ஒரு சிறுகதையை நல்ல சிறுகதை
என்றும் சாதாரணச் சிறுகதை என்றும் வகுத்துப் பார்க்கிற தேவையைப்பற்றிய உரையாடல், நவீன
சிறுகதை எழுதப்பட்ட காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. நவீனச் சிறுகதைகளின் தொடக்கப்புள்ளியாகக்
கருதப்படும் புதுமைப்பித்தனே அந்த உரையாடலையும் தொடங்கிவைத்தார். க.நா.சு. நல்ல சிறுகதையாசிரியர்களை
தொடர்ச்சியாகப் பட்டியலிட்டுக் காட்டியபடியே இருந்தார். தமிழ் இலக்கிய விமர்சனம் என்பது
இந்த உரையாடல்கள் வழியாகவே மெல்ல மெல்ல உருப்பெற்றது. அதன் விளைவாக, சிறுகதைகளுக்குரிய
அழகியல் அலகுகளும் விமர்சனப் பார்வையும் சிறுகச்சிறுக திரண்டெழத் தொடங்கின.
ஆயினும் தமிழில் அழுத்தமாகக்
காலூன்றத் தொடங்கிய பத்திரிகை உலகமும் அதில் இயங்கிக்கொண்டிருந்த படைப்பாளிகளும் போதிய
அளவுக்கு அந்த விமர்சனத்துறையைப் பொருட்படுத்தவில்லை. வாசகர்களை உருவாக்குவதும் அவர்களுடைய
எண்ணிக்கையைப் பெருக்குவதுமே அந்த உலகத்துக்கு முக்கியமாக இருந்தது. எல்லா மொழிச்சூழலிலும்
அப்படிப்பட்ட ஏராளமான எண்ணிக்கையில் பொது வாசகர்களை பத்திரிகை உலகம் உருவாக்கவே முனையும்.
அதன் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிடத் தேவையில்லை. அதே தருணத்தில் பொது வாசிப்புக்குரிய
படைப்புகள் என்பவை வேறு, இலக்கிய மதிப்பீடுகளுக்குரிய படைப்புகள் என்பவை வேறு என்கிற
தரம் பற்றிய பார்வை நம்மிடையே உருவாகியிருக்க வேண்டும். அது வளரவில்லை என்பதுதான் நம்
சூழலின் மிகப்பெரிய குறை.
ஒரு படைப்பை மதிப்பிடுவது என்பதும்
அப்படைப்பின் அழகியல் அம்சங்களைக் கண்டடைந்து தொகுத்துக்கொள்வது என்பதும் வேறுவேறல்ல.
ஒரு கோணத்தில், அழகியல் அம்சங்களின் தொகையே மதிப்பீட்டின் அளவுகோல்.
இலக்கியத்தை நோக்கி வரும் பல
புதிய தமிழ் வாசகர்களுக்கு இத்தகு அழகியல் அளவுகோல்களின் அறிமுகம் இருப்பதில்லை. அப்படிப்பட்ட
சூழல் நம்முடைய கல்லூரிகளிலும் இல்லை. வெளியுலகத்திலும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில்
அழகியல் மதிப்பீடுகளை அறிமுகப்படுத்தும் விதமாக முன்வைக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும்
மிகமுக்கியமானது. இளைய வாசகர்களை நல்ல ரசனையை நோக்கி ஈர்க்கும் வகையில் தொடர்ச்சியாக
இயங்கிவருபவர் நண்பர் அ.ராமசாமி. திரைப்படங்களை அணுகும் முறைகளைப்பற்றியும் நாவல்களை
நெருங்கும் முறைகளைப்பற்றியும் அவர் சமீபத்திய ஆண்டுகளில் ஏராளமான கட்டுரைகளை எழுதி
வெளியிட்டுள்ளார். அவ்வரிசையில் சிறுகதைகளைப்பற்றிய கட்டுரைகள் இப்போது தொகுக்கப்பட்டுள்ளன.
இக்கட்டுரைகளில் அ.ராமசாமி ஐம்பது தமிழ்ச்சிறுகதைகளை முன்வைத்து அவை செயல்படும் அழகியல்
தளம், கருத்தியல் தளம், உரையாடல்களில் வெளிப்படும் நுட்பம், கதையமைப்பில் பயன்படுத்தப்படும்
குறியீடுகள், படிமங்கள், வரிகளுக்கிடையில் அமைந்திருக்கும் மெளனங்கள் என அனைத்துக்கூறுகளையும்
சுட்டிக்காட்டுகிறார். அத்துடன் ஒவ்வொரு அழகியல் அம்சமும் கதைகளின் மையப்புள்ளிக்குச்
சேர்க்கும் வலிமையையும் அடையாளப்படுத்துகிறார். இக்கட்டுரைகளின் மூலம் இளம்வாசகர்களுக்கு
ஓர் அழகியல் வழிகாட்டியாக அ.ராமசாமி செயல்பட்டிருப்பதை உணரமுடிகிறது.
ஒரு நவீன சிறுகதையின் மையம்
எப்படிப்பட்ட பின்னணியை தன் தளமாகக் கொண்டிருக்கிறது என்பதை வாசகர்கள் எளிதாகக் கண்டுணர்ந்துவிட
முடியும். அதைக் கடந்து வாசகர்கள் கவனிக்கவேண்டிய
சில அம்சங்கள் உள்ளன. எப்படிப்பட்ட வாழ்க்கைத்தருணத்தை அக்கதையின் மையம் தொட்டுக்காட்டுகிறது
என்பதையும், எந்தெந்த உருவகங்கள் அல்லது படிமங்கள் வழியாக ஒரு கதை அதைத் தொட முயற்சி
செய்கிறது என்பதையும், அந்த மையத்தையும் அதற்குரிய படிமங்களையும் முன்வப்பதன் வழியாக
படைப்பாளனுடைய பார்வை எதை முன்வைக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
அதைத் தெரிந்துகொள்ள உதவும் பயிற்சிக்களமாக ராமசாமியின் கட்டுரைகள் அமைந்துள்ளன. இன்னொரு
கோணத்தில் நவீன இலக்கியக்களத்தின் விதிகளை இக்கட்டுரைகள் தொகுத்து அறிமுகப்படுத்துகின்றன.
ஒரு சிறுகதையின் அடிப்படை அலகு
குறியீடு ஆகும். நாம் நடக்கும்போது நம்முடன்
இணைந்து நகரும் நிழல்போல குறியீடு என்பது சிறுகதையுடன் எப்போதும் பின்னிப் பிணைந்திருக்கிறது.
ஒரு சொல்லாக, ஒரு வாக்கியமாக, ஒரு பொருளாக, அது சிறுகதையின் களத்தில் எங்கோ ஓர் இடத்தில்
மண்ணுக்குள் வைரத்தைப்போல அது அமிழ்ந்திருக்கிறது. அந்தக் குறியீட்டின் வழியாக பெற
முடிந்த அர்த்தங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் தொகுத்துக்கொள்வது என்பது ரசனையை வளர்த்துக்கொள்ளும்
வழிமுறையாகும். தமிழ் போன்ற மிகப்பழமை வாய்ந்த மொழியில் காலம்காலமாக பயன்பாட்டில் இருக்கும்
ஒவ்வொரு சொல்லின்மீதும் வந்து படிந்திருக்கும் குறியீட்டு அர்த்தங்கள் ஏராளம். ஒவ்வொரு
அர்த்தமும் ஒவ்வொரு திசையை நோக்கி நம்மைச் செலுத்துகிறது. நமக்கு வாய்க்கும் ஒவ்வொரு
பயணமும் முக்கியமானது.
’தோட்டத்துக்கு வெளியேயும் சில
பூக்கள்’ என்பது வண்ணதாசன் எழுதிய ஒரு சிறுகதையின் தலைப்பு. மேலோட்டமாகப் பார்க்கும்போது
தோட்டம், பூக்கள் என்பவை மிக எளிய சொற்களாகவே காட்சியளிக்கின்றன. அவற்றின் நேரடி அர்த்தத்தை
நாம் அறிவோம். ஆனால் அந்த அர்த்தத்தைக் கடந்து சென்று, குறியீட்டு அர்த்தத்தை நோக்கி
விரிவு பெறும் வகையிலேயே இந்தச் சொற்களை அமைத்திருக்கிறார் வண்ணதாசன். வீடு என்பதை
தோட்டமாகக் கொண்டால், தோட்டத்துக்கு வெளியேயான இடமாக விரிந்து செல்லும் இம்மாபெரும்
உலகத்தைச் சொல்லலாம். அப்பா, அம்மா, மனைவி, அண்ணன், தம்பி, தங்கை ஆகிய உறவுகளின் கூட்டத்தை
தோட்டத்துக்குள் மலர்ந்திருக்கும் பூக்களெனக் கொண்டால், உலக மானுடர்கள் அனைவருமே தோட்டத்துக்கு
வெளியே உள்ள பூக்களாக இருக்கிறார்கள். இது முதல்கட்ட அர்த்தம். தோட்டத்துப் பூக்களைப்
போலவே தோட்டத்துக்கு வெளியே உள்ள பூக்களும் நிறமும் மணமும் கொண்டிருக்கின்றன. வீட்டு மனிதர்களுக்கு நிகராக உலகெங்கும் வாழும்
மக்கள் அனைவருமே அன்பைப் பொழிந்து சீராட்டத் தெரிந்தவர்கள். இது இரண்டாவது கட்ட அர்த்தம். தோட்டம், வெளி என்கிற
வேறுபாடுகளைப் புரிந்துகொண்டவர்கள் பூப்பூக்கும் செடிகள் எங்கெங்கும் நிறைந்திருக்கின்றன
என்பதையும் புரிந்துகொள்வார்கள். பூத்தல் என்பது இயற்கையாகவே நிகழ்கிறது. அது செடியின்
அல்லது கொடியின் இயல்பு. நம் அன்பும் அத்தகையதே. இயற்கையானது. அது ஒருபோதும் தன்னைச்
சேர்ந்தவர் அல்லது பிறர் என வேறுபாடு பார்ப்பதில்லை. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.
அன்பே இந்தப் பேருலகின் அச்சாணி. இது மூன்றாவது கட்ட அர்த்தம். குறியீடுகளின் வழியாக
அர்த்தங்களைக் கண்டுணர்ந்தபடி நகரும் வாசகனுக்கு மட்டுமே முழுமையான வாசிப்பு அனுபவம்
கிடைக்கும். இடையறாததும் செழுமையானதுமான வாசிப்பு அனுபவங்களால் தன் மனத்தை நிறைத்துக்கொண்ட
ஒருவன் ஒரு சிறுகதையை ஒருமுறை படித்தாலேயே போதும். குறியீடுகள் வழியாக எந்த அளவுக்கு
ஆழத்தை நோக்கிச் செல்லமுடியும் என்பதை உணர்ந்துவிடுவான்.
குறியீடுகளைக் கண்டடைவது என்பது
ஒரு படி. நேரடியாகச் சொல்வதைவிட, சொல்லாமல் சொல்வது என்னென்ன என்பதை அறிவதும் அவற்றை
நோக்கிச் செல்வதும் அடுத்த படி. எந்த எல்லை வரைக்கும் இந்த வாழ்க்கை அனுபவங்களுடன்
அவற்றை இணைத்துப் பார்க்கமுடியும் என வகுத்துக்கொள்வது என்பது அதற்கடுத்த படி. நண்பர்
ராமசாமி புதிய வாசகர்களுக்கான வழிகளைச் சுட்டிக் காட்டுகிறார். அதே சமயம் வாசிப்பில் உள்ள சவால்களையும் முன்வைக்கிறார்.
மிகச்சிறந்த வாசிப்பை நிகழ்த்தும்
பயிற்சிகளாகவே ராமசாமியின் கட்டுரைகள் உள்ளன. குகையின் உள்சுவர்களில் தீட்டப்பட்டிருக்கும்
ஓவியங்கள் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சி பார்வையாளர்களைப் பார்க்கவைக்கும் பயண வழிகாட்டியைப்போல,
நவீன சிறுகதைகளின் உள் அழகுகளை ஒவ்வொன்றாக சுட்டிக் காட்டியபடி செல்கிறார் ராமசாமி.
மொத்த அழகையும் அவர் சுட்டிக் காட்டிவிட்டாரா என்றோ மொத்த அழகையும் நாம் பார்த்துவிட்டோமா
என்றோ யாரேனும் கேள்வி எழுப்பினால், இல்லை என்றே பதில் சொல்லவேண்டியிருக்கும். ஒரு பூங்காவின் அழகை, ஓர் ஏரிக்கரையின் அழகை, ஒரு
சூரியோதத்தின் அழகை, ஒரு பள்ளத்தாக்கின் அழகை என்றேனும் நாம் முழுமையாகப் பார்த்துவிட்டோம்
என்று சொல்லமுடியுமா? கடந்த முப்பது ஆண்டுகளாக ஹம்பி, பேலூர், ஹளபீடு சிற்பங்களை இருபதுக்கும்
மேற்பட்ட முறை சென்று பார்த்து வருகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் இதற்குமுன்பு கண்ணில்
படாத அழகொன்றைக் கண்டு வருவதே வழக்கமாகிவிட்டது. அழகை அறிவது என்பது முற்றுப்புள்ளி
இல்லாத ஒரு பயணம். இந்தக் கட்டுரைகளால் மன ஊக்கம் பெறும் வாசகர்கள் தம் கூர்மையான வாசிப்பு
அனுபவங்களை மேலும்மேலும் ஒளிபெற வைத்து, விரிவு கொள்ளவைக்க முடியும். இப்படி உருவாகும்
ரசனைக்கருத்துகள் அனைத்தும் ஒன்றாகத் தொகுக்கப்படுவதன் வழியாக நம் விமர்சனப் பார்வையில்
வலிமை படியக்கூடும்.
ஒரே ஒரு எடுத்துக்காட்டு. புதுமைப்பித்தனின்
புகழ்பெற்ற சிறுகதையான ‘பொன்னகரம்’ என்னும் சிறுகதையை முன்வைத்து கட்டுரையை எழுதும்
அ.ராமசாமி, அக்கதை இதுவரை பெற்ற புகழ்ச்சொற்கள் அனைத்தையும் கடந்து புதியதொரு கோணத்தைக்
கண்டடைந்திருக்கிறார். மற்றவர்கள்போல கற்பைப்பற்றிய விவாதமாக அச்சிறுகதையை ராமசாமி
காண விழையவில்லை. உரத்த குரலைக்கொண்ட சமூக விமர்சனமாகவும் காண விழையவில்லை. மரபின்
சுமையை அந்தக் கதையின்மீது அவர் எந்த இடத்திலும் ஏற்றிவைக்கவில்லை. மாறாக, பொன்னகரம்
என்பது நம்மைப்போன்ற மனிதர்கள் வாழக்கூடிய வேறொரு இடம். தமிழகத்திலோ அல்லது இந்தியாவிலோ
ஏதோ ஒரு பகுதியில் இருப்பதற்குச் சாத்தியமான ஒரு சிற்றிடம். அம்மாளுவைப் போன்றவர்களும்
முருகேசனைப் போன்றவர்களும் வாழக்கூடிய இடம். அங்குள்ள வாழ்க்கைமுறை வேறு, தர்மங்களும்
வேறு. நம்மிடம் உள்ள மதிப்பீட்டு அளவுகோல்களைப் பயன்படுத்தி அந்த நகரத்தையோ, நகர மனிதர்களையோ
நாம் மதிப்பிட்டு விடமுடியாது. நம் மனத்திலும் நினைவிலும் மற்ற நகரங்களுக்கான இடங்கள்
இருப்பதுபோலவே பொன்னகரங்களுக்கான இடங்களும் இருக்கின்றன. நம் ஐந்து விரல்களில் ஒரு
விரல்போல இந்த மண்மீது பொன்னகரம் வீற்றிருக்கிறது. நம் மனம்
விரிந்து பொன்னகரத்தையும் தழுவிக்கொள்ளவேண்டும். எல்லாக் காலத்துக்கும் எல்லா இடத்துக்கும்
எல்லாச் சமூகக்குழுக்களுக்கும் பொருத்தமான வாழ்க்கைக்கோட்பாடுகளும் கருத்தியல்களும்
பின்பற்றுதல்களும் இருக்கமுடியாது. தெரியாத ஒன்றைத் தெரிவிக்கப் போவதுபோல ’பொன்னகரத்தைப்பற்றிக்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்ற கேள்விக்குறியோடு தொடங்குகிற புதுமைப்பித்தனின்
சிறுகதை, ’என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதான் ஐயா பொன்னகரம்!’ என்ற
வரியுடன் முடிவடைகிறது. பொன்னகரத்தையும் தழுவிய
ஒன்றின் பெயர்தான் மானுடம். பொன்னகரத்தை விலக்கி மானுடம் பேசமுடியாது. தன் சொற்களால்
இந்த இடம் வரைக்கும் வாசகர்களின் தோளைப்பற்றி அழைத்து வருகிறார் ராமசாமி. இறுதியாக
’ஒரு நவீன கதையைப் படிப்பது என்பது வெறும் பொழுதுபோக்கல்ல, வாழ்வைப் புரிந்துகொள்வதாகும்’
என்ற குறிப்போடு அக்கட்டுரை முடிவடைகிறது. இப்படிப்பட்ட ஐம்பது கட்டுரைகள் இத்தொகுதியில்
உள்ளன. மறைந்த ஆளுமைகளான புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன்
போன்றோரின் சிறுகதைகள் முதல் இளம்படைப்பாளிகளான போகன்சங்கர், நேசமித்திரன் ஆகியோரின்
சிறுகதைகள் வரை பலவிதமான கதைகளை ஆய்வுக்குட்படுத்தியுள்ளார் ராமசாமி.
இன்னொரு எடுத்துக்காட்டு போகன்
சங்கர் எழுதிய ‘பொதி’ சிறுகதையைப்பற்றிய கட்டுரை. இக்கதையில் பொதி என்பது முதலில் தன்
மேலதிகாரியின் திருமண வரவேற்புக்கு வந்திருக்கும் கடைநிலை ஊழியனின் கையிலிருக்கும்
அன்பளிப்புப்பொதியாக பொருள்கொள்கிறது. பிறகு அது மெல்ல விரிவாக்கம் பெற்று நினைவுப்பொதியாக
மாறுகிறது. நினைவுப்பொதியை அவிழ்க்கப்படும் தருணத்தில் குற்ற உணர்ச்சியின் பொதியாக
உருமாற்றம் பெறுகிறது. ஆனால் அந்தக் கதைத்தளத்தில் இன்னொரு பெண்ணும் இடம் பெற்றிருக்கிறாள்.
அவனைப்போலவே நினைவுப்பொதியைச் சுமந்தபடி திரிகிறவள். திருமண வரவேற்புக்கூட்டத்தில்
புகுந்து தன்னையேற்று ஓர் இரவைக் கழித்துவிட்டு பணத்தைத் தரக்கூடிய ஒரு வாடிக்கையாளனைத் தேடி வந்தவள். இருவருக்குமிடையே
நிகழும் உரையாடலில் அவளுடைய நினைவுப்பொதியும் அவிழ்ந்து குற்ற உணர்ச்சியின் பொதியாக
மாற்றமடைகிறது. இரண்டு விதமான குற்ற உணர்ச்சிகளையும் இரண்டு இழைகளாக்கிப் பின்னப்பட்டிருக்கும்
கதைக்குள் வாழ்க்கையைப்பற்றிய வெவ்வேறு பார்வைகள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. மிகவும்
கவனத்தோடும் தேர்ச்சியோடும் எழுதப்பட்டிருக்கும் போகன்சங்கரின் சிறுகதையை, அதற்கு இணையான
கவனத்தோடும் பக்குவத்தோடும் அணுகி அதன் உள்ளடுக்குகளையும் அழகியல் அம்சங்களையும் உணர்த்துகிறார்
ராமசாமி.
சிறுகதைகளை எப்படி உள்வாங்கிக்கொள்வது
என்பதை உணர்த்தும் பயிற்சியாக ராமசாமியின் கட்டுரைகள் உள்ளன. அவருடைய அணுகுமுறையை அழகியல்
சார்ந்த பார்வையுடையதாகக் கருதலாம். தன் வாசிப்பு அனுபவங்களின் அடிப்படையிலும் வாழ்வனுபவங்களின்
அடிப்படையிலும் இந்தப் பார்வையை ராமசாமி கொஞ்சம்கொஞ்சமாக வளர்த்துக்கொண்டுள்ளார். கறாரான
விமர்சன அணுகுமுறையாக இல்லாமல் சற்றே நெகிழ்வுத்தன்மை பொருந்தியதாக இந்தப் பார்வை அமைந்திருக்கிறது.
இளம் வாசகர்களுக்காக எழுதுகிறோம் என்ற தன்னுணர்வுதான் இதற்கான காரணம். ராமசாமியின்
பயிற்சிக்கட்டுரைகளின் விளைவாக வாசகர்களிடையே உருவாகும் பார்வை மெல்ல மெல்ல சிறுகதை
விமர்சனமாக உருமாறக்கூடும். இந்தப் பயணம் அந்தப்
புள்ளியை நோக்கித்தான் செல்கின்றன. இங்கே பாதை உள்ளது. அடையவேண்டிய இலக்குப்புள்ளியும்
உள்ளது. எத்தனை பேருக்கு இந்தப் பயணம் சித்திக்கப் போகிறது என்பது ஆர்வமூட்டும் ஒரு
கேள்வி. அதற்குரிய விடையை காலம் மிக விரைவில் அளிக்கும் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ராமசாமி காத்திருக்கிறார். நானும் அவருடன் காத்திருக்கிறேன்.
(அ.ராமசாமியின் ‘கதைவெளி மனிதர்கள்’ கட்டுரைத்தொகுதிக்காக
எழுதப்பட்ட முன்னுரை)