண்மையைத் தெரிந்துகொண்டு தன்னால் என்ன செய்துவிடமுடியும்  என்னும் கையறுநிலைக்குத்தான் அந்த உரையாடல் கொண்டுசென்று சேர்க்கிறது. அவனையும் சித்தியையும் இணைத்து அவன் சித்தப்பாவே உச்சக்கட்ட போதையில் உரையாடிய தருணத்தில்கூட அவனால் எதுவும் செய்யமுடியவில்லை, கையறுநிலையில்தானே அப்போதும் அவன் நின்றான். உண்மையின் சில தடங்கள் புலப்பட்டன என்பதைத் தவிர, போதையின் உச்சம் அல்லது போதையின் வழியே செல்லும் பயணம் தரும் விளைவுதான் என்ன? உண்மையைக் கொட்டாமல் இருக்கமுடியவில்லை அல்லது உண்மையை அறிந்துகொள்ளாமல் இருக்கமுடியவில்லை என்பதே மனிதன் மீண்டும்மீண்டும் மதுவை ஒருவன் நாடிச் செல்லும் பயணத்துக்கான காரணம் என்று தோன்றுகிறது.
ஒரு புராணக்கதையின் சாயலுடனும் விறுவிறுப்புடனும் ஆண்-பெண்ணுக்கிடையேயான காமத்தின் விழைவைச் சித்தரிக்கும் பச்சபுள்ளா குளம், சாரிபோகும் கன்னிமார்கள் ஆகிய சிறுகதைகள் விவரிக்கின்றன. அதிகாரத்தின் மீது மானுடருக்கு உள்ள இயல்பான விழைவை பள்ளி ஆசிரியையாக விளையாடும் சிறுமிகளின் உரையாடல்கள் வழியாக உணர்த்தும் பாடம் சிறுகதை நல்ல வாசிப்பனுவபம் மிக்கதாக உள்ளது.
காலபைரவன் திறமைமிக்க சிறுகதையாசிரியர். அவசரமாக எதையும் கையாளாமல் கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சியோடும் சமநிலையோடும் ஒரு கருவை அணுகக்கூடிய நிதானம் அவரிடம் தென்படுகிறது. அது ஒரு படைப்பாளியிடம் இருக்கவேண்டிய முக்கியமான குணம்.  அவருக்கு என் வாழ்த்துகள்.

(அம்ருதா பதிப்பகம் வழியாக அக்டோபர் மாதத்தில் வெளிவந்த ‘முத்துகள் பத்து - காலபைரவன் சிறுகதைகள்’ தொகுதிக்காக எழுதப்பட்ட முன்னுரை )