முன்னுரை
ஒரு நாள் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன்.
எனக்கு எதிரில் அம்மா, அப்பா, இரு பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பம் உட்கார்ந்திருந்தது.
கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக அவர்கள் கோவாவுக்குச் செல்கிறார்கள் என்பதை அவர்களுடைய
உரையாடலிலிருந்து நானே புரிந்துகொண்டேன். இரண்டு பிள்ளைகளும் மாறிமாறி தம் அம்மாவிடமும்
அப்பாவிடமும் கேள்விகள் கேட்டபடியே இருந்தார்கள். பெரியவனுக்கு ஆறு வயதும் சின்னவனுக்கு
நான்கு வயதும் இருக்கலாம். நீண்ட நேரம் அவர்களுடைய
உரையாடல் தொடர்ந்தபடியே இருந்தது.
எங்கள் பெட்டிக்குள் அடுத்தடுத்த பகுதிகளில்
விளக்குகளை ஒவ்வொருவராக நிறுத்தத் தொடங்கினார்கள். நாங்களும் நிறுத்த வேண்டியிருந்தது.
உடனே உரையாடலை முடித்துக்கொண்டு பிள்ளைகள்
இருவருக்கும் படுப்பதற்கான விரிப்புகளை படுக்கைப்பலகைகளில் போட்டுக் கொடுத்து படுக்கச்
சொல்லிவிட்டு, பெற்றோர்களும் படுத்துக்கொண்டார்கள்.
சிறிது நேரம் ரயில் சத்தம் மட்டுமே ஓர் இசைக்கோவையைப்
போல ஒலித்தபடி இருந்தது. இருளில் அதைக் கேட்பது இனிய அனுபவமாக இருந்தது. ஏதோ ஒரு கணத்தில்
திரும்பிப் படுத்தபோது, சின்னவன் தன் படுக்கையைவிட்டு சத்தமில்லாமல் மெல்ல எழுந்து
பக்கத்திலிருந்த பெரியவனின் படுக்கையில் அவனோடு ஒட்டிக்கொண்டு படுப்பதைப் பார்த்தேன்.
”அண்ணா, ஒரு கதை சொல் அண்ணா” என்று கேட்டான் சின்னவன். உடனே எந்தத் தயக்கமும் இல்லாமல்
சின்னவனுக்கு கதை சொல்லத் தொடங்கினான் பெரியவன். அவர்கள் படுக்கைக்கு மேற்பகுதியில்
எனது படுக்கை இருந்ததால், அவர்களுடைய உரையாடலை என்னால் முழுவதுமாகக் கேட்கமுடிந்தது.
ஒரு தக்காளியும் அவனும் ஒரு வண்டியில் பயணம்
செய்வதுபோல ஒரு கதையை முதலில் சொன்னான் பெரியவன். பிறகு ஒரு குதிரையில் ஏறி ஒரு காட்டுக்குள்
அலைந்து திரிவதுபோல ஒரு கதையைச் சொன்னான். அடுத்ததாக ஒரு கட்டிலுக்கு இறக்கைகள் முளைத்து
வானத்தில் பறப்பதுபோல ஒரு கதையை விவரித்தான். அவனுடைய கற்பனையும் வேகமும் ஆச்சரியம்
ஊட்டும் வகையில் இருந்தன. ஒருகணம் கூட யோசிக்காமல், ஒரு கதை முடிந்ததுமே அடுத்த கதையைத்
தொடங்கினான். ஏற்ற இறக்கங்கள் கொண்ட அந்தக் குரல் என் நெஞ்சில் இன்னும் ஒலித்தபடியே
இருக்கிறது. நாலைந்து கதைகளுக்குப் பிறகு சிறுவர்கள் தூங்கிவிட்டார்கள்.
எனக்கு தூக்கம் முற்றிலுமாக கலைந்துவிட்டது.
அக்கதைகளை உடனே என் குறிப்புச்சுவடியில் குறித்துக்கொள்ளவேண்டும் என மனம் துடித்தது.
ஆனால் மேலடுக்கிலிருந்து இறங்கி அந்த அகால வேளையில் விளக்கைப் போட தயக்கமாகவும் இருந்தது.
அந்தச் சிறுவன் சொன்ன வரிசையிலேயே அக்கதைகளை என் மனத்துக்குள் ஒருமுறை சொல்லிப் பார்த்துக்கொண்டேன்.
அனைத்தையும் நினைவிலிருந்து திரட்டியெடுக்க முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.
சிறுவன் சொன்ன கதைகளையெல்லாம் பாடல் வரிகளாக மாற்றும் விசித்திரமான விருப்பமொன்று சட்டென
மனத்தில் முளைத்தெழுந்தது. அந்த இருட்டில் தாளக்கட்டுடன் கூடிய வரிகள் தாமாக மிதந்தெழுந்தன.
அனைத்தையும் மனத்தில் நிறைத்துக்கொண்டேன். விடிந்ததும் அவற்றை என் குறிப்புச்சுவடியில்
குறித்துவைத்த பிறகுதான் நிமம்தியாக இருந்தது.
அக்கணத்தில் நான் என் பால்யத்தை மீண்டும்
ஒருமுறை வாழ்ந்ததுபோல இருந்தது. சிறுவயதில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி
பெற்றதற்காக பள்ளியில் எனக்கு பாலர் பாடல்
என்றொரு புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்தார்கள். அழ.வள்ளியப்பாவின் பாடல்களால் நிறைந்த
புத்தகம் அது. வட்டமான தட்டு, தட்டு நிறைய லட்டு
என்னும் பாடலை அந்தப் புத்தகத்தில்தான் நான் முதன்முதலாகப் படித்தேன். படித்த கணத்திலேயே
ஒவ்வொரு பாடலும் என் மனத்தில் வேரூன்றி இறங்கிவிட்டது. அணிலே அணிலே ஓடிவா, அழகு அணிலே ஓடிவா என்ற பாடலும் படித்ததுமே மனப்பாடமாகிவிட்டது.
அடுத்த வாரமே நான் அந்தப் புத்தகத்தை எங்கள் பள்ளி நூலகரிடம் காட்டி, ‘இதேபோல இவர்
எழுதிய புத்தகம் வேறு ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்டேன். அவர் அறைக்குள் சென்று புத்தக
அடுக்குகளில் தேடி ஒரு சின்னப் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அங்கேயே உட்கார்ந்து
படிக்கும்படி சொன்னார். கையில் புத்தகம் கிடைத்ததும் ஒரு புதையலே கிடைத்ததுபோல இருந்தது
எனக்கு. அக்கணத்திலேயே அதைப் பிரித்துப் படிக்கத் தொடங்கிவிட்டேன். அதுவும் ஒரு பாடல்
தொகுதி. அழகான தாளக்கட்டு. இனிமையான எளிய சொற்கள். அச்சொற்களை மனத்துக்குள் அசைபோட
அசைபோட, நம்மாலும் அப்படிப்பட்ட சொற்சேர்க்கையை உருவாக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கை
எழுவதை உணர்ந்தேன்.
பால்யத்தில் என் மனம் உணர்ந்த எழுச்சியை,
வள்ளியப்பாவின் பாடல்களை வளர்ந்த பிறகு படிக்கும்போதும் அடைந்திருக்கிறேன். பெரியவர்களை
குழந்தைகளாக்கிவிடும் சக்தி, அவர் வரிகளில் நிறைந்திருக்கின்றன. வெள்ளம்போலவும் அருவிபோலவும்
பொங்கி வழியும் அச்சக்தி, தேசிய விநாயகம் பிள்ளையின் பாடல்களிலும் பாரதியார் பாடல்களிலும்
நிறைந்திருப்பதை பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். அந்தச் சக்தியே எனக்குள் குழந்தைப்பாடல்களைப்
புனையும் கனவுகளை நிரப்பியது.
இத்தொகுதியில் உள்ள பாடல்கள் அனைத்தும் எனக்கு
அறிமுகமுள்ள அல்லது அறிமுகமில்லாத குழந்தைகளுடன் உரையாடியபோது கிடைத்த சொற்களால் உருவானவை.
ஒரு தொகுதியாக அப்பாடல்கள் உருவாகியிருக்கும் இத்தருணத்தில் அந்தக் குழந்தைகளின் இனிய
முகங்களே என் நெஞ்சில் எழுகின்றன. அவர்கள் அனைவரையும் இத்தருணத்தில் என் விரிந்த மார்போடு
ஆரத்தழுவிக் கொள்ள விரும்புகிறேன். என் தோள்களில் ஏற்றிவைத்து விளையாட விரும்புகிறேன்.
என் இளமையில் சொற்கள்மீது எனக்குள் தீராத
விருப்பத்தை ஒரு சுடராக ஏற்றிவைத்த அழ.வள்ளியப்பாவுக்கு இந்தப் பாடல் தொகுதியைச் சமர்ப்பிப்பதில்
என் மனம் நிறைவை உணர்கிறது. இத்தொகுப்பில்
உள்ள ஒரு சில பாடல்கள் சுட்டி விகடன், சிறுவர் மணி, புதுவை பாரதி ஆகிய இதழ்களில் வெளிவந்தவை.
இவ்விதழ்களின் ஆசிரியர்களுக்கு என் நன்றிகளைப் பதிவு செய்ய விழைகிறேன். என் இல்லத்தரசி
அமுதாவின் அன்பும் நெருக்கமும் என் எல்லா எழுத்து முயற்சிகளிலும் எப்போதுமே உற்ற துணையாக
நிற்பவை. அவர் என் நெஞ்சில் எப்போதும் நிறைந்திருப்பவர். இத்தொகுப்பைச் சிறப்பான
முறையில் வெளியிடும் பாரதி புத்தகாலயத்தாருக்கும் என் அன்பார்ந்த நன்றி.