ஆழ்ந்த மயக்கத்திலிருந்து சாமிநாதனுக்கு
விழிப்பு வந்ததும் முதல் கணம் ரத்தம் வழிய விழுந்துகிடந்த காட்சிதான் நினைவுக்கு வந்தது.
அருகில் “என்னங்க, என்னங்க” என்றொரு துயர் மிகுந்த பெண்குரல் கேட்டது. ”பயப்படாதீங்க.
மனசுக்குள்ள வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்னு சொல்லிட்டே இருங்க” என்றது. அவர் கால்கள்
ரத்தத்தில் நனைந்த மரக்கட்டைகள்போல அருகில் இருந்தன. காட்சிகள் குழம்பிக் கலைந்து விலக
வேதனையுடன் விழிகள் மீண்டும் மூடி சில கணங்களுக்குப் பிறகு திறந்தன. அறை முழுதும் பல
படுக்கைகள் இருப்பதையும் ஒவ்வொன்றிலும் ஒருவர் படுத்திருப்பதையும் பார்த்தார் சாமிநாதன்.
அவர் தலை வெடித்துவிடுவதுபோல
வலித்தது. “இப்ப மணி என்ன?” என்பதுபோல அவர் உதடுகள் அசைந்தாலும் குரல் எழவில்லை என்பதை பல கணங்களுக்குப் பிறகுதான் அவர் உணர்ந்தார். அந்த
அறை ஆழ்கவன சிகிச்சைப் பிரிவு என்பதையும் தனக்கு அருகில் யாரும் இல்லை என்பதையும் அவர்
மெதுவாகப் புரிந்துகொண்டார். அறைத்தாதிகள் நான்கு படுக்கை தள்ளிப் படுத்திருந்த ஒருவருக்கு
ரத்தம் ஏற்றிக்கொண்டிருப்பதை அவரால் பார்க்கமுடிந்தது. அவர் கண்கள் சுற்றிச்சுற்றி
அலைந்து வலது பக்கச் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தைக் கண்டுபிடித்து தேதியையும்
மணியையும் பார்த்தன. மணி நான்கு. தேதி பதினைந்து. விபத்து நிகழ்ந்த தினம் பத்தாம் தேதியா,
பதினொன்றாம் தேதியா என ஒரு கணம் குழப்பமாக இருந்தது. சிறிதுநேர தவிப்புக்குப் பிறகு
பதினொன்றாம் தேதி என தெளிவு பிறந்தது. நான்கு நாட்கள் முன்பாக நிகழ்ந்த விபத்து அவர்
நெஞ்சில் விரிந்து மறைந்தது.
நான்கு மணி என்பது எப்போதும்
அவர் மாலையில் நடைப்பயிற்சிக்குக் கிளம்பும் நேரம். முதலில் வீட்டிலிருந்து இரண்டு
கிலோமீட்டர் தொலைவில் அன்பு நிலையம் என்னும் முதியோர் இல்லத்துக்கு அவரே காரை ஓட்டிச்
செல்வார். அதன் முற்றத்தில் அவருக்காக ஐந்து பெரியவர்கள் காத்திருப்பார்கள். அவரைப்
பார்த்ததும் உதடுகளில் புன்சிரிப்பு மலர ‘வாழ்க வளமுடன் சாமிநாதன்’ என்று மகிழ்ச்சியோடு
ஒரே குரலில் முகமன் சொல்வார்கள். சாமிநாதன் இரண்டு கைகளையும் கூப்பி சிரித்த முகத்துடன்
சற்றே தலைகுனிந்து மனம்நிறைந்த குரலில் ‘வாழ்க வளமுடன்’ சொல்லி எல்லோருக்கும் பதில்
முகமன் உரைப்பார். பிறகு அவர்களை ஏற்றிக்கொண்டு விமான நிலையச் சாலையில் உள்ள பூங்காவுக்குச்
செல்வார். அதுதான் அவர்கள் நடைப்பயிற்சி செய்யும் இடம். ஏதோ ஒரு விசேஷத்தை ஒட்டி மூன்று
ஆண்டுகளுக்கு முன்பாக நன்கொடை கொடுப்பதற்காக அந்த நிலையத்துக்குச் சென்ற சாமிநாதன்
மெல்லமெல்ல அங்கிருந்தவர்களோடு நெருங்கிப் பழகி நட்பை உருவாக்கிக்கொண்டார். அந்த நிலையத்தின்
கூடத்திலேயே ஆபத்தில்லாமல் நடைப்பயிற்சி செய்தவர்களை பூங்காவுக்கு அழைத்துச் செல்லும்
பொறுப்பை தானாகவே ஏற்றுக்கொண்டார்.
பூங்காவை அடைந்ததும் காரிலிருந்து
இறங்கும் தருணத்தில் அவர்கள் பார்வையில் படும் முதல் ஆள் சரவணன் என்னும் சிறுவன். எந்த
மூலையில் நின்றுகொண்டு அவர்களைப் பார்ப்பான் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
ஆனால் வண்டியிலிருந்து இறங்கும் கணத்துக்குச் சரியாக அவர்கள் முன்னால் நின்று ‘வாழ்க
வளமுடன் சார்’ என்று சொல்லி ராணுவவீரனைப்போல உடலை விறைப்பாக்கி ஒரு சல்யூட் அடிப்பான். சாமிநாதன் அவனது தோளைத் தொட்டு தட்டிக்கொடுத்தபடி
‘வாழ்க வளமுடன்’ சொல்வார். மற்றவர்களும் அவனைப்போலவே உடலை விறைப்பாக்கி சல்யூட் அடித்து
முகமன் சொல்வார்கள். சரவணனுக்கு ஒரு காலைப்போல இன்னொரு கால் இருக்காது. சின்ன வயதில்
போலியோவால் பாதிக்கப்பட்டு விட்டது. அதனால் உடலை விறைப்பாக்கி அவன் நிற்கும்போது ஒரு
கால் தொங்குவதுபோல இருக்கும். அவன் நடப்பதுகூட தாவித்தாவி வருவதுபோல இருக்கும். காரிலிருந்து
எல்லோரும் இறங்கியதும் ”தொடைக்கட்டுமா சார்?” என்று கெஞ்சுவதுபோலக் கேட்பான். சாமிநாதன்
சிரித்துக்கொண்டே தலையை அசைத்து சம்மதம் சொல்வார். உடனே தன் பையிலிருந்து ஒரு துண்டை
எடுத்து காரைத் துடைக்கத் தொடங்குவான் சரவணன். பழகிய நாளிலிருந்து ஒருமுறை கூட அவரைக்
கேட்காமல் அவன் காரைத் தொட்டதில்லை.
அருணகிரி, நந்தகோபாலன், சக்கரபாணி,
கோபால்சாமி, குருமூர்த்தி எல்லோருமே எழுபது வயதைக் கடந்தவர்கள். துணை இல்லாமலேயே பத்து
பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக அன்பு நிலையத்தில் வாழ்ந்து பழகியவர்கள். பணி ஓய்வை அடுத்து
காலைநடை, மாலைநடை இரண்டையுமே கட்டாயமாக்கிக்கொண்டார் சாமிநாதன். பணியில் இருக்கும்
வரையில் நேரம் காலம் தெரியாமல் வீட்டிலிருந்து கிளம்பி இன்ஸ்பெக்ஷன் இன்ஸ்பெக்ஷன்
என்று பறந்துகொண்டே இருந்தவர் அவர். அப்போதெல்லாம் அவருடைய பயிற்சி என்பது தூங்கி எழுந்ததும்
அவர் செய்யும் அரைமணிநேர யோகப்பயிற்சிகள்மட்டுமே.
யாரைப் பார்த்தாலும் அவர் உரைக்கும் முகமன் சொல்லைக்கூட அந்தப் பயிற்சி நிலையத்தில்தான் கற்றுக்கொண்டார்.
அருணகிரிக்கு ஒரே மகன். அவன்
குடும்பத்தோடு ஆஸ்திரேலியாவில் இருந்தான். அருணகிரியின் மனைவி வெகுகாலத்துக்கு முன்பாகவே
இறந்துவிட்டார். தனிமையில் இருக்கவேண்டாம் என்பதற்காக அவரே அன்பு நிலையத்தைத் தேர்ந்தெடுத்து
வந்து சேர்ந்துகொண்டார். மாதத்துக்கு ஒருமுறை நிலையத்திலிருந்து அனுமதி பெற்று முத்தியால்பேட்டையில்
இருக்கும் தன் சொந்த வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு வருவார். வீட்டையொட்டி அவர்
ஒரு சின்ன தோட்டத்தை உருவாக்கியிருந்தார். அங்கே சிறிதுநேரம் உட்கார்ந்து பொழுதுபோக்கிவிட்டு
திரும்புவார். ஒருமுறை அந்த வீட்டுக்கு தன்னையும் அழைத்துச் சென்றதை நினைத்துக்கொண்டார்
சாமிநாதன்.
“நந்தினிக்காகத்தான் இந்த வீட்டைக்
கட்டனேன் சாமிநாதன். சொந்தமா ஒரு வீடு இருக்கணும்ன்னு அவளுக்கு ஆசை. இந்த பேங்க் லோன்லாம்
வராத காலம். எங்க ஆபீஸ்ல மொதமொதலா அப்பதான் வீடு கட்டறதுக்கு லோன் கொடுக்க ஆரம்பிச்சாங்க.
சேங்க்ஷனுக்கு டில்லிக்கு போய் வரணும். நான்தான் மொதல் அப்ளிகேஷன் குடுத்தேன். எழுபத்தஞ்சாயிரம்
ரூபா சேங்ஷன் பண்ணாங்க. அது பத்தலை. அப்புறம் அவளுடைய நகைகளையும் வித்துதான் வேலைய
முடிச்சேன். இந்த மாமரம், கொய்யாமரம், எலுமிச்சைமரம்லாம் அவ செடியா வச்சதுதான். இதயெல்லாம்
நின்னு பார்க்க அவளுக்கு குடுத்து வைக்கலை. போய்ச் சேர்ந்துட்டா புண்ணியவதி….”
“எப்படி செத்தாங்க? எதாச்சிம்
பிரச்சின இருந்ததா?”
“ஒரு பிரச்சினையும் இல்ல சாமிநாதன்.
நல்லா திடமா நடமாடிட்டு இருந்தவதான். என்னமோ காய்ச்சலுன்னு நாலுநாளா படுத்துங் கெடந்தா.
ஆஸ்பத்திரியில என்னென்னமோ டெஸ்டுங்க எடுத்து
பார்த்துட்டு சிகிச்சய ஆரம்பிக்கறதுக்குள்ள உயிர் போயிடுச்சி. அவ உயிரு போவறத என் கண்ணால
பார்த்தன் சாமிநாதன். அவதான் தெனம் செடிங்களுக்கு தண்ணி ஊத்துவா. ஆஸ்பத்திரில என் கைய
புடிச்சிகிட்டு, நேரத்தோடு வீட்டுக்கு போயி அந்த செடிங்களுக்கு ரெண்டு வாளி தண்ணி ஊத்தக்கூடாதான்னு
என்ன பார்த்து கேட்டா. ஊத்தறம்மா ஊத்தறம்மான்னு நான் பதில் சொன்னேன். அவ்ளோதான் சாமிநாதன்.
அவ உயிர் போயிடுச்சி”
சாமிநாதன் விழிகளை உருட்டி சுவரைப்
பார்த்திருந்த கணத்தில் ஒரு தாதி அவரைப் பார்த்தாள். உடனே அவருக்கு பக்கத்தில் வந்து
“விழிச்சிட்டிங்களா? வெரிகுட். வெரிகுட். எப்படி இருக்கிங்க சார்? என்ன பார்க்கறிங்க?
யார தேடறிங்க?” என்று கேட்டபடி அவருடைய கையைத் தொட்டாள். சாமிநாதன் புன்னகைத்தபடி தலையசைத்தார்.
“இன்னும் சூடு கொறயலயே. காய்ச்சல் இன்னும் இறங்காமயே இருக்குதுபோல” என்று தனக்குள்ளாகவே
சொல்லிக்கொண்டபடி வாயைத் திறக்க வைத்து நாக்குக்கடியில்
தெர்மாமீட்டரை வைத்தாள் தாதி. ஒரு நிமிடம்
கழித்து எடுத்துப் பார்த்து “தொண்ணத்தெட்டுலயே இருக்குது” என்று சொன்னபடி அட்டையில்
குறித்தாள். ”சார், நீங்க என்ன சினிமா ஸ்டாரா? நாலு நாளா தெனமும் ஒங்கள பாக்கறதுக்கு
ஏகப்பட்ட ஆளுங்க வந்து எட்டிஎட்டி பாத்துட்டு போனாங்க” என்று சொல்லிக்கொண்டே ரத்த அழுத்தத்தையும்
பார்த்து குறித்துக்கொண்டாள். பிறகு, “ஒங்க குடும்பத்துக்காரங்களமட்டும் ஒவ்வொருத்தவங்களா அனுப்பிவைக்கறேன். பார்க்கறீங்களா?”
என்று கேட்டாள். அவர் மறுபடியும் தலையசைத்தார். ”ஒரே ஒரு நிபந்தனை. பார்க்கறதோடு நிறுத்திக்கணும்.
யார்கிட்டயும் நீங்க அதிகமா பேச கூடாது. யாரயும் தொடவும் கூடாது, சரியா?” என்று செல்லமான
கண்டிப்போடு சொல்லிவிட்டு அவள் அறைக்கு வெளியே சென்றாள். சில நிமிடங்களுக்குப் பிறகு
மனைவி, மகன், மருமகள், பேரன், பேத்தி எல்லோரும் அடுத்தடுத்து வந்து பார்த்துவிட்டுச்
சென்றார்கள்.
எதிர்பாராத தருணத்தில் ”வாழ்க
வளமுடன்” என அடங்கிய குரலில் சொன்னபடி குருமூர்த்தியும் கோபால்சாமியும் படுக்கைக்கு
அருகில் வந்து நின்றதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார் சாமிநாதன். இமைகளை நான்கைந்து முறை
மூடிமூடித் திறந்து தன் மகிழ்ச்சியை அவர்களுக்கு உணர்த்தினார். மெதுவான குரலில் முகமன்
சொல் சொல்லி புன்னகைத்தார். பிறகு “எப்படி இருக்கறீங்க? நிலையத்துல எல்லோரும் எப்படி
இருக்காங்க?” என்று கேட்டார். ”எல்லாரும் உங்க நினைப்பாவே இருக்காங்க சாமிநாதன். எப்ப
பாரு உங்களப் பத்திய பேச்சுதான். எந்தப் பேச்ச எப்படி ஆரம்பிச்சாலும் முடிக்கும்போது
உங்கள நெனைக்காம முடிக்கறதே இல்ல” என்றார் குருமூர்த்தி. சாமிநாதனின் கண்கள் அதைக் கேட்டு மலர்ந்தன.
“தெனமும் எல்லாருமா சேர்ந்துதான்
வந்துட்டிருந்தோம் சாமிநாதன். அப்பிடியே கண்ணாடிக்கதவு வழியா பார்த்துட்டு போயிருவோம்.
கூட்டமா போயி கஷ்டப்படாதிங்கன்னு வார்டன் எங்களமட்டும் இன்னிக்கு அனுப்பி வச்சாரு.
எழுந்துட்டிங்கன்னு நாங்க போயி சொன்னா போதும், நாளைக்கே எல்லோரும் ஓடியாந்துருவாங்க.”
”வாக்கிங்லாம் போறிங்களா?” என்று
கேட்டார் சாமிநாதன்.
“போறோம் சாமிநாதன். ஒரு ஆட்டோவ
புடிச்சி ஒன்னா போயிட்டு வந்துடறம். வார்டன் அதுக்கெல்லாம் ஒன்னும் சொல்றதில்லை.”
“நாடகப் பயிற்சி?
“அருணகிரி எல்லாரயும் டிரில்
வாங்கறார. நீங்க குணமாயி வந்ததும் நிகழ்ச்சிய வச்சிக்கலாம்ன்னு தேதிய தள்ளி வச்சிட்டாரு.”
சாமிநாதன் தலையசைத்துக்கொண்டார்.
சில கணங்களுக்குப் பிறகு “எங்க கேமிரா? அது இல்லாம வெளிய வரவே மாட்டிங்களே, எடுத்தாரலையா?”
என்று கேட்டார். “ஆஸ்பத்திரியில விடமாட்டாங்கன்னு எடுத்தாரலை சாமிநாதன்” என்று சிரித்தார்
குருமூர்த்தி. அதற்குள் தாதி வந்து ”பேசக்கூடாதுன்னு சொல்லியுங்கூட பேசிட்டே இருக்கிங்களே
சார், மொதல்ல கெளம்புங்க கெளம்புங்க. டாக்டர் பார்த்தா எங்களதான் திட்டுவாரு” என்று
சொல்லி தள்ளிவிடாத குறையாக அனுப்பிவைத்தாள். ”வாழ்க வளமுடன்” சொல்லிக்கொண்டே அவர்கள்
வெளியேறினார்கள்.
குருமூர்த்தி தனது கணிப்பொறியில்
வெவ்வேறு தலைப்புகளில் சேமித்துத் தொகுத்து வைத்திருந்த படங்களைப் பார்க்கும்படி கேட்டுக்கொண்ட தினத்தை நினைத்துக்கொண்டார் சாமிநாதன். ஒரு தொகுப்பில் மரங்களின்
படங்கள் மட்டுமே இருப்பதைப் பார்த்தார். ஆறேழு படங்கள் கடந்துபோன பிறகுதான் அதன் இலையமைப்பை
வைத்து அவை அனைத்தும் புங்கமரங்கள் என அறிந்துகொண்டார். சில கணங்களுக்குப் பிறகு அவை
அனைத்தும் ஒரே மரம் என்பதையும் அந்த மரம் அன்பு நிலையத்தின் முகப்பில் உள்ள மரம் என்பதையும் அவர் புரிந்துகொண்டார்.
எல்லாப் படங்களிலும் மரம் ஒரே கோணத்தில் இருப்பதை உணர்ந்தபோது அவர் ஆர்வம் சட்டென்று
பெருகியது. ஒருவித மன எழுச்சியோடு படத்தை மீண்டும் முதலிலிருந்து பார்க்க ஆரம்பித்தார்.
முதல் படத்தில் அந்த மரக்கிளையில் ஒரு குயில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அடுத்த
படத்தில் படத்தில் மஞ்சள் நிறத்தில் ஒரு மைனா இருந்தது. மற்றொரு படத்தில் காகம் இருந்தது.
கிளி. சிட்டுக்குருவி, வானம்பாடி, நாகணவாய், மரங்கொத்தி என ஒவ்வொரு படத்திலும் ஒரு
பறவை காட்சியளித்தது. பார்க்கப்பார்க்க அவர் மனம் பறப்பதுபோல இருந்தது. இன்னொரு முறை
முதல் படத்திலிருந்து தொடங்கி ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே வந்தார். இறுதியில் “எல்லாத்திலயும்
மரம் நிரந்தரமா இருக்குது, பறவைகள் மட்டுமே
மாறிட்டே இருக்குது, இல்லையா?” என்று சொல்ல ஆரம்பித்து ”இது என்னமோ சொல்லுது
குருமூர்த்தி. நிரந்தரத்துக்கும் நிரந்தரமின்மைக்கும் நடுவில் இருக்கிற ஒரு சமன்பாடுன்னு
சொல்லலாமா?” என்று சொல்லிமுடித்து அவரைப் பார்த்தார். மறுகணமே பதிலுக்குக் காத்திருக்காமல்
”பேசும் படம்னு சொல்வாங்களே, அது இதுதானா குருமூர்த்தி?” என்றபடி அவருடைய தோளைத் தொட்டு
தன் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினார்.
அந்தச் சேமிப்பு முழுக்க இப்படி
பல தொகுப்புகள் இருந்தன. செடிகள். மரங்கள். அணில்கள். வண்ணத்துப்பூச்சிகள். தனியாகப்
பார்த்தால்தான் அப்படித் தெரிந்தது. ஆனால் தொகுப்பாகப் பார்க்கும்போது வேறொரு தொனிப்பொருள்
இருப்பதுபோலத் தோன்றியது. அந்தப் பொருள்மயக்கமே அவற்றின் வெற்றி என்பது புரிந்தது.
அப்போதுதான் அவற்றிலிருந்து சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு புகைப்படக் கண்காட்சி
வைக்கும் திட்டம் உருவானது. பத்தே நாட்களில் நிலையத்தின் அறையொன்றிலேயே புகைப்படக்
கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. பாண்டிச்சேரியில் வந்து தங்கியிருந்த இந்திய ஆங்கில
எழுத்தாளர் கண்காட்சியைத் திறந்துவைத்துப் பேசினார். முதல் நாள் மட்டுமன்றி, அந்த வாரம்
முழுதும் கண்காட்சிக்கு வந்து குருமூர்த்தியுடன் அந்த எழுத்தாளர் பேசிக்கொண்டிருந்தார்.
கண்காட்சியின் நிறைவு நாளன்று
குருமூர்த்தி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. “சின்ன வயசில கேமிராமேல எனக்கு ரொம்ப
ஆசை சாமிநாதன். ஆனா அப்பா வார்த்தைய மீறி எதயும் செய்யமுடியலை. சினிமாவுல கேமிராமேனா
போவணும்ங்கறதுதான் என் லட்சியம். அப்பாவுடைய ஆசைக்காக தாசில்தாரா வேலை செஞ்சேன்.” என்று
சொல்லிவிட்டு சில கணங்கள் ஜன்னலுக்கு வெளியே அடர்ந்திருந்த மணத்தக்காளிச் செடிகளையே
பார்த்தபடி இருந்தார். பிறகு பெருமூச்சோடு “அவர் செத்ததுக்குப் பிறகுதான் என்னால ஒரு
கேமிராவையே தைரியமா வாங்கமுடிஞ்சது” என்று சொல்லிவிட்டி சிறிது தயங்கினார். அப்புறம்
மெலிந்த குரலில் “பார்க்கிறதுக்கும் உற்சாகப்படுத்தறதுக்கும் என்ன சுற்றி நிறைய ஆளுங்க
இருந்த சமயத்துல என்னால கேமிராவயே தொடமுடியலை. கேமிராவை நான் தொட்ட நேரத்துல பார்க்கவோ
பாராட்டவோ என்னை சுத்தி ஆட்களே இல்லை. இருந்தாலும் இது என் மனசுக்கு புடிச்ச ஒன்னாச்சே.
அதனால விடமுடியலை. யாரு பாத்தா என்ன, பாக்காட்டா என்ன, நாம பார்க்க எடுப்போம்ன்னு எடுத்து
வச்சேன்” என்றார்.
கோபால்சாமி மறக்கமுடியாத ஒரு
மனிதர். பிரெஞ்சுக் குடியுரிமை உள்ளவர். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பிரான்சில்
இருந்தார்கள். ஆண்டுக்கு ஒரு மாதம் சுற்றிப் பார்ப்பதற்காக பாண்டிச்சேரி வந்து செல்லும்
பழக்கத்தின் அடிப்படையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவர் திரும்பிச் செல்லவில்லை.
பாண்டிச்சேரியிலேயே இருக்கவேண்டும் என்று முடிவெடுத்தார். விடுதிச் செலவைக் குறைப்பதற்காக
வாடகை வீடு தேடியவருக்கு வீடு கிடைக்கவில்லை. அன்பு நிலையம் இருக்கும் தெருவில் ஒரு
தரகர் கொடுத்த தகவலை வைத்துக்கொண்டு வீடு தேடி வந்து, கிட்டாத ஏமாற்றத்தில் சோர்வோடு
நடந்துவந்து புங்கமர நிழலில் நின்றார். பிறகுதான் மையத்தின் பெயர்ப்பலகையைப் பார்த்துவிட்டு
உள்ளே சென்றார். அன்றுமுதல் நிலைய உறுப்பினராகிவிட்டார். மிடுக்கான நடையில் கடகடவென
ஆங்கிலத்தையோ பிரெஞ்சையோ பேசிக்கொண்டே அவரால் எந்த அலுவலகத்துக்குள்ளும் சென்றுவிடமுடியும்.
அந்தத் திறமை அவருக்கு இருந்தது. காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு ஜி.எச். வாசலுக்கு
தவறாமல் சென்றுவிடுவார் கோபால்சாமி. வழிமுறைகள்
புரியாமலும் எந்த வியாதிக்கு எந்த இடத்தில் நிற்கவேண்டும் என்று தெரியாமலும் தவியாய்த்தவிக்கும்
கிராமத்து நோயாளிகளுக்கும் வெளியூர் நோயாளிகளுக்கும் அலைந்து அலைந்து உதவி செய்வார்.
யாராவது கட்சிக்காரராக இருக்குமோ என முதலில் அஞ்சிய மருத்துவ அலுவலர்கள், அவர் ஒரு
மனிதாபிமானி என்பதைப் புரிந்துகொண்டு நாளடைவில் அவர் கேட்கும் ஒத்துழைப்பை தருகிறவர்களாக
மாறிவிட்டார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு பேரனுக்கு
பிறந்தநாள் வந்தபோது, அன்பு நிலையத்தில் இருந்த அனைவருக்கும் ஒரு விருந்துக்கு ஏற்பாடு
செய்தார் சாமிநாதன். அப்போது உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காக ஒரு கணிப்பொறியையும்
இணைய இணைப்பையும் நிலையத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அங்கிருந்த முப்பத்தேழு
உறுப்பினர்களிடமும் அவர்கள் பிரிந்து வந்த குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் இருந்தன.
எல்லாரிடமிருந்தும் அதை வாங்கி அதிலிருந்த பேரப்பிள்ளைகளின் முகங்களைமட்டும் தனியே
ஸ்கேன் செய்து தொகுத்து அத்துடன் தன் பேரனின் முகத்தையும் சேர்த்து கணிப்பொறியின் மூலம்
ஒரு பெரிய படமாக அதை மாற்றினார். ’இளம் முத்துகளுக்கு
தாத்தாவின் முத்தங்கள்’ என்று அந்தப் படத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது. பிறகு எல்லோருக்கும்
மின்னஞ்சல் தொடர்பு முகவரியை உருவாக்கி, தனித்தனியே முகநூல் பக்கம் திறந்துகொடுத்து
அந்தப் படத்தை எல்லோரோடும் பகிர்ந்துகொள்ளும் வகையில் பதிவேற்றம் செய்துவைத்தார். இரண்டு
நாட்கள் வரை எல்லோரும் காத்திருந்தார்கள். மூன்றாவது நாள் “தாத்தா, ஐ மிஸ் யு. எப்படி
இருக்கீங்க?” என்றொரு பதிவு வந்திருந்தது. அது சக்கரபாணியின் பேரன் சதீஷின் பதிவு.
அதைப் படித்ததும் அவர் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ”சதீஷ். சதீஷ். கலிஃபோர்னியவிலேருந்து
போட்டிருக்கான்” என்று உற்சாகத்தோடு சிரித்தார். “சதீஷ், ஐ கிஸ் யு” என்று மறுகணமே
பரவசத்தோடு அவர் பதிவு செய்துவிட்டார். பத்தே நாட்களில் முப்பத்தேழு பேருடைய பேரப்பிள்ளைகளும்
வலைக்குள் வந்துவிட்டார்கள். பதில்களும் மறுபதில்களுமாக ஒரு புதிய உலகத்தில் சுறுசுறுப்பாக
எல்லோரும் இயங்கத் தொடங்கினார்கள்.
நடைப்பயிற்சியில் இருக்கும்போது
ஒரு நாள் சக்கரபாணியின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. வெளிநாட்டு அழைப்பு. யார்
என்று புரியாமலேயே குழப்பத்தோடு அதை எடுத்து “ஹலோ, யாரு பேசறது?” என்று கேட்டார். மறுமுனையில்
“தாத்தா, நான் சதீஷ் பேசறேன்” என்ற பதில்குரலைக் கேட்டு ஒரே கணத்தில் அவர் தயக்கமெல்லாம்
கலைந்தது. சிமெண்ட் பெஞ்ச் இருந்த பக்கமாகச் சென்று நன்றாக உட்கார்ந்தபடி “சதீஷ், எப்படிப்பா
இருக்க?” என்று ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் சத்தமாகக் கேட்டார். அவருடைய சத்தத்தைக்
கேட்டு நடைப்பயிற்சியில் இருந்தவர்களில் பாதி பேர் அவசரமாகத் திரும்பி வேடிக்கை பார்த்தார்கள்.
ஏதோ ஒரு புதிய மொழியில் பேசிக்கொள்கிற மாதிரி இருவரும் மாறிமாறி கொஞ்சிக்கொஞ்சிப் பேசிக்கொண்டார்கள்.
அவன் சட்டென ஒரு பாடலைப் பாடிக் காட்டினான். ”ட்விங்கிள் ட்விங்கிள்” பாட்டு. அதை கேட்டு
சக்கரபாணி ஆனந்தத்தில் மூழ்கினார். அவர் கண்கள் அப்படியே பரவசத்தில் கிறங்கிக் கிடந்தன.
“ரெக்கார்ட், ரெக்கார்ட் இட்” என்று சாமிநாதன் சைகையால் காட்டியதை தாமதமாகத்தான் புரிந்துகொண்டார்
சக்கரபாணி. அதற்குள் பாட்டு முடிந்துவிட்டது. ஆனாலும் பேரனுடன் குழைவாகப் பேசி மறுமுறையும்
பாடும்படி தூண்டினார் அவர். அப்போது உரையாடல் உட்பட எல்லாவற்றையும் பதிவு செய்துகொண்டார்
சக்கரபாணி. அந்தப் பாட்டைத் தொடர்ந்து அவன் மூன்று பாடல்களைப் பாடிவிட்டு விடைபெற்றுக்கொண்டான்.
கைப்பேசியைத் திருப்பி பதிவான
பாடலை மீண்டும் ஒலிக்கவைத்துவிட்டு விழிமயங்கக் கேட்டார் சக்கரபாணி. பேரக்குழந்தையின்
தலையைத் தடவிக்கொடுப்பதைப்போல அவர் அந்தக் கைப்பேசியைத் தடவிக் கொடுத்தார். அன்றுமட்டும்
அந்தக் குரலை அவர் பத்துமுறைக்கும் மேல் கேட்டார். அவர் உடலில் ஒரு புதிய சக்தி பிறந்ததைப்போல
இருந்தது. ”நன்றி சாமிநாதன், நன்றி சாமிநாதன்’ என்றபடி எழுந்து வந்து சாமிநாதனின் கைகளைப்
பற்றிக்கொண்டார். நாளுக்குநாள் நிலையத்தில் தங்கியிருந்த பெரும்பாலோருடைய முகங்களிலும்
சந்தோஷக் களை மின்னிப் பெருகுவதைக் கவனித்தார். முகநூல் தாத்தாக்களையும் பேரன்களையும்
ஓரளவு உறுதியாக இணைத்துவிட்டதைப் புரிந்துகொள்ள முடிந்தது. எல்லோருடைய கைப்பேசியிலும்
அவர்களுடைய பேரப்பிள்ளைகளின் குரல்கள் பாட்டாகவோ பேச்சாகவோ பதிவாகி இருந்தன. சாமிநாதன்
எல்லாப் பதிவுகளையும் வாங்கி ஒரே தொகுப்பாக உருவாக்கி, அதை ஒரு குறுந்தகட்டில் பதிந்து
‘துளிர்களின் குரல்கள்’ என்று பெயரிட்டுக் கொடுத்தார். தேவைப்படும்போது ஒரு சிடி ப்ளேயரில்
போட்டு எல்லோரும் மாறிமாறிக் கேட்டார்கள். சக்கரபாணி அதையும் பதிவேற்றிவிட்டார். அதற்கு
தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பதில்பதிவுகள் வந்தன.
ஏழு மாநிலங்களில் மாறிமாறி வேலை
பார்த்தவர் நந்தகோபாலன். நேர்மையும் கண்டிப்பும் மிகுந்த வங்கி அதிகாரி. அவருக்கு ஏழு
மொழிகள் தெரியும். ஏழு மொழிகளிலும் அவரால் எழுதவும் படிக்கவும் பேசவும் முடியும். ஆந்திரப்பிரதேசத்தில்
கடலோர நகரமொன்றில் வேலை செய்துவந்தபோது கடன் வழங்குவது தொடர்பாக அவருக்கும் பிரபலமான
ஒரு அரசியல் கட்சிப் பிரமுகருக்கும் இடையில் ஒரு பிரச்சினை எழுந்தது. ஒரு நாள் இரவு
உணவுக்குப் பிறகு அறைக்கு திரும்பி வந்த சமயத்தில் முகம் தெரியாத ஆட்கள் சூழ்ந்து தடிகளால்
அடித்துவிட்டு ஓடிவிட்டார்கள். தோள்மூட்டு நழுவி உடைந்துவிட்டது. கிட்டத்தட்ட மரணம்
வரைக்கும் சென்று உயிர்பிழைத்தார். அவருடைய புகாரை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. காவல்துறை
நம்பும் அளவுக்கு அந்தக் குற்றத்தை அவரால் நிரூபிக்கமுடியவில்லை. மனம் வெறுத்த அவர்
விருப்ப ஓய்வை எடுத்துக்கொண்டு ஊரோடு வந்து சேர்ந்தார். தான் அலைந்தாலும் குடும்பம்
அலையக்கூடாது என்ற எண்ணத்தில் குடும்பத்தை ஊரிலேயே வைத்திருந்தார் அவர். ஆனால் அந்த
எண்ணமே அவருக்கு பாசமற்றவர் என்னும் பட்டத்தை வாங்கிக்கொடுத்துவிட்டது. பட்டதாரியாக
வளர்ந்து வேலை பார்த்துவந்த மகன் தன் தாயை அழைத்துக்கொண்டு லண்டனுக்குச் சென்றதை அவரால்
தடுக்கவியலவில்லை. சில காலம் தனிமையில் வாழ்ந்து பார்த்தார். அது ஒரு பெரிய சித்திரவதையாக
இருந்தது. நண்பரொருவர் வழியாக அன்பு நிலையத்தைப்பற்றி கேள்விப்பட்டு அவராகவே வந்து
சேர்ந்துகொண்டார்.
கல்கத்தாவில் ஓடக்கூடிய டிராம்
வண்டிகளைப்பற்றி தற்செயலாகப் பேசிக்கொண்டிருந்தபோதுதான் சாமிநாதனுக்கு நந்தகோபாலனுடன்
நெருங்கிப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் அவர் தகவல்களின் சுரங்கம் என்பதைப்
புரிந்துகொண்டார். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு வாரம் என நந்தகோபாலன் ஒரு தீர்மானத்தை வைத்திருந்தார்.
அந்த வாரம் முழுக்க அந்த மொழியில் வந்த ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப்பார். அதைப்பற்றிப்
பேசுவார். பிடித்தமான பகுதிகளை உடனே தமிழில்
மொழிபெயர்த்துக் குறித்துவைக்கவும் செய்வார். அவருடைய அறையில் மூன்று அலமாரிகள் நிறைய
புத்தகங்கள் இருந்தன.
ஆறேழு வாரங்களுக்கு முன்னால்
நந்தகோபாலன் சாமிநாதனிடம் ஒரு நோட்டைக் கொடுத்து படித்துப் பார்க்கும்படி சொன்னார்.
வேகமாகப் படித்ததில் ஒரே நாளில் படித்துவிட்டார் சாமிநாதன். எல்லாம் சுவையான தகவல்கள்.
சம்பவங்கள். வரலாறு, அரசியல், அறிவியல், இலக்கியம் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக இருந்தது.
வெவ்வேறு மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டிருந்தன.
அன்று மாலை நந்தகோபாலனைச் சந்தித்தபோது
“எப்போதிருந்து மொழிபெயர்க்கறீங்க நந்தகோபாலன்?” என்று கேட்டார். “இன்னொரு மொழின்னு
எப்ப கத்துக்க ஆரம்பிச்சேனோ, அப்ப இருந்தே மொழிபெயர்க்கறேன் சாமிநாதன். ஒரு முப்பது
வருஷம் இருக்கும்” என்றார் அவர். “நான் இந்த நோட்டுதான் முதல் நோட்டுன்னு நெனச்சிட்டேன்”
என்று சாமிநாதன் சொன்னதும் அலமாரியில் ஒரு அடுக்கு முழுக்க வரிசையில் வைக்கப்பட்டிருந்த
நோட்டுகளைக் காட்டிவிட்டுச் சிரித்தார். “இது எல்லாமே மொழிபெயர்ப்புதான்” என்றார்.
”இப்படி குடத்திலிட்ட விளக்கா
எவ்வளவு காலத்துக்கு இருப்பீங்க நந்தகோபாலன்?. எல்லாத்தயும் எடுங்க மொதல்ல. யாருகிட்டயாவது
குடுத்து புத்தகம் போடலாம்” என்றார் சாமிநாதன்.
அந்த நோட்டுகளை எடுத்துப் புரட்டியபடி “ப்பா, எவ்ளோ விஷயம் தெரிஞ்சி வச்சிருக்கிங்க.
என்னால நெனச்சே பார்க்கமுடியலை” என்று மலைப்புடன் சொன்னார்.
”என்ன தெரிஞ்சி என்ன பிரயோஜனம்
சாமிநாதன்? சொந்த வாழ்க்கையில தோல்விதானே கெடச்சது” என்று கசப்பான ஒரு புன்னகையுடன்
சொன்னார் நந்தகோபாலன். அவர் கண்கள் சுருங்கியிருந்தன.
அவற்றில் துயரம் தேங்கியிருந்தது.
சாமிநாதன் அவரைத் தொட்டு ஆறுதலாக
எதையோ பேசத் தொடங்கும் முன்பாக, அறைக்குள் ஜன்னலோரமாக இருந்த குரோட்டன் செடியைப் பார்த்தபடி
எதையோ சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
“என் குடும்பம் என்ன தனியா விட்டுட்டு
கெளம்பிப்போன சமயத்துல எங்க சொந்தக்காரன் ஒருத்தன் ஒரு கேள்வி கேட்டான் சாமிநாதன்.
அப்படியே என் நெஞ்சில ஒரு கத்திய சொருகன மாதிரி இருந்தது. அந்த வேதனய இன்னும்கூட என்னால
மறக்கமுடியலை.”
“அப்படி என்ன கேட்டான்?”
“ஏழு மொழி தெரிஞ்சவன் ஏழு மொழி
தெரிஞ்சவன்னு ஒன்ன பத்தி ஊருக்குள்ள சொல்றாங்களே. நீ படிச்ச எந்த மொழியிலயும் குடும்ப
உறவு முக்கியம்ன்னு எழுதியிருக்கலையா? இல்ல எழுதனத நீ படிக்கலையா? ஒரு சின்ன விஷயத்த
கூட படிக்காம, அப்படி என்னத்த படிச்சி கிழிச்சன்னு பொட்டுல அறயறமாதிரி கேட்டான்?”
“அட நீங்க ஒன்னு. இத போயி இவ்ளோ
காலமா ஞாபகம் வச்சிருக்கிங்களே. விட்டு தள்ளுங்க நந்தகோபாலன். ஒரே ஒரு துரும்ப கூட
இந்த பக்கத்திலேருந்து அந்த பக்கம் எடுத்துபோடாத ஆளுங்கதான் இப்படி காலம்பூரா பேசிகிட்டே
அலைவாங்க. இதயெல்லாம் நீங்க அப்பவே இந்த காதுல வாங்கி அந்த காதுல உட்டிருக்கணும்” என்று
அவர் கவனத்தைத் திருப்பினார் சாமிநாதன்.
அன்று இரவு அவருக்காக ‘வானவில்’
என்னும் பெயரில் ஒரு இணைய தளத்தைத் தொடங்கி, அவர் எழுதிவைத்திருந்த புதிய நோட்டிலிருந்து
சில பதிவுகளை தட்டச்சு செய்து பதிவேற்றினார். மறுநாள் அதற்கு ஆறு பின்னூட்டங்கள் வந்திருந்தன.
அவற்றை நந்தகோபாலனிடம் காட்டினார்.
“எவ்ளோ பேரு உங்க பதிவுக்கு
பின்னூட்டம் எழுதியிருக்காங்க, பார்த்திங்களா?
படிக்கறவங்கள்ல பத்துல ஒரு ஆளுதான் பின்னூட்டம் போடுவான்ங்கற்து ஒரு கணக்கு.
ஒரு விஷயத்த புரிஞ்சிக்கங்க நந்தகோபாலன். உங்களுடைய மொழியறிவும் அனுபவமும் இவுங்களுக்காகதான்.
மண்டய கொழப்பிட்டு போன அந்தப் பொறம்போக்குக்காக இல்ல”
இணைய உலகம் நந்தகோபாலனை வெகுதூரத்துக்கு
இழுத்துச் சென்றுவிட்டது. தினமும் ஐம்பது நூறு பேருக்கு சந்தேகத்தைத் தீர்த்துவைப்பதில்
பொழுதுகள் ஓடுவது தெரியாமல் ஓடத் தொடங்கிவிட்டன.
சில நாட்கள் முன்பு தனக்கு வந்த
ஒரு மின்னஞ்சலைக் காட்டினார் நந்தகோபாலன். நாலு வரி பாராட்டும் நாலு வரி சந்தேகமுமாக
விரிந்திருந்தது அந்த மடல். “யாரு தெரியுதா சார்? என் மனைவி. இத எழுதறது நான்னு தெரியாமயே
லண்டன்லேருந்து எழுதியிருக்கா” என்றபோது அவர் குரல் நெகிழ்ந்திருந்தது. “அது எப்படி,
அவுங்கதான் எழுதனாங்கன்னு நிச்சயமா சொல்றீங்க? சாந்திங்கற பேருல வேற யாரும் இருக்கக்கூடாதா
என்ன” என்று கேட்டார் சாமிநாதன். “இருக்கலாம்தான். ஆனா இந்த முகவரில இருக்கிற சாந்தி அவ ஒருத்தியாதானே இருக்க முடியும்?” என்று
நிதானமாகக் கேட்டார் நந்தகோபாலன்.
நடைப்பயிற்சி செய்யும் பூங்காவின்
மற்றொரு பகுதியில் சிறுவர்கள் விளையாடும் களம் இருந்தது. பெரியவர்கள் யாரும் அந்தப்
பக்கம் போனதைப் பார்த்ததே இல்லை. ஆனால் நடக்க வந்த முதல்நாளே அருணகிரி வேகவேகமாக அந்தப்
பக்கம் சென்று வேடிக்கை பார்த்தார். யாரோ ஒரு சிறுவன் அடித்த பந்து எங்கோ தொலைதூரத்தில்
விழுந்ததைப் பார்த்து “சூப்பர் சூப்பர். சிக்ஸர்” என்று சத்தம் போட்டு உற்சாகப்படுத்தினார்.
பந்தை அடித்த சிறுவன் அவரை ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தான். அவனைப் பார்த்து புன்னகைத்ததோடு
மட்டுமின்றி, “சூப்பர் சூப்பர். இன்னும் வேகமா அடி” என்று சொன்னார் அருணகிரி. ஒவ்வொரு
அடிக்கும் அவர் துள்ளிக் குதித்தார். தன்னை நோக்கி ஒருமுறை பந்து வந்ததை கவனித்துவிட்டு
அழகாகப் பிடித்துவிட்டார். அதை அவராலேயே நம்பமுடியவில்லை. ‘கேட்ச். கேட்ச்” என்று அவர்
எழுப்பிய ஆரவாரத்தைப் பார்த்து அந்தப் பிள்ளைகளும் ஆரவாரம் எழுப்பினார்கள். பந்தை எடுத்துக்கொண்டு
ஓடுவதுபோல அருணகிரி களத்துக்குள் இறங்கி சிறுவர்களோடு சிறுவனாக சேர்ந்துகொண்டார். சிறுவனின்
மட்டையை வாங்கி அவரும் பந்தை விளாசினார். முடிவில் வேர்த்து விறுவிறுத்து களைத்துத்
திரும்பும்போது “வாழ்க வளமுடன் பாய்ஸ்” என்று சொன்னபடி புன்னகைத்தார். ஒருகணம் எதுவும்
புரியாமல் அந்தச் சிறுவர்கள் அவரையே ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அவர் மீண்டும் புன்னகை
மாறாத முகத்துடன் சிறுவர்களிடம் ”வாழ்க வளமுடன் சொல்லுங்க பாய்ஸ்” என்று கேட்டுக்கொண்டார்.
சிறுவர்கள் ஒரே குரலில் உற்சாகத்தோடு “வாழ்க வளமுடன்” என்று கூவினார்கள். அக்கம்பக்கம்
நடமாடிக்கொண்டிருந்தவர்கள் அவரை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுச் சென்றார்கள்.
சிறுவர்கள் தமக்குள் ஒருவரைப் பார்த்து ஒருவர் வாழ்க வளமுடன் என்று கையை உயர்த்தி சொல்லிக்கொண்டே
ஓடினார்கள்.
பெஞ்சுக்குத் திரும்பியதும்
அருணகிரியைப் பார்த்து “அருணகிரி, என்ன இது ஆட்டம்? இளமை திரும்பிட்டுதா?” என்று கேட்டுவிட்டுச்
சிரித்தார் கோபால்சாமி.
“இளமை எப்பவும் என் கூடவே இருக்குது
கோபால்சாமி. அத போக விடறதே கிடையாது” என்று கம்பீரமாக வந்து உட்கார்ந்தார் அருணகிரி.
“அப்படியே இளமையோடேயே இருங்க
அருணகிரி. வாழ்க வளமுடன்” என்று கையைப் பிடித்துக் குலுக்கினார் நந்தகோபாலன்.
‘வாழ்க வளமுடன் நந்தகோபாலன்”
“ஆளுக்கொரு கதை” திட்டம் கூட
இப்படி பூங்காவில் சிரித்து உரையாடிக்கொண்டிருந்த ஒரு தருணத்தில்தான் உருவானது. அன்பு
நிலையத்தின் இயக்குநர் அதைக் கேட்டு “நம்ம ஹால்லயே நடத்தலாம். ஒரு மாறுதலுக்காக பக்கத்தில
இருக்கிற ஸ்கூல் பிள்ளைகளை பார்வையாளரா அழைக்கலாமா?” என்று ஒரு படி மேலே சென்று யோசித்தார்.
நிலையத்தில் தங்கியிருந்த முப்பத்தேழு பேரும் கதை சொல்லவேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை.
பலர் பின்வாங்குவதிலேயே குறியாக இருந்தார்கள். “ஐயோ கதையெல்லாம் எனக்கு தெரியாதே” என்று
சொன்னவர்கள் ஒருவகை. “மேடையில ஏறி பேசறதெல்லாம் எனக்கு வரவே வராது” என்று சொன்னவர்கள்
இன்னொரு வகை. இரண்டு வகையினரிடமும் பேசிப்பேசி இளகவைத்து நம்பிக்கை ஊட்டி தயார்ப்படுத்தினார்கள்
குருமூர்த்தியும் சக்கரபாணியும். நிகழ்ச்சி அன்று வந்த பிள்ளைகளை வாசலிலேயே நின்று
‘வாழ்க வளமுடன்’ முகமன் சொல்லி, ஆளுக்கொரு மாம்பழத்தையும் கொடுத்து வரவேற்றார். அதற்குப்
பிறகு அவர் எந்த மூலையில் நின்றாலும், அவரைப் பார்த்ததுமே பிள்ளைகள் ‘வாழ்க வளமுடன்
சார்’ என்று ஒரு கணம் நின்று சொல்லிவிட்டு ஓடினார்கள். அன்றைய நிகழ்ச்சி பெரிய வெற்றியாக
அமைந்துவிட்டது. முப்பத்தேழு கதைகள். இரண்டு மணிநேரம். முழு நிகழ்ச்சியும் வீடியோ எடுக்கப்பட்டது.
பொழுது போனதே தெரியவில்லை. பிள்ளைகள் ஒவ்வொருவரும் வந்து எல்லோரிடமும் கைகுலுக்கிவிட்டுச்
சென்றார்கள். “சூப்பர் ப்ரோக்ரம் சார். எங்க ஸ்கூலுக்கு ஒரு தரம் வந்து பண்றீங்களா
சார்?” என்று பிள்ளைகளுக்குத் துணையாக வந்த ஆசிரியர் கேட்டுவிட்டுச் சென்றார்.
அன்று இரவு அந்த நிகழ்ச்சியை
யூ டியுபில் பதிவேற்றினார் சாமிநாதன். முகநூலிலும் பதிவு செய்து வைத்தார். ஒரே இரவில்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை அது சென்றடைந்துவிட்டது. வெளிநாட்டில் வாழும்
பேரப்பிள்ளைகளிடமிருந்து அடுத்தடுத்து அழைப்புகள் வந்தபடியே இருந்தன என்றார் கோபால்சாமி.
ஆளுக்கொரு கதை திட்டத்துக்குக்
கிடைத்த வெற்றியைப் பார்த்துவிட்டு நிலையத்தின் இயக்குநர் “சார், வேற புதுசா ஒரு திட்டம்
சொல்லுங்க. சூப்பரா பண்ணிடலாம்” என்று கேட்டார். சொற்பொழிவு, கதாகாலட்சேபம், உபந்நியாசம்,
பாட்டுக்கச்சேரி என பல திட்டங்களை முன்வைத்து, அவற்றை நடத்துவதில் உள்ள சாதகபாதங்களையெல்லாம்
அலசி அலசி, கடைசியில் எல்லாவற்றையுமே கைவிட வேண்டியிருந்தது. அப்போதுதான் அருணகிரி
“நாமளே நடிக்கிறமாதிரி ஒரு கதைய யோசிச்சி நாடகம் போட்டா என்ன?” என்று கேட்டார். “அதுவும்
நல்ல யோசனைதான். ஆனா நம்ம ஆளுங்க நடிப்பாங்களா?” என்று மெதுவாக இழுத்தார் கோபால்சாமி.
ஆயினும் ஒரே மணிநேரத்தில் அந்தத் திட்டம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அடுத்த நாள் நடைப்பயிற்சி முடிந்து
புல்வெளியில் உட்கார்ந்திருந்தபோது நாடகத்துக்கான கதையைப்பற்றிய பேச்சு வந்தது. ஒவ்வொருவரும்
ஒரு கதையைச் சொன்னார்கள். ஒரு வாரம் முழுக்க விவாதம் நீண்டுகொண்டே போனது. கடைசியாக
ஒருநாள் மாலை கதையையும் காட்சிகளையும் முடிவுசெய்து எழுதிக்கொண்டார்கள். ’வாழ்க வளமுடன்’
என்பதையே நாடகத்தின் தலைப்பாக வைத்தார்கள். ஆளுக்கு இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்த்த
பிறகு “அதுவே இருக்கட்டும். முக்கியமா ஜனங்க வாய்ல நுழையும்” என்றார் அருணகிரி. அடுத்த
வாரத்துக்குள் எல்லாக் காட்சிகளுக்கும் வசனம் எழுதப்பட்டு நாடகத்தின் கையெழுத்துப்
பிரதி தயாராகிவிட்டது. பிரதியெடுத்து ஸ்பைரல் பைண்டிங் செய்து நடிப்பவர்களுக்கு வழங்கப்பட்டது.
வசனம் சொல்லிக் கொடுத்து நாடகத்தை இயக்கும் பொறுப்பை சாமிநாதன் ஏற்றுக்கொண்டார்.
நான்கு நாட்கள் முன்பாக, நாடகத்தின்
பின்னணி இசைக்காகவும் பாடலுக்காகவும் முத்திரைப்பாளையத்தில் கீர்த்தனா குழுவைப் பார்த்து
முன்பணம் கொடுத்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார் சாமிநாதன். ஸ்டார்ட் செய்வதற்கு முன்பாக அருணகிரியை கைப்பேசியில்
அழைத்து “ம்யூசிக் பார்டிக்கு அட்வான்ஸ் குடுத்துட்டன்பா. லைட்டிங்க்ஸ்காரங்கதான் பாக்கி.
அவங்க கடலூரு பக்கமா என்னமோ நிகழ்ச்சிக்கு போயிருக்காங்களாம். நாளைக்கி காலையில வந்துருவம்
சார்னு போன்ல சொன்னாங்க. அவுங்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்திட்டா வேல முடிஞ்சிடும்”
என்று செய்தியைப் பகிர்ந்துகொண்டார். ’சரி
சார். நீங்க தொடங்கன காரியம் வெற்றியில முடியாம வேற எப்படி முடியும்? நேரா இங்கதான
வரீங்க, வாக்கிங்க்கு தயாரா இருக்கோம். வாங்க பார்ப்பம்” என்றார் அருணகிரி. புன்னகைத்தபடி
தொடர்பைத் துண்டித்துவிட்டு மனத்தளவில் ஏற்கனவே அரங்கேறிவிட்ட நாடகத்தை மீண்டும் அசைபோட்டுக்கொண்டே
காரை ஓட்டினார்.
நெல்லித்தோப்பைக் கடந்து, மீன்
மார்க்கெட்டையும் கடந்து வந்த சமயத்தில் சிறிது தொலைவில் சீருடை அணிந்த ஒரு சிறுவனை
அழைத்துச் செல்லும் ஒரு பெரியவரைப் பார்த்தார் சாமிநாதன். சிறுவன் கையை விரித்து விரித்து
எதையோ சொல்லிக்கொண்டிருந்தான். பேச்சு சுவாரசியத்தில் நடைபாதையை விட்டு சாலைக்குள்
அவர்கள் இறங்கிவிட்டதை அவர் மனம் கவனித்தது. ஹாரனை அடித்து அவர்களுடைய கவனத்தை இழுப்பதற்காக
அவர் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை என்பதை அவர் அக்கணமே உணர்ந்தார். இந்த உலகிலேயே
இல்லாதவர்கள்போல மிகவும் சுவாரசியத்துடன் அவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். புன்னகையோடு
அவர்களைக் கவனித்தபடியும் ஹார்னை நிறுத்தாமல் அடித்தபடியும் பாதையிலிருந்து சற்றே விலகிச்
செல்ல வலதுபக்கம் வண்டியை வளைத்தார். அதே கணத்தில் எவ்விதமான எச்சரிக்கையும் இல்லாமல்
எதிர்புறத்தில் இருந்து வேகமாகப் பாய்ந்து வளைந்துவந்த பால் வேன் ஒன்று நேருக்குநேர்
மோதி வண்டியை உருட்டியதை அரை நொடி நேரம் தாமதமாகவே உணர்ந்தார் சாமிநாதன். தலை மோதி,
ரத்தம் கண்களில் வழியவழிய எடுக்கமுடியாதபடி கால்கள் சிக்கிக்கொண்ட வேதனையில் அலறியபோது
அந்தத் தாத்தாவும் சிறுவனும் வேகமாக நடைபாதையில் ஏறி நிற்பதைப் பார்த்தார். பால் கேன்கள்
கவிழ்ந்து சாலைமுழுக்க பால் ஓடி வழிந்தது.
திடீரென சாமிநாதனின் உடல் விறைப்பதையும்
இழுத்துக்கொள்வதையும் பார்த்த தாதி ஓடிச் சென்று டாக்டரை அழைத்துவந்தாள். அந்தப் படுக்கையைச்
சுற்றி அவசரமாக துணித்திரை போடப்பட்டது. மூச்சுவிடும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவர்
உடல் தூக்கி வாரிப் போட்டது. இதயத்தின் துடிப்பை சீராக்கும் முனைப்பில் டாக்டர் அவசரமாக
ஒரு ஊசியைப் போட்டார். அவருடைய துடிப்புகள் குறையாமலேயே இருந்தன. உதட்டைப் பிதுக்கியபடி
டாக்டர் துணித்திரையைக் கடந்து வெளியே வந்தார். “சீரியஸ்னு சொல்லி அவுங்க குடும்பத்துல
யாரயாவது ஒருத்தவங்கள மட்டும் அழச்சிட்டு வாங்க” என்று தாதியிடம் சொன்னார். தாதி கதவைத்
திறந்துகொண்டு வெளியே ஓடினாள்.
சாமிநாதனுடைய மனைவி திறந்த கதவின்
இடைவெளியில் மகனும் மகளும் பின்னாலேயே நுழைந்துவிட்டார்கள். அவர்கள் பின்னால் அன்பு
நிலையத்தின் பெரியவர்களும் சத்தம் காட்டாமல் நுழைந்து மெளனமாக நின்றார்கள். டாக்டர்
ஒரு கணம் பதறி, கைகளை உயர்த்தி எதையோ சொல்ல நினைத்து மறுகணம் அவர்களுடைய ஆழ்ந்த அமைதிநிலையைக்
கண்டு அடங்கி சாமிநாதனின் பக்கம் பார்வையைத் திருப்பிக்கொண்டார். அவர் மூச்சின் வேகம் மெல்லமெல்ல அடங்குவதைக் கவனித்தார்.
அனைவரையும் பார்த்து பொதுவாக அவர் இமைகள் மூடிமூடித் திறந்தன. உதடுகள் எதையோ சொல்வதுபோல
பிரிந்து மூடாமலேயே வலியுடன் உறைந்தன.