என் கல்லூரிக் காலத்தில் நடந்த ஒரு சம்பவம்
நினைவுக்கு வருகிறது. விடுமுறை நாளில் எங்கள் ஆசிரியர் மிதிவண்டியிலேயே
உல்லாசப்பயணம் அழைத்துச் செல்வார். இருபது அல்லது முப்பது கிலோமீட்டர் தொலைவில்
உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்கள், ஏரிகள், பறவைகள் சரணாலயங்கள், கோவில்கள்
எல்லா இடங்களையும் அவர்தான் எங்களைப் பார்க்க வைத்தார். ஒரு முறை வீடூரில் உள்ள
அணைக்கட்டுக்கு அழைத் துச் சென்றிருந்தார். நாங்கள் அப்போதுதான் முதன்முறையாக ஒரு
அணைக்கட்டை நேருக்கு நேர் பார்க்கிறோம். அணைக்கட்டில் அப்போது நீர் நிரம்பி
வழிந்துகொண்டிருந்தது. வெயியில் வெள்ளிக்குழம்புபோல மின்னியது நீர். கடலெனக்
கொந்தளித்துப் பொங்கும் அப்பரப்பை நாங்கள் அனைவரும் வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்
தோம். காற்று எங்களை அப்படியே அள்ளிச் சென்று தண்ணீருக்குள் வீசிவிடுமோ என்றொரு
அச்சம் நெஞ்சில் படர, ஆசையாக சுவர்களில் மோதும் அதன் அலைகளைப் பார்த்தோம். எவ்வளவு
தண்ணீர், எவ்வளவு தண்ணீர் என்று வாய் ஓயாமல் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டோம்.
அணைக்கட்டு ஓரமாகவே உரை யாடியபடியும் வேடிக்கை பார்த்தபடியும் பொழுது போக்கினோம்.
ஓரமாக நிழலில் உட்கார்ந்து எடுத்துச் சென்ற உணவைச் சாப்பிட்டு முடித்தோம்.
வட்டமாகக் கூடி அளவளாவிக் கொண்டி ருந்த சமயத்தில்
எங்கள் ஆசிரியர் அணைக் கட்டைப் பார்க்கும்போது தம் மனத்தில் தோன்று வதைச் சொல்லும்படி
ஒவ்வொருவரிடமும் சொன் னார். “பிரம்மாண்டமான ஒரு பால்தொட்டி போல இருக்கிறது”
என்றான் ஒருவன். உடனே சில மாணவர்கள் சிரித்தார்கள். “மழையை அமுத மென்று சொன்னால்,
மழைநீரின் தேக்கத்தைப் பால்தொட்டி என்று சொல்லலாம் அல்லவா ஐயா?” என்று அவனே
மீண்டும் சொன்னான். பட்டென்று வெடித்தது போல அவன் சொன்ன அந்தப் பதில் மற்றவர்களை
ஊமையாக்கியது. மெதுவாக இன்னொருவன் எழுந்து “ஒரு பெரிய விலங்கு உடலை
முறுக்கிக்கொண்டும் ஓஓவென்று இரைச்சலிட்டுக்கொண்டும் நிம்மதியில்லாமல் புரள்வதைப்
போல இருக்கிறது” என்றான். “நமக்கு முன்னாலும் இந்த ஆறு இருந்தது. இப்போதும்
இருக்கிறது. நமக்குப் பின்னாலும் இருக்கும். முக்காலத்தின் ஊடாக ஓடிவரும் இந்த
ஆற்றின் முன்னால் நாமெல்லாம் ஒரு சின்ன கூழாங்கல் ஐயா. அவ்வளவுதான். நம் சிறுமை
என்ன என்பதை இந்த நீர்ப்பரப்பு சொல்லாமல் சொல்லிக்காட்டியபடி இருக்கிறது” என்றான்
வேறொருவன். இப்படியே எங்கள் அணியில் இருந்த பத்து பேரும் பத்து விதமாகச் சொன்
னார்கள். முடிவில் எங்கள் ஆசிரியர் “நீங்கள் சொன்ன ஒவ்வொரு அனுபவமும் உண்மைதான்.
இந்த அனுபவத் தொகுப்பைத் தாண்டி, இப்போது நீங்கள் சொல்லாத அனுபவங்களின் தொகுப்
பொன்றும் இருக்குமல்லவா. அவையும்கூட உண்மைதான்” என்றார். இறுதியாக, திரும்பும்
போது “காட்சி அனுபவமாக இருந்தாலும் சரி, வாசிப்பு அனுபவமாக இருந்தாலும் சரி,
வாழ்க்கை அனுபவங்களோடு அவற்றைப் பொருத்தி உணரும்போது சட்டென்று பளிச்சிடும்
மின்னல் கள் நம் அனுபவத்தைப் பேரனுபவமாக மாற்றி விடும்” என்றார். சிறிது
நேரத்துக்குப் பிறகு “அப்படிப்பட்ட கண்கள் வாய்க்கப் பெற்றவன் மிகப்பெரிய
பாக்கியவான்” என்று சொல்லி விட்டுப் புன்னகைத்தார். அந்தப் பயணத்தில் அன்று
எனக்குக் கிட்டிய இந்த வரியை ஒரு மந்திரத்தைப் போல என் மனம் உள்வாங்கி வைத்துக்
கொண்டது.
இந்தச் சம்பவத்தை நான் நினைத்துக்கொள்ள ஒரு காரணம்
இருக்கிறது. ஒரு படைப்பை வாசிக்கும் பயிற்சியை நான் இவ்வரியின் வழி யாகவே
பெற்றேன். ஒரு சிறுகதையை முன்வைத்து இந்த மனப்பயிற்சியை மேற்கொள்ளும் போது, அது
கிட்டத்தட்ட ஒரு வரை படத்தை மட்டுமே நம்பி ஒரு மலைப் பயணத்தை மேற்கொள்பவனின் அனுப வத்துக்கு
நிகரான மன உச்சத்தைத் தொட உதவியிருக்கிறது. அந்தப் பரவ சத்துக்காகவே வாசிப்பின்
திசையை நோக்கி என் மனம் திரும்புகிறது.
சிறுகதைத்தளத்தில் எதார்த்த அலை, நவீனத்துவ அலை,
பின் நவீனத்துவ அலை எனப் பல அலைகள் அடித்து ஓய்ந்த இரண்டாயிரத்தின் தொடக்கத்
திலிருந்து எழுத வந்த படைப்பாளிகள் பலருண்டு. இவர்களுடைய புதிய கதைகளை நான்
தொடர்ந்து படித்து வருகிறேன். அவை எனக்கு வழங்கிய புதிய அனுபவங்கள் மகத்தானவை.
என்.ஸ்ரீராம் எழுதிய “அருவி” என்னும் சிறுகதை
அவருடைய முக்கிய சிறுகதைகளில் ஒன்று. காட்டை ஒட்டிய மலைச்சரிவில் ஒரு மிகப் பெரிய
அருவி உள்ளது. சுற்றுலாப் பயணி களை ஈர்க்கக்கூடிய இடமாகவும் அது உள்ளது. உச்சியை
நோக்கி வேடிக்கை பார்க்கச் செல்கிறவர்கள் எதிர்பாராத கணத்தில் பாறை வழுக்கியோ
அல்லது தடுமாறியோ அருவிக்குள் விழுந்து விடுவதுண்டு. அருவி விழும் பள்ளத் துக்குள்
சென்று, இறந்துபோனவனின் உடலைத் தேடி எடுத்துக் கொடுப்பதை ஒரு தொழிலாகவே செய்கிறான்
ஒரு வன். அவனுக்கு வேறு தொழில் தெரி யாது. மரணம் எப்போது நிகழும் என ஒவ்வொரு
நாளும் காத்துக் கொண்டிருக்கிறான். மரணம் இல்லாத நாள் அவனுக்கு வருமானம் இல்லாத
நாள். அவனுடைய கூட்டாளி ஒருவன் அருவிக்கரை ஓரமாகவே எப்போதும் அலைந்தபடி
இருக்கிறான். யாராவது விழுந்துவிட்ட செய்தி கிடைத்ததுமே ஓட்டமாய் ஓடிவந்து சொல்லி,
அவனை அழைத்துச் சென்றுவிடுவான். வடக்கயிற்றின் ஒரு நுனியை நண்ப னிடம்
கொடுத்துவிட்டு, மறு நுனி யோடு பள்ளத்துக்குள் மூழ்கி நீர்ப் பரப்பில்
முடங்கிக்கிடக்கிற உடலைத் தேடி எடுத்து வருவான் இவன். உடலை எடுத்துத் தந்த பிறகு
அவன் அவ்விடத் தில் நிற்பதில்லை. கயிற்றோடு தன் குடி சைக்குச் சென்றுவிடுகிறான்.
மற்றபடி பண விவகாரத்தை அவன் நண்பனே பார்த்துக்கொள்கிறான்.
இக்கதையில் மூன்று காட்சிகள் உள்ளன. முதல்
காட்சியில் மழையால் குழம்பிக்கிடக்கும் நீரைத் துளைத்து மூழ்கித் தேடி இறந்தவனின்
உடலை மீட்டெடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் சென்று விடுகிறான். பணம் பிறகு
மெதுவாக வீட்டுக்கு வந்து சேர்கிறது. இரண்டாவது காட்சியில் உடலுக்காக ஆழத்தில்
மூழ்கித் தேடும்போது, உள்முகக்குடைவில் நீர் குறைவான ஒரு பகுதியில் இறந்ததாக
நினைக்கப்பட்டவன் உயிரோடு ஒடுங்கிக் கிடப்பதைப் பார்க்கிறான். சாமர்த் தியமாக அவனை
மெதுவாக மீட்டெடுத்துவந்து ஒப் படைக்கிறான். வந்தவர்கள் எல்லோரும் ஒரு
வார்த்தையில் நன்றி சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். பணம் கிடைப்பதில்லை.
மூன்றாவது காட்சியிலும் அருவியில் ஒருவன் விழுந்துவிடுகிறான். ஆனால் வழக்கமாக அச்
செய்தியை அறிவிக்கவேண்டிய நண்பன் தெரிவிக்க வில்லை. வெகுநேரம் கழித்து தற்செயலாக
வீட்டுக்குத் திரும்பும் மனைவி வழியாகவே தெரிந்துகொள்கிறான். ஒரு கணம்
குழம்பினாலும் சட்டென்று வடக்கயிற்றோடு அருவிக்கரைக்கு ஓடுகிறான். கரையில்
இருக்கும் நண்பன் அவனைத் தடுக்கிறான். தனக்குத் தெரிவிக்கப்படாதது ஏன் என்று
கேட்கிறான் இவன். நேரம் கடத்தி, மரணத்தை உறுதி செய்துகொண்ட பிறகு சொல்லலாம் எனக்
காத்திருந்ததாகச் சொல்கிறான் நண்பன். அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் இவன்
அருவி விழும் பள்ளத்தை நோக்கி ஓட்டமாக ஓடுகிறான். ஒரு பின்னணி சார்ந்து உருவாகும்
இரு வேறுவேறு விசித்திரமான மனப்போக்குகளை ஸ்ரீராம் இக்கதையில் சித்திரிக்க
முனைகிறார். மற்றவர்கள் மரணமே இருவருக்கும் உணவுக் கான ஆதாரம். மரணத்தை ஒருவன்
மனித உயிராகப் பார்க்கிறான். இன்னொருவன் பணமாகமட்டும் பார்க் கிறான். மனிதனின்
கருணை முகத்தையும் குரூரமுகத் தையும் ஒருங்கே பார்க்கிறோம் நாம்.
ஸ்ரீராம் எதையும் திட்டவட்டமாகச் சொல்லவில்லை.
அக்காட்சியை நமக்கு எழுதிக் காட்டிவிட்டு கதையை முடித்துவிடுகிறார். அக்காட்சி
நமக்குள் எழுப்பும் சலனங்கள் ஏராளம். முதலில் அருவி என்னும் தலைப்பு, சம்பவம்
நடைபெறும் இடத்தைக் குறிப்பிடுவது போன்ற தோற்றத்தைத் தரலாம். ஆனால் அது இன்னும்
உள்முகமானது. மனத்திலே பொங்கி விழும் அருவியை மையப்படுத்துகிறது அது. இரக்கம்
என்னும் அருவி. கருணை என்னும் மாபெரும் அருவி. மற்ற உயிரையும் தன்னுயிராக
மதிக்கும் அன்பென்னும் அருவி. நெஞ்சின் அடியில் அது வற்றாத ஊற்றெனப் பொங்கிப்
பாய்ந்தபடி இருக்கிறது. எதார்த்தத்தில் பசிக்கும் இல்லாமைக்கும் இடையே ஊசலாடியபடி
இருந்தாலும் மானுடமனத்தில் சுரக்கும் கருணையின் தடத்தை இக்கதை நமக்கு அறிமுகப்
படுத்துகிறது.
பாலமுருகன் எழுதிய “பதின்மூன்று மீன்கள்” என்னும்
சிறுகதையும் நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கும் சிறுகதை. வறுமை நிலையில்
அல்லாடிக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் சித்திரத்தை இக்கதை வழங்குகிறது.
கணவன், மனைவி, மகள் என அளவில் சிறிய குடும்பமென்றாலும்
பொருளீட்டுவதற்கான உழைப்பிலேயே அவர்களுடைய பெரும்பாலான பொழுதுகள் கரைந்து
போகின்றன. அதிகாலை யில் எழுந்து வேகவேகமாக சோற்றை மட்டும் ஆக்கி இறக்கிய பிறகு ஒரு
கீரைத்துவையலை அரைத்துவைத்துவிட்டு கழனி வேலைகளுக்கு ஓடவேண்டிய சூழல். வேலைக்குச்
செல்கிற கணவனுக்கும் அதே கஞ்சிதான். பள்ளிக்குச் செல் கிற மகளுக்கும் அதே
கஞ்சிதான். இரவு கவிந்த பிறகு வீடு திரும்பும் அவளால் மீண்டும் சமையல் வேலையில்
ஈடுபட முடிவதில்லை. காலையில் வைத்த அதே கஞ்சியையும் துவையலையும் சாப்பிட்டுவிட்டு
எல்லோரும் படுத்துவிடு கிறார்கள். தொடர்ந்து கஞ்சியையும் துவையலை யும் சாப்பிடும்
அலுப்பில் மகளும் கணவனும் முனகாத நாளே இல்லை. ஒரு மீன்குழம்பு வைத்தால் என்ன என்று
மகள் வாய் திறந்து கேட்கவும் தொடங்கிவிட்டாள். எதைஎதையோ சொல்லி இருவரையும்
சமாதானப்படுத்தினாலும் அவளுக்கும் உள்ளுர மீன்குழம்பு வைக்க வேண்டும் என்கிற ஆசை
இருக்கிறது. நேரமில்லாத குறைக்கு இப்படியெல்லாம் இருக்கவேண்டி நேர்ந்து விட்டதே என
மனம் வெறுத்துப் போகிறாள்.
எதிர்பாராமல் ஒருநாள் மாலையில் சீக்கிர மாகவே வேலை
முடிந்து வீட்டுக்குத் திரும்பும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆட்டுக்குப்
புல்லறுத்துக் கொண்டு திரும்பும் வழியில் பிள்ளையும் கண வனும் மீன்குழம்பு கேட்டது
நினைவுக்கு வந்தது. இன்றாவது அவர்கள் மனம் குளிரும்படி மீன் குழம்பு வைத்துத்
தரவேண்டும் என்று எண்ணு கிறாள். அருகில் ஒரு குளம் இருக்கிறது. புல்லுக் கட்டைக்
கரையிலேயே இறக்கிவைத்துவிட்டு குளத்தில் இறங்கி முந்தானையையே வலையாக்கி மீன்
பிடிக்கிறாள். பதின்மூன்று மீன்கள் கிடைக் கின்றன. அவற்றைக் கூடையில் போட்டுக்
கொண்டு உற்சாகத்தோடு வீட்டுக்குத் திரும்பு கிறாள். ஆட்டுக்குப் புல்லை உதறிப்
போட்டு விட்டு, மீன்களைக் கழுவுகிறாள். பிறகு, குழம் புக்குத் தேவையான மசாலாவை
அம்மியில் அரைக்கிறாள். குழம்பு கொதித்து நுரை கட்டுகிற சமயத்தில் அதன் மணம்
தெருவெங்கும் பரவு கிறது. தெருவோடு போகிறவர்கள்கூட, ஒருகணம் திரும்பி “என்னம்மா
மீன்குழம்பா?” என்று கேட்டுவிட்டுச் செல்கிறார்கள். பக்கத்து வீட்டுச் சிறுவன்
ஒருவன் திண்ணைக்கே வந்து “என்ன அத்தை மீன் குழம்பா?” என்று கேட்கிறான். இரண்டு வார
காலமாக, கடுமையான காய்ச்சலில் கிடந்து அப்போதுதான் தேறி வந்தவன் அவன். காய்ச்சல்
காலத்தில் கஞ்சியையே குடித்துக் குடித்து மரத்துப்போன நாவில் மீன்குழம்பின் மணம்
எச்சிலூற வைக்கிறது. அவளுக்கும் பாவ மாக இருக்கிறது. அப்பா இல்லாதவன் அவன்.
வேலைக்குப் போன அவன் அம்மா இன்னும் திரும்பிவரவில்லை. குழம்பை இறக்கிவைத்து விட்டு
கணவனுக்காகவும் மகளுக்காகவும் காத்திருக்கிறாள்.
எல்லோரும் சாப்பிட்ட பிறகு அந்தச் சிறுவனுக்கும்
தரலாம் என்றுதான் முத லில் அவள் மனம் எண்ணுகிறது. ஆனால், அவன் திண்ணையைவிட்டு
எழுந்து போகிற மாதிரி தெரியாததால் ஒரு தட்டில் சோறு போட்டு, குழம்பு ஊற்றி, இரண்டு
மீன்களையும் வைத்துக் கொடுத்து அனுப்புகிறாள். சோற்றுத் தட்டோடு தன் வீட்டுக்குச்
செல்கிறான் அவன். சூடாகச் சாப்பிட்டால் சுவையாக இருக்குமே என்பதால் கணவனையும்
மகளையும் அழைத்து வரலாம் என எண்ணிப் புறப்படுகிறாள் அவள். கதவை இழுத்துச்
சாத்திவிட்டு, பூட்ட முயற்சி செய் கிறாள். பூட்ட முடியவில்லை. இருட்டில் எதுவும்
தெரியவில்லை. அப்படியே விட்டுவிட்டு, பக்கத்து வீட்டுச் சிறுவனிடம்
பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு வெளியே புறப்படுகிறாள். தன் வீட்டுக்குச்
சென்ற சிறுவன் குழம்பின் மணத் தாலும் பதினைந்து நாளாக சோற்றையே காணாத வேகத்தாலும்
வெகு சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விடுகிறான். நாக்கு இன்னும் சுவைக்காகத்
துடிக் கிறது. இன்னும் ஒரே ஒரு மீனாவது சாப்பிட வேண்டுமே என்று ஏங்குகிறான்.
ஒருபுறம் கூச்சம். ஒருபுறம் ஏக்கம். சில கணங்களின் போராட் டத்துக்குப் பிறகு
ஏக்கமே வெல்கிறது. பூட்டப் படாத வீட்டுக்குள் நுழைந்து சோறெடுத்துப்
போட்டுக்கொண்டு குழம்புச் சட்டியிலிருந்து மீனை எடுக்கிறான். நாக்கின் வேகம்
கட்டுப் பாட்டை இழந்துவிடுகிறது. இன்னும் ஒன்று, இன்னும் ஒன்று என எல்லா
மீன்களையும் அவனே சாப்பிட்டுவிடுகிறான். பிறகு கதவைச் சாத்திவிட்டு தன்
வீட்டுக்குச் சென்று விடுகிறான். கண வனையும் மகளையும் அழைத்துக்கொண்டு
வீட்டுக்குத் திரும்பும் அவள் இருவருக்கும் சோறு பரிமாற உட்கார்கிறாள்.
குழம்புச்சட்டியைத் திறந்தவள் ஒரு மீனைக்கூட காணாமல் அதிர்ச்சி யில்
உறைந்துபோகிறாள். அவள் கண்கள் கலங்கு கின்றன. இருவருக்கும் வெறும் குழம்பை ஊற்று
கிறாள். “எங்கம்மா மீனு?” என்று கேட்கும் மகளை எதையோ சொல்லி அடக்குகிறாள். பிறகு
கண வனிடம் நடந்ததைச் சொல்கிறாள். அவனுக்கும் துக்கமாகவும் அதிர்ச்சியாகவும்
இருக்கிறது. இரவு நேரத்தில் அதைச் சொல்லிப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று ஆறுதல்
சொல்கிறான் அவன். சாப்பிடாமலேயே சோற்றில் தண்ணீர் ஊற்றிவிடு கிறாள் அவள். அவள்
மனம் இன்னும் ஆறா மலேயே இருக்கிறது.
நீண்ட நேரத்துக்குப் பிறகு, அடுத்த வீட்டுச்
சிறுவனின் அம்மா அவளை அழைக்கிறாள். தன் மகனைப் பார்த்தாயா என்று கேட்கிறாள்.
வேலையிலிருந்து திரும்பியதி லிருந்தே அவன் வீட்டில் இல்லை என்றும், வீட்டில்
வைத்திருந்த நூறு ரூபாயையும் காண வில்லை என்றும் பதற்றத்தோடு சொல்லி அழு தாள்
அவள். உடனே இவள் கணவனுக்கு எல்லாம் விளங்கிவிடுகிறது. குற்ற உணர்வு தாங்காமல்
ஊரைவிட்டுச் செல்ல முடிவெடுத்து ஓடிவிட் டான் என்பதை அவன் புரிந்துகொள்கிறான்.
கிராமத்து எல்லைக்கு வந்துபோகும் கடைசிப் பேருந்து வருவதற்கு முன்னால் அந்த
இடத்துக்குச் சென்றால் அவனைப் பிடித்துவிட முடியும் என்றெண்ணி, மிதிவண்டியை
எடுத்துக்கொண்டு பறக்கிறான். அவன் கணக்கு பிசகவில்லை. வண்டிக் காகக் காத்திருந்த
கும்பலில் அவனும் காணப் படுகிறான். இவனைக் கண்டதும் அவன் அச்சத் தில் நடுங்கி மறைய
முயற்சி செய்கிறான். ஆனால் இவன் கண்கள் சிறுவனைக் கண்டுபிடித்து விடுகின்றன.
அடிபடப் போகிறோம் என்று நடுங்குகிறான் சிறுவன். ஆனால் இவன் எதுவும் சொல்லாமல்
மிதிவண்டியை அவனுக்கருகே நிறுத்தி ஏறிக்கொள்ளச் சொல்கிறான். மௌன மாக ஏறி
அமர்ந்துகொண்ட அவனோடு வீட்டுக் குத் திரும்புகிறான் இவன். மனித மனத்துக்குள் கோபம்
கருணையாக உருவெடுக்கும் ரசாயன மாற்றம் ஓர் அதிசயம். அதிசயமான அக்கணத்தை நோக்கி
நம்மை அழைத்துச் செல்வதாலேயே இது முக்கியமான கதையாக மாறுகிறது.
கோபத்தைக் கருணையாக மாற்றியது எது என்பது
முக்கியமான கேள்வி. பாதிக்கப்பட்டவன் என்கிற கோணத்தில் அவன் அவ்விஷயத்தை
அணுகவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மாறாக, ஒரு தந்தையின் கோணத்தில் அதை அணுகுகிறான்.
ஓர் ஆண், உறவின் அடிப் படையில் தன் பிள்ளைகளுக்குத் தந்தையாக இருக் கிறான். அதே
சமயத்தில் அவன் நெஞ்சில் வற்றா மல் ஊற்றெடுக்கும் கருணையின் அடிப்படையில்
உலகத்துக்கே தந்தையாக, கணந்தோறும் மாறியபடி இருக்கிறான். மாற்றம் நிகழும் அற்புதக்
கணமொன்றின் மீது ஒளியைப் பாய்ச்சி அடங்குகிறது பாலமுருகனின் சிறுகதை.
தீரன் எழுதிய “பாட்டியம்மாள்” சிறுகதை முக்கியமான
ஒன்று. ஒரு குடும்பத்தில் ஒரு பாட்டிக்குத் திடீரென ஒரு பிரச்சினை ஏற்படு கிறது.
அவள் நாவில் வற்றாமல் எச்சில் ஊறியபடி இருக்கிறது. எவ்வளவோ மருத்துவ ஆலோ சனைகள். எவ்வளவோ
மருந்துகள். எதற்கும் அடங்கவில்லை. அப்பிரச்சினை இறுதியில், இது நோயே அல்ல மனம்
சார்ந்த ஒரு பிரச்சினை, அவருக்குள் ஏதாவது உள்மன ஆசை இருக்கும், நிறைவேறாத அதன்
வெளிப்பாடாகவே இப்படி இருக்கலாம் என்று சொல்கிறார் மருத்துவர். வீட்டில் பாட்டியை
வைத்துக்கொள்வது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. தோட்டமெங்கும் எச்சிலாக
மாறுகிறது. எச்சில் நோயிலிருந்து பாட்டியை விடுவிக்க அவள் மகனும் மருமகளும்
எடுக்கும் நடவடிக்கைப் பட்டியல்கள் ஏராளம். அவற்றை சுவாரஸ்யமாக கதையின் அமைதி
கெடாமல் விரிவாகவே சொல்கிறார் தீரன். அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டது.
சம்மதம் தராத அப்பாவை மீறி, அத்திருமணத்தை அவள் ஏற்றுக்கொண்டது. அவர்களுக்காகவே
தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக் குடிவைத்தது, பிறகு சொந்தமாகவே ஒரு
வீட்டை வாங்கி வைத்தது என எல்லாச் செய்திகளும் அடுக்கப்படுகின்றன. நிறைவேறாத ஆசை எது
என்பதைக் கண்டறிய எதைஎதையோ செய்கிறார் கள் அவர்கள். வெளிநாட்டிலிருக்கும் மகளும்
ஒருமுறை வந்து செல்கிறாள். அப்போதும் நிலை மாறவில்லை.
எங்காவது முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என
எண்ணி மகன் எடுக்கும் முயற்சிகளும் பலிக்கவில்லை. இந்த நோயின் தன்மையைக் கேட்டறிந்ததும்
அவர்கள் அனுமதி மறுக்கிறார்கள். கசப்போடும் வேதனையோடும் தன் அம்மாவை
வைத்துக்கொண்டு சிரமப்படு கிறான் மகன். விடுதியில் தங்கிப் படிக்கிற மகனுடைய மகனான
சிறுவன் ஒருநாள் வீட்டுக்கு வருகிறான். பள்ளிப் பேருந்து நிற்காமல்
சென்றுவிட்டதால் விடுதிக்குச் செல்லமுடியாமல் வீட்டிலேயே தங்குகிறான் சிறுவன்.
அப்போது கிடைக்கும் நேரத்தில் பாட்டியோடு மனம்விட்டுப் பேசுகிறான் சிறுவன். கதை
கேட்கிறான். மடியில் ஏறி உட்கார்கிறான். மாலையில் வேலையிலிருந்து திரும்பும்
மகனும் மருமகளும் அக்காட்சியைக் கண்டு கொதித்துப் போய்விடுகிறார்கள். தொற்று நோயை
வீடுமுழுக்கப் பரப்பிக்கொண்டே இருப்பதாக எண்ணி மனம் வெறுக்கிறார்கள். தளுக்காகப்
பேசி, சிறுவனைப் பாட்டியின் அருகாமையிலிருந்து விலக்குகிறான் மகன். பிறகு,
வழக்கம்போல தளும்பி வழியும் பாட்டியின் எச்சில் குடுவையை எடுப்பதற்காகச்
செல்கிறான். அவனே ஆச்சரியத்தில் மூழ்கும் வண்ணம் அது காலையில் வைத்த கோலத்திலேயே
இருக்கிறது. அப்போதுதான் கவனிக்கிறான் அவன். பாட்டி யின் எச்சில் தெறிப்பு தானாகவே
அடங்கி யிருக்கிறது. எளிமையும் நுட்பமும் கதை யமைதியும் கூடிய சிறுகதை. பாட்டியின்
நாவில் ஊறும் எச்சிலை மனத்தில் ஊறும் எச்சிலாக மாற்றிப் பார்க்கலாம் என்று
தோன்றுகிறது. நெல்லிக்காய், ஊறுகாய், பழங்கள் எனச் சுவையான ஒன்றைக் காணும்போது
நாவில் எச்சில் ஊறுவதை எல்லோரும் அறிவோம். தன் உயிருக்குச் சுவை யூட்டக்கூடிய
அன்புக்காகவும் புன்னகைக்காகவும் பாட்டியின் மனம் ஏங்கித் தவிக்கிறது. அதுவே எச்சில்
ஊறும்படி வைக்கிறது. எச்சிலூறவைக்கிற அன்பின் ஏக்கத்தைப் புரிந்துகொள்ளவோ அல்லது
கண்டுணரவோ முடியாத தலைமுறை யினராக நாம் மாறிவிட்டது மானுடத்தின் மிகப் பெரிய
துக்கம்.
ஹரிகிருஷ்ணனின் ‘அசுரவித்து’ சிறுகதையின்
வாசிப்பனுபவம் குறிப்பிடத்தகுந்தது. ஒரு கிரா மத்துப் பள்ளிக்கூடத்தில் மதிய உணவு
வழங்கப் படும் நேரத்தில் இக்கதை நிகழ்கிறது. சிறுவர்கள் வரிசையில் நின்று சூடான
சோற்றை வாங்கி அரக்கப்பரக்கச் சாப்பிடுகிறார்கள். வீட்டி லிருந்தே சாப்பாடு
கொண்டுவரும் பிள்ளைகள் வேறொரு பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடு கிறார்கள். பசி
பொறுக்காத ஒரு சிறுவன், தனது தட்டில் விழுந்த சோற்றை வேகமாக வாங்கிச்
சாப்பிட்டுவிட்டுத் தட்டைக் கழுவி வைக்கிறான். வகுப்பறைக்குள் நுழையும்போது, தனது
புத்தகப் பைக்குள் வைத்திருந்த பணத்தைக் காணாது திகைத்து நிற்கிறான். பணமும் அதை
வைத்திருந்த கணக்குப் புத்தகமும் ஒருங்கே காணாமல் போயிருக்கிறது. ஆசிரியரிடம்
கொடுப்பதற்காக மற்ற பிள்ளைகளிடமிருந்து வசூல் செய்த தொகை அது. அழுதுகொண்டே பணம்
காணாமல் போன விஷயத்தை ஆசிரியரிடம் சொல்கிறான் அவன். அவன்மீது ஆசிரியருக்கு நல்ல
மதிப்பு உண்டு. அவன் நன்றாகப் படிப்பவன், முதல் மதிப்பெண் வாங்கக்கூடியவன்
என்பதால் எல்லா வகுப்பு களிலும் தன்னிடமே படிக்கும்படி பார்த்துக் கொள்ளக்கூடியவர்
அவர். அப்படிப்பட்டவரிடம் தனக்கு ஆதரவாக ஒரு சொல் கிடைக்கும் என்று அவன்
எதிர்பார்க்கிறான். துரதிருஷ்டவசமாக ஆசிரியர் அவனை உதைக்கிறார். வசைபாடுகிறார்.
திருடன் என்று பழிசுமத்துகிறார். தலைமை ஆசிரியர் முன்னால் அழைத்துச் சென்று நிற்க
வைத்துவிடுகிறார். அவரும் அச்சிறுவனை அடிக் கிறார். அவன் வாழும் தெருவின் பெயர்,
சாதியின் பெயர் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு “சாதிக்கேத்த புத்திதான இருக்கும்”
என்று மறு படியும் அடிக்கிறார். மற்ற பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே
கிட்டத்தட்ட அவனைத் திருடன் என்றே முத்திரை குத்தி அடிக்கிறார். அதை அவனால் தாங்க
முடியவில்லை.
தற்செயலாக, சாப்பிடப் போவதற்கு முன்னால் அவனிட
மிருந்து அப்புத்தகத்தை கடன் வாங்கிப் போன மாணவி அச்சமயத்தில் திருப்பித் தரவருகிறாள்.
பசியின் வேகத்தில், அவள் வாங்கிப் போனதே அச்சிறுவன் மனத்தில் பதியவில்லை. பணம்
அப்புத்தகத்திலேயே கண்டெடுக்கப்படுகிறது. கூட்டம் கலைந்து போகிறது. எல்லோரும்
வகுப்புக்குச் சென்றுவிடுகிறார்கள். ஆனால் அச் சிறுவன் அப்பள்ளியையும் கல்வியையும்
அக்கணத்தில் வெறுக்கிறான். புத்தகக் கட்டோடு வெளியேறுகிறான். ஆதரவாக இருக்க
வேண்டிய ஆசிரியர், முக்கியமான ஒரு தருணத்தில் மனிதா பிமானமே இல்லாத முறையில்
நடந்துகொள்வது வேதனையானது. ஒவ்வொரு ஆண்டும் தான் விரும்பி எடுக்கும் சிறுவனை
சிக்கலான ஒரு கட்டத்தில் நிராதரவாக விடுவதும் அவன்மீது அபாண்டமாக திருட்டுப்பழி
சுமத்துவதும் மிகப் பெரிய சோகம். சட்டென்று சாதியையும் தெரு வையும் இணைத்துப்
பேசித் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்கிறார் அவர். அதுவரைக்கும் அவர் காட்டிய ஆதரவு
எவ்வளவு போலியானது என்பதையும் அவர் ஆழ்மனக்கிடக்கை என்ன என்பதையும் இத்தருணம் அம்பலப்படுத்திவிடு
கிறது. சிலர் மனம் ஊற்றெனக் கருணை சுரக்கும் கிணறென்றால், சிலர் மனம் எவ்வளவு ஆழம்
போனாலும் நீரின் தடமே இல்லாத பாறைக் கிணறாகவே இருக்கிறது. கருணையின் தடத்தைக்
காட்டும் சிறுகதைகளைப் போலவே பாறையின் தடத்தையும் காட்டும் சிறுகதைகளும் முக்கிய
மானவையே. இத்திசையில் முக்கியமான இன் னொரு சிறுகதை, நீரின் தடமும் பாறையின் தடமும்
மாறிமாறித் தென்படுகிற கிணறாகத் தோற்றமளிக்கும் லட்சுமி சரவணக்குமாரின் “யாக்கை”
சந்திராவின் ‘காட்டின் பாடல்’ மிக நல்ல சிறுகதை.
எந்த அளவுக்கு காடு மர்மத்தன்மை உடையதாக விளங்குகிறதோ, அந்த அளவுக்கு மனமும்
மர்மத்தன்மை கொண்டதாக உள்ளது. இளம்பருவத்தில் கிட்டிய அன்பின் துணையை எண்ணி
எண்ணிக் கனவில் ஆழும் இளம்பெண் ணின் மனவோட்டங்கள் மிகவும் நம்பகத் தன்மையோடு
இக்கதையில் உள்ளன. ஒருபோதும் இனி பார்க்கக் கிடைக்காத அந்தத் துணையைக் கனவில்
மட்டுமே அவள் காண முடியும். அவனைச் சந்தித்த காட்டின் பின்னணியில் அவனைப் பற்றிய
கற்பனைகளை இணைத்துப் பின்னிக்கொள்வதே பொருத்தமாக இருக்கும். காட்டின் கனவுகள் அவளை
மறுபடியும் மறுபடியும் அலைக்கழித்தபடி உள்ளன. காடு மர்மத்தின் படிமம் மட்டுமல்ல,
இன்பத்தின் படிமம். கனவின் படிமம், இளமையின் படிமம்.
எஸ்.செந்தில்குமாரின் இடம் வழங்கும் அனுபவமும்
முக்கியமானது. இடம் என்பதை நில இருப்பு சார்ந்த ஒன்றாக இல்லாமல் மன இருப்பு
சார்ந்த ஒன்றாக மாற்றுகிறது கதை. அம்மாவின் மனத்திலே மகளுக்கு இடமில்லை. தன்
பேச்சை மறுக்கிறாள் என்கிற காரணத்தாலேயே கடுமை யான சாபத்தைப் பொழிகிறாள் அவள். “நீ
வாழ மாட்டேடி, வாழமாட்டேடி” என்று வயிறெரிய சாபமிடுகிறாள். எந்தத் தாய் அப்படிச்
சொல் வாள்? செந்தில்குமார் அப்படிப்பட்ட ஒரு தாயைத் தன் கதையில்
அறிமுகப்படுத்துகிறார். காதலனோடு ஆசையாக தில்லியை நோக்கி வாழப்போன மகள்
துரதிருஷ்டவசமாக அவனைப் பறிகொடுத்து அபலையாக நிற்கிறாள். அம்மாவின் சாபமே தன்னை
இப்படி ஆக்கியது என அவள் நம்புவதைப் பிழையென யாராலும் சொல்ல முடியாது. அவள்
மனத்தில் அம்மா விற்கான இடம் சுத்தமாக அகற்றப்பட்டுவிடுகிறது. நோய்வாய்ப்பட்ட அந்த
அம்மா மருத்துவமனை யில் இறந்துபோகிறாள். மகள் வரமாட்டாள் என்பது உறுதியான பிறகு
இறுதிச் சடங்கு தொடர்கிறது. அம்மா, மகள் தவிர அப்பா, அத்தைமகன் என மேலும் இருவர்
கதையில் இருக் கிறார்கள். அம்மாவின் மனத்தில் மகளுக்கான இடமும் மகளின் மனத்தில்
அம்மாவுக்கான இடமும் இல்லாமல் போனாலும் இவ்விருவரி டமும் அவ்விருவருக்குமான
இடங்கள் இருக்கின் றன. மன இயக்கம் எந்த சூத்திரத்திலும் அடங்காத விசித்திரத்தன்மை
கொண்டது. தன்னை நிரா கரிப்பவர்களையே அது நினைத்து நினைத்து நெருப்பெனக் காலம்
முழுதும் எரிந்தபடியே உள்ளது. தனக்கென இடம் ஒதுக்கி வைத்திருக்கும் மனத்தை அது
கணக்கிலெடுத்துக்கொள்வதே இல்லை.
காலபைரவன் எழுதிய இருவழிப்பாதை சிறுகதையிலும்
மனத்தில் உருவாகும் இடத்தைப் பற்றிய அனுபவத்தை முன்வைப்பது. கூத்து
நிகழ்த்துவதற்காக வந்திருக்கும் ஊரில் தற் செயலாகச் சந்திக்கிற முறுக்குக்
கடைப்பெண் ஒருத்தியோடு உறவு கொள்கிறான் ஒருவன். அவனுக்கு அவளை மிகவும் பிடித்துவிடுகிறது.
அவளும் அவனை விரும்புவதாகவே சொல் கிறாள். ஆசையின் வேகத்தில் அவன் அவளைத் தன்னோடு
வந்துவிடும்படி சொல்கிறான். அவள் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லை. தன் னோடு
வாழும் கணவனுக்கும் மகனுக்கும் சோறு ஆக்கிப் போடவாவது தான் அங்கே இருக்க வேண்டுமே
என்று சொல்லி அனுப்பிவிடுகிறாள். அவளை அவனால் மறக்கவே முடியவில்லை. அவளுக்கான இடம்
அவன் மனத்திலேயே உள்ளது. அடுத்த ஆண்டு, மீண்டும் கூத்தாடு வதற்கு அதே ஊருக்கு
அவர்கள் வருகிறார்கள். அப்போது அந்த முறுக்குக் கடைப்பெண் அங்கே இல்லை.
விசாரித்ததில் தெரியவந்த உண்மை அவனை உடைத்துவிடுகிறது. சில மாதங்கள் முன்னால்
அங்கே வந்த ஒருவரோடு அவள் ஊரை விட்டுச் சென்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். இவனை ஏன்
அவள் மறுத்தாள், அவனை ஏன் அவள் ஏற்றாள் என்னும் கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல
முடியாது.
சிறுகதையை முன்வைத்து நிகழ்த்தக்கூடிய பயணத்துக்கு
எல்லையே இல்லை. அது ஒரு மாபெரும் பயணம். அதில் திளைக்கத்திளைக்க புதிய புதிய
அனுபவங்கள் நம்மை வந்தடைந்தபடி இருக்கும்.
(அக்டோபர் 2011 உங்கள் நூலகம் இதழில் வெளிவந்த
கட்டுரை)