Home

Thursday 3 November 2016

தன்னம்பிக்கையின் வெற்றி - (புத்தக அறிமுகம் )


இறந்துபோன தன் குழந்தைக்கு உயிர்ப்பிச்சை தருமாறு வேண்டி நின்ற ஒரு தாயிடம் மரணமே நிகழாத ஒரு வீட்டிலிருந்து கடுகு வாங்கி வரும்படி சொல்கிறார் புத்தர். ஆவலோடு ஒவ்வொரு வாசலிலும் நின்று கடுகுக்காக யாசிக்கிறாள் அந்தத் தாய். ஆனால் எந்த வீட்டிலிருந்தும் அவளால் கடுகைப் பெறமுடியவில்லை. எல்லோருடைய வீடுகளிலும் ஏதோ ஒருவகையில் மரணம் நிகழ்ந்திருக்கிறது. அத்தருணத்தில் பிறப்பைப்போலவே இறப்பும் இயற்கையானது என்பதையும் மரணத்தைத் தடுப்பது சாத்தியமற்ற செயல் என்பதையும் அந்தத் தாய் புரிந்துகொள்கிறாள். அன்றுமுதல் கடுகு என்பது மரணத்தோடு தொடர்புள்ள ஒரு குறியீடாக நிலைத்துவிட்டது. கடுகு வாங்கி வருவது என்பது, மரணத்திலிருந்து மீண்டெழுந்து வருவதற்கு நிகரானது.

இன்று மனிதகுலத்தை வதைத்துக்கொண்டிருக்கும் முக்கியமான பெரிய நோய் புற்றுநோய். அது தீவிரமான மருத்துவத்தால் குணப்படுத்தக்கூடிய ஒன்றெனினும் சமூகத்தின் பொதுப்புத்தியில் மரணத்தின் வாயிலாகவே புற்றுநோய் கருதப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இடைவிடாத மருத்துவத்தின் பயனாக மீண்டெழுந்த தன்னை கடுகு வாங்கி வந்தவளாக முன்வைத்துக்கொள்கிறார் நூலாசிரியரான பி.வி.பாரதி. தன் மார்பகத்தில் வந்துவிட்ட கட்டியை புற்றுநோய்க் கட்டி என்று உறுதி செய்த நாளிலிருந்து, “இனிமேல் ஒன்றும் அச்சமில்லை, போய் வருக” என்று மருத்துவர் நம்பிக்கையூட்டி அனுப்பிவைத்த நாள் வரையிலான அனுபவங்களைத் தொகுத்து நூலாக்கி முன்வைத்துள்ளார்.
அலுவலகத்தில் வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பி களைப்போடு நெஞ்சின்மீது கைவைத்து படுத்திருந்த ஒரு நாளில் பாரதி தன் மார்பகத்தில் பருமனாக வளர்ந்திருக்கும் கட்டியைத் தொட்டுணர்ந்து  மனமுடைந்த நாளிலிருந்து தொடங்குகிறது தொகுப்பின் முதல் அத்தியாயம். ’ஒன்றுமில்லை, பயம் வேண்டாம்’ என ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் உடனடியாக கணவனிடம் முறையிடுகிறார். அவரோ, உடனடியாக அவரை அழைத்துச் சென்று ஒரு பெண் மருத்துவர்முன்னால் நிறுத்துகிறார். கருணையே இல்லாத குரலில் அந்தப் பெண் மருத்துவர் எந்தச் சோதனைக்கும் அவசியமில்லாமல் பார்த்த கணத்திலேயே அது புற்றுநோய்க்கட்டிதான் என்று உறுதியாகச் சொல்லி, பயாப்ஸி எடுத்து வருமாறு அறிவுறுத்தியும் அச்சுறுத்தியும் அனுப்பிவைத்துவிடுகிறார். புற்றுநோய்த் துறையில் பயிற்சி பெற்ற வேறொரு மருத்துவரும் அதை உறுதி செய்துவிடுகிறார். பாரதியின் மனம் உடைந்து விடுகிறது. எல்லோரையும்போல, இனி உயிர்வாழப்போகும் காலம் கொஞ்சமே என நினைத்து கலக்கமடைகிறார். திகைப்பில் உருவான அந்த ஆரம்பக் கலக்கத்தை அவர் வெகுவிரைவில் வென்று தன்னம்பிக்கை நிறைந்தவராக மாறிவிடுகிறார் பாரதி. இந்த நிலைமாற்றமே அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான புள்ளி. அதைத் தொடர்ந்து தன்னைத்தானே ஊக்கப்படுத்திக்கொள்கிறார். எதையும் வெற்றிகொள்ள முடியும் என்னும் மனநிலையை வளர்த்துக்கொள்கிறார். தன்னிரக்கத்துக்கு இடமளித்துவிடாமல் எப்போதும் குன்றாத உற்சாகத்துடன் நடந்துகொள்கிறார். மருத்துவத்தைக் கடந்து, ஒருபோதும் சரிந்துவிடாத நேர்மறையான எண்ணங்களும் வற்றாத ஊக்கமும் அவரை நோயின் பிடியிலிருந்து விடுவிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. அதுவே, இந்த அனுபவ வரலாறாக விரிவு பெற்றிருக்கிறது.
புற்றுநோய் எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதை அறிய மூன்று அளவுகோல்கள் உள்ளன. முதலாவது புற்றுநோய்க் கட்டியின் பருமன். இரண்டாவது அந்த நோய் கணுக்களுக்குப் பரவியுள்ளதா என தெரிந்துகொள்வது. மூன்றாவது உடலுக்குள் ஊடுருவியிருக்கிறதா என அறிந்துகொள்வது. பாரதி இரண்டாவது கட்ட நோயாளியாக கண்டறியப்பட்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவருடைய வலதுபக்க மார்பகம் அறுவைசிகிச்சையால் அகற்றப்படுகிறது. தனக்கு அறுவை சிகிச்சை நடக்கவிருக்கும் மேசையை நோக்கி நடந்துசென்று தானாகவே படுத்துக்கொள்வது, மருத்துவர்களிடம் தனக்குக் கொடுக்கப்படப் போகும் மயக்க மருந்து, குறிப்பிட்ட ஒரு பகுதிக்குமட்டுமா அல்லது உடல்முழுதும் மரத்துப்போகும்படியான அளவுக்கா என்று விளையாட்டாக கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்கிற அளவுக்கு தன் மன உறுதியை வெளிப்படுத்துகிறார். தொடர்ச்சியான வலியும் வேதனையும் அளவுகடந்து செல்லும்போது மட்டும் சற்றே அச்சம் கவிந்தவராகக் காணப்பட்டாலும் ஒருபோதும் தன்னம்பிக்கையைக் கைவிடாதவராகவே காணப்படுகிறார் பாரதி.
அறுவைசிகிச்சையைத் தொடர்ந்து இருபத்தியொரு நாட்களுக்கு ஒருமுறை என்கிற கணக்கில் எட்டு முறை கீமோ மருத்துவமும், அதைத் தொடர்ந்து வாரத்துக்கு ஐந்து நாட்கள் இடைவிடாமல் கதிர்வீச்சு மருத்துவம் என்கிற கணக்கில் முப்பத்திரண்டு முறைகள் கதிர்வீச்சு மருத்துவமும் அவருக்கு வழங்கப்படுகிறது. கீமோ மருத்துவம் என்பது டிரிப்ஸ் போல மருந்தை உடலுக்குள் செலுத்துவது. அந்த மருந்தின் தீவிரம் உடலிலுள்ள புற்றுநோய்க் கிருமிகளைக் கொல்லும்போது, அவற்றுடன் சிவப்பு அணுக்களையும் வெள்ளை அணுக்களையும் கொன்றுவிடுகிறது. ஒவ்வொரு முறையும் எட்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக நீடிக்கும் வலியையும் எரிச்சலையும் தாங்கிக்கொள்கிறார் பாரதி.  சிவப்பு அணுக்களும் வெள்ளணுக்களும் புதிதாகத் தோன்றி பெருகத் தொடங்கிய பிறகு, ஏறத்தாழ பத்துப் பன்னிரண்டு நாட்கள் ஓரளவு இயல்பாக இருக்கமுடிகிறது.
தன்னைத் தாக்கிய வலி பிரசவ வேதனையைவிட பலமடங்கு பெரியது என்று குறிப்பிடுகிறார் பாரதி. சப்பாத்தி மாவை கலக்கி அழுத்திப் பிசைகிறமாதிரி தன் உடலை அந்த வலி முறுக்கிப் பிசைந்தது என்றும் ஓரிடத்தில் பகிர்ந்துகொள்கிறார். சிரமப்பட்டு கழிவறைக்குப் போய்வருவதுகூட இமயமலையில் ஏறி இறங்குவதுபோல இருப்பதாகச் சொல்கிறார். ஆயினும் யாரும் தன்னை இரக்கத்துடன் பார்ப்பதையும் அமைதிச் சொற்கள் சொல்வதையும் பாரதி ஒரு கட்டத்திலும் விரும்பவே இல்லை. ’எப்படி இருக்கிறாய்?’ என்று சோகமுடன் முகத்தை வைத்துக்கொண்டு யாரேனும் கேள்வி கேட்டுவிட்டால் “சூப்பரா இருக்கிறேன்” என்று சொல்லி வாயை அடைத்துவிடுகிறார். அடிமேல் அடிவைத்து நடக்கிற அளவுக்குத்தான் தனக்கு சக்தி இருக்கிறது என்றபோதும், வீட்டில் அடைபட்டுக் கிடக்கப் பிடிக்காமல், டிரைன் பைப் பொருத்தப்பட்ட நிலையிலேயே தன்னந்தனியே ஆட்டோ பிடித்து தோழியின் வீட்டுக்குச் சென்று வருகிறார். நாலைந்து கீமோ மட்டுமே முடிந்த நிலையில் மருத்துவரின் அனுமதியோடும் தன் உடல்நிலை அனுமதிக்கிற அளவோடும் தன் வழக்கமான வெளியுலகப்பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கிவிடுகிறார். நாடகம், திரைப்படம், பூங்கா, கடைத்தெரு, இலக்கியக் கூட்டங்கள், கவிதை வாசிப்பு நிகழ்ச்சிகள் என பல இடங்களுக்கு உற்சாகம் ததும்பச் சென்றுவருகிறார்.  கட்டப்பட்டு வரும் புதிய வீட்டுக்குச் சென்று தேவையான மாற்றங்களைச் சொல்லவும் அவர் தயங்கவில்லை.
மருந்தின் தீவிரம் கடுமையான அளவில் பசியைத் தூண்டுகிறது. ஏராளமான உணவால் அவர் உடல் பருமனாகிறது. நகைச்சுவை உணர்வோடு தன் உடலை தானே கிண்டல் செய்துகொள்கிறார். தலைமுடி கொட்டி கலங்கவைக்கிறது. செயற்கைத் தலைமுடி வாங்கிப் பொருத்திக்கொள்கிறார். புருவமுடிகள்கூட உதிர்ந்துபோகிறது. அதற்கு மாற்றாக உடனடியாக வண்ணப்பென்சிலால் கோடு இழுத்துக்கொள்கிறார். ஒரு கணத்திலும் அவர் சோர்ந்துபோகவில்லை. திகைத்து நிற்கவில்லை. வாழும் இச்சையுடன் தொடர்ந்து முன்னகர்ந்தபடி இருக்கிறார். அவருடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவருடைய மனத்துக்கு உகந்த அளவில் குடும்பத்தில் உள்ள அம்மா, அப்பா, கணவன், மகன் மற்றும் தோழிகள் என அனைவருமே ஒவ்வொரு கட்டத்திலும் துணையாக நிற்கிறார்கள்.
புற்றுநோய்க்கும் பாரதிக்கும் இடையில் ஒரு பெரிய போராட்டமே நிகழ்கிறது. அஞ்சாமை, துணிச்சல், குழப்பத்துக்கும் தோல்வியுணர்வுக்கும் ஒருகணம்கூட இடம்கொடாமை, தப்பித்தவறி கவிந்துவிடும் குழப்பங்களை மறுகணமே உதறியெழுதல், எதையும் மனத்துக்குள் வைத்துக்கொண்டு குமையாமல் வெடிப்புறப் பேசிவிடும் வெளிப்படைத்தன்மை ஆகிய குணங்களின் துணையோடு நோயின் கடுமையையும் வேதனையையும் எதிர்த்து அவரால் முழு ஆற்றலோடு நிற்கமுடிகிறது. ஐயோ பாவம் என்ற முகபாவனையோடு தன்னிடம் பேச நெருங்கி வருபவர்களிடம் சிரித்துச்சிரித்துப் பேசி வெற்றியடைகிறார். இயல்பாகவே அவர் நெஞ்சில் நிறைந்திருக்கும் இந்த மனஎழுச்சி  நோயை எதிர்க்கிற கேடயமாக அவருக்குப் பயன்பட்டிருக்கிறது. ஓரிரு கதிர்வீச்சு சிகிச்சைக்குப் பிறகு யாருடைய துணையும் இன்றி, தன்னந்தனியாகவே சிகிச்சைக்குச் சென்று திரும்பும் அளவுக்கு தன்னம்பிக்கை நிறைந்த மனத்துடன் வலம்வருகிறார் அவர். கதிர்வீச்சு சிகிச்சை முடிந்த பிறகு நாடகத்துக்கோ, திரைப்படத்துக்கோ, தோழியின் வீட்டுக்கோ தாராளமாகச் சென்று திரும்புகிறார். மருத்துவ நிலையத்தில் பார்த்துப்பார்த்து பழக்கமான நோயாளிகளிடம் சிரித்துப் பேசுவதை ஒரு பழக்கமாகவே வைத்துக்கொண்டதாக அவர் குறிப்பிடுகிறார். ‘உங்கள் வீட்டில் என்ன சமையல்?’ என்று கேட்பதுபோல, ‘உங்களுக்கு எத்தனையாவது கதிர்வீச்சு?’ என்று கேட்டு மற்றவர்கள் பதற்றத்தைக் குறைத்து தன் உரையாடல் வழியாக அவர்களையும் இயல்பான நிலைக்குத் திரும்பவைக்கிறார்.
வாழ்வைப்பற்றிய தன் பார்வையையே புற்றுநோய் மாற்றிவிட்டது என்று ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார். முக்கியத்துவமற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறவர்களையும் போலி அனுதாபத்தோடு நெருங்கி இரக்கத்தைப் புலப்படுத்திய மறுகணமே, மரணத்தைநோக்கி அழைத்துச் செல்லும் புற்றுநோயின் கொடுங்கரங்களின் பிடியிலிருந்து விடுதலை பெறுவதெல்லாம் கட்டுக்கதை என்று பெரிய ஞானியைப்போல பேசிவிட்டுச் செல்கிறவர்களையும், பேசினால்கூட புற்றுநோய் தன்னைத் தொற்றிக்கொள்ளும் என்னும் மூடநம்பிக்கையோடு பேசுவதையும் பார்ப்பதையும் தவிர்க்கும் தோழிகளையும் மிக எளிதாக அடையாளம் கண்டுகொள்கிறார் அவர். யார்மீதும் ஒருசிறிதும் அவர் கோபத்தை வெளிப்படுத்தவில்லை. இரக்கப்படவே செய்கிறார்.
எதிர்காலத்தில் புற்றுநோய்க்கான மருத்துவமுறைகள் இன்னும் எளிதானதாக அமையக்கூடும் எனவும் அதை சாதாரணமான இருமல், சளி, காய்ச்சல் போன்ற எளிய நோய்களைப்போலவே மக்கள் கருதும் காலம் வரும் என உறுதியாக நினைக்கிறார் பாரதி. ”கேவலம், இந்த அற்பமான புற்றுநோய்க்கா மக்கள் பலியாகி இறந்தார்கள்?” என மக்கள் தமக்குள் ஆச்சரியத்தோடு பேசிக்கொள்ளும் ஒரு காலம் வரும் என்பதுவும் அவர் நம்பிக்கை. அதையே தன் பிரார்த்தனையாக இந்த நூலில் முன்வைக்கிறார் பாரதி.
கன்னடத்தில் உதயவாணி என்னும் நாளிதழில் தன் அனுபவக் கட்டுரைகளை பாரதி தொடராக எழுதியபோதே வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பொது வாசகர்கள் பாரதியின் வாழ்க்கையை தன்னம்பிகைக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்த்தார்கள். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தமக்காகவே  எழுதப்பட்ட ஒரு வழிகாட்டிநூலாகப் பார்த்தார்கள். பாரதியின் எழுத்தாளுமையை கன்னட உலகத்துக்கே இந்த நூல் வெளிச்சமிட்டு உணர்த்தியது. புத்தகம் வெளியான ஒரே மாதத்தில் இரண்டாவது பதிப்பு வெளிவரும் அளவுக்கு விற்பனையிலும் சாதனை படைத்தது. முக்கியமான சில விருதுகளையும் அடைந்தது.  வாழ்க்கையின்மீது நம்பிக்கையூட்டும் ஒரு முக்கியமான நூலை மொழிபெயர்த்திருக்கும் நல்லதம்பிக்கு தமிழுலகம் கடமைப்பட்டிருக்கிறது. கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியலில் இனி நல்லதம்பிக்கும் ஓர் இடமுண்டு. அதை உறுதிசெய்யும் வகையில் இந்த மொழிபெயர்ப்பு அமைந்திருக்கிறது.


(கடுகு வாங்கி வந்தவள். அனுபவக்கதை. கன்னடத்தில்: பி.வி.பாரதி. தமிழில்: கே.வி.நல்லதம்பி. நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-98. விலை. ரூ.100)