Home

Thursday, 10 November 2016

இருவேறு தோற்றங்கள் - மா.அரங்கநாதனின் சிறுகதைகள்


ங்கள்  இளம்பருவத்துநாட்களில் விழாக்கால மகிழ்ச்சிக்கு ஒருநாளும் குறைவந்ததே இல்லை. ஒவ்வொரு விழா சமயத்திலும் ஒரு புதுவிதமான விளையாட்டுப்பொருள் எங்கள் கைக்குக் கிடைத்துவிடும். ’அவன் கையில் இருந்ததுபோலவே எனக்கும் வேண்டும்என்று வீட்டுப் பெரியவர்களிடம் அழுது அடம்பிடித்து எல்லோருமே வாங்கிவிடுவோம். ஆட்டப்பொருளின் கவர்ச்சி தீரும்வரைக்கும் கீழே வைக்கவே மனம் வராமல் ஆடித் தீர்ப்போம். விழாக்காலக் கடைகளில் எங்களுக்காகவே புதுப்புது விளையாட்டுப்பொருள்கள் வந்தபடியிருக்கும்.

ஒருமுறை ஆற்றுத்திருவிழாவில் ஒரு புது விளையாட்டுப்பொருளைப் பார்த்தோம். அளவாக மடித்து நறுக்கி, குறுக்கும் நெடுக்குமாக வைத்துப் பின்னப்பட்டு, அழகாக வண்ணம் பூசப்பட்ட பனை ஓலையால் செய்யப்பட்டது அந்த விளையாட்டுப்பொருள். செவ்வகவடிவத்தில் ஓர் அஞ்சலட்டை அளவுக்கு இருந்த அந்த மட்டையில் அழகான சேவலின் உருவம் தெரிந்தது. மட்டையின் மேல்பக்கம் நீட்டிக்கொண்டிருந்த சின்னக் குச்சியை வலப் புறமாகத் தள்ளியதும் மட்டையில் சேவலின் உருவம் மறைந்து சட்டென்று மயிலின் உருவம் தெரிந்தது. கணநேரத்தில் உருவம் மாறும் அதிசயத்தை கண்ணிமைக்காமல் பார்த்து, அந்த விளையாட்டுப் பொருளின் மேல் ஆசைப்பட்டோம். எங்கள் பெற்றோரை நச்சரித்து ஆளுக்கொன்று வாங்கிக்கொண்டு ஊர் திரும்பினோம். ஒவ்வொரு அட்டையிலும் ஒவ்வொரு விதமான படம் இருந்தது. ஓர் அட்டையில் சேவல்-மயில் படம். மற்றொரு அட்டையில் ஆடு-புலி படம். இன்னொரு அட்டையில் யானை-ஒட்டகம் படம். குச்சியை வலதுபுறம் தள்ளினால் ஒரு படம். இடதுபுறம் தள்ளினால் மற்றொரு படம். தோற்றங்களை கணநேரத்தில் மாற்றிக்கொள்ளும் அந்த அட்டையைப் பார்த்துப்பார்த்து நாங்கள் பெற்ற பரவசத்துக்கு அளவே இல்லை. மா.அரங்கநாதனின் சிறுகதைகளை ஒருசேரப் படித்துமுடித்த கணத்தில் அந்தப் பனையோலைப் பட அட்டையும் இளம்பருவத்துப் பரவசமும்தான் உடனடியாக நினைவுக்கு வந்தன. பட அட்டையின் படங்களைப்போலவே அரங்கநாதனின் சிறுகதைகளும் மேல்தோற்றத்தில் ஒருமுகமும் வேறொரு தோற்றத்தில் இன்னொரு முகமும் கொண்டவை. கச்சிதமான கதையாக்கத்தாலும் கூர்மையன கதைமொழியாலும் அவை அரங்கநாதனுக்குச் சாத்தியப்பட்டிருக்கின்றன.
அரணை போன்ற ஆரம்பக்காலக் கதையிலேயே இப்படிப்பட்ட கதைப்பின்னல் அரங்கநாதனுக்குக் கைவந்திருக்கிறது. வாடகைவீடுகளைக் கொண்ட ஒரு வளாகத்தில் சாதாரணமாக நடைபெறுகிற சம்பவங்களின் அடுக்குகளைக் கொண்ட கச்சிதமான ஒரு தோற்றத்தை அழகாக முன்வைக்கிறது கதை. வளாகத்தின் எல்லா அதிகாரத்தையும் தன்னிடம் வைத்திருக்கிறார் ஒருவர். முக்கியமாக தினசரித் தேவைக்காக மோட்டார் போட்டு தண்ணீர் ஏற்றும் அதிகாரம். இறைச்சி சமைக்கக்கூடாது என்று எல்லோரையும் கட்டுப்படுத்தும் அதிகாரம். வளாகத்துக்குள் புதிதாக வந்த ஒரு குடும்பம் மிக இயற்கையாகவே அந்த அதிகாரத்தைப் புறக்கணிக்கிறது. அதை பழைய ஆளால் தாங்கவே முடியவில்லை. உள்ளுக்குள்ளேயே குமுறுகிறார்   ஒருநாள் எதிர்பாராதவிதமாக உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவத்துக்குப் பிறகு திரும்ப வருகிறார். அவர் அதிர்ச்சியடையக்கூடும் என்ற நல்லெண்ணத்தில் தீபாவளி நாளன்றுகூட தம் பிள்ளைகளிடம் வெடிவெடிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார் புதிய ஆள். ஆனால் அந்த நல்லெண்ணத்தை உணரும் மன நிலையில் இல்லை பழைய ஆள். வீட்டுச் சொந்தக்காரரைச் சந்திக்கும் சமயத்தில் மனம்நொந்து புகார் சொல்லத்தான் அவருக்குத் தோன்றுகிறது. இது ஒரு தோற்றம். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என்று நினைத்துக்கொள்ளலாம். கதைக்கு இன்னொரு தோற்றமும் உள்ளது. அதுதான் முக்கியம். கதையில் ஒரு தருணத்தில்அம்மிக்கடியில ஏதோ இருக்குதுஎன்று சொல்கிற பழைய ஆளின் மனைவிசனியன், திரும்பத்திரும்ப அங்கயே வருது…. எத்தன தரம் அடிச்சாச்சி….. அடிக்கற நேரம்தான் ஓடுது….  திரும்பவும் அந்த இடம்….” என்று சொல்லி அலுத்துக்கொள்ளவும் செய்கிறாள். அம்மிக்கடியில் மறைந்திருந்துவிட்டு ஓடுகிற அரணையைப் பார்த்துவிட்டுத்தான் அந்த அம்மா அப்படிச் சொல்கிறாள். கதையின் மற்றொரு தோற்றத்தை நாம் இந்தச் சொற்களின்  ஊடாகப் பார்க்கலாம். இந்த அரணை, உண்மையில் ஒரு விலங்கல்ல. விலங்குத்தனமான குணத்தைக் கொண்ட ஓர் உணர்வு. திரும்பத்திரும்ப வந்து மனத்தோடு ஒட்டிக்கொள்கிற உணர்வு. சாதி பார்த்து மதிப்பிட முனைகிற உணர்வு. உணவுப்பழக்கத்தை வைத்து ஒருவனை மேலானவன் அல்லது கீழானவன் என்று மதிப்பிட முனைகிற உணர்வு. தானும் ஒரு வாடகைக்காரனே என்றாலும் மூத்த வாடகைக்காரன் என்கிற பெருமையால் பிற வாடகைக்காரக் குடும்பங்களைக் கட்டியாள நினைக்கிற உணர்வு. எல்லோரையும் விட தான் பெரியவன் என்று எண்ணுகிற உணர்வு. இந்தக்  கோணத்தில் கதையின் இன்னொரு தோற்றம் புலப்படுவதைப் பார்க்கலாம். அந்த வளாகத்தில் அவரைச் சுற்றி எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடைபெறுகின்றன. அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சாதி அடையாளத்தை மட்டுமே ஓர் அளவுகோலாகக் கொண்டு மதிப்பிட முற்படுகிறார் அவர். வளாகத்தில் புதிதாகக் குடிவந்தவர், வளாகத்துக்குள் சத்தம் வரக்கூடாது என்பதற்காக தீபாவளி அன்று தம் பிள்ளைகளிடம் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிற அளவுக்கு நல்லவர் அவர். ஆனால் அது எதுவுமே அவர் மனத்தில் ஏறவில்லை. விரட்ட விரட்ட வந்து உட்கார்ந்துகொள்கிற அரணைபோல சாதிப்பெருமை உணர்வுகளும் பழக்கப்பெருமை உணர்வுகளும் அவர் நெஞ்சில் வந்து உட்கார்ந்துகொள்கின்றன.
ஒவ்வொரு தருணத்திலும் தன்னை ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களோடு ஒப்பிட்டு, மற்றவர்களைத் தாழ்த்தி தன்னைப் பெரியவனாக எண்ணி போலிப் பெருமையில் மிதக்கிற உணர்வுதான் அரணை. ஒப்பிட்டுப் பார்க்க இந்த உலகத்தில் விஷயங்களா இல்லை? நிறம், கல்வி, செல்வம், உடைகள், இருப்பிடம், பழக்கவழக்கம், வேலை, அதிகாரம், அறிவு, ஞானம் மொழி, மதம், இனம் என ஆயிரமாயிரம் விஷயங்கள். அரணை நெஞ்சைவிட்டு ஓடுவதே இல்லை. துரத்தும் கணத்தில் தலைமறைவாக இருந்தபின்னர், மீண்டும்மீண்டும் நெஞ்சின் அடியில் வந்து ஒட்டிக்கொள்கிறது. இந்த  அரணைதான் மனம் என்னும் பம்பரத்தைச் சுழல வைக்கிறது. அரணை என்னும் சாட்டையால் சுழற்றப்படும் பம்பரம். அரங்கநாதனின் சிறுகதைமையத்தில் இந்தப் பம்பரம் சுற்றிக்கொண்டே இருக்கிறது.
இன்னொரு விதமாகவும் இதைச் சொல்லிப் பார்க்கலாம். மோனலிசாவின் புன்னகையைப்பற்றி இரண்டு நண்பர்களிடையே நிகழும் உரையாடல் ஒன்று அரங்கநாதனின் சிறுகதையொன்றில் இடம்பெற்றிருக்கிறது. அந்தப் புன்னகைக்கு மூன்றுவிதமான அர்த்தங்களை முன்வைக்கிறது அந்த உரையாடல். அந்த இடம் ஆடு மேய்க்கிற இடம்போல இருக்கிறது. அந்த இயற்கையையும் ஆடுமேய்கிற சூழலையும் பார்த்த மயக்கத்தில் உதிர்க்கிற புன்னகை அது என்பது ஓர் அர்த்தம். இந்தச் சிரிப்பெல்லாம் அவனைக் கவர்ந்திழுக்கவேண்டி அவள் செய்கிற லீலைஎன்பது இன்னொரு அர்த்தம். “அவள் அவனை வெறுக்கலை. என்னதான் இந்த ஆள் நினைக்கிறான்னு கண்டுபிடிக்கத்தான் அவள் விளையாட்டு காட்டுகிறாள். அதுதான் அந்தச் சிரிப்பின் அர்த்தம்என்பது மூன்றாவது அர்த்தம். ஒரு புன்னகைக்கு இப்படி பலவிதமான அர்த்தங்கள். இதுபோலவே வாழ்வில் நடைபெறுகிற சம்பவங்களுக்கும் ஏராளமான அர்த்தங்களை உருவாக்கமுடியும். அர்த்தங்களை அறியமுனைகிற அல்லது அர்த்தங்களை உருவாக்கும் புனைவுகளே இலக்கியம் என்று வரையறை செய்துகொண்டோமெனில், அரங்கநாதன் தம் கதைகளில் வரையறுக்கும் அர்த்தம் என்ன என்பது முக்கியமான கேள்வி. இருக்கிற நாலு சுவத்த சரியா பாக்க முடியாதவன் கைலாசத்தயா சரியா பாக்கமுடியும்..? என்பது உறவு என்னும் சிறுகதையில் இடம்பெறும் வரியை அரங்கநாதன் வரையறுக்க விழையும் அர்த்தம் என்று கருத இடமிருக்கிறது. நாலு சுவர்களை சரியாகப் பார்ப்பது என்பது, நமது வாழிடத்தைச் சரியாகப் பார்ப்பது. நம்மைச் சூழ்ந்துள்ள மனிதர்களையும் சூழலையும் உற்றறிந்து ஏற்றுக்கொள்வது. எந்த முன்முடிவும் முன்கணக்குகளும் இல்லாமல் மனிதர்களை அணுகுவது. காற்றுப்போல, வெளிச்சத்தைப்போல மழையைப்போல மனிதர்களிடையே நிறைந்து, வாழ்ந்து, அருகருகில் நெருங்கியிருந்து வளர்வது. நமது மனத்தின் நிறைகுறைகளை சார்புகள் எதுவுமின்றி மதிப்பிடுவது. இப்படி நிறையச் சொல்லலாம். ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் இயற்கையோடு இயற்கையாக இருப்பது என்று சொல்லலாம். ஒரு மரம்போல. ஒரு நதியைப்போல.
அரங்கநாதனின் சாதனைக்கதைகளில் முக்கியமானது சித்தி. ஓட்டத்தை ஒரு வெற்றியாக மாற்றவும் அதை ஒரு தேசத்தின் அடையாளமாக மாற்றவும் எல்லோரும் முயற்சி செய்யும்போது, ஓட்டத்தை அதன் இன்பத்துக்காகவே விரும்புகிறவனின் கதை அது. அப்பழுக்கில்லாத ஓர் எளிய மனிதனின் அடையாளம் அவன். ஒரு செயலை, அச்செயல் வழங்குகிற இன்பத்துக்காகவே செய்ய விரும்புகிறவன் அவன். ஆனால் உலகமே, அவன் எண்ணத்துக்கு நேர்மாறாக இருக்கிறது. உலகத்தைப் பொருத்தவரையில் எல்லாச் செயல்களும் நோக்கம் சார்ந்தவையே. பயன் எதிர்ப்பார்ப்பவையே. மழையோ, காற்றோ, வெயிலோ, அல்லது ஒரு பூவோ எந்தப் பயனையும் எதிர்பார்ப்பதில்லை. அதுவே இயற்கை. ஆனால் இயற்கையோடு இயைந்து நிற்கவேண்டிய மனிதன் இயற்கையிலிருந்து விலகிநிற்கவே விரும்புகிறான். இந்த விருப்பமே, ஏதேதோ நோக்கங்களை அவன் தோள்மீது ஏற்றிவிடுகின்றன. இதனால்தான் “எனக்கு ஓடமட்டுமே  தெரியும், அதிலே எனக்கு கிடைப்பதுதான் நான் ஓடுவதற்குக் காரணம்”  என்று அவன் சொல்லும் பதில் ஊடகத்தினருக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை. நான் எனக்காகவே ஓடுகிறேன், ஓட்டத்தின்  சிறப்புத்தான் அதற்குக் காரணம் என்னும் பதில் அவர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக உள்ளது. அவன் ஓட்டத்தில் பெருமை கொண்டு, அவனை வளர்த்த பயிற்சியாளராலேயே அவனுடைய உட்கிடக்கையை அறிந்துகொள்ள முடியாமல் போகிறது. அதுதான் மிகப்பெரிய துரதிருஷ்டம். சித்திப்பது வேறு. பயிற்சியால் கைவரப்பெறுவது வேறு. சித்திக்கப்பெற்றவன் ஞானி. பயிற்சியில் தேர்ந்தவன் நல்ல விற்பன்னன். ஞானி இயற்கையில் திளைப்பவன். விற்பன்னன் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்துகொண்டே இருப்பவன்.
படிப்பு வராமல் அல்லது பள்ளிப்படிப்பை மட்டும் முடித்துவிட்டு அதற்கும்மேல் தொடரமுடியாமல் அல்லது ஏதோ ஒரு வம்பை வளர்த்துவிட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ள விருப்பமில்லாமல் கிராமங்களிலிருந்து வெளியேறி பட்டணத்தைநோக்கி வந்து சின்னச்சின்ன வேலைகளைச் செய்து வாழ்க்கையில் காலூன்ற முயற்சிசெய்யும் ஏராளமானவர்களின் சித்திரங்களை அரங்கநாதன் கதைகள் காட்டுகின்றன. அவர்கள் அனைவரும் வெவ்வேறு பெயர்களை உடையவர்கள். வெவ்வேறு வேலைகளில் ஒட்டிக்கொண்டு பிழைப்பவர்கள். வெற்றிக்கான அலைச்சல்களில் ஓயாமல் ஓடிக்கொண்டே இருப்பவர்கள். ஆனால் அவர்களுடைய மன இயக்கத்தில் ஒரே ஒரு விசித்திரமான அம்சம் மட்டும் பொதுவானதாக இருக்கிறது. தன்னைவிட அடுத்த ஆள் எந்த அளவுக்கு பணத்தாலும் வசதியாலும் பெருமையாலும் உயர்ந்திருக்கக்கூடும் என்று ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பிட முனைகிற அம்சம். அந்த மதிப்பீட்டின் முடிவு தனக்குச் சாதகமாக இருக்கும்போது அந்தப் பாத்திரங்கள் உள்ளுர மனம் குளிர்ந்துபோகின்றார்கள். சாதகமாக அமையாத தருணங்களில் மனம் வெந்து தவித்துப்போகின்றார்கள். அரணை அவர்கள் நெஞ்சில் புகுந்து குத்திக் குடைகிறது.
உலகுபுரத்தல் என்னும் சிறுகதை வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தருணங்களில் ஊரைவிட்டாக வெளியேறிய இருவரைப்பற்றிய சித்திரங்களைத் தீட்டிக்காட்டுகிறது. ஒருவன் பெயர் ராகவன். இன்னொருவன் பெயர் முத்துக்கறுப்பன். ஒரு நகரப் பேருந்தில் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். அந்தச் சந்திப்பு ஒருவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கிற அளவுக்கு இன்னொருவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. ஆனாலும் அதை அவனால் வெளிக்காட்ட முடியவில்லை. பேருந்திலிருந்து இறங்கி தேநீர் அருந்துகிறார்கள். பழைய கதைகளைப் பகிர்ந்துகொள்கிற பாங்கில் ஒவ்வொருவரும் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்கிறார்கள். முத்துக்கறுப்பனின் மனம்வாழ்க்கைத் தரத்தில் தன்னைவிட எந்த அளவுக்கு ராகவன் உயர்ந்திருக்கக்கூடும் என்று மறைமுகமாகக் கணக்கிட்டுப் பார்த்துக்கொள்கிறது. ராகவனின் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவமும் முத்துக்கறுப்பனுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. உதைபடுவதற்கே எல்லாச் சாத்தியங்களும் உள்ள ஒரு சூழலில் ஆசிரியர் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து தருகிறார். பட்டணத்தில் ஒரு வேலைக்கும் ஏற்பாடு செய்கிறார். வாடகைக்கு ஒரு வீடு பார்த்துக் கொடுத்து, பக்கத்திலேயே இருந்து தேவையான உதவிகளையும் செய்கிறார். முரட்டு சுபாவமுள்ள ஒருவனுக்குக் கிடைத்த பெருவாழ்வு நம்பமுடியாததாக இருக்கிறது. ராகவனைப்பற்றி அவனுக்குத் தெரிய வருகிற ஒவ்வொரு செய்தியும் அவன் மனத்தைப் பாரமானதாக மாற்றுகிறது. தன்னைவிட வளமான வாழ்க்கையை காலம் அவனுக்கு வழங்கியிருப்பதை எண்ணி அவன் மனம் குமைகிறது. அவனைச் சந்திப்பதற்காக ஒருமுறை அவனுடைய அலுவலகத்துக்குச் செல்கிறான். தற்காலிகமாக அவன் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் செய்தியை அப்போதுதான் அறிந்துகொள்கிறான். அவனையறியாமல் ஒரு குதூகல உணர்வு அவன் மனத்தில் பற்றிப் படர்கிறது. ராகவனுடைய தனிப்பட்ட சரிவு, குடும்பச்சூழலில் எப்படிப்பட்ட இடத்தைத் தந்திருக்கிறது என்பதைக் கண்ணால் காணும்  ஆவல் உந்தித் தள்ள, அவனுடைய இருப்பிடத்தை நாடிச் செல்கிறான். வேலைநீக்கம் பற்றிய விஷயத்தை அவன் வீட்டில் மறைத்திருக்கக்கூடும் என்றும், அதைத் தெரிந்ததுபோலவே காட்டிக்கொள்ளாமல் பெருந்தன்மையோடு நடந்து அவனைக் காப்பாற்றவேண்டும் என்றும் நினைத்துக்கொள்கிறான். சரிந்துபோனவனின் மானத்தைக் காப்பாற்றப் போகும் பெருமையால் அவன் மனம் நிறைந்திருக்கிறது. அவன் நினைத்ததற்கு மாறாக அந்த விஷயம் அக்குடும்பத்தில் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. அவன் பிழையை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு, சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் குடும்பமே ஈடுபட்டிருப்பதைக் கண்டு அவன் தளர்ந்துபோகிறான். பெருந்தன்மையின் அரவணைப்பில்கூட அவனைவிட அவர்கள் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். எல்லா விதங்களிலும் ஒரு மேலான வாழ்க்கை நண்பனுக்குக் கிடைத்திருப்பதை அவன் அறிந்துகொள்கிறான். அவனால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவும் முடியவில்லை. இந்த உலகைப் புரப்பது பெருந்தன்மையா அல்லது ஆற்றாமையா என்று யோசிக்கத் தோண்டும் நகைமுரணான ஒரு புள்ளியில் கதை முடிந்துவிடுகிறது.
ஊரைவிட்டு ஓடிவந்தவனின் வாழ்க்கையைச் சொல்லும் இன்னொரு கதை உறவு. ஊரிலிருந்து புறப்பட்டுவரும் ஒவ்வொருவருக்கும் தன்னால் ஆன உதவிகளை மனம் கோணாமல் செய்கிறான். அவனுக்குள்ளும் ஒரு சின்னக் கணக்கு மறைமுகமாகச் செயல்படுகிறது. சொந்த ஊரில் தன்னைப்பற்றிய பிம்பமும் பெருமையும் உயர்ந்திருக்கிறதா என அறியும் கணக்கு. எல்லாத் தருணங்களிலும் தன்னைப்பற்றியும் தன் பெருமையைப்பற்றியும் மட்டுமே கவலைப்படுகிற விலங்காக மனிதவாழ்க்கை அமைந்துபோன அவலத்தை நேரடிமையமாக மாற்றிச் சொல்லாமல் வேறு எதைஎதையோ சொல்ல வந்ததுபோன்ற பாவனைகளில் சொல்லிச் செல்கின்றன அரங்கநாதனின் சிறுகதைகள்.
ஒரு பிற்பகல் நேரம் என்றொரு சிறுகதை. “ஏய் முத்துக்கறுப்பா, இந்தச் சின்ன மரத்துல ஏற முடியலையே, நீ எதிலே ஏறி செயிக்கப் போறே?” என்று சின்ன வயதில் மற்றவர்களின் கிண்டலுக்கு ஆளான முத்துக்கறுப்பன் பட்டணத்துக்கு வந்து படாதபாடு பட்டு அங்குலமங்குலமாக உயர்ந்து பத்துப் பதினைந்து ஆண்டுகளில் ஓரளவு நல்ல நிலைமைக்கு வருகிறான். மரம் ஏற முடியாதவன் வாழ்க்கைப் படிகளில் ஏறிவிடுகிறான். வெவ்வேறு கட்டங்களில் நடைபெற்ற பல சம்பவங்கள் கதையில் தொகுத்து முன்வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவனுடைய கடுமையான உழைப்பும் நேர்மையும் அவனைக் காப்பாற்றுகின்றன. அதுமட்டுமல்ல, தற்செயலாக எதிர்த்தரப்புக்கு தகுந்த தண்டனை கிடைக்கவும் செய்கின்றன. அவன் ஆசைப்பட்ட பெண்ணையே ஆசைப்படுகிறான் அவன் நண்பன் மதுசூதனன்அவளையே மணந்துகொள்ளவும் செய்கிறான். தீராத தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவன் அவன் என்று பெண்ணிடமும் பெண்ணுக்கு உரியவர்களிடமும் சொன்ன பொய் அவனுக்கு உதவுகிறது. ஆனால் காலம் அவனைத் தண்டித்துவிடுகிறது. சின்ன வயதில் திருட்டுப்பட்டம் கட்டி அவமானப்படுத்தியவன் கோலப்பன். அவனையும் காலம் தண்டித்துவிடுகிறது. இன்ஸ்பெக்டர் நியமனத்தில் தான் செய்த பிழையை அவன் செய்ததாக தணிக்கைக்குழுவினரிடம் சொல்லித் தப்பிக்க முயற்சி செய்த அதிகாரி மாரடைப்பு வந்து மருத்துவமனையில் படுக்கும்படி நேர்கிறது. தாமதமாக வந்தவர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு அவனைமட்டும் தேடி எச்சரிக்கைக் குறிப்பு கொடுத்த அதிகாரி மனநோய்க்கு ஆளாகி கட்டாய ஓய்வில் செல்லும்படி நேர்ந்துவிட்டது. ஆதரவில்லாமல் வந்து நின்றபோது, அடையாளமே தெரியாதவன்போல யாருப்பா நீ என்று கேள்விகேட்டு வெளியேற்றிய உறவுக்காரரின் மகன் விபத்தில் அடிபட்டு செத்துப்போகிறான்.  முத்துக்கறுப்பனை எல்லோரும் வஞ்சிக்கிறார்கள். வஞ்சிக்கிறவர்கள் எல்லோருக்குமே வேதனையும் தண்டனையும் காத்திருக்கின்றன. வாழ்க்கையே துரோகங்களின் களமாக மாறிவிடுகிறது. அடுக்கப்பட்ட சித்திரங்கள் காட்டும் அளவுக்கு முத்துக்கறுப்பன் அப்பாவி அல்ல. அவன் இழைத்த துரோகம் இறுதியாக முன்வைக்கப்படுகிறது. கிராமத்திலிருந்து வேலை தேடி வந்த நண்பனுக்கு வந்த அமர்த்தலாணையை அடியோடு மறைத்தது எவ்வளவு பெரிய துரோகம். நூற்றியறுபது ரூபாய் சம்பளத்தோடு நகரத்தில் வாழவேண்டிய ஒருவனுடைய வாழ்க்கையை, உழவு வேலையிலும் பலசரக்குக்கடையிலும் வேலை செய்து சீரழியும்படி செய்த பாவத்தை அந்த நண்பன் அறியவே இல்லை. உழைப்பும் நேர்மையும் துரோகமிழைத்தவனைத் தாமாகவே தண்டிக்கும் என்கிற கணக்கு ஒரு கட்டத்தில் அவனையும் தண்டித்துவிடுகிறது. முற்பகல் செய்த வினையின் விளைச்சலின் அறுவடை பிற்பகலில் அவனுக்காகக் காத்திருக்கிறது. மனிதன் இத்தனை கொடுமையானவனாக எப்படி மாறினான் என்பது புரியாத புதிராக இருக்கிறது. போட்டியும் பொறாமையும்தான் மனிதவாழ்க்கையை வளர்க்கிற உரங்களா? ஒருவன் உயர்வை இன்னொருவனால் ஏன் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. ஒருவன் உயர்வுக்கு இன்னொருவனால் மனப்பூர்வமாக ஏன் ஆதரவாக அல்லது துணையாக இருக்க முடிவதில்லை? மனிதனைப் பார்த்து மனிதன் அஞ்சும் காலம் அல்லது மனிதனை மனிதனே துரோகத்தால் விழச்செய்யும் காலம் எப்படி உருவானது? மனம் என்பது எப்போதும் முள்ளும் மலரும் அடர்ந்த தோட்டம்தானா? முட்கள் அகற்றப்பட்ட மலர்த்தோட்டமாக மனத்தை மாற்றவே முடியாதா? புதிரை அவிழ்க்கும் முயற்சிகள் மேலும்மேலும் புதிர்களைநோக்கித்தான் அழைத்துச் செல்கின்றன.
துரோகமும் உயர்வு பற்றிய ஒப்பீட்டுக்கணக்கும் நகரத்தில்மட்டுமல்ல, கிராமத்திலும் கண்ணுக்கு மறைவாக காலம்காலமாக நிகழ்ந்தபடியேதான் உள்ளன. மூடு என்கிற சிறுகதையில் அப்படி ஒரு சித்திரம் உள்ளது. தனது தாத்தாவின் ஊர் அல்லது இடம் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டுபோக வந்த ஒருவனுடைய ஆவல் வழியாக அந்தக் கதை விரிவடைகிறது. காலத்தால் மறைக்கப்பட்ட ஒரு துரோகம் வெளிச்சத்துக்கு வருகிறது. மூடு என்பது சாலைகளின் சந்திப்பை அடையாளப்படுத்தும் ஒரு வட்டாரச்சொல். அதில் மூடுண்டு கிடக்கிறது ஒரு துரோகத்தின் வரலாறு. அது நாகம்மன் சந்திப்பு. நாகமரத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் திருவிழா உண்டு. அம்மனுக்காக சாமியாடுகிறார்கள் இரண்டு உறவுக்காரச் சிறுவர்கள். ஆராசனம் ஏற்பட்ட சிறுவன் முதலில் ஆடுகிறான். முதலில் ஆடும் வாய்ப்பு தன் பேரனுக்குக் கிடைக்கவில்லையே என்கிற வேகத்தாலும் கசப்பாலும் தற்செயலாக அம்மன் சூலம் சரிந்துவிழுவதுபோல விழச்செய்து- அதுவும் தன்னைமறந்து உலகைமறந்து ஆடிக்கொண்டிருக்கிற சிறுவன் முதுகில் குத்தும் அளவுக்கு விழச்செய்து- நாடகமாடுகிறார் ஒரு பெரியவர். இத்தனைக்கும் இறந்துபோனது அவருக்கு நெருக்கமான உறவுக்காரரின் மகன். அதைப்பற்றியெல்லாம் அவர் மனம் நினைத்துப் பார்க்கவில்லை. தன் பேரனுக்குக் கிடைக்கவேண்டிய பெருமையும் பெயரும் கிடைக்கவில்லையே என்கிற வேகம் அவர் கண்ணை மறைக்கிறது. அந்த வம்சமே சாமியாட்டத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, அந்தப் பிள்ளைகளுக்கு  சவரம் செய்யும் பயிற்சிகொடுத்து நாவிதர்களாக மாற்றிவிடுகிறார். நாவிதனாக பட்டணத்துக்குப் பிழைக்கப் போனவன் வம்சம் வளர்ந்து செழிக்கிறது. அந்த வம்சத்தின் இளம்கொழுந்து, தம் கூட்டத்தின் பழைய வரலாற்றைத் தெரிந்துகொண்டுபோக நகரத்திலிருந்து கிராமத்துக்கு வருகிறது. காலத்தால் மூடுண்டுபோன துரோகத்தின் கதையை விரிவாகச் சொல்லி தன் மனப்பாரத்தைக் குறைத்துக்கொள்கிறாள் ஒரு கிழவி. தொழிலின் அடிப்படையில் ஒரு சாதியை உருவாக்கும் மனித வக்கிரத்தை கிழவியின் உரையாடல் போகிறபோக்கில் ஒரு துணைத்தகவலாகச் சுட்டிக் காட்டுகிறது. ”ஒங்க தாத்தா மாதிரி எத்தன பேரு என்னென்ன சாதிய உண்டாக்கனாங்களோ? எனக்குத் தெரிஞ்சி இந்த சாதி…” என்னும் கிழவியின் வேதனைக்கூற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
அரங்கநாதனின் முக்கியமான சிறுகதைகளில் ஒன்று காடன் மலை. அரசுப்பணியில் இருக்கிற ஒருவர் பணிக்காலத்திலேயே இறந்துபோனாலோ அல்லது பணிக்காலத்தில் காணாமல்போய் ஐந்து ஆண்டுகள் கடந்துபோய்விட்டாலோ, அவருடைய வாரிசுதாரராக உள்ள அவருடைய மகனுக்கு வேலை கொடுக்கலாம் என்பது அரசு விதி. தனக்கு வேலை கிடைக்கவேண்டும் என்பதற்காக எந்தப் பிள்ளையாவது தன் அப்பாவைப் பார்த்துஒன்னு செத்துபோ, இல்லன்னா எங்கயாவது ஒழிஞ்சி போஎன்று சொல்லுமா என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் அப்படிச் சொன்னால் என்ன நடைபெறும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கிறது அரங்கநாதனின் மனம். கதையில் மகன் மட்டுமல்ல, மனைவியும் சேர்ந்துசெத்துப்போ, அல்லது ஒழிஞ்சிபோஎன்று சொல்கிறாள். இறந்துபோக வழி தெரியாத குடும்பத்தலைவன் வீட்டைவிட்டு காணாமல் போகிறான். இன்னும் ஐந்து ஆண்டுகளில் அரசு வேலையை வாங்கிவிடலாம் என்று கணக்கிடுகிறான் மகன். காணாமல் போன குடும்பத்தலைவன் நடந்துநடந்து போய்ச் சேர்ந்த இடம்தான் காடன்மலை. இரந்துண்ணும் வாழ்க்கை அவருக்குப் பழகிவிடுகிறது. ஆனால் தன் மகனையும் குடும்பத்தையும் பழிவாங்கும் உணர்வு அவரை ஆட்டிப் படைக்கிறது. தன் பழைய நண்பரொருவரை காடன்மலைக்கு வரவழைத்துச் சந்திக்கிறார். காணாமல் போன ஓர் ஊழியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டால், வாரிசுதாரருக்கான வேலைவன் பழைய நண்பரொருவரை காடன்மலைக்கு வரவழைத்துச் சந்திக்கிறார். காணாமல் போன ஓர் ஊழியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டால், வாரிசுதாரருக்கான வேலைவாய்ப்புக்கு வழியில்லாமல் போய்விடும் என்று மற்றொரு விதி இருப்பதை அறிந்து, வேலையை உடனடியாக ராஜினாமா செய்வதாக கடிதமெழுதி அனுப்புகிறார். பழிக்குப் பழி வாங்கிய பிறகு அவர் மனம் அடங்குகிறது. பாசத்துக்கு இடமில்லாத வாழ்வில் பழிவாங்கும் உணர்ச்சி ஆட்டிப் படைக்கிறது.
கதையில் இடம்பெறும் காடன்மலையின் இருப்பு மிகமுக்கியமான ஒன்று. மலை ஒருவகையில் இறைவனின் தோற்றம். மறுபக்கம் காணமுடியாத தோற்றம். காலம்காலமாக அந்த நம்பிக்கைதான் மனிதனை இயக்கி வருகிறது. அடிவாரத்தில் அமர்ந்துகொண்டு ஒவ்வொருவரும் அந்த மலையை உற்றுப் பார்த்தபடி இருக்கிறார்கள். அமைதி தவழும்  ஒரு கணத்தில், எல்லோருமே தன் முன்னால் விஸ்வரூபம் கொண்டிருப்பது வெறும் காடன்மலையல்ல, தன் மனத்தில் அடங்கியிருக்கும் ரகசியங்களின் குவியல் என்பதை ஏதேனும் ஒரு கணத்தில் உணரக்கூடும். அவர்கள் பார்ப்பது மலையை அல்ல, தன் மனத்தையே. கண்ணாடியைப் பார்ப்பதுபோல தன் மனத்தைப் பார்த்துக்கொள்கிறார்கள். பழிவாங்கும் உணர்வு, துரோகமிழைக்கும் உணர்வு, வெட்டிச் சாய்க்கிற் உணர்வு, வெற்றிக்காக ஏங்குகிற உணர்வு ஆகியவற்றைத் தவிர வேறென்ன இருக்கிறது அந்த மனத்தில்? காடன் மலை ஒருவகையில் கசடுகளின் மலை. கசடுகளை வழிபட்டு, கசடுகளையே வரமாகப் பெற்று, கசடுகளாகவே வாழ்ந்து மறையும் மனித வாழ்க்கை மிகக்கேவலமான ஒன்று. அரசு ஊழியனாக இருப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லாத தன் மகனை, போலிச் சான்றிதழ்களின் துணையோடு அரசு ஊழியனாக மாற்றிவிட்டு, அரசு ஊழியன் பணிக்காலத்தில் இறந்தால் பணம் கிடைக்கும் என்கிற விதியை அறிந்துவைத்துக்கொண்டு,  பெற்ற மகனையே மரணத்தின் குழிக்குள் தள்ளும் தந்தையைப்பற்றிய சித்திரத்தை  ஒரு கன்றுக்குட்டியின் மரணம் என்னும் சிறுகதை முன்வைக்கிறது. எல்லோரிடமும் எல்லாக் காலங்களிலும் ஏதோ ஒரு கணக்கு செயல்படுகிறது. எல்லாமே தப்புத்தப்பான கணக்குகள்.
புதிருக்குள் புதிராக காட்சிதரும் சிறுகதை தொலைவிலுணர்தல். தியான நிலையில் தன் கண்ணுக்கும் மனத்துக்கும் தெரியும் காட்சியை முன்வைத்து காணாமல் போன பொருள் அல்லது மனிதர்களைப்பற்றிய தகவலைச் சொல்லும் ஒரு பெரியவர் இக்கதையில் இடம்பெறுகிறார். காணாமல் போய்விட்ட தன் மகனைப்பற்றிய ஒரு தகவலைக் கேட்டுச் செல்வதற்காக வந்த ஒரு தந்தையிடம் தான் கண்ட காட்சியைச் சொல்வதிலிருந்து தொடங்குகிறது கதை. எங்கோ ஒரு பாலத்தின் கீழே மிகுந்த கஷ்டங்களுடன் அவன் நின்றுகொண்டிருக்கும் காட்சி தன் கண்ணுக்குத் தெரிவதாகச் சொல்கிறார் பெரியவர். அந்த அடையாளத்துடன் தேடத் தொடங்கி தன் மகனைக் கண்டடைகிறார் தந்தை. அது கதையின் ஒரு பகுதி. கண்டடையப்பட்ட மகன் குறிப்புச் சொன்ன பெரியவரைப் பார்த்து உரையாடுவது அடுத்த பகுதி. பாலம் பற்றிய தகவலை உண்மை என்று சொல்லும் அந்த இளைஞன் கஷ்டங்களுடன் நினுகொண்டிருப்பதாகச் சொன்ன தகவலைப் பிழை என்று சொல்கிறான். அதற்கு நேர்மாறாக இன்பமான மனநிலையுடன் நின்றுகொண்டிருந்ததாகச் சொல்கிறான். புதிர் அவிழும் அந்தச் சுவைமுரண் காட்சியோடு கதை முற்றுப்பெறுகிறது. கஷ்டம், இன்பம் என்னும் உணர்வுகள் எல்லாம் ஆழ்மனம் சார்ந்தவை. ஒருவருக்குக் கஷ்டமாகத் தோற்றமளிப்பவை மற்றவர்களுக்கு இன்பமானவையாகத் தோன்றுகின்றன. ஒருவருக்கு துன்பமாகத் தோற்றமளிப்பவை மற்றவர்களுக்கு விடுதலையாகத் தோன்றுகின்றன. மிக இயல்பாக கதையின் போக்கிலேயே இந்த உண்மை உணர்த்தப்பட்டுவிடுவதை கதையின் வெற்றி என்றே சொல்லவேண்டும்.
எங்கேயோ போதல் இன்னொரு முக்கியமான சிறுகதை. மனமார விரும்பி அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் ஒருவன், உதவும் அக்கணத்தில் தன் மனம் எங்கேயோ பறப்பதுபோல இருப்பதாகச் சொல்கிறான். இந்த உலகம் அல்லாத இன்னொரு உலகத்துக்கு. அது நெகிழ்ச்சியும் பரவசமும் நிறைந்த மனநிலை. அவ்வளவு வசதியானவனும் அல்ல. மிக எளிய சம்பளம் கிடைக்கக்கூடிய வேலையில் இருப்பவன். மற்றவர்களுக்கு உதவியாக நிற்கும் சுபாவம் மிக இயற்கையாகவே அவனிடம் நிறைந்திருக்கிறது. அவனுக்குத் திருமணம் நடக்கிறது. தாலி கட்டிய கையோடு மனைவியை அழைத்துக்கொண்டு திருத்தணி செல்லும் திட்டம் வகுத்துவிட்டால் மதிய உணவுச் செலவைத் தவிர்க்கலாம் என்று சொல்லப்பட்ட யோசனையை ஏற்றுக்கொள்கிறான் அவன். பயணச்சீட்டு வாங்கச் சென்றவன் வெகுநேரமான பிறகும் மண்டபத்துக்குத் திரும்பவில்லை. விசாரித்தபோது அவன் ஒரு சாலை விபத்தில் அடிபட்டு இறந்துபோன தகவல் கிடைக்கிறது. விபத்தில் அடிபட்ட சிறுமி ஒருத்தியைக் காப்பாற்றச் சென்று அவன் அகப்பட்டுக் கொண்டான். வழக்கமாக உதவும் கணங்களில் இன்னொரு உலகத்தை நோக்கிப் பறப்பதாகச் சொல்கிற அவன் உண்மையாகவே திரும்பி வரமுடியாத இன்னொரு உலகத்தைநோக்கிப் பறந்துசென்றுவிட்டான்.
சுயம்பு இன்னொரு முக்கியமான சிறுகதை. கீர்த்தனைகளைவிட்டு ஆலாபனைகளைப் பின்தொடர்ந்து இசையை அறிய முயற்சி செய்கிறான் ஒருவன். வார்த்தைகள் சொல்ல முயற்சி செய்வதை ஆலாபனை வழியாகப் பயணம் செய்து தொட்டுப் பார்க்கும் ஆசையோடு அவன் பயிற்சியில் இறங்குகிறான். குருவிடம் தங்கிக் கற்கும் முறைசார்ந்த பயிற்சியாக இல்லாமல் வெட்டவெளியைப் பார்த்து ஆலாபனை செய்துசெய்து தானாகவே வளர்த்துக்கொள்ளத் தொடங்குகிறான். அதே தருணத்தில், தான் அமர்ந்து பயிற்சி செய்யும் இடத்தின் தரையில் ஒரு புள்ளி விம்மிப் புடைத்து மெதுவாக உயர்ந்து வருவது தெரிந்ததுஅடுத்த எட்டு நாட்களில் அந்த இடத்தில் ஒரு சுயம்பு முளைத்து எழுந்துள்ளதைக் கண்டான். இது கதையின் ஒரு பகுதி. மறுபகுதியில் அவன் மபெரும் இசைக்கலைஞனாக வலம்வருகிறான். மக்கள் போற்றும் இசைக்கலைஞன். அவன் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவனுடைய வரலாற்றை எழுதுவதற்காகத் தகவல் சேகரிக்கப்போன ஆராய்ச்சியாளன் ஒருவன், அக்கலைஞன் தினந்தோறும்  பயிற்சி செய்த வெட்டவெளியில் அலங்கரிக்கப்பட்டு வழிபடப்படும் சுயம்பு ஒன்றைக் கண்டதாகச் சொல்லிவிட்டுச் செல்கிறான். இரண்டு சுயம்புகள் வெவ்வேறு தருணங்களில் மனிதர்களால் கண்டடையப்படுகிறார்கள். இரண்டு சுயம்புகளுமே கொண்டாடப்படுகிறார்கள். இந்தப் புள்ளியில்தான் ஒரு சின்னப் புதிர் உருவாகிறது. கீர்த்தனைகளைவிட்டு ஆலாபனைகளைத் தொடர்ந்து இசையை அறியும் ஆவல் அவனை உந்தித் தள்ளி, பயிற்சியில் ஈடுபடவைத்து, சுயம்புவாக வெளிப்படவைத்த்தாகச் சொல்லலாம். அதே சமயத்தில் விம்மிப் புடைத்த தரையின் புள்ளி சுயம்புவாக வெளிப்பட எதை அறியும் ஆவல் அல்லது எதை அறிவிக்கும் ஆவல் தூண்டியிருக்கக்கூடும் என்பது முக்கியமான கேள்வி. ஒருவகையில் அது அறிவின் அடையாளம். ஞானத்தின் அடையாளம். இந்த உலகத்தை அறியும் அறிவு. வழக்கமான எந்த வழிகளிலும் இல்லாமல் இருப்பதை இருக்கிறபடி சுயமாக உணர்கிற அறிவு
அசலம்  தெய்வத்துக்கும் மனிதனுக்கும் நிகழும் உரையாடல் புதுமைப்பித்தனை நினைவூட்டினாலும் கச்சிதமான வடிவத்தைக் கொண்ட கதை. ஆற்றில் குளிக்கவந்த அண்ணாச்சி காற்றாட கரையோரம் உட்கார்ந்துகொள்கிறார். ஆற்றின் மறுகரையில் இருக்கும் ராமர்கோயில் தெய்வம் அவரோடு உரையாடலில் இறங்குகிறது. எல்லாவற்றையும் என் பொறுப்புனு என் தலையில ஏத்துகிட்டேன் என்னும் தெய்வத்தின் கூற்று முக்கியமானது. மனிதன் அப்படி இல்லை. அவனுக்கு விருப்புவெறுப்பு இருக்கிறது. சாதி, மதம், இனம் பார்க்கும் மனமும் இருக்கிறது. அவன் பொறுப்பு என்று எடுத்துக்கொள்வதெல்லாம் அவன் குடும்பத்துக்கு மட்டும்தான். இப்படி குறுகலான பார்வையோடு, குறுகலான பொறுப்போடு வாழும்வரைக்கும் மனிதன் ஒருபோதும் தெய்வத்தை உணரமுடியாது.
வாசக எதிர்பார்ப்பை உடைத்து தன்னை நிறுவிக்கொள்ளும் ஒரு சிறுகதை ஜங்ஷன். இதுவும் இருபகுதிகளாகப் பிரிந்து இறுதியில் இணைக்கப்பெறும் கதை. எட்டாவதுவரையில் படித்துவிட்டு, ஊரைவிட்டு ஓடிவந்து மார்வாடி கடையில் வேலைக்குச் சேர்ந்த செல்வம் தன்னைத்தானே செல்வந்தனாக நிறுவிக்கொள்ள பல ஆண்டுகள் உழைக்கிறான். முதலாளியின் மகளை கலப்புமணம் செய்துகொள்கிறான். முதலாளி கடைவைத்திருந்த இடத்திலேயே தனது கடையை நிறுவிப் பெரிய மனிதனாக வலம்வருகிறான். செல்வம் எண்டர்பிரைசஸ் முழுக்கமுழுக்க அவனுடைய உழைப்பால் உருவான நிறுவனம். அவன் கடையில் வேலை செய்யும் இளைஞன் முத்துக்கறுப்பன்செல்வத்தைப்போலவே எட்டாவது படித்துவிட்டு, வேலைக்கு வந்து பல ஆண்டுகளாக வேலை பார்ப்பவன். அவனும் வெற்றியைத் தேடுபவன்தான். ஆனால் வாழ்க்கை என்பதை ஒரு பயணமாகப் பார்ப்பவன். முத்துக்கறுப்பனின் உழைப்பும் நேர்மையும் செல்வத்தைக் கவர்கின்றன.  அவனைத் தன்னோடு வைத்துக்கொள்ள திட்டம் போடுகிறான் செல்வம். ஒருநாள் நேரிடையாக அழைத்து விஷயத்தை உடைத்துச் சொல்கிறான். தன்னுடைய மகளைத் திருமணம் செய்துகொண்டு, வணிகத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளலாம் என்கிற திட்டத்தை முன்வைக்கிறான். அக்கணத்தில் வாய்ப்பு தன் வீட்டுக் கதவைத் தட்டும்போது, திறந்து உள்ளே வரவேற்று ஏற்றுக்கொள்ளத்தான் எல்லோருக்கும் தோன்றும். அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி கண்முன்னால் வந்து நிற்கும்போது உருவாகும் அந்தச் சபலத்தை மிகச் சாமர்த்தியமாக வெற்றிகொள்கிறான் முத்துக்கறுப்பன். செல்வத்தின் கோரிக்கையை புன்னகையோடு நிராகரித்துவிடுகிறான். இந்த நிராகரிப்புக்கு அவன் கொடுக்கப்போகிற விலை மிகப்பெரியதாகவே இருக்கும். இருக்கும் வேலையை இழக்க நேரலாம். புதிய வேலைக்காக பல இடங்களில் ஏறி இறங்க நேரிடலாம். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சுதந்திரத்தின் மீதிருக்கிற நாட்ட்த்தோடுதான் அவன் அத்தகு முடிவை எடுக்கிறான். வெற்றியல்ல, சுதந்திரமே முக்கியம் என்று நினைப்பது எவ்வளவு பெரிய முடிவு.  ஓடுவது பிடித்திருக்கிறது என்று அறிவிக்கிற சித்தி ஓட்டக்கலைஞனின்  கூற்றுக்கு நிகரான ஒன்றாக இந்த வேலைக்கார இளைஞனின் முடிவைச் சொல்லலாம். இருவரைப் பொருத்தவரையிலும் ‘இழப்பதற்கொன்றுமில்லை, பெறுவதற்கோ ஒரு பொன்னுலகமே உள்ளதுஎன்கிற நிலையில் இருப்பவர்கள்தான். அவர்கள் விரும்பினால் ஒரு தலையசைப்பில் பொன்னுலகத்தைப் பெற்றிருக்கமுடியும். ஆனால் அவர்கள் ஏன் அப்படிச் சொன்னார்கள்? வாழ்வின் அல்லது இயற்கையின் இனிமையை அறிந்தவர்களால் மட்டுமே அப்படிச் சொல்லமுடியும். இழந்துவிடக்கூடாதபடி ஏராளமான நுண்ணுணர்வுகளைக் கொண்டிருப்பவர்கள் அவர்கள்.
தோற்றம் என்னும் தலைப்பிலேயே ஒரு சிறுகதையை எழுதியுள்ளார் அரங்கநாதன். தன் சொந்த முயற்சியால் வாழ்வில் மெள்ளமெள்ள உயர்ந்துவிட்ட ஒரு மகன் தன் தங்கைக்கு சீரும் சிறப்புமாக செல்வௌசெய்து ஒரு திருமணத்தை நடத்திவைக்கிறான். அவன் அப்பா, அப்பா என்கிற ஸ்தானத்தில் இருந்து மணமக்களுக்கு ஆசி வழங்குகிறார். திருமணம் நல்லபடி நடந்துமுடிகிறது. இறுதிக்கணத்தில் மகன் தன் தந்தையைப் பார்த்து “நான் இல்லாட்டி என்ன பண்ணியிருப்பே?என்று கேட்கிறான். அப்பாவால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை. தன் வெற்றியை, தன் முக்கியத்துவத்தை அவருக்கு ஒரே கேள்வி மூலம் உணர்த்திவிடவேண்டும் என்பதுபோல அவன் அக்கேள்வியைக் கேட்கிறான். அவன் அப்பா பதில் சொல்லவில்லை. ஆனால், அதே கேள்வியை அவனைப் பார்த்து யாரோ கேட்டதுபோல அவனுக்குத் தோன்றுகிறது. துணுக்குற்றுத் திரும்புகிறான். யாரும் இல்லை. ஆனால் அந்தக் கேள்வி அப்படியே அவனைக் குடைகிறது. அது யாருடைய கேள்வி? அவனுக்குத் துணையாக இருந்த நல்லூழின் கேள்வியா? உழைப்பின் கேள்வியா? வெற்றியின் கேள்வியா? அவன் தந்தையின் கேள்வியா? அவனுடைய அன்றைய நிலைக்குக் காரணமாகவும் துணையாகவும் இருந்த ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அந்தக் கேள்வியை அவனை நோக்கிக் கேட்கிறது.
இருவேறு தோற்றம் என்பது மிக இயல்பாகவே பெரும்பாலான அரங்கநாதனின் கதைகளில் காணக்கூடிய ஒரு காட்சி. சாதி அடையாளம், சமய அடையாளம், வரலாற்று ஆராய்ச்சி, மாறிக்கொண்டே இருக்கிற காலம் சார்ந்த குறிப்புகள் என ஒவ்வொரு கதையிலும் ஏராளமாக உண்டு. இவற்றைமட்டுமே ஆதாரமாகக்கொண்டு, அரங்கநாதனுடைய கதைக்கு உடனடியாக வசதியாக ஒரு தோற்றத்தை வழங்கிவிடலாம். என்னைப்பொருத்தவரை, அது ஒருபோதும் முக்கியமானதல்ல. அந்த மேல்தோற்றத்தைத் தாண்டி, பாத்திரங்கள் வழியாக மன ஆழங்களை நோக்கி அவர் நிகழ்த்தும் ஆய்வுகளைக் கொண்ட உள்தோற்றமே மிகவும் முக்கியமானதாகும். ஒரே ஒரு எடுத்துக்காட்டுமூலம் இதை உறுதிப்படுத்திச் சொல்லமுடியும். அரங்கநாதன் தன் எல்லாச் சிறுகதைகளிலும் முத்துக்கறுப்பன் என்னும் பாத்திரத்தை உலவவிட்டிருப்பதைப் பார்க்கலாம். எல்லா முக்கியப் பாத்திரங்களுக்கும் அவர் ஏன் அப்படி ஒரே பெயரைத் தேர்ந்தெடுத்தார்? அந்தப் பெயரில் ஏதேனும் சிறப்புத்தன்மை பொதிந்திருக்கிறதா? முத்துக்கறுப்பன் பெயரை ஏற்றிருக்கும் பாத்திரம் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமானவன். சில கதைகளில் இளைஞன். சில கதைகளில் சிறுவன். சில சமயங்களில் கிழவன். போக்கிரி, துடுக்குக்காரன், நல்லவன், கெட்டவன், வம்புக்காரன், தந்திரசாலி, தியாகி, தாழ்த்தப்பட்டவன், மேல்சாதிக்காரன், சடங்குகளை நம்பாதவன், சடங்குகளை நிகழ்த்துபவன் என வேறுவேறு பாத்திரங்களில் அவன் வருகிறான். எல்லாமே மனத்தின் பல்வேறு தோற்ற நிலைகள். கங்கையும் தண்ணீர். சாக்கடையும் தண்ணீர். எல்லாம் கலந்து ஓடுகிற இடமாக இருக்கிறது மனம். பொங்கியெழும் தருணங்களில் கரையோரம் கசடுகளும் ஒதுங்கும். என்றோ காணாமல் போன நகைகளும் ஒதுங்கும். மனிதகுலத்தின் அடையாளம் முத்துக்கறுப்பன். மனத்தின் வெவ்வேறு கோலத்தைச் சுட்டவே ஒற்றைப்பெயரைச் சூட்டி கதைப்பரப்பில் அலகிலா விளையாட்டை நிகழ்த்துகிறார் அரங்கநாதன்.
மனம் ஏன் இத்தனை சிக்கலாக இருக்கிறது என்பதுதான் நாம் நம்மையே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி. அரங்கநாதனின் படைப்புலகத்திலிருந்து திரண்டெழும் கேள்வி இதுதான். கல்வி, செல்வம், தகுதி, வாழ்க்கைநிலை என ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை இன்னொருவரோடு ஒப்பிட்டு மதிப்பீடு செய்து ஆற்றாமையால் ஒவ்வொருவருடைய மனமும் அக்கினிக்குடமாக கொதித்துச் சூடேறிக் கிடக்கிறது. நம் எண்ணங்களும் கற்பனைகளும் கோபங்களும் வேட்கைகளும் அந்த நெருப்பை இன்னும் அடர்த்தியாக கொழுந்துவிட்டு எரியச் செய்கிறது. மனம் இன்னும் இன்னும் கொதிப்பேறிப்போகிறது. நெருப்பை அணைக்க, கைப்பிசகாக நெய்யை எடுத்து ஊற்றுகிறோம். நெருப்பு இன்னும் கொழுந்துவிட்டு எரிகிறது. நெருப்பின் வேகத்துக்குக் காரணம்  தெரியாமல் மேலும்மேலும் நெய்யை எடுத்து ஊற்றுகிறோம். நின்று நிதானமாக  எரிந்தபடியே இருக்கிறது நெருப்பு. நம் அருகில் இருக்கும் தண்ணீர்க்குடங்களின் பக்கம் நம் பார்வை செல்வதே இல்லை. நெருப்பை அணைத்துவிடமுடியும் என்கிற நம்பிக்கையில் நெய்யை எடுத்து மீண்டும்மீண்டும் நாம் ஊற்றிக்கொண்டே இருக்கிறோம். நெருப்பின் வேகமும் கூடிக்கொண்டே போகிறது. நெய்யினால் நெருப்பு அவிப்பவன்போல் நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த பொய்யினால் பவம் போக்கிட நினைத்தேன் புல்லனேனுக்குன் நல்லருள் வருமோஎன்பவை வள்ளலாரின் திருவருட்பாவில் இடம்பெறும் வரிகள். ஒருவகையில் மனிதக்கூட்டமே நெய்யினால் நெருப்பை அணைக்க முயற்சிசெய்கிற கூட்டமாகத்தான் இருக்கிறது. மனச்சிக்கலுக்கு இதைவிட பெரிய காரணம் இருக்குமா என்ன?

(2012 இல் எழுதி உயிரெழுத்து இதழில் வெளிவந்த கட்டுரை )